Author: சின்னக்குட்டி
•3:58 PM
இந்த பதிவு ஒரு மீள் பதிவு ...இந்த முற்றத்துக்கு பொருத்தமாக இருப்பதால் இங்கு பிரசுரிக்கிறேன்


அந்த மனிசன் நெடுகவும் அரியண்டம் கொடுத்தபடி...அந்த சைக்கிளை எப்பன் நிழலாய் கொண்டு போய் விடு மோனை என்ற படி. எந்த நேரமும் கரிச்சு கொட்டும். உந்த அப்பு.உதை. பெரிய பொக்கிசம் மாதிரி.


உதை பெரிய பென்ஸ் கார் என்ற நினைப்பு அவருக்கு. தன்ரை கடைசி நேரம் என்னை பெத்து போட்டு உந்த ஓட்டை கறள் பிடிச்ச சைக்கிளையும் தந்து போய் வா என்று விடுது.உதை. அப்பா என்று சொல்லவும் வெட்கமாக கிடக்கு.உந்த சைக்கிளிலையும் போகவும் வெட்கமாக இருக்கு.

என்னோட்டை பொடியள் றோட் மாஸ்ரர் ,ஏசியா பைக்,ஆர்எம்.வி, என்று புது புது பிரான்டில் வைச்சிருக்கிறாங்கள். றலிக் சைக்கிளை எவ்வளவு காலத்துககும் பாவிக்குமாம். அப்பு உந்த றலிக் சைக்கிளை தங்கடை தேகத்தோடை எல்லோ ஒப்பிட்டு சொல்றார்.

சாமி,தினை குரக்கன் நார்சத்துகள் சாப்பிட்டு வளர்ந்த தங்கடை தேகம் போல உரமாம். கூப்பன் அரிசி கோதுமை மா, தின்கிற இந்த காலத்து ஆக்காளின்ரை உடம்பு மாதிரி தானாம் இப்ப வாற புது வகையான சைக்கிள்....கெதியிலை வேலை விட்டு போயிடுமாம் என்று கொக்கரிச்சு சிரிக்குதல்லோ.


சைக்கிள் பராமரிக்கிறதிலை சிலருக்கு கை வந்த கலை. தங்களை சோடிக்கினமோ இல்லையோ..சைக்கிளை விதம் விதமாக சோடிப்பினம். வயர்களை சுத்துவினம். புதுவிதமான முன் லைட் பின்லைட் சைட்லைட் என்று எல்லாம் போடுவினம்.முன் சில்லு பின் சில்லு களிலை பூ போல வளையமொன்றை போட்டு வைப்பினம். ஓடக்கை அது சேர்ந்து சுத்தக்கை நல்ல வடிவாக இருக்கும்.சில பேர் அதிலையும் சின்ன லைட் பூட்டியும் விடுவினம்.

எல்லா வீட்டிலும் புதுசோ பழசோ சைக்கிள் இருக்கும். உது தான் எல்லாருக்கும் அந்தரத்துக்கு உதவிகின்ற ஆபாத்துவான்.முன்வீட்டு சுப்பரும் தன்ரை சைக்கிளை வளர்ப்பு பிராணி மாதிரி சரியான கவனம்.சும்மாயிருக்கிற சைக்கிளை சும்மாக இருக்க விடாமால் துரைத்துக்கொண்டோ ஏதோ செய்து கொண்டு தான் இருப்பார் .

பாவி அந்தரத்துக்கு கேட்டாலும் இரவல் கொடுக்கமாட்டார். ஒரு கை பாவிப்பு பாவிக்கிற படியால் பிரச்சனை ஒன்று வாறதில்லையாம். உண்மையாய் ஒரு கை பாவிக்க வேண்டிய விசயத்தை பல கை பாவிக்க விட்டுட்டு இருக்கார் என்று ஊரிலை கதைக்கினம்..சைக்கிளிலை மட்டும் பெரும் எடுப்பு எடுத்தெண்டு இருக்கார்

நான் சைக்கிள் பழகினது என்ரை வயதுக்கு கொஞ்சம் லேட் தான். என்னோட்டை பொடியள் வேளைக்கு பழகியிட்டாங்கள்.. நான் உயரம் கொஞ்சம் குறைவு.அதாலை சீட்டுக்கு மோலாலையும் ஓடினாலும் முட்டுதில்லை பாருக்கு மேலாலை ஓடினாலும் முட்டுதில்லை.அரை சைக்கிள் வாடகைக்கு கொடுக்கிறவன்களாம். அழுது குளறி மண்டாடி வாடகை எடுப்பமெண்டாலும் உந்த அப்பு மாட்டென் என்று இட்டுது.

அப்பு காசு விசயத்திலை சரியான எருப்பன் பார்க்கும். பின்னை கவுட்டுக்கு கீழாலை விட்டு ஓடிப்பழகினது தான்.அது என்னமாதிரியென்றால் சைக்கிள் பாருக்கு கீழாலை ஓடுறது.. அப்படி ஓடி பிறகு சரியாய் ஓடி பழகிட்டன்

சும்மா சொல்லகூடாது. உந்த றலிக் சைக்கிள் டபிள் என்ன டிறிபிள் என்ன வைச்சோடினாலும் அந்தமாதிரி ஓடலாம் . டபிளென்றால் முன் பார்லை மட்டும் வைத்து ஓடுறது.டிறிபிளன்றால் முன் பாரிலையும் கரியரிலையும் வைச்சு ஓடுறது.. சுப்பர் கோயிலுக்கு போகக்கை டிறிபிள் இல்லை அதற்க்கு மேலை சைக்கிள் கான்டிலையும் கடைசி பொடியை வைச்சுக்கொண்டு ஓடுவார்.நேர்கோட்டிலை போனது மாதிரி போகும்.

இந்த சோழக்காற்று நேரம் எதிர்காற்றிலை டபிளிலை போகக்கை முன்னுக்கு இருக்கிறவர் டபிள் பெடல் போட்டு தந்தார் என்றால் ஓடுறதுக்கு கஸ்டம் இல்லாமலிருக்கும். அதுவும் எங்கட பக்கத்துக்கு காத்து அடிக்கோணும் உருவிக்கொண்டு ஓடலாம். அதுவும் பள்ளைக்கை றோட்டாய் இருக்கோணும் அந்தமாதிரி இருக்கும்..உந்தமாதிரி வெளியை கண்டால் இரண்டு கையை எல்லாம் விட்டு ஓடி பார்க்கிறனான். அப்பு கண்டால் திட்டும்..சுப்பர் அண்டைக்கு கண்டுட்டு அள்ளி வைச்சுட்டுட்டார்.

இப்ப பொடியள் சைக்கிள் இலை வந்து செய்து போட்டு காத்தாய் பறந்திடுறாங்களாம்...அண்டைக்கும் ஏதோ நடந்துட்டுது போலை. போற வாற சைக்கிளை மறிச்சு தங்களின்ரை இயலாமையை சனத்திட்டை காட்டியண்டு இருக்கிறான்கள் போலை. லைட்டிருக்கா டைனமோ இருக்கோ நம்பர் பிளேட்டிருக்காண்டு...அந்த பொலிசுக்காரன் ஏதோ கேட்க அப்பு ஏதோ வாய் காட்டிட்டுது போல.... அவன் சைக்கிளை ஒரு தொப்புன்று தூக்கி போட்டு ஒரு காத தூரத்துக்கு எறிந்தான்.


அப்படி பலருடைய சைக்கிள்கள் எறிந்து கிடந்தது.

பொலிஸ்காரர் இப்ப போய் விட்டனர்.

ஆக்கள் விழுந்த நெளிந்த சைக்கிளை தூக்கி செல்லுகின்றனர். அப்பு தன்ரை சைக்கிளின்ரை பக்கிளை மட்டும் எடுத்துட்டு அவர் மட்டும் ஓடி செல்கிறார்.

சும்மா சொல்லகூடாது அப்புவை போல அப்புவின்ரை சைக்கிளும் உரம் தான்
|
This entry was posted on 3:58 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On August 24, 2009 at 3:21 AM , கானா பிரபா said...

சின்னக்குட்டியர்

மூல இடுகையை தவறவிட்டிருந்தேன். இந்த இடுகையில் இருக்கும் ஈழப்பேச்சு வழக்கின் பொதுவான தமிழையும் அடிக்குறிப்பாக இட்டிருக்கலாம்

 
On August 24, 2009 at 9:10 AM , சின்னக்குட்டி said...

//ஈழப்பேச்சு வழக்கின் பொதுவான தமிழையும் அடிக்குறிப்பாக இட்டிருக்கலாம்//

வணக்கம் பிரபா

ஈழப்பேச்சு தமிழுக்கு தொலுக்கு வேலை செய்ய கொஞ்சம் பயமாய் இருக்கு

வேறு ஒன்றுமில்லை....அதை சரியாய் செய்வேனோ என்ற பயம் தான்

முற்றத்துக்கு வரும் நண்பர்கள் அதை செய்து உதவுவார்கள் என்று நம்புகிறேன்

நன்றி

 
On August 24, 2009 at 1:44 PM , Unknown said...

///ஈழப்பேச்சு தமிழுக்கு தொலுக்கு வேலை செய்ய கொஞ்சம் பயமாய் இருக்கு///
எனக்கும் அதே பயம்தான் அண்ணை.. அதுதான் சிலவற்றை எழுத கொஞ்சம் சிரமமாய் இருக்கு