Author: வலசு - வேலணை
•7:01 AM
அண்மையில் எனது மச்சாள்முறையான ஒருவருடன் தொலைபேசியில் உரையாடுகையில், தனது சிறுபிராயத்தில் எம்மூரில், எங்கள் வீட்டில் தனக்கு ஏற்பட்டவொரு அனுபவத்தினை என்னுடன் பகிர்ந்திருந்தார். அது நடந்தபோது எனக்கு ஏறத்தாழ மறை நான்கு (-4) வயதிருந்திருக்கும். எனவே அச்சம்பவம் எனக்கு இப்போதும் நினைவிற்கு வரவில்லை(!). அது, எங்கள் வீட்டில், அவருக்கு புதிதாக ஒரு கச்சான் முளைத்திருந்த, சொறி சொறி மச்சான் தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்த நேரம். புது மச்சானைப் பார்ப்பதற்காய் ஆவலுடன் வந்திருந்தார். வந்தவரிடம் அயல் வீட்டுக்காரர் ஒரு பொதியைக் கொடுத்து, இது புதிய மச்சானின் பரிசு என்றும் அதைப் பிரித்துப் பார்க்குமாறும் கூறினார். அதைப்பிரித்துப் பார்க்கையில் ஒரு விடயத்தைக்கூறி அதைக்கட்டாயம் செய்யவேண்டும் என்றும் கூறினாராம். பொதிக்குள் இருந்ததோ ஒரு இரணை மிளகாய். இவருக்கோ அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை. எதற்காக ஒரு இரணை மிளகாயைப் பொதி செய்து தந்து விட்டு இப்படி ஒரு செயலையும் செய்யச் சொல்கிறார் என்று குழம்பியவர் அழுதுவிட்டாராம். அப்போது அவரும் சிறுபிள்ளை. பின்னர் அருகிலிருந்த எம்மூரவர்கள் அவரை சமாதானப்படுத்தி, பரவாயில்லை உனக்கு இதைத் தந்தவர் உனக்கு மச்சான், மச்சாள்முறை இல்லாததால் அவர் கூறியதைச் செய்யத்தேவையில்லை என்று கூறிய பின்னர்தானாம் அழுகையை நிறுத்தினாராம். அவர் இப்படியான ஒரு விடயத்தை இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லையாம்.

எங்கள் ஊரில் (வேலணையில்) இரணைப் பொருட்களை மச்சான் அல்லது மச்சாள் முறையானவர்களிடம் பொதிசெய்து கொடுத்து விட்டு அவர் அதனைப் பிரித்து அநத இரணைப் பொருளினை காண்கையில் தங்களுக்கு விருப்பமான ஒரு கோரிக்கையையும் சொல்லிவிடுவார்கள். அந்தக் கோரிக்கையினை இரணைப் பொருளினைப் பெற்றவர் நிறைவேற்றியேயாக வேண்டிய கட்டாயம் எங்களூரில் நிலவி வந்தது. இரணைப் பொருட்களாகப் பொதுவாக மிளகாய், வாழைப்பழம், பனங்கிழங்கு போன்றவையே பயன்பாட்டில் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து எனது மச்சாள் ஒருவரிடம் இவ்வாறு மாட்டுப்பட்டிருக்கிறேன். அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். அவர் இருந்த இடத்திற்கு நான் சென்றிருந்த போது என்னிடம் ஒரு பொதியைத் தந்துவிட்டு அதைத்ததிறந்து பார்க்கச் சொன்னார். அதற்குள் இருந்தது ஒரு இரணை வாழைப்பழம். அவர் உடனே என்னிடம் 50 கொழுக்கட்டைகள் அவித்துக் கொண்டுவந்து தருமாறு கேட்டிருந்தார். கொடுத்தேனா இல்லையோ என்பது நினைவில் இல்லை. 95இல் இடப்பெயர்ந்திருந்த காலத்தில் எனது மச்சாள் ஒருவருக்கு நான் இரணைப் பனங்கிழங்கைக் கொடுத்துவிட்டு 100 கொழுக்கட்டைகள் கேட்டிருந்தேன். அப்போது அது சின்னப்பிள்ளை. அதற்கு இரணைப்பொருட்களைப் பற்றிய பழக்கவழக்கங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அது தனது தந்தையைப் பார்த்தது. அவர் இடம்பெயர்ந்திருப்பதால் கொழுக்கட்டை அவிக்கமுடியாதெனவும் வேறு ஏதாவது கேட்கச் சொல்லியும் கூறிப் பின்னர், வேறொரு உணவுப் பண்டத்தில் அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைநதது.

எமது காலத்தில் பொதுவாக இரணைப்பொருட்களைக் கொடுத்துவிட்டுப் பதிலாக உணவுப்பொருட்களையே கேட்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் எனக்கு இரண்டு தலைமுறைகள் முநதிய காலத்தில் கல்யாண வீட்டிற்கு பந்தல் போடுவது, மேளம் பிடிப்பது போன்ற கோரிக்கைகளும் இருந்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனக்கசப்புகளினால், பிற்காலத்தில் உணவுப் பண்டங்களை மட்டுமே கோரிக்ககைகளாக வைக்கலாம் என்றும் விதியினை மாற்றிவிட்டார்கள். அத்துடன் பொதியினைப் பெறுபவர், தந்தவர் தனது கோரிக்கையினைச் சொல்லிமுடிக்கு முன்னர் தரப்பட்ட இரணைப் பொருளை உட்கொண்டு விட்டால் அந்தக்கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. மேலும் இது பற்றி விழிப்பாக இருப்பவர்கள் மச்சான் அல்லது மச்சாள் முறையானவர்களிடமிருந்து பொதிகளினைப் பெறுவதைத் தவிர்த்தும் வந்திருக்கின்றனர். ஆனாலும் ஒருமுறை பொதியினைப் பெற்றவர், அநதக் கோரிக்கையை நிறைவேற்றும் பொழுது உணவுப்பண்டங்களுடன் வேறொரு இரணைப் பொருளை வைத்து தனது கோரிக்கையையும் சொல்லிவிடுவதும் நடப்பதுண்டு.

இப்போதும் இந்தப் பழக்கவழக்கம் அங்கே நடைமுறையில் இருக்கிறதா என்பது சந்தேகமே. ஏனெனில் ஊரில் தான் யாருமே இல்லையே. மேலும் வேலணையின் எல்லாப் பிரதேசங்களிலும் இந்த பழக்கவழக்கம் நடைமுறையில் இருந்துவந்ததா என்பதும் தெரியவில்லை.
This entry was posted on 7:01 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On June 28, 2009 at 9:31 PM , சுபானு said...

எனக்கும் ஞாபகம் இருக்கின்றது..

 
On June 29, 2009 at 3:41 AM , கானா பிரபா said...

வணக்கம் வலசு

இந்தச் செய்தி எனக்குப் புதுசு, நல்லதொரு விளக்கம் தந்திருக்கிறீங்கள்.

 
On June 29, 2009 at 5:15 AM , சி தயாளன் said...

கேள்விப்பட்டிருக்கிறேன்...ஆனால் உங்கள் விளக்கம் தான் முழுமையை தந்தது..:-)

 
On June 29, 2009 at 5:35 AM , வாசுகி said...

நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

//ஆனாலும் ஒருமுறை பொதியினைப் பெற்றவர், அநதக் கோரிக்கையை நிறைவேற்றும் பொழுது உணவுப்பண்டங்களுடன் வேறொரு இரணைப் பொருளை வைத்து தனது கோரிக்கையையும் சொல்லிவிடுவதும் நடப்பதுண்டு.//
அடடா, நாம யாரு லேசில விடுவமா


விளக்கம் நன்றாக இருக்கிறது.

 
On June 29, 2009 at 7:24 AM , வந்தியத்தேவன் said...

புதிசாக இருக்கு. இப்போதான் கேள்விப்படுகிறேன். இது வேலணையில் மட்டும் உள்ள பழக்கமா? இல்லை வேறு ஊர்களிலும் இருக்கா?

 
On June 30, 2009 at 5:23 AM , வலசு - வேலணை said...

கருத்துக்களுக்கு நன்றி.

இந்தப் பழக்கம் வேறு ஏதும் ஊர்களில் இருந்ததாய்த் தெரியவில்லை.

 
On June 30, 2009 at 8:22 AM , வி. ஜெ. சந்திரன் said...

இரணை வாழைப்பழம் சாப்பிட்ட இரட்டை பிள்ளை பிறக்கும் என்ற சிறுவயது கதை தெரியும். :)))


ஆனால் நீங்கள் சொல்லும் இரணை பொருள் கதை புதியது. இதுவரை அறியாதது

 
On June 30, 2009 at 5:56 PM , யசோதா.பத்மநாதன் said...

நலமா வலசு? சில நாட்களாக என் தமிழ் எழுத்துகள் வேலை நிறுத்தம் செய்து விட்டு இன்று காலை தான் வேலைக்குத் திரும்பின.

நீங்கள் சொன்ன விடயங்கள் எனக்கும் புதியனவாகவே உள்ளன.

என்னோடு வேலை செய்யும் வியற்னாமியப் பெண் ஒரு முறை சொன்னாள்.தம் நாட்டில் இரட்டையர்கள் பிறந்தால் பிறந்தவுடன் அவர்களது விரல்களை ஒரு பட்டுத்துணியால் ஒரு கட்டுப் போட்டு விடுவார்களாம்.காரணம் அவர்களின் முதல் பிறப்பில் இணைந்து வாழ விரும்பிய 2 உயிர்கள் அது நிறைவேறும் பொருட்டு அவர்களின் விருப்பத்தின் பிரகாரமே இப்பிறப்பில் இணைந்து பிறந்தார்களென்றும் அதனால் இனி நீங்கள் இருவரல்ல; ஒருவர் என்பதை கூறவுமே அவ்வாறு செய்வார்களாம்.

இது எந்த வகையில் உங்களுடய பதிவோடு தொடர்புறுகிறதென்று தெரியவில்லை.ஏனோ இது இப்போது ஞாபகத்திற்கு வந்தது.

 
On July 3, 2009 at 7:09 AM , வலசு - வேலணை said...

மணிஆச்சி!
கொஞ்சம் சுணங்கிப் போனனணை.
குறை விளங்காதீங்கோ. உங்கட தகவல்களுக்கு நன்றி

 
On July 3, 2009 at 7:11 AM , வலசு - வேலணை said...

//
வி. ஜெ. சந்திரன் said...
இரணை வாழைப்பழம் சாப்பிட்ட இரட்டை பிள்ளை பிறக்கும் என்ற சிறுவயது கதை தெரியும். :)))
//
எட! இத இப்பதான் கேள்விப்படுகிறன்

 
On January 4, 2011 at 12:35 AM , Kiruthigan said...

இப்ப தான் கேள்விப்படுறன்...
ஆரும் வேலணை ஆக்களிட்ட கேட்டுப்பாக்கிறன்...