Author: மணிமேகலா
•10:06 PM


ஒரு நாள் குருவானவரிடம் ஒருவர் வந்தார்.சுவாமி! இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று வினவினார்.அதற்குக் குரு உணவுண்டேன்; பின்பு நன்றாகத் தூங்கினேன் என்றார்.இதில் என்ன பெரிய விடயம் இருக்கிறது என்று வந்தவர் நினைத்தார்.அதனக் கேட்டும் விட்டார். அதற்கு சுவாமி சொன்னார்; நான் உணவுண்ணும் போது உணவுண்ணும் தொழிலை மட்டுமே செய்தேன்.வேறெதனையும் எண்ணவில்லை. உறங்கும் போது உறங்குதலாகிய செயலில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றார்.

இதனை வாசித்தபோது ஒரு நேரத்தில் நாம் எத்தனை விடயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றும்;அதனால் ஒன்றையும் முழுமையாக உள்வாங்கவோ அனுபவிக்கவோ முடியாது போய்விடுகிறது என்றும் தோன்றியது.அது போலவே சொற்களை நாம் பாவிக்கின்ற போதும் அதன் அர்த்தங்களையும் முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்துகிறோமா என்பது பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டியதாயிருந்தது.அதனால் எப்போதோ அறிந்து வைத்திருந்த இரண்டு சொற்களுக்கான விளக்கப் பதிவாக இப்பதிவு அமைந்திருக்கிறது.


வாஞ்சை:-

பாசத்தில் தோய்ந்த சொல் இது.

பொதுவாக வாஞ்சை என்ற சொல் அன்பினைக் குறிக்கும்.இச் சொல் குறிக்கும் அன்பு என்பது அன்பின் வகைகளில் சற்று விசேடமானது.பிள்ளை தந்தை/தாய் மீது கொள்ளும் அன்பினை வாத்சல்யம் என்று சொல்வதைப் போல; காதலர் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் அன்பைக் காதல் என்று சொல்வதைப் போல; நண்பர்கள் தமக்கிடையே உள்ள அன்பை நட்பு என்று சொல்லிக் கொள்வதைப் போல; வாஞ்சை என்ற சொல்லும் ஒரு விசேட அன்பைக் குறித்து நிற்கிறது.

ஒரு தாய்ப்பசு கன்று ஈனும்போதும்; பின்னர் தன் பிள்ளைக்குப் பாலூட்டும் போதும்; அதன் அழுக்குகளையும் சிறுநீரையும் நாவினால் நக்கிச் சுத்தப் படுத்தும்.அதனையிட்டு அது ஒரு போதும் அசூசை கொள்வதில்லை.மேலும் அது பாலூட்டும் போது கன்றின் உடல் பாகங்களையும் நாவினால் சீர்படுத்தும்.அன்பின் நிமித்தம் பால் பெருக்கெடுத்து ஓடும்.அதனுடய அன்பின் முன்னால் கன்றினுடய குறைகளோ அழுக்குகளோ அதன் கண்களுக்குத் தெரிவதில்லை.மேலும் அதனுடய செயற்பாட்டின் மூலம் கன்றின் மீதான அதன் அன்பு பெருக்கெடுத்து ஓடுவதையே நாம் காண்கிறோம்.அத்தகைய அன்பினையே வாஞ்சை என்ற சொல் குறிக்கிறது.

அதாவது,எந்த ஒரு அன்பு குறைகளையும் நிறைகளாகக் காண்கிறதோ அல்லது எங்கு குறைகள் எதுவும் குறைகளாகக் கண்ணுக்குத் தெரியாமல் அன்பு ஒன்றே விகாசித்து பொலிந்திருக்கிறதோ அங்கு வாஞ்சை நிறைந்த அன்பு நிலவுகிறது என்று அர்த்தமாகும்.(எப்போதோ யுகமாயினியில்(?) வாசித்தது)ஊழியம்:-

வலி சுமந்த சொல் இது.

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மெல்பேர்னில் நடந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையில் இருந்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் இந்தச் சொல்லுக்குச் சிறப்பான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்கள். அதனை இங்கு தருகிறேன்.

ஊழியம் என்பதற்கான ஆங்கில மொழியாக்கம் labour என்பதாகும்.தாய்மைப் பேறடைந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் செல்லும் அறையை labour room என்கிறோம்.ஏனெனில் வலியோடு கூடிய குழந்தை பெறுதலாகிய வேலையை அவள் அங்கு செய்கிறாள்.அதனால் ஊழியம் என்பது உடலை வருத்தி வலியினை உணர்ந்து பெறப்படும் பயன்பாடு ஆகும்.அதனால் labourer என்பது ஊழியர் அதாவது உடலினை வருத்தி வேலை செய்து பயனைப் பெறுபவர்களைக் குறிக்கிறது.

அதாவது உடல் உழைப்பினால் வருந்தி (கஸ்ரப்பட்டு)செய்யப் படுவது ஊழியம். அதனால்,உடலினை வருத்தி வேலைசெய்து வருமானம் பெறுபவர்கள் ஊழியர் என்ற சொல்லால் அழைக்கப் படுகிறார்கள்.

அதனால் இலிகிதர் போன்ற தொழிலில் உள்ளவர்களை அரச ஊழியர் என்று சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை.

மொழி விற்பன்னர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.பட உதவி; நன்றி ,இணையம்.
This entry was posted on 10:06 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On July 25, 2009 at 6:00 AM , வந்தியத்தேவன் said...

பலநாட்களாக கேட்கவேண்டும் என நினைத்தேன் இலிகிதர் என்பது எந்த மொழிச் சொல்? கிளார்க் என்றால் எழுதுவினைஞர் என்பார்கள். இலிகிதர் என்ன செய்வார்?

 
On July 25, 2009 at 8:22 AM , சினேகிதி said...

வாஞ்சை என்ட சொல் மறந்தே போச்சு. 2 சொற்களுக்கும் நல்ல விளக்கம் குடுத்திருக்கிறீங்கிள்.

இலிகிதர் என்டது இப்பத்தான் கேள்விப்படுறன்.

அரச அலுவலகர் என்டு சொல்லலாமா?

 
On July 26, 2009 at 12:12 AM , மணிமேகலா said...

வந்தி,இலிகிதர் என்பது போத்துக்கேய அல்லது ஒல்லாந்து தேசத்து மொழியாக இருக்குமோ?

சினேகிதி,வந்தி,

இலிகிதர் - எழுதுவினைஞர்/கிளார்க்

 
On July 26, 2009 at 12:54 AM , வர்மா said...

லிகிதம் என்றால் கடிதம். கடிதமும் தூயதமிழ்ச்சொல் அல்ல. அஞ்சல் தமிழாம். எழுதுபவர் என்பதனால் லிகிதர் என்று கூறி இருப்பார்கள்.அரச அலுவலர் அல்ல அரசபணியாளர்தான் சரி.
அன்புடன்
வர்மா

 
On July 28, 2009 at 5:11 PM , மணிமேகலா said...

நன்றி வர்மா.

 
On July 29, 2009 at 11:20 AM , Thevesh said...

ஊளியம் என்பது ஒருவர் தான்
செய்யும்வேலைக்கு பணம்
பெறுபவராக இருந்தா
ல் அவரை ஊளியர் என
அழைக்கப்படுகிறார்.பணம்
பெறாமல் சேவைசெய்பவரை
அலுவலர் என அழைக்கப்
படுவதாக என் நண்பர்
ஒருவர் கூறினார்.

 
On July 29, 2009 at 4:52 PM , மணிமேகலா said...

வணக்கம் தேவேஷ்.

ஊழியம் என்பது செய்கின்ற வேலை.அதாவது உடலை வருத்தி உடல் மூலமாகச் செய்கின்ற வேலைகள். உதாரணமாக மூட்டை தூக்கும் ஒரு மனிதர் செய்கின்ற வேலையை ஊழியம் என்றழைக்கலாம்.அதனைச் செய்கின்றவரை ஊழியர் எனலாம்.ஏனென்றால் உடல் மூலமாக அவர் அந்த வேலையைச் செய்கின்றார்.(அவரது உடல் தான் அவரது மூலதனம்)

அலுவல்கள் செய்பவர் அலுவலர். அதாவது அலுவலகத்தில் (காரியாலயத்தில்/officeல்) கதிரையில் இருந்து வேலை செய்பவர்களை - (கோப்புகளோடு வேலை செய்பவர்கள்)அவர்கள் உடலை மிகுதியாக வருத்துவதில்லைத் தானே? அவர்களை அலுவலர் என அழைக்கலாம்.(மூளை/புத்தியே அவரது மூலதனம்)

பணம் பெறாமல் வேலை செய்பவரை வழக்கமாகத் தொண்டர் என்ற சொல்லினால் குறிக்கிறோம்.

உங்கள் வருகைக்கு நன்றி தேவேஷ்.