Author: வந்தியத்தேவன்
•11:02 AM
யாழ் தமிழரின் உயிர்-மெய் ஒலிப்பு வழக்கு என்ற பதிவில் மொழிவளனின் சில கருத்துக்கள் ஒரு சிறிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நண்பர்களான மு.மயூரனினதும் கண்டும் காணானினதும் கருத்துக்கள் விவாதத்துக்குரிய பொருளாகியிருக்கின்றது.

இந்த குழுமத்தில் நாங்கள் இலங்கைத் தமிழராக பொதுவாக இலங்கைத் தமிழரை ஈழத்தமிழர் என்ற சொற்பதம் கொண்டு அழைப்பதில் தப்பில்லை. போராட்ட காலத்தில் பயன்படுத்திய ஈழம் என்ற வார்த்தையை இன்றைக்கும் பல அரசியல் கட்சிகள் தங்கள் பெயரில் வைத்திருப்பதாலும் அத்துடன் இலங்கைக்கு ஈழம் என்ற இன்னொரு பெயர் இருப்பதாலும் ஈழத்தமிழர் என்ற சொன்றபதம் பிழையில்லை என்பது என்கருத்து.

அத்துடன் பிரதேச வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒரே குடையில் கீழ் ஒன்றாகவேண்டும் என்பதுதான் எனது ஆசையும் இக்களத்தின் இருக்கும் அனைவரினது ஆசையும்கூட.

இங்கே நாம் எங்கள் ஊர்களில் எங்கள் பிரதேசங்களில் பாவனையில் உள்ள அல்லது பாவித்த(காரணம் சில இடங்களில் இப்போது தமிழக ஊடகங்களின் தாக்கம் பல சொற்களை மறக்கச் செய்துள்ளன, தமிழக ஊடகங்களின் தாக்கம் பற்றி இன்னொரு பதிவில் விவாதிக்கலாம்)சொற்களைத் திரட்டுவதும் எம் ஊர் பிரதேச கலை கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய ஞாபகப்படுத்தலாகவும் பதிவு செய்வதே இக்குழுமத்தின் தலையாய கடமை.

உங்கட ஊர் பாசை நல்லது நம்மட ஊர் பாசை நல்லது என்பது அல்ல. நான் இங்கே ஊர் என்ற வார்த்தையைப் பாவிக்க காரணம் அடிப்படையில் நான் யாழ்ப்பாணம் என்ற மாவட்டத்தில் , வடமராட்சி என்ற பிரதேசத்தில் கரவெட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன். என்னுடைய ஊரில் பாவிக்கும் சில சொற்கள் பக்கத்து ஊரில் பாவிப்பதில்லை. உதாரணமாக பருத்தித்துறையில் பாவிக்கும் சில சொற்கள் கரவெட்டியில் பாவிப்பதில்லை, வல்வெட்டித்துறையில் பாவனையுள்ளது பருத்தித்துறையில் இருக்காது. இப்படி ஊர் ஊருக்கு பல சொற்கள் வேறுபடும்.

வடமராட்சியை எடுத்தால் வடமராட்சி கிழக்கில் ஒரு வகையான சொற்கள் கலைகள் கலாச்சாரங்கள் வடமராட்சி மேற்கில் இன்னொரு வகை. இப்படி எமது பிரதேசத்தில் கூட நாம் வேறுபாடாகவே இருக்கின்றோம். இதில் பிழையில்லை என்றே நினைக்கின்றேன்.

ஒரு சில மொழியில் அதிலும் வட்டார மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் நான் பேசும் மொழியைவைத்தே என்னை எந்த ஊர் எனக் கண்டுபிடிப்பார்கள்.

மு.மயூரன் கூறியதுபோல் "எந்த வட்டார வழக்கும் துல்லியமானது கிடையாது. மொழியில் துல்லியம் என்றொன்றில்லை". எனக்கு இன்னொரு வட்டாரத்தில் இருக்கிறவன் பேசுகின்ற என் மொழியே சிலவேளைகளில் நகைப்புக்குரியதாக இருந்தது.

இது தமிழர்களுக்கு மட்டுமல்ல ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவனுக்கும் பொருந்தும். அமெரிக்காகாரன் ஒரு ஸ்டைலில் பேசுவான் இங்கிலாந்துக்காரன் ஒரு ஸ்டைல் அவங்களைப் பார்த்து நாம ஒரு ஸ்டைல் என ஆங்கிலம் வேறுபடுபதுபோல் தமிழும் இடத்திற்க்கு இடம் மாறுகின்றது. மொழி என்பது ஒருவருடன் ஒருவர் உரையாடவும் புரிந்துகொள்ளவும் உதவும் சாதனமே ஒழிய மதம் போல் நீ இப்படித்தான் மொழியைப் பாவிக்கவேண்டும்(உரையாடலில்) என்ற கட்டுப்பாடுகள் இல்லை.

ஆகவே இக்குழுமத்தில் நான் பெரிது என் வட்டாரச் சொல்தான் சிறந்தது என்ற விவாதங்களை விட்டுவிட்டு உங்கள் வட்டார பிரதேச மொழிகளையும் ஏனைய கலை கலாச்சாரச் சிறப்புகளையும் மற்றவர்களுடன் பகிருங்கள். இந்தப் பதிவு யாரையும் புண்படுத்தவல்ல.
This entry was posted on 11:02 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On June 22, 2009 at 4:46 AM , கானா பிரபா said...

இந்தத் தளத்தில் ஈழத்தின் பல்வேறு தமிழ் பேசும் பிரதேசத்தினைச் சார்ந்தவர்களது பேச்சு வழக்கு, பண்பாட்டுப் பதிவுகள் தொடரட்டும்.

பதிவுக்கு நன்றி வந்தி

 
On June 22, 2009 at 9:26 AM , ஃபஹீமாஜஹான் said...

"ஆகவே இக்குழுமத்தில் நான் பெரிது என் வட்டாரச் சொல்தான் சிறந்தது என்ற விவாதங்களை விட்டுவிட்டு உங்கள் வட்டார பிரதேச மொழிகளையும் ஏனைய கலை கலாச்சாரச் சிறப்புகளையும் மற்றவர்களுடன் பகிருங்கள். இந்தப் பதிவு யாரையும் புண்படுத்தவல்ல."

இதனை நானும் வரவேற்கிறேன்.

இந்தப் பக்கத்தில் பங்குகொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய கொள்கைகளில் ஒன்றாக இந்தக் கருத்தையும் வைக்கலாம் பிரபா.

 
On June 22, 2009 at 6:23 PM , கண்டும் காணான் said...

நன்றி வந்தியத்தேவன்

 
On June 23, 2009 at 1:55 AM , யசோதா.பத்மநாதன் said...

எல்லோரும் வாருங்கள்.
இணைவோம்; உயர்வோம்.

 
On June 23, 2009 at 7:43 AM , வந்தியத்தேவன் said...

கானா, பஹீமாஜஹான், கண்டும்காணான், மணிமேகலா உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள்.

அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் ஒரு நாளைக்கு ஒருபதிவாவது யாராவது ஒருவர் எழுதுங்கள். கடந்த சில நாட்களாக நம்ம வீடு வெறிச்சோடிப்போய்கிடக்கு. அனைவரும் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டீர்களோ தெரியவில்லை.

 
On June 23, 2009 at 8:57 AM , மொழிவளன் said...

//மொழிவளனின் சில கருத்துக்கள் ஒரு சிறிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.//

நான் குறிப்பிட்டப் பதிவில், எந்த ஒரு ஒலிப்பு வழக்கையும் உயர்த்தியோ தாழ்த்தியோ எழுதியதாகக் கொள்ள வேண்டாம். ஆனால் யாழ்- பேச்சு வழக்கில் சில சொற்களை ஒலிக்கும் வழக்கு வேறுப்பாட்டையே சுட்டியிருந்தேன்.

அவ்வாறு யாழ்- தமிழரின் உச்சரிப்பு தொடர்பாக சிலர் என்னுடன் எழுப்பிய விவாதங்களுக்கான பதிலுமாக யாழ்-தமிழக-கொழும்பு ஒலிப்பு வேறுப்பாடுகளைச் சுட்டியிருந்தேன்.

இருப்பினும், அப்பதிவு முரண்பாடுகளை எழுப்புவதாக இருந்தால் நீக்கிவிடுவோம்.

நன்றி

 
On June 23, 2009 at 9:16 AM , மொழிவளன் said...

//அமெரிக்காகாரன் ஒரு ஸ்டைலில் பேசுவான் இங்கிலாந்துக்காரன் ஒரு ஸ்டைல்//

பிரித்தானிய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையிலான மாற்றம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது. அது அரசியல் புறக்காரணிகளின் பின்னனியில் தோற்றம்பெற்றது.

"American Should speak American English" எனும் கோட்பாட்டிற்கமைய உருவாக்கப்பட்டது.

//அவங்களைப் பார்த்து நாம ஒரு ஸ்டைல் என ஆங்கிலம் வேறுபடுபதுபோல்//

அவங்களைப் பார்த்து நாமும், ஆங்கில மொழியை தாய்மொழியாகக் கொள்ளாதவரின் உச்சரிப்பும், தத்தமது மொழியின் ஒலிப்பு வழக்கில் ஒன்றிவிட்ட நிலையில், ஆங்கில உச்சரிப்புக்களை சரியாக உச்சரிக்க முடியாமையினால் விளைவது.

பிலிப்பீனியர்கள் "Central" என்பதை "செண்த்தல்" என்று உச்சரிக்கின்றனர். அவர்களுக்கு "T" ஒலிப்பு வருவதில்லை. சீனருக்கு ர, ற இரண்டுமே வருவதில்லை.

அதேவேளை தலைமுறைகளாக ஆங்கில தேசங்களில் வசித்து ஆங்கிலத்தை கற்போரிடமும், கதைப்போரிடமும் அவ்வாறான சிக்கல்கள் இல்லை.

காரணம் ஆங்கிலம் மொழி கற்பிக்குமிடங்களில் உச்சரிப்பு பயிற்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகவே நான் பார்க்கின்றேன். இது குறித்த ஒரு இடுகை:
http://aangilam.blogspot.com/2009/06/pronunciations.html

 
On June 23, 2009 at 7:05 PM , வந்தியத்தேவன் said...

நண்பர் மொழிவளனுக்கு
உங்கள் பதிவில் எந்தப் பிரச்சனையும் இல்லை மு.மயூரன் எரிச்சலடைந்தபடியால் தான் அவரது எரிச்சலைத் தணிக்க இந்தப்பதிவை எழுதியிருக்கின்றேன். எம்மிடம் இருக்கும் பிரதேச வேறுபாடுகளைக் களையவேண்டும். மற்றும்படி உங்கள் பதிவை அகற்றவேண்டாம்.

சிலர் ஈழம் பற்றி தப்பான விளக்கம் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கவுமே இந்தப் பதிவு

ஆங்கிலம் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

 
On June 24, 2009 at 6:41 AM , வலசு - வேலணை said...

//
"ஆகவே இக்குழுமத்தில் நான் பெரிது என் வட்டாரச் சொல்தான் சிறந்தது என்ற விவாதங்களை விட்டுவிட்டு உங்கள் வட்டார பிரதேச மொழிகளையும் ஏனைய கலை கலாச்சாரச் சிறப்புகளையும் மற்றவர்களுடன் பகிருங்கள். இந்தப் பதிவு யாரையும் புண்படுத்தவல்ல."
//
நானும் இதை வழிமொழிகிறேன்

 
On June 25, 2009 at 2:30 AM , தமிழன்-கறுப்பி... said...

சரிதானே இதுல என்ன டவுட் பெடியளுக்கு... :)

சும்மா சண்டை பிடிக்கிற வேலையை விட்டட்டு வேலையைப்பாருங்கோ...

:))

நன்றி..!

 
On June 25, 2009 at 3:24 AM , யசோதா.பத்மநாதன் said...

:).

நன்றி கறுப்பி!

சின்னக் காலால ஓடிப் போய் எல்லாரையும் கூட்டிக் கொண்டு ஓடி வாணை!