Author: யசோதா.பத்மநாதன்
•9:24 PM
-பாடலூடாக ஒரு பயணம் -


உங்களில் அனேகமானோருக்கு தங்கத் தாத்தா.நவாலியூர் சோம சுந்தரப் புலவரைத் தெரிந்திருக்கும்.அவர் 1880ம் ஆண்டு ஆனி மாதம் 12ம் திகதி பிறந்தவர்.சிறுவர்களுக்காக அவர் பாடிய, ’ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம்’ என்ற பாடலும் ’கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா’ என்ற பாடலும் ’பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்’ என்ற பாடலும் அவரை எங்களுக்கு நன்றாக ஞாபகப் படுத்த வல்லவை.


அவருடய கண்களினூடாக கொழும்பில் இருந்து வன்னியூடாக யாழ்ப்பாணம் போவோம் வாருங்கள்.



இப்போது நாம் நிற்பது கொழும்பு மாநகர்.இது நாம் புறப்படப் போகிற இடம்.காலை வேளை.கொழும்பு மாநகர் களையோடு திகழ்கிறது.நெய்தல் கரையோரம்.எல்லோரும் மக்களையும் மாளிகைகளையும் கடைகளையும் தான் கண்டு களிப்பர். இவருக்குத் தெரிவதோ கடற்கரை.கடலுக்கருகில் இருக்கிறது இந்தக் கரையோரப் பட்டினம் இவருக்கு இப்படிப் புலப்படுகிறது என்று பாருங்கள்.ஒரு கடற்க் காட்சி விரிகிறது இப்படி.

‘கலைப் பட்டினம் கரைப் பட்டினம்
கலப்பட்டினம் பெருமை
தலைப்படினம் வரை பட்டிடாத்
தலைப்பட்டினம் கொழும்பு’

கலைப் பட்டினம் கலைகள் மலிந்திருக்கிற பட்டினம்.அது ஓரு கரையோரப் பட்டினம்.கலப் பட்டினம்-அதாவது மரக் கலங்கள் நிறைந்திருக்கின்ற பட்டினம்.தலைப்பட்டினம் பெருமை தலைப்பட்டிரா பட்டினம்.அதாவது தலைப்பட்டினம் இனங்கள் கலப்புற்றும் பெருமை தலைக்கேறாத பட்டினம்.இதற்குப் பெருமை சொல்ல ஒரு பட்டினம் இல்லாத பெருமைக்குரிய பட்டினம். அது கொழும்பு தலைப்பட்டினம் என்கிறார் அவர்.

இந்தத் தலைப்பட்டினத்தில் இருந்து பேருந்து புறப்படுகிறது.செழிப்பான தென்பகுதியில் இருந்து பேருந்து புறப்படுகிறது. செழிப்பான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு வருகிறார் தங்கத் தாத்தா.அங்கே ஒரு காட்சி;பாடலில் விரிகிறது இப்படி;


‘சரிந்த வேங்கை முரிந்த கோங்கு
நகர்ந்த சாந்து விழுந்த வேய்
இரிந்த மிருகமெழுந்த பறவை
இழிந்த அருவி கழிந்தவே’

மங்கலந் திகழ் மாப்பிள்ளைமார் வர
மாமன் பக்கம் வரவெதிர் கொள்ளல் போல்
பொங்கும் வெள்ளப் புது மண நீர் வர
புரளு மீனிரை போயெதிர் கொள்ளுமே’



சரிந்து விளங்குகின்றன மலைகள்.அங்கே மலையின் பக்கமாக கோங்குகள் முறிந்து விழுந்து கிடக்கின்றன.அதற்கப்பாலே சந்தன மரங்கள் மூங்கில் காட்டின் பக்கமாக சாய்ந்து வளர்ந்துளள்ளன.அதற்குள் இருந்து மிருகங்களின் குரல் எழுகிறது.அதைக் கேட்டு பறவைகள் எழுந்தோடுகின்றன.இவற்றை எல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டு அருவி நுரை புரள மலையிலிருந்து கீழிறங்கி வருகிறது.

அவ்வாறு விழுகின்ற அருவியைப் பார்க்கின்ற போது எப்படி இருக்கின்றதென்றால் மங்கலத்துக்குரிய மாப்பிள்ளைமார் வர மாமனார் பக்கம் வந்து எதிர்கொண்டழைப்பதைப் போல பொங்கிக் கரைபுரண்டோடும் புது மணல் நீரினை மீன் கூட்டம் போய் எதிர் கொள்கின்றனவாம்.இவ்வாறு செழிப்புற்றிருக்கிறது பூமி.பச்சைப் பசேல் என்று செழித்தோங்கியுள்ள பசுமையான மரங்கள். பெறுமதி மிக்க மரங்களும் கூடவே. அந்தச் செழிப்பின் நடுவே ஓரருவி. கரைபுரண்டு வெள்ளம் பாய இயற்கை தன் வனப்பை எல்லாம் கொட்டி வைத்திருக்கிறது அங்கே.

நாம் அவற்றை எல்லாம் தாண்டி வருகிறோம்.இப்போது காட்சி மாறுகிறது.வரண்ட மண்ணினூடு அனுராதபுரக் காடு வருகிறது.அது வரட்சியையும் கூடவே இழுத்து வருகிறது.



மனித நடமாட்டங்களும் குறைந்து போய் விட்டது. அது இன்னும் இயற்கையின் காட்டு வனப்பு முழுமையாக சூழ்ந்திருக்கிற தேசப்பரப்பு. வனத்தின் ஆரம்பம் இங்கு தான் இருக்கிறது.மெல்ல மெல்லக் காடுகள் கண்களுக்குப் புலனாகின்றன.ஆங்காங்கே குரங்குகள் தாவித் திரிகின்றன.அவை எதனையோ தேடித் திரிவதைப் போல தோன்றுகிறது. கொஞ்சம் பொறுங்கள் அது பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்கிறது.ஒரு குரங்கு இதோ ஒரு பெண்னை நெருங்கி வருகிறது.



‘வண்னானின் மொழி கேட்டு
வனம் விடுத்த சீதை தனை
இந் நாளும் தேடுதல் போல்
இக்குரங்கு நெருங்கிடுமே’

பெண்ணே கவனம். முன்பொருமுறை வண்ணான் ஒருவர் கதைத்த ஒரு சிறு சொல்லினால் தீக்குளித்து கற்புள்ளவள் என்று நிரூபித்து வருமாறு இராமனால் வனத்துக்கு அனுப்பப் பட்ட சீதையினை தேடுவதைப் போல இக் குரங்குகள் வருகிற பெண்களைப் பார்த்துத் திரிகின்றன.

நாம் சற்றே அவர்களிடம் இருந்து தப்பி சற்றே அப்பால் நகருவோம். மாங்குளம் இதோ வந்து விட்டது. அதுவும் காடுதான்.அது மிருகங்கள் சூழ்ந்திருக்கின்ற காடு. அங்கே

‘காமர் நெடுங் காட்டினிலே
காணுமொரு மாபுதினம்
மாமரைகள் ஒலி கேட்டு
தாமரைகள் ஆயினவே’


பெரிய மரைகள்(மானைப் போன்ற ஒருவகை ஜாதி)அவை சத்தம் வைக்கின்றன. அதனால் ஏனைய மரைகள் தா - மரை; தாவுகின்ற மரைகள் ஆகிவிட்டன.இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு போகின்ற போது இதோ முறிகண்டி வந்து விட்டது.பேரூந்து நிறுத்தப் பட்டு விட்டது.பிள்ளையாரை தரிசித்து சற்றே சிரம பரிகாரம் செய்த பின் தான் பேருந்து நகரும்.நாம் இனி சற்றே இறங்கி, கால் கைகளை நீட்டிச், சற்றே சிரம பரிகாரங்களையும் செய்து தண்ணீரில் கால்முகம் கழுவிப் பிள்ளையாரை தரிசிப்போம்.




‘முன்னவன்செங் கைத்தனுவிற்
பாரதத்தைப் பொறித்த
முறிகண்டி வாரணத்தின்
முளரடி பணிவாம்’

இனி யாழ்ப்பாணம் கொஞ்சத் தூரம் தான்.இதோ பளை வருகிறது; பனை தெரிகிறது.பனை தெரிந்தாலே யாழ்ப்பாணம் வருகிறது என்று தானே அர்த்தம்.


கோணிலைகள் மாறிமழை வாரிவறந் தாலும்
கொடியமிடி வந்துமிக வேவருத்தினாலும்
தாணிழ லளித்துயர் கலா நிலைய மேபோல்
தந்துபல வேறு பொருள்தாங்கு பனையோங்கும்’

கோணிலை - கோள் நிலை.கோள்நிலைகள் மாறி மாரிமழை வரத் தவறினாலும் மிடி - வறுமை. கொடுமை மிக்க வறுமை வந்து மிக வருத்தினாலும் தான் நின்று நிழல் அளித்திடும் கலா நிலையத்தைப் போல பல பொருட்களைத் தந்து எங்களைக் காக்கும் பனை இதோ வந்து விட்டது என்பது பாடலின் பொருள்.

சரி அவற்றை எல்லாம் பார்த்தபடி இதோ யாழ்ப்பாணம் வந்து விட்டோம்.யாழ்ப்பாண பட்டினத்தின் சிறப்பென்ன தெரியுமா? அது ‘எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பது போல பொன்னைப் போல சிறப்புற்றுத் திகழும் இலங்கைக்கு சிரசினைப் போல இருக்கிறது யாழ்ப்பாணம்.அது புண்ணிய பூமி.பாருங்கள் பாடலை,




‘எண்சாணுடம்பினுக்குச் சென்னி சிறந்திடும்
என்றே உரைப்பரது போல
பொன் சேரிலங்கை சிரமெனவே வரும்
புண்ணியமோங்கிடும் யாழ்ப்பாணம்’

இப்போது யாழ்ப்பாணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ஒருவாறு புலப்பட்டிருக்கும்.எண்சாண் உடம்புக்குச் சிரசினைப் போல இலங்கைக்கு யாழ்ப்பாணம் விளங்குகின்றது. அங்கே புகழ் பெற்றிருக்கிறது நல்லூர் கந்த சுவாமி கோயில். அங்கு வருவோர் எல்லாம் கந்தனைத் தரிசிக்காமல் செல்வதில்லை. வாருங்கள் சென்று நாமும் தரிசிப்போம்.

‘முன்னம் புவனேக வாகு மணி நல்லை
முன்னி வகுத்திடும் வேற் கோட்டம்
மன்னு முயிர்கட் கிருவகை நோய்கட்கும்
மருந்து கொடுக்கும் அருட் கோட்டம்’

முன்னம் - முன்னுதல் எண்ணுதல்.முன்னர் புவனேக பாகு என்ற மன்னன் நல்லையிலே அமைத்திட்ட வேல் கோட்டம். மண்ணிலே வாழுகின்ற உயிர்களுக்கு இருவகையான நோய்கள் வருவதுண்டு.ஒன்று உடல் நோய். மற்றயது ஆண்ம நோய்.அவ்வகையான இருவகை நோய்களுக்கும் மருந்து கொடுக்கும் அருள் கோட்டம் நல்லூர்.என்பது பாடலின் பொருள்.



இந்த நல்ல நாளிலே திருவிழாக் கொண்டாட்டத்துக்கு வருகின்ற பக்தர்களைப் போல ஈழத்து முற்றத்துக்கு நட்சத்திர அந்தஸ்து பொலிந்திருக்கின்ற இந் நன் நாளிலே இங்கு வருகிற எல்லோருக்கும் யாழ்ப்பாணத்து நல்லைக் கந்தனின் அருள் சித்திப்பதாக!

(பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்களின் இலக்கிய வழி என்ற நூலில் இருந்து சம்பவங்கள் எடுத்தளப் பட்டுள்ளன. படங்கள் கூகுள் இமேஜ்.இரண்டுக்கும் நன்றிகள்)!
This entry was posted on 9:24 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On March 8, 2011 at 11:13 PM , சஞ்சயன் said...

மிக அருமையான பதிவு பிரபா. ரசித்தேன்.

 
On March 9, 2011 at 3:09 AM , மாதேவி said...

பாடலுடன் பயணம் இனிக்கிறது.

 
On March 9, 2011 at 5:27 AM , வர்மா said...

மறந்துபோனபாடல்கள் சிலஞாபகம்வந்தது.புதியபாடல்கள்சிலதெரிந்துகொண்டேன்.
அன்புடன்
வர்மா

 
On March 9, 2011 at 6:41 AM , கலை said...

நல்ல பயணம்.

 
On March 9, 2011 at 9:17 AM , Muruganandan M.K. said...

மண் மணமும்
கவியழகும் கைகோர்க்கும்
அருமையான பதிவு.
முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

 
On March 10, 2011 at 7:22 AM , வடலியூரான் said...

வித்தியாசமானதொரு முறையில் மிக அழகான தொரு பதிவு பின்னப்பட்டிருப்பது சிறப்பு.

 
On March 10, 2011 at 1:54 PM , வந்தியத்தேவன் said...

எனை ஆச்சி படங்களும் பதிவுகளும் சோக்காயிருக்கெனை உதுக்குத்தான் சில பெரிசுகள் முற்றத்துக்குத் தேவை,

சின்னனிலை கோச்சியிலை வரேக்கை அம்மா பளைவந்தவுடன் எழுப்பிப்போடுவார், நாங்கள் வடமராட்சியார் கொடிகாமத்தில் இறங்கி பிறகு தட்டிவானில் நெல்லியடிக்கு போறாக்கள். அதாலை பளை என்றாலே ஏதோ பக்கத்து ஊரைப்போல இருக்கும்.