Author: மொழிவளன்
•6:09 AM
வட்டார வழக்குகள் எனும் போது யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணம் அல்லாத தமிழர்களின் பேச்சு வழக்கில் இருந்து வேறுப்பட்டாலும், அவை “அமெரிக்கன் செலாங்”, “பிரிட்டிசு செலாங்” போன்றதான ஒரு வழக்காகவே பார்க்கலாம்.

இருப்பினும் சொற்களை உச்சரிப்பதில், யாழ்ப்பாணத் தமிழரின் ஒலிப்பு மிகவும் துல்லியமானது.

எடுத்துக்காட்டு:

“தேங்காய்” எனும் சொல்லை எடுத்துக்கொண்டோமானால், இந்த “தேங்காய்” எனும் சொல்லை நாம் உச்சரிக்கும் பொழுது, தேங்-காய் என்பதனை துல்லியமாகவே உச்சரிக்கின்றோம். இச்சொல்லின் கடைசி எழுத்தான “ய்” மௌனமாக ஒலிக்கப்பட்டாலும், இவ்வுச்சரிப்பை அவதானித்தால் “தேங்” என்பதுடன் “காய்” என்பதும் மிகத் துல்லியமாக ஒலிக்கப்படும்.

இவ்வாறு வேறு சில சொற்கள்:

புடலங்கா(ய்)
மாங்கா(ய்)
கத்தரிக்கா(ய்)
பூசணிக்கா(ய்)

அதேவேளை கொழும்பு தமிழர், தமிழகத் தமிழர் உச்சரிக்கும் பொழுது இந்த “தேங்காய்” என்பதில் “காய்” என்பது சரியாக உச்சரிக்கப்படுவதில்லை. தேங்-காயீ என்பது போன்று சிலரும், தேங்-கா என்பது போன்று "ய்" ஒலிப்பின்றிய சிலரும் உச்சரிக்கின்றனர்.

இதில் கத்தரிக்கா(ய்), பூசணிக்கா(ய்) போன்றச் சொற்களை, கத்தரிக்கா, பூசணிக்கா என சின்னக்கா, பெரியக்கா போன்றும் உச்சரிக்கின்றனர்.

இங்கே "காய்" அக்கா ஆகிவிடுகின்றது.

உயிர் – மெய்

யாழ்ப்பாணத் தமிழர் பேசும் பொழுது சொற்களை மிகவும் கடினப்பட்டு ஒலிப்பதாக என்னுடன் சிலர் வாதிட்டனர். உண்மையில் யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் சொற்களை உச்சரிக்கும் போது அதில் உயிர் மெய் எழுத்துக்கள் திருத்தமாகவும் துல்லியமாகவும் உச்சரிக்கப்படுகின்றது.

எடுத்துக்காட்டு:

மலர் – இதில் “ம்” எனும் மெய் எழுத்தும் “அ” எனும் உயிர் எழுத்தும் துல்லியமாக உச்சரிக்கப்படும்.

ம்+அ+ல்+அ+ர் = மலர்

இவ்வாறான துல்லியமான ஒலிப்புக்களையே மற்றோர்கள் கடினத்துடன் உச்சரிக்கப்படுவதாகக் நினைக்கின்றனர். அதேவேளை மற்றோரின் உச்சரிப்புக்களில் உயிர்-மெய் எழுத்துக்கள் துல்லியமாக ஒலிக்கப்படாமல், மேலெழுந்த வாரியாக உச்சரிக்கப்படுகின்றது. இன்னும் சிலரோ மலரு.. என்றும் உச்சரிக்கின்றனர்.

இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கோவன்.

அன்புடன்
மொழிவளன்
This entry was posted on 6:09 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

23 comments:

On June 15, 2009 at 3:41 PM , யசோதா.பத்மநாதன் said...

யாழ்ப்பாணத் தமிழில் ஒலிப்புத் துல்லியம் இருக்கின்றது என்பது உண்மை தான்.அதனாலேயே அது சற்றுக் கடினப் பட்டுப் பேசப் படுவதாக தோன்றுகிறது.

சொல்லின் ஒலி முடக்குகளுக்குள் எல்லாம் முடங்கி முடங்கி வரும்.கடைசிச் சொல் வரை வந்து முடியும்.

உங்கள் கடைசிச் சொல்லைப் பாருங்களேன்.'போங்கோவன்'என்ற சொல்லின் முழு எழுத்தும் உச்சரிக்கப் பட்டு முடியும்.

மற்றவர்கள் பேசும் போது போங்கோ, போம்மா,போப்பா, போம்போது என்று சற்று இலகுப் பட்டு இருக்கும்.

 
On June 15, 2009 at 4:22 PM , யசோதா.பத்மநாதன் said...

ஒரு சிறு திருத்தம். போங்கோவன் அல்ல. சொல்லுங்கோவன் என்பது தான் அந்த கடசிச் சொல்.

தவறுக்கு வருந்துகிறேன்.

 
On June 15, 2009 at 7:53 PM , வி. ஜெ. சந்திரன் said...
This comment has been removed by the author.
 
On June 15, 2009 at 7:55 PM , வி. ஜெ. சந்திரன் said...

மொழி வளன்,
நீங்கள் சொல்லுவது ஓரளவுக்கு தான் சரி என்று நினைக்கிறேன்....
எல்லாரும் எல்லா நேரமும் அறுத்துறுத்து கத்தரிக்காய், தேங்காய் என சொல்வதில்லை, ஒரே நபரே சந்தர்ப்பத்தை பொறுத்து ஒன்றிற்கு மேற்பட்ட வகை உச்சரிப்பை பயன்படுத்தும் சந்தர்ப்பம் உண்டு.

கத்தரிக்கா(ய்)
புடலங்கா(ய்)

சொல்லுங்களை உச்சரிக்கும் போது/ சாதாரணமாக கதைக்கும் போது கத்தரிக்காய் என்று ய் தெளிவாக கேட்க உச்சரிப்பதிலும் கத்தரிகா இதில் முடியும் கா உச்சரிப்பு கா ஆல்ல
அந்த உச்சரிப்பை உச்சரிச்சு தான் காட்ட முடியும், எழுத்தில் எழுத முடியாது, சிங்களத்தில், தமிழில் இருக்கும் அ ஆ வை விட மெலும் இரண்டு அ ஆ இருக்குதெல்லோ, அந்த 4 அவது நெடில் ஆ (கா) வை ஒத்த உச்சரிப்பில்
கத்தரிக்கா என உச்சரிப்போரும் யாழ்பாணத்தில் உள்ளனர்.

 
On June 16, 2009 at 7:07 AM , M.Rishan Shareef said...

ஆமாம்..எங்கள் பகுதியில் கூட 'தேங்கா', 'மாங்கா' தான். 'ய்' உச்சரிக்கப்படுவதில்லை :(

 
On June 17, 2009 at 8:20 AM , சயந்தன் said...

ஆனா யாழ்ப்பாணத்திற்குள்ளேயே.. பிரதேச ஒலி வித்தியாசம் இருக்கு.

எனது கிராமத்தில் ஐம்பது சதத்தை ஐம்பேசம் என்போம். அடுத்த கிராமத்தில் ஐம்பேயம் என்பார்கள். ஐம்பசமும் உண்டு.

 
On June 17, 2009 at 12:08 PM , மு. மயூரன் said...

ஈழத்தமிழரின் ஒலிப்புத்துல்லியம் எண்டு தலைப்புப் போட்டிட்டு யாழ்ப்பாணத்தமிழின் ஒலிப்புப்பற்றி பதிவு போகுது.. இது அவளவு நல்லா இல்ல.

காய் என்பதை kaay எனாமல் kaey என்று உச்சரிப்பதில் என்ன துல்லியம் இருக்கோ நானறியேன்.

என்னுடைய வட்டாரத்தில் , கிழக்கில், வாய் என்பதை சாதாரண பேச்சு வழக்கிலும் துல்லியமாக vaay என்று தான் சொல்வார்கள். யாழ்ப்பாணத்து ஆட்கள் vae என்பார்கள். எது துல்லியம்? நாய்க்கும் இது பொருந்தும்.

மலையகத்தில் "வந்தேன்" என்பதை "ன்" மென்மையாய் ஒலிக்கும்படி உச்சரிப்பார்கள். வடக்குக்கிழக்குக்காரர் (நானும்) "வந்தன்" என்பர்கள். படு இலக்கணப்பிழையாய். இங்கே மலையக வழக்கு மிகத்துல்லியமானது.

எந்த வட்டார வழக்கும் துல்லியமானது கிடையாது. மொழியில் துல்லியம் என்றொன்றில்லை.

ஈழத்தமிழ் என்றாலே யாழ்ப்பாணத்தமிழ் என்ற நினைப்புத்தான் எரிச்சலூட்டுவது.

 
On June 19, 2009 at 6:44 PM , கண்டும் காணான் said...

அன்பு நண்பர்களே , நான் எதை எண்ணி பயந்து , அறிமுகப் பதிவில் பின்னூட்டம் இட்டேனோ , அதே ஒற்றுமையின்மை இங்கே மெதுவாக காலடி வைக்கின்றது. இது ஒரு நல்ல நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட தளம். கானா பிரபா கூறியது போல நாம் ஒற்றுமையாக செயற்படவேண்டும். "ஈழத்தமிழர்களின் ஒலிப்புத் துல்லியம்" எனத் தலைப்பிட்டு , யாழ்ப்பான துல்லியம் என்று எழுதாது , தயவு செய்து , "யாழ்ப்பாண உச்சரிப்பு" என்றே மாற்றிவிடுங்கள் ஏனெனில் இது எமது பேச்சு வழக்கை, தற்பெருமை அல்லது இகழ்ச்சி செய்யும் இடமல்ல.அதேபோல இப்படி நேரடியாக "எரிச்சலூட்டுகின்றது" என்று பதிலளிக்காமல் , இதை ஈழவர் மட்டுமல்ல மற்ற நாட்டவர்களும் வாசிக்கின்றனர் என்று உணர்ந்து எழுதுங்கள். எந்த பிரதேசவாதம் எம்மை அழித்ததோ, அதற்கு எமது தளம் ஒரு களமாக அமைந்து விடக்கூடாது.

 
On June 19, 2009 at 7:51 PM , கானா பிரபா said...

வணக்கம் மயூரன் மற்றும் கண்டும் காணான்

உங்கள் கருத்துக்களுக்கேற்ப தலைப்பை விரைவில் மாற்றுகின்றோம்.

மிக்க நன்றி

 
On June 19, 2009 at 8:01 PM , வந்தியத்தேவன் said...

நாம் இங்கே தமிழ் இலக்கணம் படிப்பிக்கவில்லை நம்ம வட்டார வழக்கில் உரையாடுகின்மறோம் அவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம் இதில் எங்கே இலக்கணம் வந்தது.

//இங்கே மலையக வழக்கு மிகத்துல்லியமானது.

எந்த வட்டார வழக்கும் துல்லியமானது கிடையாது. மொழியில் துல்லியம் என்றொன்றில்லை. //

இந்த முரண்பாடு சிரிப்பாக இருக்கு. மலையக வழக்கு துல்லியம் என்கிறார் அடுத்த வரியில் எந்த வட்டார வழக்கும் துல்லியம் இல்லையென்கிறார். நாம் இங்கே எந்த வழக்கு துல்லியம் எது பிழை என்று கதைக்கவரவில்லை. பாவிக்கும் சொற்களைப் பற்றித்தான் பேசுகின்றோம்.

 
On June 19, 2009 at 9:53 PM , மொழிவளன் said...

அன்புடன் மு.மயூரன்

//ஈழத்தமிழரின் ஒலிப்புத்துல்லியம் எண்டு தலைப்புப் போட்டிட்டு யாழ்ப்பாணத்தமிழின் ஒலிப்புப்பற்றி பதிவு போகுது.. இது அவளவு நல்லா இல்ல.//

தலைப்பை மாற்றிவிட்டேன்.

//காய் என்பதை kaay எனாமல் kaey என்று உச்சரிப்பதில் என்ன துல்லியம் இருக்கோ நானறியேன்.//

இதனைத்தான் யாழ்ப்பாணத்தவருக்கே உரிய துல்லியம் என்கின்றேன்.

இங்கே "காய்" எனும் சொல் kaey என்பதுப் போல் ஒலிப்பதாக பலரும் நினைக்கின்றனர்.

ஆனால் "க்" எனும் மெய்யெழுத்தும், "ஆ" எனும் உயிரெழுத்தும் அழுத்தமாகவும் திருத்தமாகவும் உச்சரிக்கப்படுவதே அவ்வாறு பலர் நினைக்கக் காரணமாகின்றது.

தவிர kaay என ஒலிப்பதாகக் கூறுவோரின் காயி அல்லது காயீ என்றுதான் உச்சரிக்கின்றனர்.

இங்கே vae என்பதும் அப்படித்தான்.

வ்+ஏ+ய் = வாய் என்று சரியாகவே உச்சரிக்கப்படுகின்றது.

அது சிலருக்கு "vae" என்பதுப்போன்ற உணர்வை ஏற்படுத்தலாம்.

//ஈழத்தமிழ் என்றாலே யாழ்ப்பாணத்தமிழ் என்ற நினைப்புத்தான் எரிச்சலூட்டுவது.//

ஈழம் எனும் சொற்பதம் பொதுவாக இலங்கை வாழ் அனைவரையுமே குறிப்பதாகச் சொல்ல முடியாது. அவ்வாறு கூறுவதாயின் "இலங்கை" என்று தான் கூறவேண்டும்.

ஈழம் என்று தம்மை குறிக்காத, குறிப்பிட விரும்பாத இலங்கையின் பிறமாவட்டங்களை சார்ந்தோரும் இருக்கவே செய்கின்றனர்.

ஆனால் யாழ்ப்பாணத்தவரே தமது கலை, இலக்கியப் படைப்புகளை "ஈழம்" எனும் முன்னொட்டுடன் முன்வைத்து வந்தவர்கள் என்பதும் எண்ணிப் பார்க்கப்பட வேண்டியது.

எனக்குத் தெரிய தமிழீழக் கோரிக்கையின் பின்பே வடக்கு கிழக்கு பிரதேசங்களும் ஈழமாகப் பார்க்கப்பட்டது.

இருப்பினும் "ஈழம்" எனும் சொல் யாழ்ப்பாணத்தவரை மட்டுமே குறிப்பது போன்று இருப்பதால் தலைப்பை மாற்றியுள்ளேன்

நன்றி

 
On June 19, 2009 at 9:56 PM , மொழிவளன் said...

- சயந்தன்

//ஆனா யாழ்ப்பாணத்திற்குள்ளேயே.. பிரதேச ஒலி வித்தியாசம் இருக்கு.//

ஓம் சயந்தன்.

நான் இங்கே சில சொற்களை குறித்த ஒலிப்புகளை மட்டுமே கூறியுள்ளேன்.

நன்றி

 
On June 19, 2009 at 9:57 PM , மொழிவளன் said...

- மணிமேகலா

உங்கள் கருத்துக்கு நன்றி

 
On June 19, 2009 at 10:02 PM , மொழிவளன் said...

- வி.ஜெ.சந்திரன்
- எம். ரிஷான் செரீப்
- கண்டும் காணான்
- வந்தியதேவன்

அனைவருக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி

 
On June 19, 2009 at 10:24 PM , கண்டும் காணான் said...

நன்றி மொழிவளவன், உடனே தலைப்பை மாற்றியதில் இருந்தே , இங்கே ஒற்றுமை விளங்கும் என்ற நம்பிக்கை ஒளிர்விடுகிறது.

 
On June 20, 2009 at 12:55 AM , மு. மயூரன் said...

கண்டும் காணான்,

கண்டும் காணாமல் இருப்பதல்ல, மாறாக மனதில் பட்டதை வெளிப்படையாக உரையாடுவதிலேயே உண்மையான ஒற்றுமை ஏற்படும். இங்கே பங்களிப்பாளர்களில் 90% ஆனவர்கள் எனது நண்பர்கள். நான் கருத்தொற்றுமை காணும் ஆட்கள். வெறுப்புடன் அல்ல, மாறாக தோழமையுடனேயே எனது கருத்துக்கள் இங்கே முன்வைக்கப்பட்டன.

நீங்கள் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்ல எனக்கு பயமாயிருக்கு. மகிந்த ராஜபக்சவும் தான் ஒற்றுமை ஒற்றுமை என்கிறார், தமிழ் முஸ்லிம் என்றெல்லாம் கதைக்காதே என்கிறார் ;)

வேற்றுமைகளை மறுப்பதல்ல. மாறாக வேற்றுமைகளை, பல்வகைமையை ஏற்றுக்கொள்வதில்தான் உண்மையான ஒற்றுமை இருக்கிறது.



வந்தியத்தேவன்,

ஒவ்வொரு பிரதேசத்தில் ஒவ்வொரு பயன்பாடு துல்லியமாக இருக்கும் என்பதைச்சொல்லத்தான் மலையகத்தில் "வந்தேன்" சரியாக உச்சரிக்கப்படுவதையும் வடக்குக்கிழக்கில் அது படுபிழையாக உச்சரிக்கப்படுவதையும் எடுத்துக்காட்டினேன்.

யாழ் உச்சரிப்பு சரியானது எனில், "வந்தன்" என்று சொல்வது எவ்வளவு தவறானது?

சிலது சரியாய் இருக்க சிலது தவறாயிருக்கு.

ஒவ்வொரு வட்டார வழக்கிலும் துல்லியம் துல்லியமின்மைகள் உண்டு. அந்தத் "துல்லியம்" எனும் கற்பிதம் கூட மிகையானதே. இப்போதைக்கு எம்மிடமிருக்கும் பழைய இலக்கண ஆதாரமான தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ள உச்சரிப்பு முறையை வைத்தே நாம் எதையும் உரசிப்பார்க்க முடிகிறது.


மொழிவளன்,

தலைப்பை மாற்றியதற்கு நன்றி.

K + AA + Y
K + AE + Y

இதில் எது இலக்கண சுத்தம் என்பது எனக்கு குழப்பமாகவே இருக்கிறது.

aay எனும் போது தொல்காப்பியம் சொன்னதுபோல அழகாக நா அண்ணத்தில் பொருந்து "ய்" உச்சரிக்கபப்டுகிறது.

யாழ் முறையில் aey என்று உச்சரிக்கும் போது (உச்சரித்துப்பாருங்கள்) நா அண்ணத்தில் பொருந்தாமல் இடைவெளி விட்டு நிற்கிறது.

இலக்கணப்படி "ய்" உச்சரிக்கப்படும்போது நா அண்ணத்தில் பொருந்த வேண்டுமல்லவா?

 
On June 20, 2009 at 1:37 AM , மு. மயூரன் said...

//ஈழம் எனும் சொற்பதம் பொதுவாக இலங்கை வாழ் அனைவரையுமே குறிப்பதாகச் சொல்ல முடியாது. அவ்வாறு கூறுவதாயின் "இலங்கை" என்று தான் கூறவேண்டும்.

ஈழம் என்று தம்மை குறிக்காத, குறிப்பிட விரும்பாத இலங்கையின் பிறமாவட்டங்களை சார்ந்தோரும் இருக்கவே செய்கின்றனர்.

ஆனால் யாழ்ப்பாணத்தவரே தமது கலை, இலக்கியப் படைப்புகளை "ஈழம்" எனும் முன்னொட்டுடன் முன்வைத்து வந்தவர்கள் என்பதும் எண்ணிப் பார்க்கப்பட வேண்டியது.

எனக்குத் தெரிய தமிழீழக் கோரிக்கையின் பின்பே வடக்கு கிழக்கு பிரதேசங்களும் ஈழமாகப் பார்க்கப்பட்டது. //


இந்தத்தகவல்கள் எனக்குப்புதியன.

"ஈழத்தமிழர்கள்" என்றால் அதற்குள் முஸ்லிம்கள் அடங்கமாட்டார்கள் என்ற பிரக்ஞை எனக்குண்டு. மலையகம் தொடர்பாக தெரியாது.

ஈழமெங்கள் நாடடா இன்பமான வீடடா என்று பாட்டு படித்த ஞாபகம் . அது முழு இலங்கையையும் குறித்தது.

இலங்கைத் தேசிய கீதம் "ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி" என்கிறது.

 
On June 20, 2009 at 1:40 AM , மு. மயூரன் said...

ஐயையோ இனி நான் கருத்துப்போட்டா மட்டுறுத்தல் இல்லாமலே வந்துவிடுமா.. இது ஆபத்தானது..;)

மட்டுறுத்தலை மற்ற நண்பர்களே செய்யட்டும்.

 
On June 20, 2009 at 2:51 PM , கண்டும் காணான் said...

// வேற்றுமைகளை மறுப்பதல்ல. மாறாக வேற்றுமைகளை, பல்வகைமையை ஏற்றுக்கொள்வதில்தான் உண்மையான ஒற்றுமை இருக்கிறது. //

மயூரன் , உங்கள் கருத்துகளுக்கு நன்றி. அந்தந்த பிரதேசங்களின் பேச்சு வழக்கு பற்றியே நாம் பகிர்ந்து கொள்ளுகிறோமே தவிர, அந்த வட்டார வழக்கு தான் துல்லியம் என்றோ அல்லது தவறு என்றோ நாம் பதிவுகளையிடும்போது , இது சிலருக்கு மன சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும். அது ஒற்றுமையை பாதிக்கும் என்று எண்ணியே நான் அவ்வாறு பின்னூட்டமிட்டேன். அத்துடன் "எரிச்சல்லூடுகின்றது " என்னும் சொல் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது , ஏனெனில் ௯௦% உங்கள் நண்பர்கள் என்பதும் எனக்கு தெரியவில்லை. உங்கள் பதிவைப் படித்த பின்னர், உங்களது மனநிலை எனக்கு புரிந்துவிட்டது. அதேபோல அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகின்றேன். நன்றி.

பின்வரும் உங்கள் கருது என்னைக் கவர்தது
/ /நீங்கள் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்ல எனக்கு பயமாயிருக்கு. மகிந்த ராஜபக்சவும் தான் ஒற்றுமை ஒற்றுமை என்கிறார், தமிழ் முஸ்லிம் என்றெல்லாம் கதைக்காதே என்கிறார் ;) //
:-) இது பற்றி விரிவாக எழுதவேண்டும்

 
On June 20, 2009 at 3:01 PM , கண்டும் காணான் said...

//ஈழமெங்கள் நாடடா இன்பமான வீடடா என்று பாட்டு படித்த ஞாபகம் . அது முழு இலங்கையையும் குறித்தது.//

முழு இலங்கையுமே ஈழம் என்றே இலங்கை மற்றும் இந்திய தமிழர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. இதே போல வட இந்தியர்கள் மற்றும் சமஸ்கிருத நூல்களில் லங்கா புரி என்றும் கிரேக்க நாட்டவரால் , தப்ரபேன் என்றும் , அரேபியரால் செரன்தீப் என்றும் அழைக்கப் பட்டது. இதை உணர்த்த அநேகமான தமிழ் விடுதலை இயக்கங்கள் , வட கிழக்கை குறிபிடுவதற்காக, தமிழ் என்பதை ஈழத்துக்கு முன்னே சேர்த்து அழைக்க ஆரம்பித்தன.

 
On June 21, 2009 at 5:02 AM , மலைநாடான் said...

இத்தகைய மனந்திறந்த உரையாடல்களே மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது. :)

வட்டாரப் பேச்சு வழக்கில் மொழித் துல்லியம் என்பது எதிர்கொள்ள முடியாது. மேலும் இந்த வட்டாரப் பேச்சு வழக்குக் கூட காலவோட்டத்தில் மாற்றம் பெறும்.
இத்தகைய பதிவுகள் கூட அவற்றை ஆவணப்படுத்தும்.

ஈழத்துத் தமிழர்கள் மட்டுமே தமிழ்மொழியை நன்றாக உச்சரிப்பவர்கள் என்றும், யாழ்ப்பாண உச்சரிப்பினை ஈழத்தின் மொழிவளக்காகக் காட்டுவதிலும், கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை.

இந்தியாவில் இராமநாதபுரம் திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் கூட பேச்சு வழக்குத் தமிழில் நல்ல உச்சரிப்புக்களைக் கண்டிருக்கின்றேன்.

பதிவின் தலைப்பு இப்போதூன் பொருத்தமாக இருக்கிறது.

நன்றி நண்பர்களே!

 
On June 21, 2009 at 5:28 PM , பழமைபேசி said...

ஓரிரு உதாரணங்களை மேற்கோள் காண்பித்து, இது சரி, இது தவறு என வாதிட முடியாது. மருவதலும், திரிதலும் உலகத்துக்கே இயல்பானது! தமிழ் விதி விலக்கல்ல, அது எந்த ஊராயினும்!!!

 
On January 10, 2011 at 12:11 PM , iraimalai said...

இலங்கை என்னும் சொல் 'லங்கா' எனும் வட சொல்லில் இருந்து வந்ததாக சொல்லப்படுவதால், தமிழ் ஆர்வலர்கள் ஈழம் என்பதை பாவிக்க தொடங்கினர். அவ்வளவுதான். அதைவிட இலக்கியசெளுமை இருப்பதாகவும் கருதப்படுகிறது. உ-ம: அம்மா என்பது பேச்சு வழக்கும் அன்னை என்பது இலக்கிய வழக்கும். அப்படித்தான். மற்றும் படி இலங்கை , ஈழம், எல்லாம் ஒன்றுதான். 30 வருட போராட்ட வாழ்க்கையினால் ஈழம் என்பது வடக்கு கிழக்கு என்பது போல் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்தில் நாயை குறிப்பிடும்போது சிங்களத்தில் 'இல்லை' என்பதற்கு சொல்லப்படும் naey என்பது மாதிரி உச்சரிப்பது அவதானிக்க முடிகிறது. பாய், காய், தாய் .. எல்லாமே அப்படித்தான். ஆனால் வன்னியில் சரியாக உச்சரிக்கபடுவதாக அறிகிறேன். நான் இத்தளத்திற்கு புதியவன்.