Author: வந்தியத்தேவன்
•6:37 AM
பிரபா : என்ன வந்தி கனகாலமா முத்தத்துப் பக்கம் காணவில்லை?

வந்தி : ஒண்டுமில்லையண்ணை கொஞ்சம் சோலி கூட.

பிரபா: உங்கடை சோலியள் எனக்குத் தெரியும் தானே ஹிஹி

வந்தி : ஏனப்பா சபைசந்தியில் என்னுடைய மானத்தை வாங்கிறியள்

பிரபா : உதைவிடுங்கோ ஊரிலை என்ன புதினம்?

வந்தி : வாற ஞாயிற்றுக்கிழமை எங்கடை டாக்குத்தர் ஜீவராஜுக்கு கலியாணம் மலையிலைதான் கலியாணமாம் நேரம் கிடைத்தால் ஒரு எட்டுப் போயிட்டு வரலாம்.

பிரபா : யார் ஜீவநதியின் சொந்தக்காரரோ? அவரும் முத்ததிலை இடைக்கிடை வந்து இளைப்பாருகின்றவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கோ.

வந்தி : ஓம் நான் சொல்லிவிடுகின்றேன். மற்றது அண்ணை எங்கட குழப்படிக்காரியின் கொம்பியூட்டர் பழுதாப்போச்சாம் இப்ப சில நாளாக ஆள் ஒன்லைனிலை இல்லை, ஆள் இருந்தால் நிறைய விடுப்பு கேட்கலாம்.

பிரபா : யாரையப்பா சொல்றியள் ஓ சினேகிதியைச் சொல்றியளோ அவர் ரொம்ப நல்லவராச்சே ஆனாலும் அடிக்கடி விடுப்பு பிடுங்குகின்றேன் என்று எல்லாத்தையும் சொல்லிவிடுவார்.

வந்தி : வேறை என்ன பூராயம் நாட்டிலை?

பிரபா : என்னத்தைச் சொல்வது எங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் முளைச்சு மூண்டு இலை விடேல்லை யாரோ ஒரு உடுவில் பெட்டைக்கு லைனாம்? எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி?

வந்தி : ஓமண்ணணை இப்பத்தைப் பொடியள் நல்லா முன்னேறிவிட்டினம், உதைவிடப்பா எனக்கு நேரம் போட்டுது நான் நாளைக்கு வாறன்.

பிரபா : சரி சரி கவனமாக போட்டுவாங்கோ

பொருள் விளக்கம்

சோலி : வேலை அல்லது அலுவல் என்பதை இப்படிச் சொல்வார்கள், இதே நேரம் எந்தவித சண்டை சச்சரவுக்கும் போகாதவரையும் சோலி சுரட்டு இல்லாத பிள்ளை என ஊரிலை சொல்வார்கள்.

உதாரணம் : உவன் வந்தி ஒரு சோலி சுரட்டுக்கும் போனதில்லை.

சபை சந்தி : பொது இடம்

புதினம் : செய்தியைத் தான் புதினம் எனக் கேட்பார்கள். என்ன புதினம் இண்டைக்கு. இதேபோலை புதினத்தை ஆச்சரியம் என்ற பொருள் படும் வகையிலும் பயன்படுத்துவார்கள்.

உதாரணம் :
உங்கைபார் உந்தப் புதினத்தை சிவத்தாரின்ரை பெட்டை மோட்டர்சைக்கிளை போகுது.

மலை : திருகோணமலையை அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை என்றே குறிப்பிடுவார்கள்.

விடுப்பு : வம்பு அளத்தல், கிசுகிசு போன்றவை விடுப்பு எனப் பொருள்படும். இப்படியான கதைகளைப் பேசுபவர்களை விடுப்புப் பிடுங்குபவர்கள் என்பார்கள். இப்போது ஸ்டைலாக விடுப்ஸ் என்பார்கள். மற்றவர்களைப் பற்றிக் கதைத்தல், தேவையற்ற விடயங்கள் பேசுதல் போன்றவன விடுப்பாகும்.

உவர் சரியான விடுப்ஸ் என்றால் ஆள் நல்ல வம்பளப்பார் எனப் பொருள்.

பூராயம் : இதுவும் விடுப்பு போன்ற அர்த்தம் தரும் சொல்தான்.
This entry was posted on 6:37 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On October 29, 2009 at 7:13 AM , ஆயில்யன் said...

//என்னத்தைச் சொல்வது எங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் முளைச்சு மூண்டு இலை விடேல்லை யாரோ ஒரு உடுவில் பெட்டைக்கு லைனாம்? எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி?//

அவுரு காலத்துல இல்லைன்னா என்னங்க?

எங்க காலத்துல அதெல்லாம் இருக்கணும்ல நாங்கெல்லாம் யூத்துங்க அதெல்லாம் கண்டுக்கபிடாதுன்னு சொல்லுங்க பெருசுக்கிட்ட! :)))))

 
On October 29, 2009 at 7:16 AM , ILA (a) இளா said...

//விடுப்பு //
இது கொஞ்சம் குழப்பமே. விடுமுறைன்னு வேற ஒரு அர்த்தம் வேற இருக்கே. ”அவர் விடுப்புல போயிருக்கார்”ன்னு சொன்னா ரெண்டு அர்த்தம் வருதே..

 
On October 29, 2009 at 7:30 AM , வந்தியத்தேவன் said...

//ஆயில்யன் said...

அவுரு காலத்துல இல்லைன்னா என்னங்க?//

அவரு இன்னமும் யூத்தான், சும்மா இந்தப் பதிவில் அவரை கொஞ்சம் பெரிசு எனக் காட்டியிருக்கு.

 
On October 29, 2009 at 7:32 AM , வந்தியத்தேவன் said...

// ILA(@)இளா said...
//விடுப்பு //
இது கொஞ்சம் குழப்பமே. விடுமுறைன்னு வேற ஒரு அர்த்தம் வேற இருக்கே. ”அவர் விடுப்புல போயிருக்கார்”ன்னு சொன்னா ரெண்டு அர்த்தம் வருதே//

நீங்கள் சொல்வது சரி இளா விடுமுறையையும் விடுப்பு என்றுதான் சொல்வார்கள். அவர்கள் பேசும் வசனத்தை வைத்து அர்த்தம் கொள்ளப்படும். விடுப்பிலை போயிருக்கின்றார் என்பது விடுமுறையில் சென்றிருக்கின்றார் எனவும் விடுப்புப் பார்க்கப் போயிருக்கின்றார் என்பது அவர் ஊர்வம்பு அறியப்போயிருக்கின்றார் எனவும் பொருள் படும்.

 
On October 29, 2009 at 7:04 PM , கிடுகுவேலி said...

ம்ம்ம்...எல்லாவற்றையும் ஒரு சிறு உரையாடல் மூலம் எப்படி கையாளப்படுகிறது என்பதனை விளக்கிவிட்டீர்கள். அருமை...! தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!

 
On October 30, 2009 at 2:42 AM , கானா பிரபா said...

;) அருமை, விடுப்புக் கேட்கிறதில ஒரு சந்தோசம் பாருங்க

 
On November 15, 2009 at 8:47 PM , கொண்டோடி said...

உதில என்ன உட்குத்து இருக்கு?
புதினம் தளம் நிப்பாட்டப்பட்ட நேரத்தில எழுதியிருக்கிறியள்?