Author: கானா பிரபா
•3:40 AM
தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயம் பழைய இடத்தில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. அவ்வாறு கூறக்கூடிய அளவிற்கு இலக்கிய ஆதாரங்களோ அன்றித் தொல்லியற் சான்றுகளோ காணப்படவில்லை. நல்லூரில் இருந்த இதன் ஆரம்ப கால ஆலயமும் ஏனய ஆலயங்களைப் போல் போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்டதாகும்.

இது பற்றிக் குவேறோஸ் சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
"யாழ்ப்பாணத்தை இறுதியாக வென்ற போர்த்துக்கேயத் தளபதி பிலிப்டி ஒலிவீரா 1620 ஆம் ஆண்டிலே நல்லூருக்குச் சென்றான். அங்கிருந்த பெரிய கோயிலிலே (கந்தசாமி கோயில்) கிறீஸ்தவர்கள் அல்லாதவர் (சைவர்) மிக்க ஈடுபாடு உடையவர்கள். அவர்கள் அதனை அழியாது விட்டுச் சென்றால் அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாகவும், அவனுக்கு வீடு கட்டித் தருவதாகவும் பலமுறை வாக்குறுதி செய்து வந்தனர். ஆனால் அவன் மதப்பற்று மிக்க கத்தோலிக்கன் ஆகையால் அவர்களின் நடவடிக்கை அக்கோயிலை அழிக்க அவன் கொண்டிருந்த விருப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. எனவே அதன் அத்திவாரத்தையும் இல்லாது அழிக்கக் கட்டளையிட்டான்". இக்கூற்றை யாழ்ப்பாண வைபவமாலையும் உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்ட பழைய கந்தசாமி கோயிலானது தற்போது முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு முன்புள்ள கிறீஸ்தவ ஆலயத்தை அண்டியுள்ள பகுதியில் இருந்துள்ளதென்பதற்குச் சில தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. இப்பகுதியில் பல அத்திவாரங்களின் அழிபாடுகள் கிறீஸ்தவ ஆலயத்தைச் சுற்றியும் அதன் கீழாகவும் செல்வதையும் அவதானிக்கலாம். இக்கட்டிட அழிபாடுகளுக்கு வடக்கே புனித யமுனா ஏரி அமைந்துள்ளது இக்கருத்தினை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இப்பழைய அத்திவாரமுள்ள இடத்திலே ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் போது ஆரம்பத்தில் களிமண்ணாலான கிறீஸ்தவ தேவாலயம் இருந்ததாக அக்காலத்தில் கிறீஸ்தவ சமயப் பணி புரிந்து வந்த போல்டேயஸ் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கத்தோலிக்க மதம் பரப்பிய போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை இடித்து அந்த அமைவிடங்களில் அல்லது அவற்றுக்கு அருகிலேயே தமது தேவாலயஙகளை அமைத்திருக்கின்றன. அதே போல் கந்தசாமி ஆலயம் இருந்த இடத்தில் அக்காலத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றையும் அமைத்தனர். அக்கிறீஸ்தவ தேவாலயம் இன்றும் அதேயிடத்தில் இருந்துவருகின்றது.

தற்போதைய மந்திரி மனைக்குள் சில மந்திகளின் வேலை

இராசதானியில் இருந்த நான்கு எல்லைக் கோயில்களுக்கு இக்கந்தசுவாமி கோயில் மையக் கோயிலாகவும் பெருங்கோயிலாகவும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அக்கோயில் இருந்த இடத்தை அடுத்து அரச அரண்களுக்குரிய சான்றுகள் காணப்படுவதால் இதை ஓர் அரச கோயிலாகவும் கருதுகின்றனர்.

போர்த்துக்கேயர் இக்கோயிலை இடிப்பதற்கு முன்னர் சிலகாலம் தமது பாதுகாப்பு அரணாகவும் இதனைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சுவாமி ஞானப் பிரகாசர் " போர்த்துக் கேயருடனான போரில் தோல்வியுற்ற செகராசசேகரன் என்னும் மன்னன் அரண்மனைத் திரவியங்களை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குத் தீயிட்டு விட்டு ஓடிய பின் போர்த்துக்கேயர் எரிந்த அரணையும் கைப்பற்றிய ஆலயத்தையும் சுத்தம் செய்து அவற்றிலோர் ஸ்தோத்திர பூஜை செய்து மகிழ்ந்தனர்" எனக்கூறுகின்றார்.

இக்கோயிலைத் தமது கட்டுப்பாட்டில் போர்த்துக்கேயர் வைத்திருக்கும் காலத்தில் தஞ்சாவூரில் இருந்து படையெடுப்புக்கள் இரண்டை எதிர்கொண்டதாகவும் , மூன்றாம் தடவை மேற்கொண்ட படையெடுப்பில் அப்படைத்தலைவனுக்கு இக்கோயிலில் வைத்தே தண்டனை கொடுத்ததாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கூறுகின்றார். இவ்வாறு சில காலம் அரணாகப் பயன்படுத்தப்பட்ட இக்கோயில் 2.2.1621 இல் அழிக்கப்பட்டதாக குவேறோஸ் கூறுகின்றார்.

உசாவ உதவியவை:

1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

3. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

மந்திரி மனை பட உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை




நல்லைக்கந்தன் ஆலயத்தில் இந்த ஆண்டின் ஏழாம் நாள் திருவிழாப்படங்கள் நன்றி கிளவி தோட்டம் செந்தூரன்










This entry was posted on 3:40 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: