Author: மணிமேகலா
•3:50 AM
(1976ம் ஆண்டு நான் படித்த 6ம் வகுப்பு(?) தமிழ் புத்தகத்தில் இருந்து...
வன்னி மாணவன் ஒருவனின் பார்வையினூடாக...
வன்னி மண்ணின் வாழ்வும் மன வளமும்...
பதிவுக்கு சற்று நீளமாக இருக்கலாம், எனினும்,..

இருநூறு மீற்றர் - சிறு கதை -


"நாளைக்குப் பின்னேரம் வரதனுக்கு ஏதேனும் வேலை இருக்கிறதா?"

"இல்லை ஐயா"

"நாளைக்குப் பின்னேரம் என்னோடு வவுனியாவுக்கு வர வேண்டும், வசதியோ?"

"ஓம்"

" பாடசாலை விட்டதும் நாங்கள் வவுனியாவுக்குப் போவோம்.வீட்டில் அவ்வாறு சொல்லி வரவும்"

"ஓம் ஐயா"

"இப்பொழுது வீட்டுக்குப் போகலாம்"

எனக்கெண்டாக் காத்திக பறக்கிறது போல.புது வாத்தியார் வந்தபிறகு பள்ளியும் நல்ல திருத்தம்.பிள்ளையள் விருப்பமாய் பள்ளிக்கு வருகினம்.போன தவணை பள்ளியில விளையாட்டுப் போட்டியும் நடந்தது.அந்த ஓட்டப் போட்டியில நான் தான் முதலில வந்தனான்.பிறகு வவுனியாவில வட்டார விளையாட்டுப் போட்டியும் நடந்தது.புது வாத்தியார் என்னை அதுக்குக் கொண்டுபோனவர்.அண்டைக்குத் தான் நான் வவுனியாவைக் கண்டனான்.வவுனியாக் கடையள் பெரிசு.சாமான்களும் அம்பாரம்.இஞ்சை இருக்கிறபழைய விதானையார் கடையும் ஒரு கடையே? கொழும்பில உள்ள கடையள் ஆகப் பெரிசாம்.கடையள் மட்டுமே? கொழும்பில கடல் ஒண்டும் இருக்காம்.கடல் எண்டாக் கடல் தான்.எல்லாத்திலும் பெரிசு தான் கடல்.அதில கப்பல்கள் போகுமாம்.துறைமுகமோ - ஓம், துறைமுகம் எண்டு தான் நினைப்பு - அதுவும் கொழும்பில இருக்காம்.எல்லாத்தையும் பாக்க ஏலும்.

வீட்ட எப்பிடி வந்தன் எண்டும் தெரியாது.வழியில வாய்க்கால்,பாலம்,வேலி,சேனை எல்லாம் இருக்கும்.இண்டைக்கு அவை அந்தந்த இடத்தில இருந்ததா? எனக்கு நினைப்பில்லை.

"அம்மா,ஒரு புதினம். புது வாத்தியாரோட நான் நாளைக்கு வவுனியா போறன்.கொழும்பில ஓடேக்க கால் சட்டை போட வேணுமாம்.அவர் தைப்பிச்சுத் தாறாராம்."

"அங்கையும் வெல்லுவியோ? கொழும்புப் புள்ளையள் வலு கெட்டிக் காரராம்"

"வெல்லுறதுக்கில்லையணை போட்டிக்குப் போறது.புது வாத்தியார் சொன்னவர்,போட்டியில எங்கள் பள்ளி பங்குபற்றுவதே பெரிய வெற்றி"

"அப்பிடியே? நீ உந்தச் சாரத்தையும் வெனியனையும் கழத்தித் தா தோய்ச்சுப் போடுவம்.வவுனியாவுக்கு ஊத்தை உடுப்போடையே போறது? அடுப்படியில அவிச்ச மரவள்ளிக் கிழங்கு வைச்சனான்.உந்தச் சட்டியில உப்பும் பச்சை மிளகாயும் இருக்கும். கொப்பருக்கும் வைச்சு நீயும் தின்."

நான் சாரத்தையும் வெனியனையும் கழத்திக் குடுத்தன்.

புது வாத்தியார் எனக்கு கால்சட்டை மட்டும் தரவில்லை.'சேட்' ஒண்டும் வாங்கித் தந்தவர்.மூண்டு நாலு முறை நான் அதுகளை வீட்டில போட்டுப் பாத்தனான்.

"உந்த உடுப்பில வரதன் வடிவா இருக்கிறான் அப்பா.சப்பாத்தும் போட்டால்? ஆர் சொல்லப் போகினம் உவனை வன்னிப் பொடியன் எண்டு?"

அப்பா இரகசியமாய் அம்மாவுக்குச் சொன்னது எனக்குக் கேட்டுது.

"கொழும்புக்குப் போயிட்டு வருவாய் தானே அண்ணா? அப்ப இத போட்டுப் பாக்கத் தருவியே?"புதுச் சட்டைகளைத் தடவித் தடவிப் பார்த்தபடி தம்பி சிணுங்கினான்.

"உந்தச் சின்னவன் என்ன செய்யிறான்? கையில இருக்கிற ஊத்தையக் கொண்ணையின்ர உடுப்பில பிரட்டாமல், இஞ்ச வா!" தம்பியை அம்மா கூப்பிட்டா.

"கொழும்புக்குப் போகேக்கை உடுப்புகளை இஞ்சயிருந்து உடுத்துக் கொண்டு போகாதை.கடதாசிப் பையில சுத்திக் கொண்டு போய், கோச்சியில வச்சுப் போடு.இஞ்சை போட்டால், இஞ்சை உள்ளவை விடுப்புப் பாப்பினம்.கண்ணூறு ஆக்களைப் பொசுக்கிப் போடும்."

ஊர்ச் சனங்களின்ர கண்ணூறுக்கு அப்பா பயம்.கண்ணூறு பட்டால் வெற்றி கிடைக்காமல் போனாலும் போகுமாம்.இஞ்சையிருந்து போட்டுக் கொண்டு போனாலல்லவா கண்ணூறு படும்?

"சட்டைகளை ஏன் வரதன் அணிந்து வரவில்லை?" புது வாத்தியார் அப்பாவைக் கேட்டார்.வெள்ளணத் தீப்பந்தம் ஒண்டைக் கட்டிக் கொண்டு அப்பா தான் என்னை பள்ளிக்குக் கூட்டி வந்தார்.

"ஊத்தை பிரளும், கொழும்புக்குக் கிட்டப் போனதும் போடலாம் எண்டு நான் தான் சொன்னனான்." அப்பா என்ர முகத்தை பாத்துக் கொண்டு சொன்னார்.

வவுனியா ஸ்டேசனுக்குக் கொண்டுவந்து விட அப்பாவுக்கு விருப்பம்.ஆனால், காலையில அப்பா பால் கறக்க வேணும்.அம்மா கறந்தால் மாடு கள்ளப்படும்.

"மோனே, முருகன் அருளால போயிட்டு வா!"எண்டு சொல்லி அப்பா என்ர தலையைத் தடவினார்.

இன்னும் கோச்சியக் காணம்.இண்டைக்கு ஏன் இவ்வளவு சுணக்கம்?கை காட்டி விழும் வரை கோச்சி வராதாம்.கைகாட்டியை விழுத்திறவன் நித்திரையோ? புது வாத்தியார் ஸ்ரேசன் மாஸ்டரோட பேசுறார்.கோச்சி வாற நேரத்த கேக்கிறார் ஆக்கும்.கோச்சி வராமல் இருந்திடுமோ? போன கிழமை மாங்குளத்துக்குப் பக்கத்தில கோச்சி தடம் புரண்டதாம்.இண்டைக்கும் அப்பிடி ஏதும் நடந்திட்டுதோ? அப்பிடி நடந்தால் கொழும்புக்குப் போக ஏலாது. போட்டியிலும் ஓட ஏலாது.கொழும்பைப் பாக்கவும் ஏலாது.அது சரியான அநியாயம்.இல்லை; இல்லை.கோச்சி வராட்டாலும் புது வாத்தியார் என்னைக் கொழும்புக்குக் கொண்டு போவார்.அவரால் ஏலாததும் இருக்கோ? அவர் நல்லாய்ப் படிச்சவர். காசும் இருக்கு. நல்லவர். அருமையான வாத்தியார்.எங்கட பள்ளியில மட்டுமல்ல, இந்த லோகத்திலேயே அவரைப் போல தங்கமான வாத்தியார் இருக்க மாட்டார்.

"வரதன் தூங்கி விட்டாயா? புகை வண்டி வருகிறது.அந்தப் 'பார்சல்' எங்கே? அதை மறந்து விட வேண்டாம்."

என்ரை சட்டைகள் சடதாசிப் பையில சிடக்கு. அதை நெஞ்சோட அனைச்சபடி யோசிச்சுக் கொண்டிருந்தன். அது தான் அவர் அதைப் பாக்கேல்லைப் போல. நான் நித்திரை கொண்டனெண்டு அவர் நினைக்கிறார்.நேத்திரவு நல்லாய் நித்திரை கொள்ளேல்லை.நித்திரையிலை கொழும்புக் கோச்சி வாறது கேக்கும்.நான் திடுக்கிட்டு முழிப்பன்.

கோச்சி வந்து கொண்டிருக்கு.அதன் விளக்கில சூரிய வெளிச்சம் பட்டுப் பளிச்சிடுறது மரங்களுக்கிடையில தெரியுது.இப்ப வேல்முருகு மாமாவின்ர நினைப்பு வருகுது.சரியாய் இப்பிடித்தான் அவரும் இரவில தென்னைமரங்களில குரும்பட்டி தின்னக் குரங்குகள் வந்ததா எண்டு டோச் அடிச்சுப் பாப்பார்.கோச்சியில சனங்கள் நிறைய இருக்குமோ? அப்பிடி எண்டால் ஏறேலாது போகுமோ? எப்பிடியாவது ஏறிக்கொண்டால் போதும்.இருக்க இடம் இல்லாட்டிலும் பரவாயில்லை.அதுவும் நல்லது தான்.யன்னலுக்குக் கிட்ட நிண்டு புதினம் பாத்துக் கொண்டு போகலாம்.கோச்சி விசையா வருகுது.நிக்காதோ? இல்லை; இல்ல. கொஞ்சம் கொஞ்சமா விசை குறையுது.

"வரதன்...உம்"

புது வாத்தியார் என்ர கையைப் பிடிச்சுக் கொண்டு, ஒவ்வொரு பெட்டியாய் எட்டிப் பாக்கிறார். ஒண்டிலையும் இடமில்லையாக்கும். எல்லாப் பெட்டியிலயும் இடமில்லாட்டில்?

"வரதன் ஏறிக் கொள்; கெதியாய் ஏறு!"

இந்தப் பெட்டியில அவ்வளவு சனம் இல்லை.இரண்டொருத்தர் படுத்துக் கிடக்கினம்.எண்டாலும் நாங்கள் இருக்க இடம் இருக்கு.

கொழும்பில இருந்து வந்ததும் புது வாத்தியாருக்குப் பால்சட்டி ஒண்டு உறைய வைச்சுக் குடுக்க வேணும்.வாத்தியாருக்கு மர வத்தலெண்டா நல்ல விருப்பமாம்.அது கிடைச்சால் அவருக்குக் கட்டாயம் குடுப்பன்.சே, நான் நினைக்கிறத எல்லாம் சொல்ல அம்மாவோ தம்பியோ இல்லயே.போய் வந்தாப் பிறகுதான் சொல்ல வேணும்.

[ஆரும் வாசிச்சுக் களைச்சுப் போனியளோ?]

புது வாத்தியார் புதுச் சட்டைகளைப் போடச் சொன்னார்.அப்பிடியே செய்தன். மத்தியானம் போல கொழும்ப அடைஞ்சோம்.

கொழும்பு ஸ்டேசனில சரியான சனக் கூட்டம்.நல்லூர் கந்தசாமிக் கோயில் திருவிழாவுக்குத்தான் சரியான சனக் கூட்டமாம். அப்பா அடிக்கடி சொல்லுவார்.இந்தக் கூட்டம் அதிலும் பெரிசு எண்டுதான் நான் நினைக்கிறன்.அம்மோய்!எத்தினை ரயில் பாதைகள்! எல்லா ரயில் பாதைகளிலும் கோச்சியள்.பாதைகளுக்கு மேலால் பாலம். படிகளில ஏறினோம். பாலத்தில நீட்டுக்கு நடந்தோம். பிறகும் படிகளில இறங்கி வெளியே வஎதோம்.

எவ்வளவு சனங்கள்? சனங்கள் மட்டுமோ? கார்களும், வசுக்களும், லொறிகளும் றேஸ் ஓடுறது போல! இவை எங்கையிருந்து வந்தவையோ? எங்கை தான் போகுதுகளோ? பென்னாம் பெரிய மெத்தை வீடுகள்.பென்னாம் பெரிய கடைகள். பெரிய றோட்டுகள்.சோக்கா இருக்கு. எங்கட ஊரில ஒருத்தருமே இதுகளை எல்லாம் பாத்திருக்க மாட்டினம்.அவையள் கொழும்புப் புதினம் கேக்க என்னட்டத் தான் வருவினம்.நான் எல்லாத்தையும் சொல்லுவன்.

சாப்பாட்டுக் கடைக்குப் போனோம்.கூரையில வெள்ளைப் பொல்லுப் போல விளக்குகள்.ஒரு ஆள் சுவரில ஒண்டை முறுக்கினான்.தலைக்கு மேல தொங்கிக் கொண்டிருந்த விசிறி மட்டைகள் அஞ்சாறு சுத்தத் துவங்கிச்சுது. அந்த விசையில காத்து விசுக்கெண்டு அடிச்சுது.

சாப்பிட்டு முடிஞ்சதும் போட்டி நடக்கிற இடத்துக்கு வசு வண்டியில வந்தோம்.இது எவ்வளவு பெரிய விளையாட்டு மைதானம்!புது வாத்தியார் காட்டிய இடத்தில இருந்தன்.அவர் எங்கேயோ போயிட்டார்.அந்த இடத்தில நான் ஆடாமல் அசையாமல் இருந்தன்.இஞ்சை நிறையப் பிள்ளையள் வந்திருக்கினம்.வெள்ளை நிறத்தில உடுப்புகள். சப்பாத்துகளும் வெள்ளை நிறத்தில தான்.கொழும்புப் பிள்ளயள் வலு கெட்டிக் காரராம்.அந்தப் பிள்ளையளுக்குக் கிட்ட இருக்கிறவை யார்? அவையள் படிக்கிற பள்ளியளின் - இல்லை,இல்லை, கொழும்பில இருக்கிறது கல்லூரிகளாம்- வாத்திமாராக இருக்க வேணும்.அந்தப் பிள்ளையள் நல்லாச் சிரிச்சுச் சத்தம் போடுகினம்.எங்கட பள்ளிப் பிள்ளையள் வாத்தியார் கிட்ட இருந்தால் மூச்சுக் காட்ட மாட்டினம்.

இந்தப் பையன்கள் ஏன் என்னைப் பாத்துச் சிரிக்கினம்? நான் வன்னிப் பையன் எண்டு தெரிஞ்சு போச்சோ? நான் சப்பாத்துப் போடேல்லை.அது தானாக்கும் சிரிக்கினம்.என்னைப் பட்டிக் காட்டான் எண்டு பகிடி பண்ணுகினமோ? நான் அந்தப் பக்கம் பாக்காமல் இருக்கிறது தான் புத்தி.எனக்கு நல்லாய் வேர்க்குது.புது வாத்தியார் கிட்ட இருந்தால் நல்லது.

அங்கை பார்! போட்டி துவங்கியாச்சுது.எல்லாரும் சப்பாத்துப் போட்டுக் கொண்டு தான் ஓடுகினம்.சப்பாத்து போடாத படியால் என்னை ஓட விடமாட்டினமோ?அதோ,எங்கட வாத்தியாரும் வாறார்.

வரதன்,இப்பொழுது 11ன் கீழ்100 மீற்றர் போட்டி நடக்கிறது.இதைத் தொடர்ந்து 13ன் கீழ் 200 மீற்றர் ஓட்டப் போட்டி நடக்கும்.அதில தான் எங்கள் வரதன் ஓடப் போகிறான்.இலக்கத்தைக் கூப்பிடும் போது, போட்டி நடக்கும் இடத்திற்குப் போக வேண்டும்.வரதன், பயப்பிட வேண்டாம்.கட்டாயம் வெற்றி கிடைக்கும்.

மேற்சட்டையைக் களத்தினன்.வெனியனின் இரண்டு பக்கமும் 27ம் இலக்கம் அச்சடிச்ச துண்டுகளைக் குத்தினார்.இலக்கத் துண்டு இன்னும் கொஞ்சம் பெரிசாய் இருந்தால் என்ரை வெனியனின் முன் பக்கமுள்ள பாலைப் பழக் கயர் மறைஞ்சிருக்கும்.இப்ப இதில ஒரு பகுதி தெரியுது.இதைப் பாத்துக் கொழும்புப் பிள்ளையள் இன்னுஞ் சிரிப்பினமோ?

என்ரை இலக்கம் கூப்பிடப் படுகுது.பந்தயம் நடக்கிற இடத்துக்கு இனிப் போவம்.எப்பிடிப் போறது? ஓடிப் போறதா? நடந்து போறதா? அந்தப் பையன் ஓடி வாறான்.இல்லை,இந்தப் பையன் நடந்து வாறான்.நானும் நடந்து போவம். என்ர நடையைப் பாத்து என்னை பட்டிக் காட்டான் எண்டு நினைப்பினமோ?அங்க கொஞ்சப் பேர் துள்ளித் துள்ளிஓடுகினம்.உப்பிடித்தான் ஓடிப் பழக வேணுமாம்.எல்லாப் பையன்களும் சப்பாத்துகள் போட்டிருக்கினம்.அட, இப்ப தானே பாத்தன். எல்லாம் முள்ளுச் சப்பாத்துகள்! நான் ஓடேக்கை முள்ளுச் சப்பாத்து மிதிச்சால்? ஓட ஏலாது போயிடுமே! இவையள் கொழும்புக் கல்லூரிகளில படிக்கினம்.என்னைப் பாக்க இவையள் பெரிய ஆக்கள்.இஞ்ச எல்லாம் ஓடவும் படிப்பிக்கினமாம்.அண்டைக்கு முருகேசர் அண்ணரின்ர நாம்பன் அறுத்துக் கொண்டோட, நான் தானே துரத்திப் பிடிச்சனான்.இது பசுந்தான மைதானம்.நாங்கள் மாடுகளைத் துரத்திப் பிடிக்கிற இடம்? தொட்டாச்சுருங்கிப் பத்தை, நெரிஞ்சி முள்ளு,கப்பித் தறை - இதுகளுக்கு மேலாலும் ஓட வேணும்.போட்டியில நான் வெல்லுவன்.புது வாத்தியாரும் அப்பிடித் தான் சொன்னவர்.நான் வெண்டால் அப்பா, அம்மா,தம்பி எல்லாரும் சந்தோசப்படுவினம்.முள்ளுச் சப்பாத்து கால மிதிச்சுப் போடுமோ?

"கமோன் றோயல்"

"கமோன் ஆனந்தா"

"கமோன் நிமால்"

என்னோட ஓடப் போற பிள்ளையள உசார் படுத்தத்தான் இப்பிடிச் சத்தம் போடுகினம்."கமோன் வரதன்" எண்டு சத்தம் போடுறதுக்கு ஆர் இருக்கினம்? அண்டைக்குப் பள்ளியில என்ர இல்லப் பிள்ளையள் சத்தம் போட்டவை.அப்ப எனக்கு நல்லா உசார் வந்தது.

"கவனியுங்கள்!13ன் கீழ் 200 மீற்றர் ஓட்டம்.இலக்கங்கள் 8 முதலாம் லேன்;126 2ம் லேன்27 3ம் லேன்....."

"இஞ்சை, என்ர இலக்கம் கூப்பிட்டாச்சு.நான் 3ம் லேனில நிக்க வேணும்."

"....உங்களுக்குக் காட்டப் பட்ட இடங்களில் ஒழுங்காக ஓட வேண்டும்.எனது கட்டளை இப்பிடித் தான் இருக்கும்.' ஆரம்பம்....ஆயத்தம்...போ!' போ என்று சொல்ல வேண்டிய வேளையில் இந்தத் துவக்கைச் சுடுவேன்.சுடுவதற்கு முன் யாரும் ஓடக் கூடாது.அப்படி முனைந்தால், இரண்டாம் தடவையுடன் நீங்கள் மைதானத்தை விட்டு வெளியேற நேரும்.கவனம்.உங்களுக்கு ஒதுகப்பட்ட லேனில் பிசகாது ஓட வேண்டும்.சரி. தயாராகுங்கள்."

"ஆரம்பம்...ஆயத்தம்..."

"டுமீல்!"

ஐயோ,அந்தச் சப்பாத்துக் காரன் முந்தியிட்டான்.இருந்தாலும் முருகேசு அண்ணரின்ர நாம்பன் போல இவனால ஓட முடியுமே? இதில ஓடுறது பெரிய வேலையே? அவனுக்குக் கிட்ட வந்திட்டன்.என்னால வெல்ல ஏலும்.இப்ப சரி.இனி இவன் என்ர வாலை பிடிக்கட்டும்.என்ர காலில சீவன் இல்லையோ? செத்தாலும் பறவாயில்லை. சப்பாத்துச் சத்தம் பின்னால கேக்குது.திரும்பிப் பாக்கக் கூடாது.இஞ்சை தெரியுது முடிவுக் கம்பம்.குறுக்கால நூல்.நான் கிட்ட வந்திட்டன்.நூலை அறுத்துக் கொண்டு ஓடினாப் பிறகு நான் செத்தாலும் பறவாயில்லை. ஆம்; எனக்கே வெற்றி.

ஏன் இவர் என்ர கையைப் பிடிக்கிறார்? எங்கே கூட்டிக் கொண்டு போறார்? வேறை இரண்டு பேர் முள்ளுச் சப்பாத்தோட ஓடின இரண்டு பேரக் கூட்டி வருகினம்.

"ஆக மேலே உள்ள தட்டில் ஏறவும்!" என்ர கையைப் பிடிச்சுக் கொண்டு போனவர் சொன்னார்.படிக்கட்டுப் போன்ற தட்டில் ஆக மேலே நான் ஏறினேன்.கீழே உள்ள தட்டில் என்ர வலப் பக்கமும் இடப் பக்கமுமாக மற்ற இரண்டு பையன்களும்."

" இதோ இன்னொரு போட்டி முடிவு.13ன் கீழ் 200 மீற்றர் ஓட்டப் போட்டி.முதலாவது இடம்:இலக்கம் 27, வவுனியா வட்டாரம், முல்லை வனம் தமிழ் கலவன் பாடசாலை, வெற்றி பெற்றவர் பெயர் த. வரதன்!"

இரும்புக் குளாய்க்குள்ளால கேக்குது. கனவில கேக்கிறது போல.சனங்கள் கை தட்டுகினம்.உலுப்பேக்கை புளியம்பழங்கள் கொட்டுண்ணும், சரியாய் அதைப் போலத் தான்.இரும்புக் குளாய்க்குள்ளால இன்னும் ஏதேதோ சொல்லுகினம். சனங்கள் கை தட்ட எனக்கு ஒண்டும் கேக்கையில்லை.

மூண்டு பேரும் தட்டில் இருந்து இறங்கினம்.

வலக்கைப் பக்கம் நிண்ட பையன் கிட்ட வந்தான்."நீர் சரியான கெட்டிக்காரன். என் வாழ்த்துக்கள்" எண்டு சொன்னான். என்ர கையைப் பிடிச்சுக் குலுக்கிக் கொண்டு சிரிச்சான். மற்றவனும் அப்பிடித் தான் செய்தான். இவையள் கொழும்புப் பிள்ளையள்.நல்ல பிள்ளையள்.

"வரதன் வெல்லுவான் எண்டு எனக்குத் தெரியும். நீ நல்ல கெட்டிக் காரன்."

புது வாத்தியார் என்னைப் பிடிச்சுத் தூக்கினார்.என்னை இறக்கி விட்டு என்ரை தலையைத் தடவினார்.அப்போது அவருடய கண்ணில நீர் துளும்பித் தெரிஞ்சுது. எனக்குச் செரியான சந்தோசம்.என்ர கண்ணிலும் கண்ணீர்.
This entry was posted on 3:50 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On June 24, 2009 at 7:41 AM , வந்தியத்தேவன் said...

ஆச்சி நல்ல கதையனை நான் ஏற்கனவே இந்தக் கதையே ஏதோ ஒரு தொகுப்பிலோ இல்லை இதழிலோ வாசித்த ஞாபகம் இருக்கு, வன்னி மண்ணைப் பற்றிய அழகிய விவரணம் அறிய நிலக்கிளி நாவல் வாசியுங்கோ.

இண்டைக்கு வீட்டை நிறையச் சனம் வந்திருக்கினம் நாலு பதிவுகூட இருக்கிறது. எல்லாப் பதிவையும் வாசிக்கும்போது ஊரிலை நிற்கிற நினைப்பு வருது.

உந்தப் பாதை திறந்தாண்டாங்கள் என்றால் அப்படியே ஊரிலை போய் புழுதி மண்ணிற்க்கை இருந்து நாலு திருவிழா பார்த்து பார்த்துவிட்டுவரலாம் என்டால் திறக்கிறாங்களில்லை.

 
On June 24, 2009 at 7:58 AM , வி. ஜெ. சந்திரன் said...

நல்லா இருக்கு. எனக்கு யாழ் குடா நாட்டை தவிர ஏனைய பகுதிகள் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லை. அமைதி பேச்சு காலத்தில் ஒரு முறை புதுகுடியிருப்பு, இரணைமடு, அக்கராயன், போன்ற இடங்களுக்கு போய் இருக்கிறேன்.

 
On June 24, 2009 at 8:36 AM , வாசுகி said...

உந்த கதை எனக்கு படித்த நினைவு இல்லை.கதை நல்லா இருக்கு .


//[ஆரும் வாசிச்சுக் களைச்சுப் போனியளோ?]//
இதுவும் நல்லா இருக்கு.

புத்தகத்திலயும் இப்படி வருகுதோ.

 
On June 25, 2009 at 2:17 AM , மணிமேகலா said...

மோன வந்தி,தாமரைச் செல்வி எழுதின சுமைகள் புத்தகம் வாசிச்சிருக்கிறியேடா மோன?அருமையான புத்தகமடா ராசா.

உண்ணாணை ராசா ஊரில நிக்குமாப் போல தான் இருக்குது.

இப்போதைக்கு அங்கனைக்கே போயிடாத ராசா!சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்.பாதுகாப்பு முக்கியமணை.அத மட்டும் மறந்திடாத ராசா.

 
On June 25, 2009 at 2:24 AM , மணிமேகலா said...

அன்புள்ள சந்திரா,

வன்னி ஒரு அருமையான இடமடா ராசா.

பாமர சனங்கள் மோன.உந்தப் புள்ள வரதன் மாதிரி.பிரதி பலன் எதிர்பாராமல் அன்புகாட்டுங்கள் ராசா. அந்த வாத்தியார் மாதிரி.

இண்டைக்கு அதுகளின்ர கெதியப் பாத்தியே ராசா? எல்லாருக்கும் அடைக்கலம் தந்த சனங்கள்.நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாத ஆக்களாப் போனம்.

இருக்கிற சனங்களுக்காவது கடவுள் ஒரு நல்ல வழியக் காட்ட வேணும்.

 
On June 25, 2009 at 2:27 AM , மணிமேகலா said...

பிள்ள வாசுகி,

பாத்தியேணை எல்லாம் களைச்சுப் போச்சுதுகள்:பாவங்கள்.

சரியாத் தான் கஷ்ரப் படுத்திப் போட்டன் போல கிடக்கு.
:)

 
On June 25, 2009 at 5:18 AM , வந்தியத்தேவன் said...

ஆச்சி 1976 ஆம் ஆண்டு நீங்கள் ஆறாம் ஆண்டென்றால் உங்கடை வயது ஆச்சி வயதுதான் ஹிஹிஹி. இந்தக் கதையை யார் எழுதியது? நானும் சில தொகுப்புகளில் தேடினேன் கிடைக்கவில்லை.

 
On June 25, 2009 at 6:04 AM , மணிமேகலா said...

ஆச்சியின்ர வயது தெரிய வேணுமே ராசா?:)

ஊன்று கோல் புடிச்சுத் திரியிற வயசில ஏன் இந்தக் கிழவி எழுது கோல் புடிச்சுத் திரியிது எண்டு யோசிக்கிறாயாக்கும்.

அப்ப மட்டும் தான் ராசா நான் என்ர வாழ்க்கைய வாழுறதா நினைக்கிறன்.

உண்ணாணை!

 
On June 25, 2009 at 6:16 AM , மணிமேகலா said...

உந்தக் கதை ஆர் எழுதினதெண்டு அந்தப் புத்தகத்தில இருக்கேயில்ல ராசா.

ஒரு நாள் உந்தச் சிட்னி தமிழ் அறிவகத்தில என்ர தமிழ் பள்ளிப் பிள்ளையளுக்கு படிப்பிக்க ஏதாவது இருக்கோ எண்டு தேடேக்கை தான் மட்டை எல்லாம் கிழிஞ்ச உந்தப் புத்தகத்தக் கண்டன்.பிறகென்ன!"நல்லன கற்று நலம் பெறுவீரென; நம்மரசளித்த நன்கொடை இந்நூல். நன்கிதைப் பேணி; நலமே கற்று; நற்குணம் பெற்ற; நற் குடியாவீர்" எண்டு பாடிப் பாடி வாங்கின 'அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே' எண்டு போட்டு உந்தக் கதையை பிரதி எடுத்துக் கொண்டு வந்திட்டன்.

அதுக்கு மேல என்னட்ட ஒண்டும் கேக்காத ராசா.எல்லாம் மறந்து போனன்.

 
On June 25, 2009 at 8:04 AM , வலசு - வேலணை said...

அந்தக்கதையை நானும் வாசிச்சிருக்கிறணணை.
:-)

 
On June 25, 2009 at 4:49 PM , மணிமேகலா said...

ஆச்சி பாவம் எண்டிட்டு சொல்லுறியளோ வலசு?