Author: யசோதா.பத்மநாதன்
•4:18 AM


என்ன எல்லாரும் களைச்சுப் போனீங்களோ? ஒருதற்ற சிலமனையும் காணேயில்ல.நான் தான் ஏலாதனான். நாரீக்க பிடிச்சுக் கொண்டுது எண்டா உங்களெல்லாருக்கும் என்ன நடந்தது? கலியாண வீடு நடத்தின களையாக்கும்.சரி சரி வாருங்கோ.கலியாணவீட்டுச் சாப்பாடும் கறியளும் அப்பிடியே கிடக்கு.வாற எண்டு சொன்ன கன பேர் வராமல் போட்டினம்.எதிர் பாராமல் கொஞ்சப் பேர் வந்து கலக்கிச்சினம்.

சரி,எல்லாரும் ஆளுக்கொரு பூவரசு இலையள அல்லாட்டில் கட்டி வச்ச அந்த வாழை இலயள் அங்கனேக்க இருக்கும் அதில கொஞ்ச இலத் துண்டுளக் கிழிச்சுக் கொண்டு வாருங்கோ.குழையல் ஒண்டு போட்டா சாப்பிட்டதுமாகுது;இயத்துகளையும் மினுக்கப் போட்டிடலாம்.இல்லாட்டில் உந்தக் கிடாரங்கள் பெரிய இடத்தையும் பிடிச்சுக் கொண்டு அது ஒரு பெரிய ஆக்கினை.

வந்தி, கிட்ட வந்து இதப் பிடியடா மோன. எங்க மசிஞ்சு கொண்டு நிக்கிறாய்? இந்தா ரண்டு மிளகாய் பொரியலையும் எடு. எல்லாரும் இப்பிடி கூடி இருந்து சாப்பிடுற நாள் இனி எப்ப வருமோ? வரேக்க நான் இருப்பனோ என்னவோ!ஹேமா எங்க போட்டாள்? சினேகிதிய இனிக் கண்ணாலயும் காணக் கிடைக்காது.உந்தப் புதுசா வந்த பிள்ளயளயும் ஒருக்கா பிடிச்சுக் கொண்டு வாருங்கோ.பிரவா,பலகையப் போட்டிட்டு இரு மோன.இந்தா இன்னும் எப்பன் பிடி.வெளிநாடெண்டு போனது தான் மிச்சம்.பலகையில இருக்கிறதே பெரும் பாடாப் போச்சுது.பூச்சுக் கொட்டுண்ட இந்த நாற்சார வீடு மாதிரி எங்கட வாழ்க்கையும் போய் முடிஞ்சா இனி ஆர் வரப்போயினம்.குழையல் சோறெண்டாலே என்னெண்டு தெரியாமல் வளருதுகள் இப்பத்தய பிள்ளயள்.ஏதோ இருக்கிற காலம் கொஞ்சம், இருக்கேக்க சந்தோசமா இருக்க வேணும் அவ்வளவுதான்.

மெய்யே மோன!கலியாண விட்ட திறமா நடத்தி முடிச்சிட்டாய்.சந்தோசம்.இனி நீங்கள் எல்லாரும் நாளைக்கோ நாளையண்டைக்கோ பயணப் பட்டிடுவியள்.வீடும் வெறிச்சோடிப் போகப் போகுது. அடிக்கடி இந்த முற்றத்துக்கு வந்து ஒண்டிரண்டு பதிவையாவது போட்டிட்டு போங்கோ என்ன? ராசா, இன்னும் கொஞ்சம் பிடியன்.நன்னிக் கொண்டிருக்காமல் வடிவாச் சாப்பிடுங்கோ.ஹேமா, இந்தா இன்னுமொரு கவளம் பிடி.

சரி வரத்தான் முடியாட்டிலும் ஒரு பின்னூட்டமாவது போடக் கூடாதே? உதென்ன கண்டறியாத பழக்கம் பழகி வச்சிருக்கிறியள்? உது எங்கத்தய பழக்கம்? உது தானோ வெளி நாடு உங்களுக்குச் சொல்லித் தந்தது? அட, இந்த நாட்டுப் பிள்ளயளுமெல்லே இப்ப அதப் பழகி வச்சிருக்குதுகள்.இந்த வடலிப் பிள்ள இங்கனேக்க ஓடித் திரிஞ்சு கொண்டிருந்தான். இப்ப அவனையும் காணக் கிடைக்குதில்ல.எங்கட ஊர் பிள்ளயள் எல்லே நீங்கள்! நாங்கள் ஒரு குடும்பம்.அத மறந்து போகப் படாது.இப்ப புதுச் சொந்தம் சேந்திருக்கு அவையையும் உங்களோட சேத்துக் கொள்ளுங்கோ.சரி, முடிஞ்சுது. இது தான் கடசி உருண்டை. ஆருக்கு வேணும்?

சரி,கையளயும் வாயையும் கழுவிக் கொண்டு வாருங்கோ உதில இருப்பம்.பாயளயும் தலகாணியளயும் உந்தக் கரையில விரிச்சு விட்டா சின்னனுகள் படுத்திடுங்கள்.பிள்ள அதுகள ஒருக்கா பார் மோன.உந்த குஞ்சன் குருமனுகள் எல்லாம் உது வழிய ஓடித் திரிஞ்சதுகள் வடிவாச் சாப்பிட்டவையோ தெரியாது. பாத்து சாப்பிடாத ஆக்களுக்கு அங்க குசினிக்க காச்சின பால் இருக்குது அதில கொஞ்சம் ஆத்திக் குடுத்து விட்டா நல்லது.பிள்ள, கையோட அதயும் ஒருக்கா பாத்திட்டு வந்திட்டியெண்டா நல்லது.

உந்தக் கோடிக்க எரியிற லைட்டுகளயும் ஒருக்கா கையோட நூத்துப் போட்டு வா பிள்ள. சும்மா வீணா எரிஞ்சு கொண்டு கிடக்குது.கதவுகளையும் பூட்டி விடு.இருட்டுப் பட்ட நேரம்.

சரி வா,வா. இதில வந்து இரு மோன.எல்லாரும் கலியாண விட்டோட நல்லா களைச்சுப் போனியள்.எண்டாலும் சும்மா சொல்லப் படாது.எல்லாத்தையும் வலு கலாதியா நடத்தி முடிச்சுப் போட்டியள். அதில எனக்கு வலு சந்தோசம். வராத ஆக்களுமெல்லே வந்து கலியாணத்தச் சிறப்பிச்சுப் போட்டினம்.

எனக்கு மோன ஒரு கவல.அதச் சொல்லாட்டில் எனக்கு மனம் பறியாது.முந்தின காலத்தில கலியாண வீடு முடிஞ்சா முடிஞ்சு போற கையோட வந்தாக்களுக்கு ஒரு வெத்திலப் பை குடுத்து விடுறவை. அந்த வெத்திலப் பை எப்பிடி இருக்கும் சொல்லுங்கோ பாப்பம்? சும்மா பேப்பர் பைதான். ஆனா அதில நிறைகுடம் குத்துவிளக்குப் படம், கலியாணத் தம்பதியளின்ர பேர், கலியாணம் நடந்த திகதி எல்லாம் போட்டிருக்கும்.அதுக்க வெத்தில,பாக்குச் சீவல் எல்லாம் போட்டிருக்கும்.பலகாரப் பை அது பிறிம்பு.அப்பிடியும் ஒரு காலம் இருந்துது.சரி அதவிடு, நான் என்ர கவலையச் சொல்ல வந்திட்டு என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறன்.

எனக்கு என்ன கவலை எண்டா, வீடியோ படம் ஒருத்தரும் காட்டயில்ல.இந்தப் புதுப் பிள்ளயள் எல்லாம் வந்து கலாதியா நகைச்சுவை, கவிதை, கதை, அனுபவம்,ஆக்கள், பூக்கள்,அது இது எண்டு எல்லாம் நல்லாத் தான் இருந்தது.ஆனா,கலியாண வீட்டில ஒரு படம் கிடம் ஒண்டும் வரக் காணேயில்ல.பாத்தியே அத நாங்கள் துப்பரவா மறந்தெல்லே போயிட்டம்.உந்த வெளிநாடெண்டு போன பிள்ளயள் என்ன திறமா அதுகளப் படம் எடுத்திருக்குதுகள்.இஞ்ச பாரன்.

எப்பிடி எல்லாம் வாழ்ந்திருக்க வேண்டிய பிள்ளயள்!ஏதோ ஒரு கண் காணாத தேசத்தில போயிருந்து கொண்டு ஊர மறக்காமல் எப்பிடி இதை எல்லாம் செய்திருக்குதுகள் எண்டு கேட்டுப் பாருங்கோ.அதில வாற படங்கள் ஊர அப்பிடியே கொண்டு வந்து முன்னால நிப்பாட்டுது பாருங்கோ.

வெளிநாட்டுக்குப் போன எங்கன்ர பிள்ளையளின்ர மன ஏக்கம் இது. இதுகள நாங்கள் குறைவா மதிப்பிட்டிடக் கூடாது.

இத ஒருக்கா கேட்டுப் பாத்திட்டு உங்கட குற நிறையளயும் அபிப்பிராயத்தையும் சொல்லுங்கோ.

பாட்டப் பற்றி மட்டும் சொல்லிப் போட்டுப் போகப் படாது. உரிமையோட அடிக்கடி வந்து பதிவுகளும் போட்டு அசத்த வேணும்.





This entry was posted on 4:18 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On March 20, 2011 at 7:50 AM , Muruganandan M.K. said...

உந்தக் குழையல் சோத்திலை கொஞ்சம் என்ரை இலையிலையும் போடு மேனை.
ச்சா! என்ன ருசியா இருந்திது கண்டியோ

 
On March 20, 2011 at 9:40 AM , வந்தியத்தேவன் said...

ஆஹா ஆச்சி நல்லாத்தான் இருக்கு, சில விடயங்கள் உள்குத்துக்கள் புரிகின்றது. என்னனை செய்வது எல்லோரும் இப்ப வேலையாத்தான் இருக்கின்றாங்கள் சும்மா இருக்கேக்கை எப்படியும் எழுதுவினம் தானே.

 
On March 22, 2011 at 6:35 PM , யசோதா.பத்மநாதன் said...

:)அந்த ’ச்சா’ எண்ட சொல்லில இருக்கு டொக்டர் ருசி.உங்கள் பகிர்வும் அது போல இருந்தது.நன்றி.

வந்தி, என்னடா மோன வேலை? மனமுண்டானால் இடமுண்டு எல்லே?

 
On March 24, 2011 at 5:55 AM , ஹேமா said...

ஆச்சி....மணியாச்சி...நல்லாத்தான் சோறு குழைக்கிறியள்.அதோட எங்களையும் சேர்த்து.கண்ட நிண்டமாதிரித் திட்டாம அளவோட குழைச்சுத் திட்டுறியள்.
சந்தோஷமணை.

உந்தப் படம் நாச்சாரம் வீடெல்லோ.எப்பவோ எங்கட அம்மம்மாவீடு கனவு போலத் தெரியுது.உப்புமடச் சந்தியில எங்கட அம்மம்மாவின்ர வீடுதான் அப்ப பெரிசாம்.அந்த ஞாபகத்திலதான் நாச்சாரம்வீடு என்றொரு சிறுகதை எழுதினனான்.

அவவும் இப்பிடித்தான் கலியாணவீடு செத்தவீடு எண்டா அடுத்தநாள் மிஞ்சிற பழைய சோறு கறியெல்லாம் போட்டு ஒரு சொட்டும் சிந்தாம வெளில எறியாம எல்லாருக்கும் செலுத்திக் கட்டிப்போடுவாவாம்.அம்மா சொல்லுவா.

உண்மைதான் அந்த நாளையில போட்டோக்கள் பெரிசா எடுக்கமாட்டினம்.எங்கட முன்னோர்களின் படங்கள்,வீடுவாசல் எல்லாம் பாக்க விருப்பம்.இல்லையே !

பதிவுகள் எழுதவேணும்.ஈழத்துமுற்றம் ஏத்துக்கொள்றாப்போலவெல்லோ பதிவு இருக்கவேணும்.அதுதான் என்ர பதிவுகள் குறைவு.சரி சரி...முயற்சி பண்றண்.என்னைத் தேடினதுக்கு சந்தோஷமணை ஆச்சி.
சந்திப்பம்.அப்ப வரட்டே !

 
On March 24, 2011 at 12:24 PM , மதுரை சரவணன் said...

arumai...vaalththukal

 
On March 26, 2011 at 4:47 AM , வடலியூரான் said...

ஆச்சி கலியாணவீடு முடிஞ்ச கையோடை ஆளுக்கொரு கவளம் குழை சோறும் குடுத்தாச்சுது..

 
On March 28, 2011 at 3:53 PM , யசோதா.பத்மநாதன் said...

சந்தோஷம் பிள்ளையள்.

ஹேமா,நாற்சாரம் வீட்டப் பற்றின கதையெண்டா எங்கட ஊர் கதையாத் தான் இருக்க வேணும். பொருத்தமா இருக்குமெண்டா அதை ஒருக்கா இஞ்ச வந்து சொல்லன் மோன.திறமா எழுதத் தக்கனீ.அதை ஒருக்கா சொல்லப் படாதே?

நன்றி சரவணன்.தொடர்ந்து வாருங்கள்.குறை நிறைகளையும் சொல்லிச் செல்லுங்கள்.

வடலியூராரும் அங்கனேக்க ஓடித் திரியிறார் போல! சந்தோசம் ராசா.

 
On April 6, 2011 at 2:35 AM , போளூர் தயாநிதி said...

ஒவ்வொரு எழுத்தையும் கூட்டி கூட்டி படிக்க முயற்சி செய்து தோட்ற்றுபோனேன் . இருந்தாலும் நகல் எடுத்து கொண்டேன் . பொறுமையாக படித்து கொள்ள .கணினி நடுவத்திற்கு வரிசையில் நிற்கிறார்கள் .என்னை எழுப்ப ..இடுகை நல்ல விடயமாக (செய்தி) படுகிறது .பின்னாளில் இந்த வார்த்தைகள் புரிந்து கொள்ள ... கற்று தருவீர்கள் தானே ?

 
On April 10, 2011 at 7:11 PM , யசோதா.பத்மநாதன் said...

போளூர் தயாநிதி, உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

பொதுவாக திருமணம்,திவசம் போன்ற நிகழ்வுகளின் பின்னால் மிஞ்சுகிற சாப்பாட்டை கறிகளை எல்லாம் ஒன்றாகப் போட்டு குழைத்து ஒரு வாழை இலைத் துண்டிலோ அல்லது பூவரசு இலையிலோ வயதான ஒருவர் குழைத்துத் திரட்டி உருண்டைகளாக்கி அவரவர் இலையில் வைத்து உண்ணக் கொடுப்பது வழக்கம்.

இது மிஞ்சியதை வீணாக்காத சிக்கனம்.மேலும் நேரச் சேமிப்பு.(காரணம் உறவினர் பலர் கூடி இருப்பதால் பல வேறு வேலைகளும் இருக்கும்)

அம்மம்மா மாதிரியான ஒருவர் அதனைச் செய்ய,சிறியவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் ஒன்றாக அமர்ந்து உண்பதுவும் யாழ்ப்பானத்தில் முன்னர் இருந்த நடைமுறை.

குறை நிறைகளை, பாசங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு இடமாகவும் அது இருந்தது.

வயதானவர்கள் அக் குறிப்பிட்ட நிகழ்வு குறித்த தம் நிலைப்பாட்டை உரிமையோடு சொல்லும் இடமும் அதுவே.

அந்தக் குழையல் சோறு மிகச் சுவையாகவும் இருக்கும்.

இது யாழ்ப்பாண ஆச்சிமாரின் தமிழ்.அத் தமிழைப் புரிந்து கொள்வது சிரமமாக இருந்ததா?

உங்கள் பின்னூட்டத்துக்கு மீண்டும் என் நன்றி.இனி வரும் பதிவுகளில் அக்குறையை நிவர்த்திக்க முயற்சிக்கிறேன்.

மீண்டும் வாருங்கள்.