Author: வந்தியத்தேவன்
•12:35 AM
பாண் இலங்கையில் மட்டுமே பாவிக்கப்படும் ஒரு சொல். பாண் என்பது இலத்தீன் மொழி என்கிறார்கள் அறிஞர்கள். ஆங்கிலத்தில் ப்ரெட் எனப்படும் பாண் இலங்கை மக்களின் தேசிய உணவு என்றால் மிகையில்லை.பெரும்பாலான இலங்கையர்கள் காலை உணவாக உண்பதே பாணாகும். இதற்கான முக்கிய காரணம் இலகுவில் கிடைக்கும் விலை குறைவு(இப்போ பாணின் விலை அதிகம்).

பாணின் சகோதரர்கள் பணிஸ், புழுப்பாண் அல்லது புழுபணிஸ்(சிங்களத்தில் ஹிம்புலா பன்), சங்கிலிப்பாண்,ஜாம் பணிஸ், கறிபணிஸ்(உருளைக்கிழங்கு அல்லது மீன் இறைச்சிக் கறிகள்)ரோஸ்ட் பாண்(இதனை உண்ண ஸ்பெசல் பற்கள் வேண்டும்),கிறீம் பணிஸ் ஆகியோராகும்.

கூடுதலாக பாண் சம்பலுடனுன் உண்பார்கள். இடிச்ச சம்பல் என்றால் அதன் ருசியே தனியாகும். பழங்கறியும் பாணும் இன்னொரு நல்ல கூட்டணி என்பார்கள். இதனைவிட ஜாம், பட்டர் போன்றவற்றுடனும் உண்ணமுடியும்.

காலையில் பலர் கையில் பாண் வாங்கும் பையுடனும் பேக்கரிகளிலும் இல்லை அருகில் இருக்கும் கடைகளிலும் காணப்படுவார்கள். காலையில் அலுவலகம் பாடசாலை செல்வர்களின் வசதி கருதியே பலர் பாணை நாடுகின்றார்கள். ஏனெனில் ஏனைய உணவுகள் தயாரிக்க நேரமெடுக்கும். காலை 6 மணிக்கே எழும்பி அம்மா பசிக்குது என கூவி அழும் சிறுவர்களுக்கு பாணோ பணிசோ சிறந்த உணவு.ஒரு சிலர் பக்கத்துக் கடைகளில் வாங்காமல் பேக்கரிகளுக்குச் சென்று வாங்குவார்கள். காரணம் சில பேக்கரிகள் பாணிற்க்கு பேமஸ் கொழும்பில் ரோய‌ல் பேக்கரியில் பாண் வாங்க ஒரு பெரிய க்யூவே நிற்கும்.

நாங்கள் பிக் மேட்ச் எனப்படும் கிரிக்கெட் மேட்ச் நாட்களில் மதிய உணவாக பாணும் இறைச்சியும் தான்.சைவம் சாப்பிடுபவர்களுக்கு பருப்புக் கறி. சர்வதேச கிரிக்கெட்டுகளில் மதிய உணவு இடைவேளை 40 நிமிடம்தான் ஆனால் எமக்கோ சாப்பிட்டு முடிஞ்சால் தான் அடுத்த இனிங்ஸ்.

ஒருகாலத்தில் ஊரிலை கோஷ்டி, கூத்து, திருவிழா பார்க்க இரவில் சென்றால் விடியப்புறத்திலை பக்கத்து பேக்கரிகளில் சுடச்சுட பாண் வாங்கி அப்படியே ஒரு கறியும் இல்லாமல் சாப்பிடுவது பழக்கம். சிலவேளை சுடச் சுட பாண் வாங்கிவரும்போது எப்படியும் அரை இறாத்தல் பாண் பிச்சுப் பிச்சு தின்பட்டிருக்கும்.

யுத்தக்காலத்திலை பாணிற்க்கு இருந்த கிராக்கி அதிகம். சிலவேளைகளில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு இறாத்தல் என்ற கஸ்டத்தைக்கூட எம்மக்கள் அனுபவித்தார்கள். பாணிற்கு மா இராது பேக்கரிகாரர் இருக்கிற கொஞ்ச மாவில் ஓரளவு பாண் சுட்டு தருவார்கள். க்யூவில் நிண்டுதான் வாங்கவேண்டும். பல தடவை க்யூவில் சண்டைகள் கூட ஏற்படும். எத்தனையோ நாள் மூன்று நேரமும் பாணையே உண்ட மக்களும் இருக்கிறார்கள். அரிசிக்குத் தட்டுப்பாடு அரிசி விலையோ யானை விலை ஆகையால் மூன்று நேரமும் பாணும் ஏதாவது மரக்கறி கறியும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த பெருமை(?) எமக்கே சேரும். இவை எல்லாம் பழகிய வலிகள் எழுதும்போது கூட கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் சைக்கிள் உழக்கி பருத்தித்துறையில் ஒரு இறாத்தல் பாண் வாங்கிய நினைவுகள் மனதை நெருடுகின்றது.

சில இடங்களில் காலை உணவாகவும் பாண் இரவு உணவாகவும் பாணே உண்கிறார்கள். காரணம் வேலையால் வந்த களைப்பின் காரணமாக இரவுச் சாப்பாட்டையும் பாணாகவே மாற்றிவிட்டார்கள்.

ஒரு மூன்று நாட்கள் தொடர்ந்து பாண் சாப்பிடாமல் விட்டுவிட்டு நாலாம் சாப்பிடும்போது அதன் ருசி தனி.

இலங்கையில் சிலகாலத்திற்க்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி ஏதாவது ஆட்டங்களில் வெற்றியீட்டினால் அடுத்த நாள் பாண் விலை கூடும். 1996ஆம் ஆண்டில் 4.50 சதத்திற்க்கு வாங்கிய பாணின் இன்றைய விலை 40 ரூபாவாகும்.

பாணின் ஏனைய சகோதரர்களின் படங்கள் கிடைக்கவில்லை
This entry was posted on 12:35 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

28 comments:

On July 13, 2009 at 1:34 AM , சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்ம்ம்!!

//பணிஸ்// எனபது ப்ரெட்-ஆ?!

 
On July 13, 2009 at 2:10 AM , மணிமேகலா said...

புலிகள் வடக்கைப் பரிபாலித்த போது பாணின் பெயர் 'வெதுப்பி' என்றும் பேக்கரியின் பெயர் 'வெதுப்பகம்' என்றும் இருந்த ஞாபகம்.


சினேகிதி எங்கே போய் விட்டா வந்தி? எங்கே ஆளையே காணோம்!

மணியாச்சிக்குப் பிள்ளையக் காணச் சோட்டையாக் கிடக்கு.அடிக்கடி வந்து போடி மோனை.

சோட்டை - ஆவல்.

 
On July 13, 2009 at 4:53 AM , கானா பிரபா said...

பாணின் மகிமையே மகிகை, ஈழத்தில் இருக்கும் போது மெதுமெதுப்பான (வண்டு புழு இருந்தாலும்) பாணைச் சாப்பிட்ட சுகம் வெளிநாட்டில் கிட்டவில்லை. இப்போது இங்கேயும் றோஸ் பாண் கொம்பு பணிசை தயாரித்து நம்மவர்கள் விற்கிறார்கள்.

வந்தி

உண்மையிலேயே மிக அழகான, நான் விரும்பி ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று, அருமை

 
On July 13, 2009 at 6:43 AM , மொழிவளன் said...

நல்லப் பதிவு.

//பணிஸ்// எனபது ப்ரெட்-ஆ?!//

இல்லை, மென்வெதுப்பி.

பாணின் இளைய சகோதரர்.

 
On July 13, 2009 at 7:04 AM , jackiesekar said...

சில இடங்களில் காலை உணவாகவும் பாண் இரவு உணவாகவும் பாணே உண்கிறார்கள். காரணம் வேலையால் வந்த களைப்பின் காரணமாக இரவுச் சாப்பாட்டையும் பாணாகவே மாற்றிவிட்டார்கள்.--//

உண்மையை சொல்லி இருக்கின்றீர்கள்.. நல்ல பதிவு..
நன்றி

 
On July 13, 2009 at 10:09 AM , வந்தியத்தேவன் said...

// சந்தனமுல்லை said...

//பணிஸ்// எனபது ப்ரெட்‍ஆ?!//

July 13, 2009 1:34 AM
பணிஸ் என்பது பன்(Bun)

 
On July 13, 2009 at 10:13 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
புலிகள் வடக்கைப் பரிபாலித்த போது பாணின் பெயர் 'வெதுப்பி' என்றும் பேக்கரியின் பெயர் 'வெதுப்பகம்' என்றும் இருந்த ஞாபகம்.//

ஆமாம் பல விடயங்களுக்கு தூயதமிழ்ப் பெயர்கள் இருந்தன இப்பவும் இருக்கின்றன. அடுப்பில் வெதும்புவதால் வெதுப்பி என்ற பெயர்.

//சினேகிதி எங்கே போய் விட்டா வந்தி? எங்கே ஆளையே காணோம்!//

சினேகிதியைக் காணவில்லை கூழ் காச்சி ஏதும் பிரச்சனையோ தெரியாது.
சிலர் சோட்டை என்ற சொல்லை இன்னொருவிதமாகவும் பாவிப்பார்கள் அர்த்தம் ஒன்றுதான். உதாரணமாக வந்திக்கு சோப்பிக்கண்ணுமேல சோட்டை. இதற்க்கு விளக்கம் தேவையா? ஹிஹிஹி

 
On July 13, 2009 at 10:18 AM , வந்தியத்தேவன் said...

கானா பிரபா said...
//பாணின் மகிமையே மகிகை, ஈழத்தில் இருக்கும் போது மெதுமெதுப்பான (வண்டு புழு இருந்தாலும்) பாணைச் சாப்பிட்ட சுகம் வெளிநாட்டில் கிட்டவில்லை. இப்போது இங்கேயும் றோஸ் பாண் கொம்பு பணிசை தயாரித்து நம்மவர்கள் விற்கிறார்கள். //

சிலவேளைகளில் கல்லுக்கூட பாணில் இருக்கும். இதெல்லாம் சகஜம் என்றுவிட்டு சாப்பிடுவதுதான். இன்னொரு விடயம் பாணின் இன்னொரு பணக்கார சகோதரன் தான் பீட்ஷா. பீட்ஷா மேல் இருக்கும் கறியையும் சோஸ் இன்னபிற விடயங்களையும் எடுத்துவிட்டுச் சாப்பிடுங்கள் அடிப்பக்கம் பாண் தான்.

//உண்மையிலேயே மிக அழகான, நான் விரும்பி ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று, அருமை//
வசிட்டர் வாயால் பிரம்மரிசி. உங்கள் மடத்துவாசல் பிள்ளையாரைப் பார்த்து உளற ஆரம்பித்த பொடியன் தான் நான். இன்றைக்கு ஈழத்து முற்றத்து மல்லிகையாக மணம்கமிழ நீங்களும் ஒரு காரணம்.

இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம் ஆனால் போரடிக்கும்.

 
On July 13, 2009 at 10:20 AM , வந்தியத்தேவன் said...

//மொழிவளன் said...
நல்லப் பதிவு.//
நன்றிகள் மொழிவளன். பாணின் இளைய சகோதரன் பணிஸ் தான். பணிசுக்குப் பின்னர் தான் சங்கிலி பணிஸ், கிறீம் பணிஸ், கறி பணிஸ் கொம்பு அல்லது புழுப்பாண் எல்லோரும் வருவார்கள்.

 
On July 13, 2009 at 10:24 AM , வந்தியத்தேவன் said...

// jackiesekar said...

உண்மையை சொல்லி இருக்கின்றீர்கள்.. நல்ல பதிவு..
நன்றி//
நன்றிகள் அண்ணாச்சி.

பாண் என்பது எம்மைப் பொறுத்தவரை ஆடம்பர உணவல்ல. ஜாக்கி அண்ணாச்சி எங்கள் தமிழக உறவு என்பதால் அவரின் பின்னூட்டத்தில் இந்தக் கதையையும் சொல்கிறேன்.

ஒருமுறை தமிழக நண்பர் ஒருவர் காலையில் என்னுடன் ஜீடோக்கில் கதைத்துக்கொண்டிருந்தார். அப்போ அவர் கேட்டார் காலையிலை என்ன சாப்பாடு என, நான் பாண் என அவருக்கு விளங்கவில்லை பின்னர் பிரெட் என்றேன் உடனே அவர் அடப்பாவி நீ காசுக்காரனா? நம்ம நாட்டில் அதிகம் பிரெட் சாப்பிடுகிறவர்கள் கொண்வென்டில் படிப்பவர்களும் மேட்டுக்குடிமக்களும் தான் என்றான். பின்னர் அவனுக்கு பாணைப் பற்றிய கதை சொன்னேன். இப்படிச் சிலரிடம் பாணைப் பற்றித் தவறான அவிப்பிராயம் இருக்கு.

 
On July 14, 2009 at 8:13 AM , வர்மா said...

பாண் ஒருகாலத்தில் ஏழைகளீன் உணவு இப்போ பணக்காரர்களின் உணவு. பாணூக்க்க மட்டுமல்ல மரவள்ளீக் கிழங்குக்கு அலைந்ததையும் மறக்க முடியாது.
அன்புடன்
வர்மா.

 
On July 14, 2009 at 8:13 AM , வர்மா said...

பாண் ஒருகாலத்தில் ஏழைகளீன் உணவு இப்போ பணக்காரர்களின் உணவு. பாணூக்க்க மட்டுமல்ல மரவள்ளீக் கிழங்குக்கு அலைந்ததையும் மறக்க முடியாது.
அன்புடன்
வர்மா.

 
On July 14, 2009 at 9:30 PM , சந்தனமுல்லை said...

நண்பர்களே,

விருது கொடுத்திருக்கிறேன்!

http://sandanamullai.blogspot.com/2009/07/blog-post_15.html

வாழ்த்துகளுடனும், நன்றிகளுடனும்
முல்லை!

 
On July 14, 2009 at 10:46 PM , வந்தியத்தேவன் said...

//சந்தனமுல்லை said...
நண்பர்களே,

விருது கொடுத்திருக்கிறேன்!

http://sandanamullai.blogspot.com/2009/07/blog-post_15.html

வாழ்த்துகளுடனும், நன்றிகளுடனும்
முல்லை!//

நன்றிகள் சந்தணமுல்லை. ஒரு மாதத்தை பூர்த்திசெய்து தவழ்கின்ற‌ எங்கள் ஈழக்குழந்தைக்கு உங்கள் விருது ஊக்கம் கொடுக்கின்றது. இன்னும் சில நாட்களில் உறுதியுடன் எழுந்து நிற்போம்.

 
On July 15, 2009 at 11:00 AM , எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் வந்தியத்தேவன்,

பாணை மறக்கமுடியுமா எங்களால்? அதுவும் பாணும், பருப்புக்கறியும் கல்யாணச் சோடி போல :)

பாண் தயாரிக்கும் பேக்கரி பக்கத்தால் போகும்போது அங்கிருந்து வரும் வாசனையே ஆளை ஈர்த்துவிடும். சுடச் சுடப் பாணின் சுவையே தனி. பாணில் மட்டும் எத்தனை வகை உண்டு? மனிதர்களைப் போலவே அதுவும் மெலிந்தும் கொழுத்தும் இருக்கின்றது. :)

//பாணின் சகோதரர்கள் பணிஸ், புழுப்பாண் அல்லது புழுபணிஸ்(சிங்களத்தில் ஹிம்புலா பன்), சங்கிலிப்பாண்,ஜாம் பணிஸ், கறிபணிஸ்(உருளைக்கிழங்கு அல்லது மீன் இறைச்சிக் கறிகள்)ரோஸ்ட் பாண்(இதனை உண்ண ஸ்பெசல் பற்கள் வேண்டும்),கிறீம் பணிஸ் ஆகியோராகும்//

இந்த லிஸ்டில் பட்டர் பிஸ்கட்டை விட்டுவிட்டீர்கள்..அதுவும் கடிக்கமுடியாதுதான்.. ரோஸ்ட் பாணையும் பட்டர் பிஸ்கட்டையும் ப்ளேன் ரீ யில் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும். வெறும் பற்களால் கடிப்பது கஷ்டம்தான்..எனினும் காய்ச்சல்காரருக்கு இதைத்தானே கொடுக்கிறோம்?

நல்லதொரு பதிவு..நன்றி நண்பரே !

 
On July 15, 2009 at 6:07 PM , வசந்தன் said...

சிறிமா ஆட்சிக்காலத்தில் பாணுக்கு வரிசையில் நின்ற கதைபற்றி மூத்தவர்கள் நிறையச் சொல்வார்கள். நாங்களும் சுவாரசியமாகக் கேட்போம். ஆனால் அதேகாலம் எங்கள் முன்னும் வந்தது.

மானிப்பாயில் தினேஸ் பேக்கரி என்று ஒன்றிருந்தது. அவர்கள் மாலை நேரப் பாண் போடுவார்கள். அவ்வழியால் போபவர்களின் மூக்கைத் துளைக்கும் பாண் வாசம். மாலையில் தினேஸ் பேக்கரி முன் மிக நீண்ட வரிசை நிற்கும். போகப்போக அந்த வரிசை நீண்டுகொண்டே தான் போனது. அது பிட்ஸ்மன் ரியூட்டரியைத் தாண்டியும் நீண்டது. அவ்வளவுக்கு தினேஸ் பேக்கரியின் மாலைநேரப் பாண் பிரபலம்.
நானறிய ஆனைக்கோட்டை, உயரப்புலம் போன்ற இடங்களிலிருந்துகூட தினேஸ் பேக்கரியின் மாலைப் பாணுக்கு வந்து காத்திருப்பார்கள்.

எனக்குப் பிடிச்சது ரோஸ்ட் பாண் தான்.

யாழ்ப்பாணத்தில் பாண் பிரபலமானதற்கு இன்னொரு காரணம், விறகுப் பிரச்சனை.

 
On July 15, 2009 at 7:57 PM , மணிமேகலா said...

பாணில் இலகுவாகச் செய்து சாப்பிட்ட ஒரு சாப்பாட்டு முறை இருக்கிறது.

முட்டையையும் சீனியையும் நன்றாக அடித்து விட்டு அதனுள் தேங்காய்ப்பாலும் சேர்த்து உப்பும் அளவாகப் போட்டு கலந்து வைத்து விட்டு அதற்குள் துண்டாக வெட்டிய பாணை இரு புறமும் நனைத்து தோசைக் கல்லில் இரு புறமும் வாட்டி எடுத்துச் சாப்பிடுவது.

நல்ல சோக்கா இருக்கும்.:)

சோக்கு - ருசி/நல்ல/திறமான/அழகு.

 
On July 15, 2009 at 9:53 PM , வந்தியத்தேவன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
பாணை மறக்கமுடியுமா எங்களால்? அதுவும் பாணும், பருப்புக்கறியும் கல்யாணச் சோடி போல :)//

ஆமாம் ரிஷான் ஒருமுறை திருகோணமலையிலிருந்து கொழும்பு வரும்போது ஹபரணையில் ஒரு கடையில் காலையில் நல்ல பசியுடன் கிட்டத்தட்ட ஒரு இறாத்தல் பாணும் பருப்புக்கறியும் சுடச்சுட சாப்பிட்டது ஞாபகம் வருகின்றது.

//இந்த லிஸ்டில் பட்டர் பிஸ்கட்டை விட்டுவிட்டீர்கள்..அதுவும் கடிக்கமுடியாதுதான்.. ரோஸ்ட் பாணையும் பட்டர் பிஸ்கட்டையும் ப்ளேன் ரீ யில் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும். வெறும் பற்களால் கடிப்பது கஷ்டம்தான்..எனினும் காய்ச்சல்காரருக்கு இதைத்தானே கொடுக்கிறோம்?//

லிட்டில் பட்டர் பிஸ்கெட் என்பது ரஸ்க் தானே அதுவும் கடிக்கமுடியாத சாப்பாடுதான் காய்ச்சல்காரர்களுக்கு கொடுப்பது. இப்போ ரஸ்கை அரைச்சு ரோல்ஸ் கட்லெட் தயாரிக்கிறார்கள்.

 
On July 15, 2009 at 9:57 PM , வந்தியத்தேவன் said...

//வசந்தன் said...
சிறிமா ஆட்சிக்காலத்தில் பாணுக்கு வரிசையில் நின்ற கதைபற்றி மூத்தவர்கள் நிறையச் சொல்வார்கள். நாங்களும் சுவாரசியமாகக் கேட்போம். ஆனால் அதேகாலம் எங்கள் முன்னும் வந்தது.//

வசந்தன் ஸ்ரீமா ஆட்சியை மரவெள்ளிக்கிழங்கு யுகம் என்றும் சொல்லுகிறவை. நண்பர் வர்மா சொன்னதுபோல் அப்போ மரவெள்ளிக்கிழங்குக்கு நல்ல டிமாண்டாம். தாயின் ஆட்சியில் மட்டுமல்ல மகளின் ஆட்சியில்கூட பாணுக்கு வரிசையில் நின்றோம். மகளின் ஆட்சியில் தான் பாணின் விலை ராக்கெட் உயரத்திற்க்கு உயர்ந்தது.

//யாழ்ப்பாணத்தில் பாண் பிரபலமானதற்கு இன்னொரு காரணம், விறகுப் பிரச்சனை.//
ஓம் இதுவும் ஒருகாரணம் தான் யாழ்ப்பாணத்தில் காஸ் அடுப்பு பாவிப்பது குறைவு. விறகுதான் தென்னை மட்டைதான் பிரதான எரிபொருள். முன்னர் வண்டிலில் வந்தது பின்னர் ட்ராக்டர் லாண்ட் மாஸ்டர்களில் வந்தது. பனம்காணி இருப்பவர்களுக்கு பனையின் மட்டை ஓலை பன்னாடை ஊமல் முதல் கொண்டு சகலதும் விறகாக பாவிப்பார்கள்.

 
On July 15, 2009 at 9:59 PM , வந்தியத்தேவன் said...

மணியாச்சி நாலுவரியில் ஒரு செயல்முறை விளக்கமே கொடுத்துவிட்டார் நன்றிகள் ஆச்சி. இன்னொருமுறை இருக்கு துண்டு துண்டாக்கிய பாணுடன் சர்க்கரை கொஞ்சம் தேங்காய்ப்பூ சேர்த்து நீத்துப்பெட்டியில் வைத்து அவித்துச் சாப்பிட்டால் நல்ல சோக்கு.

 
On July 20, 2009 at 12:19 PM , சினேகிதி said...

எங்கட ஊருக்கு வியாபாரிமூலையில இருக்கிற மயிலன்பேக்கரில இருந்துதான் பாண் வாறது. அந்த சைக்கிள்ல அந்தண்ணா ஒரு பெரிய பெட்டி கட்டிக்கொண்டு வருவார். அநேகமா சின்னப்பிள்ளையள அனுப்பிப்போட்டு வீட்டில இருப்பினம் பெரியாக்கள். ஸ்கூலுக்கும் வெளிக்கிடாமல் நாங்கள் போய் றோட்டில எவ்வளவு நேரம் நிண்டு பாண் வேண்டிக்கொண்டு போவம் வீட்ட.

இன்னொரு சாப்பாட்டுச்சாமான் பாணில்லாத நேரத்திலி சாப்பிட்டது : கல் பணிஸ் மற்றது ஆட்டுக்கால் :)

 
On July 23, 2009 at 10:15 AM , வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...
எங்கட ஊருக்கு வியாபாரிமூலையில இருக்கிற மயிலன்பேக்கரில இருந்துதான் பாண் வாறது. அந்த சைக்கிள்ல அந்தண்ணா ஒரு பெரிய பெட்டி கட்டிக்கொண்டு வருவார். அநேகமா சின்னப்பிள்ளையள அனுப்பிப்போட்டு வீட்டில இருப்பினம் பெரியாக்கள். ஸ்கூலுக்கும் வெளிக்கிடாமல் நாங்கள் போய் றோட்டில எவ்வளவு நேரம் நிண்டு பாண் வேண்டிக்கொண்டு போவம் வீட்ட.

இன்னொரு சாப்பாட்டுச்சாமான் பாணில்லாத நேரத்திலி சாப்பிட்டது : கல் பணிஸ் மற்றது ஆட்டுக்கால் :)//

மயிலன் பேக்கரிப்பாண் அந்தமாதிரி நாங்கள் வியாபாரிமூலை எரிஞ்சம்மன் கோயில் கேணிக்கை குளிச்சிட்டு மயிலன் பேக்கரிப்பாணும் நாவலடிச் சந்தியிலை ஒரு கடையிலை வாழைப்பழமும் வாங்கிச் சாப்பிடுறது.

கல் பணிசை தேத்தண்ணிலை தோய்ச்சு சாப்பிட்டால் நல்ல ருசி. ஆட்டுக்கால் என்கிறது கொஞ்சம் நீட்டான ரஸ்க் தானே.

 
On July 25, 2009 at 8:54 AM , தமிழன்-கறுப்பி... said...

http://enninavinveliyilnan.blogspot.com/2008/05/blog-post_27.html

பாண் பற்றி ஒரு பதிவெழுதி அதுக்கு தொடரும் வேற போட்டதா ஞாபகம், ஆனால் இன்னமும் அடுத்த பகுதி எழுதேல்லை ஆனால் கட்டாயம் எழுதுவேன்.

நல்ல பகிர்வுக்கு நன்றி வந்தி அண்ணே.

 
On July 25, 2009 at 9:02 AM , சினேகிதி said...

\\மயிலன் பேக்கரிப்பாண் அந்தமாதிரி நாங்கள் வியாபாரிமூலை எரிஞ்சம்மன் கோயில் கேணிக்கை குளிச்சிட்டு மயிலன் பேக்கரிப்பாணும் நாவலடிச் சந்தியிலை ஒரு கடையிலை வாழைப்பழமும் வாங்கிச் சாப்பிடுறது.

கல் பணிசை தேத்தண்ணிலை தோய்ச்சு சாப்பிட்டால் நல்ல ருசி. ஆட்டுக்கால் என்கிறது கொஞ்சம் நீட்டான ரஸ்க் தானே.\\

நாவலடிச் சந்தியிலயா :) எந்தக்கடை?

அந்தச்சந்திக்குத்தான் நாங்கள் மீன் வாங்க வாறனாங்கள.

எரிஞ்சம்மன் கோயில் எங்க இருக்கு? கேள்விப்படாத கோயிலாயிருக்கு.

ஆட்டுக்கால் றஸ்க்தான் ஆனால் ஆட்டுக்கால் மாதிரியே 2 பக்கமும் பிறவுண் நிறமா இருக்கும்.

 
On July 25, 2009 at 9:04 AM , தமிழன்-கறுப்பி... said...

ஆட்டுக்கால்,கல்பணிஸ் அது இது எண்டு எங்கடை ஆக்கள் கோதம்ப மாவுல எத்தினை புதுமைகளை செய்திருப்பினை!

சுடச்சுட பாண் வெறுமன சாப்பிடுற எண்டாலும் சரி அது ஒரு கலை வாங்கி அடுத்த நிமிசம் இருக்காது பாண்...

மயிலன் பேக்கரி வரைக்கும்கூட நான் பாண் வாங்க வந்திருக்கிறன்.

மயிலன் பேக்கரி பாண் வாங்கிற ஆக்களெண்டால் எங்கடை ஊருக்கு பக்கத்துலதான் எண்டு நினைக்கிறன் சினேகிதி?

 
On July 25, 2009 at 10:55 AM , வந்தியத்தேவன் said...

// சினேகிதி said...

நாவலடிச் சந்தியிலயா :) எந்தக்கடை?//

சந்திலை இருக்கிற தேத்தண்ணிக்கடை. பக்கத்திலை ஒரு சலூனும் இருந்ததாக ஞாபகம். தேத்தண்ணிக்கடையிலை மோரும் விற்கிறவை நான் ஹாட்லியாலை வரேக்கை அம்மா ஒரு போத்தல் வாங்கியரச்சொல்றவ நான் வாங்கி அரைவாசியைக் குடித்துவிட்டு பிறகு அல்வாய் முத்துமாரி அம்மன் கோயில் கிணத்திலை தண்ணி இறைச்சு அதனை நிரப்பி கொடுப்பது. அம்மா சொல்லுறவா வரவர மோர் தண்ணியா வருதெண்டு.(இதனை ஒரு வண்டவாளமாகவும் கொள்ளலாம்)

/எரிஞ்சம்மன் கோயில் எங்க இருக்கு? கேள்விப்படாத கோயிலாயிருக்கு.//
எரிஞ்சம்மன் கோவில் எங்கட மெதடிஸ்ட் பின்னாலையுள்ள கோவில். கொஞ்சம் பாழடைந்தகோவில் போலத் தெரியும் ஆனால் கேணிலை நல்ல தண்ணி நிற்க்கும். வியாபாரிமூலைக்கேயும் ஒரு கோவில் கிணத்தில் நீந்தினாங்கள் கோவில் பேர் மறந்துபோச்சு.

 
On December 9, 2009 at 4:26 PM , Vijay said...

மெதடிஸ்ட் பின்னால இருக்கிறது ஆலடிப் பிள்ளையார் கோவில். எரிஞ்சம்மன் கோவில் இருப்பது கடற்கரை ரோட்டிலே சுப்பர்மடம் சுடலை தாண்டியதும் வரும் சந்தியிலே திரும்பி ஒரு நூறு அடி போக வேண்டும் (எதிர்ப் பக்கத்தில ஒரு அரிசி ஆலை இருக்கும்).

 
On December 9, 2009 at 4:27 PM , Vijay said...

மெதடிஸ்ட் பின்னால இருக்கிறது ஆலடிப் பிள்ளையார் கோவில். எரிஞ்சம்மன் கோவில் இருப்பது கடற்கரை ரோட்டிலே சுப்பர்மடம் சுடலை தாண்டியதும் வரும் சந்தியிலே திரும்பி ஒரு நூறு அடி போக வேண்டும் (எதிர்ப் பக்கத்தில ஒரு அரிசி ஆலை இருக்கும்).