Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•3:34 AM
இந்தச் சனம் வந்து சாப்பாட்டப் பத்தி எழுத முதல் நான் வந்துத்தன் கிளியேய்.

உங்களுக்குத் தெரியுமா, மட்டக்களப்பிலருந்து கொழும்புக்கும், இலங்கைர வேற பகுதிகளுக்கும் அடுக்கடுக்காத் தயிர் போற. றெயினிலயும் பஸ்சிலயும் இதுகளுக்குத் தனி இடம். பசுந்தயிரும் போகும். எருமைத்தயிரும் போகும். எருமைத்தயிர் கெட்டியா இரிக்கும். அந்தத் தயிர்ச்சட்டியள என்னத்தால கட்டி இரிக்கிற என்டு தெரியுமா? தென்னோலையால!! ஓம் மனே, வடிவா, சட்டி அசங்காமக் கொள்ளாம இரிக்கிற மாதிரி தென்னோலை உறியில போட்டுக் கட்டுவாங்க 8-10 சட்டியை ஒண்டுக்கு மேல ஒண்டு அடுக்கி. பாக்க என்ன வடிவு. காட்டுறத்துக்குப் படம் தேடினதான்.. கிடைக்கல்ல. மட்டக்களப்புக்கு வேற ஊர்க்காராக்கள் வந்தா அவங்க ஊருக்கெண்டுத்து கொண்டு போற சாமான் சக்கட்டுல தயிர்ச்சட்டி கட்டாயம் இரிக்கும்.

தயிர் சாப்பிடுறது மட்டக்களப்பில தனி விதம். மற்ற இடத்தாக்கள் நாங்க தயிர் சாப்பிடுறத்த ஆச்சரியமாப் பாக்கிற. ஏனெண்டு சொல்றன்.

மட்டக்களப்பார், தயிர் சாப்பிடுறண்டா தயிருக்குச் சீனி வேணும். வாழைப்பழமும் வேணும். சோத்தோட சாப்பிடுற எண்டா நீங்க நினைக்கப்படா சோறு கறியோட சேத்து தயிர் சீனி வாழப்பழமெல்லாம் குழைச்சித் தின்றண்டு. அப்பிடி இல்ல. சோறு கறி சாப்பிட்ட பிறகு, அந்தக் கோப்பையிலயே இன்னொருதரம் போல சோறு போட்டு தயிரும், அதுக்குச் சீனியும் வாழப்பழமும் சேத்துச் சாப்பிடுற. இஞ்ச வந்தும் நான் அதையே செய்ய, சனங்கள் ஒரு சாங்கமாப் பாக்குங்கள். நாம அதக் கண்டாலும் காணாத மாதிரி நடத்திறதான். எனக்கெலுவா தெரியும் அப்பிடிச் சாப்பிடுற ருசி எப்பிடியண்டு!! இப்ப சில நெருங்கின ஆக்களுக்குப் பழகித்து. நான் சோறு சாப்பிட்டு முடிய, தயிரெடுத்துத்து சீனிப் போத்தலத் தேடினா ஒரு குருவி ஏனெண்டு பாக்கிறல்ல.

சோறோட சேத்துச் சாப்பிட விருப்பமில்லாட்டி, சாப்பிட்டொழிஞ்ச கையோட தனிய கிண்ணத்தில தயிருஞ் சீனியும் வாழப்பழமும் போட்டுச் சாப்பிடுற. சில பேர் வடிவா இருக்குமெண்டுத்து பழத்தை அரிஞ்சும் தாற. சிலவேள வாழப்பழம் கிடைக்காமப் பொயித்தண்டா தயிரும் சீனியும். ஆனா தயிர் சாப்பிட்டமாதிரியே இரிக்கா.

சா!! என்ன திறமான சாமான் மட்டக்களப்புத் தயிர். அதப் பத்திக் கதைச்சோணயே சாப்பிடோணும் போல கிடக்கு.. மாச்சல் படாம போய் தயிரும் வாழப்பழமும் வாங்கித்து வாறயா மனே? நல்ல புள்ளெலுவா..

----------
அ.சொ.பொ விளக்கம்:
மாச்சல் (மாய்ச்சல்) - சோம்பல்
புள்ளெலுவா (புள்ள எலுவா) - பிள்ளை அல்லவா
திறமான - சிறந்த
This entry was posted on 3:34 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

28 comments:

On June 12, 2009 at 4:42 AM , கானா பிரபா said...

அருஞ்சொல் விளக்கம் தேவை தேவை :)

மாச்சல்//
புள்ளெலுவா//

இதுக்கு எல்லாம் விளக்கம் தேவை,

முதல் இடுகைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

 
On June 12, 2009 at 4:50 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

பதிவு போட்டா நன்றியும் வாழ்த்தும் சொல்லுற நிலமைக்கு வந்திட்டுது!! :O)

விளக்கம் போடுறன்.

 
On June 12, 2009 at 4:55 AM , ஆயில்யன் said...

//மழை` ஷ்ரேயா(Shreya) said...

பதிவு போட்டா நன்றியும் வாழ்த்தும் சொல்லுற நிலமைக்கு வந்திட்டுது!! :O)//

LOL :)))))

 
On June 12, 2009 at 5:02 AM , ஆயில்யன் said...

//எருமைத்தயிர் கெட்டியா இரிக்கும்.//
ஹய்யோ!

ஹய்யோ நினைப்பு வந்து போச்சே !


பழைய சோறும் கெட்டி எருமை தயிரும்

வெங்காயம் வத்தகுழம்பு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)))))

 
On June 12, 2009 at 5:03 AM , ஆயில்யன் said...

//சாமான் சக்கட்டுல///

நானும் இந்த சாமான் சக்கட்டு நிறையவாட்டி கேட்டிருக்கேன் அ.சொ.பொ?

 
On June 12, 2009 at 5:44 AM , கலை said...

ஆஹா! நீண்ட காலத்துக்குப் பிறகு முழுக்க முழுக்க மட்டக்களப்பு பேச்சு வழக்கு. இங்க இருக்கிறவை உப்பிடி கதைக்கினமில்லை :).

தயிரும், சீனியும், வாழப்பழமும் சேர்த்து நான் சாப்பிட்டுப் பாக்கேல்லை. சீனி மட்டும் போட்டு தயிர் (சோறில்லாமல்) சாப்பிட்டிருக்கிறன். ஒருக்கால் வாழைப் பழமும் சேர்த்து சாப்பிட்டுப் பார்க்க வேணும். என்ன ஒண்டு, இங்க இருக்கிற ஒரேயொரு வகையான வாழைப் பழம் பிடிக்காம, வாழைப்பழம் சாப்பிடுறதையே விட்டிட்டன். இலங்கை போனால்தான் வாழைப் பழம் என்று ஆகியிட்டுது :(.

 
On June 12, 2009 at 5:51 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//நானும் இந்த சாமான் சக்கட்டு நிறையவாட்டி கேட்டிருக்கேன் அ.சொ.பொ?//

சக்கட்டு என்றால் miscellaneous பொருட்கள்.

 
On June 12, 2009 at 5:52 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

இங்க வாங்கோ.. எங்கட பிளெமிங்டன் சந்தையில கிடைக்காத வாழைப்பழமா?

 
On June 12, 2009 at 9:14 AM , வந்தியத்தேவன் said...

பல தடவை திருகோணமலை போய் வரும்போது கந்தளாயில் வாங்கும் தயிர் போல் இதுவரை எந்த தயிரும் சாப்பிட்டதில்லை. மட்டக்களப்புத் தயிர் பற்றி பழைய பாடப்புத்தகம் ஒன்றில் சிஞ்ஜோரும் அந்தோணியும் பேசியதும் ஞாபகம் வருகின்றது. வாயூற வைத்த ஸ்ரேயாவுக்கு நன்றிகள். கதையோட கதை உங்காளை அவுஸ்திரேலியாவில் தயிர் கிடைக்குதோ? இல்லை ஜோக்கட் தான் சாப்பிடுவதோ?

 
On June 13, 2009 at 3:17 AM , மலைநாடான் said...

இரிக்கும் - இருக்கும், கோப்பையில- சாப்பிடம் தட்டு, சாங்கமா- மாதிரியாக, தின்றண்டு- சாப்பிடுவதென்று, பொயித்தண்டா-போயிற்றுதென்றால், கேக்கக் நல்லாத்தான் இரிக்கி கிளி:)

தயிர் பற்றி இங்கும் எழுதியுள்ளேன் பாருங்கள்.

 
On June 13, 2009 at 5:15 AM , யசோதா.பத்மநாதன் said...

விருந்து நல்ல சுவையாக இருக்கிறது ஷ்ரேயா.

நான் சிறு பிள்ளயாக இருந்த போது மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் திருவிழாவுக்கு பெரிய மதவடியில் என் பெற்றோர் தண்ணீர் பந்தல் போடுவார்கள்.அதற்கு மட்டக்களப்பில் இருந்தும் பொலநறுவையிலிருந்தும் தயிர் வரும்.வவுனியாவில் இருந்து தேசிக்காய் வரும்.

மட்டக்களப்பு விஷேஷங்களுள் தொதல் என்றொரு இனிப்பு வகையும் மிகப் பிரசித்தமான சுவையுடயதல்லவா?

 
On June 13, 2009 at 7:02 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//சிஞ்ஜோரும் அந்தோணியும் பேசியதும் //

எலி பிடித்த சிஞ்ஞோரா? :O)
(senor என்பதைத்தான் சிஞ்ஞோர் என்றார்கள் இல்லையா?)

 
On June 13, 2009 at 10:07 AM , வி. ஜெ. சந்திரன் said...

மட்டகளப்பு சட்டி(கட்டி) தயிர் ரயிலில் வரும் கதையை கேள்விப்பட்டதை தவிர சாப்பிட்டதில்லை..............

 
On June 13, 2009 at 10:49 AM , வந்தியத்தேவன் said...

//`மழை` ஷ்ரேயா(Shreya) said...

எலி பிடித்த சிஞ்ஞோரா? :O)
(senor என்பதைத்தான் சிஞ்ஞோர் என்றார்கள் இல்லையா?//

என்ன பிடிக்கிறாய் அந்தோணி
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திபொத்திப் பிடி அந்தோணி
பூறிக்கொண்டு பாயுது சிஞ்ஞோரே

தாளலயம் மிக்க பாடல்.

senor இது ஒரு பிரெஞ்சு வார்த்தை என நினைக்கின்றேன்.

 
On June 13, 2009 at 6:37 PM , தமிழ் said...

/அ.சொ.பொ விளக்கம்:
மாச்சல் (மாய்ச்சல்) - சோம்பல்
புள்ளெலுவா (புள்ள எலுவா) - பிள்ளை அல்லவா
திறமான - சிறந்த/

அருமை

 
On June 14, 2009 at 5:32 AM , தமிழன்-கறுப்பி... said...

அப்படியே வந்திருக்கு ஷ்ரேயா, நான் இருக்கிற இடத்துல இந்த மொழி வழக்கம் உள்ளவர்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது.

 
On June 14, 2009 at 5:35 AM , தமிழன்-கறுப்பி... said...

\\
`மழை` ஷ்ரேயா(Shreya) said...
பதிவு போட்டா நன்றியும் வாழ்த்தும் சொல்லுற நிலமைக்கு வந்திட்டுது!! :O)

விளக்கம் போடுறன்.
\\

:)))

 
On June 14, 2009 at 5:36 AM , தமிழன்-கறுப்பி... said...

இப்படி கானாபிரபா அண்ணன் கதைச்சா எப்படி இருக்குமெண்டு கற்பனை பண்ணிப்பாத்தன்....

:))))) :))
ஹாஹாஹாஹாஹா

 
On June 14, 2009 at 5:43 AM , கானா பிரபா said...

தமிழன்-கறுப்பி... said...

இப்படி கானாபிரபா அண்ணன் கதைச்சா எப்படி இருக்குமெண்டு கற்பனை பண்ணிப்பாத்தன்....//

அடிப்பாவி

இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள்

 
On June 15, 2009 at 2:17 AM , சோமி said...

மழை சொல்லாத சேதி: நம்மட சித்தாண்டி, வந்தாறுமூல பக்கம் நல்ல கரடியநாத்து தயிர் வரும் அங்க காத்தால, பழஞ் சோறு இரிக்கெல்லுவா அதயும் தயிரையும் குழைச்சுப் போட்டு மறுகா நம்மட யாழ்ப்பாணத்து பனாட்டு கொள்ளையா எடுத்து வச்சித்து சேர்த்து சாபிட்டால்....ஆகா...பழஞ்சோறூம் பனாட்டும் தனியா பதிவே போடலாம்.

மழை அக்கோய்....கறுப்பி சொல்லுற மாதிரி மட்டக்களப்பு டவுணுக்க ஒரியினல் மட்டக்களப்பு தமிழ் கதைக்கிற குறைவு யாழ் மற்றும் இதர மேட்டுக்குடிதமிழ்களூம் சேர்ந்து மட்டக்ளப்பு தமிழ் பொலிட் ஆகி போச்சி/..

 
On June 15, 2009 at 4:32 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

சோமி - "மட்டக்களப்பார்" என்டு சொன்னா டவுண்காராக்களெண்டு மட்டும் பொருளா? என்டப்பேஸ்.. என்ன கத இது!! :O))

 
On June 15, 2009 at 4:55 AM , வந்தியத்தேவன் said...

//சோமி said...
மழை அக்கோய்....கறுப்பி சொல்லுற மாதிரி மட்டக்களப்பு டவுணுக்க ஒரியினல் மட்டக்களப்பு தமிழ் கதைக்கிற குறைவு யாழ் மற்றும் இதர மேட்டுக்குடிதமிழ்களூம் சேர்ந்து மட்டக்ளப்பு தமிழ் பொலிட் ஆகி போச்சி//

சோமி மட்டக்களப்பில் மட்டுமல்ல சகல இடத்து டவுண்களிலும் தமிழ் டமிலாகத் தான் இருக்கின்றது. இது யாழ்ப்பாண டவுணில் இருக்கும் மேட்டுக்குடிகளுக்கும் பொருந்தும். அதே நேரம் கொழும்பில் கொச்சிக்கடை தெமட்டகொடை பகுதியில் இருக்கும் தமிழர்கள்(இங்கே சகல பகுதித் தமிழர்கள் இருந்தாலும் இவர்கள் பேசுவது வித்தியாசமான தமிழாகும்) பேசும் தமிழ் புரிவது சரியான கஸ்டம். யாருக்காவது அந்த அனுபவம் உண்டா?

 
On June 15, 2009 at 4:57 AM , King... said...

உண்மையை சொல்லும் ஷ்ரேயா நீர் உப்பிடியோ கதைக்கிறனீர்...

:)

 
On June 15, 2009 at 5:00 AM , கானா பிரபா said...

வந்தி

அந்த தெமட்டகொட தமிழையும் போடுங்கோ ;)

 
On June 15, 2009 at 5:00 AM , மலைநாடான் said...

//மழை சொல்லாத சேதி: நம்மட சித்தாண்டி, வந்தாறுமூல பக்கம் நல்ல கரடியநாத்து தயிர் வரும் அங்க காத்தால, பழஞ் சோறு இரிக்கெல்லுவா அதயும் தயிரையும் குழைச்சுப் போட்டு மறுகா நம்மட யாழ்ப்பாணத்து பனாட்டு கொள்ளையா எடுத்து வச்சித்து சேர்த்து சாபிட்டால்....ஆகா...பழஞ்சோறூம் பனாட்டும் தனியா பதிவே போடலாம்//
இதையே ஒரு வருசத்துக்கு முன் என்னுடைய பதிவிலும் சொல்லியாச்சு. கதைய விட்டிட்டு பதிவப் போடுப்பா :)

 
On June 15, 2009 at 5:03 AM , வந்தியத்தேவன் said...

முயற்சி செய்கிறேன் பிரபா :)

 
On June 15, 2009 at 6:10 AM , கொண்டோடி said...

பதிவென்ன, படமே எடுத்துப் போடுவார் சோமி.

'எண்டபேஏஏஏ'...
நான் அதிகம் இரசித்த மட்டக்களப்பாரின் வியப்பொலி இதுதான்.

மேலே சொல்லப்பட்டதுபோல் மட்டக்களப்பு நகர்புறக் கதைக்கும் படுவான்கரைப் பகுதியாரின் கதைக்கும் நிறை வித்தியாசங்களுண்டு.

 
On June 21, 2009 at 9:26 AM , கண்டும் காணான் said...

மட்டக்களப்பு தயிர் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அத்துடன் மட்டக்களப்பு கஜூ ( மர முந்திரிகை) கூட மிகவும் சுவையானது.
இந்த பதிவைப் படித்த போது, சிற்சில விசேட சொற்கள் வேறுபாடாக இருப்பினும் , ஒரு தமிழக தமிழரால் யாழ்ப்பாண தமிழையும் மட்டக்களப்பு தமிழையும் வேறுபடுத்தி பார்ப்பது கடினம். உதாரணம் போகோணும் வரோணும் என்ற பேச்சு வழக்கு.