Author: கானா பிரபா
•12:54 PM
"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

Get this widget | Share | Track details


யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தைக் கந்தபுராணக் கலாச்சாரம் என்பார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.அவரின் கூற்றுக்கமைய, யாழ்ப்பாணத்தின் எல்லாத் திசைகளிலும் முருகன் ஆலயங்கள் பல பழமைச் சிறப்பும்,பக்திச் சிறப்பும் ஒருங்கே கொண்டவை. கந்த சஷ்டி என்னும் முருக விரதத்தை மிகவும் அனுட்டானத்துடன் நம் ஈழத்தவர்
வெகு சிரத்தையோடு ஓவ்வோர் ஆண்டும் கைக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது. செல்வச்சந்நிதி முருகனை "அன்னதானக் கந்தன்",என்றும் நல்லூர் முருகனை " அலங்காரக் கந்தன்" என்றும் சிறப்பித்துப் போற்றி நாம் வணங்கி வருகின்றோம்.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து புலம் பெயர் வாழ்வில் இருந்து வரும் எனக்கு அதற்கு முற்பட்ட காலத்தில் கலந்து கொண்ட நல்லூர்த் திருவிழாக் காலங்கள் இன்னும் பசுமரத்தாணி போல் இருக்கின்றன. காரணம் இந்த ஆலய மகோற்சவம் என்பது
எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் வெறும் ஆன்மீகத் தேடலுக்கான நிலைக்களனாக மட்டுமன்றி வருஷா வருஷம் நிகழும் பெரும் எடுப்பிலான சமூக ஒன்றுகூடலாகவே அமைகின்றது.

என் சின்னஞ்சிறு வயதில் அயலட்டை உறவினர் சகிதம் அம்மாவின் கைப்பிடித்துக் கோண்டாவில் பஸ் பிடித்துத் தட்டாதெருச் சந்தி இறங்கித் தொடர்ந்து நடை ராஜாவில் நல்லூர்க் கந்தனைக் கண்டது ஒரு காலம்.

அப்பாவின் சைக்கிளின் முன் பாரில் ஏறி, பெடலை வலித்துக் கொண்டே அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டே பரமேஸ்வராச் சந்தி வழியாகப் போய் எம் பெருமானை வழிபட்டது ஒரு காலம்.

பதின்ம வயதுகளில் கூட்டாளிமாருடன் காதல் கதைகள் பேசி நல்லூரைக் கடந்து யாழ்ப்பாண நகர் வரை சென்று பின் திரும்ப நல்லூருக்கு வந்து கோயிலுக்குப் போன நீண்ட சுற்றுப் பயணத்துக்கும் காரணம் இருக்கின்றது.

இவையில்லாம் தொலைத்து இப்போது கணினித் திரைக்கு முன் என் மனத்திரையில் நிழலாக ஓடும் காட்சிகளைப் பதிவாக்க முனைகின்றேன். என் நினைவுச் சுழல் எண்பதுகளின் நடுப்பகுதிக்குப் போகின்றது.


1986 ஆவணி மாதம் ஒரு நல்லூர்த் திருவிழாக் காலம் அது

முதல் கிழமையே என் அம்மா குசினிப் (அடுக்களை) பக்கம் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாகக் குதித்து விட்டார். காஸ் அடுப்புக்களோ, மின்சார அடுப்புக்களோ எங்கள் வீட்டில் இல்லை. சூட்டடுப்புக்களை இணைத்துச் செம்மண்ணால் ஒன்றிணைத்த அடுப்படி அது. அந்தச் செம்மண் அடுப்புப் பகுதிக்கு மாட்டுச் சாணத்தைக் கரைத்து அப்பி நன்றாக வருடி விட்டுப் புது மெருகைக் கொடுக்கின்றார். வீட்டுக்குள் இருந்த அசைவப் பாத்திரங்கள், அவை மச்சப் பார்த்திரங்கள் சாம்பல் கொண்டு கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு கொல்லையில் இருக்கும் காம்பரா என்று சொல்லப்படும் அறைக்குள் நகர்கின்றன. (என் பெற்றோர் மலையகப் பகுதியில் ஆசிரியர்களாக இருந்த காலத்தில் அந்த மலையகப் பகுதிக்குத் தனித்துவமாக சொல்லான "காம்பரா" வையும் யாழ்ப்பாணத்துக்குக் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்கள். காம்பரா என்றால் தேயிலைத் தேட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் குடியிருக்கும் தொடர் குடியிருப்புக்கள். அவை ஒன்றாக இணைந்திருந்தாலும் தனித்தனிக் குடும்பங்களுக்கான குடியிருப்பாக இருக்கும்.)

வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து கிணற்றடியில் பெரிய வாளி கட்டி முக்குளித்து அள்ளிய தண்ணீரை அப்பா கொண்டு வரவும், ஓவ்வொரு அறையாகக் குளிப்பாட்டிப் பெருக்கி நீரை வளித்துத் துடைப்பதும் அண்ணனின் வேலை.கூடவே அணில் போல் என் பங்கும்
இருக்கும். வீடே சுத்தமான சைவப்பழமாக மாறிவிட்டது. இனி ஒரு மாதத்திற்கு அசைவச் சாப்பாட்டுக்கும் தடா அல்லது பொடா. மீன் விற்கும் மணி அண்ணனுக்கு ஒரு மாத உழைப்புப் படுத்து விடும்.

எல்லோரும் எதிர்பார்த்த அந்த நல்லூர்த் திருவிழா வந்துவிட்டது.
அதிகாலையில் வழக்கம் போல் துயில் எழுந்து தலை முழுகிச் சுவாமி அறையில் தேவாரம் பாடி முடித்து, யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகளை அப்பா பாடவும், நானும் எழுந்து கோயிலுக்கு அப்பாவுடன் போக ஆயத்தமாகவும் சரியாக இருக்கின்றது.

அம்மா, பக்கத்து வீட்டு மாமி மாருடன் மினி பஸ் மூலம் வரப் போகிறார். அண்ணன் தன் கூட்டாளிமாருடன் கோயிலுக்குப் போய்விடுவார். வெறும் மேலும் வெள்ளைச் வேட்டியும், கழுத்தைச் சுற்றிய சால்வையுமாக வெளியே வந்த அப்பா ஓரமாக நிறுத்தியிருந்த பி.எஸ்.ஏ (BSA) சைக்கிளை நகர்த்தி, நடுமுற்றத்துக் கொண்டு வருகின்றார். இணுவில் கந்தசுவாமி கோயில் கடாய் வாகனம் போல பெரிய சைக்கிள் அது. "ஐம்பதுகளில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினது, பார் இன்னும் உழைக்குது" என்று பெருமை பட அப்பா தன் தேரைப் பற்றி அடிக்கடி தானே புகழ்ந்து கொள்வார். அரைக்காற்சட்டைப் பையனான நான் அப்பாவின் சைக்கிள் ஏறி முன் பாரில் அமர்ந்து கொள்கின்றேன். ஒடுக்கமான ஒழுங்கைக்குள்ளால் சைக்கிள் ஊர்கின்றது.

கொஞ்ச தூரம் சென்றதும் பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க எனக்குக் கதை சொல்ல ஆரம்பிப்பார் அப்பா என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நானே முந்திக் கொண்டு,
"அப்பா! இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்"
என்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.

தன் சைக்கிளோட்டத்தை நிதானப்படுத்தியவாறே, ஒரு செருமலை உதிர்த்துவிட்டு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்ல ஆரம்பிக்கின்றார் அப்பா.
This entry was posted on 12:54 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On July 27, 2009 at 8:34 PM , Thevesh said...

அமாம் பழய நினைவலைகளில்
மூழ்கும்போது கிடைகும்
இனபம் அது ஓர் தனி
யான இன்பம்.கடந்த காலங்கள் இனிமே
ல் என்றும் வரப்போவதில்லை.
ஈழத்தமிழரான எங்களுக்கு
இறைவன் இட்ட சாபம் என்று முடிவுக்கு வ்ரும் என்பது புரியவில்லை.

 
On July 27, 2009 at 8:40 PM , வந்தியத்தேவன் said...

அபிசேகக் கந்தனான மாவிட்டபுரம் கந்தனை மறந்துபோனியளோ பிரபா. என்ன செய்வது மாவிட்டபுரத்தை கண்டவரைக் கண்டவரைக் கண்டு கனகாலம்.
நீங்கள் கந்தபுராணக் கலாச்சாரத்தைப் பற்றி எழுதுங்கள் நான் சிவபூமி பற்றி எழுதுகிறேன்.

 
On July 27, 2009 at 9:42 PM , ஐந்திணை said...

அந்த பாடலில் வரும் நல்லூர் ஈழத்திலா அல்லது தமிழகத்தில் விருத்தாசலம் அருகிலுள்ள நல்லூரா?

 
On July 27, 2009 at 10:23 PM , கானா பிரபா said...

வணக்கம் ஐந்திணை

இது ஈழ நல்லூர் குறித்த பாடல்

 
On July 28, 2009 at 4:14 AM , கானா பிரபா said...

தேவேஷ்

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.


வந்தி

உண்மைதான் மாவிட்டபுரத்தானை விட்டுவிட்டேனே

 
On July 28, 2009 at 5:48 AM , மணிமேகலா said...

நல்லூர் திருவிழா ஈழத்து முற்றத்தில் களை கட்டுகிறது.நல்லூர் முந்தலில் நிற்பதைப் போல் ஓர் உணர்வு.

புலம் பெயர்ந்து நாம் இழந்தது கனக்க என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது பதிவு.

யாழ்ப்பாணத்து மண் வாசம் மனதை நிறைக்கிறது.மீட்டு வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி.

25 நாள் திருவிழாவையும் முற்றத்தில் கண்டு களிக்க ஆவல்.