Author: கலை
•3:06 PM
*****
ஈழத்து முற்றத்தில இப்ப கொஞ்ச நாளா, நிறைய கேட்டு மறந்திருந்த சொற்கள் நினைவுபடுத்தப்பட்டிருக்கு. அப்படியே எனக்கும் சில சொற்கள் நினைவுக்கு வந்தது.

1. ஆச்சி முந்தி கேப்பா “என்ன நீ கிரந்தம் பறையிற?” என்று. ஏதாவது விடயத்தை சரியாக சொல்லாமல், அல்லது புரிய வைக்காமல் இருந்தால், (அல்லது உளறுவதுபோல் தோன்றினால்) இந்தக் கேள்வி வரும். 'பறையிறாய்' என்பது 'கதைக்கிறாய் / பேசுகிறாய்' என்பது. பறையிறது என்பது மலையாள சொல் போல என நினைக்கிறேன்.

2. இதுவும் ஆச்சி சொல்லிக் கேள்விப்பட்டதுதான். ”எப்பன் சொதி குத்தட்டோ?”. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, “கொஞ்சம் சொதி விடட்டுமா?” என்பதைத்தான் அப்படிக் கேட்பா. ‘விடட்டுமா?' என்பதை, ‘குத்தட்டுமா?' என்று கேட்பது யாழில் தென்மராட்சி வழக்கா என்று தெரியவில்லை. வேறு பகுதிகளிலும் இப்படி கேட்பார்களா என்பது தெரியவில்லை.

3. 'மல்லுக்கட்டிறது' என்னும் சொல் தற்போதும் பலர் பாவிக்கிறார்கள் என நினைக்கிறேன். ”எதுக்கு வீணா மல்லுக்கட்டுறாய்?” என்றால், ”ஏன் வீண் விவாதம் செய்கிறாய் அல்லது சண்டை பிடிக்கிறாய்?” என்பதைக் குறிக்கும்.

******
இந்தியத் தமிழர்களுடன் பேசும்போது அவர்கள் வித்தியாசமாக உணர்ந்த சில சொற்கள்.

1. குழப்படி = குறும்பு

2. கெதியா = விரைவாக

3. யாழ் நண்பர் ஒருவரின் வீட்டு விருந்தில் ஒரு தடவை நடந்த விடயம் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் குடும்பமும் வந்திருந்தார்கள். அப்போது உணவு பரிமாறியபோது, ”நல்ல வடிவாச் சாப்பிடுங்கோ” என்று பரிமாறியவர், சொன்னபோது, அந்த இந்தியப் பெண், ‘திருதிரு' வென விழித்தார். மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் வந்தபோது, பொறுக்க முடியாமல், 'எப்படி வடிவா சாப்பிடுறது?' என்று கேட்டார். 'வடிவு', என்பது 'அழகு', அப்படியென்றால், 'எப்படி அழகாக சாப்பிடுவது?' என்பதுதான் அவரது கேள்வி. ஆனால் அப்படிச் சொல்வது, ”நல்ல நிறைய, தாராளமாக சாப்பிடுங்கோ” என்பதைத்தான் என அவருக்கு விளக்கினேன்.

4. வெளிக்கிட்டாச்சோ? = தயாராகியாச்சா? (கிளம்பியாச்சா?)
எங்கேயாவது வெளியே செல்ல தயாராகுவதைக் குறிக்கும். சில சமயம் ஆடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொள்வதை மட்டுமே குறிக்கும். உதாரணமாக, திருமணத்திற்கு ‘பொம்பிளையை வெளிக்கிடுத்தியாச்சோ?' என்பார்கள்.

5. மோனை' என்று தம்மை விட வயது குறைந்தவர்களை விழிப்பார்கள். தாத்தா, அம்மம்மா, மாமா, மாமி எனப் பலரும், இப்பவும் ‘மோனை' என்று அழைப்பார்கள். பெயர் சொல்லி அழைப்பதை விட, ‘மோனை' என்ற அந்த அழைப்பில் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதான உணர்வு இருக்கும்.

6. நாம் பயன்படுத்தும் உறவு முறைகள் சிலவும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
குஞ்சையா (சித்தப்பா), குஞ்சம்மா (சித்தி). பழைய காலத்தில், அம்மாவை 'ஆச்சி' என்றும், அப்பாவை 'ஐயா' என்றும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் பின்னர், பாட்டியைத்தான் ஆச்சி என அழைக்கும் வழக்கம் வந்தது.
This entry was posted on 3:06 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On October 27, 2009 at 6:38 PM , செல்லையா முத்துசாமி said...

//குழப்படி = குறும்பு
கெதியா = விரைவாக//

தமிழகத்தில் குழப்படி என்றால் குழப்பத்தைதான் குறிக்கும்.
"ஒரே குழப்படியாப் போச்சு" என்பார்கள்.
கெதியா என்றால் திடகாத்திரமான என்றபொருளில் வரும்.
"அவளுக்கென்ன நல்லா கல்லுக்குத்தி மாதிரி கெதியா இருக்கா" என்று புரணி பேசுவார்கள்.

 
On October 28, 2009 at 1:48 AM , கானா பிரபா said...

ஆகா

இப்படியே குழுமத்தில் உள்ளவை ஓவ்வொருவரும் ஒரு பதிவு போட்டாலே சிறப்பாக இருக்குமே.

மிக்க நன்றி

 
On October 28, 2009 at 3:51 AM , கலை said...

நாங்கள் பாவிக்கும் ‘குழப்படி', 'கெதியா' என்ற சொற்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு சரியாகப் புரிவதில்லை என்று தெரியும். ஆனால், இப்படி முற்றாக வேறுபட்ட கருத்தைக் கொடுக்கும் சொற்களாக அங்கே பாவனையில் இருப்பது தெரியாது. நன்றி செல்லையா முத்துசாமி.

 
On October 28, 2009 at 11:23 AM , நிலாமதி said...

அறிந்தவை சில பதிந்து இருக்கிறீர்கள். நன்றாக் இருக்கிறது. மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள்.

 
On October 28, 2009 at 9:51 PM , கிழட்டுப்பூசாரி said...

நன்றாக இருக்குது.
மற்றது தனது மனைவியை கூடுதலாக யாழ்ப்பாணத்தி்ல் ”பொஞ்சாதி”(பெண்சாதி) எண்டு அழைக்கிறவை.

நான் நினைக்கிறன் பெண்சாதி மருவி தான் பொஞ்சாதி வந்ததெண்டு.

உறவுகள் யாராவது தெளிவுபடுத்துங்களன்

 
On March 19, 2015 at 10:21 AM , கபி said...

சொதி குத்துறது மட்டக்களப்பிலும் இருக்கு