Author: கலை
•3:51 AM
இந்த நத்தார் விடுமுறைக்கு ஒரு சின்ன சுற்றுலா போய் வந்தன். அதுல பொறுக்கின சில சொற்களும், கூடவே நினைவுக்கு வந்த சில பழைய சொற்களும் இங்க தாறன்.

உண்ணாணை

ஆச்சி சொல்லுவா, ‘உண்ணாணை நான் அங்க போட்டுத்தான் இப்ப வாறன்'. இதில, இந்த உண்ணாணை என்பது உன் + ஆணை, அதாவது 'உன்மேல் ஆணையாகச் சொல்கிறேன்' என்னும் பொருள்பட ஒரு சத்தியம் செய்வதுபோல சொல்லப்படுகிறது என நினைக்கிறேன். தற்போது இந்தச் சொல்லை யாராவது பயன்படுத்துகிறார்களா தெரியவில்லை.

அயத்துப் போனன்

இதுவும் ஆச்சி சொல்வதுதான். ”உண்ணாணை, அதை நான் அயத்துத் துலைஞ்சு போனன்”. அதாவது 'அதை மறந்துவிட்டேன்'.

அயந்துபோனன்

”நான் நல்லா அயந்துபோனன். அதில நீ வந்தது சத்தமே கேக்கேல்லை”. நான் நன்றாக நித்திரையாகி விட்டேன் / தூங்கி விட்டேன் என்ற பொருள்படும். 'தூங்கிறது' என்பதுகூட வேறு பொருள்தானே? ”அவள் தூங்கிட்டாளாம்” என்னும்போது, 'கழுத்தில சுருக்குப் போட்டு தற்கொலை செய்திட்டாளாம்' என்ற பொருள் படும்.

போந்த பொலிஞ்ச

ஒரு நல்ல வாட்ட சாட்டமான (குண்டான என்பதை இப்படி நாகரீகமாக சொல்லுறன்) ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கூறியது. “நீர் நல்ல போந்த பொலிஞ்ச Santa வாத்தான் இருக்கிறீர்”. நத்தார் காலமானதால், காலத்துக்கேற்ற படி (பகிடியாக) சொன்னார்.

கம்பி நீட்டிறது

அவளை தனிய விட்டால் கம்பி நீட்டினாலும் நீட்டிடுவாள்” என்றால், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிடுவாள் என்பதாகப் பொருள் வரும்.

பேய்.... உடன் வரும் சொற்கள் :)

கவனிக்க! பேய்க்கதை என்பது பேயைப்பற்றின கதையல்ல :). ”என்ன பேய்க்கதை கதைக்கிறாய்?, என்றாலோ அல்லது “சும்மா பேய்க்கதை கதையாதை” என்றாலோ, அதில 'பேய்க்கதை' என்பது 'விசர்க்கதை' அல்லது 'அர்த்தமற்ற கதை' என்பதாகப் பொருள்படும்.

அதே நேரம், ”அந்தாள் பேய்க்கடி கடிக்கும்” என்றாலோ, அல்லது “அந்தாள் பேய் அறுவை அறுக்கும்” என்றாலோ, ‘அந்த ஆள் நிறையவே வேண்டாத பேச்சுக்கள் பேசி நம்மை உண்டு, இல்லையெண்டு ஆக்கிவிடும்' என்பதாகப் பொருள்படும். அதாவது இந்த இடத்தில் ‘பேய்' என்பது, ‘நிறைய' என்ற பொருளில் வரும்.

(இதையெல்லாம் இங்க எழுதி நான்தான் இப்ப பேய் அறுவை அறுக்கிறேனோ தெரியேல்லை, ஹி ஹி. அதால இப்போதைக்கு நிப்பாட்டுறன்).


Author: Admin
•10:49 AM
தமிழர்களுக்கென்று சில கலை, கலாச்சார பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருவதைக் காண முடிகின்றது. ஆனாலும் இவற்றைப் பற்றி எல்லாம் அறிவதிலே எனக்கு ஆர்வம் அதிகமே.

அன்று தமிழர்களிடையே பல சமயம் சார்ந்த சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன. மந்திர, தந்திர, மாய வித்தைகள் ஒரு புறமிருக்க சமயம் சார்ந்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அதன் எச்சங்களைகூட இன்று காண முடியவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமய சம்பிரதாயங்கலிலே அதிக நம்பிக்கை கொண்டவர்களே. நான் நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

நான் பிறந்து வளர்ந்தது ஒரு விவசாயக் கிராமம் எனது கிராமத்திலே அன்று நடை பெற்ற ஆனால் இன்று அதன் எச்சங்களே இல்லாத சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

எனது ஊரிலே பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்று இருக்கிறது. (மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம்) கிராம மக்களின் வயற்காணிகள் நிறைந்திருக்கும் பகுதியிலே ஆலயம் அமைந்திருக்கின்றது. ஆலயத்துக்கும் வயற்காணிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

வேளாண்மைக்கு பூச்சி புழுக்களின் தாக்கம் ஏற்படும்போது கோவில் மடைப்பள்ளி சாம்பலை எடுத்துவயலுக்கு தூவினர். அதற்குக் கட்டுப்படாதவிடத்து பிள்ளையாரை அபிசேகம் பண்ணிய நீரை எடுத்து தெளித்தனர்

சமய ஆசாரத்துடன் பட்டினியாக இருந்த போடியார் ஒருவர் ஒரு பிடி மிளகை வாயினுள் அடக்கி தீர்த்தக் குடத்தை தொழிலோ, தலையிலோ சுமக்க ஏனைய போடிமார் அவருக்கு வெள்ளை மேற்கட்டி பிடிக்க, மணி ஓசையுடன் ஐயர் சங்கு ஊத, பறைமேளம் ஒலிக்க, வடக்கிலிருந்து தெக்கு நோக்கி நீர் பாச்சும் ஒவ்வொரு வாய்க்காலிலும் மிளகு கொஞ்சத்தை சப்பித் துப்பி தீர்த்த நிறையும் கொஞ்சம் ஊற்றுவர். இதுவே தீர்த்தமெடுத்தல் என்பதாகும்.

வயல் அறுவடைக்குத் தயாரானபோது குருக்கள், ஐயர், காவலாளிகள் சகிதம் சென்று வயத் போடிமாருக்கு பொங்கத் பிரசாதம் வழங்குவதுசம்பிரதாயமாகும். சிறுபோக நெல் விளைவுற்ற பருவத்தில் பன்றிக் காவலுக்கு இரவில் தகரம் கொண்டு செல்வதும் கடமையில் தவறியோருக்கு தண்டனை வழங்குவதும் இறுக்கமான கட்டுப்பாடாக இருந்திருக்கின்றது.

அறுவடையின் பின் ஆண்டுதோறும் பிள்ளையார் கோவிலடியில் வட்டை அமுது என்ற மாபெரும் அன்னதானம் நடைபெறும். போடிமார் தமது வயல் பரப்புக்கேற்ற அரிசி, தேங்காய், தயிர், மரக்கறி வகைகள், காசு என்பவற்றை எல்லாம் சேர்ப்பர்.

கோவில் குருக்கள் குளக்கட்டில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார். போடிமார் குடை, மேளதாளம், மணியோசை, சங்கொலி என்பவற்றுடன் சென்று கோவித்த பாவனையில் இருக்கும் குருக்களை சமாதானப் படுத்தி திருவமுதுக்கு எழுந்தருளப் பண்ணுவார். திருவிழா ஊர்வலம் போல் நடைபெறும் இவ விழாவில் பொதுமக்களும் பங்குபற்றி மகிழ்வர்.
மறைந்து வரும் தமிழர் நம் சம்பிரதாயங்கள் இன்னும் பல அவ்வப்போது உங்களை வந்து சேரும்.
Author: Admin
•4:28 AM
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.

இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.

இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

சந்ரு
Author: வர்மா
•6:46 AM
தமிழ் எனநினைத்துதினமும் தமிழ் அல்லாதசொற்களை பேசுகிறோம் எழுதுகிறோம். கட்டில்,கதிரை,மேசை,யன்னல் இவைதமிழல்ல, ரெலிபோன்,றேடியோ,ரயில்,போன் இவை ஆங்கிலம் எனத்தெரிந்தும் தமிழ் போல்பாவிக்கிறோம் நான் படித்த சிலநல்லதமிழை ஈழத்துமுற்றத்தில் பதிகிறேன்,

கிழமை

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
அறி
வியாழன்
வெள்ளி
காரி

மாதம்

தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேஷம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாதி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை

முத்துக்குறைவி//////////////// இளம் வயதில் நிறைந்த அறிவுடையவள்
பெரணிநார் /////////////////பனைமட்டையில் உரித்தநார்.
ஈரக்களி -//////////// பிரம்பு
நஞ்சோடை ////////////உப்பை வாரியபின் எஞ்சிய நீர்
வெளிச்செல்லும் ஓடை
மொழி மாறா ஓலை/////// - நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
ஆகூழ்///// வளர்ச்சி
போகூழ் //////அழிவு
அங்க பாடல்////// பொருள் ஒழித்து பாடுதல்
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•3:02 AM
உங்களுக்கு ஒதிய மரத்தைப் பற்றித் தெரியுமா? கண்டிருக்கிறீர்களா? (மரங்களைப் பற்றித் தொடர் போல ஆரம்பித்த வசந்தனுக்குத் தெரிந்திருக்கக்கூடும்)

நெடு நெடுவென்று வளருமாம்.. ஆனால் யாருமே இந்த மரத்தில் ஏற மாட்டார்களாம். ஏனா? ஏறினால் பலமில்லாத மரத்துக் கொப்பு முறிஞ்சு ஆள் கீழ மண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பார். கை கால் மேலெல்லாம் நோக, நகர இயலாமல் விழுந்து கிடப்பராம்.

அதனாலேயே ஆகவும் ஏலாமல் சவண்டு போய்க் கிடப்பவர்களைக் கண்டால் 'என்னடா ஒதிய மரத்தால விழுந்தவன் மாதிரிக் கிடக்கிறா?" என்று 'அன்பாக' விசாரிப்பார்களாம் ஊரவர்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.. "ஒடியும் மரம்" தான் பேச்சு வழக்கில் ஒதிய மரம் என்று ஆனதா?

அ.பொ.சொ.வி:

கொப்பு - கிளை
மேல் - மேனி
ஆகவும் - அதிகமாக (ரொம்ப)
ஏலாமல் - இயலாமல் / முடியாமல்
சவண்டு -சோர்ந்து
Author: கானா பிரபா
•1:05 AM

இஞ்சை தங்கமக்கா ! எல்லுப் போல சீனி நல்லெண்ணை இருந்தாத் தாங்கோ, ஆனைக்கோட்டைக்கு இவர் வாங்கப் போயிட்டார், வந்தவுடனை தாறன்"

மேற் சொன்ன உதாரணத்தில் வரும் எல்லுப் போல என்ற சொற் பிரயோகம் கொஞ்சம் சிறிய அளவில், அல்லது தமிழக வழக்கில் பயன்படுத்துமாற் போல "கம்மியா" என்ற பொருட் பதத்திற்கு ஒப்பானது.

தாயகத்தில் இருக்கும் காலத்தில் பக்கத்து வேலியால் எட்டி நின்று சீனி, உப்பு, எண்ணெய் போன்ற சாமன்களைப் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவசரம், ஆபத்துக்கு என்று வாங்கும் போது இப்படியான "எல்லுப் போல" என்ற சொல் பயன்பாட்டில் இருக்கும். கொஞ்சம் அதிகப் படியாகக் கேட்கும் தொனியில் கேட்டால் பக்கத்து வீட்டுக்காரர் பயந்து விடுவார்களோ என்ற காரணமாக இருக்குமோ என்னமோ.

"எல்லு" என்பதற்கு அகராதியில் என்ன விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள் என்று பார்த்தால் "நாள்", "சூரியன்" என்று மட்டுமே விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அகராதியின் விளக்கத்தை இங்கே பொருத்திப் பார்க்க முடியாது. "எள்ளுப் போல" என்பது மருவி "எல்லுப் போல" ஆகியிருக்கலாமோ என்னவோ.

ஜாஸ்தி என்று தமிழகத்தில் வழங்கும் சொற்பதத்துக்குச் சம அர்த்தமாக ஈழத்து மொழி வழக்கில் "கனக்க" என்பது அமையும்.

"கனக்கப் போசாதையும், கண்டீரோ"

"திருவிழாவுக்கு கன சனம் வந்தது"

"கன சாமான்கள் கடையில் வந்திருக்காம்"

போன்ற உதாரணங்கள் "கனக்க" என்பதற்குப் பொருத்திப் பார்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்களாகும்.

Author: கானா பிரபா
•2:33 AM
"எடியே! ஏனடி இடி விழுந்த மாதிரி கன்னத்திலை கை வச்சுக்கொண்டு யோசினை, கையை உப்பிடி கன்னத்திலை வச்சுக் கொண்டிருக்காதை, தரித்திரம் பிடிச்சுடும்".

மேற்கண்ட ஏச்சு வழக்கமாக ஈழத்துக் கிராமத்தின் பெரியவர்களால் சம்பாஷிக்கப்படும் ஏச்சுக்களில் ஒன்றாக இருக்கும்.

அடியே என்று தமிழக வழக்கில் இருப்பது தான் ஈழத்தில் எடியே என்று அமைந்து காணப்படும்.
எடியே என்பதற்கு ஒத்திசைவாக கேரளத்தின் மலையாளப் பேச்சு வழக்கிலும் "எடி" என்று வழங்கப்படுவதை மலையாளப் படங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதே போன்று மலையாளத்தில் "எடா" என்று புழங்கப்படும் வார்த்தைப் பிரயோகம், தமிழகத்தில் "அடே" என்று வழங்கப்படும் அதே சமயம் ஈழத்தில் "எடேய்" என்று பயன்படுத்தப்படும்.

தமிழகத்தின் ஊர்களில் எடியே, எடி, எடே, எடேய் என்று ஈழத்தில் பயன்படுத்துவது மாதிரி வழக்கம் உண்டா தெரியவில்லை.

"எடேய் தம்பி" என்று அன்பாக வழங்கப்படும் சொல் அடிகளை கொஞ்சம் அழுத்திக் கடுமையாகப் பேசினால் அதுவே வன் சொல்லாக அமைகின்றது.

என்னடா இது ஈழத்து முற்றத்தில் எடியூரப்பா என்று நினைத்து வந்தவர்களுக்கு இப்போது விடை கிடைத்திருக்குமே ;)

படம் உதவி: விடை நோக்கி இணையத்தளம்
Author: மணிமேகலா
•3:55 AM
உலகின் பழமையானதும் சிறப்பானதுமான மொழிகளில் தமிழும் ஒன்று.தமிழ் மொழி கணக்கினை இவ்வாறு அர்த்தப் படுத்துகிறது. இவற்றில் பல இன்று வழக்கொழிந்து போனாலும் கணக்கினைக் கையாளும் தமிழ் மொழியின் சிறப்பை ஒரு தகவல் கருதி இங்கு தருகிறேன்.

1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்துநூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகற்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கணம்
1000000000000 = கற்பம்
10000000000000 = நிகற்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெள்ளம்
100000000000000000 = அந்நியம்
1000000000000000000 = அற்ட்டம்
10000000000000000000 = பறற்ட்டம்
100000000000000000000 = பூறியம்
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மகாயுகம்

இது போல் அளவைகளுக்கும் வாய்ப்பாடுகள், பெயர் வழக்குகள் இருந்திருக்கின்றன.உதாரணமாக,

நீட்டல் அளவை

காதம் = 10 மைல்
ஓசனை = 4 காதம்
கல் = 1 மைல்
முழம் = முழங்கை முதல் நடுவிரல் நுனிவரை
சாண் = கட்டைவிரல் நுனி முதல் சிறுவிரல் நுனி வரை
ஒட்டைச் சாண் = கட்டைவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையில் உள்ள இடைவெளி.
சாட் கோல் = சாண் அளவுள்ள கோல்
அங்குட்டம்= கட்டை விரல் நீளம்
அடி= 12 அங்குட்டம்
காசாங்கிரம்= மயிர் நுனி அளவு
ஆள்= ஒரு மனிதனின் உயரம்

நிறுத்தல் அளவை

ஆழாக்கு = 1/8 படி
செவிடு = 1/5 ஆழாக்கு
சேர் = 5 ஆழாக்கு
வீசை = 1400 கிறாம்
இடா = முகத்தல் அளவை( எதுவென்று தெரியவில்லை)
உழக்கு = 1/4 படி
சின்னப் படி = 1/2 படி
பக்கா = 2 படி
லட்டி = 1 படி
வல்லம் = 2 அல்லது 4 படி
எத்துணை = எள் அளவு
கஃகு = 1/4 பலம்
பலம் = தோராயமாக (அண்னளவாக) 35 கிறாம்(1 மஞ்சாடி?)
இறாத்தல் = 13 பலம்

கோட்டை = 21 மரக்கால்
தூணி = 8 மரக்கால்
கலரை = 1 1/2 மரக்கால்
குருணி (மரக்கால்)= 8 படி

பரப்பளவு
குண்டு = 1089 சதுர அடி
குழி = 144 சதுர அடி
மா = 100 குழி
வேலி = 20 மா(6.67 ஏக்கர்)


கற்பம் = பிரம்மாவின் ஒரு நாள் 4,32,00,00,000 வருடம்
பதும கற்பம் = பிரம்மாவின் வாழ்க்கையின் முதல் பகுதி
உரி = அரை நாழி
கன்னல் = (நாழிகை)24 நிமிடங்கள்
கணம் = நொடிப் பொழுது / கண் இமைக்கும் பொழுது.
படலம் = செயல் நடக்கும் நேரம்

கால அளவு

யாமம் = 3 மணி நேரம் அல்லது 7 1/2 நாழிகை
மண்டலம் = 40 / 41 / 45 நாட்கள்
மாமாங்கம் = 12 வருடங்கள்.
Author: சஞ்சயன்
•10:38 PM
இந்த கிழம பிளமிங்டன் (சிட்னி) போன போது அங்க ஒரு கடையில (கானா பிரபா மாதிரி எந்தக் கடை என்றெல்லாம் கேக்கக் கூடாது...... அழுதுடுவன்) தமிழ் மரபு எண்டு ஒரு புத்தகம் வாங்கின நான். அதில கனக்க விசயமிருக்கு. வித்துவான் பொன். முத்துக்குமரன் பி.ஓ.எல் (யாழ்ப்பாணம்) எழுதின புத்தகம். என்னைப் போல தமிழ் வகுப்பை கட் அடித்து படம் பார்க்க போன அறிவுக் கொளுந்துகளுக்கு வயது வந்த பின் தமிழ் படிக்க நல்ல புத்தகம்..

அதில நாம கதைக்கிற இணை மொழிகள் கனக்க இருந்தது. அதில சிலது விளங்கேல்ல. தெரிந்த புண்ணியவான்கள் பதில் சொல்லுங்கோ (பாவிகளும் சொல்லலாம்).


1. கன்று காலி
2. கூட்டம் நாட்டம்
3. போக்குப் புகல்
4. விருந்தாள் வேற்றாள்
5. வேரும் தூரும்
Author: சஞ்சயன்
•10:24 PM
திடீர் என ஒரு சந்தேகம் வந்தது இப்ப..

யாராவது பதில் தொரிந்தால் சொல்லுங்க.. புண்ணியம் கிடைக்கும்

”கோதாரி விழுந்த” என்றால் என்ன?

பி.கு:

சிட்னிக்கு வந்தாப் பிறகு விசர்த்தனமான சந்தேகங்கள் வருது....ஒரு கிழமைக்கு முன் கொசுவுக்கு எத்தனை கால் என்ற சந்தேகம் வந்தது.. கொசுவை கலை, கலை என கலைத்து கடைசியா அதுக்கு 6 கால் என்று கண்டுபிடிச்சாப் பிறகு தான் நித்திர வந்தது..


அன்புடன்
சஞ்சயன்
Author: கலை
•1:30 AM
கொழுவல்!

.......................................

விடுப்பு (பூராயம்) கதைக்கிறவர் ஒருவர்: “அந்த கமலன் வீட்டில அண்ணனுக்கும், தம்பிக்குமிடையில நல்ல கொழுவலாம்”. (சிலபேர் இதை ஒருவித மகிழ்ச்சியுடன் சொல்வார்கள். மற்றவை கொழுவுப்படுறதில இவைக்கு அவ்வளவு மகிழ்ச்சி :)

(பூராயம் என்பது நல்ல பழங்காலத்தில பாவித்த ஒரு சொல் என்று நினைக்கிறன். ஆச்சி சொன்னதைக் கேட்டிருப்பதாக சின்ன ஞாபகம்.)

........................................

அம்மா மகனிடம்: “தங்கச்சியோட ஏன் நீ கொழுவிக்கொண்டு இருக்கிறாய். சும்மா உன்ரை வேலையைப் பாத்துக்கொண்டு போ பாப்பம்”
மகன்: “நானெங்கை கொழுவுறன். அவள்தான் என்னோட கொழுவலுக்கு வாறாள்”.

.........................................

நல்ல நோக்கமுள்ள ஒருவர்: “இவ்வளவுநாளும் நல்ல சினேகிதமா இருந்திட்டு, இப்ப சும்மா தேவையில்லாம கொழுவுப்பட்டுக் கொண்டு இருக்கிறாங்கள். நாந்தான் ஒருமாதிரி சமாதானம் பிடிச்சு விட்டனான்”

..........................................

எனக்கொரு சந்தேகம். 'கொழுவுதல்' என்பதை நேரடியாக யோசித்துப் பார்த்தால், ‘இணைதல் அல்லது இணைத்தல் என்ற பொருள்தானே வரும். அப்படியிருக்க, அதற்கு நேரெதிரான சண்டை பிடித்தல் என்னும் பொருளில் ஏன் ‘கொழுவுத' பாவிக்கப்படுகிறது?

...................................

பி.கு; என்ன கானா பிரபா ஏதாவது சந்தம் தொனிக்குதா? :). ஒரு ‘ழு' எழுத்து வருகுதெண்டு நினைக்கிறன் :)
Author: கலை
•6:41 AM
புழுகமும், புழுகுதலும்!

இந்தச் சொற்கள் எங்கெல்லாம் பாவிக்கிறவை எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் நான் கேள்விப்பட்டது தென்மராட்சியில.

1. புழுகம்/புழுகு = மகிழ்ச்சி

- இண்டைக்கு கானாப் பிரபாட இடுகைக்கு நிறைய பாராட்டு கிடைச்சதுல, ஆளுக்கு நல்ல புழுகம்.

- ஷ்ரேயாட வீட்டை அவடை பெரியண்ணா ஆக்கள் போயிருக்கிறதினால, அவ பெரிய புழுகில நிக்கிறாவாம்.

2. புழுகுதல் = மற்றவரைப் பாதிக்காத பொய்களைச் சொல்லுதல் அல்லது உண்மைகளையே மிகைபடச் சொல்லுதல் / பெரிதுபடுத்திச் சொல்லுதல்

- அவன், நல்லா புழுகுவான். அவன் சொல்லுறதில பாதியைத்தான் உண்மையெண்டு எடுக்கலாம்.

- அவள் புழுகுறதை கேட்டுக் கொண்டு நிண்டா, எனக்கு விசர்தான் (விசரெண்டா இந்த இடத்தில பையித்தியமில்லை, ஒரு எரிச்சல்) வரும். ஏதோ எங்களுக்கு ஒண்டும் தெரியாதெண்ட நினைப்பில புழுகிக் கொண்டே போறது.

சரி, இனி எப்பவாவது, இப்பிடி ஏதாவது ஒரு சொல்லு, அல்லது எங்கட ஊர்ப் பழக்கம் நினைவுக்கு வரும்வரை நான் போட்டு வாறன்.
Author: கானா பிரபா
•1:37 AM

"ஏன் தம்பி! கோயில் பக்கம் காணேல்லை"
"என்ரை ஆச்சி செத்து ஒரு மாசம் ஆகேல்லை எல்லோ, எனக்கு துடக்கு அதுதான் வாறேல்ல"

"என்ன விமலா! வீட்டுக்கு வெளியாலை காணக்கிடைக்கிறேல்லை"
"ஓம் அன்ரி, மூன்று நாள் என்ர துடக்கு முடியேல்லை, அதுக்குப் பிறகு தான் வருவன்"

"தம்பிராசா! நாளைக்கு திருவெம்பாவை, கோயிலுக்கு வருவீர் தானே"
"இல்லையடா சிவம் இன்னும் குழந்தை பிறந்த துடக்குத் தீரேல்லை"

மேலே பார்த்த மூன்று வேறுபட்ட சம்பாஷணைகளிலும் வருகிறது பொதுவான ஈழ மொழி வழக்கான "துடக்கு" என்ற சொற்பதம்".

தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் "தீட்டு" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் "துடக்கு" என்று பரவலாகப் பயன்பட்டு வருகின்றது.

"துடக்கு" என்பது தமிழக மொழிவழக்கில் பயன்பாட்டில் உள்ளதா என்று அறியேன், இந்தச் சொல்லுக்கு ஆசூசம், கட்டு, சிக்கு, துடக்கென்னேவல், மகளிர் சூதகம் போன்ற சொற்களை ஒத்த சொற்களாகக் காட்டுகின்றது ஈழத்து அகராதி நூல்.

யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி
இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கும் இந்த தீட்டு/துடக்கு என்பது ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. பொதுவாக இறப்பு வீட்டில் சாப்பிட்ட, நீர் அருந்திய இரத்த சம்பந்தமில்லாதோருக்கும் இந்தத் துடக்கு இப்படியானவகையில் தொடர்பு பட்டு வந்து விடுவதாகவும் கொள்ளப்படுகின்றது. எனவே குறித்த இறப்பு வீட்டில் "துடக்குக் கழித்தல்", அல்லது "தீட்டுக் கழித்தல்" முடியும் வரை சுபகாரியங்கள், கோயிலுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். கோயிலுக்கு நிதமும் செல்லும் வழக்கம் கொண்டோர் வெளி வீதியில் மட்டும் நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள். துடக்குக் கழித்தல் என்பது அந்தந்தப் பிரிவு மக்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. சிலர் 30 நாள் முடிவிலும், இன்னும் சிலர் அதுவும் அந்தணர்கள் 21 நாள் முடிவிலும் இப்படியான தீட்டுக் கழித்தலைச் செய்து முடிக்கின்றார்கள். குறித்த தீட்டுக் கழித்தல் நாளில் வீட்டுக்கு அந்தணர் வந்து சடங்கு செய்து இதை நிறைவேற்றுவார்.

அடுத்ததாக மகளிரின் மாதவிடாய் நாட்களிலும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இப்படியான "துடக்கு" ஏற்படுவதாகவும் கொள்ளப்படுகின்றது.

மூன்றாவதாக ஒரு வீட்டில் பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை பிறந்து முப்பது நாள் முடிவில் துடக்கு கழிக்கும் வரை "துடக்கு" இருப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

துடக்கு பற்றி இப்படி ஒரு விளக்கம் இருந்தாலும் இன்னொரு துடக்கும் இருக்கிறது . அது என்ன தெரியுமா?
ஒரு காரியத்தைத் "தொடக்குதல்" (ஆரம்பித்தல்) என்பதை துடக்குதல் என்றே ஈழ மொழி வழக்கில் பேச்சு வழக்காகப் பாவிப்பார்கள்.
"தொடங்கீட்டீங்களா" என்று ஒரு தமிழக நண்பர் சொன்னால் அதையே
"துடங்கீட்டீங்களோ" என்று ஈழ நண்பர் பேசுவார்.

படம் நன்றி: http://www.sulekha.com/

Author: சஞ்சயன்
•2:35 AM
விதி கிழிந்த குருவி பீரங்கி வாசல்ல கூடு கட்டிச்சுதாம். இந்த சொற்றொடரை யாராவது கேட்டிருக்கிறீர்களா?

எனது நண்பர் ஒருவர் அடிக்டி சொல்லும் சொற்றொடர் இது. அவரைத் தவிர வேறு யாரும்அதை சொல்லிக்கேட்டதில்லை.

இதை மாதிரி குரங்கிட்ட மூத்திரம் கேட்ட மாதிரி கொப்பு கொப்பா தாவுறான் என்றும் சொல்லுவான்.


இப்படி வித்தியாசமான விசயங்கள் இருந்தால் சொல்லுங்களன். கேப்பம்

அன்புடன்
சிட்னி வெய்யிலில் சட்னியாகிக் கொண்டிருக்கும்
சஞ்சயன்

நான் சிட்னி வந்திருப்பதும் விதி கிழிந்த குருவி பீரங்கி வாசல்ல கூடு கட்டின மாதிரி போல
Author: கானா பிரபா
•2:14 AM
ஈழத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விசேடமான அம்சங்கள் அவை உணவுப் பதார்த்தமாகட்டும் அல்லது இயற்கையோடு மையப்படுத்தியதாகட்டும், அல்லது கைத்தொழில் சார்ந்த விடயங்கள் ஆகட்டும் இவற்றை ஒரு பதிவில் அடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எனக்குத் தெரிந்த தகவல்களோடு வருகின்றேன்.

உங்கள் பின்னூட்டங்கள் மூலம் விடுபட்டவையை அறியத் தந்தால் அவற்றை பிற்சேர்க்கையாக இணைத்துக் கொள்வேன்.

இணுவில் - மரவள்ளிக் கிழங்கு (எங்களை எல்லாம் கிழங்கு என்ற அடைமொழியோடு தான் மற்ற ஊர்க்காரர் அழைப்பார்கள்)
தாவடி - புகையிலை

மட்டுவில் - கத்தரிக்காய்

ஆனைக்கோட்டை - நல்லெண்ணை

நிலாவரை - வற்றாத கிணறு

பருத்தித்துறை - பருத்தித்துறை வடை (தட்டையாக மொறு மொறு என்று இருக்கும் பதத்தில் செய்தது)

பளை - தேங்காய் ( நிறைய தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு தேங்காய் விளைவிக்கப்படும் ஊர்)

கீரிமலை - யாழ்ப்பாணத்தவர் பிதிர்க்கடன் தீர்க்கப் போகும் கடல், கூடவே விடுமுறை நாட்களில் நீச்சலடிக்கும் இடம்

கசூர்னா பீச் - கசூர்னா என்ற பெயரோடு அழைக்கப்படும் கடற்கரை

யாழ்ப்பாணப் பிரதேசம் - பனங்காய் பணியாரம், ஒடியற்கூழ், புழுக்கொடியல்

பரந்தன் - இரசாயனத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)

ஆனையிறவு - உப்புத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)

காங்கேசன் துறை - சீமெந்து தொழிற்சாலை (ஒருகாலத்தில் இயங்கியது)

வாழைச்சேனை - காகிதத் தொழிற்சாலை

மண்டைதீவு - சுருட்டு (வந்தியத்தேவன் பகிர்ந்தது)

மட்டக்களப்பு - தயிர் (மழை ஷ்ரேயா பகிர்ந்தது)

திக்கம் - சாராய வடிசாலை (சயந்தன் பகிர்ந்தது)
Author: கரவைக்குரல்
•9:58 AM
ஒரு வேலையை சும்மா முடிக்கவே ஏலாது பாருங்கோ,அதைவிட அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் முடிக்க முடியாது எண்டால் அதிலை உண்மை இருக்குது பாருங்கோ,என்னதான் பெரிய திட்டம் போட்டு செய்தாலும் அதற்கு எதிரான கருத்துடையவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயம்.நிகழ்வுகள் முடிந்த பின் அப்படியாக நிகழ்வுகள் சம்பந்தமாக அதை நிராகரித்து கருத்துரைப்பவர்களும் இருகிறார்கள்,அதேபோல ஆமோதித்து கருத்துரைபவர்களும் இருக்கிறார்கள்,அவையெல்லாம் நிகழ்வு அமைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,
இப்படியாக நிகழ்வினால் வரும் எதிர்பார்க்கமுடியாத கஷ்டங்களாலும் தடங்கல்களாலும் சிலர் நிகழ்வினை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கும்போது ”என்ன ஆக்கினை பிடிச்ச வேலையில் தலை குடுத்தேனோ” என்று மனம் கசந்து கொள்வார்கள் சிலர்.

அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் வெற்றியும் உண்டு,தோல்வியும் உண்டு பாருங்கோ,வெற்றிபெற்றால் ”ஆகோ ஓகோ எண்டு வேலை போகுது” எண்டு சொல்லும் எங்கடை சனம், தோல்வியிலை போனால் “ஐயோ ஆக்கினை பிடிச்ச வேலையிலை தலை வைச்சு படுக்கிறதேயில்லை எண்டு தலையிலை கை வைப்பினம்,

இப்படியாக “ஆக்கினை” என்பது ”கஷ்டம் கொடுத்தல்” என்பதாகவும் அதனுடன் சேர்ந்து வரும் ”விழுந்த வேலை” என்பதற்கு தனியாக கருத்துக்கொடுக்காமல் ஆக்கினையில் அதாவது கஷ்டம் கொடுக்கும் வேலையில் பங்கெடுத்துவிடல் அல்லது முற்றுமுழுதாக ஈடுபட்டுவிடல்” என்றவறாக கருத்துக்கொடுக்க முடியும், அதை சிலர் "ஆக்கினை விழுந்த வேலை" என்பதை "ஆக்கினை பிடிச்ச வேலை" என்றும் சொல்லிக்கொள்வர்.

சிலருக்கு சிலர் எப்போதும் கஷ்டம் கொடுத்தபடியே இருப்பதாக அந்தச் சிலர் உணர்வார்கள்,அந்த வேளைகளிலும் கூட ”இவன் எப்பவும் ஒரே ஆக்கினை தான்”அல்லது ”ஒரே ஆக்கினை பிடிச்சவன்” எண்டு மனதோடு திட்டுவதும் உண்டு் எங்கடை சனம்.
அதைவிட அற்புதமாக ”ஆக்கினை விழுவானே” எண்டு முதியவர்கள் சிலர் கோவத்திலும் சிலர் நட்பிலும் மற்றவர்களை ஏசுவதுமுண்டு.

இப்படியாக ”ஆக்கினை” என்பது ஈழத்து வழக்கோடு ஒட்டிவிட்ட சொல்.இது வயது வந்த எம் முதியோர்களால் இப்போதும் அடிக்கடி கேட்ககூடியதாக இருக்கும்.
என்றாலும் நடுத்தர வயதானவர்களாலும் இளையோர்களலும் இடையிடையே இக்காலங்களில் சொல்லப்பட்டாலும் சிறியவர்களால் அது சொல்வது மிகக்குறைவு என்று சொல்லலாம்.என்றாலும் இந்த சொல் வழக்கொழியும் மற்றைய சொற்களைப்போல அல்லாமல் சிலகாலம் எம்மவர்கள் வாயில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது,இது சம்மந்தமான உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கோவன்.

சரி இவன் என்ன ஆக்கினை விழுவான் சும்மா என்னடா உளறிகொண்டிருக்கிறான் எண்டு நினைக்கிறீங்க என்ன? உங்களுக்கும் ஆக்கினை தராமல் நானும் போட்டு வாறன்,இன்னுமொரு சொல் நினைவுவரேக்கை நான் வாறன், மற்றவைக்கு ஆக்கினை தராமல் இருப்போமாக.


குடுதேனோ- கொடுத்தேனோ எங்கடை- எங்களுடைய
நினைவுவரேக்கை- நினைவு வரும்பொழுது
Author: கானா பிரபா
•2:01 AM
"கண்ணுபடப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! சுத்தி போட வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இது ஒரு பிரபலமான தென்னிந்திய திரையிசைப்பாடல். இந்தப் பாடலை ஈழத்துப் பாடலாக்கும் வாய்ப்பு வந்தால் "கண்ணூறு படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! நாவூறு கழிக்க வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இப்படித்தான் பாடவேணும் போல.


"கண்ணு படப்போகுது" என்று என்று தமிழக மொழிவழக்கில் பரவலாகப் பேசும் வார்த்தைப் பிரயோகம் ஈழத்து மொழி வழக்கில் "கண்ணூறு பட்டுடும்" என்றே புழக்கத்தில் பயன்படும். கண்ணூறு என்பதைப் பிரித்துப் பார்த்தாலே புரிந்து விடும் இந்த சொல் கொண்டு வரும் விளக்கம். கண்+ஊறு என்று பிரித்துப் பொருள் உணர்ந்தால் பிறரது கண்பார்வை பட்டால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற மூதாதய நம்பிக்கையே இது கொண்டு வரும் விளக்கம். பெரும்பாலும் குழந்தைகளைப் பாதுகாக்கவே இப்படியான சொற்பிரயோகமும் பயன்படுத்தப்படுகின்றது.

திருஷ்டி சுத்தி போட வேணும் என்று தமிழக வழக்கில் இருக்கும் சொற்பயன்பாட்டையே "நாவூறு கழிக்க வேணும்" என்று ஈழமொழி வழக்கில் பயன்படுத்துவார்கள். நாவூறு என்பதற்கு ஈழத்து மொழி அகராதியில் "நாத்தோஷம்" என்றே விளக்கப்படுகின்றது. அதாவது ஒரு அழகான குழந்தையைப் பார்த்து "ஆகா இந்தப் பிள்ளை கொழு கொழுவென்று எவ்வளவு அழகான, துறுதுறுப்பான பிள்ளையாக இருக்கிறதே" என்று ஒருவர் நாவூறு பட்டால் அந்தப் பிள்ளைக்கு தோஷம் வந்து விடும் என்ற மூதாதய நம்பிக்கையே இங்கே சுட்டப்படுகின்றது. பொதுவாக ஈழத்தின் வாழ்வியலில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், தேங்காச்சிரட்டையில் (கொட்டாங்குச்சி என்று தமிழக வழக்கில் சொல்லப்படுவது)கருநிறப் பொட்டைத் தயாரித்து குழந்தையின் நெற்றியில் ஒரு பெரும் பொட்டை இடுவதோடு கன்னத்தில் சின்னஞ்சிறு குட்டிப் பொட்டு எதுக்குப் போடுவார்கள் வேறு எதெற்கு நாவுறு படாமல் தான்....
Author: வர்மா
•12:10 AM
எனது மகளுக்கு ஒன்றரை வயதானபோது குடும்பத்துடன் கொழும்புக்குவந்துவிட்டேன். அப்போது எனதுசகோதரிக்கு ஒருபெண்குழந்தை பிறந்துஆறு மாதமாகியது. ஐந்துவருடங்களீன் பின்னர் சகோதரிக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியதால் சகோதரிகுடும்பத்துடன் கொழும்புக்குவந்து என்னுடன் தங்கினார்.

பிள்ளைகள் இருவரும்முதலில் சேரத்தயங்கினர்.பின்னர் பிரிக்கமுடியாதபடி இணைந்துவிட்டனர்.

ஒருநாள் இரவு ஊரைப்பற்றியும் கொழும்பு வாழ்ககையைப்பற்றியும் நாங்கள் கதைத்தோம்.அப்போதுதிடீரென சகோதரியின் மகள் வீரிட்டு அலறியபடி ஓடிப்போய் தாயைக்கட்டிப்பிடித்தார். எனதுமகள் ஏங்கியபடி எல்லோரயும்பார்த்தார்.சகோதரியின் மகளிடம் காரணம் கேட்டோம்.அழுகைகூடியதேதவிர காரணத்தை அவர் சொல்லவில்லை.என்ன நடந்ததென மகளிடம் கேட்டேன்.

"நீங்கசத்தமா கதைச்சீங்க.சந்தைமாதிரிகிடக்கெண்டா.பக்கத்துகாம்பராவிலை போயிவிளையாடுவம் எண்டுநான்சொன்னேன். உடனை அழுதா."

என்று எனதுமகள் கூறினார்.கொழும்பிலை காம்பறா<சிங்களம்> என்றால் அறை. வைத்தியசாலையில் பிரேத்தை வைக்குமிடத்தை காம்பறா என ஊரில் சொல்வார்கள்.கொழும்பில் அதனை மய்யக்காம்பறா என்பார்கள்.

எனது நண்பரொருவர் கொட்டாஞ்சேனையிலிருந்து தெஹிவளைக்கு தனதுமைத்துணருடன் போனார். நண்பனுக்கு சிங்களம் அரைகுறையாகத்தெரியும். மைத்துணருக்கு சிம்க்களம் தெரியாது. பஸ்ஸில் ஏறியதும்" தெஹிவளை தெக்காய்" என்றார் நண்பர்.மற்றவர் யாரென சிங்களத்தில் நடத்துனர் கேட்டார். "அத்தான் எக்காய். நான் எக்காய் .தெஹிவளை தெக்காய் என்று நண்பைகூறினார்.

சாப்பாட்டுக்கடை ஒன்றில் மலையாள‌ நண்னபரொருவர்சப்பிட்டுக்கொண்டிருந்தார்.பரிமாறுபவர் குழம்புவிட்டதும் மதிமதி என்றார். பரிமாறுபவர் மீண்டும் குழம்பு ஊற்றினார். மலையளநண்பர் சத்தமாக மதிமதி ந்ண்றுகத்தினார். மலையாளத்தில் மதி என்றால் போதும். சிங்களத்தில் மதி என்றால் போதாது.

இவை தொடற்பாடலை தவறாக விளங்கிக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்.நாயும் பூனயு கண்டதும் சண்டைப்படுவதற்கும் தவறானதொடர்பாடல்தான் காரணம்.

நண்பனைக்கண்டதும் நாய் வாலை ஆட்டும்.இரையைக்கண்டால் பூனைவாலை ஆட்டும்.நான் உன்நண்பனென்று வாலை ஆட்டி நாய் கூறுவதை ,தன்னை இரையாக நாய் நினைப்பதாக பூனை தவறாக விள்ங்கிவிடுகிறது.

நான் உன் எதிரியல்ல நண்பன் என்று வாலை உயர்த்தி த்னது நட்பைவெளிப்படுத்துகிறது பூனை.நாய் எதிரியைக்கண்டால் வாலை உயர்த்தும்.தொடர்பாடலில் ஏற்பட்டகுழப்பத்தால் நாயும் பூனையும் சண்டையைஆரம்பித்துவிடும்.
Author: சின்னக்குட்டி
•3:28 AM
இந்த பதிவும் எனது பழைய பதிவு தான் ...எனக்கு பிடித்த இந்த பதிவும் ஈழத்து முற்றத்துக்கு ம் பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பிரசுரிக்கிறேன்


வால்ராஜா முனையிலிருந்து ஹரியானா மாநிலம் பெற்றெடுத்த சிங்கம் கபில்தேவ் பந்து வீசி கொண்டிருக்கிறார் அழகிய தமிழில் சென்னை வானொலியில் வர்ணணையாளர் மணியின் குரல் அழகிய தமிழில் கூவி கொண்டிருக்கார்...

உந்த கிரிக்கற் மச்சுக்கள் நடந்தால் காதோரம் வைத்து உந்த டிரான்சிஸ்ட் பெட்டிகளோடு மாரடிச்சு கொணடிருப்பன். விடிஞ்சால் பொழுதுவிட்டால் உதோடை கிடக்கிறாய் மோனை வேற வேலை வெட்டி இல்லையே அதாலை போன அப்பம்மா புறு புறுத்தண்டு போகுது... அப்படி ஒரு கிறேசி, வெறி.. அப்படி ஒரு. உந்த கிரிக்கட் விளையாட்டிலை அந்தக்காலம் எங்கள் தரவளி களுக்கு... உந்த சோம்பேறி கனவான் விளையாட்டை இந்திய உபகண்டத்துக்கு சொத்தாய் கொடுத்திட்டு போயிருக்கிறான் வெள்ளைகாரன். அவனே இப்ப உந்த கனவான் விளையாட்டிலை இன்ரறைஸை காணலை.


டிரான்சிஸ்டர் வந்த படியால் படுத்து கொண்டு காதோடை கேட்க கூடியதாயிருக்கு....... அந்த காலத்து றேடியோ ஒன்று இப்ப வீட்டு மூலையிலை கவனபாரற்று கிடக்கு அப்ப உதுக்கு இருந்த மவுசு.காலம் காலமே பரம்பரை சொத்து போல பாவிப்பினம்... அந்த பழம் றேடியாவின்ரை பற்றியை பார்த்தாலை இப்ப இருக்கிற டிராஸ்டிட்டாரிலும் பார்க்க அந்தா பெரிசு வீட்டுக்கு வெளியிலை வயர் இழுத்து அதுக்கு வேற அரைப்பனை உயரத்திலை கேடர் கம்பு தாட்டு உச்சத்திலை ஏரியல் பூட்டினால் தான் கேட்குமாம்.

ஊரெல்லாம் அமெரிக்கன் பாசனிலை வீடுகள் எழும்பியிருக்கிற நேரத்திலை சங்கிலியன் தோப்பு மாதிரி முன் தோற்றமுள்ள போர்ட்டிக்கோ சுண்ணாம்பு வீட்டுடோய் இருந்தாலும் எல்லாருக்கும் தெரியிற இந்த ஏரியல் இவை உண்மையாய் இவை வாழ்ந்து கெட்ட குடும்பம் தான் என்று பறை சாற்றி கொண்டிருக்கிறது. அந்த காலம் றேடியாக்கள் இருக்கிறாக்கள் இவை இவை தானென்று உந்த ஏரியலை வைச்சு சொல்லலாம். அந்த ரேடியாவிலை மீற்றர் பிடிக்கிற பாடென்ற அந்தா பாடு படுவினம்..

அப்பிடி மீற்றர் பிடிபட்டாலும் ஆக்கள் கிணற்றுக்குளை யிருந்து கதைக்கிற மாதிரி தான் கேட்கும்...திருச்சி, சென்னை வானொலி ஈசியாய் பிடிபட்டாலும் இந்த கொழும்பு றேடியோ ஸ்டேசன் பிடிக்கோணும் என்றால் படாதபாடு படணும். வானிலை சரியில்லாமால் பிடிபடாமால் இருந்து திருச்சி சென்னை பக்கம் திருப்பினால் வயலும் வாழ்வும், வயலின் இசையும் தனக்கு புரியாத சங்கீதத்தையும் போடுவினம் ஆர் கேட்கிறது.


பிரசித்தி பெற்ற கோயில் தேர் தீர்த்தத்துக்கெல்லாம் நேர் முக வர்ணனை செய்யிறவை தான் எங்கட தாத்ஸ் ஒன்று நேரிலை நடக்கிற மாதிரி ரசிச்சு கேட்கும். உப்பிடித்தான் அப்போலா11 விண்வெளிக்கலம் சந்திரனிலை இறங்கி ஆம்ஸ்ரோங் என்றவன் காலடி வைத்ததை வரிக்குவரி உந்த நேர் முகவர்ணனையிலை கேட்டதை ஏதோ குவாலிபிகேசன் மாதிரி புழுகும் உந்த தாத்ஸ்...


ஆயிரம் அறிவிப்பாளர் இருக்கட்டுமன்.வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிகருகில் ஆவலுடன் காத்திருக்கும் என்று விடிய வலம் வரும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சிக்கு வரும் மதுர குரலோன் கேஎஸ் ராஜாவை எல்லோருக்கும் பிடித்த மாதிரி எனக்கும் பிடிக்கும். அந்த காலத்தில் 83 கலவரத்தின் பின்னர் இங்கு நடந்த கொடுமைகளெல்லாம் சொல்ல போகிறோன் என்ற வரிகளடங்கிய நாகூர் ஹனீபாவின் பாடலை வானொலியிலை அடிக்கடி போட்டு தார்மீக கோபத்தை வெளிபடுத்தியவர்.

இதோ எனது டிரான்சிஸ்ரரில் ஓரே சன வெள்ளத்தின் கோரஸ் சத்தம் அதையும் மீறி அறிவிப்பாளர் மணி அற்புதம் அற்புதம் உயரமாக எல்லைகோட்டை தாண்டி சென்று கொண்டிருக்க்கிறது நிச்சயமாக ஆறே தான்..... கபில்தேவ் விளாசிக்கொண்டிருக்கிறராம்.... இப்ப இண்டியன் ரீம் பட் பண்ணுது போலை... எனக்கும் அந்த மாதிரி சந்தோசம் தான்.... அந்த காலத்திலை நாங்கள் இலங்கை ரீமுக்கு சப்போட் பண்றலே இந்தியன் ரீமுக்கு தானே சப்போட் பண்றது....
Author: வந்தியத்தேவன்
•6:37 AM
பிரபா : என்ன வந்தி கனகாலமா முத்தத்துப் பக்கம் காணவில்லை?

வந்தி : ஒண்டுமில்லையண்ணை கொஞ்சம் சோலி கூட.

பிரபா: உங்கடை சோலியள் எனக்குத் தெரியும் தானே ஹிஹி

வந்தி : ஏனப்பா சபைசந்தியில் என்னுடைய மானத்தை வாங்கிறியள்

பிரபா : உதைவிடுங்கோ ஊரிலை என்ன புதினம்?

வந்தி : வாற ஞாயிற்றுக்கிழமை எங்கடை டாக்குத்தர் ஜீவராஜுக்கு கலியாணம் மலையிலைதான் கலியாணமாம் நேரம் கிடைத்தால் ஒரு எட்டுப் போயிட்டு வரலாம்.

பிரபா : யார் ஜீவநதியின் சொந்தக்காரரோ? அவரும் முத்ததிலை இடைக்கிடை வந்து இளைப்பாருகின்றவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கோ.

வந்தி : ஓம் நான் சொல்லிவிடுகின்றேன். மற்றது அண்ணை எங்கட குழப்படிக்காரியின் கொம்பியூட்டர் பழுதாப்போச்சாம் இப்ப சில நாளாக ஆள் ஒன்லைனிலை இல்லை, ஆள் இருந்தால் நிறைய விடுப்பு கேட்கலாம்.

பிரபா : யாரையப்பா சொல்றியள் ஓ சினேகிதியைச் சொல்றியளோ அவர் ரொம்ப நல்லவராச்சே ஆனாலும் அடிக்கடி விடுப்பு பிடுங்குகின்றேன் என்று எல்லாத்தையும் சொல்லிவிடுவார்.

வந்தி : வேறை என்ன பூராயம் நாட்டிலை?

பிரபா : என்னத்தைச் சொல்வது எங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் முளைச்சு மூண்டு இலை விடேல்லை யாரோ ஒரு உடுவில் பெட்டைக்கு லைனாம்? எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி?

வந்தி : ஓமண்ணணை இப்பத்தைப் பொடியள் நல்லா முன்னேறிவிட்டினம், உதைவிடப்பா எனக்கு நேரம் போட்டுது நான் நாளைக்கு வாறன்.

பிரபா : சரி சரி கவனமாக போட்டுவாங்கோ

பொருள் விளக்கம்

சோலி : வேலை அல்லது அலுவல் என்பதை இப்படிச் சொல்வார்கள், இதே நேரம் எந்தவித சண்டை சச்சரவுக்கும் போகாதவரையும் சோலி சுரட்டு இல்லாத பிள்ளை என ஊரிலை சொல்வார்கள்.

உதாரணம் : உவன் வந்தி ஒரு சோலி சுரட்டுக்கும் போனதில்லை.

சபை சந்தி : பொது இடம்

புதினம் : செய்தியைத் தான் புதினம் எனக் கேட்பார்கள். என்ன புதினம் இண்டைக்கு. இதேபோலை புதினத்தை ஆச்சரியம் என்ற பொருள் படும் வகையிலும் பயன்படுத்துவார்கள்.

உதாரணம் :
உங்கைபார் உந்தப் புதினத்தை சிவத்தாரின்ரை பெட்டை மோட்டர்சைக்கிளை போகுது.

மலை : திருகோணமலையை அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை என்றே குறிப்பிடுவார்கள்.

விடுப்பு : வம்பு அளத்தல், கிசுகிசு போன்றவை விடுப்பு எனப் பொருள்படும். இப்படியான கதைகளைப் பேசுபவர்களை விடுப்புப் பிடுங்குபவர்கள் என்பார்கள். இப்போது ஸ்டைலாக விடுப்ஸ் என்பார்கள். மற்றவர்களைப் பற்றிக் கதைத்தல், தேவையற்ற விடயங்கள் பேசுதல் போன்றவன விடுப்பாகும்.

உவர் சரியான விடுப்ஸ் என்றால் ஆள் நல்ல வம்பளப்பார் எனப் பொருள்.

பூராயம் : இதுவும் விடுப்பு போன்ற அர்த்தம் தரும் சொல்தான்.
Author: கலை
•3:06 PM
*****
ஈழத்து முற்றத்தில இப்ப கொஞ்ச நாளா, நிறைய கேட்டு மறந்திருந்த சொற்கள் நினைவுபடுத்தப்பட்டிருக்கு. அப்படியே எனக்கும் சில சொற்கள் நினைவுக்கு வந்தது.

1. ஆச்சி முந்தி கேப்பா “என்ன நீ கிரந்தம் பறையிற?” என்று. ஏதாவது விடயத்தை சரியாக சொல்லாமல், அல்லது புரிய வைக்காமல் இருந்தால், (அல்லது உளறுவதுபோல் தோன்றினால்) இந்தக் கேள்வி வரும். 'பறையிறாய்' என்பது 'கதைக்கிறாய் / பேசுகிறாய்' என்பது. பறையிறது என்பது மலையாள சொல் போல என நினைக்கிறேன்.

2. இதுவும் ஆச்சி சொல்லிக் கேள்விப்பட்டதுதான். ”எப்பன் சொதி குத்தட்டோ?”. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, “கொஞ்சம் சொதி விடட்டுமா?” என்பதைத்தான் அப்படிக் கேட்பா. ‘விடட்டுமா?' என்பதை, ‘குத்தட்டுமா?' என்று கேட்பது யாழில் தென்மராட்சி வழக்கா என்று தெரியவில்லை. வேறு பகுதிகளிலும் இப்படி கேட்பார்களா என்பது தெரியவில்லை.

3. 'மல்லுக்கட்டிறது' என்னும் சொல் தற்போதும் பலர் பாவிக்கிறார்கள் என நினைக்கிறேன். ”எதுக்கு வீணா மல்லுக்கட்டுறாய்?” என்றால், ”ஏன் வீண் விவாதம் செய்கிறாய் அல்லது சண்டை பிடிக்கிறாய்?” என்பதைக் குறிக்கும்.

******
இந்தியத் தமிழர்களுடன் பேசும்போது அவர்கள் வித்தியாசமாக உணர்ந்த சில சொற்கள்.

1. குழப்படி = குறும்பு

2. கெதியா = விரைவாக

3. யாழ் நண்பர் ஒருவரின் வீட்டு விருந்தில் ஒரு தடவை நடந்த விடயம் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் குடும்பமும் வந்திருந்தார்கள். அப்போது உணவு பரிமாறியபோது, ”நல்ல வடிவாச் சாப்பிடுங்கோ” என்று பரிமாறியவர், சொன்னபோது, அந்த இந்தியப் பெண், ‘திருதிரு' வென விழித்தார். மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் வந்தபோது, பொறுக்க முடியாமல், 'எப்படி வடிவா சாப்பிடுறது?' என்று கேட்டார். 'வடிவு', என்பது 'அழகு', அப்படியென்றால், 'எப்படி அழகாக சாப்பிடுவது?' என்பதுதான் அவரது கேள்வி. ஆனால் அப்படிச் சொல்வது, ”நல்ல நிறைய, தாராளமாக சாப்பிடுங்கோ” என்பதைத்தான் என அவருக்கு விளக்கினேன்.

4. வெளிக்கிட்டாச்சோ? = தயாராகியாச்சா? (கிளம்பியாச்சா?)
எங்கேயாவது வெளியே செல்ல தயாராகுவதைக் குறிக்கும். சில சமயம் ஆடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொள்வதை மட்டுமே குறிக்கும். உதாரணமாக, திருமணத்திற்கு ‘பொம்பிளையை வெளிக்கிடுத்தியாச்சோ?' என்பார்கள்.

5. மோனை' என்று தம்மை விட வயது குறைந்தவர்களை விழிப்பார்கள். தாத்தா, அம்மம்மா, மாமா, மாமி எனப் பலரும், இப்பவும் ‘மோனை' என்று அழைப்பார்கள். பெயர் சொல்லி அழைப்பதை விட, ‘மோனை' என்ற அந்த அழைப்பில் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதான உணர்வு இருக்கும்.

6. நாம் பயன்படுத்தும் உறவு முறைகள் சிலவும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
குஞ்சையா (சித்தப்பா), குஞ்சம்மா (சித்தி). பழைய காலத்தில், அம்மாவை 'ஆச்சி' என்றும், அப்பாவை 'ஐயா' என்றும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் பின்னர், பாட்டியைத்தான் ஆச்சி என அழைக்கும் வழக்கம் வந்தது.
Author: சஞ்சயன்
•1:58 PM
ஏன் என்னை ஒரு மாதிரி பார்க்கிறீங்க?
கனக்க அலட்டுறன் எண்டதாலயா நம்மள ஒரு சாங்கமா நம்மள பாக்கிறீங்க?

ஒரு சாங்கமா என்றால் ஒரு மாதிரியாக என்று அர்த்தம். (வித்தியாசமாக பார்த்தல் என்றால் அது வேற.... இது வேற)

ஒரு சாங்கமா நாங்க பலதையும் பார்க்கலாம் (அப்படி ஒரு சாங்கமா நீங்க யாரையும் பார்த்து அடி வாங்கினா நான் பொறுப்பு இல்லை)

ஒவ்வொருத்தனும் ஒரு சில விடயங்கள் மட்டும் ஒரு சாங்கமா பார்ப்பான்

லொள்ளு உதாரணங்கள்:

தண்ணியடித்துவிட்டு இன்னொரு தண்ணியடித்தவனை பார்த்தால் அதை மற்ற தண்ணியடித்தவன் என்னடா நம்மள இவன் ஒரு சாங்கமா பார்க்கிறானே என்று யோசிக்கலாம் (ஒரு சாங்கமா நாலுகுத்தும் விடலாம்...அது வேற சாங்கம்).

டேய்...அவள் ஒரு சாங்கமா பார்க்கிறாள் என்ற நட்பு சொன்னால் அவருக்கு அவளின் பார்வையில் ”குளிர” அல்லது ”நெருப்பு” தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். (அதிகமாக குளிராகத் தான் இருக்கும்)

அம்மாவிடம் ஏதும் காரியமாக வேண்டும் எனறாலும் ஒரு சாங்கமா அம்மாவை பார்த்தால் மனிசிக்கு புரியும்...(பாசம் பாசம்)

எனக்கு தலைக்குள்ள ஒரு சாங்கமா இருக்கு நான் போய் படுக்கப் போறன்..
பிறகு கதைபபம்..

அன்புடன்
சஞ்சயன்
Author: சஞ்சயன்
•1:16 PM
தங்கையின் (மழை` ஷ்ரேயா(Shreya) )ப்ளாக் இல் ஒரு இடத்தில் சில நம்மூர் சொற்கள் இருந்தன அவற்றில் ஒனறு தான் தெறித்தல்.

நானும் பயங்கரமா தெறித்துத் திரிந்தவன் தான். டேய் இப்படி தெறித்ததுத் திரியாதடா எண்டு புண்ணியமூர்த்தி சேர் கூட சொல்லியிருக்கிறார். இப்ப கண்டா என்ன சொல்லியிருப்பாரோ தெரியா..

தெறித்தல் என்பது குளப்படி, சுற்றித்திரிதல், சுளட்டுதல், ரௌடித்தனம், அடாவடித்தனம், பெரியவர்களை கனம் பண்ணாமை போன்ற செயல்களின் கலவையே தவிர, வேறொன்றும் இல்லை. இதற்கென்று தனியான அடையாளங்கள் இல்லை.

ஒருவன் குளப்படி என்றால் அவன் தெறிக்கிறான்

மற்றவன் ஒரு தேவதைக்கு கொஞ்சம் அன்பு காட்டினால் இவனும் தெறிக்கிறான் (அன்பை சொடுத்தாலும் தப்பு...ஹய்யோ ஹய்யோ)

இன்னொருத்தன் ஊர்சுற்றித்திரிந்தால் இதையும் தெறிக்கிறான் என்கிறார்கள்.

தெறித்துத் திரிகிறார்கள் என்றால் ஊருக்கு உதவாதவர்களாக பெரிசுகளுக்கு(மட்டும்) தெரிகிறார்கள் என்று அர்த்தம். நட்பு வட்டத்தில் தெறிக்கிறான் என்ற சொல் பாவிக்கப்படுவது குறைவு. தெறித்தல் பல விதத்தில negativ ஆன உருவத்தையே கொடுக்கிறது

ஏன் இந்த தெறித்தல் என்ற பெயர் வந்திருக்கும்? யாரவது தெறிக்காம படிச்சு முட்டாளாயின அறிஞர்கள் இருந்தால் சொல்லுங்கப்பா..

கடைசியா ரெண்டு சந்தேகங்கள்

1. அது சரி, தெறிக்காதவன் என்று யாரும் இருக்கிறார்களா?
2. பெண்களிலும் தெறிப்பவர்கள் உண்டா? (இதில மட்டும் சம உரிமை கேட்க மாட்டார்கள்)

அன்புடன்
சஞசயன்
Author: கரவைக்குரல்
•10:10 AM
ஈழத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள பல்வகையான சொற்களை ஈழத்தின் முற்றம் வாயிலாக கொண்டுவரும் பதிவர்களோடு நானும் கைகொடுக்கலாம் என்னுடைய எண்ணம்,அப்படியான சில சொற்கள் காலப்போக்கில் இல்லாது போய்விடுமோ என்ற அச்சம் ஒருபுறமிருக்க அதை என்றும் நிலைத்துவிட வேண்டும் என்ற பெருமுயற்சியில் ஈழத்துமுற்றம் பங்களித்துக்கொண்டு இருக்கிறது.சில சொற்கள் சொல்லும்போது அவை ஈழத்து மொழி நடையில் ஒரு அழகைத்தரும் சொற்களாகக்கூட இருக்கின்றன,

ஆனால் ஈழத்து வழக்கில் எத்தனையோ பல சொற்கள் கொஞ்சம் வழக்கில் குறைந்துகொண்டு போவதை அவதானிக்க முடிகிறது,கவலைக்குரிய விடயமும் கூட
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............

இவையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் சொல்ல வந்த விடயத்தை நான் அயத்துப்போடுவன் போல கிடக்கு.

பொதுவாக அயத்துப்போனன் எண்டு இப்போதும் சில வயது வந்தவர்களால் தான் சொல்லப்படுவதை இன்றைய காலங்களில் அவதானிக்கமுடியும்,

“என்னணை அம்மா நேற்று உங்களை ரெலிபோன் (தொலைபேசி) கதைக்க வரச்சொன்னனான் எல்லோ ஏனெணை வர இல்லை?" எண்டு அடிக்கடி தன் தாயின் மீது அக்கறையாக வெளி நாட்டிலை இருந்து கதைக்கும் மகன் கேட்க

”அட ஒம் தம்பி் நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா,என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி” எண்டு அந்த வயது வந்த அம்மா சொல்கிறார்,

இந்த உரையாடல் மூலம் இப்போது அந்த “தீர அயத்துப்போதல்” என்பதன் அர்த்தம்
புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும்.”தீர” எனபது ”முழுவதும்” என்பதாகவும் ”அயத்துப்போதல்” என்பது ”மறந்துவிடுதல்” என்று பொருள் கொடுக்க முடியும்,இதை பொதுவாக இந்தக்காலங்களில் பேச்சுவழக்கில் ”முழுக்க மறந்துபோச்சு” என்று சொல்லுவினம்.

பொதுவாக இந்த காலத்து இளம்பாரயம் மட்டுமல்ல அதைவிட கொஞ்சம் வயது கூடிய மட்டங்கள் கூட ”அயத்துப்போனன்” என்ற சொல்லை பாவிப்பதே இல்லை என்றுதான் சொல்லலாம்.அப்படியிருக்கும்போது அது எப்படி அடுத்த பராயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பது கேள்விதான்,காலப்போக்கில் இந்த சொல்லை அயத்துப்போவார்களோ என்ற ஏக்கமும் இருக்கு,


இங்கு முத்தம்- முற்றம், உன்ணாணை-பொதுவாக சத்தியம் செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று,
Author: சஞ்சயன்
•4:42 AM
மறுகா, கிறுகி இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை ஒரே ஒரு இடத்தைத்தைத் தவிர...மட்டக்களப்பாரின் அழகிய மொழிநடையை நக்கலடிக்கும் போது மற்றைய திசைக்காறர் பாவிக்கும் சொற்பதங்களிவை என்பதை விட.

மறுகா என்பது பின்பு அல்லது பிறகு என்று பொருள்படுகிறது.
உதாரணமாக:
இப்ப பெயித்து மறுகா வா.. என்றால் இப்ப போய் பிறகு வா என்று அர்த்தம்.
ஒருவர் கதைக்கும் போது ம்...ம் போடாமல் மறுகா, மறுகா என்றும் சொல்வதுண்டு.. இது மேற்கொண்டு சொல் என்பதை உணர்த்தி நிற்கும் சொல்லாக இருக்குிறது இவ்விடத்தில். மற்றத் திசைக்காறர் பிறகு பிறகு என்று சொல்வது போல். :-)

கிறுகி என்பது திரும்ப, சுற்றி அல்லது சுளன்று எனறும் பொருள்படும்
உதாரணமாக:
”இதால கிறுகி அதால போ என்றால்” ”இதால திரும்பி அதால் போ” எனறும்
கிறுகாம நில் என்றால் திரும்பாமல் நில் என்றும்
தலை கிறுகுது என்றால் தலை சுற்றுகிறது என்றும்
தலை கிறுகிறுக்குது என்றாலும் தலை சுற்றுகிறது என்றம் பொருள் படுகிறது.

அன்புடன்
பட்டிக்கலோ
Author: கானா பிரபா
•3:33 AM
நந்தனாவின் குடும்பம் மிகவும் கட்டுப்பாடானது. அவளின் தகப்பனார் பண்டிதர் பரமசிவம் வெள்ளை வேட்டி, அதற்குத் தோதாற்போல முழுக்கைச் சட்டை அதுவும் நாஷனல் என்று அழைக்கப்படும் வெண் நிறத்தது. கூடவே சால்வை என்று கோலம் கொண்டிருப்பார். பரமசிவத்தாரின் மனைவி காமாட்சியும் கணவனுக்குத் தோதான துணைவியாக இருப்பவர்.

திடீரென்று ஒரு நாள் நந்தனா வழக்கத்துக்கு மாறாக அதீத நவநாகரீகம் கொண்ட உடுப்பை அணிந்து தன் தாய் காமாட்சிக்கு முன் வந்து நின்றாள்.
"ஐயோ பண்டிதர் பரமசிவத்தாற்றை மேள் இப்படி அரைகுறையா வருகுதே எண்டு சனம் நாக்கு வழைக்கப் போகுது " என்று காமாட்சி பதறினார்.

மேலே சொன்ன கற்பனைச் சம்பவத்தில் மேற்கோள் இடப்பட்ட "நாக்கு வழைத்தல்" என்பது ஈழத்துப் பேச்சு வழக்கில் இன்னொரு சொல்லாகப் புழங்குகின்றது.

ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக இன்னொருவர் பேசுவதைப் புறணி பேசுதல் என்போம். ஆனால் இங்கே நாக்கு வழைத்தல் என்பது புறணி பேசுவது என்பதற்கு சற்று வேறுபாடாக நக்கல் பண்ணுவார்கள் என்பதற்கு மிக நெருங்கிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது.

எனவே நாக்கு வழைத்தல் என்பது ஒருவரது குணாம்சம், நடை உடை பாவனையில் ஏதேனும் குறையைக் கண்டு பிடித்து இன்னொருவர் அல்லது ஊரார் எள்ளி நகையாடுவது என அமைந்திருக்கும்.

"நாக்கு வழைத்தல்" என்பதை உங்கள் ஊரில் எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என அறிய ஆவல்.
Author: சஞ்சயன்
•4:23 PM
பாடசாலை நாட்களில் பட்டப் பெயர்கள் பகிடிக்காய் வைக்கப்பட்டாலும் அவற்றின் பின்னால் ஏதோவொரு கதையிருக்கும். காலப்போக்கில் இந்தப் பெயர்களே நிலைத்தும் நிஜப் பெயர்கள் மறந்தும் போய் விடுகின்றன.

நினைவில் நிற்கும் பட்டப் பெயர்கள்


டக் - இவனிடம் எதைக் கேட்டாலும் ”டக்” எண்டு வாறன், ”டக்” என்ற செய்வம்” என்று கனக்க ”டக்” போடுவதால் கிடைக்கப்பட்ட பெயர் இது

டப்பி: காரணம் மறந்து விட்டது

நண்டு - முனிவன் : நண்டு மறந்து விட்டது ஆனால் ”முனிவன்” என்பது சைட் அடிக்காமல் படிப்பே தொழில் என்றிருந்ததால் வந்தது

ஊத்தை: நம்மட பெயருங்கோ... ஏதோ.. என்ட சுத்தம் தெரிந்த ஒரு பன்னி வைத்த பெயர்.. (நாசமா போவான்)

ஒழுக்கி: நோய் அல்லது பலவீனம் ஒன்றை அடிப்படையாக வைத்து வைக்கப் பட்டது. எவ்வளவு வலியை இவனுக்கு கொடுத்திருக்கிறோம் என்பதை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. மன்னித்துக்கொள் நட்பே.

வேடன்: 1983 இனக்கலவரத்தில் காணாமல் போன நண்பனின் பெயர். காரணம் மறந்துவிட்டது. வேடன் என்பது அவனது ”வேணன்” என்னும் அழகிய பெயரின் திரிபு என்று தான் ஞாபகமிருக்கிறது.

கிழவி: காரணம் மறந்து விட்டது...இன்றும் தொடர்பில் உள்ள ஒருவர்(ன்)

பூனை: அமைதியாய் தன்ட காரியத்தை கவனிக்கும் அப்பாவி

குண்டன்: காரண இடு குறிப் பெயர்

முக்கு தோண்டி: காரண இடு குறிப் பெயர்

நசுக்கி (1): நசுக்கிடாமல் தன்ட வேலையை செய்பவன்

நசுக்கி (2): மெல்லவாக குசு விடுபவன்


இப்படி உங்களுக்கும் கனக்கு பெயர் தெரிந்திருக்கும்..
எழுதுங்கவன்
Author: சஞ்சயன்
•3:26 PM
44 வயதிலும் இந்தப் பெயரைக் கேட்டால் அன்பும் பயமும் கலந்த மரியாதை என்னை சுற்றிக்கொள்ளும்.

ஏன்டா அந்தாளுக்கு இப்பவும் இப்படி பயப்படுகிறாய் என அம்மா இப்பவும் கேட்பதுண்டு.
அம்மா , அது பயமல்ல, பக்தி.

கொல்லன்பட்டறையில் இரும்பை சூடுகாட்டி, தண்ணீரில் நனைத்து குளிரவைத்து, சுத்தியலால் அடித்து வளைத்து, மீண்டும் சூடுகாட்டி தான் விரும்பும் விதத்தில் கத்தி செய்யும் கொல்லன் போன்று எம்மை வார்த்தெடுத்த (வாட்டி எடுத்த) மரியாதைக்குரிய எனது ஆசான், வழிகாட்டி, நலன்விரும்பி அவர்.

இவருக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும், எனக்குமான உறவு 1976 தை மாதம் தொடங்கியது. 8 ஆண்டுகள் மட்டுமே ஆன நெருக்குமான எமது உறவு என் வாழ்வில் இத்தனை முக்கிய இடத்தைப் பெறும் என நான் கனவிலும் நினைத்ததில்லை.

ஏதை எழுத எதை விட என்று புரியவில்லை. தொண்டையில் ஏதோ அடைக்கிறது, உணர்ச்சியில் கண்கள் பனிக்கின்றன… என்னே பசுமையான நினைவுகள் அவை.

வாழ்க்கை தரும் ரணங்களை இது போன்ற பசுமையான நினைவுகள் வெற்றுடலில் மழைத்துளிகள் போல் சகம் கொள்ளச் செய்யும். தாயின் மடி போலானது பாடசாலை நினைவுகள். அவை உங்களை தாலாட்டி தட்டிக்கொடுக்கும்.

1976 தை மாதம் 6B வகுப்பில் சேர்ந்தேன். அன்றே பாடசாலை விடுதியில் என்னையும், தம்பியையும் சேர்த்து விட்டு அம்மா பிபிலைக்கு அடுத்த நாளே திரும்பியிருந்தார். பதுளை சரஸ்வதி மகாவித்தியாலத்தில் என்னுடன் படித்த ஒரு நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் மட்டுமே பரிட்சயமானவர்களாக இருந்தார்கள். மற்ற எல்லாமே புதிதாக இருந்தது, மட்டக்களப்பின் தமிழ் உட்பட.

அன்று மாலை சடுகுடு விளையாடிய போது என்னை வெ.. வெ…வெ..வெட்டையால போ என்ற போது மொழி புரியாமல் அவ்விடத்திலேயே நின்றதால் கன்னத்தை பழுக்க வைத்தார் புண்ணியமூர்த்தி அண்ணன். அவருக்கு கொன்னை என்பதால் வெட்டையால போ என்பதை 2, 3 வே வே போட்டு அப்படி சொன்னாராம். அதோடு வெட்டையால போ என்றால் வெளியே போ என்று அர்த்தம் என விளக்கம் கிடைத்தது பின்பொருநாள்.

இரவு studyhall இல் இருந்த போர் வெள்ளைக்காரன் போல ஒருவர் அவ்விடத்தால் நடந்து போனார். திடீர் என்று எங்கும் மயான அமைதி. என்ன நடக்குது என்று புரியவில்லை. அவர் போய் கன நேரம் வரை அமைதி குலையவே இல்லை. studyhall இல் இருந்த hostellmaster கூட வெளியில் போகவில்லை. அது தான் One And Only Prince G. Casinader உடனான எனது முதல் அறிமுகம்.

காலம் ஓடியது Prince என்ற பெயரை கேட்டாலே முழு பாடசாலையும் நடுங்குவது புரிந்தது. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் உட்பட அனைவரும் (பெற்றோர்களும் தான்).

பெயர் மட்டும் தான் மெதடிஸ்த மத்திய கல்லூரி. சகல மதங்களும் சங்கமான இடம் அது. அந்த நாட்களில் இஸ்லாமியர்களுக்கு விடுதியில் இடம் கொடுத்த ஒரே ஓரு பாடசாலையும் அது தான். அட்டாளைச்சேனை, அம்பாறை,பொலன்நருவை ஆகிய இடங்களில் இருந்தும் பல இஸ்லாமியர்கள் எங்களுடன் விடுதியில் தங்கியிருந்தார்கள்.

இஸ்லாமிய நண்பர்களின் இறையுணர்வு பற்றி எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் அங்கு தான். தினமும் ஐந்து முறை பள்ளி சென்று தொழுவார்கள்.நாம் பசியில் வாடி நிற்கும் போது வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் கிடைக்கும் கஞ்சியை நெளிந்து வடிவம் மாறியிருக்கும் அலுமீனிய கப் இல் கொண்டு வந்து எம்முடன் பகிரும் நட்பின் இலக்கணம் பயிற்றுவித்தவர்களும் அவர்கள் தான்.

பிரின்ஸ்இன் பெயர் ஒரு மந்திரச் சொல் போன்றதாய் இருந்த காலம் இது. அக்காலத்தை எமது பாடசாலையின் பொற்காலம் என்றாலும் அது தவறாகாது. அவரின் பின்னான காலத்ததை சுவீகரித்தவர்களால் அவரைப் போல் சிறப்பாக நிர்வகிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் என்னைப் போல் பலருக்குண்டு. அதன் கசப்பான உண்மையை மறுப்புதற்கில்லை

பிரின்ஸ் ஒரு கறுப்பு நிற ஏ 40 கார் வைத்திருந்தார். பாடசாலையை கார் கடக்கும் போது கடக்கண்ணால் எம்மை கவனித்து... பிறகு திங்கட் கிழமை அசம்பிளி ஹோல் இலும் எம்மை எல்லோர் முன்னிலையிலும் கவனிப்பார்..
மனிசன் ஒரு அட்டவதானி.. அவர் கண்ணில் இருந்து எதுவும் இலகுவில் தப்பாது

பிரின்ஸ் திங்கட் கிழமை அசம்பிள யில் சொல்லும் ”அறிவுக் கதைகள்” சில காலத்தின் பின் கீறுப்பட்ட ரெக்கோட் மாதிரி அலுப்படித்தாலும் இன்று அவற்றின் உண்மைகள் என்னைப் பார்த்து நகைக்கின்றன போலிருக்கிறது.

பிரின்ஸ் அடாவடியான கட்டுப்பாடும, அதிகாரமும் தாங்கமுடியாதிருந்தது. அவருக்கு மொட்டை என்பதால் அன்பாய் மொட்டை எனறு அழைக்கவும் தொடங்கியிருந்தோம். மனிசன் படு கில்லாடி. அந்தக் காலத்திலயே தனது புலனாய்வுத்துறையை எமக்கிடையே ஏவி விட்டு எமது தொழில் ரகசியங்களை அறிந்து எமது திட்டங்களை தவிடுபொடியாக்கிக் கொண்டிருந்தார். இன்றுவரை அந்த ஒற்றனை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஓரு இரவு
தியட்டர் வாசலில்
செக்கன்ட் சோ
முடியும் வரை காத்திருந்து
ஏ 40 காரில்
மரியாதையாக
ஏற்றி வந்து
போ
”வாறன்”
என்று சொல்லி
ஆறுதலாய்
வந்து
அந்த காலத்து
எம். ஜி. ஆர் மாதிரி
கையாலயும்
பிரம்பாலயும்
அன்பு
காட்டிய
ஸ்டண்ட் மாஸ்டர்
அவர்.

அவரின் கந்தோருக்குள் பிரம்புச்சத்தம் கேட்பது குறைவு, அப்படி பிரம்புச்சத்தம் கேட்டால் அவர் உசாராக இல்லை என்று அர்த்தம். 8 வருடத்தில் அவர் பிரம்பெடுத்தது மிகக்குறைவு.

அவர் பிரம்பு எடுக்கத்தான் மாட்டார் ஆனால் அடிக்க மாட்டார் என நான் சொல்லவில்லையே. அவரின் கை பதம் பார்க்காத சொக்கைகளே இல்லை எனலாம். ”இது கிட்டடிக்கும் சரிவராது” என்று சொல்லி எழும்பினார் என்றால் பிறகு என்ன
வாசிப்புத்தான்
(நாயடி அடிக்கும் மனிசன்)

சில வருடங்களுக்கு முன் அவரைச் சந்தித்த போது ஒரு ஆசிரியனாய் நான் தோற்று விட்டேன் என்றார். ஏன் என கேட்டபோது என்னை ஒருவரும் நான் படிப்பித்த பாடங்களுக்காக ஞாபகம் வைத்திருக்கவில்லை எனவும், தான் கொடுத்த அடியாலேயே ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்றார். பாவமாய் இருந்தது அவரைப் பார்க்கும் போது. ஆனால் இப்பவும் பழைய லொள்ளு அப்படியே அவரிடம் இருந்தது.. சற்றும் மாறாமல்.

எனக்கும் அவருக்குமான உறவு அடியால் ஏற்பட்டதல்ல, பாடசாலைக்காலத்தில் மொட்டை மொட்டை என நானும் மற்றவர்களுடன் சேர்ந்து திட்டி, அவரின் அடிக்கு பயந்து திரிந்தவன் தான். அவரின் கணிப்பில் நான் மோசமானவானாக இருக்க வில்லை என்றே நினைக்கிறேன். இல்லை என்றால் முதன்மை மாணவர் தலைவராக நியமித்திருப்பாரா? சில வேளை கள்ளனுக்கு பொலீஸ் வேலை குடுத்தால் களவு குறையும் என்று நினைத்தாரோ என்னவோ?

ஆமிக்காரர்கள் கூட இந்த மனிசனுக்கு பயந்திரிந்த காலமிருந்தது. நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஆமி கொமாண்டரையும் வெருட்டி இருக்கிறார். அவரின் ஆளுமை எவரையும் அவர் முன் கட்டிப் போடக் கூடியது. இலங்கையில் இருந்து பல முக்கிய புள்ளிகளையும் அறிந்திருந்தார்.

அவரின் குரலில்
அதிகாரமும்,
கட்டளையும்,
ஆளுமையும்,
நேர்மேயும்
கலந்தேயிருக்கும்.
அதற்கு
கட்டுப்படாதவர்கள்
இல்லையெனலாம்

ஒரு முழு நிலா நாள் நடுசாமத்தில் எம்மை எழுப்பி மட்டுக்களப்பு வாவியில் படகில் அழைத்துச் சென்று கல்லடிப்பாலத்தருகில் ”மீன் பாடுவதை” கேட்கவைத்தார் (எனக்கு நித்திர கலக்கத்தில தாலாட்டு தான் கேட்டது...மீன் பாடினது சத்தியமா கேக்கேல்ல)

ஆங்கிலத்தை அழகாய் (அடதவடித்தனம் கலந்து) கற்பிக்கக் கூடியவர். சேக்ஸ்பியரின் மகா பக்தன். கடைசியாக சந்தித்த போது தான் இங்கிலாந்து சென்று சேக்ஸ்பியர் வாழ்ந்த இடங்களை பார்த்து வந்ததாக பெருமையுடன் சொன்னார். வாழ்வில் சிரமதானத்தின் அவசியம், முக்கியம், கட்டாயங்களை எமது இரத்தில் கலந்தவரும் அவரே. நன்றாக டெனிஸ் ஆடுவார்.. நாங்கள் அதை ஆ..ஆ...ஆ...ஆ பார்த்துக் கொண்டிருப்போம். நமக்கு புரியாத வியையாட்டப்பா அது.

காலப்போக்கில் வாழ்க்கை தந்த பாடங்களினாலும், யதார்த்தம் புரிந்ததாலும் அவரின் பல செயல்கள் நியாயமானவைகப் படப் பட அவரின் மேல் இருந்த பயம் பக்தியாய் மாறியிருக்கிறது.

வேதனை என்னவென்றால்
முதுமையின் தனிமையில், சுகயீனத்துடன் குறைந்த வருமானத்தில் வாழ்ககையை ஒட்ட அவர் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டியிருப்பது.

அவருக்கு பல விதத்திலும் உதவும் அனைத்து நெஞ்சங்களுக்கும் சிரம் தாழ்த்துகிறேன்.

முக்கியமாக, அவரைத் தினமும் ஒரு முறை சென்று அவரின் தேவைகளைக் கவனிக்கும் பெயர், முகம் அறியாத அந்த மனிதம் நிறைந்த மனிதனுக்கு!!

இது எனது ப்ளாக்இல் சில வருடங்களுக்கு முன் போடப்பட்டிருந்தது. சற்று தூசுதட்டி கொஞ்சம் பெயின்ட் அடித்திருக்கிறேன். கோவித்துக் கொள்ளாதீர்கள்.

இறுதியாக
எம்மைப் போல் வெளிநாட்டவருக்கு தமது பாடசாலை, ஆசிரியர்கள் மேல் அன்பும், பாசமும், வாஞ்சையும் இல்லாமலிருப்புது மனதை மிகவும் நெருடுகிறது. ஆனால் பாடசாலையும், ஆசிரியர்களும் நிட்சயமாய் தமது மாணவர்கள் மேல் அன்பும், பாசமும் காட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்
சஞ்சயன்
Author: கானா பிரபா
•4:33 AM

வயசானவர் ஒருவர் ஏதாவது விடயம் பற்றிப் பேசும் போது இடையில் இளையவர் ஒருவர் மாற்றாக ஏதாவது சொன்னால் போதும் "என்ன விண்ணாணம் பேசுறாய்" என்று கேட்பார் அந்த வயசானவர்.

குறித்த விடயம் பற்றி ஒரு கருத்து சொல்லப்படும் போது அது அந்த விடயத்திற்கு முரணாக இருந்தால் அல்லது குறித்த அந்த விடயத்தை முன்வைத்தவர் ஏற்காது போனால் தான் இந்த விண்ணாணம் என்ற வார்த்தை பிரயோகம் வந்து விழும்.

விண்ணாணம் என்றால் என்ன என்று அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். அதில் நாகரீகம், மாசாலம், வெட்கம் என்று சம அர்த்தங்கள் போடப்பட்டிருந்தன. இங்கே வெட்கம் என்ற அர்த்தத்தில் நம்மூரில் இந்த இந்த விண்ணாணம் பயன்படுவதில்லை. எனவே மற்றைய இரண்டு அர்த்தங்களையும் கொண்டு பார்த்தால், நாகரீகம் என்பது ஏற்கப்படும் சொல்லாகப் படுகின்றது. மாசாலம் என்று போட்டிருக்கே அது என்ன என்று பார்த்தால் ஓர் மாய வித்தை என்று விளக்கப்பட்டிருக்கிறது அகராதியில்.

ஆக, விண்ணாணம் என்ற சொல்லை மாயவித்தை, அல்லது நாகரீகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கலாம். விண்ணாணம் என்பது விஞ்ஞானத்தின் மருவிய பேச்சு வழக்கின் கிண்டல் தொனியாகவும் மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புகைப்படம் நன்றி: Boston.com
Author: வர்மா
•5:28 AM
ஊரைவிட்டு வெளியேறியபின்னர் அந்நியமானவைகளில் சூரன்போரும் அடக்கம்.சூரன்போர் என்றபெயரில் சூரனை முன்னும் பின்னும் கொண்டோடுகிறார்கள்.செல்வச்சந்னதி,பொலிகண்டி கந்தவனம்,நெல்லியடிமுருகமூர்த்தி போன்றவற்றில் நடைபெறும் சூரன்போர் உணர்ச்சிவசமாக இருக்கும்.சூரனைக்கொண்டோடுவது,உயர்த்துவது,பதிப்பது,ஒற்றைக்கையில் தூக்கி லாவகமாக ஆட்டுவதைப்பார்க்கும்போது உண்மையான யுத்தம்போல் இருக்கும்.சூரனின் பககத்தில் இருந்து ஒலிக்கும் பறைமேளம் ஆடுபவர்களுக்கு உற்சாகத்தைக்கொடுக்கும்.

கொழும்பில் நடைபெறும் சூரன்போர் வித்தியாசமானதாக உள்ளது.பெருந்திரளான மக்கள்மத்தியில் சூரன்போர் நடைபெற்றது.பக்தியுடன் வந்தவர்கள்கொஞ்சப்பேர். முசுப்பாத்திபாக்கவந்தவர்கள் அதிகமானோர்.சூரனின் சகோதரர்களின் தலையை முருகன் வெட்டும்போது அரோகரா,வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றகோசம் வானைப்பிளக்கும்.கொழும்பில் நடந்தசூரன்போரின்போது யாரோஒரு லூசுப்பயல் கைதட்டினான் எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

கடைசிக்கட்டத்தில் சூரன் மாமரமாக வருவார்.சூரனை ஆட்டுபவர் மாங்காயையும் மாவிலையையும் பக்தர்களூக்கு எறிவார் பக்தர்கள் அதை பூஜை அறையில் வைப்பார்கள்.கொழும்பில் நடந்த சூரன்போரின் வானரக்கூட்டம் ஒன்று மாங்காயை பறித்து சுவைத்தது. சிலபக்தர்கள் வானரத்திடம் மாங்காய் கேட்டு கெஞ்சினார்கள்.

கொழும்புக்கு வந்தபுதிதில் எனதுமகளை சூரன்போருக்கு கூட்டிச்சென்றோம்.அப்போது மகளூக்கு நான்குவயது. சூரன்போர்பற்றிய கதை தெரிந்தபடியால் சூரன்போரை ஆர்வமாகப் பார்த்தார். முருகன் அசையவிலலை.சூரன் ஓடித்திரிந்தது மகளூக்கு சந்தோசமாக இருந்தது. உணர்ச்சிவசப்பட்ட மகள் கமோன் சூரன் என்றார்.
Author: சஞ்சயன்
•2:51 PM
1976 இல் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அறிமுகமாகிய ‌ஆசான், வழிகாட்டி. 1984 வரை தினமும் சந்தித்த சரித்திரம் அவர்.
பரந்த முகம். அந்தக்காலத்து ரவிச்சந்திரனின் மீசை போன்ற மெல்லிய மீசை. சற்றே பெரிதான பற்கள். லைட், கரியர் பூட்டிய சைக்கில வெள்ளைசேட் வௌ்ளை கால்சட்டை, எளிமை ........... இது தான் அவர்

இவற்றை விட அவரை அடையாளம் காண அவரின் குரல் காணும். சில குரல்கள் அவர்கள் சொல்லாமலே எம்மை கீழ்படிய வைக்கும்..ஆனால் புண்ணியமூர்த்தி சேரின் குரலில் ஒன்றும் அப்படி ஒரு வசீகரமும் இல்லை. ரோட்டோரத்தால் நடக்கும் போது காதுக்குள் வந்து ஒலியெழுப்பும் பாரவூர்தியின் ஹோன் போன்றது அவரது குரல். கீழ்ப்படிய சொல்லாது, சும்மா ஒரு பயத்தை மட்டும் தற்காலிகமாய் தந்து போகும் அது ...அனால் காது மட்டும் கிழிந்து தொங்கும் சில சிமிடங்கள். மற்ற எல்லோருக்கும் வியையாட்டுப் போட்டியின் போது ஒலிபெருக்கி வேணும், ஆனால் சேர் அதை தூக்கியதை நான் கண்டதே இல்லை.

அவரிட்ட இருந்த ஒரே ஒரு கெட்ட பழக்கம் மூக்குத்தூள் போடுவது தான். அவரின் கைலேஞ்சியின் நிறம்....வேணாம் அதை விட்டு விடுவோம்..ஆனால் அதை யார் அவருக்கு தோய்த்துக் கொடுத்தார்கள் என்ற சந்தேகம் இன்றும் எனக்குண்டு. அவரே தோய்த்தாரா இல்லா விட்டால் மனைவி தோய்த்தாரா...மனைவியிடம் கொடுத்திருந்தார் எனின் புண்ணியமூர்த்தி சோ்ருடன் எனக்கு கோபம் வரும்.
வெள்ளை கால்சட்டை பொக்கட் வாசல் இரண்டும் வெள்ளையாய் இருக்கும் அவர் முதல் பாடம் எடுக்கும் போது. ஆனால் கடைசிப் பாடம் எடுக்கும் போது ஐயோ!!!!!!! அதைக் கேக்காதீர்கள்....

ஒரு முறை மனோகரன், இளங்கோ அண்ணண் கோஸ்டியிடம் அவர் மூக்குத் தூள் வாங்க குடுக்த்த போது அவர்கள் சாடையாக மிளகாய்த்தூள் கலந்து...
அவர் போட்டு...
தும்மி தும்மி களைத்து
கோவத்தில்
அவர்களின் காது கிளிய
கத்தி
அனுப்பியது
மட்டக்களப்பு
மத்திய கல்லூரி
எமக்கு
தந்தனுப்பிய
மறக்க முடியாத
சிரிப்பலைகள்.

அருமையான அன்பான மனிதர். கத்துவாரே தவிர அடிக்க மாட்டார். மனிதம் நிறைந்த மனிதர் அவர். தன்ட கையால் வறுமைப்பட்ட மாணவர்களுக்கு பஸ் சீசன் டிக்கட் எடுத்துக் கொடுத்தவர்.

சுகாதாரம், விளையாட்டு கற்பித்தல், சாரணீயம், சிரமதானம், பள்ளிக் கூடத்திற்கு டைம் டேபிள் போடுவது போன்றவையே அவரின் அடையாளங்கள். அவர் இல்லாதிருந்தால் பிரின்ஸ் கூட ஆட்டம் கண்டிருப்பார் என்பேன் நான்.

அவர்
பாடசாலைக்கு டைம் டேபிள் போடும் அழகு
அலாதியானது.
புள்ஸ்கைப் பேப்பர் நாலு எடுத்து
அவற்றை
ஒன்றோடு ஒன்றோடு
வேப்பம் பிசின் போட்டு ஒட்டி
மஞ்சல் நிற மரத்திலான ரூளரால்
கனக்க கோடுகளை
குறுக்கும் நெடுக்குமாய் போட்டு
அழித்து
மீண்டும் போட்டு
மீண்டும் அழித்து, போட்டு
x அச்சில் வகுப்புகளின்பெயர் எழுதி
y அச்சில் ஆசிரியர்களின் பெயர் எழுதி
அப்பபா
பாடசாலைக்கே
குறிப்பு எழுதும் சாத்திரி
போல
அடிக்கடி மூக்குத் தூள்
போட்டபடி
மொட்டைத் தலையை
அந்த பேப்பருக்குள்
பூத்தி வைத்திருப்பார்.
அந்த நேரத்தில்
”சோ்” என்று கூப்பிட்டால்
அவரின் வாய் கத்தாது
ஆனால்
கண் கத்தும்.
எப்படியோ
எல்லோருக்கும்
பொருந்தக் கூடிய
டைம் டேபில் போட்டு
அவரின் கந்தோரில் ஒட்டி வைத்திருப்பார்.
(யாராவது அதை ஆவணப்படுத் தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன். இருக்குமா?)

அவரின் மூத்த மகன் நவனீதன் (பட்டப் பெயர் ”பூனை”) எங்களுடன் தான் படித்தான். அமைதியானவன் தான். ஆனால் ஒரு முறை விவசாயத்தில் நாம் ”மரங்களை ஒட்டுதல்” பற்றி படித்த போது ”பூனை” வீட் போய் ரோசா பூ மரத்தை வெட்டி, வீட்ட இருந்த பப்பாசி மரத்தோடு ஒட்டி விவசாயப்புரட்சி செய்திருக்கிறான்..... அடுத்த நாள் இந்த ஆராய்ச்சியை எங்கட அரசவையில் புண்ணியமூர்த்தி சேர் அவிட்டு விட ... பாவம் நவனீதன்... நொந்து நூலாய்ப் போனான்.

சுகாதாரப் பாடம் நடத்துவார்....இனப்பெருக்கம் என்றால் சொல்லவா வேணும் அந்த காலத்தில...எங்கட கேள்விகளுக்கு நக்கலும் குறும்பும் கலந்து பதிலளித்து லாவகமாய் பாடம் நடாத்துவார்.

ஒரு முறை அமீர் அலி யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த போது ”பலான” புத்தகம் கொண்டு வர முழு வகுப்பும் இனிப்பை மொய்த ஈக்கள் போல சுற்றியிருந்து அதை, உலகம் மறந்து ”உயர் இலக்கியம்” படித்துக் கொண்டிருந்த போது மெதுவாய் வந்து
ம்..ம் என்று கனைத்தார்
வேர்த்து விறைத்து நின்ற போது
ம் என்று கைய‌ை நீட்ட
”உயர் இலக்கியம்” கை மாறியது
தலையங்கம் பார்த்து
சிரித்தவர்
யாரும் அதை வாசிக்காதவர்கள்
இருந்தால்
வந்து கேளுங்கோ
தாறன்
என்று
சொல்லி எடுத்துச் சென்றார்
‌அதே நாள்
பாடம் நடாத்த வந்த
போதுஅதைப் பற்றி
தெரியதது போல
பாடம் நடாத்தினார்.

வீட்டில் மாடு வளர்த்தார். அப்ப இவர் தான் பாடசாலை விடுதிக்கும் பொறுப்பு. விடுதி குசினிக் கழிவுகளை வீட்ட கொண்டு போவார். அந்தக் காலத்திலேயே recycle பற்றி தெரிந்து வைத்திருந்தார் :-)

பாடசாலையின் ஒவ்வோரு நிகழ்விலும் அவரின் அடையாளமும், ஆளுமையும் இருக்கும். இரவு பகல் பாராது பாடசாலைக்கு என உழைத்த மனிதரவர். பிரின்ஸ் காசிநாதரின் ஆட்சிக் காலத்தில் அவரின் வலது கரமாய் இருந்தவர். அன்றிருந்த மத்திய கல்லூரியின் மிடுக்கும் ,செருக்கும் இன்று இல்லாதது வலிக்கிறது... மிகவும் வலிக்கிறது. ‌மிக நெருங்கிய உறவொன்று தொலைந்து போனது போன்றதோர் வலி அது.

வழி தடுமாறிய நேரங்களில் தோளில் கை போட்டு நண்பனாய் மாறி மனச்சாட்சியுடன் உரையாட கற்றுத்தந்தவர் அவர். எனது ஓடோகிராப் இல்
”உண்மையாய் இரு. உண்மை உன்னை உயர்த்தும்” என்னும் தொனியில் தான் எழுதியிந்தது நல்ல ஞாபகமாயிருக்கிறது.

பாடசாலை வாசலில் நின்றிருந்தால் (பெண்கள் பாடசாலை அருகிலேயே இருந்தது) ” டேய் என்ன சுளட்டுறீங்களோ” என குறும்பாய் கேட்டு தானே வெடித்துச் சிரிப்பார்.

இப்போ அவர் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன. அவரின் மகன் (பூனை) ஜேமனியில் வசிப்பதாய் அறிந்தேன். மற்ற மகன் மட்டக்களப்பில் இருக்கிறாறாம். கடைசியாய் தம்பி அவரை சந்தித்த போது வாயிலிருந்த ?ஒரே ஒரு பல்லும் ஆடியபடி
உன்ட அண்ணண் எப்படி இருக்கிறான்?
என்பதை வீடியோவில் பார்த்த போது
சத்தியமாய் கண்கலங்கியிருந்து
எனக்கு

இறுதியாய்

புண்ணியமூர்த்தி சேர், உங்களை மூக்குத்தூள் என்று பல தரம் திடடித் துலைத்திருக்கிறேன். மற்றவர்களுடன் கதைக்கும் போது கூட உங்கள் பெயரைப் பாவித்ததில்லை. மூக்குத்தூள் என்று தான் உங்களை குறிப்பிட்டு கதைத்திருக்கிறேன்...

மனிதமே........மன்னிப்பாயா?

புண்ணியமூர்த்தி மாஸ்டரின் நினைவுகளுடன்
சஞ்சயன்
23.10.2009
Author: கானா பிரபா
•3:01 AM

ஒருவர் குறித்த காரியத்துக்காக வெளியே செல்லும் போது அவரிடம் போய் "எங்கே போகிறாய்" என்று கேட்டால் குறித்த காரியம் தடைப்படும் என்ற நம்பிக்கை எங்களூர் வாழ்வியல் வழக்கில் இருக்கின்றது.

"எங்கை போறாய்" என்று ஒருவரிடம் கேட்டால் அவருக்குக் கெட்ட கோபம் வரும்.
"ஏனப்பா பிறத்தாலை கூப்பிடுறாய்" என்று அவர் சினந்து கொள்வார். இங்கே பிறத்தாலை என்று சொல்வது ஒருவருக்குப் பின்னால் போய்க் கூப்பிடுவது என்று அர்த்தம் கொள்ளும் வகையில் இருக்கும். அதாவது பிறத்தாலை = பின்னால் என்றவாறு அமைந்திருக்கும்.
ஏடாகூடமாக இப்படி யாரையாவது கேட்டால் போதும், அவர் ஒரு சில நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று தாமதித்தே குறித்த காரியத்துக்காகச் சொல்வார்.

இப்படியான சந்தர்ப்பங்களில் அதை இன்னொரு விதமாகக் கேட்கும் மரபு இருக்கின்றது. அதுதான் "துலைக்கே போறாய்". இங்கே துலை என்பது தொலைவு, தூரம் என்று அர்த்தப்படும். அதாவது "எங்கே தொலைதூரமா செல்கின்றாய்" என்று கேட்பது போல அமைந்திருக்கும். துலைக்கிடுதல் என்பது தூரப்படுதல் என்று அகராதியில் வழங்கும். எனவே தான் எங்களூர் வழக்கில் "துலைக்கே போறாய்" என்பது சரளமாகப் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்காக அமைந்திருக்கின்றது.
அது ஏனோ தெரியவில்லை "துலைக்கே போறாய்" என்று கேட்டால் மட்டும் குறித்த காரியம் தடங்கலின்றி நடக்குமா என்ன, இதெல்லாம் மரபுவழியாக வந்ததால் இதுகுறித்த ஆராய்ச்சியில் யாருமே இறங்காமல் இருக்கின்றார்கள்.

அப்ப நான் வரட்டே...
Author: geevanathy
•9:54 PM
(கும்பம்)

விஜயதசமியன்று திருகோணமலையில் நடைபெறும் கும்பவிழா சிறப்பானதாகும்.அன்று இங்குள்ள ஆலயங்களில் கும்பங்கள் , கரகங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அன்றிரவு முழுவதும் வீதிவலம் வருவது வழமையாகும்.


'கும்பம்' பெரிய செப்புக்குடத்தில் வேப்பம் பத்திரத்தினால் அகலமான அடித்தளம் அமைக்கப்பட்டு ,தேவையான உயரத்திற்குத் தேர்போல பூக்களாலும், வர்ணக்காகிதத்தாலும் அலங்கரித்துக் கட்டப்படுகிறது. கும்பத்தின் அடிப்பாகம் அகன்றும் மேலேசெல்லச்செல்ல ஒடுங்கியும் செல்லும்.


கும்பம், கரகம் என்பவற்றைத் தாங்கி வருபவர்களுடன் ராஜமேளம் அடிப்பவர்களும்,உடுக்கடித்து காவியங்கள் ,காவடிச் சிந்துகள் பாடுபவர்களும், பக்தர்களும் வருவார்கள்.


ஒவ்வொரு ஆலயங்களிலும் இருந்தும் புறப்படும் கும்பங்கள் மற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு புறப்பட்ட இடத்தைச் சென்றடைவதுடன் இவ்விழா நிறைவுபெறும். இதன்போது பக்கதர்கள் தம் வீட்டுவாசலில் நிறைகுடம் வைத்து கும்பத்தினை வரவேற்பர்.

படங்கள் - (NOKIA N70)
28.09.2009

Share/Save/BookmarkAuthor: கானா பிரபா
•4:08 AM
அண்மையில் ஒரு நண்பரோடு தொலைபேசிக் கொண்டிருக்கும் போது மூத்த ஈழத்துக் கலைஞர் ஒருவர் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது எதேச்சையாக நான் "அவர் முந்தி இருந்த இருப்புக்கு இப்ப நல்லா வயக்கெட்டுப் போனார்" என்று சொன்னேன். நீண்ட காலத்துக்குப் பிறகு என் வாயில் தவழ்ந்த "வயக்கெட்டு" என்ற வார்த்தையைக் கேட்ட நண்பர், "இந்த வயக்கெட்டு என்ற வார்த்தையை இப்ப புலம்பெயர்ந்தாப் பிறகு பேச்சு வழக்கில் ஏறக்குறைய மறந்து விட்டோம் இல்லையா" என்றார்.

"வயக்கெட்டு" என்பது ஒரு சுகதேகியாக இருந்த மனிதர் உடல் ஆரோக்கியம் குன்றிப் போதல் அல்லது உடல் நலிவடைதல் என்பதைக் குறிக்க ஈழத்து மொழி வழக்கில் பாவிக்கப்படும் வார்த்தைப் பிரயோகம் ஆகும். சிலர் "வசக்கெட்டு" என்றும் பாவிப்பர். வசக் கெட்டு என்பதில் இருந்து திரிபாகி அமைந்ததே வயக்கெட்டு என்று நினைக்கத் தோன்றுகிறது.

வயக்கெட்டு என்பதற்கு ஒத்த அர்த்தம் கொண்ட சொற்கள் ஏதாவது இருக்கின்றதா என்று ஈழத்துத் தமிழகராதி ஒன்றில் தேடினேன். அங்கே கிட்டியது "வசப்பிழை" என்னும் சொல் , வசப்பிழை என்றால் - பெலகீனம் என்று அர்த்தம் போடப்பட்டிருந்தது. பெலகீலம் என்பதும் ஈழத்துப் பேச்சு வழக்கில் "பலகீனம்" என்ற சொல்லின் பொருள்படப் பாவிப்பது வழக்கம். அந்தச் சொல்லைப் பிரித்து அர்த்தம் கொண்டால் பலம் + ஈனம் அதாவது பலம் கெடல் என்று அமைகின்றது.

வசம் என்றால் கீழ்ப்படிதல், ஒன்றின் கீழ் அடங்கிப் போதல் என்ற சம அர்த்தம் கொள்ளலாக அமைவதால் வசக்கெட்டு என்பது வசம் என்பதற்கு எதிரிடையாக அதாவது ஒருவனுடைய உடல் மற்றும் தேகாரோக்கியம் கெட்டுப் போதல் என்று அர்த்தம் கொள்ளலாம்.

கொழும்பு போன்ற நகர்ப்பகுதிகளில் நீண்டகாலம் தங்கி விட்டு கிராமத்துக்குப் போனால் எதிர்ப்படும் ஊர்க்கார முதியவர் ஒருவரோ அல்லது மூதாட்டி ஒருவரோ
"என்ன தம்பி நல்லா வயக்கெட்டுப் போனாய்" என்று தான் சம்பிரதாயபூர்வமாகப் பேச்சுக் கொடுப்பது பரவலாக இருக்கும் விடயம்.
Author: வர்மா
•7:52 PM

உங்கள்வீட்டில் தீபாவளி
எங்கள்வீட்டில் தீராதவலி

இந்த வசனத்தைதந்த நண்பர் சித்திக்காரியப்பருக்கு நன்றி
Author: கானா பிரபா
•8:48 PM
தைபொங்கல், புது வருஷப்பிறப்பு போன கையோட தீபாவளி எப்ப வருகுது எண்டு, அப்பாவின்ர கட்டிலுக்கு அங்கால இருக்கிற மெய்கண்டான் கலண்டரின்ர திகதித் துண்டுகளை விரித்து எண்ணத் தொடங்கி விடுவேன். தீபாவளிக்கான நாள் நெருங்க நெருங்க, பாரதிராஜாவின்ர பாட்டுக்களில வாற வெள்ளை உடை அக்காமார் ஸ்லோமோஷனில் வருமாப் போல நானும் அந்தரத்தில பறப்பேன்.

அப்பாவுக்கு இந்தக் காலத்து நாகரீகம் தெரியாது எண்டு என்ர அண்ணனுக்கு அப்பா எடுக்கும் துணி வகை பிடிக்காது. ரண்டு, மூண்டு கிழமைக்கு முந்தியே சித்தப்பாவைக் கொண்டு ரவுணிலை சேர்ட்டுத் துணியையும், காற்சட்டைத் துணியையும் எடுத்து விடுவோம். இணுவில் கந்தசுவாமிகோயிலடி வெங்காயச் சங்கத்துக்கு முன்னாலை இரு முஸ்லீம் ரெய்லர் கடை இருந்தது. அம்மா ரீச்சர் எண்டதாலபள்ளிக்கூடம் போற வழியில இருக்கிற அந்த ரெய்லரிட்டைத் தான் எப்பவும் சட்டை தைக்கக் குடுப்பம்.
"ரீச்சர்! தீபாவளி வருது தானே, நிறையச் சோலி இருக்கும், கொஞ்சம் சீக்கிரமாவே துணியைக் குடுத்திடுங்க" எண்டு அம்மா பள்ளிக்கூடம் போற நேரம் கடைக்குள்ளால எட்டிப்பார்த்து நினைப்பூட்டி விடுவார் ரெய்லர். துணிக்கு அளவெடுக்கிற போது ரெயிலர் மீற்றர் பட்டியை வைத்து கொலருக்கும், கையுக்கும் எண்டு அளவெடுத்து விட்டுக் என்ர காற்சட்டைக்கு அளவெடுக்கிற நேரம் பார்த்து
"ரெய்லர்! கொஞ்சம் கால் நீட்டா விட்டுத் தையுங்கோ, கன காலம் வச்சுப் போடலாம்" எண்டு அம்மா கட்டளை இடவும் , பல்லால் நெருவிக்கொண்டே அம்மாவை ஒரு முறை முறைப்பேன்.

தீவாளிக்கு உடுப்புத் தாறது வீட்டுக்காரர் மட்டுமில்லை, சித்தப்பாவின் முறையும் இருக்கு. சித்தப்பாவோட யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் உடுப்பெடுக்கிறதெண்டால் பெரிய புழுகம் தான். அதுக்கும் ரண்டு காரணம். ஒண்டு அவரின்ர பஜாஜ் ஸ்கூட்டரிலை போகலாம். இன்னொண்டு, ரவுணையும் பார்த்து விட்டு வரலாம்.


தீவாளித் தினத்துக்கு கொஞ்ச நாள் முன்னமே யாழ்ப்பாணம் ரவுண் புதுமாப்பிளை போல நல்ல சந்தோசமா இருக்கும். பஸ்ராண்டுக்கு நடுவில இருக்கிற மணிக்குரல் விளம்பர சேவையில் , நிமிடத்துக்கொரு புடவைக்கடை விளம்பரம் வரும். கொடி பறக்குது படத்திலை இருந்து "சேலை கட்டும் பூவுக்கொரு வாசமுண்டு" பாட்டோட சீமாட்டி ஜவுளி மாளிகை விளம்பரம் வரும். கொடி பறக்குது, ராஜாதி ராஜா சேலைகளும், நதியா சுரிதாரும் விளம்பரங்களில் கட்டாயம் இடம்பிடிக்கும்.

புடவைக் கடைத் தட்டிகளில் அமலாவும், அம்பிகாவும் சாறி கட்டினபடி சிரித்துக் கொண்டிருப்பதை ஆவெண்டு பாத்துகொண்டு சித்தப்பாவின் கையைப் பிடிச்சுக் கொண்டே சனத்திரளுக்குள்ளால நகர்வேன். சித்தப்பாவின் கால் சொல்லிவைத்தது போல் நியூமார்க்கட்டுக்குள்ளை இருக்கிற ஹப்பி ரெக்ஸ் கடைக்குத் தான் போகும். ஊர்க்காரற்றை கடை, ஏமாத்த மாட்டாங்கள் என்று நியாயம் கற்பிப்பார். ஹப்பி ரெக்ஸ் இல் சிங்கப்பூரால வந்த சேர்ட்டுக்கள் குவிஞ்சிருக்கும். எனக்கு டிராகன் படமும் பூவும் போட்ட சிங்கப்பூர் சேர்ட்டை சித்தப்பா வாங்கித் தரவேணும் எண்டு கெதியா கண்ணை மூடி ஒருக்கால் பிள்ளையாரை வேண்டிக் கொள்வேன். பெரும்பாலும் பிள்ளையார் வரம் குடுத்து விடுவார். அங்காலை ரியூசனுக்குப் போறதெண்டு சொல்லிப் போட்டு லுமாலாவிலை பஞ்சாபி சட்டை வாங்க வந்த அக்காமாரின் பேரம் பேசலும் மும்முரமாயிருக்கும்.வசதி குறைந்தவர்களின் அல்லது ஏழைகளின் சொர்க்கமாக பேவ்மென்ற் பாதையோரக் கடைக்காரகளின் விற்பனை இருக்கும்.

புதுச்சட்டை எல்லாம் றெடி எண்டவுடனை, அம்மா பத்திரமாக அவற்றைச் சாமி அறையில இருக்கிற அலுமாரிக்குள்ளை வச்சுப் பூட்டிப் போடுவா. சத்தம் போடாமல், அம்மாவுக்குத் தெரியாமல் சாமியறை அலுமாரியைத் திறந்து மடிச்சு வச்சிருக்கிற சேர்ட்டை ஆசையோடு தடவி விட்டு ஒருக்கால் மணந்து பார்த்தால் வாசனைக்குப் போட்டு வச்ச பூச்சி முட்டை மணமும், புதுச் சட்டையின் வாசமும் கலந்த கலவையான மணம் நாசிக்குள் நிறைக்கும்.

எப்படா விடியும் எண்டு காத்திருந்த தீவாளி நாள் வரும்.

கே.கே.எஸ் றோட்டில, தாவடிசந்தி தாண்டிக் கொக்குவில் பக்கம் போகேக்கை ஒரு மதகு வரும். அந்த மதகுக்குப் பாலம் போட்டு அங்கால் காணியில் ஒரு இறைச்சிக் கடை இருந்தது. வழக்கமா இரண்டு முழு ஆடு தோல் உரிக்கப்பட்டுக் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். கே.கே.எஸ் றோட்டில ஆராவது இறச்சிக்கடைக்காரனுக்குத் தெரிஞ்ச வாடிக்கையாளர் போகேக்கை எட்டி
" அண்ணோய்! ஆட்டிறச்சி ஒரு ரண்டு கிலோ கட்டி வைய்யுங்கோ" என்று கட்டளை இட்டு விட்டுத் தம் வேலையைப் பார்க்கப் போயிடுவினம். மத்தியானம் வரைக்கும் போணியாகாத ஆட்டிறச்சியை எப்படியாவது ஒப்பேற்றி விற்று விடவேணும் எண்ட முனைப்பே இறைச்சிக்கடைக்காரனுக்கு இருக்கும்.

ஆனால் தீவாளி நாளில உதெல்லாம் நடவாது கண்டியளோ, காலமை ஆறு மணிக்கே மதகையும் தாண்டி தீவாளிக்கு இறைச்சி வாங்கவென ஒரு பெருங்கூட்டம் முண்டியடிக்கும்.
"எல்லாரும் வரிசையில நிண்டால் தான் இறைச்சி கிடைக்கும்" என்று புதுப்பணக்காரன் தோரணையில் இறைச்சிக்கடைக்காரன் மிதப்பான்.காலை எட்டுமணிக்கெல்லாம் முழு இறைச்சியும் விற்றுத் தீர்ந்து விடும்.

காலமையே முத்துலிங்க மாமாவின் உதவியில் எங்கட வீட்டுச் சாப்பாட்டுக்கான இறைச்சி வாங்கப்பட்டிருக்கும். சில ஆட்கள் ஒரு ஆட்டை வாங்கி உரித்து சொந்தக்காரருக்குள்ளையே பங்கு ஆடு இறைச்சி பிரிப்பதும் உண்டு. பனையோலையை வளைத்துச் செய்த பாத்திரத்தில் ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் தேவையான இறைச்சி பங்கிடப்படும்.


வெள்ளணக் கிணத்தடிப் பக்கம் போய் துலாவில் நீரிறைத்துக் குளியல் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டு, பிள்ளையாரடிக்கு ஆறரைப் பூசை பார்க்கக் கிளம்புவோம்.

மடத்துவாசல் பிள்ளையாருக்கும் தீபாவளி நாள் தான் நிறையப் பட்டுத் துணிகள் கிடைக்கும். பூசை முடிந்து, கடைசியில சண்டேஸ்வரர் சுவாமியைக் கும்பிடேக்கை, புதுச் சட்டையில் இருந்து ஒரு நூலைப் பவ்யமாக இழுத்தெடுத்து, அந்த நூலைச் சண்டேஸ்வரருக்குச் சார்த்தி விட்டுக் கிளம்புவோம்.

நாலைஞ்சு சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் புதுச்சட்டையைக் காட்டி விட்டு, அவையள் தாற முறுக்கு, பயற்றம் உருண்டை, அரியதரம் எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு பால் தேத்தண்ணி வாயுக்குள்ள இருக்கவே அடுத்த வீட்டுக்குப் பாய்வம். சொந்தக்காரர் வீடுகளுக்கு நடைராஜாவிலேயே பயணம் எண்டதால அவையள் தாற பலகாரச் சாப்பாடெல்லாம் பாதிவழியிலேயே செமிச்சுப் போயிடும். எல்லா வீடுகளுக்கும் ஒரு றவுண்ட் அடிச்சுப் போட்டு வீட்டை வர பகல் பன்னிரண்டை தாண்டி விடும்.

வீட்டுக்கு வரும் வழி நெடுகிலும் கடைக்கதவுகளில் பூட்டுக்கள் சிரித்துக் கொண்டிருக்கும். உள் ஒழுங்கைகளுக்காள் வரும் போது ஏற்கனவே மெண்டிஸ் சாராயவகையறாக்களை ஒரு கைபார்த்து விட்ட வயதான மது போதை மன்னர்கள் சிலர் ரோட்டோரமாகவோ, அல்லது கிடுகு வேலிகளின் கதியால் பக்கமாகவோ போதை தலைக்கேறிச் சுருண்டு படுத்திருப்பார்கள்.
"ஒளுதரும் என்னை ஒந்தும் கேட்கப் பிடாது" என்று பஞ்ச் டயலாக் வேற அவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும். ஊர்நாய்களோ, " மரியாதையா இந்த இடத்தை விட்டுப் போறியோ இல்லையோ?" என்ற தோரணையில் வாள் வாளென்று குரைப்பெடுத்துத் தர்ணாப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் புதினமாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்வோம்.

வீட்டுக்குள் நுளையும் போது ஆரோ ஆக்கள் எங்கட வீட்டுக்குப் பலகாரம் சாப்பிட வந்திருப்பினம். "எட! சோக்கான சட்டையடா" எண்டு ஒருக்கால் சீண்டிப் பார்ப்பினம். மாப்பிளை பார்க்க வந்த பொம்பிளை மாதிரி வெக்கத்திலை கீழை குனிஞ்சு கொண்டே குசினிப்பக்கம் போயிடுவன். அடுப்படியில் இருக்கும் கறிச்சட்டியை மெல்லமாத் திறந்து பார்த்தால் காலையில் பச்சையாக இருந்த ஆட்டிறச்சி கறிச்சட்டிக்குள்ளை பொன்னிறத்தில நல்லா வதக்கிக் காய்ச்சியிருக்கும். இறைச்சிக்குப் போட்ட மசாலா நொடி வயிற்றில் அமிலத்தைச் சுரக்க வைத்து விடும். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வழியனுப்பி விட்டு, அம்மா நேராகக் குசினிக்குள் வந்து விடுவா. அப்பாவுக்கும் சாப்பாட்டு நேரம் எண்டு விளங்கி விடும். குசினிக்குள்ள இருக்கிற பலகைக் கட்டையில் இருந்து அம்மா, கோப்பையில் போடும் குத்தரிசிச் சோறையும் எண்ணையாகத் திரண்ட கொழுப்பு ஆட்டம் போடும் ஆட்டிறச்சியைக் கலந்து வாயுக்குள்ளை திணித்தால் தேவாமிர்தம் தான்.

எங்கட நாட்டிலை தீபாவளி எண்டால் வெடிகளோ மத்தப்போ இல்லாத நாள் அது. தைப்பொங்கலுக்குத் தான் வெடி, மத்தாப்பு, பூந்திரி எல்லாம் இருக்கும். தீபாவளியை பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ எண்டு சொன்னால், புதுச்சட்டை போடுவம், பலகாரம் தின்னுவம், ஆட்டிறைச்சியை மூக்குப் பிடிக்க வெட்டுவம், இவை தான் முதலில் வரும். பிறகு தான் நரகாசுரனின் கதை எல்லாம்.

கொஞ்சம் வளர்ந்து விடலைப் பருவம் வந்தவுடன் நாங்களாகவே தீபாவளி உடுப்பு எடுக்க வேண்டிய பொறுப்பு வந்துவிடும். அப்பா தந்த காசில் உடுப்பு வாங்கவேண்டியது எங்கட பொறுப்பு. அந்த நாளிலை ரவுணுக்குப் போய் ஜீன்ஸ் துணி எடுத்து விட்டு, யார் நல்ல ஸ்ரைலாகத் தைப்பார்கள் எண்டு தேடுவதிலேயே பாதி உயிர் போய் விடும். நியூமார்க்கற் பேவ்மென்றையும் தாண்டிக் கொஞ்சம் சந்துக்குள்ளால் நடந்தால் முஸ்லீம் ரெய்லர்மார் நிறையப் பேர் இருப்பினம். எடுத்த ஜீன்ஸ் துணியில் எங்களுக்குப் பிடித்த விஷயத்தைக் கோடிட்டுக் காட்டினால் போதும் அவை ரோடே போட்டு விடுவினம். ஜீன்ஸ் இன் இரண்டு பொக்கற்றின் பக்கமும் விதவிதமான Pattern இல் சப்பறத்துக்குச் சோடிச்ச மாதிரி நூல் அலங்காரமும் டிசைனும் இருக்கும். காதலன் படத்திலை நீக்ரோ மாதிரி புதுசா நடிக்கவந்த பிரபுதேவா எண்டு ஆரோ கதாநாயகன் போட்ட மாதிரி தொள தொளவெண்டு ஜீன்ஸ் தச்சால் தான் பயோ (bioscience ) படிக்கிற பெட்டையளும், சுண்டுக்குளி வேம்படிப் பெட்டையளும் பார்ப்பினமாம். கட்டுப்பெட்டித் தனமா உடுப்புப் போட்டால் தமிழ்க்கலைவன் பாடசாலையும் ஏறெடுத்துப் பார்க்காது.

வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால "விக்ரம் ரெய்லர்" எண்டு ஒரு ஆள் கடை வச்சிருந்தவர். தொண்ணூறுகளில் அவர் தான் தனிக்காட்டு ராசா. கொஞ்சக் காலம் பின்னால் அந்தக் கடையைக் காணவில்லை.

"எடேய்! இப்பதான்ரா உன்ர ஆள் கோயிலுக்கு வந்து போட்டுப் போகுது" கோயிலுக்கு வரும் போதே ஏஷியா சைக்கிளில் ஊன்றி கொண்டிருக்கும் நண்பன் சொல்லவும், பிள்ளையாரைப் பிறகு பார்க்கலாம் எண்டு மனசு சமாதானப்படுத்த வந்த வழியே திரும்பிச்
சைக்கிள் வலிக்க, சுரிதார் அணிந்து லுமாலாவில் பறந்த கிளியைத் தேடிப் பறக்கும், அதுவரை அவ்ரோ பிளேன் கணக்காய் ஓடிய ஏஷியா அவளின் சைக்கிளை அண்மித்ததும் வேகம் தணிந்து கடைக்கண்ணால் ஏறெடுத்து அந்தப் புதுச்சட்டைக்கே பெருமை சேர்த்த பெருமாட்டியைப் பார்த்து முத்திப் பேறடையும் கணம், லுமாலாச் சைக்கிளே வெக்கத்தில் சிரிக்கும்.

தீவாளி வருஷங்களில் புதைந்த நினைவுகள் கலைய, எல்லாம் தொலைத்து எங்கோ தொலைவில் இருந்து கொண்டு , அந்த நாள் வாழ்வும் வந்திடாதோ என்று உலகப் படத்தில் சின்னப் புள்ளியாய் இருக்கும் இலங்கை போல் நம்பிக்கையின் எச்சம் மட்டும் எஞ்சி நிற்கின்றது.

படங்கள்: 2006 இல் எடுக்கப்பட்டவை
மடத்துவாசல் பிள்ளையாரடியில் 11/8/07 இல் எழுதியதை மீள் இடுகையாகத் தருகிறேன்
Author: தமிழ் மதுரம்
•2:38 AM
இப்ப எல்லோருக்கும் வேம்படிக் குட்டிகள் கண்ணுக்கு முன்னுக்கு வந்து போவீனம் என்று நினைக்கிறேன். எங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பெண்கள் பாடசாலைகளுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த வேம்படி மகளிர் கல்லூரி. எங்கள் பாடசாலையின் சகோதரப் பாடசாலை அல்லது சகோதரிப் பாடசாலையும் இது தான். பதிவின் தலைப்பைப் பார்த்ததும் நான் ஏதோ என் குருவியைப் பற்றிப் புலம்பப் போறேன் என்று நினைத்தால் அது தவறு பாருங்கோ.இந்தப் பதிவு ஈழத்தின் ஒரு சில ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பாடலை உள்ளடக்கிய பதிவு. பாடலைப் பாடியவர் ஏ.ஈ.மனோகரன் என்று நினைக்கிறேன். உறுதியாகக் கூறமுடியவில்லை. இனிப் பாடலுக்குள் செல்வோமா...
குரல்: ‘என்ரை மனுசி சண்டை போட்டால் சாரயம் கேட்குதடா. அந்தச் சாரயம் உள்ள போனால் பைலா கேட்குதடா....


குரல் 02: ஊத்தடா......மச்சான்.. சுதியேத்தினது போதும்டா..டேய்.... பாடடா....தோடா...


பாடல்:
வேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா
தாவடியிலை என் மனசை கொள்ளை அடிச்சவா
சில்லாலை கிழக்காலை தையல் படிச்சவா-ஒரு
சொல்லாலை தெல்லிப்பளை லூசர் அடிச்சவா

‘’ஏ...கந்சாமி கானா... கேளு கரவெட்டி மைனா’
நாவாந்துறை மீனு என்கிட்ட ஆட்டாதே வாலு!
(வேம்படியிலை என் குருவி...)சுன்னாகம் சந்தைக்கு நான் அன்றாடம் போகையிலே
பன்னாகம் பஸ்ஸுக்குள்ளே பார்த்துச் சிரிச்சவளே
வட்டுக்கோட்டை மேஸ்திரியார் கட்டினது கந்தர்மடம்
காங்கேசன் சீமெந்திலை கட்டினேண்ட்டி காதல் மடம்
சுண்டுக்குளி வந்ததுமே நெஞ்சுக்குளி நோவுதடி..
நாவற்குழி அண்டங் காகம் நாவறண்டு பாடுதடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)உண்ணாமல் உறங்காமல் உடுப்பிட்டி பஸ்ஸெடுத்து
அச்சுவேலி, ஆவரங்கால் புத்தூரில் நான் தவிக்க
இணுவில் மாம்பழத்தை, கோண்டாவில் கொய்யாவை
கொக்குவில் அணில் பார்த்துக் கொட்டாவி விட்ட கதை
நல்லூர் கந்தனுக்கு நாநூறு பழத் தேங்காய்
கீரிமலை வேந்தனுக்கு கேணி ஏறித் தீர்த்தம் வைத்தேன்
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)


அரியாலை ஊருக்குள்ளே மரியாதை உள்ளவனை
சரசாலைத் தவறணையில் குடிகாரன் ஆக்கிவிட்டாய்
கொட்டடியில் கோட்டை வைச்ச வெள்ளையனைக் கலைச்சது போல்
நாயன்மார்க்கட்டில் வைச்சு நாயே என்று கலைச்சு விட்டாய்
நவாலிப் புலவனுக்கு மீசாலைத் தாடியடி
கிளாலிக் கடலுக்குள்ளை பலாலி ஆமியடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)
இந்தப் பாடலைக் கேட்பதற்கு உங்களிடம் பிளாஷ் பிளேயர் இருக்க வேண்டும். என்ன பாட்டுக் கேட்க எல்லோரும் றெடியோ????Get this widget | Track details | eSnips Social DNA
Author: தமிழ் மதுரம்
•1:42 AM
இது ஒரு மீள் பதிவு.) ஈழத்து முற்றத்தினூடாக என்னுடைய முதற் பதிவோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய நவீன விஞ்ஞான தொழில் நுட்ப மாறுதல்களினூடு தமிழ் மொழியும் பல் வேறுபட்ட மாறுதல்களைக் கண்டபடி பயணித்துக் கொண்டிருக்கிறது. பல் வேறு பட்ட மொழிக் கலப்புக்களின் பயனாக எம் தமிழ் மொழியும் ஒரு கலவையாக மாறி வருவதும் குறிப்பிடத்தக்கது.நானும் கொஞ்சம் வித்தியாசமாக நினைத்து வழக்கொழிந்து வரும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய பதிவை ஒரு குரல் பதிவாக போடலாம் எனும் முயற்சியில் களமிறங்கியுள்ளேன். என்னுடைய இந்தக் குரற் பதிவு முயற்சிக்குச் சக பதிவர் ஒருவரும் கை கொடுத்துளார்.

என்னோடு இணைந்து இந்தக் குரற் பதிவை உங்களுக்கு வழங்கும் அந்தச் சகோதரி யார் என்று நீங்கள் முடிந்தால் கண்டு பிடியுங்கள்???

எங்களால் முடிந்த வரை இப் பதிவைச் சுவாரஸ்யமாய் வழங்க முயன்றுள்ளோம். இக் குரல் பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றோம்.


எனவே வாசகர்களே…! நண்பர்களே….! நிகழ்ச்சியினைக் கேட்டுப் பாருங்கள்…..! உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்…..!

இன்னும் நிறைய விடயங்களை அலசி ஆராய்ந்திருக்கலாம். நேரம் போதாமை காரணாமாகவும், உங்களைச் சலிப்படையச் செய்யக் கூடாது என்பதற்காகவும் மிகவும் சுருக்கமாக எமது குரல் பதிவைத் தயாரித்துள்ளோம்.

strong>
Get this widget | Track details | eSnips Social DNA
Author: ARV Loshan
•10:37 PM
நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. ஈழத்து முற்றத்தில் இதுவரை 137 பதிவுகள் இடப்பட்டும் என்னால் ஒன்றைக் கூட வழங்கமுடியவில்லை.

இதுகூட ஏற்கெனவே என் தளத்தில் முன்பு பிரசுரிக்கப்பட்ட ஒரு பதிவே..
நண்பர் வந்தியத்தேவனின் அன்பான வற்புறுத்தல்,மிரட்டலான வேண்டுகோளின் காரணமாக ஈழத்து முற்றத்தில் மீள் பதிக்கிறேன்.

(எனது பதிவுத்தளத்தை விடவும் தொடர் மின்னஞ்சல்களாகவும் யாரோ எழுதியது என்றும் உங்களில் பலபேரை இது வந்து சேர்ந்திருக்கும் என்றும் நினைக்கிறேன்.. பல தடவை "வாசித்துப் பாருங்கள்.. நல்லா இருக்கு" என்றெல்லாம் எனக்கே வருவது வேடிக்கை..)

இதோ நான் வசிக்கும் கொழும்பில் தமிழர் தலைநகரான வெள்ளவத்தையின் தல புராணம்..


வெள்ளவத்தை
கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் -
அதிகமாகத் தமிழ் பேசுவோரே
வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06)
பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம்.
வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது!
கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு!

நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால்
ஏனைய வெள்ளவத்தைவாசிகளும்
கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து!


எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்

பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம்
எனினும்
பெருமளவு வெளிநாட்டுப் பணமும்
உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம்
பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால்
இது ஒரு குட்டி லண்டன் அல்லது
டொரன்டோ(வேறேதாவது வெளிநாட்டு நகரங்களாயிருந்தாலும் போட்டுக்கலாம்)

அடுக்குமாடிகளின் (அபார்ட்மென்ட்) அணிவகுப்புகள்
ஒவ்வொரு வீதியிலும் இரண்டு மூன்று அடுக்குமாடிகள்
கிடைக்கும் சிறுதுண்டு நிலத்திலும்
ஒடுக்கி முடுக்கி ஒரு அபார்ட்மெண்ட் முளைவிடவைக்கும்
மூளை படைத்தோர் எங்கள் பொறியிலாளர்!

வீட்டிற்குள்ளே பைப்பில் நீர் வரத்து குறைவெனிலும்
மழை பெய்யும் காலத்தில் வீதியில் குளமே
கட்டிப் பாசனம் செய்யலாம்!

எங்கள் வெள்ளவத்தை வீதிகளில்
விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒடும்!
பென்ஸ்,பீ எம் டபிள்யூ,பஜிரோ,லாண்ட்ரோவர்,பெராரி
இன்னும் ரோல்ஸ் ரோய்ஸ் கூடக் காணலாம்.
குண்டு குழி வீதிகளில் குலுங்காமல் இவை
பயணிக்க புதியதாய்
நுட்பங்கள் யாராவது உருவாக்க வேண்டும் இனி!

பேரம் பேசாமல் கேட்பதை சந்தையில்
அள்ளிக் கொடுத்து
சாதாரண மரக்கறி விலைகளையும்
சர்வதேச சந்தை விலையாக உயர்த்தியவர்களும்
எங்கள் வெள்ளவத்தைத் தமிழரே!

எனினும்
தமிழ் மொழியாக்கத்தில் தீவிரமானவர்கள் நாம்!
காய்கறிக் கடைக்காரர் முதல்
காக்கிச் சட்டைக்காரர் வரை அனைவருமே
தமிழறிவர் வெள்ளவத்தையில்!

பஸ் கண்டக்டர் கூட
வெள்ளவத்தை வந்தால்
தமிழிலே பேசித்தான்
டிக்கெட் கொடுப்பார்!

பேச்சு வெற்றியளிக்கும் என்பது இங்கே மட்டும்
பெருமளவில் உண்மை!
பேசிப் பேசியே (தமிழன்) தமிழ் தெரியாதவரும்
தமிழிலேயே பேசுவர்!

எட்டுத்திசையும் அச்சமின்றித் தமிழ் முழங்கும்
தலைநகரின் தமிழ்த் தலைநகரம்
தடுக்கி விழுந்தால் ஆலயம்
தடுமாறி விழுந்தால் சைவக்கடை
ஊர் முழுவதும் நகைக்கடையும் புடவைக்கடையும்
நிரம்பி வழியும் எம்மவரின
வெளிநாட்டுப் பணத்தினால்!


பொலீஸ் பதிவுகளும் இங்குதான் அதிகம்
பொலீஸ் கைதுகளும் இங்கு தான் அதிகம்
வெள்ளை வான்களும் அதிகளவில் அலையும்
வீதிக்கு வீதி லொட்ஜ்களில் ரெய்டுண்டு
எனினும்
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி
விடுப்புகள் பேசியும்
வீராப்பாய் விண்வீரம் பேசியும்
நிற்கும் எம் இளைஞர் கண்டால்
வாழ்வது நாம் வடக்கிலா கிழக்கிலா என்ற
எண்ணம் எட்டிப் பார்க்கும்!

அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர் மாற்றம்
ஆன்டிமார் என்ன ஆச்சிமார் கூட
நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை!
முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய்
முகம் தவிர வெறெதையும் மூடாத
புதிய மகளீர்
கண்களுக்கு விருந்தளிக்கும்
கவர்ச்சி catwalk இப்போது
எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்!

வெறெங்கு எந்த மொழியில் விளம்பரம் செய்தாலும்
வெள்ளவத்தையில் மட்டும்
தமிழ் இல்லையெனில்
வியாபாரம் படுத்துவிடும்!
வங்கி வட்டிக்கடை முதல் வாடகைக் கார் வரை!
(அதில் பாதித் தமிழ் தமிழாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை)

காலை வேளைகளில் கடற்கரையோரம் இன்னுமொரு வேடிக்கை..
நாள் முழுதும் சாப்பிட்டு சேர்த்ததெல்லாம் குறைக்க
காலில் சப்பாத்து அணிந்து அங்கிள்மாரும்,ஆன்டிமாரும்
அணிவகுத்து நடை பழகுவார்கள்..
உடல் மெலிவோ,கொழுப்போ
காலையில் பீச் வோக்கிங் போகாவிட்டால் பாஷன் இல்லைப் பாருங்கோ..

நம்ம வெள்ளவத்தைப் பெண்களின் தமிழே தனியான தமிழ் தான்..
ஆங்கிலேய அழகிகளும் தோற்றுப் போவர்
அவர்கள் ஆங்கில உச்சரிப்பில் ..
ஆனாலும் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று மிக்ஸ் பண்ணி மிதப்புக் காட்டுவதில்
எங்கள் வெள்ளவத்தை பெண்மணிகளை யாருமே வெல்ல முடியாது
(நாங்களும் தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம்..
ம்கூம் முடியவே இல்லை.. அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது)

குண்டுகள் எங்கு வெடித்தாலும்
குண்டுகளை எங்கே போட்டாலும்
கோவில்கள் எங்கள் பெண்களால் நிறையும்
அவருடல்களில் தங்கங்கள் விளையும்
உடல் தழுவிப் பட்டாடைகள் நெளியும்!
கல்யாணங்களோ காசால் களைகட்டும்
தமிழ்நாடும் தோற்றுப் போகும் தடல்புடலில்.

கிடைக்கும் நிலமெல்லாம்
கோடி கொடுத்து வாங்கவும்
நம்மவர் தயாரென்பதால்
இலங்கையின் வேறு பல கோடிகளுக்கு
ஓடிவிட்டார்கள் சிங்களவர்
வெகுவிரைவில் வெள்ளவத்தை முழுவதும்
தமிழொலிக்கம் (தமிழ் மட்டுமே)

கரையோரக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றம் என்று
நாம் பொங்கியெழுந்த காலம் போய்த்
தலைநகருக்குள்ளேயே
தட்டுத் தடங்கலின்றித் தமிழரின்
தொடரான குடியேற்றம் என்று
கொதித்தெழக் கூடும்
(கொட்டாஞ்சேனை மட்டக்குளி போன்றவையும்
இதற்கு பொருத்தமே)