Author: வி. ஜெ. சந்திரன்
•7:04 AM
ஈழத்து முத்ததிலை கன பேர் சேந்திருக்கிறியள், ஆனா ஒரு சிலர் தானே எழுதியிருக்கினம், மிச்ச ஆக்கள் என்ன செய்யினம்? என்ன நான் எங்கையிருந்தனானோ ? சரி சரி எனக்கு அடிக்கவரதையுங்கோ? சும்மா பகிடிக்கு கேட்டனான்.

இண்டைக்கு ஏதவது எழுதுவம் எண்டு வெளிக்கிட்டா என்ன எழுதுற எண்டு தெரியேல்லை. மணிமேகலை ஆச்சியிடை (ஆப்பு மார் எல்லாரும் அவவை ஆச்சி எண்டு சொன்னா, நான் ஆச்சி எண்டு சொல்லலாம் தானே) எழுதினதை வாசிச்சன் நல்ல வடிவா எழுதியிருக்கிறா. அவவின்ரை பதிவை வாசிச்சு கனபேர் தங்கடை அம்மம்மா மார் கதைக்கிற மாரி கிடக்காம் எண்டு சொல்லினம். எனக்கு அப்பா வழி ஆச்சி (அப்பம்மா), அப்பு (அப்பப்பா) வோடை கதைக்கிற சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. அம்மா வழி அப்புவும் அம்மா சின்னனா இருக்கேக்கையே செத்துபோனார். அம்மா வழி ஆச்சியும் எனக்கு ஒரு எழெட்டு வயது இருக்கேக்கை போய் சேந்திட்ட. அதாலை அவவோடை கதைச்சதுகள் கூட எனக்கு பெரிசா நினைவில்லை. ஒரு சில சொல்லுகளை தவிர மிச்சமேல்லாம் மறந்துபோச்சு. ஆனா அவவிடை சுருங்கின தோலிலை அடிக்கடி நுள்ளியும், இழுத்தும் அவாவுக்கு ஆக்கினை குடுத்தது ஞாபகம் இருக்கு.

ஆச்சி அந்த மாரி அப்பஞ்சுடுவாவாம், அதுவும் தணல் சட்டியெல்லாம் மேல வச்சு. உங்களுக்கு அந்த கதையள் தெரியுமோ தணல் சட்டி வச்சு அப்பஞ்சுடுறது? நான் ஒரு நாளும் பாக்கேல்லை. நாட்டைவிட்டு வெளிக்கிட்டாப்பிறகு அண்ணைவீட்ட போகேக்கை அண்ணா தான் சொன்னார் ஆச்சி அவைக்கு தணல் சட்டிவச்சு அப்பஞ்சுட்டு குடுத்தவவாம். எனக்கு குடுப்பினைஇல்லை அதை பக்கவும், சாப்பிடவும். அதவிட கத்தரிக்கை பழப்புளி கறி, பாவக்காய் கறியெல்லாம் திறமாய் சமைப்ப எண்டும் அண்ணை சொல்லுவார்.

உந்த பழங்கதையளை விடுவம். பேச்சு வழக்கு பற்றி சொல்லுறதெண்டா கொஞ்சம் கரைச்சல் தான்.

உதாரணமா

இரண்டு நண்பர்கள் கதைக்கேக்க, கன நாள் காணாத நண்பனை கண்டால்

டேய், எங்கையடா இவவளவு நாளும் ஆளை காணகிடைக்கேல்லை எனும் போது வரும் டேய், அடா போன்றவை நட்பின் நெருக்கதை குறித்தாலும்,
ஒருவரை மரியதை குறைவாக விழிக்கவும் இதே போல பயன்படுத்தாலாம். சரி இதிலை என்ன புதினம் கிடக்கு எண்டு கேக்கிறியளோ. இஞ்சை என்ரை ஆங்கிலத்தை தாய் மொழியா கொண்ட நண்பனுக்கு ஒரு நாள் கதைகேக்க, டேய், அடா போட்டு ஆரும் சொன்னா அது மரியாதையில்லாத முறை எண்டு சொல்லிபோட்டன். பிறகொரு நாள் செல்பேசிலை எனரை இன்னொரு நண்பனோட கதைகேக்க டேய், டா க்களை கண்ட படி பாவிச்சு கதைச்சா, பக்கத்திலையிருந்து கேட்டு கொண்டிருந்திட்டு கேட்டான் ஆரோடை சண்டை பிடிச்சனி எண்டு.

உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே நாங்கள் வயது கூடின ஆக்களை பெயரெல்லாம் சொல்லி கூப்பிடுறேல்லை, அதப்போலை அவன், போனான், வந்தான் எண்டு கதைக்க மாட்டம். அது 4 - 5 வயது கூடின அண்ணையாக கூட இருக்கலாம்.

அண்ணை எங்க போன்னீங்கள் எண்டு தான் கேக்கிறது வழக்கம். எங்க போன்னீர் எண்டோ இல்லாட்டி எங்க போன்னீ எண்டோ கேக்க மாட்டம். அப்பிடி கதைச்ச கூட இருக்கிற ஆக்காளே சில நேரம் பகிடி பண்ணுவினம். என்ன உப்பிடி கதைக்கிறாய் எண்டு. நான் என்ரை அண்ணையோட போன்னீர், வந்தனீர், செய்தனீர் எண்டு தான் கதைக்கிறனான். அதை பாத்திட்டு என்ரை கூட்டாளிமார் நக்கலடிப்பாங்கள் உன்ரை அண்ணேன்ரை வயதென்ன, உன்ரை வயதென்ன (அண்ணைக்கும் எனக்கும் 16 வயது வித்தியாசம்), அண்ணையை மரியாதையில்லாம கூப்பிடிறாய் எண்டு.

ஒவ்வோரு ஊர்ப் பேச்சு வழக்கிலை ஒரு பொது வடிவம் இருந்தாலும், ஒரு கோடு கீறி இது இப்பிடிதான் எண்டு சொல்லுறது சரியான கசிட்டம் பாருங்கோ. பேச்சு வழக்கு எண்டிறது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்தப் போலை மாறும்.

சரி சரி கனக்க எழுதி பதிவை இழுத்துகொண்டு போகாம எனக்கு இப்ப ஞாபகம் வந்த சில வித்தியசமான சொல்லுகளை கீழ சொல்லுறன்.





1. இல்லுபோலை/ எல்லுபோலை: இதிலை எது சரியான உச்சரிப்பெண்டு எனக்குதெரியா

இந்த சொல்லு கொஞ்சம், சிறிதளவு எனும் சொற்களுக்கு சமனா ஆச்சி பாவிப்பா. ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.

2. எப்பன், ஒரெப்பன் : சிறிதளவு - இந்தசொல்லு இப்பவும் சிலவேளை பாவிக்கிறனாங்கள் எண்டு நினைக்கிறன். உ+ம், எப்பன் இடம் குடுத்தா காணும் தலையிலை ஏறியிருந்திடுவாங்கள்.

3. பறையிற: கதைக்கிற, பெசுகிற ( பேசுதல் எனும் சொல் ஈழத்தை பொறுத்தவரை வைதல் எனும் கருத்தில் தான் அதிகம் பாவிக்கபடுகிரது என நினைக்கிறேன்)

4. தீய சட்டி: பொதுவா இது மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீடுகளிலை புழக்கத்தில் இருக்கிற சொல். பொதுவா மச்சம் சாப்பிடுற ஆக்கள் வீட்டிலை இரண்டு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் ஒண்டு நாளாந்தம் சமைக்க, அதிலை அசைவ உணவுகள் எல்லாம் சமைப்பினம். இன்னும் ஒரு தொகுதி சமையல் பாத்திரங்கள் இருக்கும் அதில் மரக்கறி மட்டும் சமைப்பினம். குறிப்பா விரத காலங்களிலை, திவச நாட்களிலை சமைக்க பாவிப்பினம்.

5. மச்சம்: மச்சம் எண்டிற சொல்லு மீனை குறிச்சாலும், பேச்சு வழக்கில் அசைவ உணவுகள் அனைத்தையும் குறிக்கும். உ + ம்: இண்டைக்கு வெள்ளி கிழமை நான் மச்சம் சாப்பிடுறேல்லை.

6. அரக்கி (வினை சொல்லாய்??): ஒரு பொருளை சிறிது இடம்மாற்றி வைக்க/ ஒருவர் இருக்கும் போது புதிதாக வந்தவர் இருக்க (உட்கார) சிறிது இடம் தேவைப்படும் போது,

அந்த மேசையை கொஞ்சம் அரக்கி வைக்க வேணும். டேய் கொஞ்சம் அரக்கி இரு.

7. இயத்து: சமையல் பாத்திரங்கள்
8. ஏதனம்: சமையல் பாத்திரங்கள்


சரி மிச்சம் பிறகு சொல்லுறன்.

அப்ப வரட்டே....
This entry was posted on 7:04 AM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On June 24, 2009 at 7:23 AM , யசோதா.பத்மநாதன் said...

அழகான ஆரம்பம்.நன்றாக இருக்கிறது.
:).

 
On June 24, 2009 at 7:48 AM , வாசுகி said...

எல்லுபோலை,ஏதனம் இரண்டும் எனக்கு புதிய சொற்கள்.
ஈழத்துமுற்றம் பழையபடி களைகட்டுவது சந்தோசம்.

 
On June 24, 2009 at 7:59 AM , வந்தியத்தேவன் said...

சந்திரன் அண்ணேய் உங்கட கதை நல்லாயிருக்கு, தீய சட்டிபோல் சைவச் சட்டியை ஆரதச் சட்டி என்பார்கள். மச்சம் என்றா மீன் இறைச்சி மட்டுமல்ல அசைவ உணவே மச்சம் தான். உந்த விரதகால இயத்துகள் மச்சகால இயத்துகள் எல்லாவற்றைப் பற்றியும் தனித்துதனித்து எழுதவேண்டும். இப்பவும் பலர் அப்படித்தான் தனித்தனி இயத்து வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் நம்மடை சைவ ஆச்சாரம் தான் வெள்ளைக்காரன் ஆண்டிருந்தாலும் உந்த ஆச்சாரம் எல்லாம் நாங்கள் விடவில்லை.

எப்பான் எல்லோ எப்பன் என்றுதான் இருக்கவேண்டும் எதற்க்கும் இன்னும் இரண்டுபேரைக்கேட்பம்.

எல்லுப்போலை தான் நிறைய புத்தகங்களில் படிச்சிருக்கிறன்.

 
On June 24, 2009 at 8:10 AM , வி. ஜெ. சந்திரன் said...

//சந்திரன் அண்ணேய் உங்கட கதை நல்லாயிருக்கு, தீய சட்டிபோல் சைவச் சட்டியை ஆரதச் சட்டி என்பார்கள். மச்சம் என்றா மீன் இறைச்சி மட்டுமல்ல அசைவ உணவே மச்சம் தான். உந்த விரதகால இயத்துகள் மச்சகால இயத்துகள் எல்லாவற்றைப் பற்றியும் தனித்துதனித்து எழுதவேண்டும். இப்பவும் பலர் அப்படித்தான் தனித்தனி இயத்து வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் நம்மடை சைவ ஆச்சாரம் தான் வெள்ளைக்காரன் ஆண்டிருந்தாலும் உந்த ஆச்சாரம் எல்லாம் நாங்கள் விடவில்லை//

ஓம் அசைவ உணவு அனைத்தையும் தான் மச்சம் என்பார்கள். அப்படி தான் எழுதியிருக்க வேண்டும். எழுதும் போது அப்படி எழுத வரவில்லை. திருத்தி விடுகிறேன்.

எப்பன் தான் எப்பான் இல்லை. சுட்டி கட்டினதுக்கு நன்றி.

விரதகால சட்டியள், நாளாந்த சமையல் சட்டியள் பற்றி தனி பதிவே எழுதலாம் தான். மச்சம் சாப்பிடாத வீடுகளில் கூட விரதம், திவச காலத்தில் சமைக்க தனி சட்டி பானை இருக்கும்.....

 
On June 24, 2009 at 10:11 AM , வலசு - வேலணை said...

எல்லுப்போல என்பது மருவி எங்களூரில் ஒல்லிப்பை அல்லது ஒல்லிப்ப என்று சொல்லப்படுகிறது.

 
On June 24, 2009 at 4:01 PM , கலை said...

//ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.//

'எல்லுப்போலை' கேள்விப்பட்டிருக்கிறன். ஒரு ஆச்சி ‘எல்லுபோலை சொதி குத்தட்டே?' எண்டு கேப்பா. அதென்னது சொதியைக் குத்துறது எண்டு நினைச்சிருக்கிறன். அது ஒருவேளை தென்மராட்சி பேச்சு வழக்காக இருக்கலாம். பிறகு இந்த ‘பறையிறது' பற்றியும் எழுத வேணும் எண்டிருந்தன். நீங்கள் எழுதியிருக்கிறியள்.

 
On June 24, 2009 at 4:53 PM , வி. ஜெ. சந்திரன் said...
This comment has been removed by the author.
 
On June 24, 2009 at 4:56 PM , வி. ஜெ. சந்திரன் said...

//சொதி குத்தட்டே?'//

குத்தட்டே, இந்த சொல்ல மறந்து போனன்.

 
On June 24, 2009 at 5:38 PM , யசோதா.பத்மநாதன் said...

மச்சம் என்பது ஆரம்பத்தில் மீன் வகைகளைக் குறிக்கத் தான் பாவிக்கப் பட்டிருக்குமோ?

மச்ச அவதாரம் என்பது மீன் வடிவெடுத்த வைஷ்னவ அவதாரக் கோட்பாடுகளில் ஒன்றல்லவா?(மச்ச என்றால் மீன்?)

ஆரம்பத்தில் மீன் வகைகளைக் குறிக்க அச் சொல் பயன்பட்டுக் காலப் போக்கில் மருவி மரக்கறி அல்லாத சகலவற்றையும் குறிக்கப் பயன் பட்டிருக்குமோ?

 
On June 24, 2009 at 6:52 PM , வந்தியத்தேவன் said...

தூய சட்டிதான் மருவி தீய சட்டியாகினதாக அம்மா சொன்னார். தீய சட்டி சைவம் காய்ச்சப் பயன்படுத்துவதுதானே. அப்புறம் உந்த சட்டி பற்றி எழுதும்போது மறக்காமல் கந்தசட்டிக்கு பயன்படுத்துற இயத்துகள் பற்றியும் எழுதுங்கோ. சைவம் சாப்பிடுகிறவர்கள் வீட்டிலைகூட கந்தசட்டிக்கு தனியா இயத்து வைத்திருக்கிறார்கள்.

 
On June 25, 2009 at 12:39 AM , geevanathy said...

இயத்து, ஏதனம் இரண்டும் புதிதெனக்கு..

// . பேச்சு வழக்கு எண்டிறது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்தப் போலை மாறும்.//

உண்மைதான்

 
On June 25, 2009 at 6:05 AM , கானா பிரபா said...

எல்லுப்போல விஷயத்தை இவ்வளவு பென்னம்பெரிய விளக்கத்தோட சொல்லீட்டீங்கள், அருமை :)

 
On June 25, 2009 at 2:57 PM , வி. ஜெ. சந்திரன் said...

//அப்புறம் உந்த சட்டி பற்றி எழுதும்போது மறக்காமல் கந்தசட்டிக்கு பயன்படுத்துற இயத்துகள் பற்றியும் எழுதுங்கோ. சைவம் சாப்பிடுகிறவர்கள் வீட்டிலைகூட கந்தசட்டிக்கு தனியா இயத்து வைத்திருக்கிறார்கள்.//

நீங்கள் எழுதலமே வந்தியத்தேவன்.....

 
On June 25, 2009 at 4:15 PM , யசோதா.பத்மநாதன் said...

தூய சட்டி! இருக்கலாம்; இருக்கலாம். அழகான பெயர்.

அதுக்குப் பிறகு தான் எனக்கொரு சந்தேகம். இந்த எல்லுப்போல எண்டுறதும் எள்ளுப் போல எண்டதின்ர (எள்ளின் அளவைப் போல சிறிதளவு)திரிபா இருக்குமோ?