Author: கானா பிரபா
•2:15 AM
என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன்
அன்னை பிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்
அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன்
முன்னை வினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்
நன்மை தீமை யறியாதா னெங்கள்குரு நாதன்
நாந்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன். 1

தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்
சித்ததிற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன்
மோத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்
முத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன்
வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன். 2

என்று சிவயோக சுவாமிகள் தன் குருநாதன் செல்லப்பா சுவாமிகள் மேற் பாடுகின்றார்.


இன்று வியாழக்கிழமை குருவுக்குரிய நாளாகும், இந்த நன்னாள் நல்லைக்கந்தன் ஆலயத்தின் இருபதாந் திருவிழாவின் பதிவாக யாழ்ப்பாணத்து நல்லூத் தேரடியில் தோன்றிய குரு சீடமரபு குறித்த பதிவாக மலர்கின்றது. எனக்கு எப்போதும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் சிட்னி வாழ் அன்பர் தன் தொடரும் ஆக்கத்தை எழுதியும் பொருத்தமான புகைப்படங்களையும் தந்ததோடு தயவாகத் தன் பெயரைத் தவிர்த்துவிட்டார். இந்த ஆக்கம் கடந்த ஆண்டு சிவதொண்டன் இதழிலும் வெளிவந்திருந்தது.

"Pilgrim, pilgrimage and road was but myself toward myself
and your arrival, but myself at my own door."

யோகர் சுவாமிகளைப் பற்றி நினைக்கும் போது “நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி” என்ற சிவபுராண அடிகள் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும்.

கடந்த ஆண்டு நல்லூர்த் தேர்த்திருவிழா பற்றிய வர்ணனையை வானொலியினூடாகக் கேட்டபோது “எங்கள் செல்லப்ப சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் உலாவிய நல்லூர்த் தேரடியிலிருந்து பேசுகிறேன்” என்று அந்த அறிவிப்பாளர் தனது வர்ணனையை ஆரம்பித்தார்.

வீதியிலே வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே

என்று சுவாமிகள் பாடிய பாடலையும் பாடினார். எவ்வளவு அழகான வார்த்தைகள், அத்துடன் எத்தனை பொருத்தமான ஆரம்பம் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

எனது மனம் ஊரை நோக்கி ஒடியது. ஒருபுறம் நல்லூர்க் கந்தன் - அந்த முருகக் கடவுள்;; மறுபுறம் அந்த நல்லூர் தந்த சிவனடியார்கள்;; அந்தப் பரம்பரம்பரையிலே வந்த எங்கள் இனம்;; எல்லாவற்றையும் நினைக்கப் பெருமையாக இருந்தது. நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

முகத்திலே குழைந்த புன்சிரிப்பு
நெற்றியிலே திருநீற்று வெண்மை
இடுப்பிலே சுற்றுக் கட்டாகக் கட்டிய வெள்ளை வேட்டி
மார்புவரை வந்து புரளும் தாடி
தலை எல்லாம் நரைத்து வெளுத்த முடி
அமைதியையும் உயர்ந்த எண்ணத்தையும்
வந்தவரிடம் நிலவச் செய்யும் சூழ்நிலை

என்று அன்பர் ஒருவர் சிவத்தொண்டனில் எழுதியது நினைவுக்கு வந்தது.

அத்துடன் கூடவே ஒரு எண்ணமும் தோன்றியது. எங்கள் இளைய தலைமுறையினரில் எத்தனைபேருக்கு சுவாமிகளைப் பற்றித் தெரியும்? இவர்களுக்கு சுவாமிகளைப் பற்றிக் கூறுவது எங்கள் கடமை. நீங்களும் நானும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சுவாமிகள் வாழ்ந்தபோதே நாமும் வாழக் கொடுத்துவைத்தவர்கள். உங்களில் பலர் சுவாமிகளோடு நெருங்கிப் பழகிய பாக்கியசாலிகள். இந்த அநுபவங்களை எங்கள் பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்வது அவசியம்.

சுவாமிகள் கைப்பட எழுதியது (பெரிதாகப் பார்க்கப் படத்தை அழுத்தவும்)

யோகசுவாமிகளின் அன்பர் திரு.விநாசித்தம்பி அவர்களுக்குச் சுவாமிகள் கைப்பட எழுதியது (பெரிதாகப் பார்க்கப் படத்தை அழுத்தவும்)

சுவாமிகள் சாதாரண மனிதராக வாழ்ந்தவர். காவி உடை தரியாத சன்னியாசி. “சும்மா இரு” என்று இரண்டே இரண்டு சொற்களிலே ஒரு பெரிய தத்துவத்தைக் கூறியவர். இன்று நாங்கள் எப்பொழுதும், எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிறோம். இளையவர்களும் சரி, மூத்தவர்களும் சரி எப்பொழுதும் பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருக்கிறோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. “Tension” என்ற சொல் இன்று எமது வாழ்வில் சாதாரணமாகி விட்டது. எங்கள் பிள்ளைகளின் முகங்களில் வெளிச்சம், ஒளி இன்று இல்லை என்று சுவாமிகளே சொல்லியிருக்கிறார். “உன்னுடைய வேலையைச் செய் பதட்டப்படாதே” என்றுதான் அவர் சொல்லுகிறார். அவர் சொல்லுவதைப் பாருங்கள்:

குரங்கு போல் மனம் கூத்தாடுகின்றதே. இந்தக் கூத்தை எப்படி அடக்குவதென்று தெரியவில்லையே. நன்று சொன்னாய். இதற்கு நல்லமருந்து உன்னிடமுண்டு. சிவத்தியானம் என்னும் மருந்தைத் தினந்தோறும் சாப்பிட்டுவா, மனக்குரங்கின் பிணி மாறும். அதைச் சாப்பிடும்போது அநுமானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவும் உன்னிடம் உண்டு. அது என்னவென்றால் நாவடக்கம், இச்சை அடக்கம் என்னும் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு. இதுவும் போதாது. பத்தியத்தில்தான் முற்றும் தங்கி இருக்கிறது. இது என்னவென்றால் மிதமான உணவு, மிதமான நித்திரை. மிதமான தேகப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம்.

சாதாரண சொற்களிலே ஒரு ஆழமான கருத்தைச் சொல்லிவிட்டார். இப்படித்தான் சுவாமிகளின் பாடல்களும் இருக்கின்றன. மிகவும் எழிமையான தமிழிலே ஆழமான கருத்துகளைப் பாடி இருக்கிறார்.
இந்த இலுப்பை மரத்தின் கீழ் தான் சுவாமி பல வருடங்களாக இருந்தவர். இப்பொழுது இது ஷெல் விழுந்து அழிந்து விட்டது.

பாரத புண்ணிய பூமி என்றால் எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எங்களுடைய நாட்டை “சிவ பூமி” என்று கூறுவது பலருக்குத் தெரியாது. அங்கேயும் ஒரு சித்தர் பரம்பரை இருந்திருக்கிறது. அந்தப் பரம்பரையைச் சேரந்தவர் எங்கள் சுவாமிகள் என்ற செய்தியை எங்கள் இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் சிறுவயதிலே கருத்துத் தெரியாமல் பாடமாக்கிய தேவார திருவாசகம், முக்கியமாக சிவபுராணம் இன்றைக்கு எங்களுக்கு விளக்கமாக இருக்கிறது. உண்மையில் எங்கள் முதுமைக்கு இவை கைகொடுக்கின்றன. அதைப் போலவே சுவாமிகளின் பாடல்களையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேணும். சிறுவயதிலே படிப்பது மனதிலே பதியும்.

சுவாமிகள் தேவார, திருவாசகத்திலே ஊறித் திளைத்தவர். திருமந்திர தத்துவத்தை அறிந்தவர். அருணகிரிநாதர், பட்டினத்தடிகள், தாயுமானவர், குமரகுருபரர், வள்ளலார் என்று எல்லோருடைய பாடல்களையும் அறிந்திருந்தார். இந்தப் பாடல்களின் சாரத்தை - essence - அவர் எளிமையான, சாதாரண தமிழிலெ எங்களுக்குத் தந்திருக்கிறார்.

இங்கே சமயம் படிப்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறீர்கள். சங்கீத ஆசிரியர்களும் வந்திருக்கிறீர்கள். உங்கள் கைகளிலேதான் இந்தப் பொறுப்பு இருக்கிறது. இதை நீங்கள் ஒரு தொண்டாக நினைத்துச் செய்ய வேணும். சென்ற மாதம், பூசையிலே குழந்தைகள் சுவாமிகளின் பாடல்களைப் பாடினார்கள். இன்றும் குழந்தைகள் பாடுவதைப் பார்த்தேன். இது தொடர வேணும்.

சுவாமிகளோடு நெருக்கமாக இருந்த பலர் தமது அநுபவங்களை எழுதி இருக்கிறார்கள். இன்று ஓரு அன்பரின் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றேன். உங்களிலே பலர் இந்தக் கட்டுரையை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். ஆனால், எத்தனை முறை படித்தாலும் சுவாமிகளைப் பற்றிய அநுபவங்கள் அலுக்காதவை.

அமரர் திரு வினாசித்தம்பி அவர்களின் மகள் யோகேஸ்வரி தனது தந்தையாரின் அநுபவங்களைக் கூறுகிறார். இந்தக் கட்டுரையை வாசித்தபோது, “ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே” என்ற சிவபுராண வரிகள் எனது நினைவுக்கு வந்தன. அந்தப் பெரியார் திரு வினாசித்தம்பி அவர்களை சுவாமிகள் தாமே வந்து ஆட்கொண்டார் என்று தெரிகிறது. அதற்கும் நாம் கொடுத்துவைக்க வேண்டும்.

அடுத்து, சிட்னி யோகசுவாமி மாதாந்தக் குருபூசை நிகழ்வின் ஒலிவடிவத்தைத் தருகின்றேன்.
Get this widget
Share
Track details

தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் நாள் நான் எழுதியிருந்த ஆக்கத்தை மீள் பதிவிடுகின்றேன்.


தேரடியில் தேசிகனைக் கண்டேன்

சிறுவயதில் சைவ சமய பாடம் படிக்கும் போது வகுப்பில் எப்போதும் எனக்கு அதிக மதிப்பெண் கிடக்கும். இதுவே பின்னாளில் என் கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பில் இந்து நாகரிகத்தை வர்த்தகத்துறையின் நான்காவது விருப்பத்தேர்வுப்பாடமாக எடுப்பதற்கும் அடிகோலியது.

எனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது " வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட" என்று நக்கலடிப்பார். ரவுண் பக்கம் இருந்து படிக்க வரும் பெடியன்கள் ஒருமாதிரி ஏளனச் சிரிப்பை அள்ளி விடுவர். இந்து மதம் மீதும் தேவாரப் பதிகம் மீதும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இயல்பாகவே இருந்தது என்றாலும், என்னை மிகவும் கவர்ந்தது ஈழத்தில் தோன்றிய சித்தர்களின் குரு சீட மரபு. என் இந்த ஈடுபாடு தோன்றக் காரணம், இன்றுவரை நல்லூர்க்கந்தனையும், சிவதொண்டன் நிலையத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் தரிசித்து வரும் என் தந்தை, என் சிறுவயதில் என்னை நல்லூர்க் கோயிலுக்கு சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போகும் காலத்தில் வழி நெடுக யோகர் சுவாமிகளின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வருவது தான். கோயிலை அண்மிக்கும் போது அவர் வாய், யோகர் சுவாமிகளின் " நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி" என்ற பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடும். நல்லைக் கந்தனைத் தரிசித்துவிட்டு வெளியேறும் போது தேரடியோடு இருக்கும் செல்லப்பா சுவாமிகள் தியானமிருந்த மரத்தை மூன்று முறை சுற்றி "அப்பூ" என்று உளமுருகுவார், பின்னால் அவர் வேட்டியை பிடித்தபடி நான்.

பிறகு தானாகவே அவரின் சைக்கிள் சிவதொண்டன் நிலையத்துக்கு இட்டுச் செல்லும். சிவதொண்டன் நிலையத் தியான மண்டபம் நுளைந்துவிட்டாற் போதும் மயான அமைதி தவழும். அடியவர்கள் தம் காலை மடித்து நீண்டதொரு நிஷ்டையில் ஈடுபட்டிருப்பர்.

சைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது.


சித்தானைக் குட்டிச்சுவாமியின் வழி கடையிற்சுவாமிகளும், கடையிற்சுவாமி வழி, செல்லப்பாச் சுவாமிகளும், செல்லப்பாச் சுவாமிகள் வழி யோகர் சுவாமிகளுமாகத் தோன்றியதே இந்தச் சித்தர்களின் குருசீடப்பரம்பரை.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார். கடையிற்சுவாமிகள் யாழ்ப்பாண நகர் பெரிய கடை வீதி வழியே செல்லும் போது அக்கடைவீதி வாழ் வணிகர்கள் அவரைப் போற்றித் துதித்திருக்கின்றார்கள். "பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்" என்ற பாடலும் இவரையே குறித்து எழுதப்படிருக்கின்றது.

ஆத்மஜோதி என்ற ஈழத்து பக்தி சஞ்சிகையை முன்னர் நாவற்குழியிலுருந்து வெளியிட்டவர் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள். என் கல்லூரி நூலகத்தில் அதன் பிரதிகள் பலவற்றைப் படித்த அனுபவமும் உண்டு. இந்த ஆத்மஜோதி சஞ்சிகையில் "ஈழத்துச் சித்தர்கள்" என்ற கட்டுரையைத் தொடராக எழுதிப், பின்னர் நூலுருவில் வெளியிட்டவர் ஆத்மஜோதி முத்தையா. நான் என் சமய வகுப்பில் படித்ததும், இப்படியான கட்டுரைகள் மூலம் படித்ததுமாக என் ஞாபகக் கிடங்கில் வைத்த தகவல்களை வைத்தே இக்கட்டுரையை யாத்திருக்கின்றேன்.

சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள், இது செல்லப்பா சுவாமிகளுக்கு நிரம்பவே பொருந்தும். சாத எந்நேரமும் சிவ சிந்தையுடன் இருந்தாலும், தன்னை விடுப்புப் பார்க்கவரும் அன்பர்களைக் கண்டாற் போதும் கடும் கோபம் வந்துவிடும் இவருக்கு. தூஷணை வார்த்தைகளால் ஏசியவாறே துரத்துவார். இதனால் இவரின் அருமை அறியாத சாதாரணர்கள் இவரை "விசர் செல்லப்பா" என்ற அடைமொழியோடே அழைத்தனர். ஆனால் இந்தத் திட்டல்களையும் மீறி செல்லப்பனே பழி என்று கிடந்தால் ஞானோதய நன்மார்க்கம் கிட்டும். அதற்கு நல் உதாரணம் யோகர் சுவாமிகள்.

கிளிநொச்சி நீர்ப்பாசன இலாக்காவில் களஞ்சியக் காப்பாளராக இருந்த சதாசிவன் ஒருமுறை செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ணுறுகின்றார். செல்லப்பாவின் வழமையான அர்ச்சனைகள் அவருக்கும் கிடைக்கின்றன (யாரடா நீ, தேரடா உள்ளே ) ஆனால் அவரின் வாக்கியத்தில் பொதிந்திருந்த உன்னை நீ அறிந்து கொள் என்ற மகா உண்மையை உணர்ந்து அக்கணமே செல்லப்பாவின் சீடனாகினார். அவர் தான் பின்னாளில் சிவயோக சுவாமிகள் எனவும் யோகர் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர்.

நல்லூர் தேரடி (வரைவில்)

யோகர்சுவாமிகளின் மகா வாக்கியங்களாக "எப்பவோ முடிந்த காரியம்", "ஒரு பொல்லாப்புமில்லை", "யார் அறிவார்" போன்றவை போற்றப்படுகின்றன. யோகர் சுவாமிகளால் சிவதொண்டன் நிலையம் என்ற ஆன்மீக மையமும், சிவதொண்டன் என்ற மாத இதழும் தோற்றம் பெற்று இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவரின் மகா சிந்தனைகள்
"நற்சிந்தனை" ஆக நூலுருப் பெற்றது.
பழைய கொழும்புத்துறை ஆச்சிரமம்

புதுப்பிக்கப்பட கொழும்புத்துறை ஆச்சிரமம்

உலகெலாம் பரந்துவாழும் இவர் பக்தர்கள் ஆன்மீக நிலையங்கள் அமைத்துக் குரு பூசைகளையும், நற்பணிகளையும் ஆற்றி வருகின்றார்கள்.
மேலதிக தகவலுக்கு சகோதரர் கனக சிறீதரனின் வலைப்பூவையும் பார்க்க:
http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm

சிவதொண்டன் நிலைய இணையத் தளம்
http://sivathondan.org/index.htm

கடந்த 2005 ஆம் வருடம் நான் யாழ் சென்றபோது, நல்லைக் கந்தன் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வழக்கம் போல் தேரடி வீதியிலுள்ள மரத்தடி சென்று மூன்று முறை சுற்றுகிறேன். பின் குருமணலில் பொத்தெனப் பதியும் என் கால்கள் வெயிற் சூட்டைக் களஞ்சியப்படுத்திய குருமணலின் வெம்மைத் தகிப்பால் சூடுபட்டு வேகமெடுக்கின்றது என் நடை. அப்போது தான் பார்க்கிறேன். இதுவரை ஒருமுறைகூட என் கண்ணில் அகப்படாது போனதொன்று அது.


தேர் முட்டிக்கு எதிர்த்தொலைவில் இருந்த ஒரு குருமடம் தான் அது. தகிக்கமுடியாத ஆவலில் அம்மடத்தின் உள்ளே நுளைந்ததும் தானாகவே என் கரங்கள் கூப்பி நிற்கின்றன.

செல்லப்பாச் சுவாமிகளின் குருமடம் தான் அது.அமைதியும் தவழ, ஊதுபத்தி வாசனை நிறைக்க சிறியதோர் இடத்தில் இருக்கின்றது இந்த ஆன்மீக பீடம். தரிசனை முடிந்து புதியதொரு உத்வேகம் தழுவ வீடு நோக்கிப் புறப்பட்டு, என் அப்பாவிடம் இக்குருமடம் சென்ற சேதியைச் சொல்லுகின்றேன். அவரும் அகமகிழ்கின்றார்.
செல்லப்பா சுவாமிகள்

செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,
"தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து".
இதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.


நன்றி:
ஆக்கத்தை அளித்த அன்பர் மற்றும் சிவதொண்டன் மாத இதழ்

புகைப்படங்கள் உதவி:
The Saint Yoga swami & Testament of truth, By: Mrs Ratna Chelliah Navaratnam (former Director of Education) - Birth centenary memorial edition (1892 - 1972)

http://www.himalayanacademy.com/satgurus/yogaswami/

கடையிற்சுவாமியின் படம்: http://www.xlweb.com/


செல்லப்பாச் சுவாமிகளின் படம்: kataragama.org/sages/chellappa.htm
This entry was posted on 2:15 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On August 15, 2009 at 10:53 PM , வர்மா said...

காலத்தின் தேவையான பதிவு இலங்கையில் உள்ளவர்கள் செய்யவேண்டியதை செய்துள்ளீர்கள். நல்லூர் என்ற பெயரில் தனி இணைப்பாக பதிந்தால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும்.
அன்புடன்
வர்மா

 
On August 16, 2009 at 2:54 AM , மணிமேகலா said...

மிக உணர்வு பூர்வமாகவும் பக்தி பூர்வமாகவும் எழுதப் பட்டிருக்கிறது பதிவு.

வாழ்வியலோடு கலந்திருப்பது இன்னும் சிறப்பு.

ஆத்ம ஜோதி புத்தகமும் தாடி வைத்த சாமிமார்களின் வருகையும் சுருக்குப் பையில் இருந்து அவர்கள் கிள்ளித் தரும் வீபூதியும் என் அம்மம்மா வீட்டு முல்லைப்பூ வாசமும் என் வாழ்வை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவை.

நீங்கள் இது சம்பந்தமாக தனியானதோர் கை நூலாக இன்னும் சற்றுக் கூடுதலான தகவலோடு இதனைக் கொண்டு வந்தால் இது ஒரு சைவ பாரம்பரியத்தின் வரலாற்றுக் களஞ்சியமாக எதிர்காலத்தில் பயன்படும் என்பது திண்ணம்.