Author: மணிமேகலா
•4:58 AM
கோயில், திருவிழா,வரலாறு, கொண்டாட்டம் எண்டு இருக்கிற இந்த நேரத்தில பேய்க்கதை கதைக்கிறன் எண்டு ஒருதரும் என்னை பேசாதைங்கோ.பானையில இருக்கிறது தானே அகப்பையில வரும்!:)

தமிழர்கள் வாழ்வில் இறப்புக்குப் பின் வாழ்வு,பேய், பிசாசு, முனி,சுடலைமாடன் பற்றிய நம்பிக்கைகள் பல பல நூற்றாண்டுகளாக நிலவி வருகின்றன.அவை மதம் சார்ந்தும் இருந்து வந்துள்ளன.எனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்களுடய அபிப்பிராயங்களைப் முடிந்தால் பதிந்து செல்லுங்கள்.

அது என் பாடசாலைக் காலம்.6,7,8,9 ஆம் வகுப்புக் காலங்களாக இருக்கும். நான் படித்தது ஒரு எல்லைப் புறத்துக் கலவன் பாடசாலை. அங்கு பாடசாலை ஆரம்பித்த பின் 5 நிமிடங்களும்; மதிய இடைவேளையின் பின் 5 நிமிடங்களும் நாம் அமைதியாக இருக்க வேண்டும். அதனைக் கவனிக்க மாணவத் தலைவர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் நிற்பார்கள்.(உயர் வகுப்பு மாணவர்கள்). எங்கள் வகுப்புக்கு ஒவ்வொரு முறையும் விக்னேஸ்வரன் என்று ஒரு அண்ணர் வழக்கமாக வருவதும், ஒவ்வொருமுறையும் நான் கதைத்து என்னை எழுப்பி விடுவதும் நாளாந்த வழக்கம்.பிறகு அவர் என்ன ஆனார் என்று எனக்குத் தெரியவில்லை.

காலங்கள் கடந்தன.6,7 வருடங்களாயிற்று. காலம் என்னை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தது. ஒரு விடுமுறைக் காலமொன்றில் மீண்டும் அந்தக் கிராமத்துக்கு வந்தேன்.நாட்டுப் பிரச்சினைகள் வலுப்பெற்று போக்குவரத்துகள் துண்டிக்கப் பட்டிருந்த காலமது.எனக்கு என் தந்தையார் புதிய லுமாலா சைக்கிள் வாங்கித் தந்திருந்தார்.மகிழ்ச்சிக்கோர் அளவில்லை.அதே நேரம் என் தங்கைக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்திருந்தது. அந்த அனுமதிப் பத்திரம் நாம் கொடுத்திருந்த கொழும்பு முகவரி ஒன்றுக்கு வந்திருந்தது.அது கொழும்பிலிருந்து வந்த ஒருவரிடம் கொடுக்கப் பட்டு, அவர் தன் வீட்டுக்கு வந்து அதனைப் பெற்றுச் செல்லும் படி தகவல் அனுப்பி இருந்தார்.

நான் ஒற்றைக்காலில் நின்று நான் போய் பெற்று வருகிறேன் என்று அனுமதி பெற்றுக் கொண்டேன். காரணம் புதிய லுமாலா சைக்கிளில் ஓடுவது தான்.அப்போது நேரம் மாலை 3,4 மணி இருக்கும். எனக்கு அந்தப் பாதை அவ்வளவு பழக்கமில்லாவிட்டாலும் போவேன் என்று சொல்லி விட்டேன். 6 மணிக்குப் பின்னர் அதனால் தேக்குமரக் காட்டினை ஊடறுத்து யானைகள் வருவது வழக்கம். நிண்டு மினைக்கெடாமல் உடனடியாக வந்து விட வேண்டும் என்று அப்பா கூறினார். நானும் பெருமாள் மாடு மாதிரித் தலையாட்டி விட்டுப் புறப்பட்டேன்.

சொன்னபடி கடிதத்தைப் பெற்றுக் கொண்டு உல்லாசமாக வந்து கொண்டிருந்தேன். நேரம் 5சொச்சமாக இருக்கும். காட்டுப் பிரதேசம். ஒற்றையடிப் பாதை. யாருமில்லை. ஆனால் எனக்குப் பயமும் இல்லை. தேக்கங்காட்டைக் கடந்து விட்டேன்.சற்றுத் தூரம் வந்த பின் தான் கவனித்தேன். நான் வருகின்ற பாதை பிழையானது என்று.இப்போது இருட்டு பூதாகரமாகத் தெரியத் தொடங்கியது.திரும்பிப் போவது சாத்தியமில்லை என்று தோன்றியது. காரணம் யானைகளை நான் சந்திக்கக் கூடும்.எனவே தொடர்ந்து அதே பாதையில் போவது என்றும்; நிச்சயமாக அது ஒரு கிராமத்தைச் சென்றடையும் என்றும் நம்பினேன். சைக்கிளை வேகமாக உளக்கத் தொடங்கினேன்.

கிட்டத்தட்ட 6 மணியளவில் ஒரு கிராமத்தை வந்தடைந்தேன். தெய்வாதீனமாக அது எனக்குத் தெரிந்த அயல் கிராமம் தான். அத்துடன் அங்கிருந்து யாழ் கண்டி வீதியூடாக என்வீட்டுக்குப் போகவும் எனக்குத் தெரியும்.சுமார் 15 நிமிடங்களில் வீட்டுக்குப் போய் விடலாம். மனதில் ஒரு நின்மதி. தூரத்தே மனிதர்களும் தெரிய ஆரம்பித்தார்கள்.

திடீரென்று பின்னால் விக்னேஸ்வரன் அண்ணர் சைக்கிளில் வந்தவாறு என்னை என் இயற் பெயர் சொல்லி அழைப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். காணவில்லை. என்னடா இது, கூப்பிட்டார் அதற்குள் எங்கு போய் விட்டார் என்று நினைத்தவாறு போக சற்று அப்பால் அவரது சகோதரி சீதாராணி என்று பெயர். அவ மாடுகளைப் பட்டிகளில் சேர்ப்பித்துக் கொண்டு நின்றார்.படிக்கிற காலங்களில் என் பஸ்களில் வரும் 2 வகுப்புக் கூடப் படித்தவர் அவர்.விக்னேஸ்வரனின் தங்கை என்று எனக்குத் தெரியும்.

அவருக்கு என்னைக் கண்டதும் ஆச்சரியம். பல வருடங்களின் பின் (குறைந்தது 4,5 வருடங்களாவது இருக்கும்)கண்டதால் நலம் விசாரித்தார். நானும் நின்று நடந்ததைச் சொன்னேன். பேச்சு வாக்கில் அவரது அண்ணர் விக்னேஸ்வரன் அண்ணரை வளைவான முடக்கொன்றில் கண்டது பற்றியும் அவரை பிறகு காண முடியவில்லை என்பது பற்றியும் பிரஸ்தாபித்தேன்.அவர் சாதாரணமாகக் கதைத்து விட்டு வீட்டுக்கு வந்து தேனீர் குடித்து விட்டுச் செல்லுமாறும் தான் கூட வந்து என் வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறினார்.

நான் கூடச் சென்று தேனீர் குடிக்கும் போது எங்கு தன் அண்ணரைக் கண்டது என்று வினவினார். நான் அந்த குறிப்பிட்ட பகுதியை விபரித்தேன். அதற்கு அவர் தன் அண்ணன் சில வருடங்களுக்கு முன் மாற்று இயக்கம் ஒன்றில் இருந்ததற்காகப் புலிகளால் சுடப்பட்டு இறந்தார் என்றும்; நான் கடந்து வந்த அந்த குறிப்பிட்ட இடம் ஒரு சுடலை என்றும்; அங்கு தான் தன் அண்ணர் பின்னர் புதைக்கப் பட்டார் என்ற தகவலையும் சொன்னார்.

நம்புங்கள். அது வரையும் இந்தத் தகவல் ஒன்றும் எனக்குத் தெரியாது.

இதிலிருந்து நான் கண்டு கொண்ட உண்மை,

1.இறப்புக்குப் பின்னும் உயிர் அழிவதில்லை.

2.அதற்கென்று சில சக்திகள் உண்டு.

3.எங்களை அது இனங் கண்டு கொள்கிறது.

மொத்தத்தில் பேய்கள் உண்டென்ற பல தமிழர் நம்பிக்கையில் எனக்கும் நம்பிக்கை உண்டு.


உங்கள் அபிப்பிராயங்களையும் சொல்லிச் செல்லுங்கள்.

(யாரும் பயம் கொள்ள வேண்டாம்)
This entry was posted on 4:58 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On August 5, 2009 at 6:40 AM , சினேகிதி said...

எங்கட அம்மா சொல்லுவா செத்துப்போன பொன்னுமாமா தனக்கு முதுகில அடிச்சிருக்கிறார் என்டு.

பிறகு அப்பப்பா சொல்லுவார் பேய் வந்து தனக்கு துலாவில தண்ணியிறைச்சுத் தந்ததெண்டு.

எனக்கு நேரடியா ஒரு அனுபவமும் இல்லை ஆனால் திருவிழா நேரம் பெரியம்மான்ர மகள்கள் வந்து நிக்கிற நேரம் ஹோல்ல நீட்டுக்குப் படுத்திருந்த நிறையப் பேய்க்கதை கதைச்சிருக்கிறம்.

ஊரில ஒரு இடத்தில பின்னேரம் ஆனா ஊ ஊ ஊ என்று சத்தம் கேக்கும். முனி வந்திட்டு என்று சொல்லிச்சினம். அதால போகக்கூடாது என்று மிரட்டல் வேற. பிறகு பார்த்தால் தென்னம்பிள்ளைல கறன்ர் வயர் முட்டிற நேரம் பலமா காத்தடிக்கேக்க அந்த சத்தம் வருதென்டு கண்டுபிடிச்சினம்.

 
On August 5, 2009 at 7:22 AM , வர்மா said...

இப்பிடி ஒரு பேய்கதையோடை வந்து மிரட்டுவதற்கு திட்டமிடனான். பின்னூட்டமிட்டால் பெரிதாகிவிடும்.ஆறுதலாக பதிகிறான்.
அன்புடன்
வர்மா.

 
On August 5, 2009 at 7:38 AM , Thevesh said...

மனதில் ஏற்படும் ஆழமான
நம்பிக்கையின் வெளிப்பாடு
தான் இந்த பேய் பிசாசுப்
பயம். இது ஒரு
மனதத்துவரிதியானது.

 
On August 5, 2009 at 9:41 AM , வந்தியத்தேவன் said...

ஆச்சி இரவிலை பேய்க்கதை படிக்க பயமாக இருக்கிறது. கொஞ்சம் பயம் தெளிஞ்சபின்னர் வாறன்

 
On August 5, 2009 at 3:21 PM , கலை said...

பயப்பிட வேண்டாமெண்டு சொன்னாலும், பயமாத்தானே இருக்கு. என்ன செய்ய :)

 
On August 5, 2009 at 7:16 PM , வந்தியத்தேவன் said...

ஆச்சி எனக்கு உந்த பேய் பிசாசு முனி கொத்தி(சரியான சிரிப்பு பேய்)ஒன்றிலும் நம்பிக்கை இல்லை ஆனால் இரவில் பயம். எப்படி கடவுள் என்ற ஒரு கருத்து சர்ச்சைக்குரியதோ அதேபோல் இந்த அமானுஷ்யங்களும் சர்ச்சைக்குரியதுதான்.

சிலவேளை உங்கள் மனப்பிராந்திகாரணமாக சுடலையைக் மைய்மலுக்குள் கடந்தால் இரவில் காய்ச்சல் வரும், வாய் பினாத்துவீர்கள். ஏனென்றால் மனதில் ஐயோ நான் வரேக்கை சுடலையடியால் வந்தேன் என்ற எண்ணம் மனதில் இருக்கும்,

உங்கள் கதைகள் போல் நிறையக்கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் இவை செவிவழிக்கதைகளே. வர்மா அவர்களும் தன் அனுபவத்தை எழுதப்போகின்றார் என்றார் அதையு படித்துப்பார்ப்போம்.

 
On August 5, 2009 at 8:25 PM , மணிமேகலா said...

சினேகிதி, என்னோடு வேலை செய்கிற அவுஸ்திரேலியர்களும் இது போன்ற பல கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.இவை ஒரு வகையில் இன, மத,மொழி,பண்பாட்டைக் கடந்த நம்பிக்கைகள்.

பல திரைப்படங்களும் இது பற்றி வந்துள்ளன.ஆங்கில, சீன, இந்தோனேசிய மொழிகளில் எடுக்கப் பட்ட அந்தந்த நாட்டுப் படங்கள்(நன்றி;s.b.s.tv) 'யாவும் உண்மை' என்ற தலைப்போடு வெளிவந்துள்ளன.

சில சமய நம்பிக்கைகளும் அதனை உறுதிப் படுத்துகின்றன.

இது அவரவர் மனநிலைகளையும் அனுபவங்களையும் நம்பிக்கைகளையும் பொறுத்தது.

 
On August 5, 2009 at 8:33 PM , மணிமேகலா said...

வர்மா, விரைவில் பதிவைப் போடுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தேவேஷ்,அந்த சம்பவத்திற்கு முன்னர் பேய் பற்றி எனக்கு ஒரு ஐடியாவும் இருக்கவில்லை.மேலும் அந்த சந்தர்ப்பத்தில் என் மனம் ஒரு வெள்ளைத் தாளாகத் தான் இருந்தது.

ஆனாலும் உங்களது அபிப்பிராயத்தையும் நம்பிக்கையையும் மதிக்கிறேன்.

 
On August 5, 2009 at 8:39 PM , மணிமேகலா said...

என்ர பேரப் பிள்ளையள் வந்தி,கலை பயந்து போனியளே?

பயப்பிடாதையுங்கோ பிள்ளையள்.

பிரபஞ்ச ரகசியம் பெரியது.அதுக்கெல்லாம் இந்தச் சின்ன 2 கண்ணும் காணாது.

ஆனா பயப்பிடாதையுங்கோ பிள்ளயள்.எங்கள அதுகள் ஒண்டும் செய்யாது.

 
On August 6, 2009 at 9:03 AM , வலசு - வேலணை said...

ஆச்சி!

இப்ப நீங்களும் நல்லாயப் பேய்க்காட்ட வெளிக்கிட்டிட்டியள்.

1) பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டல்களும்

2)பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டல்களும் -II

 
On August 6, 2009 at 4:47 PM , மணிமேகலா said...

உங்களுடய நம்பிக்கைகள் வாழட்டும் வலசு.

அது சரி எங்க கன நாளாக் காணேயில்லை? கோயில் திருவிழா முடியட்டும். ஒரு கூழ் பாட்டி போடுவம்.

அடிக்கடி வாங்கோ!

 
On August 10, 2009 at 6:00 AM , வலசு - வேலணை said...

மணியாச்சி!
இப்பவே கூழ்காய்ச்சுற அடுக்குகளப் பண்ணத் தொடங்கனாத்தான் கானா பிரபா அண்ணையின்ர நல்லூர் தீர்த்தம் முடிஞ்ச உடனே கூழ்குடிக்கலாம்.

 
On August 20, 2013 at 6:18 AM , vk Samy said...

உண்மை சம்பவம்...

கோமாவுக்கு சென்றவுடன் தான் ஒரு இருண்ட துளைக்குள்ளால் (ஒரு மண்புழுவின் பார்வை எப்படி இருக்குமோ அப்படியான ஒரு பார்வை) போயகொண்டிருப்பதாகவும் கொஞ்ச நேரத்தின் பின் சுத்திக்கொண்டிருக்கும் வெளிச்சம் தெரிந்ததாகவும், இனிமையான இசை கேட்டுக்கொடிருத்ததாகவும் இன்னும் கிட்ட போகும் பொழுது சுத்திக்கொண்டிருந்த ஒளி இப்போது சுற்றாமல் இருந்ததாகவும் “ஓம்” என்ற ரீங்காரம் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் இவை எல்லாம் மனித கற்பனைக்கு அப்பால்பட்ட சந்தோசத்தை தந்ததாகவும் சொல்கிறார். இந்த பயணத்தின் முடிவில் எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லாத அழகான ஒரு உலகத்தில் புதிதாய் பிறத்தது போல் இருந்ததாம். அப்போது நீலநிற கண்கள் கொண்ட அழகான தேவதை போன்ற பெண் இவரிடம் வந்து “நீ திரும்பி போகவேண்டியவர் என்றும் பயப்பட தேவையில்லை என்றும் வார்த்தைகளால் இல்லாமல் ஒருவகை உணர்வினால் உணர்த்தினாராம். அந்த இடத்தில் கூடாதது எதையும் நினைக்கவே முடியவில்லை என்று சொல்கிறார். அந்த இடத்து அனுபவங்களை அழகாக சொல்லியிருக்கிறார் இந்த புத்தகத்தில். இந்த பயண முடிவில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உலகத்து கதவு மூடப்பட்டு தன ஆன்மா தனது மூளைக்குள் மீண்டும் வந்ததாம்.....

More...

http://www.panncom.net/p/4944