Author: சினேகிதி
•3:06 AM
சென்னையில் ஒரு மழைக்காலம் எப்ப றிலீஸ் என்டு தெரியா ஆனால் அல்வாயில் ஒரு மழைக்காலம் இதோ சிறப்புக்காட்சி உங்களுக்காக :)

எங்கட ஊர் மழைக்கால ஞாபகங்கள் பற்றி எழுத முதல் ஒரு சுவாரிசயமான விசயம் நூலகம் நெற் உதவியால் என் கண்ணில் பட்டது. 13 வருசம் இந்த மாயக்கை குளத்தில இருந்து 2km தூரத்திலதான் நான் இருந்தனான் ஆனால் அந்தக்குளம் இவ்வளவு முக்கியமான வரலாற்றோட சம்பந்தப்பட்டதென்டு எனக்கொருதரும் சொல்லித்தரேல்ல. என்ன சுதந்திரமா வெளில போக விட்டிருந்தாலாவது நானே போய் ஆராய்ச்சில ஒரு கரை கண்டிருப்பன் எல்லாம் பிழைச்சுப்போட்டுது. உங்களுக்கு நான் இன்னும் அந்த முக்கியமான விசயத்தைச் சொல்லே்ல நான்.

சரி எங்கட ஊரில இருக்கிற அந்தக்குளம் தான் மாயக்கைக் குளம். எங்கட வீடுதான் கடைசி வீடு. வீட்டுக்குப் பின்னால நீட்டுக்குத் தோட்டங்கள். தோட்டக்காணிகள் முடிய ஒரு சின்ன வெளி வெளிக்கு அங்கால ஒரு கிணறு அதுக்கும் அங்காலதான் இந்தக்குளம். சுத்தவர பாதுகாப்பாக வேலி போல எதுவும் இல்லாததால் சின்னப்பிள்ளைகளை அந்தப்பக்கம் போக விடுவதில்லை. அப்பிடியே நாங்கள் போக முயற்சித்தாலும் தோட்டம் செய்யிற பெரிசுகள் வீட்டில போய் சொல்லிப்போடுங்கள்.







நூலகம் நெற்ல இருக்கிற "ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு" என்ற புத்தகத்தில் ஆ. சின்னத்தம்பி சொல்றதின்படி பார்த்தால் அல்வாயில் இயக்கர்கள் வாழ்ந்திருக்கினமாம்.மகாயக்கா என்றொரு சிற்றரசன் இருந்தவராம் அதால் அந்தக்குளம் மா-யக்கா = மாயாக்கா ஆகி பிறகு மாயக்கை என்று மருவியிருக்கலாமாம்.

மெயின் றோட்ல இருக்கிற பாலத்தால நல்ல force ஆ வாற மழை வெள்ளம் எங்கட வீட்டடியில slow ஆத்தான் போகோணும் ஏனென்டால் எங்கட வீட்டடில ஒரு திருப்பம் ' ட ' வடிவில இருக்கு. அங்க இருக்கிற எல்லாத் தெரு வெள்ளமும் ஒன்றாச் சேர்ந்து எங்கட தெருவால வந்து மாயக்கைல போய்ச்சேரும். எங்கட வீடு தாண்டிப்போக போக அங்கால தரைமட்டம் குறைஞ்சு பள்ளக்காணிகள்தான் இருக்கும். எங்கட வீட்டு வாசல்ல 4 தூண் இருக்கு. தூண்களுக்கு நடுவில ஏறி நிண்டு பார்த்தா மழைக்காலத்தில வழமைக்கு மாறா கடற்கரை போல மாயக்கைத் தண்ணியும் மினு மினு என்று தெரியும். மற்ற நேரங்களில அவ்வளவு தூரத்துக்குத் தெரியாது தண்ணி.

இப்ப " ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு" புத்தகத்தின் படி இந்த மாயக்கையில் போய்ச் சேரும் வெள்ளம் அந்த அகழியில் நிரம்பிட்டு கடலுக்குப்போகுதாம். அத்தோடு அங்கு பெரிய மலைப்பாறைகள் இருக்கு மற்றது அங்க ஒரு குகை இருக்காம். அந்தக் குகைவழி கீரிமலைக்குப் போகலாமாம்.

மாயக்கைக் குளத்தின் மற்றொரு கரையில் ஒரு கோயில் இருக்கு. நான் நினைக்கிறன் அதுக்குப்பேர் நாச்சியார் கோயில் எண்டு. எனக்குத்தெரிஞ்சு அந்தக்கோயில்தான் மடை பொங்கல் வைக்கிறது. மடை வைக்கிற அண்டு அந்தக்கோயிலுக்கு எல்லாரும் போவம். அப்ப கோயிலுக்குப் பின்னால நிறைய பெரிய பெரிய பாறாங்கல்லுகள் நிறையப் பார்த்திருக்கிறன் ஆனால் அங்க ஒரு குகை இருக்கு அதால போன கீரிமலை வரைக்கும் போகலாம் என்டு தெரியாமப் போச்சு.

நான் முதல்லயே சொன்னன் மாயக்கைக்குக் கிட்ட ஒரு கிணறு இருக்கெண்டு. அந்தக்கிணறு எங்கட வீடுகள்ல இருக்கிற மாதிரிக் கிணறு இல்லை. இரவில அந்த இடம் பற்றித் தெரியாதாக்களுக்கு அதில ஒரு கிணறு இருக்கிறதே தெரியாது. நில மட்டத்தோடதான் இருக்கும் அந்தக் கிணறு. கிணத்தோட ஒரு பூவரசு மரம். அந்தக் கிணத்தைப் பற்றி முந்தி அப்பப்பா ஒரு கதை சொல்றவர். அப்பப்பா ஒருநாள் விடிய வெள்ளன துலா இறைக்கப் போனவராம். அப்ப அங்க தியாகண்ண ஏற்கனவே கிணத்தடில நிண்டவராம். அவை 2 பேருமாக் கதைச்சு கதைச்சு பொயிலைக் கண்டுக்கெல்லாம் தண்ணி பாய்ச்சினவையாம். பிறகு அன்டைக்குப்பின்னேரம் பரியாரி வீட்ட தியாகண்ணா சொன்னாராம் உடம்பு சரியில்ல அதான் என்னால இண்டைக்குத் தண்ணியிறைக்கை வரேலேமாப் போச்செண்டு. அப்பப்பப்பா வீட்ட வந்து சொன்னார் நான் இண்டைக்குப் பேயோடதான் காலைமை தண்ணியிறைச்சனான் என்டு.இந்தக் கிணறு பற்றி எவ்வளவு தண்ணியிறைச்சாலும் அதன் நீர்மட்டம் குறைவதே இல்லை என்று அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கினம். அதும் உண்மைதான் ஏனென்டால் ஒரே நாள்ல 15-20 கமக்காரர் அட்டவணை போட்டு அந்தக் கிணத்தில இருந்துதான் தங்கட தோட்டங்களுக்கெல்லாம் தண்ணியிறைக்கிறவை.

உண்மையா இந்த வரலாற்று உண்மைகளை வாசிச்ச பிறகுதான் யோசிக்கிறன் அங்க இருக்கிறாக்கள்ல எத்தினை பேருக்கு இந்த விசயமெல்லாம் தெரிஞ்சிருக்குமென்டு. எனக்குத்தெரிஞ்சு பெரியாக்களும் குளத்துப் பக்கம் போறேல்ல அப்பிடி அங்க என்னதான் இருக்கெண்டு பார்க்கோணும் என்டு நினைக்கிறதுகளையும் போக விடுறேல்ல.

போன கிழமை இங்க ரொரன்டோவில snow storm -groundhog day அதால வேலைத்தளங்கள் பள்ளி்க்கூடங்கள் எல்லாம் விடுமுறை.20-30 cm snow கொட்டும் என்டு எதிர்வு கூறப்பட்டது ஆனால் அவ்வளவு snow கொட்டேல்ல. நான் எல்லாம் விடிய 6 மணிக்கே weather channel ல்ல விட்டிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனான் கடவுளே நல்ல snow கொட்டோணும் இன்டைக்கு வேலை இருக்கக் கூடாதெண்டு. snow வழிக்காத றோட்ல கார் ஒடுறதைப் போல ஒரு கஸ்டம் வேற ஒன்டுமில்லை.



ஊரில எங்க நாங்கள் weather channel ஐப்பார்த்தம். ஆரும் நாளைக்கு மழை எண்டால் 2 றாத்தல் பாணும் வாழைப்பழமும் எப்பிடியாவது வேண்டி வைச்சிடோணும். இல்லாட்ட மழைக்கு அம்மா என்னைத்தான் அனுப்புவா விடியப் பாண்வேண்ட.

நல்ல மழை பெய்து எவ்வளவு வெள்ளம் வந்தாலும் எங்கட கேற்றைத்தாண்டி தெருவெள்ளம் வீட்டுக்குள்ள வாறதில்லை. ஆனால் ஒருமுறை அப்பிடி வந்திட்டுது. எத்தினையாம் ஆண்டு என்டு தெரியாது. எங்கட வீட்டுக்கும் ஒரு பாலம் ((?) சீமேந்தால ஏற்றமா கட்டினதொண்டு) இருக்கு. வெள்ளம் அந்தப்பாலத்தை மேவி ஒரே ஒரு தரம் முற்றத்துக்கு வந்திருக்கு. எனக்கு இப்பவும் ஞாபகமிருக்கு வீட்டு வாசல்ல நிண்டுகொண்டு வெள்ளம் நிரம்பி கொஞ்சம் கொஞ்சமா முற்றத்துக்கு வடிஞ்ச வடிஞ்சு வரத்தொடங்கவே நான் கத்தத் தொடங்கிட்டன் வீட்டுக்க வெள்ளம் வருது வீட்டுக்க வெள்ளம் வருதெண்டு. கொஞ்சம் கொஞ்சமா வெள்ளம் நிறையவே வரத்தொடங்கிட்டுது. முற்றத்தில இருந்து 2 படி அதுக்குப்பிறகு ஒரு ஹ~ட்வாசல். அதுக்குப்பிறகுதான் கதவு. கதவு வரைக்கும் வெள்ளம் வரேல்ல ஆனால் முற்றமெல்லாம் தெருவெள்ளம் நிரம்பி நிண்டது. பிறகு அந்த வெள்ளமெல்லாம் வத்தினாப்பிறகு தெருவெள்ளத்தோட சேர்ந்து வந்த கஞ்சல் குப்பை குட்டி குட்டித் தடி ஒற்றைச் செருப்பு இப்படியான பொருள்கள் எல்லாம் இருக்கும் முற்றத்தில.

வெள்ளம் ஓரளவுக்கு வத்தினாப்பிறகு சின்னாங்கள் 2-3 பேர் பக்கத்துவீட்டாக்கள்
எல்லாம் சேர்ந்து ஒராளை ஒராள் பிடிச்சுக்கொண்டு போறது கடைக்கு சாமான் வேண்ட. வெள்ளத்துக்க நடக்கிறேல்ல.மதிலுக்கும் தெருவுக்கும் இடையில மேடா இருக்கிற இடத்தால புல்லுக்குள்ள கால வச்சு மெதுவா நடந்து கடைக்குப்போய் கடையில ஆற்ற வீட்டில எந்த மரம் முறிஞ்சது, ஆற்ற வீட்டில கோழிக்குஞ்சு செத்தது, எங்க ஆட்டுக்குட்டி காணமால் போனது போன்ற தகவல்களையும் சேர்த்து வேண்டிக்கொண்டு போவம்.



வெள்ளம் முற்றாக வடிந்தபின் தெருவில் திட்டுத் திட்டாக ஊத்தையெல்லாம் கழுவப்பட்டு வெள்ளை மண் மினுங்கிக்கொண்டிருக்கும். அந்த மண்ணை அள்ளி அள்ளி முற்றத்தில
போடுறது. எல்லாற்ற வீட்டுக்கும் முன்னால ஒராள் மண்வெட்டியால நின்டு அள்ளி அள்ளி வாழில போட போட மற்றாக்கள் கொண்டுபோய் கொட்டுறது. தெருவில நீட்டுக்கு நிண்டு
ஆக்கள் கதைக்கிறது நல்ல பம்பலா இருக்கும். அந்தத் தெருவுக்குள்ள இருந்தாக்கள் விவசாயம் செய்றேல்ல. ஆனால் நான் ஏற்கனவே சொன்னமாதிரி எங்கட வீட்டுக்குப்பின்னால முழுக்க நீட்டுக்கு தோட்டக்காணிகள் தான். வேற ஊார் ஆக்களும் அங்க பயிர் நட்டிருப்பினம். எங்களுக்கு மழையால பெருசா இழப்பில்லை. ஆனால் கஸ்டப்பட்டு வெங்காயத்தை நட்ட ஆக்களுக்கு நட்ட கொஞ்ச நாளிலயே மழை கொட்டிச்சுதெண்டால் தோட்டம் செய்றாக்கள் பாவம்தானே. அவையள் நாங்கள் தெருவில நின்டு கும்மியடிக்கிறதைப் பார்த்து உங்களுக்கென்ன கொண்டாட்டம்தான் நாங்கள் இனிப்போய்ப் பார்த்தால்தான் தெரியும் பயிரின்ர நிலமை என்டிட்டுப் போவினம்.



எங்கட வீட்டுக்கு 2 பக்கமும் வைத்தியர்களின் வீடு. மழைக்காலத்திலதான் உள்ள வருத்தமெல்லாம் வரும். பாம்பு கடிக்கும். சொறி சிரங்கெல்லாம் வரும். எங்கட வீட்டுக்கு வெளில வாசலுக்கு 2 பக்கமும் சிமென்ற் ல குந்து மாதிரி நீட்டுக்கு கட்டியிருக்கு. வைத்தியர் வீட்ட ஆக்கள் நிரம்பிட்டா எங்கட வீட்டுக் குந்துகள் தற்காலிகமான கட்டில்கள். மழைக்காலம் என்டால் இந்த ஒரு காரணத்துக்காகவே எங்கட வீடு சுறுசுறுப்பா இருக்கும்.

மழை நேரத்திலதான் பூமரங்கள் நடுறது. வீடு வீடா குறோட்டன் வெட்டுறது, விதம் விதமா மஞ்சள் ஒரேஞ்ச் வெள்ளை என்று செம்பருத்தி தடி வெட்டுறது, றோசா மரங்கள் பதி வைச்சு வேண்டிக்கொண்டு வாறது, எக்ஸோறாக் கண்டு பிடுங்கிக் கொண்டு வந்து நடுறது இப்பிடி எல்லாம் எல்லாற்ற வீட்டிலயும் நடக்கும். அதுவும் தெருவில ஒரே வயசுக்காரர் நிறைய இருந்தாக்காணும் ஆற்ற வீட்ட கூடப் பூமரம் நிக்குதெண்டு ஒரு போட்டி நடக்கும் அதுக்காக அம்மா அம்மம்மாவையை நச்சரிச்சு வீட்டைச் சுத்தி நிறையப் பூமரங்கள் நடுவம். நடுறதோட சரி பிறகு மழை நிண்டாப்பிறகு தண்ணி ஊத்தி வளக்கிறது அம்மாவை தான். பிறகு நாங்கள் மாங்காய் தேக்கங்காய் இலந்தைப்பழம் இப்பிடி வேற விசயங்களில பிஸியெல்லோ.

நன்றி : "ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு" -ஆ. சின்னத்தம்பி
மற்றும் நூலகம் நெற்
.
மாயக்கை படங்கள் உதவி : வந்தியண்ணா.
This entry was posted on 3:06 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On March 7, 2011 at 2:01 AM , ஃபஹீமாஜஹான் said...

"மாயக்கைக் குளம்" பற்றிய பதிவைப் பார்த்ததும் "ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு" நூலைப் படிக்கவேண்டுமென்ற ஆர்வம் எழுந்துள்ளது.
பாராட்டுக்கள் சினேகிதி.

 
On March 7, 2011 at 5:40 AM , ம.தி.சுதா said...

அட நம்ம இடத்து பதிவு... அங்கே போய் எம்புட்டு நாளாச்சு.. இதுக்குப் பிறகும் போகாட்டில் சரியில்லை எதற்கும் அந்து புத்தகத்தை படிச்சிட்டு போய் வாறன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

 
On March 7, 2011 at 5:41 AM , ம.தி.சுதா said...

அருமையாக பகிர்ந்திருக்கிறிர்கள் நன்றி...

 
On March 7, 2011 at 7:25 AM , மாதேவி said...

மாயக்கைக்குளம் கேள்விப் பட்டிருக்கிறேன் பார்த்ததில்லை.

 
On March 7, 2011 at 8:58 AM , Yoga.s.FR said...

///என்ன சுதந்திரமா வெளில போக விட்டிருந்தாலாவது நானே போய் ஆராய்ச்சில ஒரு கரை கண்டிருப்பன் எல்லாம் பிழைச்சுப்போட்டுது.///குளமெண்டா கரை இருக்கத் தான் செய்யும்!இதுக்குப் போய்????(ச்சும்மா,பகிடிக்கு!)நல்ல பதிவு!இப்படி எத்தனையோ வரலாறுகள் நமது மண்ணில் புதைந்துள்ளன!சிங்களவன் ஆராச்சி செய்து தனக்குச் சார்பாக மாற்றி எழுதி வருவது தான் சோகம்

 
On March 7, 2011 at 12:35 PM , கலை said...

பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணித்தான் பதிவு போடுறியள். பாராட்டுக்கள்.

 
On March 7, 2011 at 2:08 PM , யசோதா.பத்மநாதன் said...

மிக அழகாக மறஞ்சிருக்கிற வரலாறை உங்கள் தமிழில் சிறப்பாக வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள்.படங்களும் அருமை.

பாராட்டுக்கள் சினேகிதி.

 
On March 7, 2011 at 8:37 PM , வடலியூரான் said...

அட கோதாரி, நானும் உந்த மாயக்கைக்குளத்துக்கு இஞ்சால்ப்பக்கமாத் தம்பசிட்டியிலை தானே இருந்திருக்கிறன். எனக்கும் உந்த விசயங்கள் பெரிசாத் தெரியாமல் தானே போட்டுது.ம்ம்ம் அந்த குளத்தடிக்கு, நாச்சிமார் கோயிலடி வெட்டையில மச் விளையாட எல்லாம் போயிருக்கிறன் ஆனால் பெரிசா உதைப்பற்றி அக்கறைப் படேல்லப் பாத்தியளோ. உந்தப் பேய்ப்புத்தியை எண்ணெண்டு சொல்லிறதோ தெரியேல்லை.

 
On March 7, 2011 at 8:47 PM , வடலியூரான் said...

//ஆரும் நாளைக்கு மழை எண்டால் 2 றாத்தல் பாணும் வாழைப்பழமும் எப்பிடியாவது வேண்டி வைச்சிடோணும்.

சரியாச் சொல்லிப் போட்டியள் போங்கோ

//மழை நேரத்திலதான் பூமரங்கள் நடுறது. வீடு வீடா குறோட்டன் வெட்டுறது, விதம் விதமா மஞ்சள் ஒரேஞ்ச் வெள்ளை என்று செம்பருத்தி தடி வெட்டுறது, றோசா மரங்கள் பதி வைச்சு வேண்டிக்கொண்டு வாறது, எக்ஸோறாக் கண்டு பிடுங்கிக் கொண்டு வந்து நடுறது இப்பிடி எல்லாம் எல்லாற்ற வீட்டிலயும் நடக்கும். அதுவும் தெருவில ஒரே வயசுக்காரர் நிறைய இருந்தாக்காணும் ஆற்ற வீட்ட கூடப் பூமரம் நிக்குதெண்டு ஒரு போட்டி நடக்கும்

//மெத்த்ச்சரி தான்

நானும் கொஞ்ச நாளைக்கு முதல் எழுதின மழைப் பதிவு தான் இது

http://vadaliyooraan.blogspot.com/2011/01/blog-post.html

http://eelamlife.blogspot.com/2011/01/blog-post.html

 
On March 8, 2011 at 6:51 AM , வசந்தா நடேசன் said...

//தோட்டம் செய்யிற பெரிசுகள் வீட்டில போய் சொல்லிப்போடுங்கள். ///

ம்ம்ம், தமிழை நீண்ட நாட்களுக்குப்பின் தங்கள் பதிவில் ரசித்தேன், நன்றி. (ஆனாலும் மிக நீண்ட பதிவு??)

 
On March 10, 2011 at 1:29 PM , வந்தியத்தேவன் said...

மாயக்கைக்குப் பக்கத்தில் ஒந்திராய் என்ற ஒரு இடம் இருக்கு அங்கேயும் வெள்ளம் நிற்கும். சிலவேளை பார்க்க குளம்போல இருக்கும்.

சின்னனிலை நீங்கள் நல்ல குழப்படிப் பிள்ளையாத் தான் இருந்திருக்கின்றீர்கள் சினேகிதி அக்கா.