•6:49 PM
Mexican Creeper
Rangoon Creeper
ஈழத்தை விட்டு வந்து இரண்டாவது தசாப்தத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது புலம் பெயர்ந்த பெரும்பாலாருக்கான பாதை.இதற்கிடையே நிறைய மாற்றங்கள் இரண்டு புறத்திலும்.புலம் பெயர்ந்தாலும் சரி, அங்கேயே வசித்தாலும் சரி, சிறு வயது நினைவுகள் மனதில் இருந்து என்றும் அகலாதவை தானே.
என் மனதில் நினைவுகளில் பூத்திருக்கின்ற இரண்டு கொடிப்பூ வகைகள் பற்றிய பதிவு இது.
ஒரு முறை எங்கள் சக பதிவர் சினேகிதி பூக்களைப் பற்றிய பிரபல பதிவொன்றை ஈழத்து முற்றத்தில் இட்டிருந்தார். அதில் விடு பட்டதும் என் மனதில் நிலைத்து நிற்பதுமான இந்த இரண்டு கொடிப் பூக்களை இங்கு அறிமுகப் படுத்துவதில் மகிழ்வடைகிறேன்.
நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கின்ற ஈழத்து முற்றம் பூக்களாலும் நிறையட்டுமே!
முதல் பூ நாம் ’ஸ்டேசன் பத்தை’ என்று செல்லமாக அழைப்பது. அதன் உண்மையான பெயர் அண்மைக் காலம் வரைத் தெரிந்திருக்கவில்லை.முத்து முத்தாக கேட்பார் இல்லாமல் ரயில் நிலையங்களை அண்டிய வேலியோரங்களிலும் ரயில் பாதை ஓரங்களிலும் அழகான றோசா நிறத்தில் பூத்துக் கிடக்கும்.மழைத் தண்ணீரை அருந்தி பொது மண்ணில் பூத்திருக்கும் செழிச்ச கொடி.அதற்கு அப்படி ஒரு சுபாவம்!நறுமணமோ தேனோ அதிலிருந்ததாக நினைவில் இல்லை.ஏழைப்பட்ட பூப் போல! யாரும் அதைக் கிட்ட நின்று ரசித்தும் நான் கண்டதில்லை.
என் சிறு வயதில் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்த பொழுதுகளில் என் பாடசாலை விட்டதும் ரயில் பாதை ஓரமாக நடந்து வரவேண்டி இருக்கும்.சிவகாமி என்றொரு இனிய தாய்மை நிறைந்த ஒரு கன்னிப் பெண் எங்களோடு அப்போது இருந்தார்.நல்ல வெண்ணை நிறம். மாசு மறு எதுவுமற்ற முகம்.அடர்த்தியான கூந்தலை எண்ணை வைத்து படியவாரி பின்னிக் கட்டி இருப்பார்.நெற்றி எப்போதும் திருநீற்றைக் கொண்டிருக்கும்.அரைப் பாவாடை சட்டை அணிந்திருப்பார்.தெய்வீகக் களை பொருந்திய கருணையான முகம் அவருக்கு.அவர் என்னை அழைத்துச் செல்ல வருவார். வரும் போது இப்பாதை வழியாக வருவோம்.
வரும் போது மறக்காமல் இப்பூக்களில் சிலவற்றை அவதானமாக பறித்துத் சிற்றெறும்புகள், பிள்ளையார் எறும்புகள் ஏதேனும் இருக்கிறதா என்றெல்லாம் கவனித்து விட்டு எனக்குத் தருவார். நானும் மிக ஆர்வத்தோடு அதைக் கொண்டு வருவேன்.
2004ம் ஆண்டு அங்கு நான் போயிருந்த போது ரயில் நிலையங்களோ ரயில் பாதைகளோ அங்கிருக்கவில்லை.இப்பூக்களும் அவைகளோடு அழிந்திருக்குமோ? அண்மையில் தான் இதன் பெயர் மெக்ஸிக்கன் கொடிப் பூக்கள் (Mexican Creeper)என்ற அதன் உண்மைப் பெயரை கண்டு பிடித்தேன்.
.
மற்றய மலரை நாம் ’குடிகாரன் பூ’ என்று அழைப்போம்.கொடி மலர்.வெள்ளையில் இருந்து றோசா வர்ணம் வரை வந்து சிவப்பு நிறத்தில் அது முடிவடையும். கீழ் நோக்கிக் கொத்துக் கொத்தாகப் பூக்கும்.அதனால் அதற்குக் குடிகாரன் பூ என்று பெயர்.
எங்கள் அம்மம்மா வீட்டுப் போர்டிக்கோவில் அது செழிப்பாக வளர்ந்திருந்தது.தண்ணீர் அதற்கதிகம் தேவைப் பட்டதில்லை. அதற்குத் தண்ணீர் ஊற்றியதாகவும் ஞாபகம் இல்லை. இதற்கும் வாசம் இருந்ததில்லை.தேன் இருந்ததா தேனீக்கள் வந்ததா என்றும் நினைவில் இல்லை.
ஆனால் இவை மிக அழகான பூக்கள்.கேட்பார் இல்லாமலேயே பூத்துக் கிடப்பவை.அநேக காலம் இதன் உண்மையான பெயர் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். ஈழத்தவர்களைக் காணுகின்ற போதெல்லாம் மலர்களைப் பற்றிய பேச்சு வந்தால் இம் மலரின் பெயர் பற்றிக் கேட்க மறக்க மாட்டேன்.
எல்லோருக்கும் மலர் மட்டும் ஞாபகத்தில் இருந்தது.உண்மைப் பெயர் நினைவிருக்கவில்லை. தற்சமயமாக கூகுள் இமேஜில் தேடிக் கொண்டு போன போது அதன் படங்கள் அகப்பட்டன.இவை அவற்றில் சில.
இவையும் இப்போது ஈழத்தில் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.அவை ரங்கூன் கொடிப் பூக்கள் (Rankoon creeper) என்று அழைக்கப் படுகின்றன என்பதையும் அண்மைக் காலத்தில் தான் கண்டு பிடித்தேன்.
பூக்கள் எப்போதும் அழகானவைகள் தான்.சில தேன் உள்ளவை; சில நறு மணம் கொண்டவை; சில அழகானவை;ஒற்றையாகவும் கொத்தாகவும் கொள்ளையாகவும் பூக்கும் சில.அபூர்வமாகப் பூப்பனவும் உண்டு.மேலும் சில வரண்ட பூமியிலும் பூப்பவை.தொட்டவுடன் உதிர்ந்து விடும் பவளமல்லிகையில் இருந்து மாதக்கணக்காக வாடாதிருக்கும் அந்தூரியம் வரை அவைகளில் தான் எத்தனை எத்தனை குணநலன்கள்!
எவ்வாறு இருப்பினும் அவை தத்தம் இயல்பினால் மனதுக்கு ரம்மியத்தை உண்டு பண்ணுபவை.
கேட்பாரில்லாமலேயே ஈழத்தில் பூத்துக் கிடந்து காலத்தால் அழிந்து போயிருக்கக் கூடும் இந்தக் கொடிப் பூக்கள்!.
படங்கள்; நன்றி, கூகுள் இமேஜ்)
6 comments:
ஏழைப்பட்ட பூப் போல!யாரும் அதைக் கிட்ட நின்று ரசித்தும் நான் கண்டதில்லை.//
கவலை வேண்டாம்.நான் ரசித்திருக்கிறேன்.இப்பவும் கூடத்தான்..:)
அழகிய பூக்களோடு ஒரு அழகிய பதிவு...அழிந்து விட்டது எண்டு சொல்லேலாது எண்டு நினைக்கிறன்.எங்கட ஊரிலயும் இந்த இரண்டு பூக்களும் இருந்தது...சின்ன வயசில நடராசா வண்டியில ரியூசனுக்கு அங்க இங்க போகேக்க வழியில் ரசித்துக்கொண்டும் பறித்துக்கொண்டும் போறது வழக்கம்..
இங்க கொழும்பில இருக்கிற வீட்டுக்கு பக்கத்தில றோட்டோரமா கூட முதலாவது படத்தில போட்ட கொடிப்பூ இருக்குது.அண்டைக்கு ஒரு நாள் கையோட ஒரு கொத்து பிடுங்கிக்கொண்டு தான் வந்தனான்:))).ஊரில இந்த பூக்களுக்கு சொல்ற பேர்கள் சரியா தெரியேல்லை.ஆனா நீங்கள் சொன்ன பேர்கள் நாங்கள் பாவிச்ச ஞாபகம் இல்லை..
சிறப்பான விசயம் என்னண்டா அந்த பூக்களை அழகாகப்படம் பிடித்திருக்கிறார்கள்..படங்கள் தந்த கூகிள் சேவையும் வாழ்க..:)
தெய்வீகக் களை பொருந்திய கருணையான முகம் அவருக்கு//
வர்ணனை நல்லாயிருக்கு...:)
மேகலா...பூக்களும் நாங்களும் இன்று ஒன்றானோம் தோழி !
நாங்கள்தான் இடம்மாறிவிட்டோம் பூககள் அங்கேதான் உள்ளன.
அன்புடன்
வர்மா
அவை அங்கே இருப்பதையிட்டு மகிழ்ச்சி.
நான் போன போது அவற்றைக் காணக்கிடைக்கவில்லை.
அறியத் தந்த தாருகாசினிக்கும் வர்மாவுக்கும் நன்றி.
ஹேமாவுக்கு என் அன்பு.
Mexican Creeper இதை விஸ்வனாதி எனச்சொல்வார்கள் காணிகளில் பற்றையாகப் பரந்திருக்கும் அளிப்பது கஷ்டம்.
Rangoon Creeper குடைமல்லிகை,தொங்குமல்லிகை எனவும் அழைப்பார்கள்.எமது வரண்டநிலத்திற்கேற்ற மரங்கள். பருத்தித்துறையில் இப்போதும் காணலாம்.
உண்மையில் இந்த முதல் பூவைக்குறித்த பதிவொன்று என்னிடம் முற்றுப்பெறாமலே நெடு நாட்களாய் இருக்கிறது :( முன்னர் எப்பொழுதோ கவிதையிலோ பதிவிலோ இதனை பயன்படுத்திய நினைவும் இருக்கிறது அந்தப்பூவை நாங்கள் கொடிறோசா என்றே அழைத்திருக்கிறோம் சின்ன வயதிலிருந்த இது பக்கத்து காணிமுழுக்கவும் எங்கடை வீட்டு வேலியிலும் பின்பக்கத்திலும் படர்ந்திருந்தது. எங்கடை ஊரில இப்பவும் இருக்குது எங்கடை வீட்டைதான் இதை அழிக்கிறதுக்கு கடும் முயற்சியில இருக்கினம் இருந்தாலும் சும்மா கிடந்த நிலம் முழுக்க கன வருசமா படர்ந்திருந்த அதன் வேர்களை அவ்வளவு எளிதில் அழிக்க முடிவதில்லை...
சின்ன வயதில மட்டுமில்லை பதின்ம வயதுகளிலும் இநதப்பூக்களை நான் பயன்படுத்தியிருக்கிறேன் எனக்கு பிடித்தமான பூக்களில் ஒன்றான இந்த கொடி மரத்தைக்குறித்த வரலாற்று செய்திகள் எனக்கு நினைவில்லாமல் போனாலும் இந்த கொடி சார்ந்த பல கதைகள் என்னிடமிருக்கிறது. திரும்ப நினைவு படுத்தினதுக்கு நன்றி மணி ஆச்சி. ..
மற்றப்பூவை மணிப்பூ அல்லது தொங்கிட்டான் என்று அழைத்த ஞாபகம் இருக்கிறது.