Author: கலை
•2:10 PM
ஒருநாள்..................

நான்: அம்மாட்ட எனக்கு நாளைக்கு phone பண்ணச் சொல்லி சொன்னன். அவ சொன்னா, அவவுக்கு நேரமில்லையாம்.

அடுத்தவர்: என்ன அவவா??????

...................................................................................

இன்னொருநாள்

நான்: மாமி விட்டுக்கு போகவேணும். அவ நெடுக என்னை வரச் சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறா.

அடுத்தவர்: என்ன அவவா?

........................................................

என்ன, ஏதாவது புரியுதா? யாழில் (அல்லது ஈழம் முழுமையிலுமா என்று சரியாகத் தெரியவில்லை) அவ, இவ என்பது மரியாதையாகவே சொல்லப்படும் சொற்கள்தான். ஆனால் வேற்றிடத்தினருக்கு, இதைக் கேட்கும்போது, என்ன இவர்கள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் ‘அவ (அவள்)', ‘இவ (இவள்) என்றெல்லாம் சொல்கிறார்கள் என்று தொன்றுகிறது. இந்தியாவில் ‘அவங்க', ‘இவங்க' என்னும் சொற்களுக்கு சமமான சொற்கள்தான் இவை என்பதை விளக்க வேண்டி வருகிறது. எங்களுக்கு அவ என்று சொல்வதற்கும், அவள் என்று சொல்வதற்கும் வேறுபாடு இருப்பதை புரிய வைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. காதலன் படத்தில் வடிவேல் ‘எவ அவ' என்று கேட்டது வேறு நினைவுக்கு வருகிறது.

சிலர் இந்த அவ என்னும் சொல்லை அவா என்றும் உச்சரிப்பதுண்டு.

வேறும் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சொல்லுங்கோ.
This entry was posted on 2:10 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

On June 17, 2009 at 5:40 PM , யசோதா.பத்மநாதன் said...

முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்களே!:)

அவ என்பது கணவன் மனைவியைப் பற்றி மூன்றாம் நபரிடத்தில் கதைக்கின்ற பொழுதுகளிலும் மனைவியைச் சுட்டப் பயன் படுத்துகிற ஒரு வார்த்தைப் பிரயோகம்.:)"நான் இல்லா விட்டாலும் அவ வீட்டில இருப்பா. நீங்கள் போய் வாங்குங்கோ"

கணவனைப் பற்றிப் பெண்கள் மூன்றாம் நபரிடத்தில் குறிப்பிடுமிடத்து, "அவர் இண்டைக்கு வேலைக்குப் போகேல்லை" என்றால் அது அப் பெண்ணின் கணவரைக் குறிப்பதாக மற்றவர் புரிந்து கொள்வார்.

இஞ்சருங்கோ அப்பா,இஞ்சரும் அப்பா என தமக்குள் பேசிக் கொள்வதைப் போல இது மூன்றாம் நபரோடு பேசிக் கொள்ளும் போது அவ, அவர் என்ற வார்த்தைகள் சிறப்பாக பாவிக்கப் படுகின்றன.

 
On June 17, 2009 at 5:46 PM , நிவேதா/Yalini said...

கொழும்பில 'அது' என்டும் சொல்லுறது வழக்கம். 'யாழ்ப்பாணத்தாக்களுக்கு' மரியாதைக் குறைவாத் தெரிஞ்சாலும் 'அது கடைக்குப் போயிருக்கு' என்டுறது அங்க சாதாரணம்.. மற்றது, முஸ்லிம்கள்ட வழக்குப் பாதிப்பாலயுமிருக்கலாம், என்னவா, எங்கவா போறீங்க? என்டு 'வா' சேர்த்துக் கதைக்கிறதுமிருக்கு. குடுகாரங்கள், எலகிரி, மாற விதி - எல்லாம் சிங்கள பாதிப்பால வந்ததென்டு நினைக்கிறன்..

இந்த வலைப்பதிவில கொழும்பாக்களுக்கு இடமில்லையே? யாழ்ப்பாணம், கிழக்கு, மலையகம் பற்றி மட்டும்தான் கதைக்கிற மாதிரிக் கிடக்கு..:-(

sooo disappointed!!

 
On June 17, 2009 at 5:57 PM , கண்டும் காணான் said...

தமிழ் நாட்டில் பிராமணர்களிடையே , அவர்கள் என்று சொல்வதற்கு "அவா" என உபயோகப்படுதுவர். உதாரணமாக "அவா சொல்லுவா" என்றால் அவர்கள் சொல்வார்கள் எனப் படும் . நான் ஒருமுறை , " அவா சொல்றா " என்று ஆரம்பிக்க , எனது நண்பி "யாரு அவங்க " எனக் கேட்க ஒரே சிரிப்புதான்.

 
On June 17, 2009 at 6:03 PM , ஆபிரகாம் said...

நாங்க அவா-ன்னுதான் பயன்படுத்துவோம்!

 
On June 17, 2009 at 6:47 PM , கானா பிரபா said...

வணக்கம் நிவேதா

கொழும்பாரும் இதில் இருக்கினம், இப்ப தானே ஒரு கிழமை, இனிமேல் தான் வரும் பதிவுகள். உங்களுக்கும் அழைப்பாணை அனுப்பியிருக்கிறம், பெற்றுக் கொள்ளவும், பங்களிக்கவும் :)

 
On June 17, 2009 at 7:35 PM , வந்தியத்தேவன் said...

வணக்கம் நிவேதா
கொழும்பாக்களுக்கும் இடம் இருக்கு மறுவ கேந்தியாக வேண்டாம்.

 
On June 17, 2009 at 8:00 PM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//வேறும் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சொல்லுங்கோ.//
ஓ... துளசி(அம்மா/அக்கா/டீச்சர்) சிட்னி வந்திருந்த நேரம் கோயிலுக்கு அழைச்சுக் கொண்டு போனம். அப்ப கஸ்தூரிப்பெண்ணும் கூட வந்திருந்தவ. அங்க இருந்த யாருக்கோ, துளசியம்மாவைக் காட்டிச் சொன்னன் "இவ நியுசிலாந்தில இருந்து வந்திருக்கிறா" என்டு. அப்ப கஸ்தூரிப்பெண் "அவ" என்றால் மரியாதைக் குறைவென்பதால் "அவங்க வந்திருக்கிறாங்க" என்டு சொல்லட்டாம் என்று சொன்னா.

--
//எங்களுக்கு அவ என்று சொல்வதற்கும், அவள் என்று சொல்வதற்கும் //
"அவள்" என்டு (பெரியவர்களை) குறிப்பிட்டால் மரியாதைக் குறைவாக இருப்பது போல எனக்குத் தோன்றும்.. வேற யாருக்காவது அப்பிடித் தோன்றுவதுண்டா?

 
On June 18, 2009 at 1:58 AM , கலை said...

//அவ என்பது கணவன் மனைவியைப் பற்றி மூன்றாம் நபரிடத்தில் கதைக்கின்ற பொழுதுகளிலும் மனைவியைச் சுட்டப் பயன் படுத்துகிற ஒரு வார்த்தைப் பிரயோகம்.:)"நான் இல்லா விட்டாலும் அவ வீட்டில இருப்பா. நீங்கள் போய் வாங்குங்கோ"//

ஓம் என்ன, மறந்தே போனன் மணிமேகலா :). அதை இங்கே இணைத்ததற்கு நன்றி.

 
On June 18, 2009 at 2:04 AM , கலை said...

//"அவள்" என்டு (பெரியவர்களை) குறிப்பிட்டால் மரியாதைக் குறைவாக இருப்பது போல எனக்குத் தோன்றும்.. வேற யாருக்காவது அப்பிடித் தோன்றுவதுண்டா?//

எல்லாருக்கும் அப்படித்தான் தோன்றும். சின்ன பிள்ளைகளை ‘அவள்' என்று சொல்வார்களே தவிர பெரியவர்களை சொல்வதில்லை.

இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும். நாங்கள் சின்ன குழந்தைகளையும், வாங்கோ, போங்கோ என்று கதைப்பதும், இந்தய தமிழர்களை ஆச்சரியப்படுத்துகிறது. சிலர் எங்கள் குழந்தைகளை, தாங்கள் எப்படி அழைப்பது என்று குழம்புகிறார்கள். ஆனால் சிறு குழந்தைகளை ‘வாங்கோ, போங்கோ என்று அழைப்பது எமது காலத்தில்தான் வந்ததென்று நினைக்கிறேன். எப்படி வந்ததென்று தெரியவில்லை. பழைய காலத்தில் வா போ என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், பழைய காலத்தில் அப்பா, அம்மாவைக் கூட, வா, போ என்று கூப்பிட்டிருக்கிறார்கள்.

 
On June 18, 2009 at 4:00 AM , கானா பிரபா said...

என்ர அவ சொன்னவ அவவுக்கு குருத்துப் பச்சை கலரில சேர்ட்டும் மஞ்சள் கலரில ஜீன்ஸும் போட்டா நல்லா இருக்குமாம் :-) இப்பிடியெல்லாம் கூட சம்பாஷணைகள் இருக்கு

 
On June 18, 2009 at 4:09 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//எல்லாருக்கும் அப்படித்தான் தோன்றும். //

எனக்கு, அம்மா இருந்தாள், அத்தை நடந்தாள், பாட்டி அடித்தாள் என்டெல்லாம் வாசிக்கேக்க இதையே அப்பா மாமா தாத்தாவுக்கு என்டால் 'ன்' விக்தி போட்டு எழுதினா என்ன என்று தோன்றும். இதுவரைக்கும் அப்பிடிக் காணேல்ல :O( பெண்களுக்கும் 'ர்' விகுதி போடலாம் தானே?

(இது ஈழமுற்றத்தில எழுப்புற கேள்வி இல்லை என்ன?:O) )

 
On June 18, 2009 at 6:01 AM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
என்ர அவ சொன்னவ அவவுக்கு குருத்துப் பச்சை கலரில சேர்ட்டும் மஞ்சள் கலரில ஜீன்ஸும் போட்டா நல்லா இருக்குமாம் :‍) //

இப்பவாவது உண்மையை உரத்துச் சொன்ன பிரபாவுக்கு பாராட்டுகள். ஹிஹிஹி

 
On June 18, 2009 at 9:59 AM , நிவேதா/Yalini said...

//மறுவ கேந்தியாக வேண்டாம்.//

loll..

 
On June 18, 2009 at 10:03 AM , சினேகிதி said...

\\என்ர அவ சொன்னவ அவவுக்கு குருத்துப் பச்சை கலரில சேர்ட்டும் மஞ்சள் கலரில ஜீன்ஸும் போட்டா நல்லா இருக்குமாம் :-) இப்பிடியெல்லாம் கூட சம்பாஷணைகள் இருக்கு\\

அச்சச்சோ பிரபாண்ணா உங்கட அவ சொன்னத ஏன் முற்றத்தில வச்சு சொன்னீங்கள்??? இப்ப உங்களுக்கு அவ இருக்கெண்டு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

குருத்துப்பச்சையும் மஞ்சளுமா?????? color combination நல்லா இல்லையாம் என்டு சொல்லுங்கோ உங்கட அவக்கு:)

 
On June 18, 2009 at 10:06 AM , சினேகிதி said...

எனக்கும் அவ/ அவா எது சரியென்ற குழப்பம் இருந்தது.

கல்யாணம் கட்டின ஆண் பிள்ளைகள் அம்மாவை "அம்மா இஞ்ச வாண ஃ இஞ்ச வாம்மா ( வா அம்மா) "என்று சொன்னால் அது மரியாதைக்குறைவில்ல....ஆனால் அதையே நாங்கள் சொன்னால் ஒருமாதிரிப் பார்ப்பினம்.

 
On June 18, 2009 at 10:09 AM , சினேகிதி said...

\\இந்த வலைப்பதிவில கொழும்பாக்களுக்கு இடமில்லையே? யாழ்ப்பாணம், கிழக்கு, மலையகம் பற்றி மட்டும்தான் கதைக்கிற மாதிரிக் கிடக்கு..:-(\\

\\//மறுவ கேந்தியாக வேண்டாம்.//

அதான் கொழும்பார் இருக்கிறீங்கள் எல்லோ இப்ப...மறுவ கேந்தி என்டால் என்ன என்று எழுதுங்கோ முதல். நிறையப்பேர் இருக்கிற இடத்தில நீங்கள் இரண்டுபேர் இப்பிடி சங்கேத பாசை மாதிரி மறுவ...கேந்தி என்டால் என்ன மாதிரி ஆக்களுக்கு ஒன்றும் விளங்காது:)

 
On August 3, 2009 at 4:24 PM , கலை said...

////எனக்கு, அம்மா இருந்தாள், அத்தை நடந்தாள், பாட்டி அடித்தாள் என்டெல்லாம் வாசிக்கேக்க இதையே அப்பா மாமா தாத்தாவுக்கு என்டால் 'ன்' விக்தி போட்டு எழுதினா என்ன என்று தோன்றும். இதுவரைக்கும் அப்பிடிக் காணேல்ல :O( பெண்களுக்கும் 'ர்' விகுதி போடலாம் தானே?

(இது ஈழமுற்றத்தில எழுப்புற கேள்வி இல்லை என்ன?:O) )////

அதுதானே. இத்தனை நாளா எனக்கு இது தோன்றியதே இல்லையே.