Author: யசோதா.பத்மநாதன்
•6:28 AM
ஆருக்கு மாங்காய் சம்பல் வேணும்?

இந்த பாண் சாப்பிடுறவை, புட்டுச் சாப்பிடுறவை, தோசை சாப்பிடுறவை, இட்லி சாப்பிடுறவை மரவெள்ளிக்கிழங்கும் சம்பலும் வேணுமெண்ணுறவை இல்ல ரொட்டி தான் எனக்கு வேணும் எண்ணுறவை எல்லாரும் இப்ப என்னோட சண்டைக்கு வரக் கூடாது.ஏனெண்டா நீங்கள் தான் இண்டைக்குச் சம்பல் செய்யப் போறீங்கள்.அதோட இதுக்குத் தேவையான பொருளுக்குள்ள முக்கியம் அம்மி குழ(ள?)வி, உரல் உலக்கை.அதோட குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்யிறவையும் வேணும்.எல்லாரும் ஓமோ?

இப்ப குல குலயா முந்திரிக்கா விளையாடிக் களைச்சுப் போனன் எண்டு ஒருத்தரும் சாட்டுச் சொல்லிப் போட்டு ஓடக்கூடாது.எல்லாரும் கால் முகம் கழுவி சாமியக் கும்பிட்டுட்டு ஓடி வாங்கோ. இப்ப பள்ளிக் கூட லீவு தானே? ஆன படியா இனி வீட்டு வேலையும் கொஞ்சம் பழகுங்கோ! ஆம்மிளைப்பிள்ளயள், பொம்பிளப்பிள்ளயள் எல்லாரும் தெரிஞ்சிருக்க வேண்டிய விசயம் இது.

25 வருசத்துக்கு முன்னம் ஈழத் தமிழரின்ர சாப்பாட்டில இந்தச் சம்பலும் அம்மிகுழவி, உரல்உலக்கையும் முக்கிய சாமான்கள்.

சரி, வந்திட்டியளோ?சம்பலில கன வகை இருக்கு பிள்ளயள்.தேங்காய் சம்பல், அதிலையும் உவன் பிள்ள சொன்ன மாதிரி சிவப்புச் சம்பல், பச்சை சம்பல்(வெள்ளச் சம்பல்?),சட்னி - இதுகள விட இஞ்சிச் சம்பல், மாங்காய் சம்பல் எண்டும் சிலது இருக்கு.இப்ப சட்னியப் பற்றி எழுதினா பிறகு இட்லி எப்பிடிச் செய்யிறதெண்டு கேப்பீங்கள்.இடிச்ச சம்பல் எண்டு சொன்னா ஆச்சியாச்சி தோசை சுடணை எண்ணுவியள்.அதில பிறகு எண்ணை தோசை, வெங்காயத் தோசை ஆளாளுக்குச் சுடச் சுடத் தாணை எண்ணுவியள்.பிறகு இது சமையலறையாப் போடுமோ எண்டு தான் எனக்குப் பயம்.கூழ் காரரும் காவல் நிக்கினம்.அதால இஞ்சிச் சம்பல் மாங்காய் சம்பல் இதுகளப் பற்றி மட்டும் சொல்லுறன்.எல்லாத்திலயும் சின்னச் சின்ன மாற்றங்கள் தான்.பிறகு உங்கட ரசனை, விருப்பம், ருசிக்கேற்ற படி நீங்கள் மாத்திறது தானே!

அதோட இன்னொரு விசயம் பிள்ளயள். கவனமாக் கேக்கிறியளே? சமையல் ஒரு கலை. இதுக்கு ஆர்வம் இருக்க வேணும்.கைப் பதம் எண்டு ஒண்டு இருக்குது.ஏனோதானோ எண்டு செய்யக் கூடாது.முழு மன ஈடுபாட்டோட செய்யவேணும். அதுக்கொரு மனம், ரசனை, விருப்பம் எல்லாம் வேணும்.கலை உணர்வோட, மன விருப்பத்தோட, அளவான சூட்டோட,அன்போட,பரிமாறுறதில எல்லாம் ஒரு ருசி இருக்குது.நான் சொன்னா நம்ப மாட்டியள். இதெல்லாம் அனுபவத்தோட தான் வரும்.அதோட சாப்பிடுறவையும் ரசனையோட சாப்பிடுறவையா இருந்தா இன்னும் விசேசம்.

என்ன அங்க நெளியிறியள்! நான் கனக்க கதைக்கிறனே? கோவிக்காதைங்கோ பிள்ளயள். முதல் தொடக்கத்திலேயே இந்த அடிப்படையளச் சொல்லிப் போட்டால் நீங்கள் மறக்க மாட்டீங்கள் தானே! அதுக்காகத் தான் சொன்னனான். கோவிக்காதைங்கோ. எனக்குத் தெரியும் நீங்கள் நல்ல ரசனையான பிள்ளையள்:-)

சரி மாங்காய்சம்பல் அரைப்பமே?

தேவையான பொருட்கள்;

காம்பு நீக்கிக் கழுவிய செத்தல் மிளகாய் 8-10 ( உங்கள் உறைப்பின் தேவைக் கேற்ப)
கறள் இல்லாமல் துருவிய தேங்காய் பூ - பாதி மூடி.
நாரில்லாத தோல் சீவிய மாங்காய் -பாதி
உடைத்துக் கழுவிய சின்ன வெண்காயம் - 3-4
உப்பு - தேவையான அளவு
கழுவிய கருவேப்பிலை - ஒரு நெட்டு

செய்முறை;-

இவை எல்லாவற்றையும் ஒரு தட்டில் தனித்தனியாக வைத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில தண்ணியும் கொண்டு அம்மியடிக்குப் போகவும்.

அம்மியையும் குளவியையும் நன்றாகக் கழுவவும். பின் செத்தல் மிளகாயையும் உப்பையும் வைத்து சற்று நீர் தெளித்து விழுதாக (நன்றாக) அரைக்கவும்.பின் மாங்காயை வைத்து அரைக்கவும். (இது வழுகி விழப் பார்க்கும், கவனமாக அரைக்க வேண்டும்.) நன்றாக அரைபட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிப் போடாமல் தேங்காய்ப் பூவை வைத்து அரைக்க வேண்டும். கரைப் பக்கம் போயிருக்கும் தேங்காய்ப்பூ கலவையை வழித்து நடுவில் வைத்து எல்லாப் பூவும் நன்றாகக் அரைபடும் படி உங்கள் கைகள் லாவகமாக இயங்க வேண்டும். (கையைச் சம்பலுக்குள் வைத்தால் அருகில் வைத்திருக்கும் தண்ணீரில் கையைக் கழுவி விட்டு குளவியைப் பிடிக்கவும்).இறுதியாக இறக்குவதற்கு முன் வெங்காயத்தையும் கருவேப்பிலையையும் வைத்து சற்று நசித்து(அரைவாசி அரைத்து) அவை எல்லாவற்றோடும் சேருமாறு செய்யவும்.(வாசமும் சாரமும் அப்போது தான் தூக்கலாக இருக்கும்.) மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் ஒன்றாக வழித்து நடுவில் ஒன்றாகச் சேர்த்து குளவியை உயர்த்தி , குளவியிலிருக்கும் சம்பலையும் அம்மியிலிடுக்கும் சம்பலையும் ஒன்றாக்கி வட்டமாக உருட்டி கழுவிய கிண்ணமொன்றில் வைக்கவும்.(அம்மி குளவியை கழுவி விட மறக்க வேண்டாம்)

மாங்காய் சம்பல் ரெடி.
இது புளிப்பும் உறைப்புமாக நல்லொரு சுவை பேசும்.

பிற்குறிப்பு;

* இதற்கு தேசிப் புளி விடத்தேவை இல்லை.
* இது இட்லி தோசையைத் தவிர மற்றய பாகங்களுக்கு உகந்தது.

*கீழ் வரும் சம்பல் வகைகளுக்கு தேசிப்புளி பாதி மூடி வேண்டும்.
*இதில் மாங்காய்க்குப் பதிலாக ஒரு கை விரலளவு இஞ்சி வைத்தரைத்தால் இஞ்சிச் சம்பல் ரெடி.
*இவை இரண்டும் வைக்காமல் அரைத்தால் சிவப்புச் சம்பல் ரெடி.
*செத்தல் மிளகாய்க்குப் பதிலாக பச்சைமிளகாய் வைத்தரைத்தால் பச்சைச் சம்பல் ரெடி.
*செத்தல் மிளகாயை பொரித்து உரலில் இடித்தால் இடிச்ச சம்பல் ரெடி.இதற்கு பழப்புளி விட வேண்டும்.தாளித்தும் போடலாம்.தோசைக்கு உகந்தது.
*அடுப்பில் வெங்காயம்,,செத்தல் மிளகாய்,கடுகு, சீரகம்,கருவேப்பிலை போட்டு தாளித்து, அளவான தண்ணீரில் பழப்புளி கரைத்து விட்டு, ஒரு கொதி வந்ததும் அதற்குள் அரைத்து வைத்த சம்பலைக் கலந்து ஒரு சூடு வந்ததும் இறக்கினால் சட்னி ரெடி.இது இட்லிக்கு.

ஆருக்கு என்ன வேணும்?
This entry was posted on 6:28 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On June 27, 2009 at 10:53 AM , வந்தியத்தேவன் said...

ஆச்சி அம்மி என்கிறது மம்மியின் தமிழ்ப்பதமோ? சும்மா பகிடிக்கு
அம்மிக்கு இந்தக்காலத்தில் எங்கே போவது எங்கட ஊர் வீட்டில் என்றால் அம்மி ஆட்டுக்கல் எல்லாம் இருக்கு இங்கே வெறும் மிக்சிதான் எல்லாம் செய்கிறது. மிக்கிசியில் அடிச்சுபார்க்கிறேன் சரிவந்தால் சொல்றேன் இல்லையென்றால் அம்மி மிக்சி ஒன்றும் இல்லாமல் நாங்கள் பள்ளிகூட நாளில் செய்த மாங்காய்ச் சம்பல் செய்யும் செய்முறை தெரியும் சொல்லித்தாரன்.

 
On June 27, 2009 at 5:17 PM , யசோதா.பத்மநாதன் said...

இடம் காலத்துக்கேற்ற படி சம்பலும் எல்லே மாறி விட்டுது!:)

அது பாரம்பரிய சமையல் முறை ராசா.ஆச்சியின்ர சமையல் முறை.சரி, உனக்கு மம்மின்ர சம்பல் வேணுமெண்டா மிக்சி தான் சரி.

உனக்குத் தெரியும் தானே ராசா. உதுகள் எல்லாத்தையும் ஒண்டாப் போட்டு அரைக்கிறது அவ்வளவு தான்.

இப்பத்தயச் சம்பல் ஒண்டு இருக்குது.வெளிநாட்டுச் சமையல் முறை. அதுக்கு மிக்சியும் தேவையில்லை.உலர்ந்த தேங்காய்ப்பூ, மிளகாய்த்தூள் எல்லாம் கடையில விக்குது.தேங்காய்ப்பூவுக்குள்ள கொஞ்சம் சுடுதண்ணிய விட்டுக் குழைச்சா தேங்காய்பூ ரெடி. சிலர் கொஞ்சம் பால் விட்டு மைக்கிறோவேவில 20 செக்கன் விட்டும் செய்யிறவை.அதுக்குள்ள அளவா மிளகாய் பவுடரையும் உப்பையும் போட்டு கலந்து போட்டு அதுக்க வெங்காயம் கருவேப்பிலையை குறுணியா வெட்டிப் போட்டுட்டுத் தேசிக்காய் புளியும் விட்டிட்டுக் குழைச்சா திடீர் சம்பல் ரெடி.

நேரம் மிச்சம்.ஆனா ருசி என்னவோ அம்மிச் சம்பலுக்குக் கிட்டவும் வராது.

 
On June 27, 2009 at 8:17 PM , வலசு - வேலணை said...

ஆச்சி!
நேக்கு (எனக்கு) கருவாட்டுச் சம்பல் தான் வேணும். மாசிக்கருவாட்டைச் சுட்டுப்போட்டு இடிக்கிற சம்பலோட சேர்த்து இடிச்சால்
சும்மா தூக்கும் பாருங்கோ கருவாட்டுச் சம்பல். உதை மாசிச் சம்பல் எண்டும் சொல்லுவினமனை.

 
On June 27, 2009 at 8:18 PM , வாசுகி said...

ஆச்சி நீங்கள் உண்மையிலயே அசல் ஆச்சி தான்.
பெடியளை சமைக்க வைக்காமல் விடமாட்டியள் போல.
மாங்காய் சம்பல் வாய் ஊறுது.
எங்கட வீட்டில எப்பவும் இடிச்ச மிளகாய் சம்பல் மட்டும் தான்.
சின்ன மர உரலில தான் இடிக்கிறனாங்கள்.
இப்ப மாங்காய் சீசன் தானே. மாங்காய் சம்பல் செய்து பார்ப்பம்.
இண்டைக்கு நான் செய்யிற சம்பலோட சாப்பாடு வேண்டாம் எண்டு எல்லோரும் ஓடுகினமோ
தெரியாது. என்ர கைப்பக்குவம் அப்படி ஆச்சி. ஹி ஹி

ரொம்ப நன்றி ஆச்சி.

 
On June 27, 2009 at 9:03 PM , வி. ஜெ. சந்திரன் said...

ஆச்சி எழுதி போட்டு என்ன தமிழ்மணத்திலை இணைக்க மறந்து போன்னீங்கள் போலை.

//இப்பத்தயச் சம்பல் ஒண்டு இருக்குது.வெளிநாட்டுச் சமையல் முறை. அதுக்கு மிக்சியும் தேவையில்லை.உலர்ந்த தேங்காய்ப்பூ, மிளகாய்த்தூள் எல்லாம் கடையில விக்குது.தேங்காய்ப்பூவுக்குள்ள கொஞ்சம் சுடுதண்ணிய விட்டுக் குழைச்சா தேங்காய்பூ ரெடி. சிலர் கொஞ்சம் பால் விட்டு மைக்கிறோவேவில 20 செக்கன் விட்டும் செய்யிறவை.அதுக்குள்ள அளவா மிளகாய் பவுடரையும் உப்பையும் போட்டு கலந்து போட்டு அதுக்க வெங்காயம் கருவேப்பிலையை குறுணியா வெட்டிப் போட்டுட்டுத் தேசிக்காய் புளியும் விட்டிட்டுக் குழைச்சா திடீர் சம்பல் ரெடி.//

இந்த சம்பல் தான் பொதுவா இங்க செய்யிறது. என்னட்டை கல்லூரல் கிடக்கு. அதாலை இடிச்ச சம்பல் செய்யலாம். ஆனா காய்ஞ்ச தேங்காய் பூவை ஊறவைச்சு, இல்லை மைக்கிறோவேவிலை தண்ணிய்யொட வைச்சு மெதுமையாக்க வேணும்.

இப்ப கனடாவிலை போத்திலை அடைச்ச சம்பல் கிடைக்குது. கனபேரோட வாழ்க்கை அதோடையே போகுது

 
On June 28, 2009 at 1:05 AM , யசோதா.பத்மநாதன் said...

வலசு உங்கள் சுவை ரசனை அபாரம்.அது மிகவும் சுவையானது தான்.

முழுக்க முழுக்க மறந்து போயிருந்த ஒரு சம்பல் வகையை ஞாபகப் படுத்தினீர்கள்.

சீனிச் சம்பல் என்று ஒருவகை இருக்கிறது தெரியுமா? அது மாதிரி வல்லாரைச் சம்பல்?

 
On June 28, 2009 at 1:25 AM , யசோதா.பத்மநாதன் said...

பிள்ள வாசுகி சுகமாய் இருக்கிறியே மோன?

இந்த இளம் பிள்ளயள் தனிய அறை வழிய இருந்து கஸ்ரப் படுதுகள் ராசாத்தி.இப்பிடிச் சின்னச் சின்ன விசயங்களை அறிஞ்சிருந்தா ஒரு மாதிரி சமாளிச்சுப் போடுங்கள்.

எப்பிடி இருக்க வேண்டிய பிள்ளயள் மோன! போர் வந்து அதுகள தனித் தனியா தூக்கி எறிஞ்சு விட்டுட்டுது.

பொம்பிளப் பிள்ளயள் எப்பிடியோ சமாளிச்சுப் போடுங்கள்.ஒரு வேலை ஒண்டு எடுத்திட்டுதுகள் எண்டாச் சரி.ஆனா நாங்கள் இந்த ஆம்பிளப் பிள்ளயள அடுப்படிக்குள்ள விட்டு பழக்கிறயில்ல தானே! அதால அதுகள் தான் கூடக் கஸ்ரப் படுதுகள்.

அது மட்டுமில்லப் பிள்ள ஆணும் சரி பெண்ணும் சரி தன்ர காலில தான் நிக்கப் பழக வேணும் தங்கம்.வாழ்க்கையில எதுவும் எப்பவும் நடக்கலாம்.அதால எல்லாம் தெரிஞ்ச ஆக்களா இருந்திட வேணும்.அப்பிடியெண்டா எவ்வளவு கம்பீரமா கலங்காமல் இருக்கலாம் சொல்லு!

சம்பல் எப்பிடி வந்தது பிள்ள? எனக்கொருக்கா வந்து சொல்லிப் போடு என்ன?

 
On June 28, 2009 at 1:44 AM , யசோதா.பத்மநாதன் said...

ராசா சந்திரா,

உந்தத் தமிழ் மணத்தில இணைக்கிறதொண்டும் எனக்குத் தெரியாது ராசா.ஆரோ உந்தப் பிள்ளயள் தான் உதுகளச் செய்யுதுகள்.அதுகளுக்கு நான் நன்றி சொல்ல வேணும்.

மற்றது ராசா,fresh ஆன frozen தேங்காய்ப்பூ தமிழ் கடையள் வளிய இருக்கும் ராசா கேட்டுப் பார்.ஆனா தேங்காய்ப் பால் கொலஸ்ரோல் எண்டு சொல்லீனம் உதுகள்ள கொஞ்சம் கவனமா இரு ராசா.

பெரிய கல்லுரல் வச்சிருக்கிறியோ மோன? அல்லது உந்தச் சீனரின்ர சின்னக் கல்லுரலோ?

ஒருக்கா என்ர வீட்டுப் பக்கம்(அக்ஷய பாத்திரம்) வந்து போறியே? ருசியா 5 நிமிசத்தில வல்லாரைச் சம்பல் எப்பிடிச் செய்யிறதெண்டு ஒரு பதிவு போட்டு விடுறன்.நல்ல சத்தும் ருசியும்.

இஞ்ச போடலாம் தான். அது பிறகு சமையலறையா மாறிவிடக் கூடாது மகன். அதால தான்.நீ போற பாதையில ஒருக்கா வந்திட்டுப் போவன்!

 
On June 28, 2009 at 9:43 AM , வி. ஜெ. சந்திரன் said...

//பெரிய கல்லுரல் வச்சிருக்கிறியோ மோன? அல்லது உந்தச் சீனரின்ர சின்னக் கல்லுரலோ?//

பெரிய கல்லுரல் எல்லாம் இல்லை. அதை வச்சு இடிக்க கீழ் வீட்டுகாரன் அடிக்க வந்திடுவான் :).

சின்ன கருங்கல்லுரலும், கருங்கல்லு உலக்கையும்.

 
On July 3, 2009 at 6:26 AM , நிலாமதி said...

இளமை கால l ஞாபங்கள் வந்து போகின்றன. பதிவுக்கு நன்றி நட்புடன் நிலாமதி

 
On July 3, 2009 at 5:50 PM , யசோதா.பத்மநாதன் said...

சந்திரா,

அப்ப அப்பிடி எண்ணுறாய் ராசா.

சம்பலோட உரல் உலக்கையும் மொடேனா வந்திட்டுதாக்கும்.

 
On July 3, 2009 at 5:56 PM , யசோதா.பத்மநாதன் said...

நிலா மதி,

வருக தோழி.

ஈழத்து முற்றம் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.

இது உங்களின் முற்றமுமல்லோ!உரிமையோடு வாருங்கள்.

 
On July 4, 2009 at 9:15 PM , வி. ஜெ. சந்திரன் said...

//சம்பலோட உரல் உலக்கையும் மொடேனா வந்திட்டுதாக்கும்//

ஓம் ஓம்

இங்கை பாருங்கோ என்னட்டை இருக்கிற உரல் உலக்கையோட படம் போட்டிருக்கிறன்.அதோட ஒரு சம்பல் செய்முறையும் போட்டிருக்கிறன் :)

http://thamizhcooking.blogspot.com/

 
On July 15, 2009 at 11:09 PM , வசந்தன்(Vasanthan) said...

ஓய்...

உந்த சீனிச்சம்பல் செய்யிற முறையை ஆராவது விலாவாரியா எழுதுங்கோவன்.

நல்ல அறாவிலைக்கு வெங்காயம் வரேக்க வேண்டிச் செய்யலாம்.