Author: Keith Kiruthikan
•4:31 AM
எனக்குத் தெரிஞ்ச மட்டில ஒரு காலத்தில, அதாவது 1996க்கு முன் பருத்தித்துறை கூட எங்களுக்கு ஒரு வெளியூர் மாதிரி இருந்தது. அப்பா சைக்கிளில அல்லது ஏதேனும் அவசரம் எண்டால் மோட்டார் சைக்கிளில் பருத்தித்துறைக்குப் போவார். யாழ்ப்பாணம் போறது வெளிநாடு போறமாதிரி (எல்லாம் வெடிவால் முளைக்கும் வரைதான்). நான் அப்போ ஒருமுறைக்குமேல் போன அதிகதூரம், மந்திகை ஆஸ்பத்திரி. தம்பி பிறந்த போது ஒருக்கால், அக்காவுக்கு மகன் பிறந்த போது ஒருக்கால், மச்சளுக்கு மகள்கள் பிறந்தபோது இரண்டுதரம் என்று பத்து வயதுக்குள்ளாகவே நான்கு தரம் போய்வந்த இடம் மந்திகை ஆஸ்பத்திரிதான். அப்பா பருத்தித்துறையில இருக்கிற காணிக்கந்தோருக்குப் போய் வரும் நாட்களிலெல்லாம் அப்பாவின் வரவை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கும். ஏனெண்டால், அவர் வாங்கிவரும் கள்ளத்தீனுக்காக.

கள்ளத்தீன் எண்டால், கடையில வாங்கிச் சாப்பிடுற வடை, போண்டா, வாய்ப்பன் முதலான வீட்டில் செய்யப்படாத பொருட்கள். எங்கள் ஊரில் கடையில் வாங்கிச் சாப்பிடுகிற இடியப்பம், பிட்டு எல்லாமே கள்ளத்தீன் தான். இதனால அப்பா பருத்தித்துறையிலிருந்து என்ன வாங்கிவந்தாலும் அது கள்ளத்தீன் என்றே அழைக்கப்பட்டது. அப்பா பருத்தித்துறையிலிருந்து வாங்கிவரக்கூடிய கள்ளத்தீன்களில் சிறப்பானவை தோசை, வெள்ளையப்பம், தட்டவடை ஆகிய மூன்றும். உழுந்துவடை, பருப்புவடை, போளி போன்றன யாழ்ப்பாணம் போய்வரும்போது வாங்கிவருவார். வல்வெட்டித்துறைப் பக்கம் போனால் எள்ளுப்பா. இந்த உணவுகளைப் பற்றி கொஞ்சம் கதைப்போமே.

பருத்தித்துறை தோசையின் புகழுக்குக் காரணம், அதன் அளவு. சின்னவயதில் எனக்கெல்லாம் ஒரு தோசை சாப்பிட்ட இரண்டு நாளைக்கு நிற்கும். அநேகமாக இரண்டு வகை சம்பல் தருவார்கள். பச்சை மிளகாயில் அரைத்த பச்சைச் சம்பல் அல்லது வெள்ளைச் சம்பல் என்று அழைக்கப்படும் சம்பல் ஒன்று, மற்றது செத்தல் மிளகாயில் அரைக்கப்பட்ட உருது சம்பல் அல்லது சிவத்த சம்பல். இதோ, எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அதே போல் பருத்தித்துறை வெள்ளையப்பமும் ஒரு சிறப்பான விஷயம். எங்கள் அம்மா எத்தனை முறை முயன்றும் அந்த மென்மையும், சுவையும் வரவில்லை. வெள்ளையப்பத்துக்கான ஸ்பெஷலான சம்பலோடு ஒரு பதினைந்து வெள்ளையப்பம் உள்ளே இறங்கினாலும் வயிறு நிரம்பாது. அப்படி பூ போல இருக்கும் வெள்ளையப்பம்.

தட்டவடையும் அப்படியே. அந்த ருசியை எங்கள் வீட்டுப் பெண்களால் ஏனோ கொண்டுவர முடிவதில்லை. 2002க்குப் பின்னான சமாதான காலத்தில் ஊருக்குவந்த பெரிசுகள் எல்லாரும் கேட்டு வாங்கி வெளிநாட்டுக்குக் கொண்டு போனது பருத்தித்துறைத் தட்டவடையை தான். இதுவும் கணக்கில்லாமல் சாப்பிடத் தூண்டும் ஒரு போதை வஸ்து என்றே சொல்லலாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இரவில் சாப்பாட்டுக்குப் பின் இரண்டு பருத்தித்துறைத் தட்டவடையைக் கொறித்துவிட்டுப் படுத்தால் காலையில் வயிறு அற்புதமாகச் சுத்தமாகும். நம்வீட்டுப் பெண்கள் சுடும் தட்டவடையைச் சாப்பிட்டால்...ம்ஹூம் அதை எல்லாம் இங்க சொல்லமுடியாது.

இந்த உணவு வகைகள் பருத்தித்துறையில் பரவியிருந்த பல உணவகங்களில் கிடைத்தன. ஆனால் வெள்ளையப்பமும், தோசையும் உணவகங்களில் வாங்கிச் சுவைப்பதை விட, பருத்தித்துறையின் குறுக்குத் தெருக்களிலுள்ள வீடுகளின் மதில்களில் சின்னதாக ஓட்டை போட்டு, சின்னச் சின்ன கதவுகள் போட்டு பெரும்பாலும் காலை அல்லது மாலையில் கடைவிரிக்கும் அந்த ஊர்ப் பெண்களின் கையால் கிடைக்கும் தோசை அல்லது அப்பம்தான் சிறப்பானது. என்ன இவர்களின் சில கடைகளின் முன்னால் சாக்கடை ஓடும். அப்படியான கடைகளைத் தவிர்க்க வேண்டும். என்னுடைய ஊர் வாழ்க்கையின் கடைசிக் காலங்களில் அங்கே ‘ராஜா' உணவகம் என்று ஒருவரின் கடையில் இவையெல்லாம் சுத்தமாகக் கிடைத்தன.

ராஜாவும் இன்னும் சில உணவகத்தாரும் காலையிலேயே தோசை, வெள்ளையப்பம் விற்க ஆரம்பித்தார்கள். அப்போ அதிகாலையில் ரியூசனுக்குப் போகிறபடியால் வீட்டில் தரும் காசில் பருத்தித்துறையில் வாங்கி உண்ண ஆரம்பித்தோம் (பள்ளியும், ரியூசனும் பருத்தித்துறையில்தான் அமைந்திருந்தன). நாங்கள் காலையிலேயே வெள்ளையப்பம். தோசை எல்லாம் இறுக்கிவிட்டுப் போவது வழக்கம். அப்படியான நாட்களில் வகுப்பில் தூங்காமல் இருப்பதற்குப் படும் பாடுதான் அதிகம். ஒருமுறை நூலகத்தில் தூங்கி ரகுவரன் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் அதிகம். கொஞ்சக் காலம் போனதும் புரிந்தது, அந்தத் தூக்கம் பருத்தித்துறை தோசை அல்லது வெள்ளையப்ப மகிமை என்று. என்னதான் வாத்திமாரிடம் அடிவாங்கும் அபாயம் இருந்தாலும், தோசை, வெள்ளையப்பம் சாப்பிடும் அந்த அபாரமான அனுவத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் இன்னொருமுறை ஊர் மீளும்போது அந்த அபார அனுபவம் கிடைக்குமா என்பது சந்தேகம். யாராவது சமீபத்தில் பருத்தித்துறைப் பக்கம் போயிருந்தால் சொல்லுங்களேன்... தோசையும், வெள்ளையப்பமும், தட்டவடையும் இன்றைக்கும் விற்கிறார்களா??

This entry was posted on 4:31 AM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On July 30, 2009 at 7:25 AM , வர்மா said...

ப்ருத்தித்துறை தோசை,வெள்ளை அப்பம், வடை பிரபலமானதுதான்.அது தட்டைவடை அல்ல பருத்தித்துறை வடை என்றுதான் கூறுவார்கள். இதைப்பற்றி நானும் எழுதலாமென்றிருந்தேன்.முந்திவிட்டீர்கள். இப்பவும் தோசை, வடை அதேபோல்தானாம். பருத்துத்துறை வடையில் கறி சமைத்தால் அதுவும் தனிச்சுவைதான்.
அன்புடன்
வர்மா

 
On July 30, 2009 at 7:59 AM , வந்தியத்தேவன் said...

என்ன கீத் வரும்போதே கள்ளத்தீனுடனா வருவது. எங்கே சுட்டாலும் அந்த வடைக்குப் பெயர் பருத்தித்துறை வடைதான். ராஜா சுவைச்சோலை பின்னர் வெள்ளவத்தையிலும் சில நாட்கள் நடத்தினார். இடையில் நிறுத்திவிட்டார்கள். வல்லிபுரக்கோவிலில் ஆச்சிமார் சுடுகின்ற தோசையும் தாமரை இலையில் வைத்துச் சாப்பிடுவதும் இன்னொரு சுகானுபவம்.

 
On July 30, 2009 at 8:07 AM , வந்தியத்தேவன் said...

//ஒருமுறை நூலகத்தில் தூங்கி ரகுவரன் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் அதிகம்.//
அடப்பாவி கீத் போயும் போயும் நூலகத்தில் நித்திரைகொண்டிருக்கிறீர்களே, நாங்கள் எல்லாம் நடா சேர் கெமிஸ்ரி படிப்பிக்கும்போதே நித்திரைகொண்டுவிடுவோம், அதிலும் முதல் நாள் இரவு திருவிழாவில் கோஷ்டிபார்த்தால் அவ்வளவுதான். பள்ளியில் நித்திரைகொள்வதே எங்கள் தலையாய கடமை.

//பருத்தித்துறைப் பக்கம் போயிருந்தால் சொல்லுங்களேன்... தோசையும், வெள்ளையப்பமும், தட்டவடையும் இன்றைக்கும் விற்கிறார்களா??//

இன்றைக்கும் விற்கிறார்கள். பருத்துறை வடை, கச்சான் அல்வா, முறுக்கு, எள்ளுப்பாகு என்பன பொலித்தீன் பைகளில் அடைத்து விற்கிறார்கள்.

 
On July 30, 2009 at 9:37 AM , கீத் குமாரசாமி said...

வந்தி அண்ணா... நான் கூட கெமிஸ்ட்ரி வகுப்புக்கு ஒழிச்சுத்தான் நித்திரை கொண்டனான்... நாங்கள் ஒரு ஐந்து பேர்... அந்த மனிசன் என்னை எழுப்பி எச்சரித்த பின்னும் இன்னொரு ஆள் நித்திரை கொள்ள கூப்பிட்டு நல்ல சாத்து...
வல்லிபுரக் கோவில் அனுபவங்களையும் எழுதவேணும்.. ராஜா சுவைச்சோலை பற்றி புதிய தகவல் சொல்லியிருக்கீங்க நன்றி..

வர்மா: தட்டவடை கூடப் பருத்தித்துறையில் பிரபலம்தானுங்க

 
On July 30, 2009 at 7:35 PM , சினேகிதி said...

உங்கட வீட்டுப்பெண்களுக்கு தட்டவடை நல்லா வராட்டா ஆண்கள் செய்து பார்க்கிறது சிலநேரம் நல்லா வரும்.

மந்திகை ஆஸ்பத்திரிக்கு பக்கத்திலும் ஒரு கடையிருக்கு பெயர் மறந்து விட்டன் ஆனால் வடை நல்ல சுவையாகவிருக்கும்.

எங்கட வீட்டில எல்லாரும் அப்பம் தோசை வடை நல்லா செய்வினம் அதால எங்களுக்கு அதுகள் எல்லாம் கடையில போய்தான் சாப்பிடோணும் என்டில்லை ஆனால் எனக்குப் பிடிச்ச கள்ளத்தீன் கெளபி சுண்டல். அதென்னவோ வீட்டில செய்ற சுண்டல் கடைச்சுண்டல் மாதிரி வந்ததே இல்லை. ஒரு சரை சுத்தி கொஞ்ச கெளபி போட்டு தருவினம் ஆ ஆ நாவூறுது.

வல்லிபுரக்கோயில்ல இருக்கிற அந்தச் சாப்பாட்டுக்கடையில உண்மையாவே தோசை நல்லாயிருக்கும். திருவிழாக்குப் போனால் பாலுமாமா தோசை வேண்டித் தீத்தி விடுவார்.

 
On July 31, 2009 at 3:41 AM , மணிமேகலா said...

வணக்கம் கீத்.

உங்கள் வரவு நல்வரவாகுக!

சிட்னியிலும் அதற்குப் பெயர் பருத்தித்துறை வடை தான்.

இன்னும் ஒன்று உங்களூர் பிரசித்தம். பொரிவிளாங்காய் என்று நினைக்கிறேன்.அப்படி ஒன்று உண்டல்லவா? (நன்றாகத் தெரியவில்லை)

 
On July 31, 2009 at 4:45 PM , கானா பிரபா said...

வணக்கம் கீத்

கள்ளத்தீனியோடு கலக்கல் பதிவு. நிரம்ப ரசித்தேன். எனக்கு பருத்தித்துறைக்கு வந்த அனுபவம் கிடையாது ஆனால் அங்கே சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.

 
On August 8, 2009 at 12:34 PM , கீத் குமாரசாமி said...

பிந்தி வந்து பின்னூட்டம் இடுறதுக்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ..

சினேகிதி said..
///உங்கட வீட்டுப்பெண்களுக்கு தட்டவடை நல்லா வராட்டா ஆண்கள் செய்து பார்க்கிறது சிலநேரம் நல்லா வரும்.///
ஏங்க.. நாங்க நல்லா இருக்கிறது பிடிக்கலையா... அது சரி.. இங்க கனடாவில நாங்கள்தான் சமைக்கிறம்...ஊரிலெ பெம்பிளையள்தான் சமைக்கிறவை எண்டதால் அப்பிடிச் சொன்னனான்.. அதுக்கு ஆணாதிக்கம் அப்பிடி இப்பிடி எண்டு அர்த்தம் கொள்ளாதீங்கோ.. கௌபிச் சுண்டலோட நம்ம மாங்காய்ச் சம்பலை மறந்துட்டியளே சினேகிதி..கள்ளத்தீன் ருசி ருசிதான்..

மணிமேகலா said..
///இன்னும் ஒன்று உங்களூர் பிரசித்தம். பொரிவிளாங்காய் என்று நினைக்கிறேன்///
நிச்சயமாய்.. அதுவும் எங்கட ஊர்ப் பக்கம் அது ரொம்பவே பிரபலம்..

நன்றி பிரபா அண்ணா.. கருத்துக்கும் ஈழத்து முற்றத்தில் இணைத்ததுக்கும்... கனக்க கதைப்பம் இனி வரும் காலங்களில்

 
On December 3, 2012 at 12:45 AM , Thavachchelvi Rasan said...

இன்றும் இருக்கின்றன...