Author: வந்தியத்தேவன்
•7:43 PM
"பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா" சின்ன வயதில் ஆடிப்பாடிய பாடல். பட்டம் என்பது எங்கள் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த இன்னொரு விசயம். வாலாக்கொடி, கொடி என இடத்துக்கு இடம் பெயர் மாறுபட்டாலும் பொதுவாக பட்டம்(காற்றாடி) என்றே அழைப்பார்கள்.பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பெரும்பாலான பெற்றோருக்கு பட்டம் காலம் வந்தால் கரைச்சல்தான். டிசம்பரில் பாடசாலை விடுமுறை என்பதாலும் பட்டக் காலம் என்பது மாணவர்களிடையே சந்தோஷமான நாட்கள். எப்படியும் பொங்கல் வரை பட்டம் ஏற்றி பட்டதாரியாகிவிடுவார்கள்.

ஆயகலைகள் அறுபத்து நான்கில் பட்டக்கலை இருக்கோ இல்லையோ ஆனால் இதுவும் ஒரு கலைதான். செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப் பனையில் பட்டத்தைப் பற்றி நிறையவே சொல்லியிருப்பார். கொக்கர் மாரிமுத்தர் அம்மான் தான் கதாநாயகன் ஆள் கொக்குப்பட்டம் கட்டுவதில் விண்ணன்(கெட்டிக்காரன்). இவருக்கும் பொன்னு ஆச்சிக்கும் நடக்கும் பட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அம்மானுடன் சூலாயுதம் என்ற வேலாயுதம் என்கிற பொடியன் சேர்ந்து செய்யும் ரகளைகள் அலம்பல் காசியின் வில்லத்தனம் என ஒரு மண்ணின் வாழ்க்கையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளார். செங்கை ஆழியான்.

பட்டத்தில் பல வகைகள் உண்டு.

கடதாசிப் பட்டம் :
சாதாரண கடதாசிப் பட்டம் சில இடங்களில் இதனை வாலாக்கொடி என்பார்கள். இதனை உருவாக்க ஈர்க்கும் சாதாரண கடதாசி அல்லது ரிசூப் பேப்பர் போதும்.ஆரம்ப கால சிறுவர்கள் பெரும்பாலும் ஏற்றுவது இதுதான். சாதாரண தையல் நூல் இதற்க்குப் போதும் பட்டத்தில் வாலாக பழைய பருத்திச் சீலைகள் சறம் அல்லது சாரம்(கைலி) போன்றவற்றின் துண்டுகள் வாலாகப் பயன்படுத்தப்படும். இதற்க்கு விண் பூட்டமுடியாது.

நான்குமூலைப் பட்டம் :
சில இடங்களில் படலம் அல்லது பெட்டிப்பட்டம் என அழைப்பார்கள். ஒரு செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும். இதனை பனைமட்டையை இணக்கி இல்லையென்டால் மூங்கில் தடிகளை இணக்கி செய்வார்கள். ரிசூப்பேப்பரில் விதம்விதமான டிசைன் போட்டு ஒட்டுவார்கள். இதன் மேற்பக்கத்தில் விண் பூட்டுலாம். வாலாக கயிறுபயன்படுத்தப்படும். சிறிய ஒரு அடிக்கு ஒரு அடி சைஸிலிருந்து ஆளுயர சைஸ்வரை செய்யமுடியும். சைஸைப் பொறுத்து நூலின் தடிப்பும் மாறும். கூடுதலாக நைலோன் நூலே பயன்படுத்தப்படும். பட்ட ஏற்றலில் விண்ணர்களான சில சிறுவர்களும் பல பெரிய ஆட்களும் ஏற்றுவார்கள். பட்டத்தின் சைசுக்கு ஏற்ப ஏற்றுபவர்களின் மவுசு கூடும். அதிலும் ஒருவன் நல்ல சத்தமுள்ள‌ விண் பூட்டி தன்னைவிட உயரப்பட்டம் ஏற்றினால் அவந்தான் அந்த வட்டாரத்தில் ஹீரோ.

கொக்குப் பட்டம் :
கொக்கைப்போல் வடிவம் உடையது. பெரும்பாலும் மூங்கில் கொண்டு செய்யப்படும். இதற்க்கும் விண் பூட்டமுடியும். கொக்குப்பட்டத்திற்க்கு வால் பெரும்பாலும் தேவைப்படாது. அழகான குஞ்சங்கள் எல்லாம் வைத்து செய்தால் வானில் பறக்கும் போது மிகவும் அழகாகவும் இருக்கும். எல்லாரும் இலகுவில் செய்யமுடியாது. கொக்கர் மாரிமுத்தர் போல் கொக்குப் பட்டம் கட்ட தனித் திறமை வேண்டும். சில இடங்களில் ரெடிமேட்டாக செய்து விற்பார்கள். அதனை வாங்கி ஏற்றும் சிறுவர்கள் உண்டு.

பிராந்துப் பட்டம் :
பருந்தையே நம்ம ஊரில் பிராந்து என்பார்கள். பிராந்து வடிவத்தில் செய்யப்படும் பட்டம் இதுவும் எல்லோராலும் செய்யமுடியாது. மூங்கில் கொண்டே வடிவமைக்கப்படும். விண் பூட்டலாம். கொக்குப்பட்டம் போல் அழகானது.

எட்டுமூலை :
நட்சத்திரப்பட்டம் எனவும் சொல்வார்கள். எட்டுமூலைகள் இருப்பதால் இந்தப்பெயர்.

இதனை விட வேறு வகைகள் இருந்தால் தெரிவிக்கவும். படங்கள் தேடினேன் கிடைக்கவில்லை. முற்றத்து ஒற்றைப் பனையிலிருந்து ஸ்கான் பண்ணித்தான் போடவேண்டும்.

பட்டக் கலையில் பாவிக்கப்படும் சில் அருஞ்சொற்கள்.

விண் :
விண் என்பது "கொய்ங்ங்ங்" என்ற சத்தத்தை கொடுக்கும் பனை ஓலை நாரில் செய்யப்பட்ட ஒரு ஒலிஎழுப்பி. சிலர் பார்சல்கள் கட்டிவரும் பிளாஸ்டிக் நாரிலும் செய்வார்கள். சிம்பிளான விண் என்றால் யூரியா பாக்கிலிருக்கும் (உரம் வரும் பை)அந்த மெல்லிய நைலோன் நாரையும் பாவிப்பார்கள். விண்ணை மட்டையில் கட்டி பார்ப்பதற்க்கு வில்லுப்போல இருக்கும் இரண்டு தொங்கல் பக்கத்திலும் இரண்டு கட்டைகள் போட்டு பின்னர் அதனை கொக்குப் பட்டத்துடனோ இல்லை நான்குமூலையுடனோ எட்டுமூலையுடனோ இணைத்து ஏற்றுவார்கள். சிலகாலம் விண் பூட்டி ஏத்துவது தடைசெய்யப்பட்டிருந்தது காரணம் குண்டுவீச்சு விமானத்தின் சத்தம் கேட்காது அல்லது விமானச் சத்தத்தை விண் பூட்டிய பட்டம் என சனம் சும்மா இருப்பார்கள் என்றபடியால்.

முச்சை கட்டுதல் :
பட்டத்திற்க்கு முக்கியமான ஒரு செயல்பாடு. பட்டத்தை நூலுடன் சாதாரணமாக தொடுத்துவிட முடியாது. இதற்காக ஒரு ஸ்பெசல் செயல்தான் முச்சைகட்டுதல். பட்டத்தின் ஒரு தொங்கலையும்(அந்தம்) இன்னொரு தொங்கலையும் நூலினால் இணைத்தல். கொக்குப்பட்டம் நான்குமூலை எட்டுமூலை போன்றவற்றிற்கு இன்னொருவகையான முச்சை கட்டப்படும். சாதாரண முச்சை மூன்று முச்சை நான்கு முச்சை என பல வகை உண்டு.

பட்டம் தொடுத்தல் :
ஒரு பட்டத்தின் பின்னால் இன்னொரு பட்டம் தொடுத்தல். இப்படி பல பட்டங்களை தொடுக்கமுடியும். எங்கட ஊரிலை என் நண்பன் ஒருவன் ஆகக்கூட 10 பட்டம் தொடுத்து ஒரு பொங்கலுக்கு ஏற்றினான். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.

லைட்பூட்டி ஏற்றுதல்.
இரவு வேளைகளில் பட்டத்தில் நூலில் சிலர் பட்டத்திலையே பற்றரி அல்லது மின்சாரம் துணைகொண்டு விதம்விதமான கலர் லைட்ஸ் போடுவார்கள். அழகாக இருக்கும். பற்றரி என்றால் பட்டத்துடன் இணைத்திவிடலாம். மின்சாரம் என்றால் வயரும் நூலுடன் சேர்த்துக் கட்டப்படும். மின்சாரத்தில் ஏற்றுதல் கொஞ்சம் ஆபத்தானது காரணம் தற்செயலாக பட்டம் இரவில் அறுத்துக்கொண்டு போனாலோ அல்லது படுத்துவிட்டாலோ அது விழுகின்றபகுதி மக்களுக்கு மின்சாரம் தாக்கும் ஆபத்து உண்டு.

அறுத்துக்கொண்டுபோதல் :
பட்டம் பாரம் தாங்கமுடியாமல் அல்லது காற்று அதிகமாகி சில நேரத்தில் அறுத்துக்கொண்டுபோய்விடும். சிறந்த உதாரணம் சர்வம் படத்தில் நம்ம திரிஷா இப்படி அறுத்துக்கொண்டுபோன பட்டத்தின் நூல்பட்டுத்தான் இறந்துபோவார். சிலவேளைகளில் அடுத்த ஊரில் கூட பட்டம் அறுத்துக்கொண்டுபோய் விழும். சில பனை தென்னை மரங்களில் தொங்கிப்போய்விடும். திரும்ப எடுப்பது கஸ்டம்.

பட்டம் படுத்தல் :
இரவு வேளைகளில் பட்டத்தை ஏற்றிவைத்திருக்கும்போது காற்று குறைந்துவிட்டால் பட்டம் அப்படியே தரைக்கு வந்துவிடும். இதுவே பட்டம் படுத்தல் எனப்படும்.

பருத்தித்துறையில் பொங்கல் நேரம் பட்டம் விடும் போட்டி நடத்தப்படும். முனைக் கடற்கரையில் பாக்கு நீரிணையின் அருகில் இந்தப்போட்டிகள் நடத்தப்பட்டன. பட்டகாலம் தொடங்கினால் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் பலதரப்பட்ட பட்டங்களும் நூலும் வீதியோரக் கடைகளில் விற்கப்படும்.

பட்டம் பற்றி நம்ம கானா அண்ணை எழுதிய பதிவு ஒன்றும் இருக்கின்றது.
பட்டம் விட்ட அந்தக் காலம்

பட்டத்தைப் பற்றி இவ்வளவு விபரமாக எழுதியபடியால் என்னைப் பட்டதாரி என நினைக்கவேண்டாம். இதுவரை சாதாரண கடதாசிப் பட்டம் மட்டுமே ஏற்றியிருக்கின்றேன். என் மாமாக்களும் சித்தப்பாக்களும் இதில் விண்ணர்கள். எத்தனையோ விழுப்புண்கள் கூட பட்டத்தினால் பெற்றிருக்கின்றார்கள். அவர்களுடன் இருந்த அனுபவமே இது.
This entry was posted on 7:43 PM and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 comments:

On June 17, 2009 at 9:22 PM , Anonymous said...

///நான்குமூலைப் பட்டம் :
சில இடங்களில் படலம் அல்லது பெட்டிப்பட்டம் என அழைப்பார்கள்.///
எங்கட ஊரில படலம் வேற பெட்டிப்பட்டம் வேற

http://www.ecologybus.org/Graphics/kites_corner.gif
இதில இடப்பக்க மூலேல இருக்கிறது தான் பெட்டிப்பட்டம்.

////கடதாசிப் பட்டம் :
சாதாரண கடதாசிப் பட்டம் சில இடங்களில் இதனை வாலாக்கொடி என்பார்கள்///

இதை வவ்வால் எண்டும் சொல்லுறவை எங்கட ஊரில.

ஜனா

 
On June 17, 2009 at 9:23 PM , வாசுகி said...

பட்டம் என்ற தலைப்பை பார்த்தவுடனேயே "முற்றத்து ஒற்றை பனை" தான் நினைவுக்கு வருகிறது.

பட்டம் விடுவதில் வடமராட்சி தான் பெயர் போன இடம் என்று நினைக்கிறேன்.
பருத்தித்துறையை சேர்ந்த நண்பிகள் தாம் பட்டம் விட்ட கதை சொல்லும் போது நாம் வாயை பிளந்து கேட்போம். அவ்வளவு ஆசையாக இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நாள் ஒன்றில் வடமராட்சியில் பட்டத்திருவிழா நடைபெறுவதாகவும் அதற்காக‌
பல நாட்களுக்கு முன்பே அனைவரும் ஆயத்தங்கள் செய்ய தொடங்கி விடுவதாகவும் சொன்னார்கள்.
விண் கூவுதல், அதிக உயரத்துக்கு யாருடைய பட்டம் போகிறது என்பதில் போட்டி நடக்குமாம்.
வடமராட்சியே திரண்டு வந்து பட்டம் விடுமாம்.பருத்தித்துறை கடற்கரையில் தான் பட்டம் ஏற்றுவார்கள் என்று நான் நினைத்து வைத்துள்ளேன்.இன்னும் நிறைய சொன்னார்கள்.
பருத்தித்துறை வாழ் நண்பர்கள் அதைப்பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்.

எமது ஊரில் வயலில் சென்று தான் பட்டம் விடுவோம். இல்லையென்றால் வீட்டில்.
அது கனக்க உயரம் எல்லாம் ஏறாது.

 
On June 18, 2009 at 12:31 AM , மணிமேகலா said...

ஒரு முறை வானொலியில் ஒருவர் கூறினார்,'ஒரு 2 வயதுக் குழந்தையின் முன் ஒரு கிலுகிலுப்பயைக் கிலுக்குங்கள் அந்தக் குழந்தை நன்றாகச் சிரிக்கும். அதையே ஒரு 80 வயதுத் தாத்தாவுக்கு முன்னால் கிலுக்குங்கள். அவருக்கு என்னமாய் கோபம் வருகிறது! எப்படி இருந்த தாத்தா எப்படி ஆகி விட்டார் பார்த்தீர்களா?' என்று கேட்டார்.

அப்படித் தான் இப்போது நம்மையும் நினைக்கத் தோன்றுகிறது.

எப்படி இருந்த நாம் எப்படி ஆகிவிட்டோம் பார்த்தீர்களா?:))

(யாரும் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.)

 
On June 18, 2009 at 2:50 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

பட்டம் விட்டதெல்லாம் ஞாபகம் வருது. சின்னனில ஒரு அண்ணாவிடம் பட்டத்துக்கு வாலும் முச்சை கட்டவும் (நூல் கட்டுறது/தொடுப்பதென்றுதான் நான் சொல்வது. எனக்கு இன்னொரு புதுச் சொல்) கேட்டு அவர் தெரியாமல் முழித்தது நல்லா ஞாபகமிருக்கு. சிவப்பு நட்சத்திரப்பட்டம் அது...

 
On June 18, 2009 at 3:57 AM , கானா பிரபா said...

வந்தி

மறக்கமுடியுமா பட்டம் விட்ட காலத்தை, உங்கள் பதிவு நிரம்பவே விபரமாகப் பதிந்திருக்கிறது. உண்மையில் இந்தத் தளத்தில் உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருக்கின்றது.

 
On June 18, 2009 at 5:46 AM , வந்தியத்தேவன் said...

நன்றிகள் ஜனா சிலவேளைகளில் இப்படியான தவறுகள் நடப்பதுண்டு. திருத்தியதற்க்கு மிக்க நன்றிகள். இந்தப்பதிவுகளின் நோக்கமே எங்கள் பேச்சுவழக்கில் உள்ள சொற்களையும் விடயங்களை மீள்கொணர்வதே.

வவ்வால் கேள்விப்பட்டிருக்கின்றேன்

 
On June 18, 2009 at 5:50 AM , வந்தியத்தேவன் said...

வாசுகி நானும் பருத்திதுறைக்கு பக்கத்து ஊர்க்காரன் தான். அங்கேபட்டத் திருவிழாவே நடத்துவார்கள். ஒரு சில இளைஞிகள் பட்டம் ஏற்றுவார்கள் நிறைய சிறுமிகள் பட்டம் ஏற்றுவார்கள். பல இளைஞிகளுக்கு ஆசை ஆனாலும் சில காரண காரியங்களால் பட்டம் ஏற்றமுன்வருவதில்லை.

முற்றத்து ஒற்றைப் பனையில் பட்டம் பற்றிய வரலாற்றை செங்கை ஆழியான் தனக்கே உரிய பாணியில் அழகாக எழுதியிருக்கின்றார்.

 
On June 18, 2009 at 5:52 AM , வந்தியத்தேவன் said...

மணிமேகலா உங்கள் கூற்றுக்கள் மிகவும் சரி. நாம் பலவற்றை இழந்துவிட்டோம். சிலகாலத்தில் ஊர்ப்பக்கம் போனாலும் பட்டம் ஏற்றமுடியுமா? இல்லை ஓருகின்ற லான்ட்மாஸ்ரரில் ஓடி ஓடி ஏறமுடியுமா? ஏனைய சிறுவர்கள் செய்வதைப் பார்த்து மகிழ்ந்துவிட்டு எங்கடை காலத்திலும் இப்படிச் செய்தனாங்கள் என பழம் புராணம் சொல்லலாம்.

 
On June 18, 2009 at 5:53 AM , வந்தியத்தேவன் said...

மழை அக்கா உங்கள் அந்த அண்ணரும் என்னைப்போன்றவர் போல் தெரிகின்றது ஹிஹிஹ்ஹி

 
On June 18, 2009 at 5:58 AM , வந்தியத்தேவன் said...

நன்றிகள் பிரபா சொந்தவீட்டில் இதெல்லாம் எழுதியிருக்கலாம். கொஞ்சப்பேர் மட்டும் வந்துபோயிரிப்பினம். ஒரு குடும்பமாக எழுதும்போது குறைநிறைகளும் தெரியும் அத்துடன் பின்னர் இதனை திருத்தி ஒரு ஆவணமாககூட ஆக்கமுடியும். அந்த வகையில் களம் அமைத்துத் தந்த உங்களுக்கு நன்றிகள். அகராதியாக மட்டும் பதிவுகள் இட்டால் பெரிதாக பலரைக் கவராது இதனால் எம் வாழ்க்கைமுறையோடு பதிவுகளை அனுபவங்களினூடாக வட்டாரச் சொற்களையும் அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.

 
On June 18, 2009 at 10:25 AM , சினேகிதி said...

நான் கடதாசிப்பட்டம் செய்திருக்கிறன்...ஏத்தியும் இருக்கிறன். எட்டுமூலைப்பட்டம் மாமாவை நல்ல வடிவா செய்வினம் நான் உதவி செய்திருக்கிறன் அதுக்காக கொஞ்சநேரம் பிடிச்சிருக்க தருவினம் என்னட்ட.

எங்கட வீட்டு ஹ+ட்வாசல்ல நாலு தூண் இருக்கு. எங்கட வீட்டுக்கங்கால ஒருவீடும் இல்ல...முழுக்க தோட்டம்தான் அதால பட்டம் கட்டிவிட சிறந்த இடம் எங்கட வீட்டுத்தூண்கள் என்பது ஊரிலிருக்கிற அநேகமானவைக்குத் தெரியும். அதால எங்கட வீட்டுத் தூண்ல இரவில பட்டம் கட்டிவிடுறதுக்கு ஒரு போட்டியே நடக்கும். அதால எனக்கு ஐஸ் வைச்சால் ( வேறென்ன அந்த குட்டி உருண்டைச் சொக்லெட்) யார் வேண்டித் தரினமோ அவேன்ர பட்டம் இரவு இரவா வானத்தில இருக்கும்.

பட்டம் செய்றது எப்பிடியென்டு 1-2ம் வகுப்புத் புத்தகத்தில இருக்கு.

 
On June 18, 2009 at 9:53 PM , ’டொன்’ லீ said...

பட்டம் விடுறது ஒரு கலை தான். அதுவும் மத்தாக்களிண்ட பட்டங்களை அறுத்து விடுறது, போட்டிக்கு பட்டம் விடுறது...ம்....பொதுவாக வைகாசி மாதத்தில் தான் பட்டங்கள் அதிகமாக பறக்கும், காத்தும் நல்லா இருக்கும்

 
On June 19, 2009 at 10:48 PM , வசந்தன்(Vasanthan) said...

ஆள் பட்டம்:- இது மனித உருவத்தைத் தட்டையாகச் செய்து அப்படியே வானில் ஏற்றுவது. மிகச் சிரமமான செயல். ஆனால் சிலர் மிக இலகுவாக இதைச் செய்வார்கள். விதம் விதமான நிறங்களில உடுப்புகள் போட்டு இந்த ஆட்பட்டம் ஏறும். ராமராஜன் பாதிப்போ என்னவோ தெரியேல, எங்கட ஊர்ப்பக்கம் ஏறுற ஆட்பட்டங்களில மேற்சட்டை நிறம் சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் எண்டு இருக்கும். கூலிங் கிளாஸ்கூட போடப்பட்டிருக்கும்.

இந்த ஆட்பட்டம் சமச்சீராக இருக்குமெண்டு நினையாதைங்கோ. ஒருபக்கம் சாஞ்சு ஒயிலா நிக்கிற மாதிரி, ஒருகால் மடிச்சு நிக்கிற மாதிரி எல்லாம் பட்டமேத்திறதைப் பாத்திருக்கிறேன். சமநிலையை எப்பிடிப் பேணீச்சினம் எண்டது தெரியேல.

வெளிச்சவீடு/வெளிச்சக்கூடு பட்டம்: இது முப்பரிமாணப் பட்டம். கூட்டுக்குள் மின்குமிழ் பூட்டி ஏற்றினால் பார்க்க அருமையாக இருக்கும்.

கைக்கொடியில் பட்டமேற்றுவதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அதாவது பொதுவாக பட்டத்தை ஒருவர் பிடித்திருக்க இன்னொருவர் நூலை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடித்தான் பட்டத்தை மேலே ஏற்றுவார்கள். சிலர் வேறெவரினதும் துணையின்றி தனியே ஒருயார் இடைவெளியிலிருந்து படிப்படியாக நூலை விட்டுப் பட்டத்தை ஏற்றுவார்கள். இதைத்தான் கைக்கொடியில் ஏற்றுவது என்பது. பெரும்பாலும் கடற்கரையில் சிறுபட்டங்களை (வெளவால்) ஏற்றுவதற்கு இம்முறை போதுமானது.

 
On June 20, 2009 at 7:51 AM , வந்தியத்தேவன் said...

சினேகிதி நீங்களும் ஒரு பட்டதாரி தானே அப்போ கொஞ்சம் உங்கள் அனுபவங்களையும் ஒரு பதிவாக எடுத்துவிடுகிறது.

இரவு வானத்தில் பறக்கும் பிடிக்காத பொடியள்டை பட்டத்தை கிடுகுவேலியில் பொட்டுப் பிரித்து அறுத்துவிட்ட அனுபவம் இருக்கா?

 
On June 20, 2009 at 7:53 AM , வந்தியத்தேவன் said...

டொன் லீ அந்த நாளில் நாமெல்லாம் அறியாப் புள்ளைகளாக இருந்து மற்றவன்ரை பட்டத்தை அறுத்துவிட்டதும், போட்டிக்கு அவன் வவ்வால் ஏத்தினால் படலம் ஏத்துறதும் சுவையான நினைவுகள். இப்போ நினைக்க சிரிப்புத்தான் வருகிறது.

 
On June 20, 2009 at 7:56 AM , வந்தியத்தேவன் said...

வசந்தன் நான் மறந்துபோன வெளிச்சவீடு ஆள்பட்டம் கைக்கொடி போன்றவற்றை நினைவூட்டியதற்க்கும் விளக்கத்திற்க்கும் நன்றிகள். ஆள்பட்டத்தின் சமச்சீர் இன்னமும் புரியவில்லை. அத்துடன் பாம்புப் பட்டம் என வவ்வாலுக்கு கடதாசியில் நீண்ட வால் ஒட்டி முகத்தில் பாம்புக்கு இருக்கும் படத்தை வரைந்து ஏத்தும் பட்டமும் உண்டு.