Author: சின்னக்குட்டி
•4:17 AM
இது ஒரு மீள் பதிவுதான் என்றாலும் .. இந்த முற்றத்துக்கும் பொருத்தமாக இருப்பதனால் இங்கு பிரசுரிக்கிறேன்


றோட்டாலை போற பஸை பார்த்து நேரம் சொல்லும்... உந்தா மெயில் பஸ் போகுது.... ஐந்தரை எண்டு சொல்லும் . மணிக்கூட்டை உடனை பார்த்தாலும் சரியாக தான் இருக்கும்...... பஸ்காரங்களும் உதுகளின்ரை நம்பிக்கையை வீணாக்காமால் சரியான நேரத்திலை போய்க்கீய் வந்திருக்கிறான்கள் .

இப்ப உப்பிடி இல்லைத்தானே... அவங்களிலையும் குறை சொல்லேலாது.. இழவு விழுந்ததுகள் பத்து இடத்திலை செக்கிங் வைத்தால் எனனயிறது

கிழவி இண்டைக்கு அடுக்கு எடுத்தண்டு நிக்குது...யாழ்ப்பாண பெரியாஸ்பத்திருக்கு போறதுக்கு...பக்கத்து வீட்டு பவளக்கான்ரை பொடியை மந்திகை ஆஸ்பத்திரியிலை வைச்சிருந்தவை .அங்கை இயலாது என்று பெரியாஸ்பத்திரிக்கு இப்ப ஏத்தி போட்டாஙகளாம்...

நடு உச்சி பிறுச்சு இழுத்து குடுமியையும் அழகா தலையை வாரிக்கட்டி முடிஞ்சு அதின்ரை இறங்கு பட்டியில் அடியிலை இருந்த நல்ல சாறியை கட்டிக்கொண்டு வெளிக்கிட்டு கொன்டு நிக்குது... 75 வயது தாண்டிய நிலையிலும் அழகு உணர்ச்சியிருக்குது தானே... அழகு உணர்ச்சி மட்டுமல்ல. உந்த வயது உள்ளாக்களுக்கு எல்லா உணர்ச்சியும் இருக்காம்.. என்ன வயதுக்காக அடக்கி வாசிக்கினமென்று எங்கையோ வாசிச்ச ஞாபகம்.

மோனை ஆயித்தமே..சுடு தண்ணி போத்தலை பைக்குள் சீராக்கி வைத்து கொண்டு என்னை கெதி பண்ணுது... மனிசிக்கு உந்த தேசம் எல்லாம் அத்துப்படி.....என்றாலும் துணைக்கு போறன்....


750 எக்ஸபிரஸ் பஸ் இலை தான் போகோணும்... மற்ற பஸ்களிலிலை போனால் படலைக்கு படலை பஸ் ஸரொப்கள் வரும் நிப்பாட்டி ஆக்களை ஏத்தி இறக்கி கொண்டிருப்பான்கள்... என்று கொண்டு விறு விறு எண்டு நடக்குது...

கிழவியும் பல கொண்டிசனோடை தான் பஸ் ஏறுறன் எண்டு ஒற்றை காலிலை நிக்குது.... 751 பஸ்ஸிலை போக விருப்பம் இல்லையாம் அது வியாபாரிமூலை திக்கம் பொலிகண்டி வல்வெட்டித்துறை தொண்டமனாறு எண்டு கடற்க்கரையாலை போறதாலை குளிர்காற்று படுமாம்...

750 எக்பிரசிலை ஜெயம் டிரைவராய் வர்ற பஸ் கிடைச்சால் வலு திறமாயிருக்குமாய் இருக்குமாம் வலு கெட்டிகாரானாம் வீச்சாய் கொண்டு போய் விட்டு விடுவானாம்... மனிசியும் பைலட் எல்லாம் பார்த்து ஏறி டிரக்ட் பிளைட்டிலை போகோணும் என்ற மாதிரி நிக்குது..

பஸ் ஸ்ராண்ட் முழுக்க பஸ்கள்...பிசி டைம் இப்ப ....மனிசிக்கும் சொல்லி வைச்ச மாதிரி.... ஜெயம் டிரைவராயும் 750 எக்ஸ்பிரஸ் கிடைச்சுட்டுது....சனமெல்லாம் நெருக்கு பட்டெண்டு பின் வாசலிலாலை ஏற.....ஜெயத்தை கண்டுட்டுது இந்த மனிசி... முன் வாசலாலை ஏறுது... கண்டெக்டருக்கு உது துப்பராவாக பிடிக்கலே..


.ஜெயம் துலைக்கோணை... என்று வரேவேற்பு வேறை .. ஊர்காரர் என்ற படியால் அந்த மாதிரி செல்வாக்கு


என்ன நம்பர் பஸ் எங்கை போறது எல்லாம் அத்துபடி உதுக்கு...759 பஸ் கொடிகாமம் போறது ..765 சாவகச்சேரி, மந்துவில் வரணிக்காலைக போறது 754சாவகச்சேரி தான் சரசாலையாலை போறது, தாளையடிக்கொரு ஒரு பஸ் தான் போனாலென்ன வந்தாலென்ன...773 பஸ் மூளாய்க்கு போறது... திருகோணமலை, முல்லைதீவு நாயறு லோங் டிஸ்ரன்ஸ் எல்லாம் இங்கிருந்து போறது

பஸ் வெளிக்கிடிடுட்டுது.... என்ன 40 நிமிசத்திலை யாழ்ப்பாண பஸ்நிலையத்திலை அடிச்சுடுவன். ஜெயம் .. ஓராங்கட்டை எல்லாம் தாண்டி கிராமக்கோடு மந்திகை மாலு சந்தி நெல்லியடி சந்தி 5-6 நிமிசத்திலை வந்திட்டுது...


மற்ற பக்கத்திலை போற பஸ்க்காக காத்திருக்கிற பொடியள் பெட்டையள் நிறைய கூட்டமாய் நிக்குதுகள்...இது பள்ளிக்கூட டைம் வேற..... அதிலை ஒரு பெட்டையளை ஏத்தியன்று போற ஸ்கூல் பஸ் நிக்குது. அந்த பஸ் போகக்கை பார்க்கோணும் களைச்சு விழுந்து மயங்கி விழப் போறாள் மாதிரி தான் போகும் ...அவ்வளவு ஸ்லோவாய் போகும்...பின்னாலை சைக்கிளிலை பள்ளிக்கூடம் போற பொடியள் கூட அதை ஓவர் ரேக் எடுத்துடுவான்கள்..


மூத்த நாயகர் கோயில், குஞ்சர் கடை, புறாப்பொறுக்கி எல்லாம் தாண்டி வல்லையை அடைந்து கொண்டிருந்தது. வல்லைக்காலை போகக்கை இரண்டு பக்கம் தண்ணி கடலுக்கலாய் றோட்டு போட்டு அதிலை போற மாதிரி கிடக்கு... அந்த தண்ணியிலையும் ஆக்கள் மீன் பிடிச்சு கொண்டிருக்கினம்.. இப்ப மழைகாலம் தான் இப்படி ......மற்றும்படி இரண்டு பக்கம் சும்மா வெட்டை நிலமாய் சதுப்பு நிலமாய்த்தான் காட்சி தரும்.

கிழவி தூரத்தில் செல்வசந்நிதி தொண்டமனாற்றடியில் சுத்திற காற்றாடியை(fan) கண்டுட்டுது போலை...சந்நதி கந்தன் இருக்கிற திசை பார்த்து கும்பிடுது....

மற்ற பஸ் எல்லாம் அச்சுவேலி போய்த்தான் போறது..எக்ஸ்பிரஸ் பஸ் என்றபடியால்.. நேராயே ஆவரங்கங்கால்,புத்தூர் எல்லா தாண்டி உருவிக்கொண்டு போகுது... அழகிய நீர்வேலி வாழை தோட்டங்களினூடாக கோப்பாய் சந்தியை அடைந்து கொண்டிருந்தது...முந்தி சின்னனிலை கண்டிருக்கிறன் டபிள் டெக்கர் பஸ் கோப்பாய் மட்டும் வர காணலாம்..


. வடமராட்சி பக்கம் பனையளும் தெரு மூடி மடமும் இருக்கிற படியால் அதோடை நிப்பாட்டி போட்டான்களாம் .. இப்ப துப்பரவாயே டபிள் டெக்கர் இல்லை தானே..

கிழவி இல்லாட்டால் நான் புட் போட்டிலை இருந்து பிரயாணம் செய்திருப்பன் வானத்த்திலை பறக்கிற மாதிரி இருக்கும் அவ்வளவு ஆனந்தமாய் இருக்கும்... அதுக்கும் நல்ல கண்டகடராய் வந்து வாய்க்கோணும்...சில சிடு மூ்ஞ்சிகள் வந்தால் உள்ளே போக சொல்லியீடுங்கள்.

இருபாலை கல்வியங்காடு தாண்டி முத்திரைசந்தியில் இருந்த சங்கிலியன் சிலையை கண்டுட்டுதுகள் ...சாய்ந்திருந்த சனமெல்லாம் கொஞ்சம் நிமிர்ந்திருக்கினம்... இப்பவே யாழ்ப்பாணம் வந்திட்ட மாதிரி பீலிங்... தன்ரை பையையும் தன்னை சரி செய்து கொண்டிருந்த மனிசி நல்லூர்கோயிலை பார்த்து கும்பிடு ஒன்று போடுது... 4,5 நிமிசத்தில் யாழ் பஸ் நிலயத்தில் அடிச்சுடுவார் என்ற நம்பிகையிலை சனம் எல்லாம் இறங்கிற மூட்டிலை இருக்குதுகள்..


எங்களை பெரியாஸ்பத்திரியடியில் இறக்கி போட்டு கடைசி கந்தாயத்துக்கு பஸ் சென்று கொண்டிருக்கிறது... 750பஸ் இலை தான் திரும்பியும் போகோணோம்...திரும்பவும் ஜெயம் டிரைவராகவும், எக்ஸ்பிரசு பஸூம் கிடைச்சுது எண்டால் உந்த கிழவிக்கு இண்டைக்கு சுவீப்பிலை பிறைஸ் கிடைச்ச மாதியிருக்கும்......


என்னையும் முந்தியும் எட்டி நடந்து கொண்டிருக்குது.. ஆஸ்பத்திரி வாசலை நோக்கி....








|
This entry was posted on 4:17 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On August 11, 2009 at 4:44 AM , வந்தியத்தேவன் said...

பஸ் ஸ்ரொப் என்று சொல்றதைவிட பஸ் ஸ்டாண்ட் என்டுதன் கூடச் சொல்றனாங்கள். நெல்லியடி பஸ் ஸ்டாண்ட், குஞ்சர்கடை பஸ் ஸ்டாண்ட். 750 என்னுடைய ஆதர்சன ரூட்.

 
On August 11, 2009 at 5:41 AM , தமிழன்-கறுப்பி... said...

நான் பதிவுலகத்துக்கு வந்த நாள் முதலா எழுதோணும் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிற பதிவு இந்த எழுநூற்றைம்பது றூட்! அது ஒரு காலம் மக்கள், சொல்ல நிறையக்கதைகள் இருக்கு.

எனக்கு அதுலதான் கொஞ்ச நாள் வாழ்க்கையே ஓடிச்சுது..

 
On August 11, 2009 at 7:49 AM , வர்மா said...

750 காறர்தான் இஞ்சை அதிகம் போலை.குடாநாட்டை சுத்தினது மாதிரி இருந்துது.
அன்புடன்
வர்மா.

 
On August 11, 2009 at 7:24 PM , கானா பிரபா said...

சின்னக்குட்டியர்

மீள் பதிவை மீண்டும் ரசித்தேன்

 
On August 12, 2009 at 12:59 AM , shangar said...

அநேகமா மணியண்ணை தானே இந்த 750 எக்ஸ்பிரஸ் பஸ்சின்ரை கொண்டக்டர்.. சரியா சின்னக்குட்டி. ?