இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த "நல்லூரான் திருவடியை என்ற பாடலை" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம். தொடர்ந்து பெயர் குறிப்பிட விரும்பாத சிட்னி அன்பர் எழுதித் தந்த "சும்மா இரு" என்ற ஆக்கமும் இடம் பெறுகின்றது. இப்பதிவில் இடம்பெறும் புகைப்படங்கள் இந்த ஆண்டு இடம்பெற்ற திருக்கார்த்திகைத் திருவிழாவில் யாழில் இருக்கும் நண்பரால் அனுப்பி வைக்கப்பட்டதாகும்.
யாழ்ப்பாணத்தில் வெள்ளைக்கார சுவாமிகள் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இருந்தார். அவருடைய கையிலே "சும்மா இரு" என்ற தமிழ் வாசகம் பச்சை குத்தியிருந்தது. பலரும் அதைப்பற்றி வியப்பாகப் பேசினார்கள். "சும்மா இரு " என்றால், ஒருவேலையுமே செய்யாமல் இருப்பதா என்ற சந்தேகம் எல்லாலோருக்குமே! அந்த சுவாமிகள் யோகர் சுவாமிகளின் சீடர்.
யோகர் சுவாமிகள் தன்னிடம் வருபவர்களைப் பார்த்து "சும்மா இரு" என்று சொல்வது வழக்கம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையோடு அல்லது மனக்கவலையோடு தான் அவரிடம் வருவார்கள். "சும்மா இரு" என்று சுவாமிகள் சொல்வதை அவரவர் தமது மன நிலைக்கேற்ப ஏற்றுக் கொண்டு திருப்தியடைவார்கள் என்று சொல்வார்கள். "சும்மா இரு என்ற சொற்றொடர் அருணகிரி நாதரின் "கந்தர் அநுபூதியிலே" வருகின்றது.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.
என்பது பாடல். "சொல் அற" என்பது தான் "சும்மா இரு" என்பதன் விளக்கம் என்று தெரிகிறது.
யோகர் சுவாமிகள் தனது குருவான சொல்லப்பா சுவாமிகளை நினைத்துப் பாடும் பாடல் ஒன்றிலே "எண்ணம் யாவும் இறந்திட வேண்டும், என் குருபர புங்கவ சிங்கனே" என்று பாடுகிறார்.
சுவாமிகள், மனதிலே பதியும் வண்ணம் சுருங்கிய சொற்களில் ஆழமான விரிந்த கருத்துக்களைக் கூற வல்லவர். "சொல் அற" என்றால் மனதிலே யோசனைகள் இல்லாமல் , மனதை வெறுமையாக வைத்திருக்கும் நிலை" - சும்மா இருத்தல் என்பது இதுதான் போலும்.
மனதை எப்படி வெறுமையாக வைத்திருப்பது?
சமயத் தலைவர்களும், தத்துவ ஞானிகளும், சிந்தனையாளர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தக் கேள்விக்குத் தான் விடை தேடியபடி இருந்திருக்கின்றார்கள். இன்றும் மனம் பற்றிப் பலரும் எழுதியும், பேசியும் வருவதைப் பார்க்கலாம். சமீபத்திலே வாழ்ந்த தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் "மனம்" பற்றி நிறையவே ஆராய்ச்சி செய்திருக்கின்றார்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் மனதைப் பற்றி சுவையான கருத்தொன்றைச் சொல்லி இருக்கின்றார். அவர் மனதை ஒரு ஸ்ப்ரிங் மெத்தைக்கு ஒப்பிடுகின்றார். ஸ்ப்ரிங் மெத்தையில் ஒருவர் உட்கார்ந்தால், தற்காலிகமாக ஸ்பிரிங் கீழே அமுங்கி விடும். அவர் மெத்தையிலிருந்து எழுந்தவுடன் ஸ்பிரிங் பழையபடி மேலே வந்துவிடும். எங்களுடைய மனமும் இப்படித் தான் என்கின்றார்.
பிரார்த்தனை செய்யும் போதோ அல்லது ஒரு சத் சங்கத்திலே அமர்ந்திருக்கும் போதோ நமது எண்ணங்கள் யாவும் அடங்கியிருக்கும் பின்னர் அலைபாயத் தொடங்கிவிடும். "சிவத்தியானம் என்னும் மருந்தைச் சாப்பிட்டுவா, மனக்குரங்கின் பிணி மாறும்" என்று யோகர் சுவாமிகள் வழி காட்டுகின்றார்.
சிவபுராணத்திலே மணிவாசகப் பெருமானும் "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்று அதே கருத்தைப் பாடுகின்றார். இவ்வேளையில் "மனமே கணமும் மறவாதே ஈசன் மலர்ப்பதத்தை" என்ற திரையிசைப்பாடல் நினைவுக்கு வருகின்றது.
எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கு மனதை அலைய விடாமல் இருப்பது சுலபமல்ல. நாங்கள் ஆசாபாசங்களினால் கட்டுண்டு வாழ்கின்றோம். வயது ஏற ஏறக் கவலைகள் அதிகரிக்கின்றனவே அன்றிக் குறைவதாக இல்லை. எத்தனை நூல்களை வாசிக்கின்றோம்! எத்தனை பக்திப் பாடல்களைப் பாடுகின்றோம்! கேட்கிறோம்! எத்தனை பெரியோர்களின் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்கின்றோம்! ஆனால் மனமோ ஸ்ப்ரிங் மெத்தை போலத்தான் இருக்கின்றது!.
யோகர் சுவாமிகள் "சும்மா இரு" என்று சொல்லும் போது "கடமையைச் செய், உன்னுடைய வேலைகளைச் செய், ஆனால் செய்யும் போது பற்றில்லாமல் செய்" என்கிறார். பிரச்சனைகளைக் கண்டு பதற வேண்டாம். அமைதியாக இருக்கப் பழகு என்கிறார். தாமரை இலைத் தண்ணீர் போல் பற்றில்லாமல் வாழப்பழகு என்பது அவர் கருத்து. எங்களை அலைக்கழிக்கும் அகந்தை, அவா, கோபம், என்பனவற்றை நீக்கி வாழப் பழகு என்று வழிகாட்டுகின்றார். வள்ளுவரும்,
"பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு." என்கிறார்.
உகந்து மனங் குவிந்து ஒன்றுக்கும் அஞ்சாது
அகந்தை அவா வெகுளி அகற்றி - சகம் தனிலே
தாமரையிலை தண்ணீர் போல் சாராமல் சார்ந்து நற்
சேமமொடு வாழ்வாய் தெளிந்து.
(நற்சிந்தனை - சிவயோக சுவாமிகள்)
கடந்த 2007 ஆண்டு நாட்டுச் சூழ்நிலை காரணமாக நல்லை முருகன் தேரோட்டம் இடம்பெறவில்லை. 2008 ஆண்டு தேர்த்திருவிழாவிற்காகத் திருமுருகன் ரதத்தை வெள்ளோட்டம் விட்ட நிகழ்வு கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி, 2008 இல் நிகழ்ந்தது. அதன் படத்தையே மேலே காண்கின்றீர்கள்
நன்றி: "சும்மா இரு" என்ற ஆக்கத்தை எழுதியனுப்பிய சிட்னி வாழ் அன்பர்.
புகைப்படங்கள் உதவி: பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்
இந்த ஆண்டின் நல்லைக்கந்தன் ஆலய 19 ஆம் பூஞ்சப்பறத் திருவிழாப்படங்களை அனுப்பிய கிழவித்தோட்டம் செந்தூரனுக்கு நன்றிகள்.
3 comments:
//
யோகர் சுவாமிகள் "சும்மா இரு" என்று சொல்லும் போது "கடமையைச் செய், உன்னுடைய வேலைகளைச் செய், ஆனால் செய்யும் போது பற்றில்லாமல் செய்" என்கிறார்.
//
கீதையிலும் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொல்லப் படுகிறது. இங்கே பற்றில்லாமல் செய் என்பது செய்யும் வேலையைப் பற்றில்லாமல் செய் என்பதன் அர்த்தத்தில் அல்ல. அதன் விளைவுகளில்/பலனில் பற்று வைக்காமல் செய் என்றே குறிப்பிடப்படுகிறது.
சும்மாஇருசொல்லற என்றலுமே அம்மாபொருளொன்றுமறிந்திலனே என்பதன் பொருளும் இதுதான்.
அன்புடன்
வர்மா
வலசு மற்றும் வர்மா
மேலதிக விளக்கங்களுக்கு மிக்க நன்றி.