Author: வசந்தன்(Vasanthan)
•11:01 PM
எல்லாருக்கும் இந்தச் சொல் தெரியுமோ தெரியாது. எங்கட இடத்தில குறிப்பிட்ட இளமட்டத்தில இந்தச்சொல் பயன்பாட்டில இருந்திச்சு. இன்னொருத்தனைத் திட்டவோ மட்டந்தட்டி நக்கலடிக்கவோ இந்தச் சொல்லைப் பாவிப்பம்.

ஒருத்தன் விளங்காத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்தால் அல்லது தொடர்ச்சியாக ஒரேதவறைச் செய்தால், எப்படி முயன்றும் ஒருத்தனைத் திருத்த முடியாதென்று எரிச்சல் தோன்றும்போது இச்சொல்லைப் பாவித்துத் திட்டுவதுண்டு.'அவனொரு அப்பக்கோப்பை. ஒரு இழவும் விளங்காது' எண்டு ஒருத்தனத் திட்டுவோம். அதேபோல் திட்டும் வாங்குவோம்.

இதன் சரியான தோற்றம், காரணகாரியங்கள் எதுவுமறியாமலேயே, ஆனால் சரியான சந்தர்ப்பங்களில் இச்சொல்லைப் பாவிப்போம். எந்த இடங்களில் இச்சொல்லைப் பாவிப்பதென எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

சரி இந்தச் சொல்லின் சரியான அர்த்தத்துக்கு வருவோம். அப்பக்கோப்பை என்றால் அப்பம் சுடும் தாச்சியைக் குறிக்கும். அப்பத்தாச்சி என்ன செய்யும்? எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாது. அதில் ஊற்றும் மாவை அப்படியே அப்பமாக்கி சிறுதுண்டுகூட தாச்சியில் ஒட்டாதபடிக்கு அழகாக அப்படியே திருப்பிக்கொடுத்துவிடும்.

தோசைக்கல்லிற்கூட மாவு ஒட்டும், இட்லிச்சட்டியில் மாவு ஒட்டும். ஆனால் அப்பத்தாச்சியில் எப்போதாவது மாவு ஒட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தச் சட்டியின் சிறப்பு.

இங்கே இச்சொல்லை அப்பக்கோப்பை என்று மாற்றி ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு (இதுகளப் போடாட்டி பிறகு சண்டைக்கு வருவியள்) திட்டுவதற்குப் பாவிக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால் எப்படி அப்பச்சட்டி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்குள் ஊற்றப்படும் சகலதையும் திருப்பிக்கொடுத்துவிடுகிறதோ அதேபோல் இவர்களும் எதையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. அனைத்தையும் திறந்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் திருந்தப்போவதில்லை என்ற கருத்தில் இச்சொல் பாவிக்கப்படுகிறது.

இன்றும் ஏராளமானவர்கள் இச்சொல்லின் விளக்கத்தை அறியாமல் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாகவே இப்பதிவு போட்டேன்.

திடீரென்று ஏனிந்தச் சொல் பற்றி யோசினை வந்ததெண்டா, இப்ப தான் கொஞ்சத்துக்கு முதல் ஒருத்தரை நேர திட்டிப்போட்டன். அவருக்கு இந்தச்சொல் புதுசு. அதுக்கு அவர் விளக்கம் கேட்டார். அவருக்கு விளங்கப்டுத்தின கையோட அதையே ஒரு பதிவாப்போடுறன்.

அப்பக்கோப்பையள் ஆராவது என்ர வலைப்பதிவப் பாக்க வருவினந்தானே. அவையளுக்கு ஒரு விளக்கமா இருக்கட்டுமெண்டு போட்டு வைக்கிறன்.

'பன்னாடை' எண்டு திட்டுறதுக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருளாத்தான் இருக்கு. பன்னாடை தேவையற்றதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடும். அப்பக்கோப்பை எல்லாவற்றையும் விட்டுவிடும்.
ஆனா பன்னாடை எண்டு திட்டினா கடுமையாக் கோவம் வரும். மாறாக அப்பக்கோப்பையெண்டது அதே கருத்தைத்தாற ஆனா ஏச்சு வாங்கிறவன்(ள்) சிரிச்சுக்கொண்டே கேட்டுக்கொண்டு போற மாதியொரு சொல்லு.

நீங்களும் ஏன் திட்டுவதற்கோ ஏசுவதற்கோ இந்தச்சொல்லைப் பயன்படுத்தக்கூடாது?
முயன்றுபாருங்கள்.

=========================================
இதுவும் ஒரு மீள்பதிவே.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவுக்கான சுட்டி:
வசந்தன் பக்கம்: 'அப்பக்கோப்பை' பற்றிய ஓர் ஆராய்ச்சி.
This entry was posted on 11:01 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On June 13, 2009 at 9:26 PM , ’டொன்’ லீ said...

ஓ...நான் இன்று தான் கேள்விப்படுகிறேன் :-))

 
On June 13, 2009 at 10:20 PM , கானா பிரபா said...

நானும் இன்று தான் கேள்விப்படுகிறேன் :)

 
On June 13, 2009 at 10:24 PM , மலைநாடான் said...

வசந்தன்!
எனக்கும் இது புதுச் சொல். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வலிகாமம் மேற்கில் பாவித்திருக்க வேண்டும். ஆனால் அப்பகுதிகளிலும் நான் கேட்ட ஞாபகம் இல்லை.
அறியத் தந்தமைக்கு நன்றி

 
On June 13, 2009 at 10:37 PM , varun said...

அருமையான பதிவு எங்கட யாழ்பாணத்தாரின் வாயில் அடிக்கடி வருகிற சொல்லாச்சே...

 
On June 14, 2009 at 3:27 AM , சயந்தன் said...

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வலிகாமம் மேற்கில் பாவித்திருக்க வேண்டும். //

இது சரி. வட்டுக்கோட்டையில் நான் பலருக்கு அப்பக்கோப்பையாக இருந்திருக்கிறேன் :)

 
On June 14, 2009 at 5:08 AM , வசந்தன்(Vasanthan) said...

இதென்ன கோதாரி?

அப்பக்கோப்பை இவ்வளவு அருந்தலாகவோ பயன்பாட்டில இருந்திருக்கு?

நான் இணுவிலானை நம்பவில்லை. ஏனெண்டா என்னோட இருந்த இணுவிலானொருத்தன் இதை அடிக்கடி சொல்லுவான்.
தான் உப்பிடியான சொல்லால பேச்சு வாங்கேல எண்டு காட்டுறதுக்காக சிலர் உந்தச் சொல்லைக் கேள்விப்படேல எண்டு வண்டில் விடுறமாதிரிக் கிடக்கு.

நான் கதைக்கிறது எப்பவுமே சிறுபான்மையான ஆக்களுக்கானதாக இருக்குது. என்ன செய்ய?

 
On June 14, 2009 at 5:27 AM , கானா பிரபா said...

:) நம்புங்கோப்பா

அந்த இணுவிலானுக்கு உங்கட ஊர் தொடர்பு ஏதாவது இருந்திருக்கும்

 
On June 14, 2009 at 10:10 AM , வி. ஜெ. சந்திரன் said...

அப்பக்கோப்பை எண்ட சொல்லு எங்கள் பகுதிகளில் அடிக்கடி புழக்கத்தில் இல்லாவிட்டாலும், நண்பர்களிடையே பாவனையில் இருந்தது. பொதுவாக ஒருவரின் முகத்துக்கு நேரே சொல்வதிலும், குறிப்பிட்ட நபர் அங்கு இல்லாத நேரம் "......" அப்பகோப்பையடா என்று சொல்வது உண்டு. ஆனால் இது இடப்பெயர்வுகளால் எம்மூரில் புழக்கத்திற்கு வந்ததாக கூட இருக்கலாம், ஏன் எனில் சிறு வயதில் அதிகம் கேள்விப்பட்டதில்லை.

 
On June 14, 2009 at 10:32 AM , மயாதி said...

ஒரு கொசுறு தகவல்- அண்மைக்காலமா இந்த சொல் மீண்டும் பிரபல்யம் அடையத் தொடங்கி விட்டது. குறிப்பாக இது லவ் பண்ணும் பல்கலைக்கழக் மாணவர்களுக்கு லவ் பன்னாதவர்களால் சூட்டப்படும் பெயராகிப் போனது..

 
On June 14, 2009 at 7:13 PM , சினேகிதி said...

அப்பக்கோப்பையள் வாசிச்சால் எப்பிடி ஞாபகம் வச்சு பிறகு திட்டுறதுக்குப் பயன்படுத்துவினம்?? அவை வாசிச்ச எதையும் உள்வாங்க மாட்டினமெல்லோ :-)

 
On June 14, 2009 at 9:35 PM , மொழிவளன் said...

"உவள் ஒரு அப்பம்", "உவனுக்கு என்னச்சொன்னாலும் விளங்காது சரியான அப்பம்." என்று சுருக்கமாக பயன்படும் வழக்கமும் பாடசாலை மாணவரிடையே காணப்பட்டது.

 
On June 15, 2009 at 5:51 AM , வசந்தன்(Vasanthan) said...

சினேகிதி,
அப்பக்கோப்பையள் திட்டத் தேவையில்லை, மற்றாக்கள்தான் அவையைத் திட்டவேணும்.
அதால அப்பக்கோப்பையள் இதை ஞாபகம் வைச்சிருக்கத் தேவையில்லை. அவை ஞாபகம் வைச்சிருக்கவும் போறதில்லை. அப்பக் கோப்பையளைக் கேட்டால் அவை தங்களுக்கு இந்தச் சொல்பற்றி ஏதும் தெரியாது எண்டுதான் சொல்லுவினம்.

இந்த இடுகையிலயே பாரும் எத்தினைபேர் தங்களுக்கு இந்தச் சொல் தெரியாது எண்டு சொல்லுகினம்?
;-)

 
On June 15, 2009 at 5:55 AM , வசந்தன்(Vasanthan) said...

சந்திரன்,
மலைநாடானின்ர வலிமேற்குப் பின்னூட்டத்துக்குப் பதிலாக உம்மைச் சொல்லி பின்னூட்டம் போட இருந்தேன். அதுக்குள்ள நீர் முந்தீட்டீர்.

என்ர பழைய பதிவில நீர் பின்னூட்டம் போட்டிருந்தீர், மறந்துபோன சொல்லை ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி எண்டு.

==================
மயாதி,
எல்லாம் என்ர எழுத்தின்ர மகிமையுங்கோ....
ஆனா யாழ்ப்பாணத்தைவிட வன்னியிலதான் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தி நான் பார்த்திருக்கிறேன்.
====================

மொழிவளன்,
எடுத்துக்காட்டுச் சொல்லேக்ககூட ஆண்பால், பெண்பால் எல்லாம் கலந்து சமநிலையாத்தான் எழுதிறியள்.
பிழைக்கத் தெரிஞ்ச ஆள் நீங்கள்.

 
On June 15, 2009 at 7:39 PM , வி. ஜெ. சந்திரன் said...

வசந்தன் வலி மேற்கு பகுதி மட்டுமல்ல, எனைய பகுதிகளிலும் பாவனையில் இருந்தது, இணுவிலாருக்கு தெரியாது எண்டு பொய் சொல்லேலா ஏனெண்டா இணுவிலாருக்கு அடுத்த ஊர் கொக்குவில் அங்க அப்பகோப்பை எண்ட சொல்லு பவனையிலை இருந்திச்சு