Author: கானா பிரபா
•4:33 AM

வயசானவர் ஒருவர் ஏதாவது விடயம் பற்றிப் பேசும் போது இடையில் இளையவர் ஒருவர் மாற்றாக ஏதாவது சொன்னால் போதும் "என்ன விண்ணாணம் பேசுறாய்" என்று கேட்பார் அந்த வயசானவர்.

குறித்த விடயம் பற்றி ஒரு கருத்து சொல்லப்படும் போது அது அந்த விடயத்திற்கு முரணாக இருந்தால் அல்லது குறித்த அந்த விடயத்தை முன்வைத்தவர் ஏற்காது போனால் தான் இந்த விண்ணாணம் என்ற வார்த்தை பிரயோகம் வந்து விழும்.

விண்ணாணம் என்றால் என்ன என்று அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். அதில் நாகரீகம், மாசாலம், வெட்கம் என்று சம அர்த்தங்கள் போடப்பட்டிருந்தன. இங்கே வெட்கம் என்ற அர்த்தத்தில் நம்மூரில் இந்த இந்த விண்ணாணம் பயன்படுவதில்லை. எனவே மற்றைய இரண்டு அர்த்தங்களையும் கொண்டு பார்த்தால், நாகரீகம் என்பது ஏற்கப்படும் சொல்லாகப் படுகின்றது. மாசாலம் என்று போட்டிருக்கே அது என்ன என்று பார்த்தால் ஓர் மாய வித்தை என்று விளக்கப்பட்டிருக்கிறது அகராதியில்.

ஆக, விண்ணாணம் என்ற சொல்லை மாயவித்தை, அல்லது நாகரீகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கலாம். விண்ணாணம் என்பது விஞ்ஞானத்தின் மருவிய பேச்சு வழக்கின் கிண்டல் தொனியாகவும் மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புகைப்படம் நன்றி: Boston.com
This entry was posted on 4:33 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On October 25, 2009 at 7:01 AM , *இயற்கை ராஜி* said...

niraiya sorkal kidaikinrana..nandri boss:-)

 
On October 25, 2009 at 7:20 AM , வர்மா said...

விண்ணாணம் என்றால் மாயாஜாலம் என்றுதான்நினைக்கிறேன்
அன்புடன்
வர்மா

 
On October 25, 2009 at 8:24 AM , துளசி கோபால் said...

//விண்ணாணம் என்பது விஞ்ஞானத்தின் மருவிய பேச்சு வழக்கின் கிண்டல் தொனியாகவும் மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். //

அதே அதே:-)

 
On October 25, 2009 at 8:35 AM , முகவை மைந்தன் said...

விஞ்ஞானம்னு தான் நான் நினைக்கிறேன்.

 
On October 25, 2009 at 8:53 AM , கலை said...

விண்ணாணம் என்பது யாழ்பேச்சு வழக்கில் மாசாலம் அல்லது மாய வித்தை என்ற அர்த்தத்தில்தான் பாவிக்கிறார்கள் (பாவித்தார்கள்) என்று நினைக்கிறேன். மாசாலம் என்பதுகூட பேச்சு வழக்கு என்றுதான் நினைத்திருந்தேன். அது அகராதியிலேயே இருக்கிறதென்பது புதிய செய்தி. மேலும் ‘என்ன மாசாலம் காட்டுறாய்?' அல்லது ‘என்ன மாய்மாலம் காட்டுறாய்?' என்றும் முதியவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன்.

 
On October 26, 2009 at 2:40 AM , யசோதா.பத்மநாதன் said...

தேவை இல்லாத விடுப்புக் கதைகளையும் இந்த விண்ணாணம் என்ற சொல் குறித்திருக்குமோ?

"தேவையில்லாத விண்ணாணம் பறையாதை" என்று முதியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 
On October 26, 2009 at 2:50 AM , கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

மாயாஜாலம், மாய்மாலத்தை விஞ்ஞானம் என்பதன் பதிலீடாக முன்னர் பயன்படுத்தியிருப்பார்களோ

 
On October 26, 2009 at 3:05 AM , ஆயில்யன் said...

//நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

நீங்கள் என்ன நினைச்சீங்களோ அதேதான் நானும் நினைக்கிறேன் பாஸ்

பை தி பை அந்த போட்டோவும் + வெட்கமும் சூப்பரூ!

 
On October 26, 2009 at 3:16 AM , vanathy said...

என்ன விண்ணாணம் கதைக்கிறாய் என்று பல பெரியவர்கள் என்னைக் கேட்ட அனுபவம் நன்றாக இருக்கிறது. தர்க்கம் புரிவது ,புதிய கருத்துக்களை பேசுவது என்பதுதான் இதன் கருத்து என்று நினைக்கிறேன் ,விஞ்ஞானம் என்ற சொல் மருவி வந்து இருக்கலாம் ,விண்ணாணம் என்ற சொல் யாழ்ப்பாணத்தில் மட்டும் பேசப்படும் சொல்லா ?தமிழ் நாட்டின் எந்த வட்டார வழக்கிலாவது இது இருக்கிறதா ?

-வானதி

 
On October 26, 2009 at 3:32 AM , கானா பிரபா said...

ஆயில்ஸ்

வருகைக்கு நன்றி

வானதி

தமிழகத்தில் விண்ணாணம் என்று பாவிப்பார்களான்னு நண்பர்களை அழைக்கின்றேன்.

 
On October 26, 2009 at 3:37 AM , ஆடுமாடு said...

ஆமாமா. எங்க ஊர்லயும் இந்த வழக்கு உண்டு. நான் ஏதாவது மறுத்து சொன்னா, எங்க ஆச்சி சொல்றது, 'ஆமா, பெரிசா விண்ணானம் பேச வந்துட்டாம்" என்று. விஞ்ஞானமா என்பதன் மருவு என்பது சரிதான்.

நன்றி.

 
On October 26, 2009 at 3:38 AM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாத்தான் பேசுறீங்க விண்ணாணம்.. :) விஞ்ஞான விளக்கத்தோட வர்ராங்களாம் ஊருக்காரவுக..

 
On November 15, 2009 at 8:50 PM , கொண்டோடி said...

விண்ணாணம் என்பது விடுப்பு, பூராயம் போன்ற சொற்களின் பொருள்களிலும் பயன்படுத்தப்படுவதுண்டு.