முற்றம் என்றவுடன் என் ஞாபகத்திற்கு வருகின்ற ஒரு விடயம் நாங்கள் எங்கள் வீட்டு முற்றத்தில் சிறுபிள்ளைகளாக இருந்த போது விளையாடிய விளையாட்டுக்கள்தான். பின்னேரமாகி விட்டாலே சிறுவர்களுக்குச் சந்தோசம் தான். என் வயதையொத்த சிறுவர் சிறுமியர், என் கூடப்பிறந்தவர்கள் என எல்லாம் ஒன்றாகக் கூடிவிடுவோம். பொதுவான நாங்கள் கூடுவத எங்கள் வீட்டு முற்றமாகத்தான் இருக்கும். பின்னர் என்ன விளையாடுவது எனத்தீர்மானிப்போம். அப்போதெல்லமாம் எங்களுக்குக் கிரிக்கட் என்றால் என்னவென்றே தெரியாது. அந்தச் சின்ன வயதில் நாங்கள் எல்லோரும் கீறோ கீறோயின்கள் தான். பொதுவாக எல்லோரும் பங்கேற்கக் கூடிய விளையாட்டைத்தான் தேர்ந்தெடுப்போம்.
நேற்றைக்கு கெந்திப் பிடிச்சு விளையாடினாங்க, அதுக்கு முத நாள் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடினாங்க, அப்ப இன்னைக்கு என்னத்த விளையாடுவம்.. கிளித்தட்டு, இல்லாட்டிக்கு இன்னைக்கும் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுவோமா..? வேண்டாம் இனைக்கு ஓடிப்பிடிச்சு பிளையாடுவம்.. குல குலயா முந்திரிக்கா.... கன..காலம் விளையாடி...
விளையாட்டு என்னமோ ஓடிப்பிடிச்சு பாணிதான். ஆனாலும் ஓடுகின்ற இடத்தையும் அளவையும் துரத்துகின்ற ஆளையும் தெரிவுசெய்து விளையாடும் பாணிதான் இந்த குல குலயா முந்திரிக்கா, என்ற பாடலுன் விளையாடும் விளையாட்டில் உள்ள வித்தியாசம். எனக்குத் தெரிந்து ஈழத்து முற்றங்களை மாலை நேரப்பொழுதுகளில் அலங்கரிக்கும் விளையாட்டுக்களில் இந்த விளையாட்டும் ஒன்று. அதுவும் சிறுபிள்ளைகளிடையே பாடலிசைடன் ஆண் பெண் பால் வேறுபாடுகளின் வித்தியாசம் தெரியதா, புரியாத காலகட்டங்களில் மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டுத்தான் இந்த குல குலயா முந்திரிக்கா ஓடிப்பிடிச்சு விளையாட்டு.
எல்லோரும் ஒரு வட்ட வடிவில் நிலத்தில் வெறும் தரையில் உட்காந்து கொள்வோம். ஒருவர் மட்டும் நின்றுகொண்டிருப்பார். அவரின் கையில் சிறு மரக் குளையைக் கொடுத்து
விடுவோம். பின்னர் அந்த நபர் அந்த வட்டவடிவத்தை வெளிப்புறமாக அதாவது அனைவருக்கும் பின்னால் சுற்றிவருவார். அப்படி வரும்போது அந்த நபர் ..
குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டதில் இருக்கான் கண்டுபிடி..
என்ற பாடலைப் பாடிக்கொண்டு சுற்றிவரவேண்டும். அப்படி வரும்போது அவர் கையில் உள்ள அந்த குளையை யாரும் ஒருவர் பின்னால் போட்டு விடுவார். அதாவது கையில் உள்ள குளை முந்திரிக் குலையாகவும் அதனைக் கொள்ளையடித்தவர் அந்தக் கூட்டத்தில் உள்ள ஒருவர் அதாவது யாருக்குப் பின்னால் அந்தக் குழை கிடக்கின்றதோ அவர்தான். அந்தப் பாடல் முடிக்கும்போது குளை யாருக்குப் பின்னால் உள்ளதோ அவர் எழுந்து குளை போட்ட நபரைப் பிடிக்கவேண்டும். அதுவும் குளை போட்ட நபர் வந்து ஓடிவந்த ஒரு முழுச்சுற்று வட்டத்தைச் சுற்றி எழும்பியவரின் இடத்தில் அவர் பிடிப்ப முதல் இருந்து விட்டார் என்றால் போட்டியில் கிளை போட்ட நபர் வெற்றிபெற்றதாக அர்த்தம். மாறாக வந்து உட்கார முதல் அவர் பிடிபட்டார் என்றால் வேறு என்ன குளை போட்ட நபர் தோல்விதான். இதில் சுவார்சியம் என்னவென்றால் பின்னால் வந்து அந்தக் குளையினைப் போடுவதால் முன்னால் பார்த்துக்கொண்டு இருக்கும் அவருக்குத் தெரியாமலே போய்விடும் தனக்குத்தான் போடப்பட்டது என்று. அப்படியிருக்கும் போது போட்டவர் மீண்டும் அனைவரையும் சுற்றிவந்தால் வெற்றியவருக்கே...
பாடிப்பாடி விளையாடுவது என்பது எவ்வளவு சந்தோசம் என்பது அந்த விளையாட்டை விளையாடியவர்களுக்குத்தான் தெரியும்.
இதனை விடவும் பாடிப்பாடி விளையாடும் விளையாட்டுக்கள் பல ஈழத்தில் வழக்கத்தில் உள்ளன. எதிர்வரும் பதிவுகளில் அவற்றையும் தருகின்றேன்.
•5:02 AM
பாட்டு,
விளையாட்டு
|
This entry was posted on 5:02 AM and is filed under
பாட்டு
,
விளையாட்டு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
25 comments:
எங்கட பக்கம் குழைபோட்டு விளையாடுதல் என்பார்கள். பின்னாடி குழைபோடுபவரின் முன்னாடி உள்ளவர் நெருங்கிய நண்பரோ இல்லை இருவரும் ஏதும் மேட்ச் பிக்சிங் செய்திருந்தால் கண்ணால் ஜாடை காட்டுவார்கள். தற்சமயம் மற்றவர்களிடம் பிடிபட்டால் அவ்வளவுதான் அடிச்சுப்பின்னிப்போடுவார்கள். எந்த விளையாட்டு விளையாடினாலும் கடைசியில் யாராவது ஒரு பொடி அழுதுகொண்டுபோகும்.
பள்ளிவிடுமுறை நாட்கள் என்றால் அம்மாமாருக்கு அலுப்புத்தான். இப்போ பாலர் வகுப்பிலையே ரியூசன் போவதால் யாரும் விளையாடுவதாக தெரியவில்லை.
உண்மைதான் சின்னச் சின்னக் கண் ஜாடைகள் புரிந்து நமக்குப் பிடித்த நபரை வெற்றி பெறச்செய்வோம். இது எல்ல இடங்களிலும் உள்ளது.
கடைசியில் யாராவது ஒரு பொடி அழுதுகொண்டுபோகும்.
இப்போதைய பள்ளிப்பிள்ளைகளின் முதுகின் பின்னால் உள்ள புத்தகப்பொதியினைச் சுமந்தே களைத்துப் போகிறார்கள். அப்படியிருக்க.. எங்கே விளையாட தெம்பு வரப்போகின்றது. அதைவிடவும் ரியூசன் என்ன ஒன்றால் அவர்களது மகிழ்ச்சி மட்டுப்படுத்தப்பட்டுளதே.. நீங்கள் கூறியத முற்று முழுக்க உண்மை வந்தியத்தேவன்
சுபானு, நல்ல பகிர்வு. அப்பிடியே கிளித்தட்டு, எவடம் எவடம் இதெல்லாம் வருமா இதைத் தொடர்ந்து?
--
'குளை'களை 'குழை'களாக்கி விடுங்க. :O)
நிச்சயமாக `மழை` ஷ்ரேயா(Shreya). நன்றிகள்.
எவடம் எவடம்.. புளியடி புளியடி.. எனக்கு மிகப்பிடித்த அனுபவித்த விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று... அடுத்த பதிவுகளில் புளியடிக்குப் போய்வருவோம்..
குழை என்பது குழைத்தல் தானே.
குளை தானே மரக்குளை களுக்குச் சரி..
சின்னதா ஒரு டவுட்டு வந்திருக்கே...
அட நாங்களும்ம் சின்ன வயசுல வெளையாண்டிருக்கோம்ல :)))
கோவில் வாசல்லத்தான் நல்லா பெரிய இடம் கிடைக்கும் சாயங்காலத்துல போய் அங்க உக்காநதா பொழுது போன பெறவும் கூட ரொம்ப நேரத்துக்கு வெளையாடலாம் :)))
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
குள்ளநரியே கண்டுபிடி.......
என நாங்கள் பாடுவோம்.
ஆகா, சாப்பிட்டு முடித்து இப்ப விளையாட்டா.
எனக்கும் இந்த விளையாட்டு ஞாபகம் உள்ளது.
ஒளிச்சுப்பிடிச்சு, கிளித்தட்டு ,கிட்டிப்புல், கெந்திக்கோடு,கெந்திப்பிடிச்சு , கோழியும் பிராந்தும் (இது கிட்டத்தட்ட கபடி போல என நினைக்கிறேன்.) போன்றவை விளையாடிய நினைவு இருக்கு.
நிறைய மரக்கள் இருப்பதால் ஒளிச்சுப்பிடிச்சும் நல்லா இருக்கும்.
ஆண்கள் என்றால் மரத்தில சுலபமாய் ஏறி ஒளிச்சிடுவினம்.
2 பிரிவாய் பிரிந்து நடுவில குழை போட்டு ஒரு விளையாட்டு. பெயர் நினைவில் இல்லை.
எந்த பக்கத்தை சேர்ந்தவர்கள் குழை எடுக்கிற எண்ட போட்டி.
பாடிப்பாடி விளையாடும் விளையாட்டு வேறு எனக்கு நினைவில் இல்லை.
அடுத்த பதிவில் மறக்காமல் சொல்லுங்கோ.
வணக்கம் சுபானு
முதலில் ஈழத்துமுற்றத்தில் இணைந்து கலக்குவதற்கு வாழ்த்துக்கள், பதிவை முழுதும் படித்து விட்டுவருகின்றேன்.
குழை:
மரக்குழை -பெயர்ச்சொல்
குழைத்தல் - வினைச்சொல்
இரண்டுக்கும் வரும்.
ஆஹா! அருமை, அருமை.
கிட்டிப் புள்ளும் கிளித் தட்டும் கொக்கான் வெட்டும் தான் நாங்கள் கூடுதலாக விளையாடியது.
இந்திராணி என்று எனக்கொரு தோழி இருந்தாள் அப்போது. நன்றாக அளாப்பி விளையாடுவதில் விண்ணி.
பாடசாலை எல்லாம் அந்தக் காலத்தில் 2 நேரம்.அவளை நான் எப்படியும் இடை வேளைக்கு முன் ஒப்பந்தம் பண்ணிக் கொள்வேன்.
அது என்னவென்றால் தமிழில் சொல்வதெழுதல் எழுதும் போது நான் அவவுக்குக் காட்டுவதென்றும்; அதற்குப் பிரதியாக அவ என்னைத் தன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் தான் ஒப்பந்தம்.
ஆச்சி அளாப்பி இந்தச் சொல்லுக்கு விளக்கம் தாருங்கள். நானும் உந்த அளாப்பி விளையாடுவதில் கெட்டிகாரன் கிரிக்கெட்டிலேயே அளாப்புகிற ஆக்கள் நாங்கள். ஆனாலும் யாராவது விளக்கம் கேட்டால் விளங்கப்படுத்தமுடியாமல் இருக்கிறது.
எல்லாருக்கும் விளையாடுறுதுக்கும் கூடியிருந்து சாப்பிடுறதுக்கும் நல்லவொரு முற்றம் கிடைச்சிருக்கு.
@வாசுகி
”எவ்வடம் எவ்வடம் புளியடி புளியடி ”என்பதும் இந்த பாட்டுப்பாடி விளையாடும் விளையாட்டுக்குள் அடக்கலாம் என்பது என்கருத்து...
@கானா பிரபா
// வணக்கம் சுபானு
முதலில் ஈழத்துமுற்றத்தில் இணைந்து கலக்குவதற்கு வாழ்த்துக்கள், பதிவை முழுதும் படித்து விட்டுவருகின்றேன்.
என்னை இந்தக் குழுமத்தில் இணைத்தமைக்கு எனது நன்றிகள்..
@மணிமேகலா .
// ஆஹா! அருமை, அருமை.
வணக்கம் மணிமேகலை..
அளாப்பி விளையாடுகதில் ஒரு சுகம்தான்.. நானும் தொஞ்சமா அளாப்புவன்.. சில நேரங்களில் பலிக்காமற் போய்விடும். சில நேரங்களில் வெற்றிபெற்றும் விடும்..
மற்றும் இந்த அளாப்புதல் என்னும் சொல்லே ஈழத்தின் முற்றத்தில் பூத்த பூ என்றுதான் நினைக்கின்றேன்.. விடயம் தெரிந்தவர்கள் இதனை வைத்து ஒரு பதிவு எழுதுங்களேன்..
@வலசு - வேலணை
// எல்லாருக்கும் விளையாடுறுதுக்கும் கூடியிருந்து சாப்பிடுறதுக்கும் நல்லவொரு முற்றம் கிடைச்சிருக்கு.
உண்மைதான் நல்லதொரு முற்றம் கிடைத்துள்ளது..
அன்புடன் சுபானு!
//குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
குல குலயா முந்திரிக்கா..
நிறைய நிறைய சுத்தி வா ..
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டதில் இருக்கான் கண்டுபிடி..//
மனதில் பதிந்தப் பாடல் வரிகள். இப்படியான வழக்கில் இருந்து மறைந்துக்கொண்டிருக்கும் பாடல்களை பதிவுசெய்து வைப்பதும் பயன்மிக்கதுதான்.
பகிர்வுக்கு நன்றி
அளாப்பிக்கு விளக்கம் எனக்குத் தெரியேல்ல ராசா!
உவள் பிள்ள சுபானுவும் சொன்ன மாதிரி ஆராவது விளக்கம் உள்ளவை சொன்னா நல்லாத் தான் இருக்கும்.
@மொழிவளன்
// மனதில் பதிந்தப் பாடல் வரிகள். இப்படியான வழக்கில் இருந்து மறைந்துக்கொண்டிருக்கும் பாடல்களை பதிவுசெய்து வைப்பதும் பயன்மிக்கதுதான். பகிர்வுக்கு நன்றி
மிக்க நன்றி...
இந்த விளையாட்டு ஐரோப்பாவிலும் இருக்கிறது நண்பர்களே. சுவிஸிலும், இத்தாலியிலும் சின்னப்பிள்ளைகள் விளையாடுவார்கள். இத்தாலியில் இதற்கான
"பேப்பே சாலே
ஆக்குவா மினறாலே"
- மிளகு, உப்பு, இயற்கை நீர் என்பதுதான் அந்தப்பாடலுக்கான விளக்கம். ஆக அது ஒரு ஓசை நயத்துக்காக பாடப்படுகிறது எனலாம்.
ஈழத்து முற்றத்தில், ஐரோப்பியக் கதை பறைஞ்சதுக்கு அடிக்க வராதீங்க...
நீங்கள் தமிழில் தந்த பாடலை, சில பகுதிகளில் "குலை குலையா முந்திரிக் கா, நரி நரியே நரியே சுத்தி வா.." எனப் பாடுவதும் உண்டு என்று நினைக்கின்றேன்.
அடே, நிறைய நிறைய சுத்திவாவா? நரியே நரியே சுத்தி வாவா?
http://www.youtube.com/watch?v=_E-BjoOR-dk
ttp://www.youtube.com/watch?v=_E-BjoOR-dk&feature=related