Author: வலசு - வேலணை
•8:43 AM
மணியாச்சிட்ட (மணிமேகலா) கூழ்காய்ச்சச் சொல்லிக்கேட்டா, அவா இழுத்தடிச்சுக்கொண்டே போறா. அவ எப்ப கூழ் காய்ச்சிறாவோ? அப்ப எனக்கு குடிக்கிறதுக்கு நேரம் கிடைக்குமோ? இதெல்லாத்தையும் இந்தக்காலத்தில சொல்லேலாது கண்டியளோ. அதுதான் இப்ப நேரம் இருக்கேக்க சும்மா நானும் கூழ்காய்ச்சுவம் எண்டொரு சின்ன ஐடியா. அம்மாணச் சொல்லுறன் எனக்கு முன்னப்பின்ன கூழ்காய்ச்சிப் பழக்கமில்லை. எப்பிடிக் கூழ்காய்ச்சிறதெண்டும் தெரியாது. ஆனா நல்லா முக்குமுட்டக் குடிக்க மட்டும் தெரியும். இப்பதான் முதல்முறையா கூழ்காய்ச்சிப் பாப்பமெண்டு.

நீங்களே சொல்லுங்க பாப்பம் (பார்ப்போம்), ஒடியல்கூழ் குடிச்சு எவ்வளவு காலமாச்சு. இப்ப நெச்சாலும் வாயூறுது கண்டியளோ. 2004-இல கொழும்பில இருக்கேக்குள்ள, வெள்ளவத்தையில இருக்கிற நளபாகத்தில ஒடியல்கூழ் விக்கிறவங்கள் (விற்கிறவர்கள்) எண்டு சொல்லி நானும் என்ரை சிநேகிதப்பெடியன் ஒருத்தனுமாச் சேர்ந்து கூழ் குடிக்கப் போனா, அதுக்குள்ள ஒரு பெரிய நண்டும் மிச்சமெல்லாம் மீன்செதில்களுமாத் தான் கிடந்துது. உறைப்பெண்டா, இப்ப நெச்சாலும் (நினைத்தாலும்) சொண்டெல்லாம் எரியுது. அடுத்தநாள் விடியக்காலமை கக்கூசுக்குள்ள போயிருக்கையுக்கை கீழையிருககிற வாயும் எரிஞ்சுதெண்டதையும் சொல்லோணுமோ? இல்லைத்தானே!

மணிஆச்சி! நீங்க ஆறுதலா நல்ல ரேஸ்ற்றா கூழ்காச்சித் தரோணும். மறந்திடாதைங்கோ. இது சும்மா இப்போதையத் தினவுக்குத்தான்.

கூழ்காச்சுறதெண்டு சொன்னோடனை (சொன்னவுடன்) தான் நாபகம் (ஞாபகம்) வருது, அதுக்கு முதலில பச்சை ஒடியல் மாவும் எல்லோ வேணும். அதுக்கு இஞ்ச எங்க போறது. போன சனிக்கிழமைதான் சிநேகிதப் பெடியன் ஒருத்தன் வீட்ட போகேக்கை அவன் கொடிகாமத்தில இருந்து மாமி கொண்டந்ததெண்டு சொல்லி புழுக்கொடியல் கொஞ்சம் தந்துவிட்டவன் வீட்ட கொண்டுபோய்ச் சப்பெண்டு (சாப்பிடு என்று). அத இடிச்சு மாவெடுத்தாலும் ஒடியல்கூழுக்குப் பாவிக்கேலாது (பயன்படுத்த முடியாது). அப்ப ஒடியல்மாவுக்கு என்ன செய்யிறது?

ஆ! நாபகம் (ஞாபகம்) வந்திற்று. போனமாசம் கடைசி ஞாயித்துக்கிழமை (31-05-2009) பின்னேரம் போல இன்னொரு தெரிஞ்ச அம்மா (அவாவை மணி அக்கா எண்டும் கூப்பிடுறவையாம்) வீட்ட போனனான். வெளிக்கிடேக்க சொன்னன் இண்டைக்கு இரவு மலேசியா போறனென்டு. அப்ப அவா, இலங்கயிலயிருந்து ஒடியல்மா வந்திருக்கு. அங்க மலேசியாவில ஆருக்கும் குடுக்க வேணுமோ எண்டும் கேட்டவா. அவவிட்டக் கொஞ்ச ஒடியல்மா தருவியளோ எண்டு கேட்டுப்பாக்கலாம்.

அட! சத்தியமாச் சொன்னா நம்ப மாட்டியள்! அவவுக்குப் பாருங்கோ ஆயுசு நூறு. இப்ப இத எழுதிக் கொண்டிருக்கேக்க அவவிட்டவிருந்து email ஒண்டு வருகுதெண்டு google talk காட்டுது. கொஞ்சம் பொறுங்கோ, வந்து கதைக்கிறன்.

அப்பாடா! உங்களுக்கும் அடிச்சுது luck பாருங்கோ!. அவவிட்ட கூழ்காச்சுறது எப்பிடியெண்டொரு குப்பி (அட! இது எங்க ஊரு பாசையில்ல. குப்பியெண்டுறது கம்பஸ் பாசையில, விளங்கப்படுத்திறது எண்டு அர்த்தம்) எடுத்தாச்சு. அதோட வாற சனிக்கிழமை வந்தா ஒடியல்மாவும் தந்துவிடுறதெண்டு சொல்லியிருக்கிறா. கொஞ்சக்காலம் பொறுத்தீங்களெண்டால் அவாவையும் எங்கட முத்தத்துக்குள்ள (முற்றத்திற்குள்) கூட்டிக் கொண்டு வந்திரலாம். இப்பதான் அவா தமிழில type பண்ணிப் பழகிறா. அந்தக்காலத்தில அவாவின்ரை கதைகள் எல்லாம் வீரகேசரிப் பேப்பரிலையெல்லாம் வந்திருக்கு. இப்பையும், இந்த தள்ளாடுற வயதிலையும் அவவுக்கு இருக்கிற ஆர்வம், என்னை வியக்க வைக்குது. அவா ஒரு தமிழ்ப் பண்டிதரும் கூட. முடிஞ்சால் அவாவைப் பற்றியே பிறகு ஒரு பதிவிடுகிறேன். அப்ப என்ன மாதிரி நீங்களெல்லாம் வாற சனிக்கிழமை ஒடியல்கூழ் குடிக்க வருவியள்தானே?

முந்தி எங்கட ஊரில, வீட்டில ஒடியல்கூழ் காய்ச்சுறதெண்டால், அண்டைக்கொரு பெரிய கொண்டாட்டம்தான். மீன், நண்டு, றால் (இறால்) எண்டு எல்லாம் வேண்டுறதே (வாங்குவதே) ஒரு பெரிய பம்பல் எங்களுக்கு. நாங்களெல்லாம் அப்ப சின்னப்பிள்ளையள். மாமாவையோட மீன் வாங்கிறதுக்காகக் கடலுக்கே போயிருவம். பொதுவா கூழ்காய்ச்சிறதுக்கு மீன் வேண்டுறதெண்டா தெற்குக் கரைக்கடைக்குத் (கடற்கரை) தான் போறது வழக்கம். அங்கதான் நல்ல கலவாய் மீன் கிடைக்கும். வேறமீனுகள் வேண்டுறதெண்டால் கிழக்குக் கரைக்கடைக்குத்தான் (இதை செட்டிபுலம் கடற்கரை என்றும் சொல்வதுண்டு) போறனாங்கள். எனக்கு கலவாய்மீனக் கண்ணிலயும் காட்டக்கூடாது. அதப் பொரிச்சாக்கூட விழுவிழெண்டு இருக்கும். எண்டாலும் கூழுக்குள்ள போட்டா மட்டும் ஒண்டும் கதைக்காம குடிச்சிடுவன். சிலவேளைல, புங்குடுதீவுப் பாலத்தில போயும் மீன் வேண்டுறது வழக்கம். அதில வெடிபோட்டும் மீன்பிடிக்கிறவை. வெடிபோட்டுப் பிடிக்கிற மீனுகளை அண்டைக்கே சாப்பிட்டிரோணும். அடுத்தநாள் வைச்சாப் பழுதாப் போயிரும். மீன், சின்னநண்டு, கூனிறால் எல்லாம் வாங்கியாந்து (வாங்கிவந்து) வீட்டில சமைக்கச் சொல்லிக் குடுத்திற்று சாட்டி வெள்ளக் கரைக்கடைக்கு குளிக்கப் போயிருவம். குளிக்கப் போறதெண்டா சும்மா பக்கத்து வீடுகளில இருக்கிற அண்ணமார், மாமாமார் எல்லாரும் சேந்தே (சேர்ந்தே) போறது வழக்கம். சைக்கிளில தான் போறனாங்கள். போய்வாறதுக்குள்ள ஒரு சின்ன சைக்கிளோட்டப்போட்டியும் நடந்திரும். குளிச்சிற்று வரேக்குள்ள அங்கனேக்குள்ள எங்கையும் வடலிப் பனைகளைக் கண்டா, இறங்கி பச்சோலையும் வெட்டிக்கொண்டு வாறது வழக்கம். பிறகு அதை வீட்டில வைச்சு சத்தகக்காம்பால கிளிச்சு பிளா (இந்தப் பிளாவிலதான் கள்ளும் குடிக்கிறது) செய்து கொதிக்கக்கொதிக்க கூழ அதுக்குள்ள ஊத்திக்குடிச்சால், பனையோலையின்ர வாசமும் சேர, சொல்லி வேலையில்ல.
This entry was posted on 8:43 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

18 comments:

On June 24, 2009 at 9:29 AM , வி. ஜெ. சந்திரன் said...

இண்டைக்கு எல்லாரும் ஒண்டா பதிவு போடுறம் போல :).

ஒடியல் கூழ்.....
எல்லா வீட்டிலையும் கூழ் காய்ச்சுற நாள் கொண்டாட்ட நாள் தான்.

பனை பற்றி முன்னர் எழுதிய பதிவு
http://viriyumsirakukal.blogspot.com/2007/05/blog-post_02.html

 
On June 24, 2009 at 9:44 AM , சுபானு said...

// முந்தி எங்கட ஊரில, வீட்டில ஒடியல்கூழ் காய்ச்சுறதெண்டால், அண்டைக்கொரு பெரிய கொண்டாட்டம்தான்

கனகாலமாச்சுங்க கூழ் குடிச்சு..
ஊருக்கு போகேக்க அடுத்தமுறை மறக்காம குடிக்கத்தான் வேணும்...

 
On June 24, 2009 at 9:46 AM , சுபானு said...

//வெள்ளவத்தையில இருக்கிற நளபாகத்தில ஒடியல்கூழ் விக்கிறவங்கள்

அது பேருக்கத்தான் கூழ்.. மற்றப்படி ஏதுமில்லயப்பா அதில...

 
On June 24, 2009 at 9:47 AM , சுபானு said...

//மாமாவையோட மீன் வாங்கிறதுக்காகக் கடலுக்கே போயிருவம்...

நல்லாத்தான் அனுபவிச்சிருக்கியளப்பா..

 
On June 24, 2009 at 3:55 PM , கலை said...

இப்படியெல்லாம் வாயூற வைக்கிறதே :).

 
On June 24, 2009 at 5:14 PM , Anonymous said...

கடைசியாத் (கடைசியாக), தேங்காய்ச் சொட்டை மறந்திட்டியளே..கையில் தேங்காய்ச் சொட்டை வச்சுக் கடிச்சுக் கொண்டு குடிச்சால் அந்த மாரி இருக்கும்.

 
On June 24, 2009 at 5:21 PM , யசோதா.பத்மநாதன் said...

:).

சொன்னது போல புளாவோட வந்திட்டாய் ராசா.

சந்தோசம்! சந்தோசம்!!

 
On June 24, 2009 at 7:07 PM , சினேகிதி said...

அப்ப இன்னும் காய்ச்சேல்லயா கூழ்?? நான் கூழ் குடிக்க ரெடியா வந்தன்...சரி சரி சனிக்கிழமைக்கு இன்னும் 3 நாள்தானே இருக்கு.

 
On June 24, 2009 at 11:01 PM , மானுடம் said...

ம்ம்ம்ம்..ஒடியல் கூழிற்கு நிகர் ஏதப்பா.
எங்கயோ வாசிச்ச கவிதை ஞாபகம் வருது ”மிதக்கும் தேங்காய்ச்சில்லை கண்டால் தேகமெல்லாம் எச்சிலுாறும்”

 
On June 24, 2009 at 11:07 PM , மானுடம் said...

ம்ம்ம்....ஒடியல் கூழிற்கு நிகர் ஏதப்பா.
எங்கயோ படிச்ச ஞாபகம் ”கூழில் மிதக்கும் தேங்காய்ச்சில்லுக்கு தேகமேல்லாம் எச்சில் ஊறும்”

 
On June 25, 2009 at 12:32 AM , geevanathy said...

///ஒடியல்கூழ் குடிச்சு எவ்வளவு காலமாச்சு. இப்ப நெச்சாலும் வாயூறுது கண்டியளோ. //

வாசிக்கையிலே வாயூறுதே...


// குப்பியெண்டுறது கம்பஸ் பாசையில, விளங்கப்படுத்திறது எண்டு அர்த்தம்//
சிலநேரம் உதவி சிலநேரம் (பகிடி)வதை..

 
On June 25, 2009 at 12:55 AM , வந்தியத்தேவன் said...

இனிப்பு கூழ் என்று ஒன்டும் செய்கிறவை அதற்க்கு கருப்பனி விடுகிறது என நினைக்கிறேன். கொழும்பிலை கற்பகத்தில் முந்தி சனிக்கிழமையில் கூழ் விற்கிறவை.

 
On June 25, 2009 at 1:23 AM , வாசுகி said...

எல்லோரும் சேர்ந்து கூழ் காய்ச்சி குடிக்கும் போது சந்தோசம் தானே.
பிளாவில கூழ் குடித்த அனுபவமும் இருக்கு.
தேங்காய் சிரட்டையிலும் குடிக்கிற வழக்கம் இருக்கு.
கூழுக்குள் போடும் இறால், நண்டுகளை பொறுக்கி சாப்பிடுவதில் தான் எனக்கு அதிக விருப்பம்.


இனிப்புக்கூழ் ஆடிப்பிறப்புக்கு காய்ச்சிறது தானெ.
சக்கரை போட்டு.
ஆடிக்கூழ் நல்ல உரிசையாய் (சுவை) இருக்கும்.


"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! "

சோமசுந்தரப்புலவர் பாடிய பாட்டு.

 
On June 25, 2009 at 7:28 AM , வலசு - வேலணை said...

மணி ஆச்சி!
பேச்ச மாத்தாமா கெதியா கூழ் காய்ச்சிற அடுக்குகளப் பண்ணத்தொடங்குங்கோ

 
On June 25, 2009 at 7:31 AM , வலசு - வேலணை said...

//
கடைசியாத் (கடைசியாக), தேங்காய்ச் சொட்டை மறந்திட்டியளே..கையில் தேங்காய்ச் சொட்டை வச்சுக் கடிச்சுக் கொண்டு குடிச்சால் அந்த மாரி இருக்கும்.
//

உண்மைதான்!
கனகாலத்துக்குப் பிறகு கூழக் கண்டோடன எனக்கு அந்த ஞாபகம் வரேல்ல.

//
கனகாலமாச்சுங்க கூழ் குடிச்சு..
ஊருக்கு போகேக்க அடுத்தமுறை மறக்காம குடிக்கத்தான் வேணும்...
//
ஓமோம்! மறக்காம எனக்கும் சொல்லியனுப்புங்கோ

 
On June 25, 2009 at 7:37 AM , வலசு - வேலணை said...

//
அப்ப இன்னும் காய்ச்சேல்லயா கூழ்?? நான் கூழ் குடிக்க ரெடியா வந்தன்...சரி சரி சனிக்கிழமைக்கு இன்னும் 3 நாள்தானே இருக்கு.
//
வாங்க வாங்க!
எந்தச் சனிக்கிழமையெண்டு சொன்னான் எண்டது மறந்து போச்சு
:-)

//
இனிப்பு கூழ் என்று ஒன்டும் செய்கிறவை அதற்க்கு கருப்பனி விடுகிறது என நினைக்கிறேன்.
//
உழுத்தங் களிக்குக் கொஞ்சம் தண்ணி கூடச்சேர்த்தா நீங்க சொல்லுற இனிப்புக்கூழ் வருமெண்டு நினைக்கிறன். எதுக்கும் மணியாச்சி ஒருக்கா விளக்கம் சொல்லி விடுங்கோ

//
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
//
இப்ப கொழுக்கட்டையும் தின்னவேணும் போல கிடக்கு.

 
On June 25, 2009 at 10:07 AM , கலையரசன் said...

அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

டைம் இருந்தா நம்ம கூட்டதுல
ஐகியம் ஆகுங்க!!

 
On June 25, 2009 at 10:31 AM , வி. ஜெ. சந்திரன் said...

http://viriyumsirakukal.blogspot.com/2008/07/blog-post_15.html