Author: Unknown
•9:43 AM
'சினேகிதி' போட்ட 'வெள்ளி பார்ப்பம் வாங்கோ' பதிவுதான் இந்தப் பதிவுக்குத் தூண்டி. அதனால சினேகிதிக்கு முதற்கண் நன்றி. இந்த வெள்ளி பார்த்தல் என்கிற சொல்லாடல் இன்னும் ஒரு கோணத்திலும் பயன்படுவதுண்டு அல்லவா? அது பற்றின பதிவுதான் இது.

இந்த ‘வெள்ளி பார்த்தல்' என்ற சொல்லை அடிக்கடி ஆசிரியர்களிடம்தான் நான் கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தில் மனம் லயிக்காமல் வேறெங்காவது மனம் ஓடிவிடும். எப்படித்தான் கண்டுபிடிப்பார்களோ தெரியாது, சரியாகக் கண்டுபிடிப்பார்கள் ஆசிரியர்கள். ஏதாவது கேள்வியைக் கேட்க, நாங்கள் முழிக்க, ‘வகுப்பில பாடத்தைக் கவனிக்காமல் என்ன வெள்ளி பாத்தனியே' என்பது பல ஆசிரியர்கள் சர்வசாதாரணமாகப் பயன்டுத்தும் ஒரு திட்டு வசனம். அதிலும் எங்களுக்கு கணிதம் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் ‘எத்தினை வெள்ளியெண்டு எண்ணியாச்சே' என்று கேட்டு நக்கல் செய்வார்.

அதாவது இந்த சந்தர்ப்பங்களில் 'வெள்ளி பார்த்தல்' என்பது நிகழ்காலத்தில் நடப்பதை விடுத்து வேறேதாவதைப் பார்ப்பது என்கிற பொருளில் பயன்படுகிறது. கிட்டத்தட்ட இதே பொருளில் ஏமிலாந்துதல், வாய் பார்த்தல், பிராக்குப் பார்த்தல் (பராக்குப் பார்த்தல்) போன்ற சில சொற்களையும் பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு ஏதாவது ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளை வீட்டில் அப்பா அல்லது அம்மாவிடம் ‘அது எங்களுக்கு படிப்பிக்கேல்லை' என்று காரணம் சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அடிக்கடி நான் சொன்ன காரணங்களில் இது ஒன்று). அப்பா அல்லது அம்மாவிடமிருந்து இப்படியான பதில்களை எதிர்பார்க்கலாம்:

'உன்னை நம்பேலாது... நீ பாடம் படிப்பிக்கேக்கை எங்கையாவது வெள்ளி பாத்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
‘நீ எங்கையாலும் ஏமிலாந்திக்கொண்டு இருந்திட்டு ஏன் படிப்பிக்கேல்லை எண்டு பொய் சொல்லுறாய்'
அல்லது
‘அவயள் படிப்பிச்சிருப்பினம். நீ வகுப்பில எங்கயாலும் வாய் பார்த்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
'பாடம் நடக்கேக்கை எங்கையாலும் பராக்குப் பாத்துக்கொண்டு இருந்திட்டு, பொய்ச்சாட்டு சொல்லிறியோடா?'

மேற்படி சொற்களை வேறு வேறு சந்தர்ப்பங்களில் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான அர்த்தங்களில் பயன்படுத்துவார்கள். பகல் கனவு காணுதல் என்பது கூட ‘வெள்ளி பார்த்தல்' என்பதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான ஒரு சொல்லாடல்தான். சினேகிதி சொன்னது போல வெள்ளி (நடசத்திரம்) பார்த்தல் என்பது அழகான பல நினைவுகளை மீட்டித்தரும் ஒரு அனுபவம். அதுவும் விஞ்ஞான பாடத்தில் இந்த நட்சத்திரக் கூட்டங்கள் பற்றிப் படித்த உடனே அந்த வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு இரவுப் பொழுதுபோக்காகிவிடும். அப்படி இரவில் பார்க்கவேண்டிய வெள்ளியை, பகலில் பார்க்கும், இல்லாத ஒன்றில் கவனத்தைச் சிதறவிடும் செய்கையைத்தான் வெள்ளி பார்த்தல் என்று சொல்லுவார்கள்.

வெள்ளி பார்த்தல் பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்கள்
ஒரு முறை எங்களின் விஞ்ஞான ஆசிரியர் திரவியநாதன் ஏனோ திடீரென்று மகாபரதத்தில் இருந்து ஏகலைவன் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஏற்கனவே பலமுறை கேட்ட, வாசித்த கதை என்பதால் நான் வெள்ளி பார்க்க ஆரம்பித்து விட்டேன். அந்தக் கதையில் ஏகலைவன் ஒரு நாயின் வாயை அம்பு எய்து கட்டிப் போடுவது பற்றி அவர் சொல்வது காதில் விழுந்துகொண்டிருந்தது. நான் வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருக்க, அதைக் கண்டுபிடித்துவிட்டார். பெயர் சொல்லி அழைத்து ‘நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தனான்' என்று (நல்ல விதமாகத்தான்) கேட்டார். நானும் ‘வெள்ளி பார்த்தல்' குழப்பப்பட்டதால் குழம்பிப் போய் ‘ஆரோ ஒருத்தன் நாய்க்கு (__________)' என்று கொஞ்சம் இரட்டை அர்த்தமாகச் சொல்ல அதற்கு வகுப்பு என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பும், வெள்ளி பார்த்தலை வைத்து திரவியநாதன் அறுத்த அறுவையும் மறக்காது.

இன்னொரு சம்பவம் கனடாவில் நடந்தது. இங்கே சனிக்கிழமைகளில் கிரிக்கெட் விளையாடுவதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்த போது நான் ஒரு சுலபமான பிடியை ‘வெள்ளி பார்த்த' காரணத்தால் விட்டுவிட்டேன். எங்களின் களத்தடுப்பு முடிந்த பின், 'அடுத்த கிழமை விளையாட வருவாய்தானே' என்று எங்கள் அணியில் கூட விளையாடும் மெல்வின் என்னைக் கேட்டான். அப்போது நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் சனிக்கிழமை மேலதிக வேலைநேரம் கிடைக்குமா என்று வெள்ளிக் கிழமைதான் சொல்லுவார்கள். அதனால நான் ‘வெள்ளிதான் தெரியும்' என்றேன். ‘இப்பமட்டும் என்ன தெரியுது' என்றான் மெல்வின். சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டோம். அதாவது சனிக்கிழமை வேலை இருக்கிறதா இல்லையா என்பது வெள்ளிக் கிழமைதான் தெரியும் என்ற அர்த்தத்தில் நான் சொல்ல, நான் ‘வெள்ளி பார்த்து' விட்ட பிடியை நினைவூட்டி இப்ப மட்டும் என்ன தெரியுது என்று சாதாரண உரையாடலிலேயே சிலேடையில் விளையாடினான் மெல்வின்.

This entry was posted on 9:43 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On August 16, 2009 at 3:17 AM , மணிமேகலா said...

மிக அழகான சிலேடை.ரசனையோடும் அழகாகத் தொடர்பு படுத்தியும் எழுதி இருக்கிறீர்கள்.

 
On August 16, 2009 at 3:59 AM , வலசு - வேலணை said...

எங்கள் ஆசிரியர்கள் வெள்ளி பார்ப்பது பற்றிக் கதைப்பது குறைவு. அவர்கள் பெரும்பாலும், “வாலும் பூந்திற்றுதோ?” என்று தான் கேட்பார்கள். உங்கள் எல்லோருக்கும் அணில் முகட்டில் ஓடியதும், அதைப்பார்த்துக் கொண்டிருந்த மாணவன் ஆசிரியரின் கேள்விக்கு வால்மட்டும் போகேல்ல என்று சொன்ன கதையும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்தக் கதையை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கேட்பார்கள்

 
On August 16, 2009 at 4:37 AM , Unknown said...

நன்றி மணிமேகலா.. எல்லாப் புகழும் வாத்தியார்களுக்கே..

வலசு.. அதுவும் கேட்கிறவை.. அந்தக் கதையும் தெரியும்... ஒவ்வொரு வாத்தியும் ஒவ்வொரு விதமாய்த் திட்டிறவைதானே