Author: வந்தியத்தேவன்
•10:39 AM
வர்மா, கீத் இருவரும் யாழ்ப்பாணத்தில் தியேட்டரில் படம் பார்த்த கதை எழுதும் போது நாங்கள் ஜெனரேட்டரில் பார்த்த கதையை எழுதாவிட்டால் நல்லாயிருக்காது.

90களில் யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இல்லாத காலத்தில் நாங்க ஜெனரேட்டரில் தான் படம் பார்க்கிறது. இந்த ஜெனரேட்டரில் படம் பார்க்கிறதைப் பற்றி கானாபிரபா ஒரு பதிவு போட்டிருந்தார். அதன் இணைப்பை இதில் இணைப்போம் என்று தேடினால் காணவில்லை. அதனைத் தேடிய நேரத்திலை இரண்டு தேத்தண்ணி குடிச்சிட்டன். பிரபா உங்கள் வலைகளில் குறிச்சொற்கள் போடுங்கோ அப்பத்தான் தேடச் சுகம்.

ஜெனரேட்டர் என்றவுடனை ஏதோ ஜப்பான்காரன்ரையோ இல்லை சீனாக்காரன்ரையோ என நினைக்கவேண்டாம். அது எங்கட வோட்டர் பம்மை(அதுவும் அவங்கட தயாரிப்புத்தான்) வேறு சில இலத்திரனியல் உபகரணங்களுடன் இணைத்து தயாரித்த உள்ளூர் உற்பத்தி. சைக்கிள் டைனமோவைச் சுத்தி பாட்டு படம் பார்த்த ஆட்கள்தானே நாங்கள். அந்த அனுபவத்திலை வோட்டர் பம்மை ஜெனரேட்டர் ஆக்கியாச்சு.

ஜெனரேட்டர் ஆனாலும் அதன் சத்தம் மட்டும் வோட்டர் பம்ப் சத்தம் தான். சிலவேளை இந்தச் சத்தத்திலை தூரத்திலை ஹெலி வாறதுகூடக் கேட்காது. படம் பார்க்கிற நேரத்திலை ஜெனரேட்டரை எப்படியும் ஒரு 100 மீற்றர் தள்ளித்தான் வைப்பது. சிலவேளை கமராக் கொப்பியில் படம் பார்த்தால் படம் தெளிவாக இருக்கும் சத்தம் வராது. அந்த நேரத்திலை ஜெனரேட்டர் சத்தம் பின்னணி இசை கொடுக்கும்.

படம் போடுறதென்றால் முதல் நாளே பிளான் எல்லாம் போட்டுவிடுவம். என்ன படம்? எத்தனை படம்? ஆற்றை முத்தத்திலை வைச்சுக்காட்டுகிறது. என்று எல்லாம் வடிவாகத் திட்டம் போட்டுவிட்டு, பக்கத்திலை இருக்கின்ற அண்டை அயல் எல்லாம் சொல்லியும் போடுவம் இண்டைக்கு சந்திவளவுக்கை படம் என்று, ஊரிலை பாருங்கோ பெரும்பாலான வீடுகளுக்கு பெயர் இருந்தாலும் காணியின்ரை பேரைச் சொல்லித்தான் அழைப்பார்கள். எல்லாம் வளவுகளாகத் தான் இருக்கும்.

அவர்களுக்கு சொல்லும் போது ஒருவருக்கு 10 ரூபா ரிக்கெட், சின்னப் பெடியளுக்கு இல்லை சிலவேளை, எங்கடை பொருளாதாரம் இறுக்கம் என்றால் சின்னபெடியளெட்டை 5 ரூபா வாங்குகிறது. காசு இல்லையென்றால் கால் போத்தல் மண்ணெண்ணெய்.

ஜெனரேட்டருக்கு எதற்க்கு மண்ணெண்ணெய் என்டு உந்த சில சின்னப் பெடியள் கேட்கலாம், நாங்கள் பெற்றோலோ டீசலோ கொஞ்சக் காலம் வாகனத்திற்க்கோ ஜெனரேட்டருக்கோ பாவிக்கவில்லை. எல்லாம் மண்ணெண்ணெய் தான். அதிலையும் சங்கக்கடையிலை ஒரு குடும்ப அட்டைக்கு 1 லீற்றல் அல்லது 2 லீற்றர் மலிவு விலையில் தருவினம். வெளிக்கடையிலை கொஞ்சம் விலை. அந்தக் காலத்திலை பெற்றோல் நகையைவிட விலை. அதாலைதான் நாங்கள் மண்ணெண்ணெயை எரிபொருளாக பாவிச்சது.

என்ன ஸ்டார்ட் பண்ண கொஞ்சம் மண்ணெண்ணெய் வேணும் அதுக்கு ஒரு சின்னக் குப்பியிலை கொஞ்சம் பெற்றோல் விட்டு வைச்சு குழந்தைப் பிள்ளைகளுக்கு முதல் நாள் பால் பருக்குவம் அப்படிக் கொஞ்சத்தைப் பருக்கினால் எஞ்சின் ஸ்டார்டாகிவிடும், பிறகு தொல்லை குடுக்காது. மோட்டர் சைக்கிளுக்கும் இதே தான் கொஞ்சம் பெற்றோலைப் பருக்கிவிட்டு இரண்டு உதை உதைஞ்சால் சரி.

உப்பிடித்தான் ஒருக்கால் படம் போட்டனாங்கள். என்ன படம் என்றால் சின்னத்தம்பி. டைனமோவிலை சுத்திச் சுத்தி எங்களுக்கு பாட்டெல்லாம் நல்ல பாடம். அதிலையும் போவோமா ஊர்கோலம் பாட்டு நல்ல பேமஸ். ஒரு கொப்பிக் கடையிலை சொன்னார்கள். கொழும்பிலை இருந்து நேர வந்த மூவிலாண்ட் ஒரியினல் கொப்பி. நேற்றுத்தான் வந்தது புதுப்படம் என்றபடியால் வாடகை 50 ரூபா, அடுத்த நாள் விடிய கொப்பி வரவேண்டும் எனச் சொன்னார்கள்.

பாட்டுகளும் நல்ல பேமஸ் சும்மாவா நம்ம இசைஞானி பிளந்துகட்டின காலமெல்லோ அது. அத்துடன் அந்த நாளைய எங்கள் கனவுக் கன்னி குஷ்புவின் படம், சரி போனல் போவுது 50 ரூபாவிற்க்கு கொப்பியை எடுத்தாச்சு. அதே நேரம் பக்கத்து ஊரிலையும் ஒரு வீட்டிலை படம் போடுகிறார்கள் என்ற தகவல் எங்கள் காதுக்கு கிடைத்தது. பக்கத்து ஊர் பெடியளும் கூட்டாளிகள் என்றபடியால் ஒரு ஒப்பந்தம் போட்டோம், சின்னத்தம்பி படத்தை அவர்களுக்கும் தாறம் அவை எங்களுக்கு 25 ரூபா தரவேண்டும் என்று, அவங்களும் சரியெண்டுவிட்டு எங்களை முதல்லை படத்தைப் பார்த்துவிட்டு முடிஞ்சவுடனை கொண்டுவந்து தரச் சொன்னார்கள்.

அந்தண்டு இரவு சந்திவளவுக்கை ஒரே சனம். ஏனென்டால் கனநாளுக்கு பிறகு படம் அதிலையும் பிரவு குஷ்பு நடிச்ச புதுப்படம். எங்களுக்கும் நல்ல கலெக்சன், அடுத்த நாளும் இதே கலெக்சனை வைச்சு படம் போடலாம் என பிளான் போட்டாச்சு.

ஒரு 7 மணியளவில் ஜெனரேட்டர்காரர் ஜெனரேட்டருடன் வந்தார். எஞ்சினைச் ஸ்டார்ட் பண்ணிப்போட்டுச் சொன்னார்," தம்பியவை ஒரு அரைமணித்தியாலத்திற்க்கு எஞ்சின் ஓடட்டும் ஒரு லோட்டையும் போட்டுவிடாதையுங்கோ,பிறகு ஒரு மணித்தியாலத்தாலை எஞ்சினுக்கு மண்ணெண்ணெயை விடுங்கோ" என்றார். நாங்களும் நல்லாத் தலையாட்டிவிட்டு ஒரு எட்டுமணிபோலை படத்தைப்போட்டோம். எஞ்சின்காரருக்கு முதல் நாளும் எங்கேயோ ஓட்டத்துக்கு போய் நல்ல அலுப்பு அதாலை மனிசன் எங்களை நம்பி பொறுப்பைத் தந்துவிட்டு விறாந்தையிலை எட்டுமணிக்கே ந‌ல்ல நித்திரை.

எழுத்தெல்லாம் ஓடி படம் நல்ல விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அப்போதான் ஒருத்தன் சொன்னான். டேய் எஞ்சினுக்கு மண்ணெண்ணெய் விடவேண்டும் யாராவது போய் விடுங்கோ என்று, ஒருதரும் அசைகிறான்கள் இல்லை அவ்வளவு பட ரசிகர்கள். கடைசியா ஒருத்தன் சொன்னான் நான் போய் விட்டுட்டு வாறன் என்றிட்டு அவன் சரியான பதைபதைப்பாக போய் விட்டுவிட்டு வந்திட்டான்.

திடீரென்று எஞ்சின் நின்றுவிட்டது, விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் விசிலடிக்கத் தொடங்கிவிட்டார்கள். வேறை இடம் என்றால் நாங்களும் விசிலடிச்சிருப்போம் ஆனால் படம் காட்டுகிறது நாங்கள் என்றபடியால் ஒன்றும் செய்யமுடியாமல் ஜெனரேட்டரைப்போய் பார்தால் அது அமைதியாக இருக்கிறது.

இரண்டு மூன்று தரம் நாங்களே ஸ்டார்ட் செய்தோம் சரிவரவில்லை. கடைசியாக எஞ்சின்காரரை எழுப்பி "அண்ணை எஞ்சின் நிண்டுட்டுது ஒருக்கால் வந்து பாருங்கோ" என்றோம் அந்தாளோ அலுப்பிலை " அது நல்ல எஞ்சின் தம்பி ஸ்டார்ட் பண்ணினால் விடிய விடிய ஓடும்" என எஞ்சின் புராணம் படிக்கத் தொடங்கிவிட்டு வந்துபார்த்தார்.

ஸ்டார்ட் பண்ணினார் அவருக்கும் ஸ்டார்ட் ஆகவில்லை. சரி மண்ணெண்ணெய் விட்டியளோ என எம்மைக் கேட்டார் நாங்கள் கோரசாக "ஓம் இப்போதான் விட்டோம் , விட்டபிறகுதான் நிண்டுட்டிது" என்றோம்.

அவர் எம்மேல் நம்பிக்கை இல்லாமல் மண்ணெண்ணெய் டாங்கிக்கை கை வைச்சு அளவைப் பார்த்தார். மண்ணெண்ணெய் வழுவழுபாக இருந்தது. யார் எண்ணெய் விட்டது எனக்கேட்டார். அதற்க்கு நான் தான் அண்ணே எண்ணெய் விட்டனான் என எண்ணெய் விட்ட பொடியன் முன்னுக்கு வந்தான், சரி ஓடிப்போய் எண்ணெய் கானை எடுத்துவா என அவன் கொண்டு வந்த கான் என்ன கான் தெரியுமா?

தேங்காய் எண்ணெய்க் கான். என்ன நடந்தது என்றால் எங்கடை ஆச்சி காலமை சங்கக் கடையில் ஒரு கானிலை தேங்காய் எண்ணெயும் இன்னொரு கானிலை மண்ணெண்ணெயும் வாங்கி இரண்டையும் பக்கத்தை பக்கதை வைச்சுவிட்டார். எடுக்கபோனவன் படம் பார்க்கிற அவசரத்திலை கானை மாத்திப்போட்டான். அதுக்குப் பிறகு அவன் பெயருடன் மண்ணெண்ணெய் என்ற பட்டம் ஒட்டிக்கொண்டது. நாங்கள் சேர்த்த காசும் அதற்க்கு மேலையும் கொஞ்சம் போட்டு ஜெனரேட்டர் திருத்தியதுக்கு கொடுத்தது.
This entry was posted on 10:39 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On August 6, 2009 at 2:57 PM , கலை said...

:).

டைனமோ சுத்தி பாட்டுக் கேட்டிருக்கிறன். ஆனா water pump ல படம் பாக்கேல்லை. ஆனா, 3, 4 படங்கள் எடுத்து விடிய விடிய பாத்த அனுபவம் உண்டு.

 
On August 6, 2009 at 4:49 PM , மணிமேகலா said...

:)

இது இடைக்காலப் பரம்பரையின் பட அனுபவமோ?

 
On August 6, 2009 at 9:50 PM , வர்மா said...

தியேட்டர்,மினிசினிமா,ஜெனறேட்டர்,சைக்கிள்டைனமோ எல்லாத்திலையும்படம்பாத்த அனுபவம் உண்டு. நண்பை ஒருவர்வாடகைக்கு வீடியோ காட்டுறதை தொழிலாகச்செய்தான்.எங்கடை ஊரிலை உப்பிடித்தான்.ஒரு நாள் வீடியோ படம் காட்டினனாங்கள்.கொப்பி இறுகிப்போச்சு. பக்கத்திலை கிடந்த அம்மியிலை ஒரு தடுதட்டிப்போட்டு கொப்பியை டெக்கிலை போட்டதும் படம் வந்தது.ப‌க்க‌த்து ஊரிலை ஒரு நாள் ப‌ட‌ம் காட்டின‌னாங்க‌ள்.அப்பவும்கொப்பி இறுகிப்போச்சு. அப்ப‌ அங்கை நிண்ட‌ ஒருவ‌ர் த‌ம்பி அம்மி உள்ளுக்குக்கிட‌க்கு என்றார்.பிற‌கென்ன‌ உள்ளுக்குப்போய் அம்மியிலை ஒரு த‌ட்டுத‌ட்டிப்போட்டு ப‌ட‌ம் காட்டின‌னாங்க‌ள்.
அன்புட‌ன்
வ‌ர்மா

 
On August 7, 2009 at 5:33 AM , மணிமேகலா said...

மெய்யே மோன!

அப்ப ஏதாவது 'மலரும் நினைவுகளும்' இருக்கோ?

 
On August 7, 2009 at 1:15 PM , soorya said...

அருமையான பதிவு வந்தி.........!

 
On August 7, 2009 at 9:50 PM , வி. ஜெ. சந்திரன் said...

ம் வொடர் பம் க்கு தண்ணி மோடரை றீவைண்ட் (மீள் முறுக்கி) போட்டு புள்ளி போட்டு இணைச்சா ஜெனரேட்டர்.
இப்பிடி பாத்த படங்கள் சின்னதம்பி...பொன்னுமணி இப்பிடி கனக்க....

 
On August 9, 2009 at 12:39 PM , கிடுகுவேலி said...

ஜென்ரேற்றர் போட்டு பார்த்த படங்கள்ல சின்னத்தம்பியும் பொன்னுமணியும் சும்மா பிச்சுதறிக்கொண்டு ஓடினது. சில வீடீயோக் கடைக்காரன் 10 கொப்பி அடிச்சு வச்சிருந்த காலம் சின்னத்தம்பிக்கு. சில வேளை ஒரு வீட்டை படம் போட்டால் போய் முடியும் வரை நிண்டு அந்தப்படக் கொப்பியை வாங்கிக் கொண்டு போய் இன்னொரு வீட்டில பார்க்கிறது. ம்ம்ம்ம் இப்ப எல்லாம் கிடக்கு ஆட்கள் இல்லை.