Author: சஞ்சயன்
•3:26 PM
44 வயதிலும் இந்தப் பெயரைக் கேட்டால் அன்பும் பயமும் கலந்த மரியாதை என்னை சுற்றிக்கொள்ளும்.

ஏன்டா அந்தாளுக்கு இப்பவும் இப்படி பயப்படுகிறாய் என அம்மா இப்பவும் கேட்பதுண்டு.
அம்மா , அது பயமல்ல, பக்தி.

கொல்லன்பட்டறையில் இரும்பை சூடுகாட்டி, தண்ணீரில் நனைத்து குளிரவைத்து, சுத்தியலால் அடித்து வளைத்து, மீண்டும் சூடுகாட்டி தான் விரும்பும் விதத்தில் கத்தி செய்யும் கொல்லன் போன்று எம்மை வார்த்தெடுத்த (வாட்டி எடுத்த) மரியாதைக்குரிய எனது ஆசான், வழிகாட்டி, நலன்விரும்பி அவர்.

இவருக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும், எனக்குமான உறவு 1976 தை மாதம் தொடங்கியது. 8 ஆண்டுகள் மட்டுமே ஆன நெருக்குமான எமது உறவு என் வாழ்வில் இத்தனை முக்கிய இடத்தைப் பெறும் என நான் கனவிலும் நினைத்ததில்லை.

ஏதை எழுத எதை விட என்று புரியவில்லை. தொண்டையில் ஏதோ அடைக்கிறது, உணர்ச்சியில் கண்கள் பனிக்கின்றன… என்னே பசுமையான நினைவுகள் அவை.

வாழ்க்கை தரும் ரணங்களை இது போன்ற பசுமையான நினைவுகள் வெற்றுடலில் மழைத்துளிகள் போல் சகம் கொள்ளச் செய்யும். தாயின் மடி போலானது பாடசாலை நினைவுகள். அவை உங்களை தாலாட்டி தட்டிக்கொடுக்கும்.

1976 தை மாதம் 6B வகுப்பில் சேர்ந்தேன். அன்றே பாடசாலை விடுதியில் என்னையும், தம்பியையும் சேர்த்து விட்டு அம்மா பிபிலைக்கு அடுத்த நாளே திரும்பியிருந்தார். பதுளை சரஸ்வதி மகாவித்தியாலத்தில் என்னுடன் படித்த ஒரு நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் மட்டுமே பரிட்சயமானவர்களாக இருந்தார்கள். மற்ற எல்லாமே புதிதாக இருந்தது, மட்டக்களப்பின் தமிழ் உட்பட.

அன்று மாலை சடுகுடு விளையாடிய போது என்னை வெ.. வெ…வெ..வெட்டையால போ என்ற போது மொழி புரியாமல் அவ்விடத்திலேயே நின்றதால் கன்னத்தை பழுக்க வைத்தார் புண்ணியமூர்த்தி அண்ணன். அவருக்கு கொன்னை என்பதால் வெட்டையால போ என்பதை 2, 3 வே வே போட்டு அப்படி சொன்னாராம். அதோடு வெட்டையால போ என்றால் வெளியே போ என்று அர்த்தம் என விளக்கம் கிடைத்தது பின்பொருநாள்.

இரவு studyhall இல் இருந்த போர் வெள்ளைக்காரன் போல ஒருவர் அவ்விடத்தால் நடந்து போனார். திடீர் என்று எங்கும் மயான அமைதி. என்ன நடக்குது என்று புரியவில்லை. அவர் போய் கன நேரம் வரை அமைதி குலையவே இல்லை. studyhall இல் இருந்த hostellmaster கூட வெளியில் போகவில்லை. அது தான் One And Only Prince G. Casinader உடனான எனது முதல் அறிமுகம்.

காலம் ஓடியது Prince என்ற பெயரை கேட்டாலே முழு பாடசாலையும் நடுங்குவது புரிந்தது. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் உட்பட அனைவரும் (பெற்றோர்களும் தான்).

பெயர் மட்டும் தான் மெதடிஸ்த மத்திய கல்லூரி. சகல மதங்களும் சங்கமான இடம் அது. அந்த நாட்களில் இஸ்லாமியர்களுக்கு விடுதியில் இடம் கொடுத்த ஒரே ஓரு பாடசாலையும் அது தான். அட்டாளைச்சேனை, அம்பாறை,பொலன்நருவை ஆகிய இடங்களில் இருந்தும் பல இஸ்லாமியர்கள் எங்களுடன் விடுதியில் தங்கியிருந்தார்கள்.

இஸ்லாமிய நண்பர்களின் இறையுணர்வு பற்றி எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் அங்கு தான். தினமும் ஐந்து முறை பள்ளி சென்று தொழுவார்கள்.நாம் பசியில் வாடி நிற்கும் போது வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் கிடைக்கும் கஞ்சியை நெளிந்து வடிவம் மாறியிருக்கும் அலுமீனிய கப் இல் கொண்டு வந்து எம்முடன் பகிரும் நட்பின் இலக்கணம் பயிற்றுவித்தவர்களும் அவர்கள் தான்.

பிரின்ஸ்இன் பெயர் ஒரு மந்திரச் சொல் போன்றதாய் இருந்த காலம் இது. அக்காலத்தை எமது பாடசாலையின் பொற்காலம் என்றாலும் அது தவறாகாது. அவரின் பின்னான காலத்ததை சுவீகரித்தவர்களால் அவரைப் போல் சிறப்பாக நிர்வகிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் என்னைப் போல் பலருக்குண்டு. அதன் கசப்பான உண்மையை மறுப்புதற்கில்லை

பிரின்ஸ் ஒரு கறுப்பு நிற ஏ 40 கார் வைத்திருந்தார். பாடசாலையை கார் கடக்கும் போது கடக்கண்ணால் எம்மை கவனித்து... பிறகு திங்கட் கிழமை அசம்பிளி ஹோல் இலும் எம்மை எல்லோர் முன்னிலையிலும் கவனிப்பார்..
மனிசன் ஒரு அட்டவதானி.. அவர் கண்ணில் இருந்து எதுவும் இலகுவில் தப்பாது

பிரின்ஸ் திங்கட் கிழமை அசம்பிள யில் சொல்லும் ”அறிவுக் கதைகள்” சில காலத்தின் பின் கீறுப்பட்ட ரெக்கோட் மாதிரி அலுப்படித்தாலும் இன்று அவற்றின் உண்மைகள் என்னைப் பார்த்து நகைக்கின்றன போலிருக்கிறது.

பிரின்ஸ் அடாவடியான கட்டுப்பாடும, அதிகாரமும் தாங்கமுடியாதிருந்தது. அவருக்கு மொட்டை என்பதால் அன்பாய் மொட்டை எனறு அழைக்கவும் தொடங்கியிருந்தோம். மனிசன் படு கில்லாடி. அந்தக் காலத்திலயே தனது புலனாய்வுத்துறையை எமக்கிடையே ஏவி விட்டு எமது தொழில் ரகசியங்களை அறிந்து எமது திட்டங்களை தவிடுபொடியாக்கிக் கொண்டிருந்தார். இன்றுவரை அந்த ஒற்றனை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஓரு இரவு
தியட்டர் வாசலில்
செக்கன்ட் சோ
முடியும் வரை காத்திருந்து
ஏ 40 காரில்
மரியாதையாக
ஏற்றி வந்து
போ
”வாறன்”
என்று சொல்லி
ஆறுதலாய்
வந்து
அந்த காலத்து
எம். ஜி. ஆர் மாதிரி
கையாலயும்
பிரம்பாலயும்
அன்பு
காட்டிய
ஸ்டண்ட் மாஸ்டர்
அவர்.

அவரின் கந்தோருக்குள் பிரம்புச்சத்தம் கேட்பது குறைவு, அப்படி பிரம்புச்சத்தம் கேட்டால் அவர் உசாராக இல்லை என்று அர்த்தம். 8 வருடத்தில் அவர் பிரம்பெடுத்தது மிகக்குறைவு.

அவர் பிரம்பு எடுக்கத்தான் மாட்டார் ஆனால் அடிக்க மாட்டார் என நான் சொல்லவில்லையே. அவரின் கை பதம் பார்க்காத சொக்கைகளே இல்லை எனலாம். ”இது கிட்டடிக்கும் சரிவராது” என்று சொல்லி எழும்பினார் என்றால் பிறகு என்ன
வாசிப்புத்தான்
(நாயடி அடிக்கும் மனிசன்)

சில வருடங்களுக்கு முன் அவரைச் சந்தித்த போது ஒரு ஆசிரியனாய் நான் தோற்று விட்டேன் என்றார். ஏன் என கேட்டபோது என்னை ஒருவரும் நான் படிப்பித்த பாடங்களுக்காக ஞாபகம் வைத்திருக்கவில்லை எனவும், தான் கொடுத்த அடியாலேயே ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்றார். பாவமாய் இருந்தது அவரைப் பார்க்கும் போது. ஆனால் இப்பவும் பழைய லொள்ளு அப்படியே அவரிடம் இருந்தது.. சற்றும் மாறாமல்.

எனக்கும் அவருக்குமான உறவு அடியால் ஏற்பட்டதல்ல, பாடசாலைக்காலத்தில் மொட்டை மொட்டை என நானும் மற்றவர்களுடன் சேர்ந்து திட்டி, அவரின் அடிக்கு பயந்து திரிந்தவன் தான். அவரின் கணிப்பில் நான் மோசமானவானாக இருக்க வில்லை என்றே நினைக்கிறேன். இல்லை என்றால் முதன்மை மாணவர் தலைவராக நியமித்திருப்பாரா? சில வேளை கள்ளனுக்கு பொலீஸ் வேலை குடுத்தால் களவு குறையும் என்று நினைத்தாரோ என்னவோ?

ஆமிக்காரர்கள் கூட இந்த மனிசனுக்கு பயந்திரிந்த காலமிருந்தது. நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஆமி கொமாண்டரையும் வெருட்டி இருக்கிறார். அவரின் ஆளுமை எவரையும் அவர் முன் கட்டிப் போடக் கூடியது. இலங்கையில் இருந்து பல முக்கிய புள்ளிகளையும் அறிந்திருந்தார்.

அவரின் குரலில்
அதிகாரமும்,
கட்டளையும்,
ஆளுமையும்,
நேர்மேயும்
கலந்தேயிருக்கும்.
அதற்கு
கட்டுப்படாதவர்கள்
இல்லையெனலாம்

ஒரு முழு நிலா நாள் நடுசாமத்தில் எம்மை எழுப்பி மட்டுக்களப்பு வாவியில் படகில் அழைத்துச் சென்று கல்லடிப்பாலத்தருகில் ”மீன் பாடுவதை” கேட்கவைத்தார் (எனக்கு நித்திர கலக்கத்தில தாலாட்டு தான் கேட்டது...மீன் பாடினது சத்தியமா கேக்கேல்ல)

ஆங்கிலத்தை அழகாய் (அடதவடித்தனம் கலந்து) கற்பிக்கக் கூடியவர். சேக்ஸ்பியரின் மகா பக்தன். கடைசியாக சந்தித்த போது தான் இங்கிலாந்து சென்று சேக்ஸ்பியர் வாழ்ந்த இடங்களை பார்த்து வந்ததாக பெருமையுடன் சொன்னார். வாழ்வில் சிரமதானத்தின் அவசியம், முக்கியம், கட்டாயங்களை எமது இரத்தில் கலந்தவரும் அவரே. நன்றாக டெனிஸ் ஆடுவார்.. நாங்கள் அதை ஆ..ஆ...ஆ...ஆ பார்த்துக் கொண்டிருப்போம். நமக்கு புரியாத வியையாட்டப்பா அது.

காலப்போக்கில் வாழ்க்கை தந்த பாடங்களினாலும், யதார்த்தம் புரிந்ததாலும் அவரின் பல செயல்கள் நியாயமானவைகப் படப் பட அவரின் மேல் இருந்த பயம் பக்தியாய் மாறியிருக்கிறது.

வேதனை என்னவென்றால்
முதுமையின் தனிமையில், சுகயீனத்துடன் குறைந்த வருமானத்தில் வாழ்ககையை ஒட்ட அவர் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டியிருப்பது.

அவருக்கு பல விதத்திலும் உதவும் அனைத்து நெஞ்சங்களுக்கும் சிரம் தாழ்த்துகிறேன்.

முக்கியமாக, அவரைத் தினமும் ஒரு முறை சென்று அவரின் தேவைகளைக் கவனிக்கும் பெயர், முகம் அறியாத அந்த மனிதம் நிறைந்த மனிதனுக்கு!!

இது எனது ப்ளாக்இல் சில வருடங்களுக்கு முன் போடப்பட்டிருந்தது. சற்று தூசுதட்டி கொஞ்சம் பெயின்ட் அடித்திருக்கிறேன். கோவித்துக் கொள்ளாதீர்கள்.

இறுதியாக
எம்மைப் போல் வெளிநாட்டவருக்கு தமது பாடசாலை, ஆசிரியர்கள் மேல் அன்பும், பாசமும், வாஞ்சையும் இல்லாமலிருப்புது மனதை மிகவும் நெருடுகிறது. ஆனால் பாடசாலையும், ஆசிரியர்களும் நிட்சயமாய் தமது மாணவர்கள் மேல் அன்பும், பாசமும் காட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்
சஞ்சயன்
|
This entry was posted on 3:26 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On October 26, 2009 at 2:29 AM , யசோதா.பத்மநாதன் said...

நெகிழ்வான நினைவுப் பதிவு.வாழ்த்துக்கள் வருகைக்கும் பதிவுக்கும்.

பாடசாலை நினைவுகள் எப்போதும் எவருக்கும் பசுமையானவை தான்.

என் பாடசாலையை நினைத்தால் அதிபர் லோகசிங்கம் தான் நினைவுக்கு வருவார். பாடசாலை ஆரம்பித்தவுடன் 5 நிமிடம் அமைதி பேண வைத்தவர்.வெள்ளிக் கிழமைகளில் எல்லோரும் முன்னால் இருக்கிற பிள்ளையார் கோயிலுக்குப் போய் சிவபுராணம் பாட வைத்தவர்.

பாடசாலை விட்டு எமக்கு பஸ் வரத் தாமதமானால்(அப்போது பாடசாலை குவாட்டஸில் குடும்பமாகத் தங்கியிருந்தார்.)வீதிக்கு வந்து நாம் போகும் வரை நின்று வழி அனுப்பி விட்டுப் போகிறவர்.

நம் பாடசாலையின் வசந்த காலம் அவர்.

நினைவுகளை மீட்டிச் செல்கிறது உங்கள் பதிவு.

 
On August 8, 2010 at 7:07 AM , Dr Alavi Sheriffdeen said...

Prince Casinader is a person rare to found. His qualaities, dedication, far sights, seriousness and dedication were not properly appreciated by the community yet.

Sir, Prince Ayya..
At the age of 44 I do not have guts to stand in front of you. When I visited you two months ago at your love lane home, I did not want to leave you alone. You refused my request.

I do not have a hope that Batti will find another principal/statesman like you again.
I wish that you have a long healthy life.

Alavi Sheriffdeen
Australia