Author: கலை
•1:11 AM
இந்த இடுகை ஈழத்து முற்றத்தில் எழுதுவதற்கு பொருத்தமானது என்று நம்புகின்றேன்.

ஈழத்து முற்றத்தில் எழுதுவதற்கு ஏதாவது வேண்டும் என்று கேட்டேன். யாழ்ப்பாணத்திலுள்ள ஊர் பெயர்களை வைத்து வரும் கவிதை. ஆனால் ஊர் பெயர்களில், வேறு அர்த்தம் பொதிந்திருக்கும். இதை எழுதியவர் யாரென்பது சொன்னவருக்கு நினைவிலில்லை. யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி

முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய

ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து
ஆனைக் கோட்டை வழி
கட்டுடை விட்டாள்

உடுவிலான் வர
பன்னாலையான் மிக உருத்தனன்

கடம்புற்ற மல்லாகத்தில்
இடை விடாது என அணையென

பலாலி கண் சோர வந்தாள்
ஓர் இளவாலையே

இனி அர்த்தத்தைப் பார்ப்போமா?

*
1. முடிவிலாதுறை = முடிவற்று உறைந்திருக்கும், அல்லது குடி கொண்டிருக்கும்
2. சுன்னாகம் = சுன் + நாகத்தான் = வெள்ளை மலை (இமய மலை = கைலயங்கிரி)
3. வழி = வழியில் வந்தவன்

இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன்,

*
1. முந்தித் தாவடி = முன்னே தாவி வரும்
2. கொக்குவில் மீது வந்தடைய

முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, (மாவிட்டபுரத்தில் வீற்றிருக்கும் முருகன் குதிரையில் வருவாராம்).....

*
1. கொடி + காமத்தாள் = கொடி போன்றை இடையுடைய + ஆசை கொண்டவள்
2. ஆனைக் கோட்டை வழி = பெரிய கோட்டை போன்ற மார்பகம் வழி
3. கட்டுடை விட்டாள் = கண்ணீர் கட்டுடைந்து வழிய நின்றாள்

மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......

*
1. உடு = நட்சத்திரம் /நிலவு
2. பன்னாலை = கரும்பு
3. உருத்தனன் = தொல்லை கொடுத்தான்

நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்,

*
1. கடம்புற்ற = கடம்பு எனும் பூக்களாலான
2. மல்லாகத்தில் = மார்பகத்தில்
3. இடை விடாது = இடைவெளியெதுவுமில்லாது
4. எனை அணையென = என்னை அணைத்துக் கொள்ளென்று

கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்ளென்று,

*
1. பலாலி கண் = பல + ஆலி = பல கண்ணீர்த் துளிகள்
2. சோர = சொரிந்து
3.. இளவாலை = இளம் வயதுடைய வாலைப் பெண் = குமரிப் பெண்

பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.

இனி முழுமையான அர்த்தத்தைப் பார்ப்பேமா?


இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......


”நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்” என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.
This entry was posted on 1:11 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On August 11, 2009 at 2:29 AM , யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
இது சோமசுந்தரப் புலவரின் சிலேடைப் பாடலென நினைக்கிறேன்.

 
On August 11, 2009 at 3:47 AM , கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

தகவலுக்கு மிக்க நன்றி இந்தப் பதிவை எழுதியவர் கலை

 
On August 11, 2009 at 4:00 AM , வந்தியத்தேவன் said...

கட்டுடை என்பது ஒரு ஊர் என நினைக்கின்றேன்.
மாவிட்டபுரம் என்றால் குதிரை முகம் நீங்கிய இடம். மாருதப்புரவீகவல்லி (நல்ல பெயர் மணி ஆச்சியின் பேரக்குழந்தைக்கு வைக்கலாம்)என்ற இளவரசி தன் குதிரை போன்ற முகத்தை இந்த இடத்திலுள்ள கடலில் நீராடி நீக்கினார் என்பது வரலாறு.

ஊர்கள், பெயர்கள் பற்றி ஒரு பதிவுபோட்டால் சரி, பல பெயர்கள் காரணப்பெயர்களாக இருக்கின்றன.

 
On August 11, 2009 at 4:19 AM , கானா பிரபா said...

அழகானதொரு பதிவை தந்தீர்கள், மிக்க நன்றி

 
On August 11, 2009 at 7:57 AM , வர்மா said...

என்ககை கே.எஸ்.பாலச்சந்திரணண்ணை சொன்னது ஞாபகம் வருது. ஏழாலை,இளவாலை,சில்லாலை ஏறு எண்டதும் ஒருவர் பஸ்ஸின்ரை சில்லாலை ஏறி சில்லுக்கை சிக்குப்பட்டவராம்.
அன்புடன்
வர்மா.

 
On August 12, 2009 at 10:08 AM , Unknown said...

அண்ணையவை.. உங்களுக்கு அந்த கொட்டடி, கைதடி, புன்னாலைக்கட்டுவன் பகிடி தெரியுமே?.. அதுக்காக இஞ்ச சொல்லிப் போடாதீங்கோ... அது கொஞ்சம் கெட்ட பகிடி

 
On August 13, 2009 at 3:53 AM , கலை said...

அனைவருக்கும் நன்றி.

//ஊர்கள், பெயர்கள் பற்றி ஒரு பதிவுபோட்டால் சரி, பல பெயர்கள் காரணப்பெயர்களாக இருக்கின்றன.//

எனக்கு பல ஊர்களின் பெயர்களுக்கான காரணம் தெரியாது. அதனால் ஊர்ப்பெயர்களின் காரணம் பற்றி பதிவு போட முடியவில்லை. அப்படி ஒரு இடுகையை ஆரம்பித்து, அதில் அனைவரும் தங்களுக்கு தெரிந்த ஊர்ப்பெயர்களின் காரணம் எழுதி வந்தால் நன்றாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு ஊர்.... கொடிகாமம் = கோடி கமம் என்பதன் மருவிய பெயர். (மிக அதிகளவில் விவசாய நிலங்களை உள்ளடக்கியிருந்த இடம் என்பதால் இந்தப் பெயர்.

 
On August 16, 2009 at 3:33 AM , மணிமேகலா said...

ஓம் ஓம் மாருதப் புரவீக வல்லி எண்டு எனக்கொரு பேத்தி இருக்கிறா தான். அவவுக்கு மயூரன் எண்டு ஒரு வடிவான கொழும்பில் வெள்ளைப் பொடியனைத் தான் பேசுவம் எண்டு யோசிக்கிறன்.

:-)சீரியசா!

 
On August 16, 2009 at 4:11 AM , மாயா said...

// கட்டுடை என்பது ஒரு ஊர் என நினைக்கின்றேன். //

ஆமாம் "கட்டுடை" மானிப்பாய்க்கு அருகாமையில் இருக்கெண்டு நினைக்கிறன்..

 
On August 16, 2009 at 4:16 AM , மணிமேகலா said...

மகிழ்ச்சி கலை. பொருத்தமான இலக்கியப் பதிவு.வந்தியைக் கண்டவுடன் உங்கள் பதிவை மறந்து போனேன்.

 
On July 7, 2016 at 11:02 PM , padmaloganathan said...

அருமை அருமை