Author: வந்தியத்தேவன்
•2:53 AM
வெள்ளாப்போட படுக்கையை விட்டு எழுந்த ஆறுமுகத்தார் தாவடிப் பொயிலைக் கீலத்தை கிழித்து சுருட்டாகப் பத்தவைச்சுக்கொண்டார்.

விறாந்தையில் படுத்திருந்த மனிசி வள்ளிப்பிள்ளை " இஞ்சாரும் கச்சேரிக்கு போகுமுன்னம் சோமு விதானையார் வீட்டையும் வெள்ளெனப் போவிட்டுப்போங்கோ, அப்படியே போற வழியிலை மூத்தவன் தறைக்குள் நிற்பான் அவனுக்கு இரண்டு தோசை கட்டித்தாரன் குடுத்துட்டுப்போங்கோ" என்றாள்.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே வந்த ஆறுமுகத்தாரை பக்கத்துவீட்டு மணியம் "முகத்தார் துலைக்கே? " எனக் கேட்டார்.

"என்ரை மூத்தவன் பிரபாவின்ட வேலை அலுவலாக ஒருக்கால் விதானையாரைப் பார்த்திட்டு அப்படியே பஸ்சிலை கச்சேரிக்கும் போறன்"

உன்ரை பிரபா ஒரு சோலி சுரட்டுக்கும் போகதாவன் தானே அவனுக்கென்ன வேலை கிடைக்கும் " பிரபாவுக்கு சேர்டிபிகேட் கொடுத்தார் மணியம்.

விதானையாரிட்டை வேலையை முடிச்சுக்கொண்டு மாலிசந்தியில் 750ஆம் இலக்க பஸ்சில் ஏறி கச்சேரிக்கு பயணமானர் ஆறுமுகத்தார். வல்லைச் சந்தியில் போற காரியம் நடக்கவேண்டும் என முனியப்பருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு தன் பயணத்தை தொடந்தார்.

மேலே போல்ட்டில் இருக்கும் சொற்களுக்கான எனக்குத் தெரிந்த விளக்கம்.

வெள்ளாப்போட - அதிகாலை

பொயிலை ‍ - புகையிலை பெரும்பாலும் தாவடிப் புகையிலை நல்ல தரம் என்பார்கள்.

கீலம் - சிறிய துண்டு உதாரணம் பனையோலையை கீலம் கீலமாக கிழித்தான்.

விறாந்தை - ஆங்கிலச் சொல்லான வராண்டா தான் விறாந்தையாக மருவியுள்ளது.

கச்சேரி - அரச அதிபரின் அலுவலகம். இந்தச் சொல் இசைக் கச்சேரியையும் குறிக்கும். அரச அதிபரின் அலுவலகத்திற்க்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என யாராவது விளக்கம் தரவும்.

விதானையார் - கிராம சேவகர். கிராமங்களை நிர்வகிக்கும் அரச அதிகாரி. விதானை என்பதை ஒரு மரியாதைக்காக விதானையார் என ஆர் விகுதி கொண்டு அழைப்பார்கள். எந்த மொழி என்பது தெரியவில்லை.

வெள்ளென - நேரத்திற்க்கு (Early )

தறை ‍- தோட்டம்

துலைக்கே ‍- எங்கே போறியள் என்றதன் இன்னொரு வடிவம் தான் துலைக்கே அல்லது துலைக்கே போறியள். ஒருவரை எங்கே போறியள் எனக் கேட்பது சகுனத் தடை என்பதால் இந்த துலைக்கே என்ற சொல் பாவிக்கபடுகின்றது. அதே நேரம் எங்கிருந்து வாறியள் என்பதை துலையாளே? என்ற சொல் கொண்டு அழைப்பார்கள்.

சோலி - இந்தச் சொல்லுக்கு வேலை என்ற அர்த்தமும் சுரட்டு என்ற சொல்லுடன் வரும்போது சண்டை என்ற அர்த்தமும் வரும். பிரபா சோலி சுரட்டுக்கு போகாதவன் என்றால் எந்த வம்புச் சண்டைக்கும் போகாதவன் என்பது அர்த்தம். அதே நேரம் மணியாச்சி ஒரு சோலியும் இல்லாமல் இருக்கிறாள் என்றாள் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறாள் என்பது அர்த்தம்.

வேறு எந்தப் பகுதிகளில் இந்தச் சொற்கள் பாவிக்கின்றவை என ஏனைய பிரதேச அன்பர்கள் தெரியப்படுத்தவும். கச்சேரி விதானை போன்றவை இலங்கை முழுவதும் பாவிக்கின்ற சொற்கள் என நினைக்கின்றேன்.
This entry was posted on 2:53 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 comments:

On July 2, 2009 at 5:10 AM , கானா பிரபா said...

ஆகா இந்தச் சொற்கள் எல்லாம் எங்கள் வட்டாரத்தில் சரளமாகப் புழங்குபவை, பெயரும் கூட :)

இந்தப் பதிவில் நிறைய பேச்சு வழக்கை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள் வந்தி.

 
On July 2, 2009 at 5:48 AM , சினேகிதி said...

துலைக்கே போற மோனை என்று அப்பம்மா அண்டைக்கும் கேட்டா நான் துலைக்கப்போறன் என்று சொன்னன்....நானும் இந்தச்சொல்லைப் பற்றி எழுதணும் என்று நினைச்சன்.

 
On July 2, 2009 at 5:50 AM , Anonymous said...

'துலை' என்பது 'தொலை' என்பதன் மருவிய வடிவம்.
'துலைக்கே?' என்பது நேரடியாக 'தொலைக்கே?' - அதாவது தொலைதூரம் போகிறீர்களா? என்ற கருத்தில் வரும்.

'துலைவார்' என்று சொல்வதும் 'தொலைவார்' - தொலைந்து போவார் என்ற கருத்தில் தான்.

'கூப்பிடு தூரம்' பற்றியெல்லாம் வலைப்பதிவில் எழுதியிருந்தார்கள். இங்கு இணைத்தால் நன்று.

 
On July 2, 2009 at 6:03 AM , வாசுகி said...

தறை ‍, வெள்ளாப்போட இரண்டும் இப்போது தான் அறிகிறேன்.
ஏனையவை அடிக்கடி பாவிக்கப்படுபவை.
நிறைய சொற்கள் பாவித்துள்ளீர்கள்.


துலைக்கே
தூரவோ (தூரம்) போறியள் என்று கேட்க பாவிப்பதாய் நினைத்தேன்.
எங்க போறியள் என்று கேட்டால் சகுனம் நல்லதில்லை என்பதால் எங்கட பெருசுகள்
புத்திசாலித்தனமாய் துலைக்கே எண்டு கேட்பினம்.
எங்கட அம்மம்மா துலைக்கே எண்டுறதை மட்டும் மறக்காமல் கேட்பா.

 
On July 2, 2009 at 7:09 AM , ’டொன்’ லீ said...

ஆகா...கிட்டத்தட்ட நான் மறந்துவிட்ட சொற்கள்..

 
On July 2, 2009 at 7:36 AM , த.ஜீவராஜ் said...

இந்தப் பதிவில் 'துலைக்கே'எனக்குப் புதுச்சொல்
நல்லதொரு பகிர்வு நன்றி வந்தியத்தேவன்

 
On July 2, 2009 at 8:20 AM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...

இந்தப் பதிவில் நிறைய பேச்சு வழக்கை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள் வந்தி.//

பிரபா எங்கட நாட்டுப்பேச்சுவழக்குகள் நிறையத் தெரியவேண்டுமென்றால் எம்மவர்களது எழுத்துகளைப் படித்தாலே போதும். அதற்காக பெரிய நாவல்கள் எல்லாம் படிக்கவேண்டாம் சிறுகதைகளிலேயே நல்ல சொற்கள் கிடைக்கும்.

 
On July 2, 2009 at 8:23 AM , வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...
துலைக்கே போற மோனை என்று அப்பம்மா அண்டைக்கும் கேட்டா நான் துலைக்கப்போறன் என்று சொன்னன்.//

சினேகிதி யாரைத் துலைக்கபோறியள்? வேறை சொற்கள் பற்றி எழுதுங்கள் இவற்றைப்படிக்கும் போது எங்கட ஊர்ப்பக்கம் நிற்பதுபோல இருக்கும்.

உங்கள் பதிலில் அண்டைக்கும் என்ற சொல் இருக்கின்றது. இதன் அர்த்தம் அன்றைக்கு என்பதுதானே.

 
On July 2, 2009 at 8:25 AM , வந்தியத்தேவன் said...

//Anonymous said...
'துலை' என்பது 'தொலை' என்பதன் மருவிய வடிவம்.
'துலைக்கே?' என்பது நேரடியாக 'தொலைக்கே?' - அதாவது தொலைதூரம் போகிறீர்களா? என்ற கருத்தில் வரும்.

'துலைவார்' என்று சொல்வதும் 'தொலைவார்' - தொலைந்து போவார் என்ற கருத்தில் தான்.

'கூப்பிடு தூரம்' பற்றியெல்லாம் வலைப்பதிவில் எழுதியிருந்தார்கள். இங்கு இணைத்தால் நன்று.


அனானி நண்பரே நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம், பெரும்பாலான வட்டார வழக்குகள் மருவிய பெயர்களே.

கூப்பிடுதூரம் பற்றி ஒரு பின்னூட்டமாவது இடுங்கள். உங்கள் பெயரைச் சொல்லியிருக்கலாம். //

 
On July 2, 2009 at 8:28 AM , வந்தியத்தேவன் said...

//வாசுகி said...
துலைக்கே தூரவோ (தூரம்) போறியள் என்று கேட்க பாவிப்பதாய் நினைத்தேன்.
எங்க போறியள் என்று கேட்டால் சகுனம் நல்லதில்லை என்பதால் எங்கட பெருசுகள் புத்திசாலித்தனமாய் துலைக்கே எண்டு கேட்பினம்.
எங்கட அம்மம்மா துலைக்கே எண்டுறதை மட்டும் மறக்காமல் கேட்பா.//

தூரவோ ஆகவும் இருக்கலாம் ஏனென்றால் பெரும்பாலும் நம்மவர்கள் தூரம் போகும்போது பிறம்பாகத்(தனியாக) தெரியும். அவர்களின் உடையே காட்டிக்கொடுத்துவிடும். சிலர் உதிலை(பக்கத்திலை) போறன் என்பார்கள். எதற்கும் அம்மம்மாவிடம் கேட்கவும்.

 
On July 2, 2009 at 8:30 AM , வந்தியத்தேவன் said...

//’டொன்’ லீ said...
ஆகா...கிட்டத்தட்ட நான் மறந்துவிட்ட சொற்கள்.//

ஓமோம் இப்போ நீங்கள் மலேயில் தான் கதைப்பதென்று ஊரிலை கதையடிபடுகிறது.

//த.ஜீவராஜ் said...
இந்தப் பதிவில் 'துலைக்கே'எனக்குப் புதுச்சொல்
நல்லதொரு பகிர்வு நன்றி வந்தியத்தேவன்//

வருகைக்கு நன்றிகள் டொக்டர் அப்படியே எங்கட தம்பலகாமம் தயிர் மற்றும் இடங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

 
On July 2, 2009 at 10:23 AM , செயபால் said...

விறாந்தை
Wikipedia:
According to the Oxford English Dictionary, the word verandah originated in India where it is found in several native languages. However, it may have been an adaptation of the Portuguese or older Spanish varanda (baranda in modern Spanish), again borrowed from Indian languages, referring to a railing, balustrade or balcony. The distinctive style of Indian architecture evolved from a hybrid of east and west. The veranda is one of the many new hybrid architectural elements. [4]

தறை <---- தரை = (தட்டையான) நிலம்

 
On July 2, 2009 at 12:21 PM , செயபால் said...

தறை <---- தரை = (தட்டையான) நிலம் (தோட்டம்)

 
On July 2, 2009 at 4:49 PM , மணிமேகலா said...

கலக்கி விட்டிட்டாய் ராசா!
:)

 
On July 3, 2009 at 1:07 AM , வந்தியத்தேவன் said...

செயபால் உங்கள் விளக்கங்களுக்கு நன்றிகள். தரைதான் தறையாக மருவியிருக்கும்.

மேகலா ஆச்சி உங்களைப்போன்ற வயசானவங்கள் தாற ஊக்கம் தான் எம்மை எழுதவைக்கிறது.

 
On July 3, 2009 at 7:06 AM , வலசு - வேலணை said...

நல்லவொரு பதிவு. எங்கள் ஊரிலும் இப்படித்தான் கேட்பார்கள்

 
On July 3, 2009 at 7:45 AM , Anonymous said...

http://pooraayam.blogspot.com/2005/03/1.html

 
On July 3, 2009 at 8:21 AM , வந்தியத்தேவன் said...

வலசு வேலணை அண்ணே வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். அனானி அண்ணே உங்கள் பூராயம் வலையிலும் நிறையச் சொற்கள் இருக்கிறது.

 
On September 23, 2009 at 2:22 AM , Anonymous said...

கிட்டத்தட்ட மறந்துவிட்ட சொற்கள்.. மறந்துவிட்டது என்பதை விட பாவியாமல் விட்டது என்டு சொல்லலாம். 3 வருசம் ஊரை விட்டு வந்து ஆங்கிலம் மட்டுமே இங்கு உபயோகிப்பதால் எல்லாம் மறக்கப்போகுது என்டு கவலையா இருக்கு... நிற்க, அட்டகாசமாக இருக்கு உங்கள் வலை பதிவு..