Author: சஞ்சயன்
•2:51 PM
1976 இல் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அறிமுகமாகிய ‌ஆசான், வழிகாட்டி. 1984 வரை தினமும் சந்தித்த சரித்திரம் அவர்.
பரந்த முகம். அந்தக்காலத்து ரவிச்சந்திரனின் மீசை போன்ற மெல்லிய மீசை. சற்றே பெரிதான பற்கள். லைட், கரியர் பூட்டிய சைக்கில வெள்ளைசேட் வௌ்ளை கால்சட்டை, எளிமை ........... இது தான் அவர்

இவற்றை விட அவரை அடையாளம் காண அவரின் குரல் காணும். சில குரல்கள் அவர்கள் சொல்லாமலே எம்மை கீழ்படிய வைக்கும்..ஆனால் புண்ணியமூர்த்தி சேரின் குரலில் ஒன்றும் அப்படி ஒரு வசீகரமும் இல்லை. ரோட்டோரத்தால் நடக்கும் போது காதுக்குள் வந்து ஒலியெழுப்பும் பாரவூர்தியின் ஹோன் போன்றது அவரது குரல். கீழ்ப்படிய சொல்லாது, சும்மா ஒரு பயத்தை மட்டும் தற்காலிகமாய் தந்து போகும் அது ...அனால் காது மட்டும் கிழிந்து தொங்கும் சில சிமிடங்கள். மற்ற எல்லோருக்கும் வியையாட்டுப் போட்டியின் போது ஒலிபெருக்கி வேணும், ஆனால் சேர் அதை தூக்கியதை நான் கண்டதே இல்லை.

அவரிட்ட இருந்த ஒரே ஒரு கெட்ட பழக்கம் மூக்குத்தூள் போடுவது தான். அவரின் கைலேஞ்சியின் நிறம்....வேணாம் அதை விட்டு விடுவோம்..ஆனால் அதை யார் அவருக்கு தோய்த்துக் கொடுத்தார்கள் என்ற சந்தேகம் இன்றும் எனக்குண்டு. அவரே தோய்த்தாரா இல்லா விட்டால் மனைவி தோய்த்தாரா...மனைவியிடம் கொடுத்திருந்தார் எனின் புண்ணியமூர்த்தி சோ்ருடன் எனக்கு கோபம் வரும்.
வெள்ளை கால்சட்டை பொக்கட் வாசல் இரண்டும் வெள்ளையாய் இருக்கும் அவர் முதல் பாடம் எடுக்கும் போது. ஆனால் கடைசிப் பாடம் எடுக்கும் போது ஐயோ!!!!!!! அதைக் கேக்காதீர்கள்....

ஒரு முறை மனோகரன், இளங்கோ அண்ணண் கோஸ்டியிடம் அவர் மூக்குத் தூள் வாங்க குடுக்த்த போது அவர்கள் சாடையாக மிளகாய்த்தூள் கலந்து...
அவர் போட்டு...
தும்மி தும்மி களைத்து
கோவத்தில்
அவர்களின் காது கிளிய
கத்தி
அனுப்பியது
மட்டக்களப்பு
மத்திய கல்லூரி
எமக்கு
தந்தனுப்பிய
மறக்க முடியாத
சிரிப்பலைகள்.

அருமையான அன்பான மனிதர். கத்துவாரே தவிர அடிக்க மாட்டார். மனிதம் நிறைந்த மனிதர் அவர். தன்ட கையால் வறுமைப்பட்ட மாணவர்களுக்கு பஸ் சீசன் டிக்கட் எடுத்துக் கொடுத்தவர்.

சுகாதாரம், விளையாட்டு கற்பித்தல், சாரணீயம், சிரமதானம், பள்ளிக் கூடத்திற்கு டைம் டேபிள் போடுவது போன்றவையே அவரின் அடையாளங்கள். அவர் இல்லாதிருந்தால் பிரின்ஸ் கூட ஆட்டம் கண்டிருப்பார் என்பேன் நான்.

அவர்
பாடசாலைக்கு டைம் டேபிள் போடும் அழகு
அலாதியானது.
புள்ஸ்கைப் பேப்பர் நாலு எடுத்து
அவற்றை
ஒன்றோடு ஒன்றோடு
வேப்பம் பிசின் போட்டு ஒட்டி
மஞ்சல் நிற மரத்திலான ரூளரால்
கனக்க கோடுகளை
குறுக்கும் நெடுக்குமாய் போட்டு
அழித்து
மீண்டும் போட்டு
மீண்டும் அழித்து, போட்டு
x அச்சில் வகுப்புகளின்பெயர் எழுதி
y அச்சில் ஆசிரியர்களின் பெயர் எழுதி
அப்பபா
பாடசாலைக்கே
குறிப்பு எழுதும் சாத்திரி
போல
அடிக்கடி மூக்குத் தூள்
போட்டபடி
மொட்டைத் தலையை
அந்த பேப்பருக்குள்
பூத்தி வைத்திருப்பார்.
அந்த நேரத்தில்
”சோ்” என்று கூப்பிட்டால்
அவரின் வாய் கத்தாது
ஆனால்
கண் கத்தும்.
எப்படியோ
எல்லோருக்கும்
பொருந்தக் கூடிய
டைம் டேபில் போட்டு
அவரின் கந்தோரில் ஒட்டி வைத்திருப்பார்.
(யாராவது அதை ஆவணப்படுத் தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன். இருக்குமா?)

அவரின் மூத்த மகன் நவனீதன் (பட்டப் பெயர் ”பூனை”) எங்களுடன் தான் படித்தான். அமைதியானவன் தான். ஆனால் ஒரு முறை விவசாயத்தில் நாம் ”மரங்களை ஒட்டுதல்” பற்றி படித்த போது ”பூனை” வீட் போய் ரோசா பூ மரத்தை வெட்டி, வீட்ட இருந்த பப்பாசி மரத்தோடு ஒட்டி விவசாயப்புரட்சி செய்திருக்கிறான்..... அடுத்த நாள் இந்த ஆராய்ச்சியை எங்கட அரசவையில் புண்ணியமூர்த்தி சேர் அவிட்டு விட ... பாவம் நவனீதன்... நொந்து நூலாய்ப் போனான்.

சுகாதாரப் பாடம் நடத்துவார்....இனப்பெருக்கம் என்றால் சொல்லவா வேணும் அந்த காலத்தில...எங்கட கேள்விகளுக்கு நக்கலும் குறும்பும் கலந்து பதிலளித்து லாவகமாய் பாடம் நடாத்துவார்.

ஒரு முறை அமீர் அலி யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த போது ”பலான” புத்தகம் கொண்டு வர முழு வகுப்பும் இனிப்பை மொய்த ஈக்கள் போல சுற்றியிருந்து அதை, உலகம் மறந்து ”உயர் இலக்கியம்” படித்துக் கொண்டிருந்த போது மெதுவாய் வந்து
ம்..ம் என்று கனைத்தார்
வேர்த்து விறைத்து நின்ற போது
ம் என்று கைய‌ை நீட்ட
”உயர் இலக்கியம்” கை மாறியது
தலையங்கம் பார்த்து
சிரித்தவர்
யாரும் அதை வாசிக்காதவர்கள்
இருந்தால்
வந்து கேளுங்கோ
தாறன்
என்று
சொல்லி எடுத்துச் சென்றார்
‌அதே நாள்
பாடம் நடாத்த வந்த
போதுஅதைப் பற்றி
தெரியதது போல
பாடம் நடாத்தினார்.

வீட்டில் மாடு வளர்த்தார். அப்ப இவர் தான் பாடசாலை விடுதிக்கும் பொறுப்பு. விடுதி குசினிக் கழிவுகளை வீட்ட கொண்டு போவார். அந்தக் காலத்திலேயே recycle பற்றி தெரிந்து வைத்திருந்தார் :-)

பாடசாலையின் ஒவ்வோரு நிகழ்விலும் அவரின் அடையாளமும், ஆளுமையும் இருக்கும். இரவு பகல் பாராது பாடசாலைக்கு என உழைத்த மனிதரவர். பிரின்ஸ் காசிநாதரின் ஆட்சிக் காலத்தில் அவரின் வலது கரமாய் இருந்தவர். அன்றிருந்த மத்திய கல்லூரியின் மிடுக்கும் ,செருக்கும் இன்று இல்லாதது வலிக்கிறது... மிகவும் வலிக்கிறது. ‌மிக நெருங்கிய உறவொன்று தொலைந்து போனது போன்றதோர் வலி அது.

வழி தடுமாறிய நேரங்களில் தோளில் கை போட்டு நண்பனாய் மாறி மனச்சாட்சியுடன் உரையாட கற்றுத்தந்தவர் அவர். எனது ஓடோகிராப் இல்
”உண்மையாய் இரு. உண்மை உன்னை உயர்த்தும்” என்னும் தொனியில் தான் எழுதியிந்தது நல்ல ஞாபகமாயிருக்கிறது.

பாடசாலை வாசலில் நின்றிருந்தால் (பெண்கள் பாடசாலை அருகிலேயே இருந்தது) ” டேய் என்ன சுளட்டுறீங்களோ” என குறும்பாய் கேட்டு தானே வெடித்துச் சிரிப்பார்.

இப்போ அவர் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன. அவரின் மகன் (பூனை) ஜேமனியில் வசிப்பதாய் அறிந்தேன். மற்ற மகன் மட்டக்களப்பில் இருக்கிறாறாம். கடைசியாய் தம்பி அவரை சந்தித்த போது வாயிலிருந்த ?ஒரே ஒரு பல்லும் ஆடியபடி
உன்ட அண்ணண் எப்படி இருக்கிறான்?
என்பதை வீடியோவில் பார்த்த போது
சத்தியமாய் கண்கலங்கியிருந்து
எனக்கு

இறுதியாய்

புண்ணியமூர்த்தி சேர், உங்களை மூக்குத்தூள் என்று பல தரம் திடடித் துலைத்திருக்கிறேன். மற்றவர்களுடன் கதைக்கும் போது கூட உங்கள் பெயரைப் பாவித்ததில்லை. மூக்குத்தூள் என்று தான் உங்களை குறிப்பிட்டு கதைத்திருக்கிறேன்...

மனிதமே........மன்னிப்பாயா?

புண்ணியமூர்த்தி மாஸ்டரின் நினைவுகளுடன்
சஞ்சயன்
23.10.2009
|
This entry was posted on 2:51 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On October 24, 2009 at 4:52 AM , கானா பிரபா said...

புண்ணியமூர்த்தி சேர் குறித்த பகிர்வை ரசித்தேன்

 
On October 25, 2009 at 4:56 AM , Unknown said...

பகிர்வு நன்றாக இருக்கிறது (நெகிழ்ச்சியாகவும்தான்)...(பத்தியை கொஞ்சம் கவனியுங்கள்)...

///ஒரு முறை அமீர் அலி யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த போது ”பலான” புத்தகம் கொண்டு வர///

ஆஹா... யாழ்ப்பாணத்திலை எதைத் தேடி வாங்கியிருக்கிறார் எண்டு பாருங்கோவன்

 
On October 25, 2009 at 2:06 PM , சஞ்சயன் said...

நன்றி நண்பர்களே