இன்றைய திருவிழாப் பதிவில் சிவயோக சுவாமிகள் அருளிச்செய்த இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அத்தோடு இந்த ஆண்டு நல்லைக் கந்தனாலயத்தில் நிகழ்ந்த திருமஞ்சத் திருவிழாப் படங்களும் அலங்கரிக்கின்றன.
முதலில் "ஈசனே நல்லூர் வாசனே" என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் "ஈழத்தின் சுப்புலஷ்மி" என்று சிறப்பிக்கப்பட்டாராம்.
|
ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே
பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா
ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா
தாசனான யோகசுவாமி
சாற்றும் பாவை
கேட்டுக் கிருபை கூர்ந்து
வாட்டம் தீர்க்க வா வா
ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே
அடுத்து வருகின்றது "நில்லடா நிலையிலென்று சொல்லுது" என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனைப் பாடல்.
ஓம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது
நமக்கு நாமே துணையென்று விழிக்குது
நாதாந்த முடியிலேறிக் குளிக்குது
வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது
மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது
சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது
நில்லடா நிலையிலென்று சொல்லுது
நீயேநான் என்று சொல்லி வெல்லுது
உல்லாச மாயெங்குஞ் செல்லுது
உண்மை முழுதுமென்று சொல்லுது
நல்லூரில் செல்லப்பன் என்னப்பன்
நானவரைக் கேட்கும் விண்ணப்பம்
நன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்
நல்லைக் கந்தன் மஞ்சத் திருவிழாப் படங்கள்: பெயர் குறிப்பிட விரும்பாத யாழ்ப்பாணத்து அன்பர் ஒருவர்.
நல்லைக்கந்தன் ஆலய இன்றைய ஆண்டின் பதினெட்டாம் பத்தொன்பதாம் திருவிழாப் படங்களை அனுப்பிய கிழவித்தோட்டம் செந்தூரனுக்கு நன்றிகள்.
பதினெட்டாம் திருவிழாப் படங்கள்
பத்தொன்பதாம் திருவிழாப் படங்கள்
2 comments:
அழகான பாடலும் அற்புதமான நல்லூர் கந்தனின் தரிசனமும் மனம் நிறைவடையச் செய்தன. யோகசுவாமி அவர்களின் பாடலை கேட்க செய்தமைக்கு நன்றி.
வெள்ளி மயிலின் கம்பீரமும் மிடுக்கும் என்ன ஒரு அழகு!
இதை ஆக்கிய கலைஞனின் கை வண்ணம் வாழ்க!