Author: யசோதா.பத்மநாதன்
•4:12 AM
பிள்ள சினேகிதி சொன்ன குலகுலயா முந்திரிக்கா பாட்டு ஞாபகம் இருக்கே? இதுகளும் அதுகளப் போல தான்.ஆனா என்ன கொஞ்சம் பொம்பிளப் பிள்ளயள் விளையாடுற விளையாட்டு.அவ்வளவு தான்.

கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிறாண்டி:-

நாலஞ்சு பேர் வட்டமா இருப்பினம்.இரண்டு கையையும் முன்னால் பரப்பி வத்திருப்பார்கள்.ஒருவர் இந்தப் பாடலை இப்படிப் பாடுவார்.
கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ?

கிள்ளிப் பிராண்டி என்னும் போது அவர் ஒருவரது கையை நுள்ளுவார். பின்னர் நுள்ளுப் பிராண்டி என்னும் போது வரிசைக் கிரமமாக வரும் அடுத்தவரின் கையை நுள்ளுவார்.கொப்பன் தலையில் என்னும் போது அது அடுத்தவரது கையிற்கான நுள்ளாக இருக்கும்.என்னபூ என்பது 4வது கையிற்கான நுள்ளாக இருக்கும்.அவர் ஒரு பூவின் பெயரைச் சொல்ல வேண்டும்.பொதுவாக முருக்கம் பூ என்று சொல்வார்கள்.

பாடல் பிறகு இப்படித் தொடரும்.

முருக்கம் பூவத், தின்றவளே,
பாதி விளாங்காய், கடித்தவளே,
பாட்டன், கையை, மு, ட, க், கு,

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு கையிற்கான நுள்ளாக வந்து கடைசியாக முடக்கு என்ற சொல் தனித்தனி எழுத்துக்கான நுள்ளாக இருக்கும். கு என்ற சொல் முடிகின்றவர் தன் கையை மறு புறமாகத் திருப்பி வைக்க வேண்டும்.பூவின் பெயரை வேறொன்றாகக் கூறும் போது வேறொருவரது கை திரும்புகின்ற வாய்ப்புக் கிட்டும்.அந்தக் கு என்ற சொல் மீண்டும் திருப்பிய கையில் வந்து முடிந்தால் அவர் தன் கையை எடுத்துக் கொள்ளலாம்.

பாடல் மீண்டும் அவ்வாறே தொடரும்.அப்படி முதலில் யாருடய கை முழுவதுமாக விடுபடுகிறதோ அவர் வெற்றி பெற்றவர்.
இப்போது நினைத்தால் இதிலெல்லாம் என்ன சுவாரிஸம் இருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் அப்போதெல்லாம் இது தான் திறம்.

ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி

இது ஒரு சின்ன முசுப்பாத்தி விளையாட்டு.கைகளை அகல விரித்துக் கொண்டு ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி என்று சொல்லிக் கொண்டு சும்மா சுத்துவது தான். இறுதியில் தலை சுற்றி ஒவ்வொருவராக தொப்புத் தொப்பென்று விழுவோம். அதெற்கெல்லாம் பெரிய வெற்றி பெற்றது போல் பெரிய சிரிப்பெல்லாம் சிரித்துக் கொள்வோம்.பாசாங்காக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கொளவதற்கும் ஒரு சிரிப்பு. இதில் திறிலான சம்பவம் தலை சுற்றுவதை அநுபவிப்பதாகத் தான் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.

இன்னொரு பாட்டிருக்கிறது. அதனை ஏன் பாடினோம் என்று இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் பாடல் ஞாபகமாக இருக்கிறது. பாடல் இது தான்.

அக்கா வீட்ட போனேன்
பழம் அரிசி தந்தாள்
வேண்டாம் என்று வந்தேன்
வந்த வழியில் பாம்பு
பாம்படிக்கத் தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை.
ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன்
தண்ணி எல்லாம் மீன்
மீன் பிடிக்க வலைக்குப் போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன்
ஊசி எல்லாம் வெள்ளி
வெள்ளி எல்லாம்(அம்மா?) வெள்ளி
பொயிலைக் காம்பை நுள்ளி
வாய்க்கை போடடி கள்ளி.

இப்பாட்டு ஒரு லயத்தோடு பாடப் படும்.

இப்போது இன்னொரு பாட்டும் ஞாபகம் வருகிறது.
இது பலராக பெண்கள் விளையாட்டில் தம்மை இரண்டு பிரிவாகப் பிரிப்பதற்காக இப்பாடலைப் பாடிப் பிரித்துக் கொள்வார்கள். பாடல் இது தான்.எல்லோரும் வட்டமாக நிற்க ஒருவர் தன்னில் இருந்து இப்பாடலை இப்படி ஆரம்பிப்பார்.ஓர் என்று தன் உச்சம் தலையில் கை வைப்பார். அம்மா என்று தன் நெஞ்சில் கை வைப்பார். பிறகு ஒவ்வொரு சொல்லாக ஒவ்வொருவரைச் சுட்டியபடி வருவார்.

ஓர் அம்மா கடைக்குப் போனா
ஒரு டசின் பென்சில் வாங்கி வந்தா
அதன் நிறம் என்ன?( என்ன என்பதில் முடிபவர் ஒரு நிறத்தைச் சொல்ல வேண்டும்)

அவர் சிவப்பு என்று சொன்னால் சி, வ,ப்,பூ என்று ஒவ்வொருவராகச் சுட்டிக் கொண்டு வர வேண்டும்.கடைசி எழுத்தில் முடிபவர் ஒரு புறமாக நின்று கொள்ள வேண்டும். பின்னர் இப்பாடல் மீண்டும் தொடரும். அடுத்த முறை முடிபவர் மறு புறமாக நின்று கொள்ள வேண்டும். இப்படியாகக் கட்சி பிடித்துக் கொள்வார்கள்.

இன்னொரு பாட்டும் இருக்கிறது.' என்னகுத்து? இந்தக் குத்து' என்று முன்னால் நிற்பவரைக் குத்துவது.அதன் தொடக்கம் தெரியவில்லை.

இப்போதெல்லாம் இப்படிப் பாடிக் கொள்கிறார்களா என்றும் தெரிய வில்லை.
This entry was posted on 4:12 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

34 comments:

On July 11, 2009 at 5:00 AM , soorya said...

என்ன?
அன்னம்
என்ன அன்னம்?
சோற்று அன்னம்
என்ன சோறு
பழஞ்சோறு
என்ன பழம்
மாம்பழம்
என்ன மா
அரிசி மா
என்ன அரிசி
குத்தரிசி
என்ன குத்து
இந்தக் குத்து.

 
On July 11, 2009 at 7:33 AM , சுபானு said...

சூரியா சொன்னதை சற்று நீட்லாமே..

என்ன?
அன்னம்
என்ன அன்னம்?
சோற்று அன்னம்
என்ன சோறு
பழஞ்சோறு
என்ன பழம்
மாம்பழம்
என்ன மா
அரிசி மா
என்ன அரிசி
குத்தரிசி
என்ன குத்து
வயிற்றுக் குத்து.
என்ன வயிறு
பேத்த வயிறு
என்ன பேத்த
வால்ப் பேத்த
என்ன வால்
நரி வால்
என்ன நரி
குள நரி
என்ன குள
வாழைக் குள
என்ன வாழை
திரி வாழை
என்ன திரி
விளக்குத் திரி
என்ன விளக்கு
குத்து விளக்கு
என்ன குத்து
கும்மாங்குத்து...

 
On July 11, 2009 at 7:36 AM , சுபானு said...

உண்மையில் நல்ல விளையாட்டு.. நல்ல ஞாபகம் இருக்கு.. ஆனால் என்ன பொம்பிளைப் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு என்று சொல்லிவிட்டீங்க... சின்னனில நாமளும் பால் வேறுபாடு பாராம விளையாடியிருக்கம்.

அம்மா வெளிய போய் விளையாட வேண்டாம் என்றால் இந்த விளையாட்டையும் விளையாடியிருக்கம்...

 
On July 11, 2009 at 9:47 AM , வந்தியத்தேவன் said...

ஆஹா இந்தவிளையாட்டு, கொக்கான், கலவோடு போட்டு ஒற்றைக்காலில் விளையாடும் ஒரு விளையாட்டு (ரைட்டோ ரைட்டோ எனக்கேட்பது ஞாபகம் விளையாட்டின் பெயர் மறந்துபோச்சு) விளையாடுதல் போன்ற பெண்கள் விளையாட்டுப் பல நானும் சின்னனிலை விளையாடினேன் காரணம் எங்க குடும்பத்திலை அக்காமார் சித்தியின் மகள்கள் என பெண்கள் தான் அதிகம் ஆகவே இந்தவிளையாட்டெல்லாம் எனக்கும் தெரியும்.

 
On July 11, 2009 at 4:44 PM , கலை said...

Want to write something to your post. But, some problem in Tamil writing :(. Will write the comment later.

 
On July 12, 2009 at 12:15 AM , வர்மா said...

சிறுபிள்ளையின் உள்ளங்கையில் சோறு கறி எல்லாம் போட்டு குழைத்து ஒவ்வொரு பார்சலாகக்கட்டி அம்மாவுக்கு, அப்பாவுக்கு, மாமாவுக்கு என்று பாடி மிகுதியை நாய்க்குப்போட்டுவிட்டு உள்ளங்கியில் இருந்து இரண்டு விரல்களால் நண்டூருது நரியூருது எனக்கூறி குழந்தியின் கமக்கட்டில் கிச்சிகிச்சு மூட்டும் பாடலும் உண்டு.
அன்புடன்
வர்மா

 
On July 12, 2009 at 1:35 AM , யசோதா.பத்மநாதன் said...

நன்றி சூர்யா,சுபானு.பாடல் அதே தான்.நாங்கள் சூர்யா சொன்னது போல் தொடங்கி,

என்ன பழம்
வாழைப் பழம்
என்ன வாழை
திரி வாழை
என்ன திரி
விளக்குத் திரி
என்ன விளக்கு
குத்து விளக்கு
என்ன குத்து
இந்தக் குத்து
என்று எதிர் பாராத விதமாக ஒரு குத்து ஒன்று கொடுத்து விடுவோம்.

நான் நினைக்கிறேன் சுபானு சொன்ன பாடல் தான் மூலம். பிறகு இடத்துக்கிடம் பாடசாலைக்குப் பாடசாலை அது தனக்குரிய வடிவங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறது போலும்.

 
On July 12, 2009 at 1:45 AM , யசோதா.பத்மநாதன் said...

ஆம் சுபானு.நீங்கள் சொன்னது முற்றிலும் சரி.எனக்கு ஆண்பிள்ளைகளோடு விளையாட சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. அதனால் இது பெண்கள் விளையாடும் விளையாட்டு என்று எண்ணி விட்டேன்.

சிறு வயதில் பால் வேறுபாடேது?

 
On July 12, 2009 at 2:18 AM , யசோதா.பத்மநாதன் said...

நலமா வந்தி?

நீங்கள் சொல்லுகிற விளையாட்டு எட்டுக் கோடா?

கொக்கான்வெட்டும் எட்டுக்கோடும் அந்தக் காலத்து பிரபலமான விளையாட்டுக்கள்.அதிலும் மாபிளோடும், கற்களோடும் விளையாடும் கொக்கான் வெட்டுக்கு மகா கிராக்கி.

எட்டுக் கோட்டிலும் அனுங்காமல் கால் அரக்காமல் கெந்த வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் போடுவதுண்டல்லவா?

பாட்டோடு சேர்ந்த விளையாட்டுக்கள் என்பதால் இவற்றைச் சேர்க்க நான் எண்ணவில்லை.

 
On July 12, 2009 at 2:26 AM , யசோதா.பத்மநாதன் said...

முற்றத்து நண்பர்களே,

கோபம் போடுவதற்கு ஒரு பாட்டுப் பாடுவோம் ஞாபகம் இருக்கிறதா?

அத்தம் என்று பெரு விரலைக் காட்டுவோம்.பித்தம்,சுத்தம்,பாம்பு வந்து கொத்தும், செத்தாலும் பேசமாட்டேன், என்று ஒவ்வொரு விரலாகக் காட்டி முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ளுவோம்.

அடுத்த இடைவெளையில் வாக்குறுதியை எல்லாம் காற்றோடு விட்டு விட்டு சின்ன விரலைக் காட்டி 'நான் உம்மோட நேசம் நீர் என்னோட கதைப்பீரா?' என்று நேசமாகுவோம்.

ஞாபகமிருக்கிறதா?

 
On July 12, 2009 at 2:35 AM , யசோதா.பத்மநாதன் said...

கலை மகளே வருக!

http;//thamizha.com/ekalappai-anjal என்ற தளத்துக்குச் சென்று தமிழ் மொழியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நான் மிகவும் மக்கு இந்த தொழில் நுட்ப விடயங்களில்.

யாராவது இணைய நிபுணர்கள் இதனை விட இலகுவாக எங்கேனும் மொழியைப் பெற முடிந்தால் தயவுசெய்து அதனை ஒரு பதிவாகப் போட முடியுமா? அது பலருக்கு பயனுடயதாக இருக்கும்.

நானறியவே பல பேர் தமிழ் எழுத்துத் தெரியாததால் விரும்பினாலும் ஒன்றும் எழுத முடிவதில்லை என்று கூறினார்கள்.

கலை வரவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

உங்கள் வரவு மகிழ்வு கொள்ளச் செய்கிறது.

 
On July 12, 2009 at 2:43 AM , யசோதா.பத்மநாதன் said...

ஆமாம் வர்மா.சரியாகச் சொன்னீர்கள்.

குழந்தைகள் சிரிக்கும் அழகை பார்க்க வேண்டுமே! பாதித்தூரம் போனதுமே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா?

பருத்தித்துறை ஊராம்
பவளக் கொடி பேராம்
பாவை தனை ஒப்பாள்
பாலெடுத்து விப்பாள்
.....
பாட்டு, மற்றும்
பாயாசம் வைக்க வேண்டும் பானையிலோ அரிசி இல்லை....(கொசுமாமாவும் கொசுமாமியும் பாயாசத்தை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்த கதை)

ஞாபகம் இருக்கிறதா? அவை பாடப் புத்தகங்களில் வந்ததென்று நினைக்கிறேன்.

வரவுக்கு நன்றி வர்மா.

 
On July 12, 2009 at 6:49 AM , வர்மா said...

இன்றைய பாடப்புத்தகங்களீல் பாட்டுககள் இல்லை.
வண்டி வண்டி புகை வண்டி
வாகாய் ஓடும் புகை வண்டி
கண்டி காலி கொழும்பெல்லாம்
காணப்போகும் புகைவண்டி
என்றொரு பாடல் படித்ததாக ஞாபகம் மிகுதி பாடமில்லை
அன்புடன்
வர்மா

 
On July 15, 2009 at 11:36 AM , M.Rishan Shareef said...

அன்பின் மணிமேகலா,

எனது சிறுவயதுக் காலங்களுக்கு இழுத்துக் கொண்டுபோகிறீர்கள் சகோதரி !

நல்ல பதிவு !

 
On July 15, 2009 at 6:15 PM , Vasanthan said...

வந்தியத்தேவன் சொல்வது எட்டுக் கோட்டைத்தான்.

'குத்து'ப் பாட்டு இப்படி முடியும்.

'பிள்ளையார் குத்து
பிடிச்சுக்கோ குத்து'.

 
On July 15, 2009 at 7:33 PM , Vasanthan said...

மணிமேகலா,

நீங்கள் சொன்ன தங்கத் தாத்தாவின் பாடலை நான் சில வருடங்களின் முன்பு எனது வலைப்பதிவில் இட்டிருந்தேன்.

பவளக் கொடி - சிறுவர் பாடல்

அவரின் வேறும்பல பாடல்கள் அக்காலப்பகுதியில் எனது வலைப்பதிவில் இடம்பெற்றன.

 
On July 15, 2009 at 7:45 PM , யசோதா.பத்மநாதன் said...

ஆச்சியின்ர காலத்தில அதாவது மணியாச்சியின்ர காலத்தில பவளக் கொடிப் பாட்டுத்தான் வர்மா.

அவ பால் கொண்டு போகேக்கை கற்பனை பண்ணுவா பால வித்து முட்டை வாங்கி அது குஞ்சு பொரித்து...என்று அவவின்ர கற்பனை நீளும். பிறகு தான் பணக்காரியாகி இப்படி அழகாக நடந்து போவேன் என்று ஒய்யாரமாக நடந்து போவா. அப்ப தலையில வச்சிருந்த பால் குடம் கீழே விழுந்து ஒன்றுமே இல்லாமல் போய் விடும். கடசியில் பாடல் இப்படி முடியும்.'கைக்கு வரு முன்னே நெய்க்கு விலை பேசேல்' என்று.

 
On July 15, 2009 at 7:46 PM , யசோதா.பத்மநாதன் said...

உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ரிஷான்,வசந்தன்.

ரிஷான், உங்கள் 'சிந்திக்கச் சில படங்களை' உங்கள் பதிவில் பார்த்தேன்.அவற்றை வாழ் நாளில் மறக்க முடியும் என்று தோன்ற வில்லை.

வசந்தன்,ஆஹா! அதுவும் அப்படியா? எத்தனை குத்துக் கொடுத்து எத்தனை குத்து வாங்கினீர்கள் வசந்தன்?

நீங்கள் இரண்டு பேரும் எப்போது பதிவு போடப் போகிறீர்கள்?

பார்க்க ஆவல்.

 
On July 15, 2009 at 7:59 PM , Vasanthan said...

இவ்விடுகையின் தலைப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அதென்ன பெண்களின் பாட்டும் விளையாட்டும்?

அப்ப நாங்கள் உதுகள் பாடேலயோ? விளையாடேலயோ?

முந்தி சந்திரவதனாவும் கொக்கான் வெட்டுறது தனிய பெட்டையளின்ர விளையாட்டு எண்டு சொல்லப் போக அவவோட சண்டை பிடிச்சனான்.

குறிப்பிட்ட வயதுவரை விளையாட்டுக்கள் இருபாலாருக்கும் பொதுவானதுதாம். குறிப்பாக கிராமங்களில். எங்கள் ஊரில் ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்துதான் காற்பந்து, பேணிப்பந்து, கிட்டிப்புள்ளு, கிளித்தட்டு என விளையாடுவோம் சிறுவயதில். (வளர்ந்த பெண்கள் ஆண்களோடு சேர்ந்து கிட்டிப்புள்ளு விளையாடினார்கள்.)

இது ஊருக்கு ஊர் வித்தியாசப்படக்கூடும். எங்கள் குடும்பத்தில், சொந்தத்தில் கிட்டத்தட்ட பெண்கள் எல்லோருமே நன்றாகக் கடுதாசி (Cards) விளையாடுவார்கள். சிறுவயதிலிருந்தே 304 என்பது அவர்களின் விருப்ப விளையாட்டாக இருக்கும்.

ஆனால் இடம்பெயர்ந்து வந்திருந்த போது வீட்டுக்குள் கடுதாசி விளையாடுவது மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அதுவும் அம்மா, தங்கைகள் சேர்ந்து விளையாடுவது பெரிய அதிர்ச்சியாகவும் இருந்தது.

கடுதாசி விளையாட்டென்பது ஓர் உதவாக்கரை விளையாட்டாகவும், அதை விளையாடுபவர்கள் ஊதாரிகளாகவுமே கருதப்பட்டார்கள். எங்கோ மதவடியிலோ மரத்தடியிலோ வேலையில்லாத நாலு புறம்போக்குகள் விளையாடும் விளையாட்டாகத்தான் அது கருதப்பட்டது.

 
On July 15, 2009 at 8:02 PM , Vasanthan said...

ஓய் மணிமேகலா,

இந்த வலைப்பதிவின்ர முதலாவது இடுகையைப் போட்டு (அறிமுகத்தை நாங்கள் இடுகையெண்டு கணக்கெடுக்கிறேல) வலைப்பதிவைத் தொடங்கி வைச்சதே நான்தான். (ஒருவருசத்துக்கு இதைவைச்சு ஓட்டுவோமெல்லோ?)

 
On July 15, 2009 at 8:07 PM , யசோதா.பத்மநாதன் said...

நன்றி வசந்தன்.நானும் நீங்களும் ஒரே நேரம் பின்னூட்டம் இட்டிருக்கிறோம்.

மிக அருமையாக உங்கள் பதிவை இணைத்திருக்கிறீர்கள்.மிக அரிய பொக்கிஷங்கள் அவை. நீங்கள் அவற்றைச் சேகரித்து வைத்திருக்கிறீர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

பாராட்டுக்கள் நண்பரே! காலத்தின் தேவை அது.

 
On July 15, 2009 at 8:14 PM , வந்தியத்தேவன் said...

மணியாச்சி எங்கயனை எங்கடை பொடிபெட்டையள்? எட்டுக்கோடுதான் அந்த விளையாட்டு. கெந்திக் கெந்தி விளையாடுவது. சிலர் கலவோடு போட்டு விளையாடுவார்கள் சிலர் மாங்கொட்டை போட்டு விளையாடுவார்கள். கொக்கான் எல்லாம் சோக்கா வெட்டுவேன் இப்போ எப்படி விளையாடுகிறது என்பதே மறந்துபோச்சு.

 
On July 16, 2009 at 5:41 AM , யசோதா.பத்மநாதன் said...

சரி,சரி நீங்களும் விளையாடலாம் எண்டு சும்மா நாங்கள் விட்டுத்தந்தாப் போல அது உங்கடயும் எண்டு உரிமை கொண்டாடலாமோ வசந்தன்?:)

எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து சகிச்சு வாழுற பொம்பிளப் பிள்ளயளுக்கு இத விட்டுக் குடுக்கிறது என்ன பெரிசே? சரி சரி விளையாடுங்கோ.

ஒரு பேச்சுக்கு நீங்களும் விளையாடுறதெண்டே வச்சுக் கொள்ளுவம்.:))

 
On July 16, 2009 at 5:49 AM , யசோதா.பத்மநாதன் said...

ராசா வசந்தா,அந்த இந்தக் கதையெல்லாம் இந்தக் கிழவியிட்ட வாய்க்காது மோனை.
ஒரு கிழமைக்குள்ள பதிவு வந்தாக வேணும்.சொல்லிப் போட்டன்!

அது எதெடா ராசா போணிப் பந்து?

 
On July 16, 2009 at 6:04 AM , யசோதா.பத்மநாதன் said...

வந்தி,ராசா, வந்திட்டியே!எல்லாரையும் கூட்டிக் கொண்டு ஓடி வா மோனை.சினேகிதியக் கூட்டியர மறந்திடாத தங்கம்.

உங்க பார்! உவன் பிள்ள வசந்தன் கோவிச்சுக் கொண்டு ஓடுறான் மோன. மறக்காமல் எப்பிடியும் ஆளப் பிடிச்சுக் கூட்டிக் கொண்டு வந்திடு ராசா.

எட்டுக் கோட்டிலயும் கொக்கான் வெட்டிலயும் ரண்டு விதம் இருக்கு.
எங்க வசந்தன் பிள்ளையார் சொல்லட்டும் பாப்பம் அத!

 
On July 16, 2009 at 8:09 AM , வசந்தன்(Vasanthan) said...

பேணிப் பந்தெண்டு நான் சொன்னதை வேறு பேர்களில வேறிடங்களில சொல்லியிருக்கக் கூடும்.

இரண்டு கன்னையாகப் பிரிந்து விளையாடுவோம். பேணிகளை அடுக்கிவைத்திருப்போம். அடியில் 7 பேணிகள் வரிசையாக இருந்தால் அதற்கு மேலே 6, அதற்கும் மேலே 5 என்று அடிக்கிக் கொண்டுவந்து கடைசியில் ஒரு பேணி உச்சியிலே இருக்கும். பேணிகளின் எண்ணிக்கை விளையாடும் ஆட்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடிக்குறையும்.

அடுக்கப்பட்ட பேணிகள் நடுவில் இருக்கத் தக்கதாக குறிப்பிட்ட தூரத்தில் எதிரெதிர்ப் பக்கமாக இரண்டு அணிகளும் நின்றுகொள்ளும். பந்தொன்றால் எறிந்து அடுக்கப்பட்ட பேணிகளை விழுத்த வேண்டும். தவறினால் மற்ற அணி எறியும். விழுத்திய அணி மீளவும் பேணிகளை அடுக்கி முடிக்க வேண்டும். அதற்கிடையில் மற்ற அணி அடுக்கும் அணி வீரர்களைப் பந்தால் எறிந்து ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும்.

பேணிகளை அடுக்கிமுடிந்தால் அவ்வணிக்கு ஒரு புள்ளி. அவர்களை அடுக்கி முடிக்க விடாமல் அனைவரையும் ஆட்டமிழக்கச் செய்வதே மற்ற அணியின் வேலை.

இதுதான் பேணிப்பந்து.

 
On July 16, 2009 at 8:16 AM , வசந்தன்(Vasanthan) said...

எட்டுக் கோட்டிலயும் கொக்கான் வெட்டிறதிலயும் எத்தினை வகையிருக்கு எண்டு தெரியாது. நான் விளையாடினது ஒருவகைதான் என்பதாக ஞாபகமிருக்கு.

எட்டுக்கோட்டில நான் உணர்ந்துகொண்ட விசயமொண்டிருக்கு. ஓட்டுத்துண்டை ஒரு காலில ஏந்திக்கொண்டு கெந்திறது பெண்களுக்கு ஒப்பீட்டளவில் இலகுவாயிருக்கும். கால்விரல்களை மேல்நோக்கி வளைத்து நல்ல வடிவான குழியொன்றை ஏற்படுத்தி ஓட்டைக் காவிச் செல்வார்கள். ஆண்களுக்கு அவ்வளவாக கால்விரல்கள் மேல்நோக்கி வளையா. கொஞ்சம் தட்டையாகவே இருக்கும். இதனால் ஓட்டை விழுத்தாமல் காவிச் செல்வது கொஞ்சம் கடினம்.

 
On July 17, 2009 at 6:04 AM , யசோதா.பத்மநாதன் said...

நன்றி வசந்தன். இந்தப் பேணிப் பந்தைப் பற்றி இன்று தான் கேள்விப் படுகிறேன்.

கிட்டிப் புள்ளு, கிளித்தட்டு,காட்ஸ் விளையாடுதல் பற்றியெல்லாம் குறிப்பிட்டிருந்தீர்கள்.

நிறைய ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்,அறிந்து வைத்திருக்கிறீர்கள்.இவை பற்றியேனும் பதிவொன்று போடுங்களேன்.அறிய ஆவல்.

அக்கறையோடு வந்து விளக்கம் அளித்தமைக்கும் நன்றி வசந்தன்.

எட்டுக் கோடும் கொக்கான் வெட்டும் பற்றித் தனியாக ஒரு பதிவு போட்டாலாம் என்று யோசனை. பின்னூட்டத்தில் போட்டால் நீண்டு விடுமோ என்று பயம்.

 
On July 20, 2009 at 12:14 PM , சினேகிதி said...

பாட்டன் குத்து ப.......குத்தெண்டும் சொல்றதெல்லா?

சடுகுடு என்டும் ஒன்டிருக்கல்லா? மறந்திட்டிங்கிள் எல்லாரும்?

 
On July 20, 2009 at 4:33 PM , மலைநாடான் said...

உந்த எட்டுக்கோட விளையாட்ட கிழக்கில சில்லுக்கோடு என்டும் சொல்றது மக்கா. எறியிற கல்லு ஓட்டுச் சில்லாக இருப்பதால் அப்படி வந்திருக்கலாம்.

 
On July 20, 2009 at 7:14 PM , யசோதா.பத்மநாதன் said...

சினேகிதி, மலை நாடான் எங்க பிள்ளயள் போயிருந்தனீங்கள் இவ்வளவு நாளும்.உங்கட முற்றமெல்லே இது. இப்பிடி மறந்து போறதே? ஆ?

சடு குடு பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறன் சினேகிதி. ஆனா எப்பிடி எண்டு தெரியாது.

அத விட ஒழிச்சுப் பிடிச்சு, அடிச்சுப் பிடிச்சு,எவடம் எவடம் புளியடி புளியடி,எண்டு கனக்க இருக்குப் பிள்ள.

மற்றது வகுப்பில இருந்து விளையாடுற விளையாட்டுகளும் கொஞ்சம் இருக்கு.கணக்குக் கொப்பியில படிக்கட்டுகள் மாதிரிக் கீறி என்ன இலக்கம் எழுதினனான் எண்டு அடுத்த ஆளிட்டக் கேக்கிறது.

மற்றது, கனக்கத் துண்டுகளில 5 தரம் பச்சை நிறம் 5 தரம் நீலம் எண்டு எத்தனை ஆக்கள் எண்டு கணக்குப் பார்த்து அதுக்கேற்ற அளவு எழுதி சுறுட்டிப் போட்டு 5,5, ஆக எடுத்து ஒன்றொன்றாகக் கொடுத்து வருவதன் மூலமாக மற்ற ஆக்களுக்குக் காட்டாமல் ஒரு நிறத்தச் சேர்க்கிறது

இப்பிடிக் கனக்க விளையாட்டுகள். இதுகளப் பற்றித் தனியாவே ஒரு பதிவு போலலாம் பிள்ள.

 
On July 20, 2009 at 7:15 PM , யசோதா.பத்மநாதன் said...

மலை நாடான் எங்கு போயிருந்தீர்கள் இவ்வளவு நாளும்.வந்தி சொன்ன கல ஓடு,நீங்கள் சொல்லும் ஓட்டுச் சில்லு நல்ல அழகான பெயர்கள்.

அப்போதெல்லாம் அதனை சிறப்பான ஒன்றாக ஆக்கி எங்கள் கொம்பாஸ் பெட்டிக்குள் அழிரப்பருக்குப் பக்கமாக வைத்துக் கொள்வோம் இல்லையா?

 
On July 20, 2009 at 7:59 PM , Anonymous said...

லூடோ,ஏணியும் பாம்பும்?

 
On August 17, 2009 at 12:27 AM , sivananthini said...

hai friends how are you, i am join to comments