Author: வந்தியத்தேவன்
•1:59 AM
வடமராட்சியில் துன்னாலை என்னும் இடத்தில் இருக்கும் வல்லிபுர ஆழ்வார் என்ற விஷ்ணுகோவில் இலங்கை மக்கள் அனைவரிடமும் மிகவும் பிரபலம். சிவபூமியான இலங்கையில் மிகவும் குறைந்தளவான விஷ்ணு ஆலயங்களே இருக்கின்றன. வடபகுதியில் வல்லிபுர ஆழ்வாரும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலும் மட்டும் விஷ்ணு ஆலயங்களாக விளங்குகின்றன. வல்லிபுர ஆழ்வார்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என பிரசித்தமானது. அதிலும் கடல்தீர்த்தம் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாகவே விளங்குகின்றது. புரட்டாதி பூரணைதினத்தில் வங்காளவிரிகுடாவில் சக்கரத்தாழ்வார், ஆஞ்சனேயர் சகிதம் தீர்த்தமாட மாலையில் பக்தர்கள் புடைசூழ‌ செல்வார். காலையிலிருந்தே வடமராட்சியின் பல பாகத்திலிருந்தும்,தென்மராட்சி, வலிகாமம் போன்ற எனைய யாழ்குடாநாட்டின் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் துன்னாலையை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள். பல வீதிகளில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திருப்பார்கள். எண்பதுகளில் மாட்டுவண்டில்களில் பலர் வருகைதருவார்கள். பின்னர் காலமாற்றத்தில் ஏனைய வாகனங்களிலும் சிலர் கால்நடையாகவும் வருவார்கள்.வல்லிபுர ஆழ்வார் கோவில் இராஜகோபுரம் 2002ல் எனது புகைப்படக் கருவியில் சுட்டது. இராஜ கோபுரத்தில் மஹாத்மா காந்தியின் சிலை கூட‌ இருக்கின்றது.கோவிலிருந்து ஏறக்குறைய 3 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலுக்கு தீர்த்தமாடச்செல்லவேண்டும். முன்னர் மூன்று மணற்குன்றுகளை கடந்து செல்லவேண்டும், தற்போது மணல் அகழ்வினால் ஒரே ஒரு குன்றுமாத்திரம் இருக்கின்றது. பருத்திதுறை துறைமுகம் வரை முருகைக்கல் பாறையினால் அமைந்த கடற்கரைப்பகுதி(ஆண்கடல் என்பார்கள்). பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து மணல்சார்ந்த நெய்தல் கடலாக அழகாகவும் மிகவும் ஆபத்தாகவும் காட்சிதருகின்றது.காங்கேசந்துறையிலிருந்து பருத்தித்துறை துறைமுகம் வரையான கடல் பாக்குநீரிணை ஆழம் குறைந்தகடல். அதன்பின்னர் ஆழம் கூடிய வங்காள விரிகுடா ஆரம்பமாகின்றது. இதனாலோ என்னவோ இலங்கையின் கிழக்குப்பகுதி கடற்கரை பெரும்பாலும் மணல் சார்ந்த கடலாகவே இருக்கின்றது. வருடத்திற்க்கு ஒருதடவைதான் கடலுக்கு தீர்த்தமாடச் செல்லும் பாதை பாவிக்கபடும். போகும் வழியில் கடற்தாவரங்களான இராவணன் மீசை போன்றவை கிடைக்கும். சிறியவயதில் சிப்பி, சோகியுடன் இராவணன் மீசையையும் பொறுக்கியது ஞாபகம் வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் சாரணர்கள், முதலுதவி அணியினர் எனப் பலரின் உதவிகளை ஆலய நிர்வாகம் ஏற்படுத்துகின்றது. பாடசாலை சாரணர் அணியில் இருந்தபடியால் சில தடவைகள் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலைவேளையிலும் பூரணை நாளிலும் தீர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவே இருக்கும் பெரிய அலைகள் உருவாகும். ஆனால் இதுவரை யாரும் அலையில் அடித்துச் சென்றதாக தெரியவரவில்லை. சிறுவர்கள் முதியவர்கள் எனப் பலரும் கடலில் குளிப்பார்கள். தீர்த்தம் ஆடமுன்னர் அந்தப் பகுதியில் குளிப்பது தடை செய்யப்பட்டிருக்கும். ஆஞ்சனேயரை கடலில் ஒரு தடவை போட்டு எடுத்ததன் பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும். பின்னர் சந்திரன் உதயமாகும் போது மக்கள் கோவிலடிக்கு திரும்புவார்கள். தொண்ணூறுகளுக்கு முன்னர் கிழக்கிழங்கை, தென்னிலங்கை என இலங்கையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் வருவார்கள். தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக தகவல்.

நாங்கள் பதின்மவயதில்(டீன் ஏஜ்) இருந்த காலத்தில் தீர்த்தத்திற்க்கு போவதென்பது ஒரு சுற்றுலாபோல‌. வழியில் யூகேயில்(உபயகதிர்காமம்)சில நண்பர்களைச் சந்திப்போம் அங்கேயுள்ள தண்ணீர்ப் பந்தலில் மோர், சர்க்கரைத் தண்ணீர், பின்னாளில் ஜூஸ் என குடிப்பது வழக்கம். பின்னர் ஆனைவிழுந்தான் சந்தியிலும் தண்ணீர்ப் பந்தலில் பொழுதுபோக்கிவிட்டுத்தான் கோவிலுக்குச் செல்வது. ஆனைவிழுந்தானில் பேய் இருக்கின்றது என பரவலாக ஒரு கதை அடிபட்டதால் இரவு வேளைகளில் அந்தப் பாதையை பாவிப்பதில்லை. இந்த அனுபவம் பெரும்பாலான வடபகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும். வலையுலகிலும் சிலருக்கு கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.

ஏற்கனவே ஈழத்துமுற்றத்தில் கிருத்திகன் வல்லிபுர ஆழ்வார் பற்றி எழுதியிருந்தாலும் என் உளறல்களில் இருந்து இன்றைக்கு வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழாவை ஒட்டி இந்த பதிவு மீள் பிரசுரமாகின்றது.
This entry was posted on 1:59 AM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On October 2, 2009 at 5:10 AM , சினேகிதி said...

இப்ப தீர்த்தம் நடக்குதா :) அந்த மணல் கும்பில சறுக்கி விளையாடினது நிறைய ஞாபகங்கள் வருது...

கரவைக்குரலும் வல்லிபுரக்கோயில் பற்றி எழுதியிருக்கிறார்.

துன்னாலையிலயா அந்தக் கோயிலிருக்கு?

 
On October 2, 2009 at 6:13 AM , Kiruthikan Kumarasamy said...

கன ஞாபகங்கள் வந்து போகுது வந்தியண்ணா... (சாமி கும்பிட்ட ஞாபகம் இல்லை...சாமினியளைக் கும்பிட்ட ஞாபகங்கள்)

ஓம் சினேகிதி... வல்லிபுரம் துன்னாலைக்குச் சொந்தமான கோவில்தான். அடிக்கடி துன்னாலைப் பொடியளோட வாக்குவாதப் படுறனாங்கள்

 
On October 2, 2009 at 6:57 AM , மணிமேகலா said...

சந்தோசம் ராசா!

 
On October 2, 2009 at 7:36 AM , செந்தழல் ரவி said...

சுத்து பத்துல ஒரு கடை கண்ணியை காணோம் ?

 
On October 2, 2009 at 8:56 AM , Subankan said...

சின்ன வயதில் கடல் தீர்த்தம் என்றால் தவறாமல் சென்றுவிடுவது வழமை. ம்.. அது ஆச்சு நாலு வருசம்.