Author: கானா பிரபா
•3:07 PM
நல்லை நகர்க் கந்தனைப் பற்றிச் சொல்லும் போது நல்லை நகர் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து எழுதமுடியாத அளவிற்கு இவரின் பந்தம் இருக்கின்றது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் இணக்க அவர் விரும்பினார்.

ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டில்
யாழ்ப்பாணத்துச் சைவசமயிகளே என்று விளித்து எழுதப்பட்ட குறிப்புக்களில் சில பாகங்களின் முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே தருகின்றேன்.

குறிப்பு 4. இவ்யாழ்ப்பாணத்திலே முக்கியமாகிய கோயில் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலிலே நீங்கள் உங்கள் வழிபாட்டை அங்கே செய்கின்றீர்கள். உங்கள் பொருளை மிகுதியாக அங்கே செலவழிக்கின்றீர்கள். அக்கோயிலும், அங்கே நடக்கும் பூசை திருவிழா முதலியனவும் சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் முழு விரோதம். அவ்வாகம விரோதங்களையே மற்றைய கோயில்களுக்கும் நீங்கள் பிரமாணமாகக் கொள்ளுகின்றீர்கள்.

குறிப்பு 7
இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயில். இங்கிருக்கின்ற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை வேலாயுதம்.
கந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா?
அது அவர் கைப்படைக்கலம். அவரேவல் செய்யும் அடிமை அவ்வுண்மை.

குறிப்பு 10
எந்தக் கோயிலுக்கும் சண்டேசுரர் கோயில் வேண்டுமே இங்கே சண்டேசுரர் கோயில் இருக்கின்றதா?

குறிப்பு 11
வைரவர் கோயில் இருக்க வேண்டிய தானம் எது? வைரவர் எந்தத் திக்குமுகமாகப் பிரதிஷ்டை செய்யப்படல் வேண்டும்? வைரவர் பொருட்டு விக்கிரகம் தாபியாது சூலாயுதந் தாபிக்க விதி என்னை?

குறிப்பு 12
இக்கோயிலார் விக்னேசுர விக்கிரகம் தாபித்தது என்னையோ?
சுப்பிரமணியர் பொருட்டு அவர்கை வேலாயுதமும், வைரவர் பொருட்டு அவர்கைச் சூலாயுதமும் தாபித்துவிட்ட தம்முன்னோர் கருத்துக்கொப்ப, இவரும் விக்னேசுரர் பொருட்டு அவர் கைத்தோட்டு தாபித்து விடலாமே?

குறிப்பு 14
சுப்பிரமணிய சுவாமிக்கு மகோற்சவம் மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள், ஒன்பது நாள், பன்னிரண்டு நாள் நடத்துக என்று குமார தந்திரம் விதித்திருக்க இங்கே இருபத்து நான்கு நாள் மகோறசவம் நடத்துவதென்னையோ?

இவ்வாறாகத் தன் முதற்பத்திரிகை வேண்டுகோளை ஆறுமுக நாவலர், யுக வருசம் ஆடிமாதம் 1875 ஆம் ஆண்டு முன் வைக்கின்றார்.

தொடர்ந்து இவரால் நல்லூர்க் கந்தசாமி கோயில் குறித்து இரண்டாம் பத்திரிகையும் முப்பத்தேழு குறிப்புக்களுடன் வெளியிடப்படுகின்றது.

கி.பி 1873 இல் கந்தையா மாப்பாணர் அதிகாரியாக இருந்த காலத்தில் ஆறுமுக நாவலர் அவர்கள் அக்கோயிற் திருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் பணியை மேற்கொண்டு மேற்கொண்டு 6000 வரையில் பணமும் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூ 3000 வரைடயிற் செலவு செய்து கருங்கற்களும் எடுக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து முருகன், வள்ளி, தெய்வயானை விக்கிரகங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் இடையில் நடந்த மாற்றங்களால் அவ்விக்கிரகங்கள் நல்லையில் இடம்பெறாமல், தென்மராட்சி விடற்றற்பளை வயற்கரைக் கந்தசுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மேலும் தேர்திருவிழாவுக்கு முதல்நாள் செய்து வரும் ஆட்டுக் கொலையைச் செய்யமாட்டோம் என்ற வாக்கினை மீறிச் செயற்பட்டமையால் 1876 ஆம் ஆண்டு அம்மேலதிகாரியை விலக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. அது விளக்கத்துக்கு வருமுன் நாவலரவர்கள் தேவகவியோகமாயினார்.

இந்தக் குறிப்புக்களின் பிரகாரம் நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை அறியமுடிகின்றது. ஒரு கட்டத்தில் இருபத்தைந்து வருடகாலம் நாவலர் நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்திருக்கின்றார்.

கி.பி 1248 ஆம் ஆண்டிற் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில், சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ்மக்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பெருங்கோயிலாகவும் கடந்த பல நூறு ஆண்டுகளாக விளங்கி வருகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாயிரமாண்டுகள் நீண்டபாதையில் கந்தவேள் ஆலயம் வரலாறு படைத்துள்ளது.

வரலாற்றுக் குறிப்புக்கள் மூலம்:
1. "ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு", மூன்றாம் பதிபின் மீள் பிரசுரம் மார்கழி 1996 - தொகுப்பாசிரியர் நல்லூர் த.கைலாசபிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

புகைப்பட உதவி: http://www.vajee4u.com/


இந்த ஆண்டின் நல்லைக் கந்தன் ஆலய 11 ஆம் நாள் திருவிழாப்படங்களை அனுப்பி வைத்த கிழவித்தோட்டம் செந்தூரனுக்கு நன்றிகள்









This entry was posted on 3:07 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On August 8, 2009 at 10:21 PM , சி தயாளன் said...

:-) நன்றி

 
On August 9, 2009 at 7:52 AM , Unknown said...

பிரபா அண்ணா...
இந்தப் பதிவுக்கா 'அந்த' வசை... அட ஆண்டவா.. முதலிலேயே தெரிந்திருந்தால் சீ.. தூ என்று அந்தாளை ஒதுக்கியிருப்பேனே

 
On August 9, 2009 at 1:40 PM , soorya said...

நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்...சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே..!

இது சி.வை. தாமோதரனார் வரி.

நல்லை பற்றிய தங்கள் பதிவுகள் அபாரம்.

இவற்றை கண்டிப்பாகாகத் தொகுத்து நூலாக்கம் செய்யுங்கள்.

நன்றி.

 
On August 9, 2009 at 6:30 PM , M.Thevesh said...

நான் சின்ன வயதில் நல்லூர் இராச
தானியைப்பற்றி படித்திருக்கிறேன்.
உங்கள் பதிவு நினைவை
மீட்ட உதவி அளிக்கிறது.
மிக்க நன்றிகள்