Author: சினேகிதி
•3:11 AM




நகைச்சுவைக்கதம்பத்தில் "தேவதையைக் கண்டேன்" படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.

"என்ன பாபு சைக்கிளுக்கெல்லாம் போர்வை போர்த்து விடுறாய்...ஆ கொசுவர்த்தி வேறயா..முத்தமா...வயித்தெரிச்சலைக் கிளப்பிறாங்களே.."

"பின்ன அது உமா வாங்கிக் கொடுத்த சைக்கிள்."

அடுத்த காட்சியில் தனுஸ்... நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஏனென்று கேட்டால், அந்தப் பாட்டில்தானே தேவயானியும் சரத்குமாரும் ஓகோ என்று பெரியாட்களானாவையாம்.

நேற்றைய நாள் எனக்கு அந்த நகைச்சுவைக்காட்சில தான் தொடங்கினது.விருந்தினர்கள் என்னறையில தங்கியிருந்ததால் நான் நேற்று தங்கச்சியின்ர அறையிலதான் தூங்க வேண்டியிருந்தது. கன காலத்துக்குப்பிறகு யன்னலோரமாய் நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் தூங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறன். பக்கத்தில அம்மாவேன்ரே அறையில இருந்து நட்சத்திர இரவு வானொலி நிகழ்ச்சி காற்றோடு கலந்து வந்தது.

இப்படி நேற்றைய பொழுதில் நட்சத்திரங்கள் பலமுறை வந்து போனதால் இரவுப்பொழுதிலும் நட்சத்திரங்களுடன் எனக்குண்டான உறவு பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உலா வரத் தொடங்கின.

நானே ஆச்சரியப்படும்படி மூன்று நான்கு வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடந்த மாதிரி கண்ணெதிரே வந்து போயின.

அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். பாலா அங்கிள் பரா அன்ரி சுந்தி மாமா சாந்தன் மாமா இன்னும் சிலர் இரவு கூடியிருந்து எனக்கு அப்ப விளங்காத பெரிய பெரிய கதையெல்லாம் கதைப்பினம். அம்மா பழங்களரிந்து தருவா. கொண்டே குடுத்திட்டு பரா அன்ரின்ர மடியில இருந்து, “அப்பிடியென்டாலென்ன.. ஏன் அப்பிடிச் சொன்னவை?” இப்பிடி வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருப்பன். என்ர வாயை மூட அவாவும் ஏதாவது சொல்லிச் சமாளிப்பா.

பரா அன்ரிதான் எனக்கு முதல் முதலாக நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தவா. “அங்க பாரு, அதில நல்ல வெளிச்சமா தெரியுது அதான் சுக்ரன்.. விடிஞ்சாப் பிறகும் அந்த நட்சத்திரம் இருக்கும்... அங்க பார் அதில ஒரு வேட்டைக்காரன் அம்பு விடுற மாதிரி இருக்கு. இங்க பார், விருச்சிகம்..” இப்பிடியெல்லாம் சொல்லுவா.

சின்னப்பிள்ளையளிட்ட ஒரு பிடிவாதக்குணம் இருக்கும். தாங்கள் நினச்சதைதான் செய்வினம்... சொல்லுவினம். ஒரு இரண்டு வயசுப் பிள்ளைக்கு ஒன்று இரண்டு சொல்லிக் கொடுத்திட்டு, அடுத்த நாள் “அச்சாக்குட்டியெல்லே... ஒன்று இரண்டு சொல்லிக் காட்டுங்கோ” என்று கேட்டுப்பாருங்கோ. “ஆ ஆ ஆ” என்று காது கேக்காத மாதிரி இருப்பினம்... வாற விசரில நீங்கள் திரும்ப ஒன்று இரண்டு சொல்லச் சொல்லிக் கேக்கமாட்டிங்கள்.. ஆனா தங்களுக்கு விருப்பமான நேரம் தங்கடபாட்டில சொல்லுப்படும்.. “ஒன்ரு ரன்று மூன்ரு..”

அதைப்போல நான் பரா அன்ரிக்கு மட்டும்தான் குட்நைற் சொல்லுவனாம். பரா அன்ரி கொஞ்ச வருசத்தில யாரோ சுட்டுச் செத்திட்டா. நான் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவான்ர ஞாபகம்தான் வரும்.

எல்லாற்ற ஊரிலயும் ஒரு கோயில்... கோயிலுக்கு முன்னால ஏதோ ஒரு மரம் இருக்கும். அப்பிடித்தான் எங்கட ஊரிலயும் ஒரு பிள்ளையார் கோயில். முன்னால ஒரு பலாமரம். அங்கதான் ஊராக்கள் இரவு இருந்து விடுப்புக் கதைப்பினம். நான் அக்கா, சுபாசினி, சுஜி, சிந்து, கவி, யனா, நிமல், டொம்மா... இப்பிடி நிறையப் பேர்.

எங்கள எல்லாம் விளையாட விட்டுப்போட்டு அங்கால அம்மாக்களின்ர மகாநாடு நடக்கும். அப்ப பரா அன்ரி எனக்குக் காட்டின நட்சத்திர உருவங்கள் பற்றியெல்லாம் நான் என்ர குறூப்புக்கு சொல்லிக்கொண்டிருப்பன். பிறகு அக்கான்ர குறூப் ஒருபக்கம், சின்ன குறூப் ஒருபக்கம் பிரிஞ்சு விளையாடுவம். இதையெல்லாம் நினைச்சா அது ஒரு அழகிய நிலாக்காலம்தான்.

சண்டை நடக்கும்போதும் நாங்கள் ஒரு அஞ்சு குடும்பம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பங்கர் கிண்டினாங்கள். சண்டை நேரத்தில அந்த பங்கர்தான் எங்களுக்குப் பள்ளிக்கூடம். விளையாட்டுத்திடல் எல்லாம். திருவலகை, திரிபோசா மா, சீனி.. ஹி ஹி... அதான் சாப்பாடு. அங்க யாரும் செல் விழுந்து சாகேல... தப்பித் தவறி விழுந்திருந்தா எல்லாரும் சேர்ந்து செத்திருப்பம்.

வேப்ப மரத்துக்குக் கீழதான் பங்கர். பங்கருக்குப்போற வழி வீட்டில இருந்துதான் துவங்கும். வெளீல நிண்டு பார்த்தா பங்கர் இருக்கெண்டே தெரியாது. அப்பிடித்தான் ஒருநாள் பயங்கரச்சண்டை. புக்காரா சகடை எல்லாம் இரைஞ்சுகொண்டு போனது. செல் கூவிக்கொண்டு போனது.
அடுத்த நாள் ஒரே அமைதி. பார்த்தா நோட்டீஸ் விட்டிருக்கு. வடமராட்சி சனம் எல்லாம் தென்மராட்சிக்குப் போகவேணுமாம். ஊராக்களுக்குப் போற எண்ணமே கிடையாது. நாங்கள் ஒரு காலமும் வெளிக்கிட்டதில்லை.. இந்தியன் ஆமி வந்தநேரம்கூட நாங்கள் இங்கதானே இருந்தனாங்கள் என்று எல்லாரும் கதை. நாங்கள் எங்கட பாடு.

எங்களுக்கெல்லாம் அப்ப அது ஒரு பம்பல் மாதிரி. ஆக்கள் கூடியிருக்கிறதே ஒரு விளையாட்டு மாதிரி. ‘போறேல்ல’ என்று முடிவெடுத்த உடனே அம்மாக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டுது.

இந்தியன் ஆமி வந்தநேரம் அக்காக்கு கால்ல செல் பட்டதால அம்மாக்கு பயம். சரியெண்டு எல்லாரும் சாவகச்சேரிக்குப் போறதெண்டு முடிவாச்சு. இரவு ஒன்றரைக்கு மாமாவோட நானும் அக்காவும் அம்மாவும் அன்ரியும் ஒரு சைக்கிள்ல. இப்பிடி எல்லாரும் சேர்ந்து சைக்கிள்ல வெளிக்கிட்டம். எங்கயோ ஒரு இடத்தில கொஞ்ச நேரம் நின்றிட்டு திரும்பக் கொஞ்ச நேரம் சைக்கிள உருட்டிக்கொண்டு போனம். ஆமிக்காரன்ர பரா லைற் வெளிச்சம் மாறி மாறி வந்துகொண்டு இருந்திச்சு.

சில பேர் கதைச்சுக்கொண்டு வந்தினம். சில பேர் வீட்டில இருக்கிற ஆட்டுக்குட்டி கோழிக்குஞ்சையெல்லாம் நினைச்சுக்கொண்டாக்கும் மௌனமா நடந்தினம். நான் சைக்கிள்ல சொகுசா இருந்துகொண்டு நட்சத்திரங்களோட கதை.

“அம்மா, பரா அன்ரி சொன்ன அந்த வேட்டைக்காரனைக் காணேல்ல.”

“வாய மூடிக்கொண்டு வாடி.. சும்மா நொய் நொய் எண்டு கொண்டு.. நாளைக்கு உயிரோட இருப்பமோ தெரியேல்ல, இப்பத்தான் வேட்டைக்காரனைத் தேடுறா.”

நாங்கள் சாவகச்சேரிக்குப் போய் மாமாவீட்டதான் இருந்தனாங்கள். பக்கத்து வீட்டில தயா என்றொரு பெடியன். மனவளர்ச்சி குன்றியதால அவன் செய்யிற வேலையெல்லாம் சிரிப்பா இருக்கும். சாத்திரம் சொல்லுறன் என்று போட்டு திருநீறு எடுத்துகொண்டுவந்து எதிர்பார்க்காத நேரம் தலையில கொட்டிப்போடுவான். சில நேரம் வீட்ட நின்றிட்டு சொல்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு ஓடிடுவான். அங்க இருந்த ஒரு மாதமும் தயாதான் கூட்டு. நாங்கள் திரும்ப ஊhருக்கு வர தயாவையும் வேற எங்கேயோ போட்டினம்.
அங்க இருந்த நேரம் பலா மரத்தில ஏறி பலாப்பழம் புடுங்கியிருக்கிறன்" :-) எங்கட ஊரில எல்லாம் பலா மரம் இல்லை.

ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ விஞ்ஞானப் புத்தகத்தில நட்சத்திரக்கூட்டங்கள் உருவங்கள் பற்றி ஒரு பாடம் இருக்கு. அப்ப புத்தகத்தில போட்டிருப்பினம், ஆசிரியர் மாணவர்கள் இரவுவேளையில் ஒன்று கூடி நட்சத்திரங்களைப் பற்றிப் படிக்கிறதென்டு... அக்கா வேற அப்பிடி ஒருநாள் இரவு போனவா. அதால நான் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனான். என்ர வயசு பிள்ளைகள் குடுத்து வைக்கேல்ல போல. ஊரில சண்டையும் ஊரடங்குச்சட்டமும் மாறி மாறி வாறதால இரவு போயிருந்து வான் வெளியில நட்சத்திரங்களையும் வால் நட்சத்திரத்தையும் பார்க்கிற நாள் எங்களுக்கு வரவே இல்லை.

இப்பிடி நட்சத்திரங்களுடனான என் உறவு வெளிநாடு என்று வெளிக்கிட்ட பிறகு நிலவறை வாழ்க்கையில் துண்டிக்கப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு தூங்கச்சென்றதால், நான் மேல சொன்ன ஞாபகங்கள் எல்லாம் வந்து போயின... அந்தக் கொஞ்சநேர சந்தோசம்கூடப் பொறுக்காமல் பனி கொஞ்சம் கொட்டத்தொடங்க நட்சத்திரங்கள் என்னோடு விடைபெறாமலே போய்விட்டன.

ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்.
ம்... கனக்கக் கதைக்க வேணும். அந்த நாள் எப்ப வருமோ? :)


பின்குறிப்பு : இதுவும் மீள்பதிவு தான் :(
This entry was posted on 3:11 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On August 16, 2009 at 3:11 AM , யசோதா.பத்மநாதன் said...

நல்ல வடிவா எழுதியிருக்கிறாய் பிள்ள.

வழக்கம் போல இங்க வாறதில ஒரு சந்தோசம்.

சுகமா இருக்கிறியே மோன? கன நாளா வர முடியேல்ல.

 
On August 16, 2009 at 3:48 AM , வலசு - வேலணை said...

நட்சத்திரங்களைப் பார்த்து பொழுதைப் போக்குவது சிறுவயதில் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

http://chummaah.blogspot.com/2009/08/4.html
இதுவும் வெள்ளி பார்க்கும் நினைவுகளை மீட்டும்

 
On August 16, 2009 at 4:46 AM , Unknown said...

உங்கட பதிவ வச்சுத்தான் நான் பதிவு போட ஐடியா கிடச்சது... அதுசரி உதென்ன உவ மணிமேகலா மோன, பிள்ளா அப்பிடி இப்பிடி கதைக்கிறா.. அப்ப எங்கட சொந்தக்காறர் சொல்லிற மணியாச்சி இவவே

 
On August 16, 2009 at 6:50 AM , சினேகிதி said...

\\நல்ல வடிவா எழுதியிருக்கிறாய் பிள்ள.

வழக்கம் போல இங்க வாறதில ஒரு சந்தோசம்.

சுகமா இருக்கிறியே மோன? கன நாளா வர முடியேல்ல.\\

எங்கண போனீ இவ்வளவு நாளும்?? முத்தம் வெறிச்சோடிப்போய்க்கிடந்திச்சு கொஞ்சநாளா!

என்ர சுகத்துக்கென்ன குறைச்சல் நல்லாத்தானண இருக்கிறன். ஏனண வரேல்ல? வருத்தம் கிருத்தம் என்னவுமே? உடம்ப பார்த்துக்கோ ஆச்சி.

 
On August 16, 2009 at 8:00 AM , யசோதா.பத்மநாதன் said...

என்ர தங்கம், வந்திட்டியேனை? ஓம் பிள்ள கொஞ்ச நாளா வேலையாப் போச்சு. உன்னப் பாக்காமல் இருக்க ஏலுமே ராசாத்தி.

நான் வந்து கொண்டு தான் இருப்பனடி பிள்ள.நாள் செண்டாலும் எட்டிப் பாக்காமல் போவனே? ஆ? என்ர பிள்ளயள் எல்லே!


ஓம் ராசா கிருத்திகா,அது நான் தான். நீயும் நல்லா எழுதுறாய் மோன.சந்தோசம்! சந்தோசம்!!

உங்களை எல்லாம் கண்டதில வலு சந்தோசம்.உவன் பிள்ள வந்தியக் கண்டா என்ன ஆச்சியோட பகிடியோ எண்டு கேளடி பிள்ள. என்ர பேத்தியப் பற்றி என்னவோ சொல்லுறான்.