Author: வந்தியத்தேவன்
•12:31 PM
எங்கட ஊரிலை திருவிழா தொடங்கினால் கடவுளைக் கும்பிடுகிறமோ இல்லையோ ஐந்தாம் திருவிழாவுக்கு ஆற்றை கோஷ்டி, இந்தமுறையும் எட்டாம் திருவிழா எழும்புமோ? என்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் எழும்.

கோஷ்டி என்றால் இசைக்குழு. இந்தப்பெயர் எப்படி வந்தது என்று தெரியாது. எங்கட காலத்திலை யாழில் பிரபலமான கோஷ்டிகள் ராஜன், சாந்தன், அருணா, யாழோசை கண்ணன், சப்தஸ்வரா போன்றவை. முன்னைய காலத்தில் கண்ணன் கோஷ்டி என்ற எழுச்சி இசையமைப்பாளர் கண்ணன் அவர்களின் குழு பிரபலம்.

பொதுவாக இந்த ஆடி மாதத்தில் எங்கட பக்கத்திலை மூன்று கோயில்களில் திருவிழா நடக்கும் அல்வாய் முத்துமாரி அம்மன், வதிரி பூவற்கரைப் பிள்ளையார், மற்றது கரணவாய் மூத்தவிநாயகர் கோயில். அதனாலை எங்கட பாடு ஒரே கொண்டாட்டம் தான்.

கோயில் திருவிழா தொடங்கினால் கோஷ்டி பிடிப்பது என்பது சில திருவிழாக்காரர்களுக்கு எழுதப்படாத சட்டம். இந்த இந்த திருவிழாக்களுக்கு கட்டாயம் கோஷ்டி நடக்கும் என அடித்துச் சொல்லலாம். பகலில் திருவிழா என்று இறைவனை வணங்கி களைத்தவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக ஆரம்பித்த நிகழ்வாக இதனை நான் கருதுகின்றேன். சில ஏன் இந்த டாம்பீகச் செலவுகள் என்பார்கள். ஆனாலும் இதனால் இன்னொரு சாராருக்கு வருமானம் கிடைக்கின்றது என்ற உண்மையையும் மறுக்ககூடாது.

ஆனாலும் கோஷ்டியை மட்டும் தனித்து நடத்தமாட்டார்கள். இரவுத் திருவிழா முடிந்தபின்னர் ஒரு 8 மணியளவில் சமயச் சொற்பொழிவு நடைபெறும். கம்பன் கழக பேச்சாளர்கள் அவர்கள் இல்லையென்றால் ஊரில் உள்ள சமய அறிவு உள்ள பெரிசுகளை வைத்து இதனை நடத்துவார்கள். ஒரு சில குஞ்சுகுருமன்களும், பெரியவர்களும் பொறுமையாக இருந்து கேட்பார்கள். அதுமுடிய நாதஸ்வர தவில் கச்சேரி. பஞ்சாபிகேசன் குழுவினர், தவில் மேதை தட்சணாமூர்த்தியின் பிள்ளைகளான உதயசங்கர், ஞானசங்கர் குழுவினர், இணுவில் சின்னராசா குழுவினர் எனப் பலர் இதனை நிகழ்த்துவார்கள். சில இடங்களில் இரண்டு மூன்று கூட்டுச் சேர்ந்து வாசிப்பார்கள். ஒருமுறை மூத்த விநாயகர் கோவில் எட்டாம் திருவிழாவுக்கு பத்துக்கூட்டு மேளம், குழல். முன்னுக்கு இருந்து கேட்டவர்களுக்கு காது கிழிந்துருக்கும். எப்படியும் இவர்கள் ஒரு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிப்பார்கள்.

அதற்க்குப் பிறகு சிலவேளை பட்டிமன்றம் அல்லது வில்லுப்பாட்டு நடக்கும். பட்டிமன்றம் கம்பன் கழகக் குழுக்கள், கம்பன் கழகத்துக்கு நேரமில்லையென்றால் உள்ளூர் பேச்சாளர்கள். உள்ளூர் பேச்சாளர்களில் நவம் மாஸ்டர், நடராசா மாஸ்டர் இருவரும் சரியான பேமஸ். என்னவொன்று இருவரும் எதிர் எதிர் அணியில் இருந்தால் சிலவேளை பெரிய சண்டைகளே வரும். நானும் ஒரு சில மேடைகள் ஏறினேன் ஆனால் பெரும்பாலும் இவர்களது தலைப்புகள் பாரதம், இராமாயணம் என இருப்பதால் மெல்லக்கழண்டுகொண்டுவிட்டேன்.

வில்லுப்பாட்டுக்கு நல்லூர் ஸ்ரீதேவியும், சின்னமணி குழுவினரும் மிகவும் பிரபலம், அதிலும் ஸ்ரீதேவி அவர்கள் சத்தியவான் சாவித்திரி வில்லுப்பாட்டில் நடத்தும் போது பெண் குரலில் எல்லாம் கதைத்துப் பாடி நல்ல கைதட்டுப் பெறுவார்.

இதெல்லாம் முடிய கோஷ்டி தொடங்கும். கோஷ்டிகாரர்கள் தங்களை ஆயத்தப்படுத்த எப்படியும் ஒரு மணித்தியாலம் தேவைப்படும் அந்த இடையிலை சிலவேளைகளில் நல்ல நித்திரை கொண்டு எழும்புகிறது வழக்கம். எப்படியும் நித்திரையாகி இருக்கிறவர்களை மணிக்குரல் ஷண் அவர்களின் கணீர் குரல் எழுப்பிவிடும். ராஜன் கோஷ்டிக்கு அவர் தான் அறிவிப்பாளர்.

ஒவ்வொரு வாத்தியமாக அறிமுகப்படுத்திவிட்டு கடைசியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உங்கள் மணிக்குரல் ஷண் என்பார் உடனே ராஜனின் பிரதான கீபோர்ட்டுடன் ஒரு ரம்ஸ் இசை வரும் அது அவர்களின் ரேட்மார்க் மியூசிக்.

எந்தக்கோயில் என்டாலும் முதலில் பிள்ளையார் பாட்டுத்தான் பெரும்பாலும் "பிள்ளையார் சுழிபோட்டு" என்ற பாடலுடனேயே ஆரம்ப்பிபார்கள். பிறகு முருகன் கோயில் என்றால் முருகன் பாடல், அம்மன் கோயில் என்றால் அம்மன் பாடல் என ஒரு சில பக்திப்பாடல்கள் பாடுவார்கள். பின்னர் தாயக எழுச்சிப்பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சினிமாப்பாடல்கள் பாடுவார்கள். ஸ்டெனிஸ் சிவானந்தன், பார்வதி சிவபாதம் போன்றவர்கள் பிரபல பாடகர்கள். பலரின் பெயர்கள் ஞாபகம் இல்லை.

எப்படியும் கோஷ்டி முடிய விடிஞ்சுபோம். பிறகு அவசரமாக குளிச்சிட்டு பள்ளிக்கு போய் நித்திரை கொள்ளவேண்டியதுதான். சிலவேளை அடுத்த நாள் இன்னொரு கோஷ்டி இருக்கும். எப்படியும் பத்து நாள் திருவிழாவில் ஒரு ஐந்து முறையாவது இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.

சில இடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று கோஷ்டி நட‌க்கும். கோயில் வடக்கு வீதியில் ராஜன் கோஷ்டி, தெற்கு வீதியில் சாந்தன் கோஷ்டி. அங்காலை கொஞ்சம் தள்ளி ரோட்டிலை அருணா என விளாசித்தள்ளுவார்கள்.

திருவிழா பார்க்கபோய் கோயில் மண்ணிலையோ அல்லது ரோட்டிலையோ பாயை விரிச்சுப்போட்டு நித்திரை கொள்ளுகின்ற சுகம் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலையும் கிடைக்காது.

திருவிழாப்பார்க்கும் போது கச்சான்(மணிலாக் கொட்டை), சோளம், மஞ்சள் கடலை, கெளபி கரம் சுண்டல் சாப்பிட்டுக்கொண்டு பார்க்கிறதும், லிங்கம் ஐஸ்கிறீம் வானில் சாமத்திலை அல்லது விடியப்புறத்திலை கோன் வாங்கிச் சாப்பிடுகிறதும் ஒரு சுகானுபவங்கள், மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்.

கடைசியாக நான் 2003ல் கோஷ்டி பார்த்தது இன்னும் இல்லை. அப்போது கொஞ்சம் படங்கள் எடுத்தேன் தேடிப்பார்த்து இருந்தால் போடுகிறேன். யாரிடமாவது நாதஸ்வரம் தவில் கச்சேரி படங்கள், கோஷ்டிப் படங்கள் இருந்தால் உதவி செய்யுங்கள்.

இதனைவிட சிகரம், லைட் எஞ்சின், வல்வெட்டித்துறை இந்திரவிழா எனப் பல விடயங்கள் இருக்கு இன்னொரு நாளில் பார்ப்போம்.

நித்திரைக்குப்போன என்னை பழைய ஞாபகங்களை தோண்டி எடுத்து எழுத வைத்த என் அயலவர் சினேகிதிக்கு நன்றிகள்.
This entry was posted on 12:31 PM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 comments:

On August 1, 2009 at 5:55 PM , கானா பிரபா said...

மறக்கமுடியுமா அந்த நினைவுகளை, நீங்கள் சொன்ன விடயங்களை வைத்து ஒரு பதிவு போட இருந்தேன்.

 
On August 1, 2009 at 6:40 PM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
மறக்கமுடியுமா அந்த நினைவுகளை, நீங்கள் சொன்ன விடயங்களை வைத்து ஒரு பதிவு போட இருந்தேன்.//


பிரபா உங்கள் பாணியில் நீங்களும் எழுதுங்கள்.

 
On August 2, 2009 at 12:27 AM , கிடுகுவேலி said...

முந்திக்கொண்டீர்கள் வந்தியரே...! நிச்சயமாக இவை எல்லாம் எமக்கு சொர்க்கமாக இருந்த நினைவுகள். எவர் இது பற்றி பதிவு போட்டாலும் அற்புதமாகத்தான் இருக்கும். என்க்கும் எண்ணம் இருக்கிறது ஒரு நினைவுப்பதிவுக்கு. ஆனால் நன்றிகள் எல்லாவற்றையும் நினைவு படுத்தியதற்கு!

 
On August 2, 2009 at 1:23 AM , துபாய் ராஜா said...

நல்லதொரு நினைவு பதிவு.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

 
On August 2, 2009 at 4:41 AM , யசோதா.பத்மநாதன் said...

பதிவு நன்றாக இருந்தது.

வந்தியத் தேவர் நல்ல பேச்சாளர் எண்டு இண்டைக்குத் தான் தெரியும்.என்ன பேச்செல்லாம் பேசினனீங்கள்?

 
On August 2, 2009 at 6:57 AM , சினேகிதி said...

\\திருவிழா பார்க்கபோய் கோயில் மண்ணிலையோ அல்லது ரோட்டிலையோ பாயை விரிச்சுப்போட்டு நித்திரை கொள்ளுகின்ற சுகம் எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலையும் கிடைக்காது.
\\
அதே போல பெடியள எழுப்பி வீட்ட கொண்டுபோக அம்மா அப்பா படுற கஸ்டம் :).

 
On August 2, 2009 at 7:14 AM , தமிழன்-கறுப்பி... said...

ஹையோ...!
வந்தி கண்ணுக்க நிக்குது சில சீனுகள்...

நினைவுகளை கிளறுகிற பதிவு...

கோர்வை இல்லாம இருக்கிற இந்த நினைவுகள் தலையைசுத்திக் கொண்டிருக்குது இப்ப...

 
On August 2, 2009 at 7:16 AM , தமிழன்-கறுப்பி... said...

எல்லோரும் எழுத நினைக்கிற பதிவு.

நன்றி!

 
On August 2, 2009 at 8:22 AM , Vasanthan said...

போராளிகளால் நடத்தப்பட்ட தமிழீழ இசைக்குழுவும் இருந்தது. வன்னியில் அதுதான் மீதமிருந்தது. வன்னியில் கோஷ்டி என்ற சொல் மறைந்து இசைக்குழு என்ற சொல்லே நிலைத்தது.

யாழ்ப்பாணத்தில் பாடகர்கள் குறிப்பிட்ட இசைக்குழுவொன்றுக்கே பாடுவார்கள்.
அருணாவில் சுகுமார், பார்வதி சிவபாதம்.
சாந்தனில் சாந்தன், நிரோஜன்.
ராஜனில் குறிப்பிட்டுப் பெயர் சொல்லமுடியாத பலபாடகர்கள். பெண்குரலில் பாடும் சீலனும் ஒருவர். திருமலைச் சந்திரனும் ராஜன் குழுதான். "ஈழத்து மனோ" என்ற அடைமொழியோடு ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். வந்தியத்தேவன் சொன்ன சிவானந்தனும் ராஜன்தான் என்று நினைக்கிறேன். பழைய பாடல்கள் பாடுவார்.

பின்னர் நிலைமை மாறியது. யாழ் இடப்பெயர்வின் பின்னர் இசைக்குழுக்கள் இயங்க முடியாத நிலை. எனினும் வன்னியில் மிக்பெருமெடுப்பில் இசைவிழாக்கள் நடந்தன. நாட்கணக்கில் நடந்தன. அப்போது எல்லாம் சுருங்கி ஒரு குழுவாகவே மாறிவிட்டிருந்தது. எல்லாப் பாடகர்களும் ஒரேமேடையில் பாடினார்கள். யாழ்ப்பாணத்திலிருந்த கோஷ்டி யுகம் கிட்டத்தட்ட முடிந்துபோனது. கோயில் திருவிழாக்களில் எந்த இசைக்குழுவும் பாடல்கள் பாடியதில்லை. அறிவிப்பாளர் என்று பார்த்தால் லோறன்ஸ் மட்டுமே மிஞ்சினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குப் பெயர்ந்திருந்த கலைஞர்கள் மீள யாழ்ப்பாணம் போக அல்லது வெளிநாடு போக வன்னியில் புதிய இசையுகமொன்று வந்தது. நிறைய புது இசையமைப்பாளர்கள், பாடகர்கள் தோன்றினர்.
இசையமைப்பாளர் என்று பார்த்தால்
சிறிகுகன்
இசைப்பிரியன் (சிறிகுகனின் தம்பி)
இசைத்தென்றல் (கண்ணனின் மகன்)
ராஜன் (பாடகர் சுகுமாரின் மகன்)
இன்னும் சிலர் - உடனடியாக ஞாபகத்துக்கு வரவில்லை.

இவர்கள் தலைமையில் பல இசைக்குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன, ஆனால் பெயர்களின்றி.

வசீகரன், இளந்தீரன், தனேந்திரன், தனராஜ், தவமலர், கெளசி என்று பல புதிய பாடகர்கள் அறிமுகமானார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது பிரபலமானவர்கள் என்றால் வீரச்சாவடையும்வரை சிட்டண்ணை பாடிக்கொண்டிருந்தார். சாந்தன் - சுகுமார் என்ற இரட்டை மாட்டுவண்டில் வன்னியின் வீழ்ச்சிவரை சளைக்காமல் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தை குட்டிகளைப் பார்க்காமல் ஆதாயமேதுமற்று நாட்டுக்காக ஓடிய வண்டில் அது. நிரோஜனும் வன்னியில் பாடிக்கொண்டிருந்தார்.

 
On August 2, 2009 at 10:49 AM , வந்தியத்தேவன் said...

//கதியால் said...
முந்திக்கொண்டீர்கள் வந்தியரே...! நிச்சயமாக இவை எல்லாம் எமக்கு சொர்க்கமாக இருந்த நினைவுகள். எவர் இது பற்றி பதிவு போட்டாலும் அற்புதமாகத்தான் இருக்கும். என்க்கும் எண்ணம் இருக்கிறது ஒரு நினைவுப்பதிவுக்கு. ஆனால் நன்றிகள் எல்லாவற்றையும் நினைவு படுத்தியதற்கு!//

கதியால் சில விடயத்தை மனசிலை நினைச்சால் உடனே பதிவுபோட்டுவிடுங்கோ. இல்லையென்றால் இன்னொருவர் முந்திவிடுவார். சினேகிதி அக்கா கீறிவிட்ட சின்ன கோட்டிலை நான் ஒரு ஒழுங்கை மட்டும் தான் போட்டேன் நீங்கள் ரோடு போடுங்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித அனுபவம் அவற்றைப் பகிர்வதில் என்ன தப்பு. இந்த முற்றத்தில் பலரும் தாயகத்தை அல்லது சொந்த மண்ணைப் பிரிந்து இருப்பவர்கள். ஆகவே எமக்கு எம் பழைய நினைவுகளை இரைமீட்பதில் ஒரு சுகம். மீண்டும் இந்தக் காலங்கள் வராது இன்னும் ஒரு 10 வருடம் கழித்து இந்தப் பதிவுகளைப் படிக்கும் அடுத்த தலைமுறை இப்படியும் இருந்ததா எனக்கேட்பார்கள். நாம் சின்னமேளம் கூத்து பற்றிக்கேட்பது போல.

தமிழர்களிடம் இல்லாத ஒரு பழக்கம் தங்கள் வரலாறுகளை எழுதமறந்தது. நாம் ஆதால் எமக்குத் தெரிந்த வரலாறுகளை எழுதுவோம்.

 
On August 2, 2009 at 10:51 AM , வந்தியத்தேவன் said...

//துபாய் ராஜா said...
நல்லதொரு நினைவு பதிவு.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.//
நன்றிகள் துபாய் ராஜா. உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

 
On August 2, 2009 at 10:59 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
பதிவு நன்றாக இருந்தது.

வந்தியத் தேவர் நல்ல பேச்சாளர் எண்டு இண்டைக்குத் தான் தெரியும்.என்ன பேச்செல்லாம் பேசினனீங்கள்?//

ஆச்சி என்ரை முதல்ப் பட்டிமன்ற அனுபவம் ஒருதருக்கு கிடைத்திருக்காது. பள்ளிக்கூடத்தில் நடந்த பட்டிமன்றம் வாலியை இராமன் கொன்றது சரியா? தவறா? நான் தவறு அணியின் மூன்றாவது பேச்சாளர். நானும் அணித்தலைவரும் எங்கள் கருத்துகளை பட்டியலிட்டிருந்தோம் இரண்டாவது பேச்சாள நண்பன் காய்ச்சல் காரணமாக இரண்டு நாள் பள்ளிக்கு வரவில்லை. அதனால் அவனின் பொயிண்ட்ஸ் எமக்குத் தெரியாது. மேடையும் ஏறியாச்சு பட்டிமண்றம் சூடாபோய்க்கொண்டிருக்கிறது. எமது இரண்டாவது பேச்சாளர் நான் பேச வைத்திருந்த குறிப்புகளைப்பேசி முடித்துவிட்டான். எனக்கு பேச ஒன்றும் இல்லை. என்னை நடுவர் அழைத்தவுடன் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு நான் பேச இருந்த விடயத்தை எல்லாம் என் நண்பன் பேசிவிட்டார் மறுத்துபேசுவதை தலைவர் தொகுப்புரையில் பார்த்துக்கொள்ளுவார் எனக்கூறிவிட்டு நன்றி வணக்கம் சொல்லிவிட்டு விடைபெற்றேன். பிறகென்ன ஒரே சிரிப்புத்தான்.

அதன் பின்னர் ஒருமாதிரி பேசப்பழகியாச்சு.

 
On August 2, 2009 at 11:01 AM , வந்தியத்தேவன் said...

// சினேகிதி said...
அதே போல பெடியள எழுப்பி வீட்ட கொண்டுபோக அம்மா அப்பா படுற கஸ்டம் :)//

சினேகிதி உங்கள் பதிவுகளில் இருந்தே நீங்கள் கொஞ்சம் குழப்படி என்று புரிகிறது. அப்போ இதுவும் உங்கள் அனுபவம் தான்.

 
On August 2, 2009 at 11:03 AM , வந்தியத்தேவன் said...

//தமிழன்-கறுப்பி... said...
ஹையோ...!
வந்தி கண்ணுக்க நிக்குது சில சீனுகள்...

நினைவுகளை கிளறுகிற பதிவு...

கோர்வை இல்லாம இருக்கிற இந்த நினைவுகள் தலையைசுத்திக் கொண்டிருக்குது இப்ப...//

கறுப்பி உங்கள் ஹையோவே பல அர்த்தங்களைச் சொல்கிறது. இவை எல்லாம் பழசைக் கிளறுவதுடன் பசுமரத்து ஆணிபோல் பதிந்த நினைவுகள்.

 
On August 2, 2009 at 11:08 AM , வந்தியத்தேவன் said...

//வசந்தன் said...
போராளிகளால் நடத்தப்பட்ட தமிழீழ இசைக்குழுவும் இருந்தது. வன்னியில் அதுதான் மீதமிருந்தது. வன்னியில் கோஷ்டி என்ற சொல் மறைந்து இசைக்குழு என்ற சொல்லே நிலைத்தது.//

ஆம் வசந்தன் தமிழீழ இசைக்குழு கொஞ்சக்காலம் யாழில் மிகப்பிரபலம். சிட்டு அண்ணா, சாந்தன், நிரோஜன் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட சில பெயர்கள் எல்லோரும் பிரபலம். அதிலும் சிட்டு அண்ணையின் வெள்ளி நிலாபாடல் சிலவேலை வன்ஸ்மோர் கேட்பது.

2002ல் மீண்டும் கோஷ்டி யுகம் யாழில் ஆரம்பமாகியது பின்னர் அதுவும் முடிவடைந்துவிட்டதா? இல்லை இன்னும் தொடர்கின்றதா? தெரியவில்லை.

மறந்துபோயிருந்த பல பெயர்களை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.

 
On August 2, 2009 at 3:08 PM , மலைநாடான் said...

பரமேஸ் கோணெஸ், பாரவதி சிவபாதம், கண்ணன் ஆகியோர் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவுகள்.
மட்க்கள்ப்பில், கீதாலயம், திருகோணமலையில், பரமேஸ் கோணேஸ், யாழ்ப்பாணத்தில், இரட்டையர்குழு, என்பனவும் பிரபலமான இசைக்குழுக்கள். இவர்களில், கண்ணன், அருணா, ஆகியோருடன் பழகியிருக்கின்றேன்.
அதனால் நான் கண்டறிந்த உண்மையாதெனில், எல்லோரையும் மகிழ்வித்த இந்தக் கலைஞர்களின் வாழ்க்கை மட்டும் வளமானதாக இருந்ததில்லை.
அதுதான் கலைஞர்கள் என்கிறீர்களா..?

இன்னும் சொல்லலாம். ..பார்ப்போம்

 
On August 4, 2009 at 1:18 PM , சினேகிதி said...

\\சினேகிதி அக்கா கீறிவிட்ட சின்ன கோட்டிலை நான் ஒரு ஒழுங்கை மட்டும் தான் போட்டேன் நீங்கள் ரோடு போடுங்கள்\\

Sithappa neenga 91 la A/L padichanengello?

 
On August 4, 2009 at 6:12 PM , வந்தியத்தேவன் said...

சினேகிதி said...
//Sithappa neenga 91 la A/L padichanengello?//

91 O/L. 94 A/L

 
On January 4, 2011 at 12:54 AM , Kiruthigan said...

//2002ல் மீண்டும் கோஷ்டி யுகம் யாழில் ஆரம்பமாகியது பின்னர் அதுவும் முடிவடைந்துவிட்டதா? இல்லை இன்னும் தொடர்கின்றதா? தெரியவில்லை.//
2006ல் பாதை பூட்டியதோடு முடிவடைந்து இசைக்கலைஞர்கள் பெய்ன்ட் அடிக்க போறது புடவைக்கடைல நிக்கிறது என வேறு வேலைகளை நாடினர். சில பாடகர்கள்ளை நடுவீதியில் நாய் நக்கியது.
சிலர் இசைகருவி பழக்கும் வகுப்புகள் ஆரம்பித்தார்கள் ரியூசன் வாணிவிழாகளில் மட்டும் பெடிபெட்டயள் பாட பக்கவாத்தியமிசைத்தார்கள்.
மீண்டும் 2010ல் தமது இசைக்கருவிகளை தூசு தட்டினார்கள்... சாந்தன் ,சுகுமார் ஒரு அரசியல் கட்சிக்கு பாடல்கள் பாடினார்.
அருணா வாரிசுகள் FL Studioஉதவியுடன் சிங்கள மொழியினருடன் இணைந்து பணியாற்றதொடங்கினர். FMகள் தென்னிலங்கையிலிருந்து நவீன இசைக்குழுகளை கொண்டுவருகின்றன...