ஒருவர் குறித்த காரியத்துக்காக வெளியே செல்லும் போது அவரிடம் போய் "எங்கே போகிறாய்" என்று கேட்டால் குறித்த காரியம் தடைப்படும் என்ற நம்பிக்கை எங்களூர் வாழ்வியல் வழக்கில் இருக்கின்றது.
"எங்கை போறாய்" என்று ஒருவரிடம் கேட்டால் அவருக்குக் கெட்ட கோபம் வரும்.
"ஏனப்பா பிறத்தாலை கூப்பிடுறாய்" என்று அவர் சினந்து கொள்வார். இங்கே பிறத்தாலை என்று சொல்வது ஒருவருக்குப் பின்னால் போய்க் கூப்பிடுவது என்று அர்த்தம் கொள்ளும் வகையில் இருக்கும். அதாவது பிறத்தாலை = பின்னால் என்றவாறு அமைந்திருக்கும்.
ஏடாகூடமாக இப்படி யாரையாவது கேட்டால் போதும், அவர் ஒரு சில நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று தாமதித்தே குறித்த காரியத்துக்காகச் சொல்வார்.
இப்படியான சந்தர்ப்பங்களில் அதை இன்னொரு விதமாகக் கேட்கும் மரபு இருக்கின்றது. அதுதான் "துலைக்கே போறாய்". இங்கே துலை என்பது தொலைவு, தூரம் என்று அர்த்தப்படும். அதாவது "எங்கே தொலைதூரமா செல்கின்றாய்" என்று கேட்பது போல அமைந்திருக்கும். துலைக்கிடுதல் என்பது தூரப்படுதல் என்று அகராதியில் வழங்கும். எனவே தான் எங்களூர் வழக்கில் "துலைக்கே போறாய்" என்பது சரளமாகப் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்காக அமைந்திருக்கின்றது.
அது ஏனோ தெரியவில்லை "துலைக்கே போறாய்" என்று கேட்டால் மட்டும் குறித்த காரியம் தடங்கலின்றி நடக்குமா என்ன, இதெல்லாம் மரபுவழியாக வந்ததால் இதுகுறித்த ஆராய்ச்சியில் யாருமே இறங்காமல் இருக்கின்றார்கள்.
அப்ப நான் வரட்டே...
11 comments:
:) ரொம்ப பிரச்சனைக்குரிய வார்த்தைதான் !
சில பேர் மாத்தி கூட “ எங்க போயிட்டு வருவீங்கன்னு” கூப்பிட்டு கேட்டதுண்டு!
”எங்கே போகிறாய்?” என்று கேட்டால் போற இடத்தைச் சொல்ல வேண்டி வரும். அது சொல்லப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ”துலைக்கோ போறாய்?” என்று கேட்டால். ”ஓம் கொஞ்சம் தூரம்தான்” என்றோ, ”இல்லை, உதில கிட்டத்தான்” என்றோ பதில் சொல்லி, போகும் இடத்தைச் சொலலமல் தப்பித்துக் கொள்ளலாம் என்பதால் இருக்குமோ?? :)
கலை சொன்னது சரியாக இருக்கலாம்.
இங்கேயும் அதே கதைதான்..!
ஒருவர் போகும்போது "எங்கே போறீங்க?" அப்படீன்னு கேட்கக் கூடாது என்பார்கள்.
"எங்க பக்கத்துலதானே..?" என்று சற்று அர்த்தம் மாற்றிக் கேட்கச் சொல்வார்கள்..!
முன்பேயே கேட்டுவிட்டால் போற காரியம் நடக்காது என்பது சிலரது எண்ணம்..
'எங்க போறீங்கள்?' என்று வாய்தவறிக் கேட்டா திரும்பிவந்து கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகும் பழக்கம் வீட்டில் இருந்தது.. (முக்கியமாக அப்பா கோபப்படுவார்)
அழகான படம்.
அருமையான கருத்து.
வாழ்த்துக்கள் பிரபா...
//அப்ப நான் வரட்டே..//
எவிடயானு புறப்பாடு
“எங்க துலைக்கே போறாய்?”
“இல்லை உதில ஒருக்கா போட்டு வாறன்”
என்று பதில் அளித்து நாம் வெளியே போய் வந்திருக்கிறோம். இதைத்தான் மேலே கலை என்பவரும் நினைவு படுத்தியிருக்கிறார்.
ம்ம்ம்ம் நல்ல நினைவுப்பதிவு..!
சகுனம் என்பது நமது வாழ்வியலுடன் இணைந்தது.சகுனக்குற்றம் வரக்கூடாது என்பதற்காக நமதுமுன்னோர் வகுத்த சொற்களில் இதுவும் ஒன்று
அன்புடன்
வர்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே
படம் நன்றாக இருக்கிறது பிரபா.அவை துலைக்குத் தான் போயினம் போல.
"வரட்டே" என்பது கூட போறேன் என்று சொல்லக் கூடாது என்பதற்காக வழக்கில் வந்தது தானே!
மரபு வழி சொற் பிரயோகங்கள்!