Author: கானா பிரபா
•3:01 AM

ஒருவர் குறித்த காரியத்துக்காக வெளியே செல்லும் போது அவரிடம் போய் "எங்கே போகிறாய்" என்று கேட்டால் குறித்த காரியம் தடைப்படும் என்ற நம்பிக்கை எங்களூர் வாழ்வியல் வழக்கில் இருக்கின்றது.

"எங்கை போறாய்" என்று ஒருவரிடம் கேட்டால் அவருக்குக் கெட்ட கோபம் வரும்.
"ஏனப்பா பிறத்தாலை கூப்பிடுறாய்" என்று அவர் சினந்து கொள்வார். இங்கே பிறத்தாலை என்று சொல்வது ஒருவருக்குப் பின்னால் போய்க் கூப்பிடுவது என்று அர்த்தம் கொள்ளும் வகையில் இருக்கும். அதாவது பிறத்தாலை = பின்னால் என்றவாறு அமைந்திருக்கும்.
ஏடாகூடமாக இப்படி யாரையாவது கேட்டால் போதும், அவர் ஒரு சில நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று தாமதித்தே குறித்த காரியத்துக்காகச் சொல்வார்.

இப்படியான சந்தர்ப்பங்களில் அதை இன்னொரு விதமாகக் கேட்கும் மரபு இருக்கின்றது. அதுதான் "துலைக்கே போறாய்". இங்கே துலை என்பது தொலைவு, தூரம் என்று அர்த்தப்படும். அதாவது "எங்கே தொலைதூரமா செல்கின்றாய்" என்று கேட்பது போல அமைந்திருக்கும். துலைக்கிடுதல் என்பது தூரப்படுதல் என்று அகராதியில் வழங்கும். எனவே தான் எங்களூர் வழக்கில் "துலைக்கே போறாய்" என்பது சரளமாகப் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்காக அமைந்திருக்கின்றது.
அது ஏனோ தெரியவில்லை "துலைக்கே போறாய்" என்று கேட்டால் மட்டும் குறித்த காரியம் தடங்கலின்றி நடக்குமா என்ன, இதெல்லாம் மரபுவழியாக வந்ததால் இதுகுறித்த ஆராய்ச்சியில் யாருமே இறங்காமல் இருக்கின்றார்கள்.

அப்ப நான் வரட்டே...
Author: Unknown
•9:43 AM
'சினேகிதி' போட்ட 'வெள்ளி பார்ப்பம் வாங்கோ' பதிவுதான் இந்தப் பதிவுக்குத் தூண்டி. அதனால சினேகிதிக்கு முதற்கண் நன்றி. இந்த வெள்ளி பார்த்தல் என்கிற சொல்லாடல் இன்னும் ஒரு கோணத்திலும் பயன்படுவதுண்டு அல்லவா? அது பற்றின பதிவுதான் இது.

இந்த ‘வெள்ளி பார்த்தல்' என்ற சொல்லை அடிக்கடி ஆசிரியர்களிடம்தான் நான் கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தில் மனம் லயிக்காமல் வேறெங்காவது மனம் ஓடிவிடும். எப்படித்தான் கண்டுபிடிப்பார்களோ தெரியாது, சரியாகக் கண்டுபிடிப்பார்கள் ஆசிரியர்கள். ஏதாவது கேள்வியைக் கேட்க, நாங்கள் முழிக்க, ‘வகுப்பில பாடத்தைக் கவனிக்காமல் என்ன வெள்ளி பாத்தனியே' என்பது பல ஆசிரியர்கள் சர்வசாதாரணமாகப் பயன்டுத்தும் ஒரு திட்டு வசனம். அதிலும் எங்களுக்கு கணிதம் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் ‘எத்தினை வெள்ளியெண்டு எண்ணியாச்சே' என்று கேட்டு நக்கல் செய்வார்.

அதாவது இந்த சந்தர்ப்பங்களில் 'வெள்ளி பார்த்தல்' என்பது நிகழ்காலத்தில் நடப்பதை விடுத்து வேறேதாவதைப் பார்ப்பது என்கிற பொருளில் பயன்படுகிறது. கிட்டத்தட்ட இதே பொருளில் ஏமிலாந்துதல், வாய் பார்த்தல், பிராக்குப் பார்த்தல் (பராக்குப் பார்த்தல்) போன்ற சில சொற்களையும் பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு ஏதாவது ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளை வீட்டில் அப்பா அல்லது அம்மாவிடம் ‘அது எங்களுக்கு படிப்பிக்கேல்லை' என்று காரணம் சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அடிக்கடி நான் சொன்ன காரணங்களில் இது ஒன்று). அப்பா அல்லது அம்மாவிடமிருந்து இப்படியான பதில்களை எதிர்பார்க்கலாம்:

'உன்னை நம்பேலாது... நீ பாடம் படிப்பிக்கேக்கை எங்கையாவது வெள்ளி பாத்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
‘நீ எங்கையாலும் ஏமிலாந்திக்கொண்டு இருந்திட்டு ஏன் படிப்பிக்கேல்லை எண்டு பொய் சொல்லுறாய்'
அல்லது
‘அவயள் படிப்பிச்சிருப்பினம். நீ வகுப்பில எங்கயாலும் வாய் பார்த்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
'பாடம் நடக்கேக்கை எங்கையாலும் பராக்குப் பாத்துக்கொண்டு இருந்திட்டு, பொய்ச்சாட்டு சொல்லிறியோடா?'

மேற்படி சொற்களை வேறு வேறு சந்தர்ப்பங்களில் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான அர்த்தங்களில் பயன்படுத்துவார்கள். பகல் கனவு காணுதல் என்பது கூட ‘வெள்ளி பார்த்தல்' என்பதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான ஒரு சொல்லாடல்தான். சினேகிதி சொன்னது போல வெள்ளி (நடசத்திரம்) பார்த்தல் என்பது அழகான பல நினைவுகளை மீட்டித்தரும் ஒரு அனுபவம். அதுவும் விஞ்ஞான பாடத்தில் இந்த நட்சத்திரக் கூட்டங்கள் பற்றிப் படித்த உடனே அந்த வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு இரவுப் பொழுதுபோக்காகிவிடும். அப்படி இரவில் பார்க்கவேண்டிய வெள்ளியை, பகலில் பார்க்கும், இல்லாத ஒன்றில் கவனத்தைச் சிதறவிடும் செய்கையைத்தான் வெள்ளி பார்த்தல் என்று சொல்லுவார்கள்.

வெள்ளி பார்த்தல் பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்கள்
ஒரு முறை எங்களின் விஞ்ஞான ஆசிரியர் திரவியநாதன் ஏனோ திடீரென்று மகாபரதத்தில் இருந்து ஏகலைவன் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஏற்கனவே பலமுறை கேட்ட, வாசித்த கதை என்பதால் நான் வெள்ளி பார்க்க ஆரம்பித்து விட்டேன். அந்தக் கதையில் ஏகலைவன் ஒரு நாயின் வாயை அம்பு எய்து கட்டிப் போடுவது பற்றி அவர் சொல்வது காதில் விழுந்துகொண்டிருந்தது. நான் வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருக்க, அதைக் கண்டுபிடித்துவிட்டார். பெயர் சொல்லி அழைத்து ‘நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தனான்' என்று (நல்ல விதமாகத்தான்) கேட்டார். நானும் ‘வெள்ளி பார்த்தல்' குழப்பப்பட்டதால் குழம்பிப் போய் ‘ஆரோ ஒருத்தன் நாய்க்கு (__________)' என்று கொஞ்சம் இரட்டை அர்த்தமாகச் சொல்ல அதற்கு வகுப்பு என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பும், வெள்ளி பார்த்தலை வைத்து திரவியநாதன் அறுத்த அறுவையும் மறக்காது.

இன்னொரு சம்பவம் கனடாவில் நடந்தது. இங்கே சனிக்கிழமைகளில் கிரிக்கெட் விளையாடுவதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்த போது நான் ஒரு சுலபமான பிடியை ‘வெள்ளி பார்த்த' காரணத்தால் விட்டுவிட்டேன். எங்களின் களத்தடுப்பு முடிந்த பின், 'அடுத்த கிழமை விளையாட வருவாய்தானே' என்று எங்கள் அணியில் கூட விளையாடும் மெல்வின் என்னைக் கேட்டான். அப்போது நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் சனிக்கிழமை மேலதிக வேலைநேரம் கிடைக்குமா என்று வெள்ளிக் கிழமைதான் சொல்லுவார்கள். அதனால நான் ‘வெள்ளிதான் தெரியும்' என்றேன். ‘இப்பமட்டும் என்ன தெரியுது' என்றான் மெல்வின். சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டோம். அதாவது சனிக்கிழமை வேலை இருக்கிறதா இல்லையா என்பது வெள்ளிக் கிழமைதான் தெரியும் என்ற அர்த்தத்தில் நான் சொல்ல, நான் ‘வெள்ளி பார்த்து' விட்ட பிடியை நினைவூட்டி இப்ப மட்டும் என்ன தெரியுது என்று சாதாரண உரையாடலிலேயே சிலேடையில் விளையாடினான் மெல்வின்.

Author: யசோதா.பத்மநாதன்
•10:06 PM


ஒரு நாள் குருவானவரிடம் ஒருவர் வந்தார்.சுவாமி! இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று வினவினார்.அதற்குக் குரு உணவுண்டேன்; பின்பு நன்றாகத் தூங்கினேன் என்றார்.இதில் என்ன பெரிய விடயம் இருக்கிறது என்று வந்தவர் நினைத்தார்.அதனக் கேட்டும் விட்டார். அதற்கு சுவாமி சொன்னார்; நான் உணவுண்ணும் போது உணவுண்ணும் தொழிலை மட்டுமே செய்தேன்.வேறெதனையும் எண்ணவில்லை. உறங்கும் போது உறங்குதலாகிய செயலில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றார்.

இதனை வாசித்தபோது ஒரு நேரத்தில் நாம் எத்தனை விடயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்றும்;அதனால் ஒன்றையும் முழுமையாக உள்வாங்கவோ அனுபவிக்கவோ முடியாது போய்விடுகிறது என்றும் தோன்றியது.அது போலவே சொற்களை நாம் பாவிக்கின்ற போதும் அதன் அர்த்தங்களையும் முழுமையாக உணர்ந்து வெளிப்படுத்துகிறோமா என்பது பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டியதாயிருந்தது.அதனால் எப்போதோ அறிந்து வைத்திருந்த இரண்டு சொற்களுக்கான விளக்கப் பதிவாக இப்பதிவு அமைந்திருக்கிறது.


வாஞ்சை:-

பாசத்தில் தோய்ந்த சொல் இது.

பொதுவாக வாஞ்சை என்ற சொல் அன்பினைக் குறிக்கும்.இச் சொல் குறிக்கும் அன்பு என்பது அன்பின் வகைகளில் சற்று விசேடமானது.பிள்ளை தந்தை/தாய் மீது கொள்ளும் அன்பினை வாத்சல்யம் என்று சொல்வதைப் போல; காதலர் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் அன்பைக் காதல் என்று சொல்வதைப் போல; நண்பர்கள் தமக்கிடையே உள்ள அன்பை நட்பு என்று சொல்லிக் கொள்வதைப் போல; வாஞ்சை என்ற சொல்லும் ஒரு விசேட அன்பைக் குறித்து நிற்கிறது.

ஒரு தாய்ப்பசு கன்று ஈனும்போதும்; பின்னர் தன் பிள்ளைக்குப் பாலூட்டும் போதும்; அதன் அழுக்குகளையும் சிறுநீரையும் நாவினால் நக்கிச் சுத்தப் படுத்தும்.அதனையிட்டு அது ஒரு போதும் அசூசை கொள்வதில்லை.மேலும் அது பாலூட்டும் போது கன்றின் உடல் பாகங்களையும் நாவினால் சீர்படுத்தும்.அன்பின் நிமித்தம் பால் பெருக்கெடுத்து ஓடும்.அதனுடய அன்பின் முன்னால் கன்றினுடய குறைகளோ அழுக்குகளோ அதன் கண்களுக்குத் தெரிவதில்லை.மேலும் அதனுடய செயற்பாட்டின் மூலம் கன்றின் மீதான அதன் அன்பு பெருக்கெடுத்து ஓடுவதையே நாம் காண்கிறோம்.அத்தகைய அன்பினையே வாஞ்சை என்ற சொல் குறிக்கிறது.

அதாவது,எந்த ஒரு அன்பு குறைகளையும் நிறைகளாகக் காண்கிறதோ அல்லது எங்கு குறைகள் எதுவும் குறைகளாகக் கண்ணுக்குத் தெரியாமல் அன்பு ஒன்றே விகாசித்து பொலிந்திருக்கிறதோ அங்கு வாஞ்சை நிறைந்த அன்பு நிலவுகிறது என்று அர்த்தமாகும்.(எப்போதோ யுகமாயினியில்(?) வாசித்தது)



ஊழியம்:-

வலி சுமந்த சொல் இது.

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மெல்பேர்னில் நடந்த எழுத்தாளர் விழாவுக்கு இலங்கையில் இருந்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் இந்தச் சொல்லுக்குச் சிறப்பான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்கள். அதனை இங்கு தருகிறேன்.

ஊழியம் என்பதற்கான ஆங்கில மொழியாக்கம் labour என்பதாகும்.தாய்மைப் பேறடைந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் செல்லும் அறையை labour room என்கிறோம்.ஏனெனில் வலியோடு கூடிய குழந்தை பெறுதலாகிய வேலையை அவள் அங்கு செய்கிறாள்.அதனால் ஊழியம் என்பது உடலை வருத்தி வலியினை உணர்ந்து பெறப்படும் பயன்பாடு ஆகும்.அதனால் labourer என்பது ஊழியர் அதாவது உடலினை வருத்தி வேலை செய்து பயனைப் பெறுபவர்களைக் குறிக்கிறது.

அதாவது உடல் உழைப்பினால் வருந்தி (கஸ்ரப்பட்டு)செய்யப் படுவது ஊழியம். அதனால்,உடலினை வருத்தி வேலைசெய்து வருமானம் பெறுபவர்கள் ஊழியர் என்ற சொல்லால் அழைக்கப் படுகிறார்கள்.

அதனால் இலிகிதர் போன்ற தொழிலில் உள்ளவர்களை அரச ஊழியர் என்று சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை.

மொழி விற்பன்னர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.



பட உதவி; நன்றி ,இணையம்.
Author: மொழிவளன்
•10:06 PM
இது ஒரு வட்டார வழக்குச் சொல் என்று கூறமுடியாது. ஆனால் கிட்டத்தட்ட வட்டார வழக்குச் சொல் போலவே பயன்பட்டது.

மண்டையில போடுதல், மண்டைக்கப் போடுவன், மண்டைக்கப் போட்டிருக்கினம் போன்ற சொற்கள்.

இச்சொற்கள் ஒருக்காலக் கட்டத்தில் சிறுக்குழந்தைகளின் விளையாட்டுச் சொல்லாகவும் அதிகம் பயன்பட்ட ஒரு சொல் என்றும் கூறலாம். சிறு சண்டைகளுக்கும் “டேய், அடி வேண்டுவாய்” எனும் சொற்களுக்கு பதில் இந்த “டேய், உண்ட மண்டைக்கப் போடுவன்” என்ற சொல் அடிக்கடி பயன்படும் சொல்லாகியிருந்தது.

இச்சொல்லில் எனக்கு ஒரு சுவையான அனுபவம் உண்டு. நாங்கள் கொழும்பு வந்து வாடகை வீட்டில் தங்கியிருந்தக் காலங்கள். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறன். தேர்தல் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. தொலைக்காட்சியில் தேர்தல் விளம்பரங்கள் அதிகம் இடம்பெற்றிருந்தக் காலக்கட்டம். அறிமுகமே இல்லாத சில சுயேட்சை வேட்பாளர்களும் தொலைக்காட்சியில் தமது முகத்தைக் காட்டி சென்றனர்.

அப்போது எனது சகோதரி தனது குழந்தையுடன் எங்கட வீட்ட வந்திருந்தவா. சகோதரியின் மகனுக்கு இரண்டு அல்லது அதற்கு குறைவான வயது தான் இருக்கும். சரியானக் குளப்படிக்காரன். இவன்ர குளப்படிகளைத் தடுக்கும் பொருட்டு கையில் ஏதாவது கடிக்கக் கொடுத்துவிட்டு, தொலைக்காட்சி முன் கதிரையில் இருத்திவிடுவம். இவனுக்கு இன்னமும் சரியாகப் பேசவும் வராது.

அப்பொழுது தொலைக்காட்சியில் ஒரு சுயேட்சை வேட்பாளர் முன் தோன்றி இப்படிக் கூறினார். “எனது சின்னம் மயில் சின்னம், உங்கள் ஓட்டுக்களை மயிலுக்குப் போடுங்கள்.”
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரியின் மகன் இவ்வாறு கூறினான். “மண்டையில் போடுங்கள்.”

அதன் பிறகு அந்த சுயேட்சை வேட்பாளர் தொலைக்காட்சியில் தோன்றும் போதெல்லாம், இவனும் “மண்டையில் போடுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருப்பான்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமாக போட்டுது. இவன் எப்படி உப்புடிச்சொல்லுறான். இவனிடம் யாரும் இப்படியான சொற்களைப் பேசவும் இல்லை, கதைக்கவும் இல்லை. இன்னும் சரியாக கதைக்கவும் வராது. பிறந்து சில மாதங்களிலேயே கொழும்புக்கு கொண்டு வந்திட்டம். இப்படி ஆச்சரியங்கள் பல.

ஒரு வேலை எல்லாம் மண்வாசனையாக இருக்கும் எண்டு நினைக்கிறன்.