Author: யசோதா.பத்மநாதன்
•7:38 PM
ஒருவரை அல்லது ஒரு நிகழ்ச்சியை ஞாபகப் படுத்த ஏதேனும் ஒரு பாடல் வரி அல்லது ஒரு இசைக்குறிப்பு அன்றேல் ஏதேனும் ஒரு சிறிய பொருள் அல்லது நடைபெறும் ஒரு சிறு சம்பவம் போதுமானதாக இருக்கும்.பழைய நினைவுகளையும் வாழ்க்கையையும் அது மீட்டுத் தந்து விட்டுப் போயிருக்கும்.

அது போலத் தான் இந்தக் கிடுகுவேலியும் மூக்குப் பேணியும்!யாப்பாணத்தை; ஊரை; அங்கு வாழ்ந்த வாழ்வை இந்தப் படங்கள் நினைவு படுத்திப் போகிறது.



கிடுகு வேலி யாழ்ப்பாணத்து இமேஜ்களில் முக்கியமானது.யாழ்ப்பாண மக்களின் கட்டுப்பாடான மற்றும் கட்டுப் பெட்டிக் கலாசாரத்தை குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதற்கு ’கிடுகுவேலிப் பாரம்பரியம்’என்ற சொல்லைக் குறியீடாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிடுகுவேலிகள் அங்கு தனித்துவமாக விளங்குவதையும் குறியீடாகக் கையாளப்படுவதையும் வரலாற்றுப் பரப்பில் தெளிவாகக் காணலாம்.



அது போலத்தான் மூக்குப் பேணியும்.அதன் தனித்துவமான வடிவமும் அன்னாந்து குடிப்பதற்கேற்ற வகையில் இருக்கும் அதன் நளினமும் அன்றாடப் பயன்பாட்டில் யாழ்ப்பாணத்தார் மூக்குப் பேணியைப் பயன்படுத்திய பாங்கும் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தின் இன்னொரு இமேஜ்.

இந்தப் படங்களை கூகிளில் பார்த்த போது ஊர் சோகம் சூழ்ந்தது. அதனால் பதியத் தோன்றிற்று.
Author: யசோதா.பத்மநாதன்
•6:00 PM


நினைவிருக்கிறதா? சனசமூக நிலையம் என்றும் அதற்கொரு பெயர் இருந்தது.பொதுவாக யாழ்ப்பாணத்துக் கிராமப் புறங்களில் இது இயங்கி வந்தது.கிராமத்து ஆண்களும்பெரும்பாலும் இளைஞர்களும் பத்திரிகை சஞ்சிகை பார்க்கக் கூடும் இடம் என்று மட்டுமில்லாமல் ஊர் புதினம், மற்றும் அன்றாட நிலவரங்கள் கதைக்கும் ஒரு பொது இடமாகவும் அது இருந்தது. சமூகத்தை இணக்கும் ஒரு மையமாகவும் சமூக முன்னேற்றம் அதன் இலக்காகவும் விளங்கியது.

ஆனால்,பெண்கள் அதிகம் அங்கு போனதாகவோ அவர்களின் நடவெடிக்கைகளில் பங்கு பற்றியதாகவோ நான் அறியவில்லை.அது எவ்வாறு ஆரம்பித்தது? எவ்வாறு இயங்கியது? பணம் எங்கிருந்து கிடைத்தது? என்பது பற்றி எனக்கதிகம் தெரியாது.

இந்த ஈழத்து முற்றத்துக்கு வருபவர்கள் உங்கள் உங்கள் பிரதேசத்தில் அது எவ்வாறு தோற்றம் பெற்றது? எவ்வாறு இயங்கியது? என்று கூறினால் நன்றாகவும் அறியாத பல விடயங்களை எல்லோரும் அறிந்ததாகவும் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாகவும் அது இருக்கும்.

இதற்கான படத்தைத் தேடிக் கொண்டு போன போது சுவாரிசமான வாசிக சாலை அமைப்பாளர் ஒருவரின் நினைவு மீட்டல் கிட்டிற்று. அதனையும் ஒரு வரலாற்றுத் தகவலுக்காக ஈழமுற்றத்து வாசகர்களுக்காகத் தருகிறேன்.

கரந்தன் கலைவாணி வாசகசாலை வரலாறு

எழுபதின் ஆரம்பகாலாப்பகுதி. நான் அப்போது உரும்பிராய் இந்துக்கல்லு}ரியில் உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். படித்துக்கொண்டிருந்தேன் என்பதைவிட படிப்பதாகக் கூறிக்கொண்டு பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தேன் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமானது. வேலை செய்ய வேண்டிய வயதில் வேலை செய்யாது தந்தையாரின் சிறிய வருமானத்தில் வாழ்ந்த காலம். எப்படியிருந்தபோதும் வாய்க்கு உருசியாக அம்மாவின் சாப்பாடு எப்போதும் இருக்கும். நண்பர்களுடனும், என் வயதை ஒத்த நெருங்கிய உறவுகளுடனும் இரவில் நடுச்சாமம்வரை கும்மாளம் அடிப்பதும், யாழ் முற்றவெளியிலும், பரமேஸ்வராக் கல்லுரி மைதானத்திலும் பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் எல்லா உதைபந்தாட்டங்களையும் சென்று பார்ப்பதும், யாழ்ப்பாணத்திலுள்ள சினிமாக் கொட்டகைகளில் திரையிடப்படும் எல்லா திரைப் படங்களையும் தவறாமல் சென்று பார்ப்பதும், உரும்பிராய் கலை வளர்ச்சிக் கழகம் ஒன்று ஆரம்பித்த பின்னர் பல நாடகங்களை நடித்து அரங்கேறுவதிலும் முன்னின்று பொழுதை வீணாக்கிய காலம் என்றும் கூறலாம். எப்படி எப்படியெல்லாம் எமது இளமை நாட்களை இனிமையாகக் கழிக்க முடியுமோ அப்படியெல்லாம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த காலம். ஆனால் ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்துகொண்டுதான் இவையெல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தோம்.

அப்போதுதான் எமது கரந்தன் கிராமத்தில் ஒரு வாசகசாலை அமைக்கவேண்டும் என்று என் மனதில் ஓர் ஆசை ஏற்பட்டது. அப்போது கரந்தனில் ஒரு வாசிகசாலை அமைக்கவேண்டும் என்ற பேச்சை எடுத்தாலே அங்குள்ள பெரியவர்களிடம் அடியோ, அல்லது ஏச்சோ வாங்கவேண்டிய ஒரு நிலைமை இருந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்னர் கரந்தனில் உள்ள பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாசகசாலை அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள். தற்போது போயிட்டி நோக்கிச் செல்லும் சந்தியில் திரு சின்னையா மாமாவின் காணிக்குள் ஒரு வாசகசாலையை அமைக்க ஆரம்பித்தார்கள். இவர் எனது அம்மாவிற்குத்தான் மாமா. ஆனால் அம்மா அழைப்பதுபோல்தான் சின்னையா மாமா, இராசையா மாமா என்று நாமும் எல்லோரையும் அழைப்போம். திரு.சின்னையா அவர்கள் தியாகதீபம் திலீபனின் பேரனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மட்டும் கடும் மழை பெய்தபோது மரத்துண்களாலும், தென்னை ஓலைகளாலும் வேயப்பட்ட கூரை மட்டும் கொண்ட அந்தக் கொட்டகைக்குள் ஒதுங்கி நின்றதாக ஞாபகம்.

அந்தக் கட்டடம் ஆரம்பமாகிய சில நாட்களுக்குள் திரு சின்னையா அவர்களின் குடும்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்தது. அவர்களின் குடும்பத்துள் ஏற்பட்ட பகமையால் அவருடைய தங்கையும், திரு இராசையா அவர்களுடைய மனைவியுமான திருமதி சின்னத்தங்கம் இராசையா மாமி திடீரெனத் தற்கொலை செய்துவிட்டார். அந்தச் சோகம், துயரம், அதிர்ச்சி கரந்தனிலிருந்த எல்லோரையும் ஓர் உலுப்பு உலக்கிவிட்டது. இவை எல்லாம் சிறுவனாக இருந்த என் மனதில் ஆழப்பதிந்து இப்போதும் அழியாமல் இருக்கின்றது. அந்தச் சம்பவம் நடந்தபின்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த வாசகசாலை இருந்த இடம்தெரியாமல் போய்விட்டது. அதன் காரணத்தினாலேயே வாசகசாலை கட்டவேண்டும் என்று யாராவது கதைத்தால் உடனே “முன்பு வாசகசாலையைத் தொடங்கி ஒருவரைப் பலி கொடுத்துவிட்டீர்கள், இனி யாரைப் பலி கொடுக்கப்போகிறீர்கள்?” என்று பொதுவாக பெரியவர்கள் எல்லோருமே கேட்பார்கள். அவர் இறந்ததற்கு அந்த வாசகசாலைதான் காரணம் என்றும் கூறுவார்கள். அதனால் பல காலமாக அதனைப் பற்றிப் பேசவே பலர் தயங்கினார்கள்.

இளைஞர்களாகிய எம்மிடம் எதுவித பணமோ, காணியோ, வசதிகளோ இருக்கவில்லை. ஆனால் என் மனதுள் எப்படியாவது ஒரு வாசகசாலை கட்டவேண்டும் என்ற அவா மட்டும் அதிகரித்துக்கொண்டே வந்தது. அப்போது என்னுடன் ஒன்றாகப் படித்த உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த அரியராசா என்ற நண்பர் சுன்னாகத்தில் ஓர் அச்சியந்திரசாலையில் வேலை செய்துகொண்டிருந்தார். ஓர் அதிஸ்டலாபச் சீட்டுப் போட்டால் ஓரளவு பணம் சேர்க்கலாம், அதனை வைத்துக் கொண்டு யாரிடமாவது ஒரு சிறிய காணியை இனாமாகப் பெற்று கட்டட வேலைகளை ஆரம்பிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அவரிடம் இதுபற்றிக் கதைத்தேன். தான் அதிஸ்டலாபச் சீட்டுக்களை அச்சடித்துத் தருவதாகக் கூறினார். அதற்கு ஆதாயமில்லாமல் செலவு மட்டுமாக நாற்பது ரூபாய்கள் வேண்டும் என்றும் கூறினார். நான் யாருடனும் இதுபற்றிக் கலந்துரையாடவேயில்லை. ஒருவாறு நாற்பது ரூபாய்களைச் சேர்த்து ஆயிரம் ஒரு ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிற அதிஸ்டலாபச் சீட்டுக்களை அச்சடித்து வைத்திருந்தேன்.

எனது நான்காவது மாமா சுந்தரலிங்கம் என்னைவிட மூன்று வயது மூத்தவர் என்றாலும் நெருங்கிய நண்பர் போலவே நாமிருவரும் அப்போது பழகிவந்தோம். இருவரும் ஒரே சாயலையும் அப்போது கொண்டிருந்தோம். அங்கிருந்த இளவயது மங்கையர்களைப்பற்றியும், மற்றையவர்களைப் பற்றியும் தினமும் பல உருசியான கதைகள் கூறுவார். தான் பார்த்துவிட்டு வந்த புதிய சினிமாப்படம் பற்றி ஒன்றும் விடாமல் கூறி எனக்கு நடித்தும், பாடியும் காட்டுவார். இளவயதில் சினிமாப் படம் பார்க்கும் ஆசையையும், பாடல்களில் கூடிய நாட்டத்தையும் ஊட்டியவரும் அவரேதான். அவரிடம் இதுபற்றிக் கூறி ஆலோசனை கேட்டேன். அவரும், எம்முடன் மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே எமது திட்டத்தை இரகசியமாகக் கூறி வைத்தோம்.

ஒருநாள் இரவு ஏழு மணியிருக்கும். நானும் சுந்தரலிங்க மாமாவும் அவர்களது வீட்டில், அதாவது எனது பேரானார் வீட்டிலிருந்த விளக்கை (Petrolmax) கொண்டுவந்து அந்தச் சந்தியில் வைத்தோம். அயலவர்கள் எல்லோரும் என்ன வீதியிலே பெரிய வெளிச்சம் தெரிகிறதே என்ன விசேசம் என்று கேட்டபடி ஒவ்வொருவராக அங்கே வந்து சேர்ந்தார்கள். அதுதான் அப்போதைய வழமை. அப்போதுதான் நான் யாருக்கும் தெரியாமல் அச்சடித்து வைத்திருந்த அதிஸ்டலாபச் சீட்டுக்களைக் காட்டி எமது நோக்கத்தை வெளியிட்டோம். அங்கிருந்த அனைவரும் அதற்கு தமது ஆதரவைத் தருவதாக உடனேயே உறுதியளித்தார்கள். அப்போது தற்செயலாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்த திரு சின்னையா மாமா “என்ன நடக்கிறது?” என்று கேட்டார். நாம் எமது நோக்கத்தைக் கூறியதும் அவர் எதுவுமே பேசாது சென்றுவிட்டார். அவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சோக நிகழ்வு மீண்டும் வந்திருக்கலாம்.

அப்போது மலாயன் “பென்சனியர்” திரு பொன்னையா அவர்களின் மருமகனான கதிர்காமதாஸ் அவர்களும், மகனான திரு இராசனேசன் அவர்களும்கூட அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எம்முடன் அருகருகே வாழ்ந்திருந்தபோதிலும் அதுவரை எம்முடன் நெருங்கிப் பழகியதில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அதுவரை நெருங்கிப் பழகாத கரந்தன் மக்கள் அனைவரும் அன்றிலிருந்து நெருங்கிப் பழக ஆரம்பித்துவிட்டார்கள். அந்த இடத்திலேயே வைத்து ஒரு நிர்வாகக் குழுவை நாம் தெரிவுசெய்தோம். தலைவராக திரு கதிர்காமதாஸ் அவர்களும், காரியதரிசியாக திரு ஜெயவீரசிங்கம் அவர்களும், பொருளாளராக திரு நாகராஜா அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள். உப தலைவர், உப காரியதரிசி, உப பொருளாளர் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். ஆனால் எனக்கு இவற்றில் எதுவித பதவிகளும் கிடைக்கவில்லை. அதனையிட்டு நான் எதுவித கவலை கொள்ளவுமில்லை. கிராமத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்தோம். அதுவே எமது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

அப்போது எங்கே இதனைக் கட்டுவது என்று எல்லோரும் கேள்வி எழுப்பியபோது திரு இராசையா மாமா அவர்கள் எழுந்து தான் தனது காணியில் ஒரு பகுதியை அன்பளிப்பாகத் தருவதாகக் கூறினார். அதன்படி வாசகசாலை தற்போது அமைந்திருக்கும் இடம் திரு இராசையா மாமா அவர்களால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அது எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நாம் எல்லோரும் அயல் கிராமங்களாகிய அச்செழு, நீர்வேலி, ஊரெழு, உரும்பிராய், கோப்பாய் போன்ற இடங்களில் வசிக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்றுப் பணம் சேர்த்தோம். இளைஞர்கள், பெரியவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்புத் தந்தார்கள். பலர் அன்பளிப்பாக பெருமளவு பணஉதவியும் செய்தார்கள். சுமார் ஆறு மாதங்களின் பின்னர் அதே சந்தியில் கிராமத்திலிருந்த பெரியவர்களான திரு சிவகுரு, திரு இராசையா, தம்பிப்பிள்ளை போன்றவர்களை அழைத்து அதிஸ்டலாபச் சீட்டுக்களை இழுத்து வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களைக் கொடுத்தோம்.

கட்டட வேலைகளும் ஆரம்பமாகி குறுகிய காலத்திற்குள்ளேயே வாசகசாலைத் திறப்புவிழாவையும் வெகுசிறப்பாக நடாத்தினோம். அன்று ஓர் ஒலிபெருக்கியை வாடகைக்கு அமர்த்தி வீதிவீதியாக அறிவிப்புச் செய்ய என்னுடன் படித்துக்கொண்டிருந்த நண்பன் திரு குமரேஸ்வரராஜா உதவிசெய்தார். இன்று அவன் எம்முடன் இல்லையே என்று எண்ணும்போது கவலைதான். அன்று அங்கே வாசகசாலையின் முன்னால் இருந்த “கரந்தன் கலைவாணி வாசிகசாலை” என்ற பெயர்ப்பலகை எழுத குறுகிய காலத்தில் யாரும் கிடைக்காததால் அதனையும் நானே எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது. அது மிகவும் அழகாகவும் அமைந்துவிட்டது. அது என்னால் எழுதப்பட்டதென்று எண்ணும்போது இப்போதும் எனக்குள் ஓர் ஆனந்த அலை ஓடுவதாகவே உணர்கிறேன். அன்று அங்கே வாழ்ந்த இளைஞர்கள் அனைவருக்கும் இந்த வாசகசாலைகள் பற்றிய இனிய நினைவுகள் எப்போதும் அழியாது இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

பலருடைய அறிவுப் பசியைப் போக்கும் ஓர் களஞ்சியமாக இது இப்போதும் இயங்கிவருவது கண்டு மனம் மகிழ்கிறேன். நான் இலண்டனுக்கு வருவதற்கு ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்த காலத்தில் தினமும் அங்கு சென்று இரவு பன்னிரண்டு மணிவரை “தாயம்” விளையாடி மகிழ்ந்ததையும், அப்போது வெளிவந்த வசந்தமாளிகை படத்தை நண்பர்களுடன் சென்று ஐந்து தடவைகள் பார்த்து மகிழ்ந்ததையும் எண்ணிப் பார்க்கிறேன். மீண்டும் 2003 ஆம் ஆண்டு எமது மகளுடன் சென்று அந்த வாசகசாலைக்கு முன்னால் நின்று நிழற்படம் பிடித்தபோது பழைய நினைவுகளெல்லாம் பாய்ந்தோடி வந்ததைத் தடுக்கமுடியவில்லை. இந்த வாசகசாலைக்கும் எனக்கும் உரிய நெருங்கிய உறவுவை எண்ணும்போது என் மனம் பூரிப்படைகிறது. கலைமகள் பெயர் கொண்ட எமது இந்தக் கலைக்கூடம் எப்போதும் அங்கு வருபவர்களுடைய தேவைகளைத் தீர்த்துவைக்க இறைவன் ஆசியருளவேண்டும் என்று பிரார்த்தித்து நானும் வாழ்த்துகிறேன்.

மு.து.செல்வராஜா
இலண்டன். 30.01.2008



திரு.இராசையா

கரந்தன் கலைவாணி வாசகசாலையின் இன்றைய படங்கள்











நன்றி;
Author: யசோதா.பத்மநாதன்
•2:43 AM



கடிதம் எழுதி, உறையிலிட்டு, முத்திரை ஒட்டி, முகவரி எழுதி, ஒரு செய்தி அனுப்பிய காலம் ஒன்று இருந்தது.

பதிலுக்காகக் காக்கி உடையோடு சைக்கிளில் வரும் தபாற்காரருக்காகக் காத்திருந்த காலங்களும் போயின.

தந்தி, தபாலட்டை, ஏரோகிறாம் முதலியன தொடர்பு ஊடகத்தின் ஆரம்ப கால செயல் பாட்டில் முக்கிய பங்கு வகித்தவை.  வீட்டுக்கு வீடு தொலைபேசி இல்லாதிருந்த காலத்தில் தபாலகம் ஒன்றே ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இருந்த ஒரே வழி.

இன்றய சந்ததிக்கு தந்தி என்றால் என்னவென்றே தெரியாது என்னும் அளவுக்கு அது காலாவதி ஆகி ஆயிற்று பல வருடங்கள்.தொடர்பு சாதன வளர்ச்சி இல்லாதிருந்த காலத்தில் உடனடியாக ஒரு செய்தியை தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு அறிவிக்க இந்தத் தந்தி சேவை பயன் பட்டது. உதாரணமாக ஒரு அவசர செய்தியை தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு அனுப்ப வேண்டி இருந்தால் அனுப்புனர் தனக்கருகில் இருக்கும் தபாலகம் சென்று மிகச் சுருக்கமாக அனுப்ப இருக்கும் செய்தியையும் பெறுனரின் முகவரியையும் தபால் அலுவலருக்குத் தெரிவிப்பார்.தபால் அலுவலர் செய்தியைப் பெற்று சொற்களுக்கும் அனுப்பப் பட இருக்கும் இடத்துக்கும் (மைல் அளவு) ஏற்ற மாதிரியான கட்டணத்தினை அனுப்புனரிடம் இருந்து பெற்று பற்றுச் சீட்டை வழங்குவார்.



பின்னர் தபால் அலுவலர் அங்கிருந்து பெறுனரின் முகவரிக்கு அருகில் இருக்கும் தபாலகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செய்தியையும் முகவரியையும் தெரிவிப்பார்.அங்கிருக்கும் அலுவலர் அதனைப் பெற்று உடனடியாக அந்தப் பெறுனரின் முகவரிக்குச் உரியவரை அனுப்பி செய்தியைக் கிடைக்கச் செய்வார். இதற்குச் சாதாரண தபால் கட்டணத்தை விட சற்று மேலதிகப் பணம் அறவிடப் படும். பொதுவாக திருமணவாழ்த்துச் செய்திகள்,பாராட்டுச் செய்திகள், ஏதேனும் ஒன்றின் முடிவுகள், குறிப்பாக மரண செய்திகள் இவ்வகையில் முக்கிய இடம் வகித்தன.

ஆனால் இன்று நான் குறிப்பாகச் சொல்ல வந்த விடயம் தபாலட்டை பற்றியது. தந்தி இப்போது வழக்கொழிந்து போய் விட்டதென்றால் தபாலட்டை வழக்கொழியும் தறுவாயில் இருக்கிறது என்றே தோன்றுகிறது.( இப்போதும் தபாலட்டை இருக்கிறதா?)

ஒரு நாட்டுக்குரிய வரலாறை, அழகை, தனித்துவத்தை,இயல்பை,கலைத்துவத்தை ஒரு புறத்தே படங்களாகக் கொண்டிருக்கிற தபாலட்டைகள் ஒரு விதம். அவை இன்றும் இருக்கின்றன.இனியும் இருக்கும் என்றே தோன்றுகிறது.




நான் சொல்ல வருவது அதுவுமல்ல.

இந்தத் தபாலட்டைகள் பகீரங்கமாகச் செய்தியைக் காவிச் செல்லும். உள்ளூருக்குள் உலா வருபவை.குறிப்பிட்ட விலைக்கு அவற்றைத் தபாலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.வெள்ளை நிற மட்டை. - அதன் மறு புறம் முகவரி எழுதுவதற்கான இடம் ஒரு புறமும் மேலும் செய்தி எழுதுவதற்கான இடம் மறு பாதியுமாக இருக்கும். அவற்றுக்கு முத்திரை ஒட்ட வேண்டியதில்லை. அதனை கொள்வனவு செய்யும் போதே முத்திரைக்கான பணமும் செலுத்தப் பட்டு விடும். ஆனால் காலப் போக்கில் அச்சடிக்கப் பட்ட தபாலட்டைகள் விற்பனை செய்து முடிவதற்கிடையில் அதன் பெறுமதி அதிகரித்து விடுவதால் மேலதிக முத்திரை ஒட்டி அனுப்பும் நிலைமையும் பின்னர் இருந்தது.

குறிப்பாக வானொலியில் பாடல்களை விரும்பிக் கேட்பதற்கு,போட்டி நிகழ்ச்சிகளுக்கான வினாக்களுக்கு விடை அளிப்பதற்கு,(குறிப்பாகப் போட்டி வைப்போர் இலகுவாகக் கணக்கிடவும் ,கண்டு கொள்ளவும், சேகரித்து வைக்கவும், நேர மிச்சத்துக்காகவும் சகாய விலை காரணமாகவும் இவை பெரிதும் வரவேற்கப் பட்டன; பயன்பட்டன.) அந்தரங்கமற்ற விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, மேலும் எல்லோரும் பார்க்கலாம் என்று எண்ணுகின்ற விடயங்களை குறைந்த செலவில் பரிமாறிக்கொள்வதற்கும் இவை நன்கு பயன் பட்டன.



அவை ஈழத்துக் கவிஞர்களுக்கும் நன்கு பயன் பட்டிருக்கின்றது என்பது தான் புதுச் செய்தி. அவை நம்மவரின் வாழ்வியலைப், பண்பாட்டை, ஒரு கால கட்டது மன இயலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதும்; அதற்குத் தபாலட்டை சிறந்த ஒரு ஊடகமாக இருந்திருக்கிறது என்பதும் தான் இன்றய ஈழமுற்றத்துச் செய்தி.

சில மாதங்களுக்கு முன்னர் “ ஓலை” ( ஜூன் 2003) என்ற கொழும்புத் தமிழ் சங்க இதழ் ஒன்று தபாலட்டைகளில் கவிஞர்கள் தமக்கிடையே பரிமாறிக் கொண்ட செய்திகளை வெளியிட்டிருக்கக் கண்டேன். அதிலிருந்து சில சுவையான பகுதிகள் இங்கே மறு பிரசுரமாகிறது. ( இவை மகாகவி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் சக கவிஞ நண்பர்களுக்கு எழுதியவை. இவற்றை அவர் தன் டயறியில் குறித்து வைத்திருந்தார் என்ற குறிப்புக் காணப்படுகிறது)

அது ஒரு கால கட்டத்தில் ஈழத்துக் கலைஞரிடம் பூத்திருந்த அந்நியோன்னத்தையும் ஆத்மார்த்த அன்பையும் கூட அவை சித்தரிப்பனவாக இருக்கின்றன.

அவற்றில் சில கீழே.

1.சொற்கணக்குப் போட்டுச்
சுவை எடுத்துக் காட்டுகின்ற
அற்புதத்தைக் கண்டேன்
அலமந்தேன்! நிற்க
இறந்தாரையே ஏற்றுகின்ற
எங்களவர் நாட்டில்
அறந்தானோ நீ செய்த அன்பு?

(செ.கணேசலிங்கனுக்கு; 03.08.1955)

2.மெச்ச என்னாலும்
முடியாது! மெய்யாக
அச்சுக் கலைக்கோர்
அழியாத - உச்சி
அமைத்தாய்! அதன் அழகை
ஆரச் சுவைக்க
இமைக்காத கண்ணெனக்கு.

(வரதருக்கு; 19.07.1955)

பாட்டெழுதச் சொல்லிப்
படித்து விட்டுப் போற்றி அதை
ஏட்டில் அழகாய் அச்
சேற்றுவையே! - கேட்டுக் கொள்
என்னை எழுத்துத் துறையில்
இறக்கி விட்ட உன்னை
மறக்காதுலகு.

(அ.செ.முருகானந்தனுக்கு 26.07.1955)

3.ஊருறங்கும் வேளை
உறங்காமல் நாமிருந்தும்
சேருகிறாள் இல்லைச்
செருக்குடையாள்! - வரா அவ்
வெண்டாமரையாள்
விரைந்தாளோ தங்களிடம்?
கொண்டாடு நண்பா
குதித்து!

(நீலாவாணனுக்கு பெண் மகவு பிறந்தமைக்கு 15.08.1957)

(மகாகவிக்கு 3 ஆண்பிள்ளைகள் என்பதும்; சேரன்,சோழன்,பாண்டியன் என்பது அவர்களது பெயர் என்பதும்; மகளவைக்கு இனியாள், ஒளவை என்ற பெயர்கள் என்பதும் பலரும் அறிந்ததே)

4.பாட்டுப் படைக்கும்
பெரியோரை மக்களுக்குக்
காட்டி அவர் தம்
கருத்துகளை - ஊட்டும்
பணியில் மகிழ்வெய்தும்
பண்பாளர்க்கெங்கே
இணை சொல்ல ஏலும் எனக்கு!

(கனக.செந்திநாதனுக்கு 09.12.1958)

5.உள்ளதற்கும் மேலே
உயரப் புகழ்கின்ற
வள்ளல்! என் நன்றி;
வரக் கண்டேன் - பள்ளத்தில்
ஓடும் நீர் போல
ஒழுகும் அருங்கவிதை
பாடும் நீர் யாத்துள்ள பாட்டு.

(முருகையனுக்கு 06.05.1958)

6.தேன் தோண்டி உண்டு
திளைத்திடுக;பேரின்ப
வான் தேடி நும் வீட்டு
வாயிலிலே வந்தடைக;
தான் தோன்றிப் பாடும்
தமிழ் போல வாழ்க; இவை
நான் வேண்டுவன் இந் நாள்.

(சில்லையூர்.செல்வராசனின் திருமணத்திற்கு 09.01.1960)

இப்போது மின் தபால், S.M.S என்றும் தொலைபேசி என்றும் ஸ்கைப் என்றும் பல சாதனங்கள் வந்து விட்டதாலும் சமூக வலைத்தளங்கள் பெருகி விட்டதாலும் பாரம்பரியத் தபால்களின் பண்பாட்டுப் பெறுமதி கால வெள்ளத்தோடு கரைந்து போகிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் வாழ்வும் நகர்கிறது............................

ஈழமுற்றத்துச் சகோதர உள்ளங்களுக்கு புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்!






Author: யசோதா.பத்மநாதன்
•12:04 AM
இலங்கை வானொலிக்கு அதிலும் குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்சேவை 2, மற்றும் வர்த்தக சேவைகளின் ஒலிபரப்புக்கு ஒரு சுவை மிகுந்த வரலாறு இருக்கிறது.தமிழின் உச்சரிப்புச் சுத்தமும் ஒலித் துல்லியமும் அனேகத் தமிழரை அதனோடு கட்டிப் போட்டிருந்தது.

அப்போது தொலைக்காட்சியோ வேறு வகையான பொழுது போக்குச் சாதனங்களோ இல்லாதிருந்ததும் அதற்கொரு காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அதனைக் காரணம் காட்டி இந்த ஒலிபரப்புச் சேவையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.அது தன் தரத்தில் முன்னின்றது.

அது மாத்திரமன்றி அதில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.ஒவ்வொரு நாள் காலையிலும் இடம் பெறும் பொங்கும் பூம்புனலும் அதற்கான முகப்பு இசையும்  மறக்கக் கூடிய ஒன்று தானா? அது போல பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நான் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் என்ற முகப்பு பாடலோடு அறிமுகமாகும் பிறந்த நாள் வாழ்த்து,பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்கு வரும் மங்கல கரமான முகப்பு இசையோடு வரும் ராஜேஷ்வரி சண்முகத்தின் இனிய குரல்,சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக் காலத்தில் செய்திக்கு முன்னால் இடம்பெற்ற மேள ஓசை அதனைத் தொடர்ந்து வரும் சற் சொரூபவதி நாதன் அவர்களின் உச்சரிப்புச் சுத்தமும் தேனில் குழைத்த கம்பீரமும் கலந்த செய்தி அறிக்கை,....

அது போல திரைவிருந்து அதனோடு வரும் கே.எஸ். ராஜாவின் கொஞ்சும் குரல், நல்லதமிழ் கேட்போம் என்ற படி வரும் ஒலிச்சித்திரமும் ராஜகுரு.சேனாதிபதி.கனகரட்னம் என்னும் பெயரும்,... அப்படியே நீட்டிக் கொண்டு போனால் சிறுவர் மலர், அதனை நடத்திக் கொண்டிருந்த வானொலி மாமா, (அவர் இப்போது இங்கு சிட்னியில் தான் இருக்கிறார்),ஸ்டார் ரொபியின் மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி,அப்துல் ஹமீத்,லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, மற்றும் நீங்கள் கேட்டவை, விடுமுறை விருப்பம்,

’முற்றத்து மல்லிகையில்’ வரும் ஈழத்துப் பாடல்கள்,மற்றும் அறிவிப்பாளர் ஜோசெப் ராஜேந்திரனின் நான் உங்கள் தோழன் எந்த நாளுமே நல்ல நண்பன்...பாடல்,அறிவிப்பாளர் நடேச சர்மா, அந்தக் குரலுக்கென்றிருந்த ஒரு மென்மை கலந்த வசீகரம்,இரவு 9 மணிச் செய்திக்கு முன்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒலிபரப்பாகும் முஸ்லீம் நிகழ்ச்சி, செய்திக்கு ஒரு நிமிடம் முன்பாக அவர்கள் சொல்லும் வரலாற்றில் ஓரேடும் குறிப்பும் சலவாத்தும், அப்படியே அவர்கள் சொல்லும் ’அஸலாமு அலைக்கும் ப்ஃரகத்துல்லாஹூ பரஹாத்துஹூ’..... எல்லாமும் இன்றும் அப்படியே மனதில் பதிந்து போயிருப்பதற்கு அந்த ஒலிபரப்புக்கு என்றிருந்த தரம், செல்வாக்கு நிச்சயமாக ஒரு காரணம் தான்.

அக்காலங்களில் ஒலிபரப்பான நாடகங்களைத் தான் மறக்க முடியுமா? இசையும் கதையும்,சனி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை ஒலிபரப்பான கதம்பம்,தணியாத தாகம், இரைதேடும் பறவைகள், சந்தியாகாலத்துப் புஷ்பங்கள்,கோமாளிகள் என்றொரு தமிழ்,முஸ்லீம்,சிங்கள இனத்தவரை அவர் தம் இயல்புகளை வாழ்க்கைக் கோலங்களை மையமாக வைத்து இடம்பெற்ற நகைச்சுவைநாடகம்(மரிக்கார்.ராமதாஸ்,அப்புக்குட்டி.ராஜகோபால்,....செல்வசேகரன்) போன்றவை நாம் தவறாமல் கேட்ட நாடகங்கள் அல்லவா? அதிலும் குறிப்பாக மக்கள் வங்கியால் வருடக்கணக்காக ஒலிபரப்பாக்கப் பட்டு வந்த தணியாத தாகம் ஞாயிற்றுக் கிழமை 4.30. மணிக்கு குடும்பத்தையே வானொலிக்கு முன்னால் உட்காரவைத்த சாதனையைப் படைத்திருந்ததல்லவா? அதில் சில்லையூர் செல்வராஜனும் கமலினி செல்வராஜனும் இணைந்து பாடும்,
..............
..............
மனையிலே மக்கள் குறைவிலாக் கல்வி
மான்களாய் வளர வழியெதென்கிறாய்

கேள்வி அது தானே?

ஆமாம் அத்தானே!

மக்கள் வங்கியே நம் தோழன்
வழி புரிவான் கண்ணே!

.........................
.......................

சிறு தொகை தானே சேமிக்கின்றோம்
செலவுக்கெது வழி ஆகும் என்கிறாய்

கேள்வி அது தானே?

ஆமாம் அத்தானே!

மக்கள் வங்கியே நம் தோழன்
வழிபுரிவான் கண்ணே!

பாடல் நினைவிருக்கிறதா?

இப்போது பல தனியார் வானொலிகள், போட்டிகள், ஒலிபரப்பு முறைகளில் கூட அநேக வேறுபாடுகள்,நிதானமற்ற ஒரு ஓட்டம்,அவசரம், உச்சரிப்புத் துல்லியம் இன்மை, அறுத்து உறுத்து முழுமையாகப் பேசாமல் நுனி நாக்கில் இருந்து புறப்படும் தமிழ், ர,ற,ல,ள,ழ வேறுபாடு தெரியாத ஒலிபரப்பாளர்கள்,நுனிப்புல் மேய்ந்த படியே ஓடிக்கொண்டிருக்கும் ஒலிபரப்புகள்,மற்றும் விளம்பரங்கள்........

இனியும் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ!

அதனால் தெரிந்ததையும் அறிந்ததையும் பதிந்தும் பகிர்ந்தும் கொள்வது ஆரோக்கியமானது தானே? உங்கள் நினைவுகளில் இருந்து ஏதேனும் இதில் கூறப்படாதிருந்தால் அதனை அறியத்தாருங்கள்.

இனி வானொலியின் வரலாறுக்கு வருவோம்.



வானொலி பற்றிய என் முதல் ஞாபகம் இது. நான் மிகச் சிறு பிள்ளையாக இருந்த போது பார்த்ததும் கேட்டதும் இதிலிருந்து தான்.பாடல் சம்பந்தமாக சப்பாணி வெட்டி அமர்ந்திருந்து எப்போதாவது அபூர்வமாய் ஒரு பொழுதில் குஞ்சம்மா வீட்டில் ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப் படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார்...”,” பாடலும் ஈச்சைமரத்து இன்பச் சோலையில்....” பாடலும் இதில் கேட்ட ஞாபகம்.





அதன் பின் இன்னும் சற்றே வளர்ந்த பின் கொழும்பில் இருக்கும் என் பெரிய மாமனார் வீட்டுக்குப் போகும் போது அங்கு இதனைப் பார்த்த ஞாபகம்.கொழும்பும் மாமாவும் ஒரு பெரிய பிம்பமாய் மனதில் விழுந்திருந்த காலம் அது. இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னால் இதில் “குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்...” பாடலும் கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மைதடவி....” பாடலும் மெல்லியதாக அவர்களின் அறையில் இருந்து வரக் கேட்ட ஞாபகம்.



இப்போது எனக்கு சற்றே 9,10 வயதாகி விட்டது என வைத்துக் கொள்ளுங்களேன். இது யாழ்ப்பாணத்தில் என் அம்மம்மா வீட்டில் இருந்த றேடியோ.பெரும்பாலும் அந்தக் காலம் அனேகமானவரின் வீட்டில் இது தான் இருந்திருக்கும் என நம்புகிறேன்.சிப்பிகளால் செய்த உருவங்கள் கொண்ட show case இற்கு மேல் கையால் சிவப்பும் பச்சையுமாய் பூவேலைப்பாடுகள் செய்த தாமரைப்பூ வர்ண விரிப்பின் மேல் கம்பீரமாய் அது அமர்ந்திருந்தது.


இப்போது நான் எங்கள் வீட்டில் இருந்த றேடியோவை அறிமுகப் படுத்தி ஆக வேண்டும். அதற்கு ஒரு சிறு அறிமுகமும் தேவை. என் பெற்றோரின் திருமணத்தின் போது நான் முன்னர் சொன்ன பெரியமாமாவால் திருமணப்பரிசாக அப்பா அம்மாவுக்குப் பரிசளிக்கப் பட்டது அந்த வானொலி. அது இதே தான்.எங்களை விடக் கூடுதலான வயசான அது நெடுங்காலம் சிறப்பாக உழைத்தது.வெள்ளை நிறத்தில் சிவப்பு எழுத்துக்கள் கொண்ட பிளாஸ்டிக் குடுவையில் நீண்ட சிவப்பு மூக்கோடு இருந்த singer oil அதனை மினுமினுப்பாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றியது.





இதன் பின்னால் வந்து சேர்ந்தது ரேப் றக்கோடர்.




என் தந்தையாரின் நண்பர் லண்டனில் இருந்து வந்த போது தந்தையாருக்கு மேலே இருக்கிற இதே மாதிரியான ரேப் றக்கோடரைப் பரிசளித்திருந்தார்.அது பிறகு பல ரகங்களிலும் பல திணிசுகளிலும் பல வடிவங்கள் மற்றும் நிறங்களிலும் வந்தன.

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் வீடுகளையும் அலங்கரித்திருக்கலாம்.









அது பிறகு இளைஞர் யுவதிகளின் மத்தியில் Walkman ஆகப் பரினமித்து மிகப் பிரபலமானது.




கீழே இருக்கும் இவை இக் காலங்களில் பிரபலம் பெற்றிருந்த றேடியோ வகையறாக்கள்.










வானொலிகளின் வரலாறு போராட்ட காலங்களில் டைனமோ சுற்றிக் கேட்கும் வகையில் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது.

அதன் பின் CD PLAYER கள் பிரபலம் பெற்றன. அவை தனியாகவும் எல்லாம் சேர்ந்த ஒன்றாகவும் விற்பனைக்கு வந்தன. சீ.டீக்களை இறுவட்டு என்பதா குறுந்தட்டு என்பதா என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடந்தேறின.போர் இடம் பெற்ற பிரதேசங்களிலும் இத்தன்மை இருந்ததா என்று தெரியவில்லை.






பின்னர் அவை முத்திரையின் அளவுகளிலும் MP3,பிறகு கைத்தொலைபேசி கணணி வழியாக எல்லாம் இப்போது கேட்கக் கிட்டுகிறது.




இனி வரும் காலங்களில் அவை எப்படியான வடிவங்களை எடுக்கும் என்று சொல்லத் தெரியவில்லை.

இவை எல்லா நாட்டுக்கும் பொதுவானவையாகவும் இருக்கலாம்.எனினும் வழக்கொழிந்து போய் விட்டதால் நம் நாட்டின் ஒரு காலத்து வாழ்க்கை முறையை சேகரித்து வைக்கும் ஒரு சிறு முயற்சியே இதுவாகும்.

மேலும் இதிலிருக்கிற ஒரு சிறு படம் அல்லது ஒரு சிறு நினைவு நம் இளமைக் கால நினைவுகளை மீட்டுத் தரப் போதுமானவையாகவும் இருக்கலாம்.

உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!


படங்கள்; நன்றி; கூகுள்
Author: யசோதா.பத்மநாதன்
•4:04 AM


என்ன எல்லாரும் சுகமா இருக்கிறியளோ?

அண்மையில் சிட்னியில் இருக்கும் பிரபலமான கடை ஒன்றுக்குப் போனேன்.

அங்கு,மூங்கிலினால் மிக நேர்த்தியாக வளைத்துச் செய்யப் பட்ட பல வடிவங்களைக் கொண்ட பாத்திரங்கள் வியற்நாம் நாட்டவர்களால் வீட்டுக் கைவினையாகச் செய்து சந்தையிடப் படுகின்றன. மிக இலேசாகவும் வசீகரமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கும் அப்பாத்திரங்கள் புழக்கத்துக்கும் சுகமானவை.இலேசானவை.கூடவே மரத்தினால் வடிவமைக்கப் பட்ட கரண்டிகளும் குடுவைகளும் உள்ளன.அது மாத்திரமன்றி ஓலைகளால் இழைக்கப் பட்ட பெட்டிகள்,பல ரகங்களிலும் பல அளவுகளிலும் மூடிகளோடும் வருகின்றன.

இவற்றைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து விட்டன.இப்போது வாயு,மின்சார அடுப்புகளும் உலோகத்தாலான ஸ்ரிமரும் பாவனைக்கு வந்து விட்டன.பிட்டு அவிப்பது வேலை மினைக்கேடு ஆகி ரெடிமேட் சாப்பாடுகள் வீட்டு மேசைக்கு வர ஆரம்பித்து விட்டன.

இனி ஈழத்து முற்றத்துக்கு யாரும் வந்து முந்தி எப்பிடி நாங்கள் பு(பி)ட்டு அவித்தோம் என்று பார்க்கிற காலம் வரும்.

அதற்காகத் தான் இந்தப் பதிவு.ஏதோ என்னால் முடிந்தது!:)

முன்னர் ஒரு காலம்! இற்றைக்கு 35,40 வருடங்களாவது இருக்கும்!!

அது ஒரு கொண்டாட்ட காலம்! தாயக மண்.போர் மூளாக் காலம்!!

யாழ்ப்பாணத்தில் ஊர் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது என் தாயாரின் தாய் தந்தையரின் வீட்டுக்கு மற்றும் தந்தையாரின் தாய் தந்தையர் வீட்டுக்கு போவது வழமை.திருமணமாகி வெளியூர்களில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் சகோதர சகோதரிகளின் குடும்பம் ஒன்று கூடும் காலமும் அது தான்.

பலாப்பழம்,வெத்திலைத் தட்டம்,பாக்குரல்,மூக்குப் பேணி,சிவப்பு சீமேந்துத் தரை,பனையோலை,முள்முருக்கு, கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் வாழைக்குலை, மற்றும் வெங்காயம்,மாட்டுக் கொட்டில்,மாதுளங்கன்று,கிளி கோதிய மாம்பழம்,விழுந்து கிடக்கும் விளாம்பழம்,புலவு என்று அழைக்கப் படும் தோட்டம்,கற்தறை,அதற்குள்ளும் செழித்து வளர்ந்திருக்கும் புகையிலைத் தோட்டங்கள்,செம்மண்,கிணறு,துலா,நெசவுசாலை,காங்கேசன் துறை சீமேந்துக் கூட்டுத் தாபனத்து விசில் ஓசை,எண்ணை வைத்து வாரி இரட்டை பின்னலோடு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டு வெள்ளைச் சீருடையில் சைக்கிள் ஓடும் மாணவிகள் மற்றும் மாணவர்கள்,இரவு 8.30க்கு காங்கேசன் துறையில் வந்து நிற்கும் யாழ்தேவி ,திருவிழாக்காலங்கள்,வாழையிலைச் சாப்பாடு,தண்னீர் பந்தல்,காப்புகள்,அம்மம்மா குழல்....என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நினைவுகள்!

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் நினைவுகளிலும் நிழலாடக் கூடும்!

அத் திருவிழாக் காலங்களில் வீட்டிலும் திருவிழாத் தான்.மாலை ஆறுமணி அளவில் சமையலறை பக்கமாய் மிக அமளியாய் இருக்கும்.தென்னந்தும்பும் சாம்பலும் கொண்டு விளக்கப் பட்ட வெங்கலப் பானையில் காய்ந்த தென்னம் மட்டைகளாலும் பன்னாடை மற்றும் பனை மட்டைகளாலும் எரிக்கப் படும் அடுப்பில் மருமக்களும் மச்சாள் மார்களுமாகக் குழல் புட்டு/ நீத்துப் பெட்டியில் பிட்டு அவிக்கும் வாசம் தூள் கிழப்பும்.

பிட்டும் தேங்காய் பூவும் தரும் வாசம் என்பதையும் தாண்டி பனை ஓலையால் கூம்பு வடிவில் தயாரிக்கப் படும் நீத்துப் பெட்டிக்கும் மூங்கில் குளாயினால் செய்து பருத்தித் துணி கொண்டு சுற்றப் பட்ட பிட்டுக் குழலினால் அவிக்கப் படும் பிட்டு மீண்டும் பனை ஓலைப் பெட்டிக்குள் கொட்டப் படும்.பிட்டின் வாசமும் தேங்காய்ப்பூ வாசமும்,பனை ஓலையின் வாசமும் சேர்ந்து ஒரு வித வாசம் அந்த வீடு பூரா பரவும்.

அதன் வாசமும் சுவையும் தனி.அதற்கு நல்லெண்னையில் பொரித்த கத்தரிக்காய் பொரியல் மத்தியானத்துக் குழம்பு அல்லது முட்டைப் பொரியல் என்று இப்படி ஏதேனும் இதுந்தால் அது இன்னும் விஷேசம்.

சரி இதற்குப் பொருத்தமா ஏதாவது கூகுளில் படம் ஏதாவது இருக்கிறதா பார்ப்போம் என்று பார்த்தால் மாதேவி என்றொரு சகோதரி பல அரிய - இப்போது பெரும்பாலும் கானக் கிடைக்காத படங்களைப் பதிவேற்றி இருக்கிறார்.(http://maathevi.wordpress.com/)
ஈழத்து முற்றத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.

படங்களுக்கு மிக்க நன்றி மாதேவி.

இது அரிக்கன் சட்டி.இதனை ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.



இது திரிகை.தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.



இது அம்மி.இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கள் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்ளங்களை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு? அதுவும் கருவேப்பிலை வச்சரைச்ச சம்பலும் புட்டும்!!



இது கொக்கத் தடி என அழைக்கப் படுவது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.



இது தயிர் கடையிற மத்து.தயிரில் இருந்து வெண்ணையையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.



உரல்! மறக்க முடியுமா இதை? ’உரல் மாதிரி ஏன் நிக்கிறாய்’ என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.பொக்குணி உரல் என்று இன்னொன்று இருக்கிறது.மரத்தால் செய்யப் பட்ட இது இடிச்சு இடிச்சு பள்ளம் விழுந்து போய் இருக்கும்.தோசைக்கு இடிச்ச சம்பல் இதில செய்தா வலு சோக்கா இருக்கும்!



அடுப்பு! பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.



ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல். இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’



பாக்கு வெட்டி! பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!



சட்டியும் அகப்பையும்! களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!




காம்புச் சத்தகம்! இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.



ஆட்டுக் கல்! வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!



சுளகும் இடியப்பத் தட்டும்! சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை, மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும்.’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்டு அடிக்குமாம்’ என்று ஒரு பழமொழி ஈழத்தில் வழக்கில் இருந்தது. கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.

இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!



திருவலகை! இது தான் சமையலறை நாயகன்.இல்லை, நாயகி.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!



வெத்திலத் தட்டம்!வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது. மணியாச்சியின்ர பேவரிட்.



இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது.வெத்திலைத் தட்டத்திற்கு அருகில் இருப்பதை பூட்டுச் செம்பு எண்டு எழுதி இருக்கிறா.அது வெத்திலையை ஸ்ரொக் பண்ணுற சாமானா இருக்கலாம்.ஆரும் தெரிஞ்சா சொல்லுங்கோ என்னெண்டு! மணியாச்சிக்கே தெரியேல்ல எண்டா பாருங்கோவன்! என்னென்ன சாமானெல்லாம் ஊரில புழக்கத்தில இருந்திருக்கு!!



இதுக்குப் பேர் விசிறி. பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது.

விசிறி வேணுமோ?






விசேட நன்றி;மாதேவி.
(http://maathevi.wordpress.com/)