Author: வலசு - வேலணை
•4:11 AM

சமீபத்தில் கதியால் அவர்களி்ன் கிடுகுவேலியில், பல்குரல் கலைஞரான (மிமிக்ரி) மறைந்த ஈழத்துச்சதன் பற்றிய கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது. தூரதிர்ஷ்டவசமாக ஈழத்துச்சதனின் பல்குரல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எதுவுமே எனக்கு வாய்த்திருக்கவில்லை. அதன் பின்னூட்டத்தில் கருத்துரைத்திருந்தவர்கள் பலரும், தாங்கள், தங்கள் பாடசாலைப் பருவங்களில் கண்டுகளித்த ஈழத்துச் சதனின் பல்குரல் நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திருந்தனர். ஈழத்துச் சதன் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியினைச் சேர்ந்தவர் என்று தவறுதலாகக் குறிப்பிட்ட கதியால், ஈழத்துச்சதன் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அதனை அறியத்தரும்படி குறிப்பிட்டிருந்தார். பின்னூட்டத்தில் அவர் பற்றிய தகவல்களை இடுவதிலும் பார்க்க, ஒரு பதிவாக இடுவதினூடாக அது பலரையும் சென்றடையும் வாய்ப்புக் கருதியே ஈழத்து முற்றத்தில் இந்தப் பதிவு.

அது 1990 இற்கு முற்பட்ட காலம். அப்போது யா/வேலணை சேர் வைத்தியலி்ங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலம் என்கின்ற மிக நீண்ட(?) பெயரால் அழைக்கப்படும் வேலணை மத்திய கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த காலம். தனித்து மிதிவண்டியில் சென்றுவரத் தொடங்கியிருந்த நேரம். சிலவேளைகளில் பாடசாலை விட்டு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்புகையில், சிலர் வழிமறித்து போகும் வழியில் தங்களை இறக்கிவிடும்படி தொற்றிக் கொள்வார்கள். வேலணை மத்திய கல்லூரிக்குப் போக ஆரம்பித்த காலங்களில் (ஐந்தாம் வகுப்பு/ஆறாம் ஆண்டு), சில வேளைகளில் நாங்களும், நாங்கள் செல்லும் வழிகளில் வரும் மிதிவண்டிகளில் தொற்றிக் கொள்வதுண்டு. சிலரை மறித்தாலும், அவர்கள் நிற்காமல் சென்று விடுவதும் உண்டு. அப்படியானவர்கள், அவர்களின் தோற்றத்தினையோ அல்லது வயதினையோ பொறுத்து நைன்ரி(90), செவின்ரி(70) என்று எம்மிடம் ஏச்சு வாங்குவதும் உண்டு. அவர்கள் மிதிவண்டியைத் திருப்பிக் கொண்டுவந்தால், செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவதும் நடப்பதுண்டு.

நான் சைக்கிளில தனித்து வரும் சந்தர்ப்பங்களில் என்னிடம் தொற்றிக் கொள்ளுபவர்களில் ஒரு குள்ளமான உருவம் உடையவரும் இருப்பார். பொதுவாக என்னைவிடப் பெரியவர்கள் என்றால் அவர்களை ஓடச்சொல்லிவிட்டு நான் சட்டத்தில் (Bicycle Bar) உட்கார்ந்து விடுவேன். ஆனால் இவர் குள்ளமாயிருப்பதாலும், அத்துடன் தனக்கு சைக்கிள் ஓடத் தெரியாது என்று சொல்வதாலும் (அது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது) நானே ஓடவேண்டியிருக்கும். முதல்தடவை ஏறியபோது அவராகவே பேச்சுக் கொடுத்து என்னைப்பற்றி விசாரித்தார். எனது வீட்டுக்காரர்களை, உறவினர்களை அவருக்கு நன்கு தெரிந்திருந்ததால் பதிலுக்கு நானும் அவரைப்பற்றிக் கேட்டபோது சோமக்கிளி என்று சொன்னால் எனது வீட்டுக்காரருக்குத் தன்னைத் தெரியும் என்றார். வீட்டில் கேட்டபோது, அவர்தான் மிருகங்கள் பறவைகள் போன்று சத்தமிட்டு நடித்துக் காட்டும் ஈழத்துச்சதன் என்றனர்.

பின்வந்த நாட்களில் அவரை மிதிவண்டியில் ஏற்றி ஓடுகையில் அவரிடம் மிருகங்களின் ஒலிகளை சத்தமிட்டுக் காட்டுமாறு வற்புறுத்தத் தொடங்கினேன். பின்னொரு நாளில் செய்து காட்டுவதாகச் சொல்லித் தட்டிக்கழித்து வந்தாலும் ஒருநாள் எனக்கே எனக்காக மட்டும் காகம், குயில், கோழி, தவளை போன்றவற்றின் ஒலிகளை சத்தமிட்டுக் காட்டினார். யானை, சிங்கம், புலி போன்றவை போல் சத்தமிட்டுக் காட்டுமாறும் வற்புறுத்தினேன். அவர் செய்தார். ஆயினும் அதற்கு முன்னர் அவ்விலங்குகளின் சத்தங்களைக் கேட்டிராததால் என்னால் அவற்றை இரசிக்கவோ அல்லது அவர் சரியாகத்தான் செய்கிறார் என்பதை உறுதி செய்யவோ முடியவில்லை. ஆனால் அதன் பின் அவரை மிருகங்களின் ஒலிகளைச் செய்து காட்டும்படி வற்புறுத்தக் கூடாது என்கின்ற எங்களுக்கிடையிலான 'ஜென்ரில்மென் அக்கிரிமெண்ட்'டினால் நானும் அவரிடம் கேட்பதை விட்டுவிட்டேன்.

சோமக்கிளி என்று ஊரவர்களினாலும் (வேலணை) ஈழத்துச்சதன் என்று ஏனையவர்களாலும் அறியப்பட்டவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக எனது ஊரைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் தொடர்பு கொண்டேன். அனைவருக்குமே ஈழத்துசதனையும், அவரது உறவினர்களையும் தெரிந்திருநதாலும், சோமக்கிளி என்பது அவரது இயற்பெயரா என்பதை அவர்களால் நிச்சயப்படுத்த முடியவில்லை. ஏனெனில் அவர் சிறுவயதிலிருந்தே சோமக்கிளி என்றே அனைவராலும் அறியப்பட்டிருந்தார்/அழைக்கப்பட்டிருந்தார். ஆயினும் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட ஒரு பல்குரல் நிகழ்ச்சியினை அடுத்து ஈழத்துச்சதன் என்கின்ற அடைமொழி அவருக்கு வழங்கப்பட்டுப் பின் அதுவே நிரந்தரமாயிற்று. 1950களில் பிறந்திருக்கக் கூடிய சோமக்கிளி அவர்களின் ஆரம்பகால வசிப்பிடம், வேலணை மத்திய கல்லூரியை அடுத்து அமைந்திருக்கும் வேலணை சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அண்மையில், வேலணை-ஊர்காவற்றுறை வீதியில், அமைந்திருந்தாலும் பின்னாளில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால், அதன் பின்னான, அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியவில்லை (இத்தகவல்களைத் தந்துதவியவர்களுக்கு நன்றி).

செல்வச் செழிப்பின்மை காரணமாகச் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற யதார்த்த நிலைமைக்கு, தூரதிர்ஷ்டவசமாக ஈழத்துச்சதன் என பிரபலமாக அறியப்பட்ட சோமக்கிளி என்கின்ற அந்த அற்புதமான பல்குரல்க் கலைஞனும் விதிவிலக்காக அமைய முடியவில்லை. வேலணையையோ அன்றி மறறைய இடங்களைச் சேர்ந்தவர்களோ, அவரைப் பெரிதாய் மதித்ததாகவும் தெரியவில்லை.
முற்றத்து மல்லிகை எங்களுக்கு மணப்பதில்லைத்தானே.
This entry was posted on 4:11 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On August 10, 2009 at 5:26 AM , சி தயாளன் said...

தகவல்களுக்கு நன்றி...

 
On August 10, 2009 at 5:59 AM , கிடுகுவேலி said...

நன்றி...! இப்படித்தான் இன்னும் நிறைய முற்றத்து மல்லிகைகள் மணக்காமல் இருந்தன. நன்றி வலசு தகவல்களை சேகரித்தமைக்கும் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டமைக்கும்.

 
On August 10, 2009 at 8:40 AM , M.Thevesh said...

குன்றின் தீபமாக இருக்க
வேண்டிய சதன் குடத்து
விளக்காக இருந்து மறைந்து
விட்டார் என்பது கவலைக்
குரிய விடயமே.தகவல்
களுக்கு நன்றி

 
On August 10, 2009 at 4:36 PM , soorya said...

நானும் தேடித்திரிந்தேன். அவரின் இறுதிக்காலங்கள் மர்மமாகவே இருக்கிறது. அவர் இறந்துவிட்டாரா? எப்படி?
பேராதனையில் அவருக்குப் பட்டம் கொடுத்த தகவல் உண்மையே..! எனது சீனியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வலிகாமத்தில் அவர் பிறக்கவில்லையாயினும்..அவரது உச்சக்காலங்களில் அவர் வலிகாமத்தில் இருந்தார். வலிகாமத்தின் அத்தனை பெரு திருவிழாக்களுக்கும் அவர் வருவார்.
கும்மிழாவளை, பெருமாக்கடவை, தவளக்கிரி முத்துமாரியம்மன் ஆகிய திருவிழாக்களில் பலமுறை அவரை இரசித்திருக்கிறேன்.
அற்புதமான கலைஞன். எங்கள் கோவில் திருவிழாவுக்கு அவரைக் காங்கேசந்துறையிலிருந்து ஏ 40 காரில் ஏற்றி வந்தது நினைவிருக்கு. 1975..79 ல் என்று நினைவு.

 
On August 10, 2009 at 10:22 PM , சுபானு said...

நான் ஆரம்பப் பாடசாலை சென்ற ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் அவரது நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றுதான் முதன் முதலில் அவரைப் பற்றி அறிந்து கொண்டேன். ஆரம்பப் பள்ளிக்காலங்களின் இனிய நினைவுகளில் இன்றும் நிழலாடும் மனிதர் அந்த ஈழத்துச்சதன்.

பின்னர் 1996ம் ஆண்டு சாவகச்சேரி இந்துக் கல்லுாரிக்கு எனது தந்தையோடு சென்ற போது இடம்பெயர்ந்து அங்கு தங்கியிருந்து அவரை சந்திக்க நேர்ந்தது. எனது அப்பாவும் அவரும் நீண்ட நேரம் கதைத்தார்கள். அதுதான் நான் அவரைச் சந்தித்த கடைசித் தருணம்..

அவருடனான பழக்கம் எனக்கு இல்லையென்றே கூறலாம், ஆனாலும் அவரின் முகம் இன்றும் என்மனதில் நிழலாக உள்ளது..

 
On August 10, 2009 at 10:23 PM , சுபானு said...

//முற்றத்து மல்லிகை எங்களுக்கு மணப்பதில்லைத்தானே.

:(

 
On August 11, 2009 at 1:09 AM , கலை said...

தகவல்களுக்கு நன்றி.

உண்மைதான் அருகிலிருப்பவரின் அருமை, அல்லது அருகிலிருப்பவற்றின் அருமை பல சமயங்களில் தெரிவதில்லை, அல்லது புரிவதில்லை.

 
On August 12, 2009 at 7:45 PM , வி. ஜெ. சந்திரன் said...

பகிர்வுக்கு நன்றி

ஈழத்து சதனின் சொந்த பெயர் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்காது என்று தான் நினைக்கிறேன். அவரது நிகழ்ச்சி எமது பாடசாலையில் நடந்தது, அதற்கு போய் இருக்கிறேன்.

 
On August 16, 2009 at 3:24 AM , மணிமேகலா said...

இவைகள் எனக்குப் புதிய தகவல் வலசு.

பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

 
On January 10, 2011 at 12:22 PM , iraimalai said...

ஈசத்து சதன் எங்கள் ஊரில் பள்ளியிலும் நிகழ்ச்சி செய்தவர். 1980 கலீல் என்று நினைவு.

 
On December 26, 2011 at 1:05 AM , Jude S Mahendren said...

பல்குரல் திறமை இன்று வணிகமயப்படுத்தப்பட்டு கலைஞர்கள் மதிப்புப்பெற்று வரும் இக்காலத்தில் ஈழத்தில் இன்றும் இத்திறமைகளைக் கொண்டோர் இலைமறைகாய்களாகவும், துறைசார்ந்த பயிற்சிகளை பெறமுடியாதவர்களாகவும், இக்கலை வயிற்றுக்கு எதுவும் செய்துவிடாது என்பதை நன்கு அறிந்தவர்களாகவும் உள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் மிகச்சிறப்பாக பல்குரல் கொண்டு பேசி என்னை ஆச்சரியப்படவைத்தார். ஆனால் இவர்கள் வெளிச்சத்துக்குவர முடியாதவர்கள். அப்பொழுதுதான் ஈழத்துசதன் குறித்து உரையாடினோம். மேல் மாடியில் இருக்கும் யாழ்ப்பாணக்கல்லூரி ஒட்லி மண்டபத்தில் காகம் போல அவர்கரைந்தது மட்டுமல்ல காகங்கள் நலாபுறமும் நிரம்பிவரும்வரை கரைந்துகொண்டிருந்தார். அவரது சின்ன உடம்பால் அடிவயிற்றிலிருந்து மூச்செடுத்து தமது திறமையை நிரூபணம் செய்ய அவர் எடுத்த முயற்சி அலாதியானது.
அதுமட்டுமல்ல, தனது வயிற்றை நிரப்புவதற்காகவும் தமது வயிற்றை பிசைந்தவர் அவர்.

தனது நிகழ்ச்சியை பார்க்கவரும் மாணவர்களிடம் ரூபா 5 மட்டுமே அறவிடுவேன் என்றும், அதற்குமேல் அறவிடுவது தர்மமாகாது என வறுமையிலும் அறம் பேசிய கலைஞர், (இது நடந்தது 1990களின் ஆரம்பபகுதி)
1995 மாபெரும் இடப்பெயர்வுடன் பலரும் தெரியாதே போனார்கள். அவற்றை தாங்கமுடியாத பலரும் இறந்துபோனார்கள். இடம்பெயர்வுகளின் அவஸ்தைகள் எவனுக்குதான் கலையுணர்வை கொண்டுவரும்? ஈழத்துசதனும் இவ்வாறே எங்கேறும் காற்றோடு காற்றாகியிருக்கலாம்.
சதனை நினைவுகூர்ந்து எழுதியமைக்காக நன்றி. இதைவிட வேறென்ன செய்ய?