Author: வந்தியத்தேவன்
•9:57 AM
மைம்மலுக்கை சுருட்டும் கையுமாக இருந்த சண்முகம் கிழவன் தெருவாலை போன ஒரு பெட்டையை மட்டுக்கட்டமுடியாமல் "உதார் பிள்ளை " என அவளைக்கூப்பிட்டார்.

"எணே அப்பு அது நான் மணியத்தாற்றை மூத்தது" என பதிலளித்தாள் மணியம் மாஸ்டர்ரை மூத்த பெட்டை மணிமொழி.

"எங்கே பிள்ளை கலாதியாக வெளிக்கிட்டுக்கொண்டுபோறாய்" கிழவன்

"என்ரை கூட்டாளிப் பிள்ளை ஒருத்திக்கு இண்டைக்கு பேர்த்டே அங்கேதான் போறன்" என்ற படி மணிமொழி சைக்கிளை உதைய‌த்தொடங்கினாள்.

பார்ட்டியிலை மணிமொழியின் நண்பின் தாயார் அனைவரையும் நன்றாக உபசரித்தார். எல்லோருக்கும் இன்னொரு தரம் அரியதரம் சாப்பிடக்கொடுத்தார். "பிள்ளையள் இந்த அரியதரத்தை மிச்சம் விடாமல் சாப்பிடுங்கோ, இல்லையென்றால் சக்குப் பிடிச்சுப்போம்" எனக் கூறினார்.

மணிமொழி பக்கத்திலை இருந்த தன் நண்பி தர்சியைப் பார்த்து "தர்சி அங்காலை கதவுக்குப் பக்கத்திலை நிற்கிற பொடியன் என்னைப் பார்த்து இளிக்கிறான், "உவன் என்ரை கூட்டாளி ஒருத்திக்கு டிமிக்கி கொடுத்தவன்" அவனுக்கு பெரிய கெப்பர் பொடிப்பிள்ளை ஒருநாளைக்கு தனிய அம்பிடட்டும் அண்டைக்கிருக்கு உவருக்கு" என்றாள்

"எடியே பிலத்துக் கதையாதே அவனுக்கு கேட்கப்போவுது மற்றது இண்டைக்கு எல்லோரும் உன்னைத்தான் பார்க்கினம் வீட்டைபோய் ஒருக்கா நாவூறு பார்" என்றால் தர்சி.

"சரியடி தர்சி நான் வீட்டை போறன் போற வழியிலை நடனமுருகன் மருந்துக்கடையிலை அம்மாவுக்கு குளிசையும் வாங்கவேண்டும்" என்ற மணிமொழி வீட்டைநோக்கிச் செல்லத்தொடங்கினாள்.

போற வழியிலை சனமெல்லாம் அலார்ப்பட்டார்கள். பக்கத்திலை நிண்ட ஒருத்தரை என்ன பிரச்சனை எனக்கேட்க அவர் புளியடிச் சந்தியிலை ஏதோ கலாதியாம் என்றார்.

பாதையை மாற்றிக்கொண்டு நேரகாலத்திற்க்கு மணிமொழி வீடுபோய்ச் சேர்ந்தாள்.

மைம்மல் ‍- மாலைப்பொழுது.

மட்டுக்கட்டுதல் -அடையாளம் காணுதல்

வசந்தன் அண்ணையை மட்டுக்கட்டமுடியேல்லை என்றால் வசந்தன் அண்ணையை என்னால் அடையாளம் காணமுடியாமல் போயிற்று.

கலாதி - இரண்டு அர்த்ததில் பாவிக்கப்படும் சொல். ஒன்று அழகு இன்னொன்று சண்டை சச்சரவு

உன்ரை உடுப்பு கலாதியாக இருக்கு என்றால் உடை அழகாக இருக்கு என அர்த்தம்.

வகுப்பிலை இண்டைக்கு எனக்கும் பிரபாவுக்கும் கலாதி என்றால் எம்மிருவருக்கும் சண்டை என்ற அர்த்தம் வரும்.

வெளிக்கிடுதல் - உடை அணிதல், தயார் ஆகுதல். கலியாணப்பொம்பிளை இன்னும் வெளிக்கிடவில்லை என்றால் அவர் தயாரில்லை எனப் பொருள் படும். மாப்பிள்ளை இப்போதான் வெளிக்கிடுகிறார் என்றால் அவர் உடை அணிகின்றார் என்ற பொருள்.

கூட்டாளி - நண்பன் நண்பி(பொதுப்பால்)

உதைதல் - காலால் உதைத்தல்

அரியதரம் - சீனி அரிசி மா கலந்து செய்யும் இனிப்பு பண்டம். சிலவேளைகளில் கொஞ்சம் கல்லாக இருக்கும் கடித்தால் விழுகின்ற நிலையில் இருக்கும் பல்லு நிச்சயம் விழும்.

சக்கு - பூஞ்சணம் பிடித்தல்(பூஞ்சணம் என்பது பங்கஸ்)

இளித்தல் - அசடு வழியச் சிரித்தல்

டிமிக்கி கொடுத்தல் - ஏமாற்றுதல். டிமிக்கி எந்த மொழிச் சொல் எனத் தெரியவில்லை.

கெப்பர் - தலைக்கனம்

அம்பிடல் - பிடிபடுதல்

பிலத்து - சத்தம். பிலத்து கதையாதே என்றால் சத்தமாக கதையாதே எனப் பொருள்

மற்றது - அடுத்தது

நாவூறு - கண்ணூறு. பொதுவாக ஒருவர் கண் வைத்தால் கண்ணூறு ஏற்படும் எனவும். இன்னொருவரை புகழ்ந்து பேசினால் நாவூறு( நாக்கு+ ஊறு) ஏற்படும் எனவும் சொல்வார்கள். செத்தல் மிளகாய், உப்பு, வேப்பமிலை போன்றவற்றால் நாவூறு பார்ப்பார்கள்.

குளிசை - மாத்திரை

அலார் - அல்லோலகல்லோலப்படல்

குறிப்பு : புதிய சொற்களை அகராதி வடிவில் தராமல் கதைபோல் எழுதக்காரணம் படிக்கின்றவர்களுக்கு இலகுவாக விளங்கும் என்பதற்கேயாகும்.
This entry was posted on 9:57 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On July 9, 2009 at 5:18 PM , U.P.Tharsan said...

எனக்கும் பல சொற்கள் தெரியாது. தொடர்ந்து எழுதுங்க தல (தாத்தா)

 
On July 10, 2009 at 12:16 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//வகுப்பிலை இண்டைக்கு எனக்கும் பிரபாவுக்கும் கலாதி என்றால் எம்மிருவருக்கும் சண்டை//

இந்தப் பதிவில பிரபா ஒரு சோலி சுரட்டுக்கும் போகாத ஆளெண்டீங்க.. இன்டைக்கு வகுப்பில பிரபாவும் நீங்களும் சண்டை என்டுறீங்க, இது வேற பிரபாவோ? :O)

நல்ல பதிவு.

 
On July 10, 2009 at 12:24 AM , வந்தியத்தேவன் said...

// U.P.Tharsan said...
எனக்கும் பல சொற்கள் தெரியாது. தொடர்ந்து எழுதுங்க தல (தாத்தா)//


வருகைக்கு நன்றிகள் தர்ஷன் சும்மா வந்துபோகாமல் ஏதாவது எழுதவும். இது உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் என் வேண்டுகோள்

சரி நான் தல என்றால் தளபதி யார்? தாத்தாவா நான் இன்னமும் சின்னப்பொடியன் தான்

 
On July 10, 2009 at 12:25 AM , வந்தியத்தேவன் said...

//`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இந்தப் பதிவில பிரபா ஒரு சோலி சுரட்டுக்கும் போகாத ஆளெண்டீங்க.. இன்டைக்கு வகுப்பில பிரபாவும் நீங்களும் சண்டை என்டுறீங்க, இது வேற பிரபாவோ? :ஓ)//

அக்கா என்ன கோள்மூட்டலா? கோள்மூட்டுதலும் மிகவும் பிரபலமான வட்டாரவழக்கு.

 
On July 10, 2009 at 12:55 AM , தமிழன்-கறுப்பி... said...

சைக்கிள் உதையுற எண்டு சொல்லுறதா,உழக்குறதெண்டுதான் அறிஞ்சிருக்கிறன்...

 
On July 10, 2009 at 6:04 AM , மணிமேகலா said...

நினைத்தவுடன் பாடல் எழுதுபவர்களை ஆசுகவி என்கிறார்கள்.நினைத்தவுடன் கதை எழுதுபவர்களை எப்படி அழைக்கிறார்கள்? உங்களை இனி அப்படி அழைக்கலாம்:)

பாராட்டுக்கள் வந்தி.

 
On July 10, 2009 at 6:09 AM , வந்தியத்தேவன் said...

//தமிழன்-கறுப்பி... said...
சைக்கிள் உதையுற எண்டு சொல்லுறதா,உழக்குறதெண்டுதான் அறிஞ்சிருக்கிறன்.//

உழக்குகின்றது என்றால் வேகமாக சைக்கிளை மிதிப்பது. இரண்டு சொல்லுக்கும் இடையில் பெரிதாக வித்தியாசமில்லை.

 
On July 10, 2009 at 6:21 AM , மணிமேகலா said...

இப்போது தான் இது ஞாபகம் வந்தது.

தான்தோன்றிக் கவிராயர் போல "தான்தோன்றிக் கதைராயர்" எப்படி?

 
On July 10, 2009 at 6:30 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
இப்போது தான் இது ஞாபகம் வந்தது.

தான்தோன்றிக் கவிராயர் போல "தான்தோன்றிக் கதைராயர்" எப்படி?//


இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆச்சி. என் வாழ்க்கையில் நான் எழுதிய ஒரேயொரு சிறுகதை ஓஎல் தமிழ் சோதினேலை எழுதியது. அதற்க்கே சி தான் கிடைத்தது. என்ன சம்பாசணை பலருக்கும் விளங்கும் வடிவம் என்பதால் அப்படியே எழுதுகின்றேன்.

 
On July 10, 2009 at 8:29 AM , கானா பிரபா said...

:) மணிக்கதை நிறையப் பேச்சு வழக்கைப் புகுத்திட்டீங்கள்.

 
On July 10, 2009 at 6:03 PM , மணிமேகலா said...

உண்ணாணை நீ நல்லா எழுதுறாயடா மோனை.

கதையளும் எழுதிப் பாரடா ராசா.ஒரு நாளைக்கு நான், இவர் தான் எங்கட தான்தோன்றிக் கதைராயர் எண்டு சொல்லவெல்லே வேணும்.

பகிடி இல்ல ராசா உண்மையாத் தான்.

 
On July 15, 2009 at 11:48 AM , எம்.ரிஷான் ஷெரீப் said...

இதில் பல சொற்கள் எனக்குப் புதிது..தொடருங்கள் நண்பரே !

 
On July 15, 2009 at 8:42 PM , வசந்தன் said...

எனக்கும் 'உழக்கிறது'தான். உதயிறது எண்ட வடிவம் பாவிச்சு நான் கேட்டதேயில்லை. உழக்கிறது எண்டது வேகமாக மிதிக்கிறது எண்ட கருத்தில்லை, உழக்கிறது எண்டது மிதிக்கிறதுதான். வேகமாக மிதிக்கிறதை 'வேகமா உழக்கிறது' எண்டுதான் சொல்லுவோம் ;-)

கலாதி, சண்டை எண்ட கருத்தில பாவிச்சும் நான் கேட்டதில்லை. இண்டைக்குத்தான் அந்த இரண்டாவது வடிவத்தைக் காணிறன்.

** என்னை நீர் எங்க பாத்தாலும் மட்டுக்கட்ட ஏலாது அப்பனே.

 
On July 15, 2009 at 10:02 PM , வந்தியத்தேவன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
இதில் பல சொற்கள் எனக்குப் புதிது..தொடருங்கள் நண்பரே //
வருகைக்கு நன்றிகள் ரிஷான் எங்கே நீங்கள் இன்னும் உங்கள் கைவரிசையைக் காட்டவில்லை.

 
On July 15, 2009 at 10:04 PM , வந்தியத்தேவன் said...

// வசந்தன் said...
எனக்கும் 'உழக்கிறது'தான். உதயிறது எண்ட வடிவம் பாவிச்சு நான் கேட்டதேயில்லை. உழக்கிறது எண்டது வேகமாக மிதிக்கிறது எண்ட கருத்தில்லை, உழக்கிறது எண்டது மிதிக்கிறதுதான். வேகமாக மிதிக்கிறதை 'வேகமா உழக்கிறது' எண்டுதான் சொல்லுவோம் ;‍)//

எங்கட ஊர்ப்பக்கம்(வடமராட்சி) உதையிறதும் பாவிக்கிறனாங்கள். இடத்துக்கிடம் சில சொற்கள் வேறுபடும்,

//கலாதி, சண்டை எண்ட கருத்தில பாவிச்சும் நான் கேட்டதில்லை. இண்டைக்குத்தான் அந்த இரண்டாவது வடிவத்தைக் காணிறன்.//

சில இடங்களில் இந்தக் கலாதி சண்டை என்ற அர்த்ததிலை பாவிக்கிறவர்கள். சில கதைகளில் கூடப் படித்திருக்கின்றேன்.

//** என்னை நீர் எங்க பாத்தாலும் மட்டுக்கட்ட ஏலாது அப்பனே.//

ஏன் அவ்வளவு சின்னப்பொடியனோ!!!