Author: கானா பிரபா
•4:08 AM
அண்மையில் ஒரு நண்பரோடு தொலைபேசிக் கொண்டிருக்கும் போது மூத்த ஈழத்துக் கலைஞர் ஒருவர் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது எதேச்சையாக நான் "அவர் முந்தி இருந்த இருப்புக்கு இப்ப நல்லா வயக்கெட்டுப் போனார்" என்று சொன்னேன். நீண்ட காலத்துக்குப் பிறகு என் வாயில் தவழ்ந்த "வயக்கெட்டு" என்ற வார்த்தையைக் கேட்ட நண்பர், "இந்த வயக்கெட்டு என்ற வார்த்தையை இப்ப புலம்பெயர்ந்தாப் பிறகு பேச்சு வழக்கில் ஏறக்குறைய மறந்து விட்டோம் இல்லையா" என்றார்.

"வயக்கெட்டு" என்பது ஒரு சுகதேகியாக இருந்த மனிதர் உடல் ஆரோக்கியம் குன்றிப் போதல் அல்லது உடல் நலிவடைதல் என்பதைக் குறிக்க ஈழத்து மொழி வழக்கில் பாவிக்கப்படும் வார்த்தைப் பிரயோகம் ஆகும். சிலர் "வசக்கெட்டு" என்றும் பாவிப்பர். வசக் கெட்டு என்பதில் இருந்து திரிபாகி அமைந்ததே வயக்கெட்டு என்று நினைக்கத் தோன்றுகிறது.

வயக்கெட்டு என்பதற்கு ஒத்த அர்த்தம் கொண்ட சொற்கள் ஏதாவது இருக்கின்றதா என்று ஈழத்துத் தமிழகராதி ஒன்றில் தேடினேன். அங்கே கிட்டியது "வசப்பிழை" என்னும் சொல் , வசப்பிழை என்றால் - பெலகீனம் என்று அர்த்தம் போடப்பட்டிருந்தது. பெலகீலம் என்பதும் ஈழத்துப் பேச்சு வழக்கில் "பலகீனம்" என்ற சொல்லின் பொருள்படப் பாவிப்பது வழக்கம். அந்தச் சொல்லைப் பிரித்து அர்த்தம் கொண்டால் பலம் + ஈனம் அதாவது பலம் கெடல் என்று அமைகின்றது.

வசம் என்றால் கீழ்ப்படிதல், ஒன்றின் கீழ் அடங்கிப் போதல் என்ற சம அர்த்தம் கொள்ளலாக அமைவதால் வசக்கெட்டு என்பது வசம் என்பதற்கு எதிரிடையாக அதாவது ஒருவனுடைய உடல் மற்றும் தேகாரோக்கியம் கெட்டுப் போதல் என்று அர்த்தம் கொள்ளலாம்.

கொழும்பு போன்ற நகர்ப்பகுதிகளில் நீண்டகாலம் தங்கி விட்டு கிராமத்துக்குப் போனால் எதிர்ப்படும் ஊர்க்கார முதியவர் ஒருவரோ அல்லது மூதாட்டி ஒருவரோ
"என்ன தம்பி நல்லா வயக்கெட்டுப் போனாய்" என்று தான் சம்பிரதாயபூர்வமாகப் பேச்சுக் கொடுப்பது பரவலாக இருக்கும் விடயம்.
This entry was posted on 4:08 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On October 22, 2009 at 4:53 AM , Anonymous said...

இந்த வகையிலான தனித் தனி வட்டார சொற்களின் தேடல் வரவேற்கத் தக்கது. ஈழத்து முற்றம் வலைப்பூவின் உரிய தேவையை இதுவே பயனுள்ளதாக்கும்.

 
On October 22, 2009 at 7:33 PM , கிடுகுவேலி said...

ம்ம்ம் நல்ல முயற்சி...பலகீனம் அல்லது பெலகீனம் என்றும் அதனை உச்சரிப்பார்கள்.....!!!

 
On October 22, 2009 at 10:09 PM , கானா பிரபா said...

அநாமோதய நண்பருக்கு

உங்கள் கருத்தை நிச்சயம் செவிமடுப்போம்

 
On October 23, 2009 at 3:39 AM , கானா பிரபா said...

வருகைக்கு நன்றி கதியால்

 
On October 23, 2009 at 3:45 AM , கலை said...

அதிக காலமா காணாதவர், நல்ல உசாராக கொழுத்து வந்திருந்தாலும், சும்மா சம்பிரதாயமாக "என்ன வயக்கெட்டுப் போனாய்?" என்று கேட்பார்கள் :).
பெலகீனம், பெலயீனம் என்றும் பேசு வழக்கில சொல்லப்படுவதைப் பார்த்திருக்கிறன்.