Author: வர்மா
•3:57 AM
பன்றித்தலைச்சி அம்மன், கீரிமலை, மாவிட்டபுரம் போன்ற ஊர்ப் பெயர்கள்
சரித்திரத்துடன் சம்பந்தப்பட்டன. அரசனின் மகளின் பன்றி முகம் போன்று
இருந்ததால் அவள் வழிபட்டு மனித முகமாகியதாகக் கூறப்படுகிறது. கீரிமுகம்
உடைய ருகுல முனிவர் சாபவிமோசனம் அடைந்த இடம் கீரிமலை, குதிரை முகம்
நீங்கிய இடம் மாவிட்டபுரம், பரந்தனில் விளையும் உப்பை வெளிநாட்டுக்கு
கொண்டு செல்ல மரக்கலம் சென்றுவர தொண்டமான் என்னும் மன்னன் அமைத்த
கால்வாய் தொண்டமானாறு.

சில ஊர்ப் பெயர் மரங்களை அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லியடி,
அரசடி, ஆலடி, வேம்படி, இலுப்பையடி, புளியடி போன்ற ஊர்கள் மரங்களை
அடையாளப்படுத்திவைக்கப்பட்டவை. சில இடங்களில் அந்த மரங்கள் இல்லை. ஆனால்,
பெயர்கள் நிலைத்து விட்டது

வவுனியா, மன்னார், வன்னி ஆகிய மாவட்டங்களில் குளங்களின் பெயரையும்,
காடுகளின் பெயரையும் வைத்து ஊர்ப்பெயர்கள் உள்ளன. பாண்டியன் குளம்,
செட்டிகுளம், கூமாங்குளம், நெடுங்குளம், மாங்குளம், குஞ்சுக்குளம்,
குருமன்காடு போன்று பெயர்கள் உள்ளன.
இதேபோல், மலையகத்தில் பல இடங்களில் அப்பகுதி தோட்டங்களின் பெயர்களே அவ்
ஊர்களின் பெயர்களாக அலங்கரிக்கின்றன. இரட்டைப்பாதை, கல்தெக்க பத்த
(இரண்டு கல்லடிப் பாதை) போன்றனவாகும்.

சங்கிலிமன்னன் ஞாபகார்த்தமாக சங்கிலியன் தோப்பு உள்ளது. யானை கட்டப்பட்ட
இடமாகையால் ஆனைக்கோட்டை என்பார்கள். இலங்கையே ஒரு தீவு, இலங்கையைச்
சுற்றி தீவுகள் உள்ளன. நெடுந்தீவு, மண்டைதீவு, அனலைதீவு, பாலைதீவு,
காரைதீவு காரைதீவை இப்போது காரைநகர் என்கிறார்கள்.

வடமராட்சியில் திக்கம் என்ற கிராமம் உள்ளது. பனாட்டுக்குப் பெயர்பெற்ற
அந்த ஊ ரில் வெள்ளைக்காரர்கள் பனாட்டைக்கடித்த பின் "திக்கம்'
என்றார்களாம்.
மட்டக்களப்பில் ஓட்டமாவடி, தம்பிவிலுவில், துரைவந்திமேடு என்ற ஊர்கள் உள்ளன.

வெள்ளைக்காரர் காலத்தில் சில பெண்கள் தண்ணீர் அள்ளிக்கொண்டு வருகையில்
இருட்டிவிட்டதாம். அப்போது எதிரில் வெள்ளைக்காரர் வந்தபோது ஓட்டமாவாடி
என்றார்களாம். அன்றிலிருந்து அந்த இடம் ஓட்டமாவடி என்றாகியதாம்.
வெள்ளைக்காரத் துரை ஹெலியில் வந்து இறங்கிய இடம் துரைவந்து இறங்கிய மேடு.
காலப்போக்கில் மருவி துரைவந்த மேடு ஆகியதாம்.

இராமாயண காலத்திலே இலக்குவனைப் பார்த்து தம்பி இழு வில் என்று ராமன்
கூறிய இடம் தப்பிலுவில் ஆகிறதாம்.

யாழ்ப்பாணப் பஸ் நிலையத்தில் நின்ற பஸ் ஒன்றின் சில்லில் மிதித்து ஒருவர்
ஏற முற்பட்டு விழுந்தாராம். ஏன் சில்லாலை ஏறினாய் என்று நடத்துடன்
கேட்டபோது நீ தானே சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை ஏறு என்று சொன்னாய்
என்றாராம். கே.எஸ்.பாலச்சந்திரனின் அண்னை தனி நடிப்பில் முழு இலங்கையையும் சிரித்து
மகிழ்ந்த காட்சி அது.

அதேபோல் யாழ்ப்பாணத்தில் குப்பிளான் எனும் ஊர் உள்ளது. அங்கு புகையில்
செய்கை அதிகம் இடம்பெறும். வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் அங்கு
புகையிலை நடுவதற்காக பாத்தியாக நிலத்தை அமைத்த போது அதை கண்ட
வெள்ளைக்காரர் விளக்கம் கேட்க அது தண்ணீர் ஓடாது நிற்கவே அவ்வாறு
செய்வதாக கூறினார். அதற்கு அவர்கள் குட் பிளான் என ஆங்கிலத்தில் கூறிய
வார்த்தை மருவி தற்போது குப்பிளான் ஆகியது.

அதேபோல், பூநாறிமடம் எனும் ஓர் இடத்திற்கு அந்த மடத்தின் அருகில் உள்ள
மரம் ஒன்றில் பூ விலிருந்து வரும் வாசனை துர்நாற்றம் வீசுவதுபோல்
இருக்கும். இதனால் அந்த இடத்திற்கு பூநாறி மடம் என்று பெயர் வந்தது.

காட்டின் பெயருடன் சில ஊர்களின் பெயர்கள் உள்ளன. வவுனியாவில்
குருமன்காடு. தென்னிந்தியாவின் கொச்சியில் இருந்து வந்தவர்கள் கொழும்பில்
கடைபரப்பிய இடம் கொச்சிக்கடை. அங்கிருந்து வந்த மிளகாயை சிங்களத்தில்
கொச்சிக்காய் என்பார்கள்.

கோழிக்கோட்டில் இருந்து வந்த வாழைப்பளத்தை சிங்கள மக்கள் கோழிக்கோடு
என்பார்கள். மைசூரில் இருந்துவந்த பருப்பைமைசூர் பருப்பு என்றார்கள்.

மடு, மோட்டை போன்றவை இருப்பதனால் சேமமடு, இரணைமடு, பாலமோட்டை,
நொச்சிமோட்டை எனவும். தந்தை செல்வாவின் ஞாபகார்த்தமாக
செல்வபுரம் உடுப்பிட்டியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ராஜலிங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட கிராமம் ராஜகிராமம்.

ஊர்ப்பெயரைப் பிரபலப்படுத்துவதில் எழுத்தாளர்கள் பெரும்பங்கு
வகிக்கின்றனர். சில்லையூர் என்று வேறு சிலரும் பெயருடன் இணைத்து எழுதினாலும் சில்லையூர் என்றதும் செல்வரா ஜனின்
பெயரே மனதில் பதியும்.

அதேபோல் காரை. சுந்தரம்பிள்ளை, அல்வையூர் கவிஞர்.மு.செல்லையா, மாவை
வரோதயன், கல்லாறு சதீஷ், வடகோவை வரதராஜன், காவலூர் ஜெகநாதன், லுணுகலை
ஸ்ரீ, தெளிவத்தை ஜோசப், வதிரி சி.ரவீந்திரன் வாகரைவாளன் , தாளையடி
சுபாரத்தினம் செம்பியன் செல்வன் போன்றவர்கள் ஊர்ப்பெயருடன் வலம்வரும்
எழுத்தாளர்கள்.
This entry was posted on 3:57 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On March 10, 2011 at 5:24 AM , கலை said...

என் பங்குக்கு ஒரு ஊர்ப்பெயர். கோடி கமம் மருவி வந்தது கொடிகாமம்.

 
On March 10, 2011 at 5:25 AM , பாரத்... பாரதி... said...

ஊர் பெயர்களின் பின்புலத்தை சுவாரஸியமாக விளக்கி இருக்கிறீர்கள். புதிய தகவல்கள் நிறைந்த தொகுப்பு..

 
On March 10, 2011 at 9:15 AM , செயபால் said...

//வெள்ளைக்காரத் துரை ஹெலியில் வந்து இறங்கிய இடம் துரைவந்து//
ஹெலி வந்தது இப்ப கிட்டடியில. அதனால இந்தப் பேர் வந்த காரணம் சரி மாதிரித் தெரியேல்லை. இது போல் வேறு சில தகவல்கள் சரி மாதிரித் தெரியேல்லை (குப்பிளான்). ஆகவே எழுதுவதை பொருட் குற்றம் இல்லாமல் எழுதப் பாருங்கோ.

 
On March 10, 2011 at 9:17 AM , வடலியூரான் said...

நல்லதொரு ஆராய்ச்சி வர்மா அண்ணா.கன ஊர்களுக்கான அர்த்தங்களை இப்போது தான் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது..எனது பங்குக்கு -
புலோலி - புலவர் + ஒலி கேட்குமிடம்
வியாபரிமூலை - வியாபாரிகளின் + மூளை

 
On March 10, 2011 at 9:39 AM , வி. ஜெ. சந்திரன் said...

//என் பங்குக்கு ஒரு ஊர்ப்பெயர். கோடி கமம் மருவி வந்தது கொடிகாமம்.//

எனக்கு யாரோ கொடிய + காமம் = கொடிகாமம் என்று சொல்லியதாக ஞாபகம்

 
On March 10, 2011 at 10:30 AM , koomagan said...

Thank you for you to add my brother's name VADAKOOVAI VARATHARAJAN.

 
On March 10, 2011 at 12:57 PM , இக்பால் செல்வன் said...

நல்லதொரு பதிவு, ஆனால் பல ஊர்ப்பெயர்களின் உண்மையான அர்த்தத்துக்கு மேலாக மக்களின் செவிவழிக் கதைகளும், காரணங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றது. உண்மையான பெயர் ஆராய்ச்சித் தகவல் கொடுத்தால் நலம். செவிவழிக் கதைகள் ஆராய்ச்சி செய்து வெளியிடவேண்டியவை. அப்படியே எடுத்தாள முடியாது. யாழ்ப்பாணத்தில் பல ஊரின் பெயர்கள் சிங்கள் வேர்ச் சொல் நிரம்பி இருப்பதை பல ஆய்வாளர்கள் உறுதிச் செய்துள்ளனர். உதா. வலிகாமம் என்பது வெலி காம என்னும் சிங்கள்ச் சொல் ஆகும். வெலி காம என்றால் மணற் கிராமம் என்றுப் பொருள். அந்தப் பகுதிகள் மணற்பாங்கான பகுதிகள் என கண்டுபிடித்தும் உள்ளனர்.

 
On March 10, 2011 at 1:57 PM , மணிமேகலா said...

நல்ல சிந்தனை வர்மா.

இதனைப் படித்த போது ஒரு பாடல் ஒன்று ஞாபகம் வந்தது.முத்துக் குமார கவிராசர் (சுன்னாகத்தைச் சேர்ந்தவர்)என்ற ஈழத்துப் புலவர் இந்தப் பாட்டைப் பாடி இருக்கிறார். பொருத்தமும் தகவலும் கருதி இதனைப் பகிர்ந்து கொள்கிறேன்.

“முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
முந்தித் தாவடி கொக்குவின் மீதுவந்
தடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத்
தானைக் கோட்டை வெ ளிகட் டுடைவிட்டாள்
உடுவி லான்வர பன்னாலை யான்மிக
உருத்த நன்கடம் புற்றமல் லாகத்தில்
தடைவி டாதனை யென்றுப லாலிகண்
சார வந்தனன் ஓரிள வாலையே”

மாவிட்டபுரத் திருவிழாவின் போது சுவாமியின் பவனியை வர்ணிப்பதாக மறைமுகக் கருத்தையும் வெளிப்புறமாக ஊர்களின் பெயரையும் கொண்டிருக்கின்ற பாடல் இது.

(காலம் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி 19ம் நூற்றாண்டின் முற்பகுதி)

இது மாதிரி இன்னொரு பாடலும் இருக்கிறது.

சுருக்கம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.

பதிவுக்கு நன்றி வர்மா.

 
On March 10, 2011 at 2:09 PM , வந்தியத்தேவன் said...

நல்லதொரு பதிவு, பெரும்பாலான ஊர்களுக்கு வழங்கப்படும் காரணப் பெயர்கள் கர்ணபரம்பரைக் கதைகளாகவே இருக்கின்றது.
எங்கடை ஊர் வதிரியில் கோட்டைத் தெரு என்ற இடம் இருக்கின்றது, அங்கே சோழர் கால நாணயம் சில வருடங்களுக்கு முன்னர் எடுத்தார்கள்.

மணியாச்சி உந்தப் பாட்டை நானும் ஒருமுறை எங்கேயோ வாசித்த ஞாபகம், கொஞ்சம் பெரியபாடல் என நினைக்கின்றன்.

உந்தச் சில்லாலைப் பகிடிபோல தான் கொழும்பிலை ஒரு தமிழர் பொரளைக்கு போக வெள்ளவத்தையில் நிற்க பொரளைக்குப் போற 154 இலக்க பஸ் வந்ததாம் அவரும் ஏற வெளிக்கிட கண்டெக்டர் போரளை போரளை என கூவ அவரோ அந்த பஸ் போகாது என நினைத்து ஏறவில்லையாம், உண்மையா நடந்தகதையோ இல்லை சும்மா பகிடியோ தெரியாது.

 
On March 10, 2011 at 6:59 PM , Mahi_Granny said...

சென்னை ரஸ்தாளி இத்தனை வருடங்கள் கழித்தும் எனக்கு கோழிக்கோடு தான் . கொச்சிக்கடை தகவல் புதியது. நல்ல பகிர்வு .

 
On March 11, 2011 at 1:25 AM , கலை said...

//எனக்கு யாரோ கொடிய + காமம் = கொடிகாமம் என்று சொல்லியதாக ஞாபகம்//

இது தவறானது. ஆக்கள் வம்புக்கு சொல்லுற பேர்தான் இது. கொடிகாமத்தில் ஆரம்ப காலங்களில் மிக அதிகளவில் வேளாண்மைக்கு (கமம்) உட்பட்ட நிலம் இருந்ததே 'கோடி கமம்' என்ற பெயர் வரக் காரணம்.

//“முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி"//

இந்தப் பாடல் அப்பா எனக்கு சொல்லித் தந்திருக்கிறார். :)

 
On March 13, 2011 at 11:57 AM , KOOMAGAN said...

Hi varma
Thank you very much to add my brother's name vadakovai varatharajan.
Yarlpannam=The place gave as donation to yarl panan.
Kopay= koo(cow) jumped ^please.
Neervely=water around the please.
If it wrong corect me please