Author: வசந்தன்(Vasanthan)
•10:44 PM
முசுப்பாத்தி...
இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பயன்பாட்டிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:
நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.
'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'.
'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பயன்படுத்தியுள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான்  இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

==============================================================

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல்.
2.கசங்குதல்.
3.களைத்தல்.
4.ஊக்கங் குன்றுதல்.
5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல்.
2.வருந்துதல்.
3.மெலிதல்.
4.அழிதல்.
5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow's Tamil English Dictionary)
முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow's Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி.
சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.


===========================================================
இது உண்மையில் இன்று எழுதப்பட்ட இடுகையன்று. நான்கு வருடங்களுக்கு முன்பு (May 16, 2005)என் வலைப்பதிவில் எழுதப்பட்டது. இவ்வலைப்பதிவின் முதலிடுகையாக இது மீள்பதிவாக்கப்படுகிறது.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவுக்கான சுட்டி:
வசந்தன் பக்கம்: முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...

* இப்போதைக்கு என்னால் முடிந்தது மீள்பதிவு தான் ;-)
This entry was posted on 10:44 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On June 7, 2009 at 3:21 AM , கானா பிரபா said...

வசந்தன்

இந்த கூட்டுமுயற்சியில் அருமையானதொரு இடுகையோடு ஆரம்பித்ததற்கு மிக்க நன்றி

 
On June 7, 2009 at 3:34 AM , ஆயில்யன் said...

இங்க என்னோட ஈழ நண்பர் கூட அவ்வப்போது ஒரே முஸ்பாத்திதான் சொல்லிக்கிட்டுருப்பாரு எனக்கும் ரொம்ப நாளா என்னாது ஒரு வேளை அரபி வார்த்தையா இருக்குமோன்னு யோசிச்சு கேக்காமலேஇருந்துருக்கேன் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் கேட்ட போது சொன்னது சந்தோஷம் அப்படிங்கற விளக்கத்துல அதாவது குஷியா பேசுறது :))

 
On June 8, 2009 at 1:35 AM , மலைநாடான் said...

முசுபாத்திய, முசுப்பாத்தியா இல்லாமல், முக்கியமாவும், மினக்கெடாமல் கெதியாச் சொன்னது நல்லாருக்கு

 
On June 8, 2009 at 2:08 AM , கானா பிரபா said...

எங்கள் பகுதிகளில் முஸ்பாத்தி என்ற ரீதியிலும் இந்தச் சொல்லைப் பாவிப்பார்கள், முசுப்பாத்தி என்பதை நகைச்சுவை நாடகங்களில் உரையாடல்களில் பயன்படுத்துவார்கள்.

 
On June 8, 2009 at 2:09 AM , கானா பிரபா said...

மலைநாடான் அண்ணை

கையோட நாங்கள் விடுத்த அழைப்பையும் ஏற்கவும் :)

 
On June 8, 2009 at 7:39 PM , மொழிவளன் said...

//முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.//

கணத்தூரம் போகவேணும், அப்படியே முசுப்பாத்தியா பேசிக்கொண்டே நடந்துப்போகலாம் வாங்கோ!

வேலைச்செய்யும் பொழுது: அவன் இருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. ஒரே முசுப்பாத்தியாகவே நேரம் போய்விடும்.

இச்சொற்களின் பயன்பாட்டில் வரும் முசுப்பாத்தி எனும் சொல்லுக்கு “முசிப்பு + ஆற்றி” எனும் விளக்கம் மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றது.

அதேவேளை “முசிப்பு” எனும் சொல் சோர்வைக் குறிப்பதுப் போன்றும் பயன்படுவதாக நான் நினைக்கின்றேன்.

ஒரே முசிப்பா கிடக்கடாப்பா!

இச்சொல் குறித்த விளக்கத்தையும் சற்று கூறுங்கள்.

நன்றி

 
On June 8, 2009 at 7:50 PM , வசந்தன்(Vasanthan) said...

//மொழிவளன் said...
அதேவேளை “முசிப்பு” எனும் சொல் சோர்வைக் குறிப்பதுப் போன்றும் பயன்படுவதாக நான் நினைக்கின்றேன்.

ஒரே முசிப்பா கிடக்கடாப்பா!

இச்சொல் குறித்த விளக்கத்தையும் சற்று கூறுங்கள்.//

மொழிவளன்,
முசிப்பு என்பதற்குக் களைப்பு என்ற பொருள் இடுகையிலேயே தரப்பட்டுள்ளதே?
அதற்குத் தனியாக சோர்வு என்ற
பொருளைத் தரவேணுமா என்ன?

சிலவேளை, களைப்பெண்டது வேலையேதும் செய்து வாறது, சோர்வெண்டது ஒண்டுமே செய்யாமல் வாறது எண்டு விளக்கம் சொல்லப்போறியளோ தெரியேல.

களைப்பின்றிச் சோர்வாக இருக்கிறதென்பது உண்மையில் 'சோம்பல்' என்ற பொருளிற்றான் வரும்.

வேலையேதும் செய்யாமல் சோம்பலாக இருந்துகொண்டு அதைச் 'சோர்வு' என்று பொருள்கொள்வது 'சரியான பிழை' பாருங்கோ.

 
On June 8, 2009 at 9:43 PM , மொழிவளன் said...

வேலையேதும் செய்யாமல் சோம்பலாக இருப்பதற்கும் சிலர் "முசுப்பு" எனும் சொல்லை பயன்படுத்துவதைக் கேட்டுள்ளேன்.

"இன்றைக்கு வேலைக்கு போகவே மனமில்லாம் ஒரே முசுப்பாகக் கிடக்கு" என்றும், "சோம்பலாகக் கிடக்கு" என்றும் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும் இரண்டு சொற்களுக்கும் வேறுப்பாடு இருக்கிறது என்பது விளங்குகின்றது. நான் தான் பிழையாக விளங்கியுள்ளேன்.

பண்டிதர் பரந்தாமனின் விளக்கம் தெளிவானது.

நன்றி

 
On June 11, 2009 at 3:22 PM , கலை said...

இன்றைக்குத்தான் இது ஒரு தமிழ்ச்சொல்தான் என்று தெரிந்தது. நன்றி.